Translate Tamil to any languages.

வியாழன், 31 ஜூலை, 2014

அரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்?

ஒரு கட்சிச் செயலகத்தில் நடந்த நாடகம்

கட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...

கட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.

கட்சித் தொண்டன் : காலம் கடந்தால் மக்கள் எங்களை மறந்து விடுவார்களே... அதன் பின் உங்கட மருந்து வேலை செய்யாதே...

கட்சித் தலைவர் : என்னுடைய மருந்து சக்தி மிக்கது.

கட்சித் தொண்டன் : அதெப்படி?

கட்சித் தலைவர் : ஈழத்தில சிறுபான்மை இனங்களை அழித்துக்கொண்டு அரசியல் பண்ணுறாங்களே... அதுபோல... உடையாத முல்லைப் பெரியாற்று அணையை கொஞ்சம் உடைத்துப் போட்டுக் கூத்துப் போடத் தெரிந்தால் தானே முதுநிலை அரசியல்வாதி.

கட்சித் தொண்டன் : அதுவா செய்தீ...

நாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா?

சம்மிலி: என்னக்கா... சாமிலி, நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பையோட வாறாங்களே!

சாலினி: நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பை மட்டுமல்ல; மிதிவண்டி, ஆடை, அணிகலன், நகம், தலைமுடி எல்லாமே அப்படித்தான்...

புதன், 30 ஜூலை, 2014

வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்

முல்லைப் பெரியாற்று அணையாலே
ஒரே தாய் வயிற்றுப்(இந்திய) பிள்ளைகளான
கேரளாக்காரரும் தமிழகக்காரரும்
முட்டி மோதுவது முறையல்லவே!
ஆனாலும்
கேரளாக்காரரின் ஒற்றுமை
தமிழகக்காரிடம் இல்லையே
அதனாலன்றோ
தமிழகத்திற்கு கேடு வருகின்றது!
தமிழகக் கட்சிகள் ஒவ்வொன்றும்
தனித் தனி நாள் குறித்து
கேரளாவை எதிர்க்க முனைவது
தமிழருக்கு
விடிவைப் பெற்றுத்தரவல்ல
தங்களை அடையாளப்படுத்தவே!
ஓர் இனம் ஒரு வேண்டுகோள்
என்றிருக்கும் போது
ஏன் எல்லோரும்
தனித் தனியாகப் போராட வேண்டும்?
கேரளாவை வென்றது
நாங்கள் தான் என்று பரணி பாடவா?
அப்படியாயின்
கேரளாவல்லவா வெல்லும்...
எப்படியாயினும்
ஒரு இலக்குக் குறித்து
தமிழினம் ஒன்றுபட முடியாதது ஏன்?
அதெல்லாம்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணம் அல்லவா!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் இருந்தமையும்
பண்டாரவன்னியனுக்கு
ஒரு காக்கைவன்னியன் இருந்தமையும்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு
(கரிகாலனுக்கு)
ஒரு விநாயகமூர்த்தி முரளீதரன்
(கருணா அம்மான்) இருந்தமையும்
இன்று(12/12/2011)
தமிழகக் கட்சிகள்
தனித் தனியே களமிறங்குவதும்
அன்று(20/05/2009 இற்கு முன்)
நாற்பத்தெட்டுப் போராளிக் குழுக்கள்
தமிழீழம் மீட்கக் களமிறங்கியதும்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மைக்குச் சான்றல்லவா!
புலம் பெயர் நாடுகளிலும் கூட
கீரியும் பாம்பும் போல
தமிழர் தமக்குள்ளே
முட்டி மோதுவதைப் பார்த்து
மேலை நாட்டவர் கேலி பண்ணவில்லையா?
இனி
தமிழருக்குள் ஒற்றுமை இல்லையென்றால்
உலகில்
எந்த நாட்டில் இருந்தாலும்
எதிலும் வெற்றி கிட்டாமல்
அழிவது தான் எஞ்சும்!
உலகிலிருந்து
தமிழினம் அழியாமல் பேண
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மையைச் சாகவைத்து
ஒரு இலக்கிற்கு எப்போதும்
உலகத் தமிழினமே
ஒற்றுமையாக இணையக் கற்றுக்கொள்!

பணம் பத்தும் செய்கிறது

வானிலே
கடலிலே
காற்றிலே
காட்டிலே
மேட்டிலே
வீட்டிலே
பள்ளியிலே
மத வழிபாட்டு இடங்களிலே
அரசப் பணி இடங்களிலே
அடடே
அரசப் பங்கில்லாப் பணி இடங்களிலே
காதலிலே
திருமணத்திலே
பிள்ளைப் பேற்றிலே
மருத்துவ மனைகளிலே
சுடுகாட்டிலே
இடுகாட்டிலே
நடுவழியிலே
எடுத்துக்காட்டாக
எத்தனை எத்தனை
இன்னும் உள்ளனவோ
அத்தனையிலும்
பணம் இருந்தால் போதும்
வென்றுவிடலாம்...
ஆண்டவனை வழிபடக் கூட
பணம் வேண்டினால் - ஏழை
பணம் வைத்திருப்பவனையா
வழிபட வேண்டும்?
அட கடவுளே...
பணம் பத்தும் செய்யுமென்றால்
ஏழைகள்
கடவுளை வழிபடாமல் இருக்கவும்
பணம் குறுக்கே வந்து நிற்கிறதே!

2011 சித்திரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகச் சுற்றுலாவின் போது நான் கோவில்கள் சென்று பார்க்கையில் பணம் செலுத்தினால் மண்டபத்திற்குள் நுழையலாம் என்ற சூழ்நிலையைக் கண்டதும் எழுதியது.

திங்கள், 28 ஜூலை, 2014

உள்ளப் புண்

சொல்பவர்கள் எல்லோரும்
சொல்லலாம் எதையும்
சொல்ல முடிந்தால் - சுடுசொல்லும்
சொல்ல முடிந்தால் விளையும்
"உள்ளத்திலே புண்!"

மறக்க நினைக்கிறேன்
மறக்க முடியவில்லை
உறங்கவிடாத உள்ளம்
உறங்கமுடியா நோவு
"உள்ளத்துப் புண்!"

ஞாயிறு, 27 ஜூலை, 2014

வேலிகள்

எனக்கும் விருப்பம் தான்
வேளைக்கே செத்துவிடத்தான்
ஆனால்,
படைத்தவன் தான்
இன்னும்
என்னை அழிக்க முன்வரவில்லை!
எனக்கும் விருப்பம் தான்
அடிக்கடி தவறுகளைச் செய்துவிட
மக்களாயம்(சமூகம்) தான்
ஊசிக் கண்ணால உற்று நோக்குதே...
சரி... சரி... கமுக்கமாக (இரகசியமாக)
ஏதாச்சும் செய்யலாம் தான்
தவறு செய்யத் தெரிந்தாலும்
பிடிபடாமல் இருக்கத் தெரியாதே!
எனக்கும் விருப்பம் தான்
தலைவனாகத் தான்
ஆனால்,
முன்னுக்குப் போய்
முகத்திலே கரி பூசாமலே இருக்கத் தான்
இன்னும்
தொண்டனாகவே இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
நாட்டை ஆளத்தான்
நான் ஆட்சிக்கு வந்தால்
எல்லோருக்கும்
சம உரிமை கிடத்தாலும் என்றே
முதலாளிகள் எதிர்ப்பதால் தான்
ஊருக்குள்ளே,
வீட்டிற்குள்ளே,
வீட்டு மூலைக்குள்ளே
முடங்கி இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
வானில் உலாவும் பகலவனைப் போல
உலகை ஆளத்தான்
நான் உலகை ஆண்டால்
எல்லா நாடுகளும்
சம வளம் பெற நேர்ந்தால்
தங்கள் வயிறு கடிக்குமென அஞ்சியே
தாய் நாட்டில்
எனக்கு
வீட்டுக்காவல் போட நினைப்பது
வல்லரசுகள் ஆயிற்றே!
எனக்கும் விருப்பம் தான்
சூழவுள்ள மக்களுக்கு
நல்லது செய்யத் தான்
ஆனால்,
சுவாமி விவேகானந்தர் சொன்னார்
"உன்னைத் திருத்திக் கொள்
சூழவுள்ள மக்கள்
தாமாகவே திருந்துவார்கள்" என்றே
என்றாலும்
என்னைத் திருத்தப் பார்க்கிறேன்
இன்னும் முடியவில்லையே!
எல்லோருக்கும் விருப்பம் தான்
எல்லாமும் செய்யத் தான்
என்றாலும் பாருங்கோ
சாட்டுகளைப் பொறுக்கி
சறுக்கப் பல ஆளுங்க...
உயிரினை ஈகம் செய்திடத் துணிந்தே
எல்லாமும் செய்திட
முன்னிற்பவர் சில ஆளுங்க...
இப்படித் தான்
நம்மாளுங்க இருந்தால்
எப்படித் தான்
நம்ம வீடும் நாடும் உலகும்
மேம்பட்டு அமைதிக்குத் திரும்பும்...
எனக்கு ஒன்றும் புரியவில்லையே!

அந்த இரவில் என்ன நடக்கும்?

இணையர் இணையும் முதலிரவு
கொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...
ஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து
ஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராக இணைய முயலவே
முதலிரவு நாளன்று காலம் கரையவே
முழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே!

சனி, 26 ஜூலை, 2014

ஈழம் சிங்கள நாடாகிறது...

ஈழம் எங்கும்
தமிழர் வாழ்ந்த காலம் போய்
தமிழர் இடங்களுக்கு
சிங்களப் பெயர் சூட்டி
அரசும் அரச காவலர்களும்
சிங்களவரைக் குடியேற்றுவது தொடர...
பிள்ளையார் வீற்றிருக்கும்
அரச மரங்களிற்குக் கீழே
புத்தரை இருத்தி
பௌத்த கோவில்களையும் கட்ட...
ஈழம் சிங்கள நாடாகிறது...
ஈழத் தமிழர்
ஏதிலியாக உலகைச் சுற்ற
தமிழ் தலைவர்கள்
தூங்கிக் கொண்டிருக்கையில்
விடிய விடிய
எதிர்த்தவர் புலியெனச் சாகடித்து
ஈழம் எங்கும் சிங்களத் தலைகள்
நீளத் தொடங்கி விட்டன...
காலப் போக்கில்
எஞ்சியோரையும் சிங்களம் விரட்டினால்
வெளிநாட்டிலும் இடமில்லாட்டி
நடுக்கடலில்
விழவேண்டிய நிலை தான்
ஈழத் தமிழருக்கு - இந்தச் செய்தி
உலகத் தமிழரின் காதுக்கு எட்டுமா!

வெள்ளி, 25 ஜூலை, 2014

ஐயாயிரம் உரூபா

நம்மூர் வானொலி ஒன்றில்
தேர்வுத் தாளோடு ஐயாயிரம் உரூபா
மட்டுமல்ல
மடல் ஒன்றும் இணைக்கப்பட்டதாகவும்
தேர்வுத்தாள் திருத்துபவர்
சொன்னதாகச் செய்தி சொல்லப்பட்டது.
காதுக்கு எட்டிய செய்தியைக் கேட்டதும்
என் உள்ளத்தில்
எத்தனையோ எண்ணங்கள் தோன்றிச்சு...
ஐயாயிரம் உரூபா
எத்தனையோ கைகளுக்குள் அகப்படாமல்
தேர்வுத்தாள் திருத்துபவர் கைக்கு
பாதுகாப்பாகப் போய்ச் சேரும் வண்ணம்
தேர்வுத் தாளைக் கட்டிக் கொடுத்த
மாணவரைப் பாராட்டவா...
ஐயாயிரம் உரூபாவைத் தனதாக்காமல்
எல்லோருக்கும் வெளியிட்ட
தேர்வுத்தாள் திருத்துபவரைப் பாராட்டவா...
வானொலியில் செய்தி வாசிக்கையில்
மடலில் என்ன எழுதப்பட்டது என்பதைக்கூட
கேட்க மறந்து சிரித்துக் கொண்டிருந்த
என்னைப் பாராட்டவா...
எல்லோரையும்
ஒருகணம் சிந்திக்க வைத்த
மாணவரின் செயலைப் பாராட்டவா...
பணம் கொடுத்தால் மட்டுமல்ல
மாணவிகளின்
கன்னித் தன்மையையும் வழங்கினால்
சித்தியடையச் செய்வோர் இருப்பதை
கடவுளுக்குத் தெரிவித்த
இச்செய்தியைப் பாராட்டவா...
குறுக்குவழியில் சித்தியடைய முயலும்
மாணவர்களுக்கு
வழிகாட்டுவோரைப் பாராட்டவா...
குறுக்குவழியில் சித்தியடைய
எண்ணும் வண்ணம்
மாணவர்களுக்கு
மூளையைக் கொடுத்த ஆண்டவா
பதில் கூறு என்று கேட்கவா...
இச்செய்தியைக் கேட்ட ஆண்டவனே
ஆடிப்போய் விழுந்தவன் தான்
இன்னும் எழவேயில்லையா...
பணிவாக உங்களிடம்
கேட்பது என்னவென்றால்
ஆண்டவனைத் தட்டி எழுப்பாதீர்
இதைவிட இன்னும் எத்தனையோ
இவ்வுலகில் இடம்பெறுகிறதே
அவற்றை எல்லாம் கேட்டு
ஆண்டவனுக்கு மூச்சுப் போனால்
நாம் எப்படி வாழ்வது?

குறிப்பு: கையூட்டு (இலஞ்சம்) வழங்கும் செயலில் "இப்படியொரு நுட்பமா?" என வானொலிச் செய்தி கேட்டதும் எழுதினேன்.

ஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யாவர்?


பாடலாசிரியர்
பாடகர்
இசையமைப்பாளர்
மூவரது இணைந்த பணி

அன்றைய பாடல்கள் நினைவூட்டக் கூடியதாகவும் படிப்பதற்கு இலகுவாகவும் அழகுத் தமிழிலும் இருந்தன. ஆனால், இன்றைய பாடல்களில் இவற்றைக் காணவில்லையே! அதனால் தான் இன்றைய பாடல்கள் தோற்றுப் போகின்றனவோ!

ஒன்றுமே நடக்காத இரவு

முதலிரவு அன்று முட்டி முட்டியே
கொட்டிக் கொட்டியே ஐயம் தீர்க்க
ஆளாள் களையாது காலம் கரைய
விடிந்த பின்னரே தெரிய வந்தது
"எதுவும் நிகழாத முதலிரவு!"

வியாழன், 24 ஜூலை, 2014

விளம்பரங்கள் வடிவமைக்கலாம் வாங்க...


"விளம்பரம் இன்றேல் வணிகம் இல்லை" என்பது ஊடகத்துறையினர் பேணும் பொன்மொழி. குறித்த பொருளோ பணியோ (சேவையோ) மக்களிடம் சென்றடைய விளம்பரம் ஓர் ஊடகமாகும். இதனடிப்படையில் எல்லா நிறுவனங்களும் விளம்பரங்களை நாடுவதால் எத்தனையோ விளம்பர நிறுவனங்கள் சிறப்பாக (விசேடமாக) விளம்பரங்களை வடிவமைத்துக் கொடுக்கின்றன.

அவுஸ்ரேலியாவில் விளையாட்டரங்கின் குறுக்காக துடுப்பாட்டம் தொடங்குமுன் ஆணொருவர் ஆடைகளைக் களைந்துபோட்டு ஓடுகையில் காவற்றுறையில் சிக்கினார;. பத்திரிகையில் தன்னைப் பற்றிச் செய்தி வரவேண்டும் என்பதற்காக நிர்வாணமாகக் குறுக்கே ஓடியதாகக் குறித்த ஆண் காவற்றுறை விசாரணையின் போது தெரிவித்தார். விளம்பரத்திற்காக நிர்வாணமாக ஓட வேண்டுமா?

மறுபுறம் பார்த்தால் அழகர், அழகிகள் (Modelling) பயிற்சி நிலையங்கள் கூட இயங்குகின்றது. ஏன் தெரியுமா? விளம்பரங்களில் அரைகுறை ஆடையுடன் அல்லது முக்கால் நிர்வாணமாக நடிக்கவோ அழகை காட்டவோ இவர்களைப் பயன்படுத்தத்தான். இவை நமது பண்பாட்டைச் சீரழிக்கத் தூண்டும் பயற்சி நிலையங்களே!

எப்படியாயினும் விளம்பரங்கள் செய்யப்படும் போது சில ஒழுக்க நெறிகளைப் பின்பற்றத்தான் வேண்டும். மற்ற நிறுவனங்களை அல்லது மாற்று உற்பத்திகளை குறைத்தோ தூற்றியோ விளம்பரம் செய்ய முடியாது. பிறருடனோ பிற பொருட்களையோ பிற பணிகளையோ ஒப்பிட்டுத் தங்களுடையதை மிகைப்படுத்தி விளம்பரம் செய்ய முடியாது. போலியான தகவல், போலியான அடையாளங்கள் அல்லது பிறருடையதைப் போன்ற சாயல் உள்ள விளம்பரங்கள் தகுதியற்றவையாகும்.

விளம்பர வடிவமைப்பில் சான்றுப்படம், நிறுவன அடையாளப்படம், நிறுவனக் கோட்பாடு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனச்சான்றிதழ் இலக்கம், நிறுவனப் பதிவு எண் ஆகியவற்றுடன் சுருங்கிய தகவலாகப் படிக்காதவரும் புரியக்கூடியதான கருத்துக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தெளிவாக இருக்கக் கூடியதாக அமையப் பேணப்படும். இவ்விளம்பரங்கள் தெருவெளி, உயர்ந்த பார்வைக்கு உரிய தளங்கள், அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் ஆகிய அனைத்திலும் இடம் பெறலாம்.

மக்களை மயக்கி வீழ்த்தும் அல்லது மக்களை ஈர்த்துக் கொள்ளும் அல்லது மக்களைக் குழப்பத்துக்குள் உள்ளாக்கும் விளம்பர உள்ளடக்கங்கள் இல்லாதவாறு வடிவமைக்க வேண்டும். அரை குறை ஆடை அல்லது முக்கால் நிர்வாணம் (ஏன் முழு நிர்வாணம் கூட) ஆகத் தோன்றும் படங்களை அல்லது பெண்ணினத்தையோ ஆணினினத்தையோ இழிவுபடுத்தும் படங்களை அல்லது இவற்றை ஒத்த கருத்துக்களை உள்ளடக்காமல் பேணும் விளம்பரங்களே சிறந்தது.

விளம்பரம் வடிவமைக்க இத்தனை வழிகாட்டல் போதாதா? கணினி நுட்பம், நல்ல எழுத்து நடை, வெளிப்படுத்தும் ஆற்றல், உளவியல் நோக்கிலான அணுகுமுறை ஆகியன உங்களிடம் இருந்தால் விளம்பர வடிவமைப்பில் உங்களை வெல்ல எவர் வருவார். முயற்சி உடையோர் விளம்பர வடிவமைப்பில் இறங்கி வெற்றியடையலாம். ஆனால், தமிழர் கலை, பண்பாண்டைச் சீரழிக்காத விளம்பர வடிவமைப்பே, இன்றைய எமது தேவையாகும்.

கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

பள்ளியில் சேர்ப்பதற்கு
வகுப்பில் தரமுயர்த்துவதற்கு
வகுப்பில் முதற்பிள்ளையாக்குவதற்கு
பள்ளியில் நற்பெயர் எடுப்பதற்கு
தேர்வெழுத ஒப்புதல் எடுப்பதற்கு
தேர்வெழுதினால் தேர்வுத்தாள் திருத்துவதற்கு
தொடக்கப் பள்ளியில் படித்து முடித்ததும்
உயர் பள்ளிக்குச் செல்வதற்கு
உயர் பள்ளியில் படித்து முடித்ததும்
பல்கலைக் கழகம் புகுவதற்கு
உயர் பள்ளியிலும்
பல்கலைக் கழகத்திலும்
ஆசிரியர்கள்
மாணவிகளின் கற்பைப் பறித்து
புள்ளி வழங்குவதும் என
வாழ வழிகாட்டும் துறையில்
வாழ்க்கையைக் கெடுக்கும் செயல்களா?
கற்றோரும் மற்றோரும்
கண்டும் காணாது இருக்கலாமா?
நல்வாழ்வை அமைக்க உதவும்
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?

குறிப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் உயர் புள்ளி வழங்கவும் சித்தியடைய வைக்கவும் என மாணவிகளின் கற்பைக் கூலியாகக் கேட்பதாகச் செய்தி அறிந்ததும் எழுதியது.

புதன், 23 ஜூலை, 2014

களவும் கற்று மற

வகுப்பில நடந்த ஆசிரியர், மாணவர் நாடகம்.

ஆசிரியர் : "களவும் கற்று மற" என்றால் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 01 : மாற்றார் உடைமைகளைக் களவெடுத்து வருவாய் ஈட்டியதும் மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : அப்படி என்றால் பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவானே... வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 02 : மாற்றார் உள்ளத்தைக் களவெடுத்து, தன் உள்ளத்தில் பேணி மகிழ்ந்தாலும் கலியாணம் செய்த பிறகு மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : சரி, கலியாணம் செய்த பிறகு மனைவியினதோ அல்லது கணவனதோ உள்ளத்தை மறக்காமல் இருந்தால் சரி!

மாணவர் - 02 : ஐயா! நேற்றுத் தந்த வீட்டுவேலை செய்ய மறந்திட்டேன்!

ஆசிரியர் : வீட்டுவேலை செய்யாதோர் வகுப்பில் இருந்து செய்து முடித்துத் தந்த பின் வீட்டுக்குப் போகலாம்.

இப்பவெல்லாம் மாணவர்கள் இவ்வாறான ஒறுப்பை (தண்டனையை) ஏற்றுக்கொள்கிறாங்களா? எனக்கோ ஐயம் தான்!

எதனால் பெற்ற நற்பெயர் (Good Will) நிலையானது?

ஆளுக்காள் ஒவ்வொரு வழியில் நற்பெயரைப் பெறுகிறார்கள். நாம் பெற்ற நற்பெயரே, மக்கள் முன் எம்மை அடையாளப் படுத்தும்.

பண பலம்
அறிவுப் பலம்
சிறந்த பணி செய்தமை
ஒன்றும் நிலைக்காது

சுற்றுச் சூழலில் நம்மாளுகள் எப்படி நற்பெயரைப் பேணுகிறார்களோ, அதனைக் கண்டு பிடித்து முடிவு எடுக்கலாம்.

செவ்வாய், 22 ஜூலை, 2014

ஒரு சொல்லில் தான்...

உறவுகளுக்குள்ளே
எத்தனையோ மாற்றங்கள்
நிகழவைக்க
ஒரு சொல் போதுமே!
ஒரு சொல்லில் தான்
உறவுகளே முறிகின்றன...
முறிந்த உறவுகளை இணைக்க
எத்தனையோ சொல் இருந்தும்
பயனில்லையே!
சுடுசொல் வெளிப்பட்டதும்
தேடிப்போய்
உறவைத் தானே முறிக்கிறது...
பொய்ச்சொல் வெளிப்பட்டதும்
கண்முன்னே
மெய்யான காதலையும் பிரிக்கிறதே...
பிழைச்சொல் வெளிப்பட்டதும்
மொழி புரியாமல்
பகையைத் தூண்டி விடுகிறதே...
நம்பாச்சொல் வெளிப்பட்டதும்
எங்களை
மக்களும் ஒதுக்கிவிட முடிகிறதே...
நாக்கும் மேல் வாயும்
மூக்கை முட்டுமாப் போல
மோதி வெளிப்படுத்தும்
சொல்லின் வலிமை
எழுத்தில் எழுத முடியாததே!
ஒரு சொல் தானே
உயிரிழப்பை ஏற்படுத்தவோ...
உறவுகளை முறிக்கவோ...
துணை போகின்றதே!
நரம்பு இல்லாத நாக்கால
நறுக்கென்று சொன்ன
ஒரு சொல் போதுமே
உன்னை அடக்க...
மறந்துவிடாதே
சட்டெனச் சொல்லாத
சொல்லில் தான் - நீயும்
தலை நிமிர்ந்து நடை போடுகிறாயே!
சொல்லாமலும் இருக்கேலாது
சொல்லித் தான் ஆகணும் என்றால்
மணித்துளி நேரம்
பின்விளைவை எண்ணிப் பாருங்களேன்
பின் விரும்பியதைச் சொல்லுங்களேன்!

திங்கள், 21 ஜூலை, 2014

யாரைத் தான் நம்புவதோ...

நடு வழியில்
பள்ளித் தோழியும்
பள்ளித் தோழனும்
சந்தித்தே
உள்ளத்துக் கிடக்கைகளை
கொட்டித் தீர்க்க
ஆங்கொரு அரச மர நிழலில்
ஐந்து முகப் பிள்ளையார்...
காதல் என்று கைகுலுக்கிய
பெண்கள் எல்லோரும்
பணம் பறித்துச் சென்றதால்
ஏழையானதாகக் கூறியே
"யாரைத் தான் நம்புவதோ..." என்றான்
பள்ளித் தோழன்...
அழகன் ஒருவன்
அன்பும் அறிவும் பணமும்
இருப்பதாகக் கூறியே
காதல் பண்ண வந்த பின்னே
உள்ளத்துக்குப் பின்னே உடலையுமே
பறித்துச் சென்றதன் பின்னே
"யாரைத் தான் நம்புவதோ..." என்றாள்
பள்ளித் தோழி...
அரச மர நிழலில்
பிள்ளையார் முன்னே
இருக்கவேண்டியதை இழந்த ஆணும்
இழக்கக்கூடாததை இழந்திட்ட பெண்ணும்
கண்ணீர் விட்டுக் கதை கதையளந்தாலும்
ஒருவரை ஒருவர் புரிந்ததால்
ஒருவரை ஒருவர் ஏற்க முடிந்ததாமே!
"யாரைத் தான் நம்புவதோ..." என்று
பி.சுசிலா பாடிய குரலில்
பாடிச் சுற்றும் இளசுகளே
பேண வேண்டியதை
பேணத் தவறினால் பாருங்கோ
பட்ட பின்னே கெட்ட பின்னே
அரசடிப் பிள்ளையார் உதவுவாரென
அழுதும் பயன் கிட்டாதே!

உன் முதலிரவுப் படுக்கையறையில் நாடகமா? கவிதையா?


வாழ்க்கையில்
முதன் முதலாகச் சந்திக்கும்
காதலர் இருவரும்
மணமுடித்து முதலிரவில் சந்திக்கும்
புதுமண இணையரும்
நடிக்கின்ற நாடகமிருக்கே - அதை
கொஞ்சம் படியுங்க இங்கே!
புதிதாய் முளைத்த புதுக் காதல்
ஆளை ஆள் சந்திக்க வைத்த - அன்று
எதை எதைப் பேசுவதெனப் புரியாமல்
ஒருவருக்கு ஒருவர் வாய் திறந்தால்
என்னங்க...
என்னங்க...
எதையாவது சொல்லுங்க...
எதையங்க சொல்லுவனங்க...
இப்படித்தானங்க நாடகம் ஆடுவாங்கோ!
முதற் காதல் முதற் சந்திப்பை
பாப்புனைந்து காட்டு என்றால்
"உன்னைப் பார்த்த கண்ணும்
என்னைப் பார்த்த கண்ணும்
இரண்டும் இரண்டும் நான்கே
நாங்க சந்தித்த நாளன்றே
உன் உள்ளம் எண்ணியதும்
என் உள்ளம் எண்ணியதும்
முன் அறியாத உண்மையை!" என
எழுதி எழுதித் தாள்களை நிரப்புவாங்கோ!
"உன் முதலிரவுப் படுக்கையறையில்
நாடகமா? கவிதையா?" என்று
தலைப்பைப் போட்டு விட்டு
புதுக் காதல் முதற் காதல்
என்றெழுதிச் சொல்ல வந்தது - அந்த
ஆணுக்கும் பெண்ணுக்கும் புதிதாக
ஒரேயொரு படுக்கை அறையில்
ஒரேயொரு படுக்கையில் படுக்கவே
ஒரேயொரு முதலிரவு என்றுரைக்கவே!
விடிகாலை மூன்றுக்கு எழுந்தே
படிப்படியாப் பலதும் முடிந்திட
அடிச்சாப் போலவைந்து மணிக்கு
பொண்ணு கழுத்தை நீட்டவே
ஆணுதான் கொம்புத்தாலி கட்டவே
கற்கண்டு கொடுத்து மகிழ்ந்தே
மணமக்களை வாழ்த்தி முடியவே
மணநாள் சாப்பாடு விழுங்கினரே!
பகற்பொழுது முழுவதும் எப்படியோ
அப்படி அப்படிக் கரைந்திட
முன்னிரவு பதினொன்று நெருங்கிட
முதலிரவுப் படுக்கையும் அழகாக்கியே
முதலிரவுக்கு நேரமாச்செனச் சூழவுள்ளோர்
மணமக்களை நுள்ளியும் கிள்ளியும்
ஆகா... முதலிரவா... அம்மம்மா...
என்றெல்லாம் சொல்லி அனுப்பினரே!
முதலிரவுப் படுக்கைக்கு வந்தவங்க
விடிகாலை உடுத்திய உடுப்பை
விடுவிடெனக் கழட்டி வீசியே
ஆளுக்காள் தளர்வான உடையுடுத்தி
படுக்கையில் சரிந்துவிழ முன்னரே
பகற்பொழுதுக் களைப்பை விரட்டிவிட
பால்பழம் பங்கிட்டுப் பருகினரே!
இணையர்கள் படுக்கையில் சரிந்துவிழ
என்னங்க... இந்த இரவில...
அதுங்க... இந்த இரவை...
முதலிரவு என்று சொன்னாங்க...
நான் பிறந்து வளர்ந்துங்க...
நானும் அப்படித் தானங்கோ...
எந்த ஆணுக்கும் பக்கத்தில
நானும் படுக்கவில்லையே...
எந்த பெண்ணுக்கும் பக்கத்தில
நானும் தான் படுக்கவில்லையே...
இன்றைக்குத் தானங்கோ...
உங்களுக்குப் பக்கத்தில கிடக்கிறன்...
நானும் அப்படித் தானங்கோ...
இப்படியே இணையரும் நாடகமாட
இந்த இரவு எனக்கு முதலிரவு
எனக்கும் இது தானங்கோ...
விடிகாலை மூன்றாச்சு என்றாலும்
ஒளிநீக்கி உறங்கலாம் என்றனரே!
என்னங்க என்னை உரசுறீங்க...
இருட்டிலே ஏதேதோ பண்ணுறீங்க...
எப்பன் கொஞ்சம் தள்ளிக் கிடவுங்கோ...
உனக்கும் எனக்கும் - இதுவே
முதலிரவு என்றால் பாருங்கோ
இதெல்லாம் இயல்பு தானங்கோ...
என்றெல்லாம் ஐயம் தீர்த்த பின்னே
இருவர் இடையே இருந்த
இடைவெளி நீங்கிக் கொள்ள
உள்ளம் திறந்து பேசிக்கொண்ட
இருவரும் ஈருடல் ஓருயிராயினரே!
மணமக்கள் இருவரும் தானங்கோ
ஒட்டி உரசிப்பேசத் தொடங்கவும்
வெட்டி எறித்தான் பகலவன்
வீட்டார் தாழ்ப்பாளைத் தட்டி
விடிஞ்சாச்சு மணியேழு ஆச்சென்று
பால்த்தண்ணி பலகாரம் நீட்டியே
விடியவிடியத் தூங்கா மூஞ்சிகளான
இணையர்களின் நாடகத்தைக் கொஞ்சம்
முடித்து வைக்க முயன்றனரே!
பாப்புனைய விரும்பும் உறவுகளே...
நானுரைத்ததோ
முதலிரவு நாடகமென்று அறிவீரா?
பாப்புனையப் புறப்பட்டால் பாருங்கோ...
கருப்பொருளை வைத்துக்கொண்டு
கதைச்சூழல் எதுவெனச் சொல்லுவதாக
இருந்துவிடக் கூடாது பாருங்கோ...
கதைச்சூழலை வைத்துக்கொண்டே
கருப்பொருளைப் பா/கவிதை ஆக்குங்களேன்!
"இணையர் இணையும் முதலிரவு
கொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...
ஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து
ஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராக இணைய முயலவே
முதலிரவு நாளன்று காலம் கரையவே
முழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே!" என
பாப்புனைய முயன்று பாருங்களேன்!
"முதலிரவு அன்று முட்டி முட்டியே
கொட்டிக் கொட்டியே ஐயம் தீர்க்க
ஆளாள் களையாது காலம் கரைய
விடிந்த பின்னரே தெரிய வந்தது
எதுவும் நிகழாத முதலிரவு!" என்றாவது
பாப்புனைய முயன்று பாருங்களேன்!





ஞாயிறு, 20 ஜூலை, 2014

யாழ்பாவாணனின் முயற்சிகளைப் பார்க்கலாம் வாங்க!

என்னைப் பற்றி நான் சொல்வதை விட எனது வெளியீடுகளே என்னைப் பற்றிச் சொல்வதை விரும்புகிறேன். "கற்றது கைப்பிடி மண்ணளவு கற்காதவை உலகளவு" எனப் பெரியோர் வழிகாட்டுவர். ஆயினும், நான் கற்றது சிறிதாக முளைத்த சின்னிவிரல் நகத்தளவு என்பேன். நான் கற்காதவை உலகளவு இருக்கும் என்பதைத் தாங்களும் அறிவீர்கள். ஆயினும், எனது இணையவழி முயற்சிகளைப் பற்றிச் சொல்ல விரும்பியதால் இப்பதிவை எழுதுகிறேன்.

1987 இலிருந்து எழுதுகிறேன். ஈழத்து ஏடுகளான வீரகேசரி வாரமலர், ஈழநாதம், அறிவுக்கதிர் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளியாகின. அரங்குகளிலும் நான் கவிதை பாடினேன். ஈழத்துப் போர்ச் சூழலால் பல நூறு படைப்புகள் அழிந்து போயின. ஆயினும், 2010 இலிருந்து வலைப்பக்கம் ஊடாக எனது இலக்கிய முயற்சிகளைத் தொடர்ந்தேன். இன்று இயலக்கூடிய அளவு எனது முயற்சிகளை ஒழுங்குபடுத்தி முடித்திருக்கிறேன். ஆனால் இவை முடிவல்லத் தொடக்கமே! இவற்றைத் தொடர்ந்து பேணுவதால் என்னால் இயலக்கூடிய எல்லாப் பணிகளையும் வழங்க முடியுமென நம்புகிறேன்.

இன்றும் நான் இலங்கைப் படைகளின் கண்காணிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதால் அரசியல் நிலைமைகளை எழுத முடியாதிருக்கிறேன். ஆயினும், எனது ஏனைய முயற்சிகளைத் தொடருகிறேன். உளநலம், நற்றமிழ், பாபுனைதல், எழுத்துகள், வெளியீடுகள் ஆகிய ஐந்து இலக்குக் குறித்துத் தமிழில் ஐந்து வலைப்பூ நடாத்துகிறேன். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் போதிய அறிவின்மை இருந்தும் எனது கிறுக்கல்களை வெளியிட இரண்டு வலைப்பூ நடாத்துகிறேன்.

இவற்றிலிருந்து பிந்திய ஐந்து பதிவுகளைத் (http://feed2js.org/ தள உதவியுடன்) திரட்டித் தொகுத்திருக்கிறேன். நேரமுள்ள வேளை விரும்பியோர் வருகை தந்து பார்வையிட முடியும். மேலும், நானோ அறிவிற் சிறியன்; பெருமையாகச் சின்னப்பொடியன் என்று சொல்லியவாறு இருக்க முடியாதே! ஆகையால், நான் படிக்கத் தேடிப் பதிவிறக்கிய மின்நூல்களையும் பிறருக்குப் படிக்க உதவும் மின்நூல்களையும் மின்சேமிப்பகங்களில் களஞ்சியப்படுத்தி உள்ளேன். அவற்றைப் பதிவிறக்க உதவும் முகவரிகளைத் (URL) தொகுத்திருக்கிறேன்.

இன்று ஆயிரத்திற்குச் சற்றுக் குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் இலட்சக் கணக்கான மின்நூல்களைத் திரட்டித் தொகுக்கவுள்ளேன். 1995 இல் கணினி படித்துப் பின் விரிவுரையாளராகவும் நிகழ்நிரலாக்குனராகவும் இருந்தாலும் தற்போது நிறுவனமொன்றின் முகாமையாளராகவுள்ளேன். அதற்காகக் கணினிக் கல்வியைக் கைவிடலாமா? அதற்கும் யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) என்ற தளத்தைப் பேணுகிறேன். அதனூடாகத் தமிழ் மென்பொருள்கள் வெளியிடவுள்ளேன்.

இவ்வாறான வெளியீடுகளின் திரட்டியாக "யாழ்பாவாணனின் இணையவழிப் பணிகள் (Yarlpavanan's Network Duties)" என்ற தளத்தை ஆக்கியுள்ளேன். இதுவரை ஒழுங்குபடுத்திய எல்லா முயற்சிகளும் இனிச் செயற்படவுள்ளது. அதன் அறுவடைகளை இத்தளத்தில் பதிவுசெய்யவுள்ளேன். இத்தளத்தை எனது வலைப்பூக்களில் இணைத்துமுள்ளேன். இங்கு வருகை தருவதன் மூலம் பிந்திய பதிவுகள், பிந்திய தகவல் என்பன அறிய முடியும். அதற்குக் கீழுள்ள படத்தைச் சொடுக்கிப் பாருங்கள்.


சனி, 19 ஜூலை, 2014

பணமா? அன்பா(பாசமா)?

பணமிருக்கும் வரை
இருந்த உறவு
பணமில்லையென்றால்
பறந்து போய்விடுமே!
அன்பு(பாசம்) காட்டினால்
உறவு மலரும்...
மலர்ந்த உறவு
வற்றாத அன்பால்(பாசத்தால்)
பிரிந்திட வாய்ப்பில்லையே!
வாழ்க்கையில்
பணத்தைவிட
அன்பே(பாசமே) வலிமையானது!
வாழப் பணம் வேண்டும்
ஆனால்
வாழ்வைச் சுவைக்க
இனிய அன்பு(பாசம்) வேண்டுமே!

வெள்ளி, 18 ஜூலை, 2014

புதிய வலைப்பதிவர்களே! கொஞ்சம் கேளுங்கோ...

புதிய வலைப்பதிவர்களே! உங்களை வைச்சு உலகெங்கும் தூய தமிழ் பேணலாமென்று தான் சின்ன உதவிக் குறிப்புத் தர எண்ணுகிறேன். முதல்ல ஒரு உடன்பாடு தேவை. தமிழுக்குள்ள ஆங்கிலம், இன்கிலிசு கலந்து தமிங்கிலம், தமிங்கிலிசு மொழிகளில் பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம்.

கூகிள் புளக்கர், வேர்ட்பிரஸ், ரும்பிளர் தளங்களில் வலைப்பூக்களைத் தொடங்கியிருப்பீர்கள். முதலில தமிழ்மணம் திரட்டியில உங்கள் வலைப்பூவை இணையுங்கள். இதில் ரும்பிளர் வலைப்பூவை இணைப்பது சிக்கலாயிருக்கலாம். மற்றைய இரண்டில் ஒன்றிலாவது நீங்கள் வலைப்பூ தயாரித்து இணைத்து விடுங்கள்.

வலைப்பூவை தயாரித்தாச்சா? பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமா? இவை இரண்டும் தான் உங்கள் வலைப்பூவை எடைபோட உதவுகின்றன. இவற்றை அதிகரிக்கச் செய்ய நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.

புதிய பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டியில இணைத்துவிட்டால் போதாது, அத்திரட்டியில் வெளிவரும் பதிவர்களின் பதிவுகளைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுங்கள். புளக்கரிலோ வேர்ட்பிரசிலோ விருப்பத் தெரிவாக உங்களுக்குப் பிடித்த வலைப்பூவை இணைத்து வைத்து அவற்றிலும் கருத்துக் கூறுங்கள். அவ்வேளை மற்றைய பதிவர்களும் உங்கள் வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவார்கள்.

உங்கள் வலைப்பூவைப் பார்வையிட வருவோர் எல்லோரும் கருத்துக் கூறுவார்களென எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கும் நேர முகாமைத்துவச் சிக்கல் இருக்கும் என்பதை நாம் தான் உணர வேண்டும். நாம் பிறரது வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவது, எமது வலைப்பூவிற்கான வருகையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவே தவிர கருத்துக் கூறுவார்கள் என்பதற்காகவல்ல என்பதை நாம் தான் உணர வேண்டும்.

எடுத்துக்காட்டாக என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; நான் 160 வலைப்பூக்களை புளக்கரிலும் வேர்ட்பிரசிலும் விருப்பத் தெரிவாக வைத்திருக்கிறேன். மேலும், 160 ஐ 250 ஆக உயர்த்த எண்ணியுள்ளேன்.
புளக்கரையோ வேர்ட்பிரசையோ திறந்ததும் எவர் புதிய பதிவை இட்டுள்ளாரெனப் பார்த்துக் கருத்துக் கூறுவேன். இதனாலேயே எனது வலைப்பூக்களுக்குப் பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமாக இருக்கிறது.

அடுத்து நாம் கவனிக்கவேண்டியது நமது பதிவைத் தான். அடுத்தவர் இடாத பதிவுகளாகவும் தரமானதாகவும் சுவையானதாகவும் எவரும் விரும்பி வாசிக்கக் கூடியதாகவும் எடுத்துக்காட்டாக எதனையும் சுட்டியிருந்தால் அதற்கான இணைப்பையும் மாற்றாரைச் சுண்டியிழுக்கக்கூடிய மாறுபட்ட அழகான தலைப்பையும் நமது பதிவு கொண்டிருக்க வேண்டும். அப்ப தான் எதிர்பாராமல் எட்டிப்பார்க்க வந்தவரும் கூட சற்று நின்று படித்துச் செல்வர்.

அடுத்து அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் மீள்பதிவு (Reblog) செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம். அதனால் வருகையாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு. இவை தான் எனது சிறு குறிப்புகள். இவை வலைப்பூ நடாத்தி முன்னிலைக்கு வர உங்களுக்கு உதவுமென நம்புகிறேன்.

நண்பர் முரளிதரன் தனது பதிவொன்றில் தற்போது தமிழ்மணத்தில் புதிய பதிவுகள் குறைந்து வருவதாக மதிப்பீடு செய்திருந்தார். அதுவே இப்பதிவை எழுதத் தூண்டியது. புதிய வலைப்பதிவர்கள் மட்டுமல்ல எல்லோரும் எனது சிறு குறிப்புகளைப் பாவித்துத் தமிழ்மணத்தில் புதிய பதிவுகளை அதிகரிக்கச் செய்வதோடு நமது வலைப்பூக்களைச் சிறப்பாகப் பேணுவோம்.

வயிறு பற்றி எரியுதையா...

அரசுக்கு வருவாய் இன்மையால்
எடுத்த எடுப்பிலே
எல்லாவற்றுக்கும் விலையைக் கூட்டி
வருவாயைப் பெருக்கக் கணக்குப் போட்டிருக்கே!
என் பால்குடிப் பிள்ளை அழும்போது
மனைவி கேட்கிறாள்
"பிள்ளையைப் பெற முயன்றால் சரியே
பிள்ளைக்குப் பால்மா வேண்டி வா" என்று
பச்சையாகக் கேட்கையிலே
என்
வயிறு பற்றி எரியுதையா
எடுக்கிற சம்பளம் போதாமையாலே!
அட கணக்குப்பிள்ளோய்...
நாங்களும் மக்கள் தானுங்க...
அரசுக்குப் பசிக்குது என்றால்
வருவாயைப் கூட்டுறாங்களே...
எங்கட பசிக்குச் சாப்பிட
எங்கட சம்பள அதிகரிப்பை
அரசு போட்ட கணக்கில
சேர்க்காமல் விட்டால்
எங்கட வயிற்றை
எப்படி வளர்க்கிறதப்பா?
பிச்சைக்காரர் கூட
"அரசு
எல்லாவற்றுக்கும் விலையைக் கூட்டுது
நீங்க மட்டும்
தேய்ந்த பழங் காசு பத்துப் போட்டால்
எப்படீங்க
நாங்க பால் கோப்பி குடிப்போம்?" என்று
எங்களுக்குத் தொல்லை தாறாங்களே!

வியாழன், 17 ஜூலை, 2014

மரபுக் கவிதையில் இனிப்பும் உண்டு

யாப்பறிந்து பாப்புனைந்தால் தான்
மரபுக் கவிதையில் இனிப்பும் உண்டென
அறிய வாய்ப்பு இருக்கு என்பேன்!
அப்படியொரு இனிப்பை தான்
பாவலர் கி.பாரதிதாசன் அவர்கள்
"சொற்பொருள் பின் வருநிலையணி!" என
சுவைக்கத் தந்திருக்கிறார் பாரும்!
"ஒரு சொல் பலமுறை
ஒரே பொருளில் பயின்று வருவதும்,
முன் வந்த பொருள்
பின்னர்ப் பல இடங்களில் பயின்று வருவதும்
சொற்பொருள் பின் வருநிலையணி" என
பாவலர் கி.பாரதிதாசன் அவர்கள்
விளக்கம் தந்து எடுத்துக்காட்டும் தந்து
சுவைக்க ஐந்து குறள்வெண்பா தந்து
படித்துச் சுவைத்தால் இனிக்கும் என்பதை
கீ்ழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!
http://bharathidasanfrance.blogspot.com/2014/07/blog-post_17.html

இரு பொருளில் ஒரு சொல்

அன்று பள்ளியில் படித்தவங்க கண்டாங்க
கணக்கில பிழை வேண்டினேன்
இன்று வீட்டிற்கு வந்தால் பார்க்கலாம்
இல்லாளோடு பிழைத்துக் கொள்கிறேன்
"முன்னேற்றம்!"

*இங்கு வரும் பிழை; சரியற்றதையும் வாழ்தலையும் சுட்டி நிற்கிறது.

பெறுமதி இல்லாத சட்டங்கள்


சட்டம் ஓட்டையாக இருந்தென்ன
சட்டம் வலையாக இருந்தென்ன
சட்டத்தின் பிடிக்குள் சிக்காமல்
குற்றவாளிகள் தப்பிக்கொள்ள
இடமளிப்பவர்கள் இருக்கும் வரை
சட்டம் என்பது
பெறுமதி இழந்த ஒன்றே!
மக்கள் குழாம் அணிதிரண்டே
குற்றவாளிகள் தப்பிக்கொள்ள
இடமளிப்போரை ஒழிக்காதவரை
எத்தனை சட்டங்கள் போட்டென்ன
அத்தனை சட்டத்துக்குமே
பெறுமதி கிட்ட வாய்ப்பில்லையே!

புதன், 16 ஜூலை, 2014

எம்.ஜி.ஆரைப் போல வர வேண்டும்

பிறந்தால் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் பிறந்தால்
திரைப்பட நடிகராக வேண்டும்...
திரைப்பட நடிகரானால்
சிவாஜிகணேசனைப் போல
நடிக்க வேண்டும்;
எம்.ஜி.இராமச்சந்திரைனப் போல
ஏழை மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்!
திரைப்பட நடிகரான பின்னே
நடிப்பை மட்டும் நம்பினாலும்
ஏழைகளின் தோழனான
எம்.ஜி.இராமச்சந்திரைனப் போல
தமிழ்நாட்டு முதலமைச்சராக வேண்டும்!
எம்.ஜி.இராமச்சந்திரனால் முடிந்தது
என்னால் முடியுமா என்று
என்னை
நானே மதிப்பீடு செய்து பார்த்தேன்...
கடவுளிடம் இறக்கை வேண்டி
பறந்து போனாலும் கூட
முதலமைச்சர் இருக்கையைத் தானும்
எட்டி பார்க்க முடியாத
உனக்கெல்லாம்
எம்.ஜி.ஆரைப் போல வர
எண்ணம் இருந்தும் பயனில்லையென
கண்டி ஆச்சி சொன்னாள்!
நெஞ்சு முட்டத் துயரம்
எனக்குள்ளே முட்டி மோதியது...
திரைப்படத்தில் நடித்தாலும் கூட
மக்கள் முன்னே நடிக்காமல்
மக்களுக்குள்ளே மக்களாக வாழ்ந்தமையால்
எம்.ஜி.ஆர். முதலமைச்சரானாரெனப் படித்தேன்!
இப்பவெல்லாம்
இரண்டு, மூன்று படங்கள்
நடிச்சாப் போதும் கட்சியே தொடங்கிறாங்க...
முதலமைச்சராகத் தானே நடிக்கவும் வாறாங்க...
நான் படிச்சதிலே
சித்திடைய வாய்ப்புண்டா என
எண்ணிப் பார்த்தேன்...
மக்களுக்குள்ளே நடிக்காமல்
திரைப்படத்தில் நடித்தாலும்
கோடிக்கணக்கில வேண்டிச் சேர்த்தாலும்
தனக்கு மிஞ்சிய எல்லாவற்றையுமே
ஏழைகளுக்குக் கொடுத்து உதவினால் போதும்
எம்.ஜி.ஆரைப் போல முதலமைச்சர் ஆகலாமென
வடலூர் அண்ணன்
அடிச்சுச் சொன்ன பிறகு - என்னால
அமைதியாக இருக்க முடியேல்லையே!
என் நெஞ்சில் இருக்கும் இறைவா!
எனக்கு இன்னொரு பிறப்பு உண்டெனில்
தமிழ்நாட்டிலேயே
என்னைப் பிறக்க வைத்துவிடு
எம்.ஜி.ஆரைப் போல
நானும் முதலமைச்சராகத் தானே!

குறிப்பு: எம்.ஜி.ஆரைப் போல பணி செய்யாமல், அவரைப் போல முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்களுக்கு இப்பதிவைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

இருவரிடம் ஒரே கேள்வி!


1
பெண் : நான் உன்னை விரும்பலாமா?
(காதலிக்கலாமா என்கிறேன்)

ஆண் : அம்மா தாயே...
இப்படித்தான்
பலர் என்னோடு பழகினாங்க...
நானும்
இளகினதால இழந்தேனே
பல இலட்சம்...

2
ஆண் : நான் உன்னை விரும்பலாமா?
(காதலிக்கலாமா என்கிறேன்)

பெண் : ஐயா கடவுளே...
இப்படித்தான்
ஒருவர் என்னோடு பழகினாரு...
நானும் இளகினதால,
இழக்கக்கூடாததை இழந்திட்டேனே...

பா புனையத் தோன்றிச்சே!

வயிற்றில் பிள்ளையைச் சுமக்கும்
நிறை மாதப் பெண்
சுமைதாங்கி படும் நோக்களை யாரறிவார்?
குழந்தை நெஞ்சாங்கூட்டை
தலையாள் இடிக்குது என்பாள்...
எப்பன் சரிந்து கிடந்தால்
இடம், வலம் பார்த்து
குழந்தை
காலால் உதைக்குது என்பாள்...
"மேல் வயிற்றில் இடி என்றால்
ஆண் குழந்தையடி
கீழ் வயிற்றில் இடி என்றால்
பெண் குழந்தையடி" என்று
பழம் கிழம் ஒன்று
முணுமுணுத்து ஓயவில்லை
"அம்மோய்..... அம்மோய்.....
அடி வயிறு குத்துது..." என்றாள்
பிள்ளையைச் சுமந்தவள்...
சட்டுப் புட்டென்று
அண்டை அயலுக்குச் சொல்ல
அடுத்த வீட்டு மருத்துவிச்சியும் வந்தாள்...
"தலைப் பிள்ளையை
வீட்டில வைச்சுப் பெற ஏலாது
மருத்துவமனைக்குக் கொண்டு போ!" என்றாள்
வந்த மருத்துவிச்சியும்...
அடுத்த கணப்பொழுதில்
வயிற்றுப் பிள்ளைக்காரியை
மருத்துவமனைக்கு ஏற்றிப் பறித்தார்கள்...
அங்கே அவளும்
என்ன பிள்ளையை இறக்கி வைத்தாளோ
எவருக்குத் தான் தெரியும்!

இங்கே பாருங்கோ
பயணிகள் பேரூந்துக்கு வாயிருந்தால்
எப்படியோ
எத்தனையோ சொல்லியழுமே!
சின்னஞ் சிறு ஊர்திக்குள்ளே
பென்னம் பெரு
மலை போன்ற ஆள்களை
உள்ளே தள்ளி அடையிறாங்க...
ஊதிப் பெருத்த பூசணி போல
ஊர்தியின் நிலைமை...
பக்கக் கண்ணாடிகளை ஒதுக்கியே
ஆள்களின் மூஞ்சிகள்
வெளித்தள்ளும் நிலைமை...
வியர்வையால் குளிப்போரும்
இருக்கக்கூடும்...
"கால் கால் உளக்காதையும்..."
கீச்சுக் குரலில் பெண்ணொருத்தி...
கனவூர்தியில் பொருள் ஏற்றியது போல
இருக்கையில் இருப்போர்
நிற்போரின் பொருள்களைச் சுமப்பரே...
நிற்க இடமில்லாத போதும்
இயந்திரப் பகுதியின் மேலே கூட
கைக் குழந்தைக்காரரையும்
ஏற்றி உள்ளே அடுக்குவாங்கள்
ஓட்டுநரும் நடத்துனரும்...
ஊரிலிருந்து கிளம்பிய பேரூந்து
ஒருவாறு
நகருக்கு வந்து சேர்ந்தது...
பேரூந்து நிறுத்த முயன்ற வேளை
இயந்திரப் பகுதியின் மேலே
நின்றவளின் குழந்தை கைநழுவி
ஓட்டுனரின் கைப்பிடிக்குள் விழ
"ஐயோ என்ர குழந்தை..." என்று
குழந்தைக்காரி ஒருத்தி அழுதாள்...
"என்ர புண் காலில
பல கால்கள் உளக்கி
செந்நீர் ஓடுவதைப் பாரடா..."
என் தோளைத் தாவூம்
என் துணைவி...
யாரோ ஒருத்தி
மயங்கி விழுகிறாளெனக் கையேந்தினேன்...
"இன்றைக்குத் தான்
கடைசிச் சிகிச்சை என
மருத்துவமனைக்கு வருவதற்கிடையில
பேரூந்து நெரிசலில அண்ணே
அடி வயிறு நோகுது அண்ணே
என்னைக் கொஞ்சம் பிடியுங்கோ..." என
எவளோ பெத்த பிள்ளை
என் கைக்குள் வீழ்ந்தாளே...
தரையைத் தொட்டவாறு வந்த
பேரூந்து
ஆள்களை இறக்கிய பின்
குதிக் காலணி போட்ட பெண் போல
தரையை விட்டு மூன்றடி உயர
ஓடி மறைந்தது தெரியவில்லை...
ஆனால்
பிள்ளையைச் சுமந்தவள் படும் நோவைப் போல
பேரூந்துக்கும் நோ பட்டிருக்கும் தான்
அதைவிட
பயணிகள் நாம் அடையும் நோ
அளவிட முடியாதே!

"வயிறு வீங்கிய
பிள்ளையைச் சுமப்பவள் போல
வீங்கிய பேரூந்தில்
பயணிக்கும் நாங்களும்
சுமந்தவள் பெற்ற பின்
வெளிவந்த குழந்தை போல
பேரூந்தாலே இறங்கிய பின் தானே
மூச்சு விடுகிறோம்!" என்று
பா புனையத் தோன்றிச்சே!

கைக்குக் கைமாறும் பணமே - 06

கடற்காற்றோடு கலந்து வீசிய
அயலாள் பெருமாள் வீட்டு
"ஐயோ! அம்மோய்!" என்றழுகை
பைங்கிளி வீட்டிற்குள் நுழைய
வேலனும் பொன்னனும் வேளைக்கே
பெருமாள் வீட்டிற்குள்ளே இறங்க
பெருமாளுக்கு உடம்பு சரியில்லையென
பெண்டாட்டி போட்ட கூப்பாட்டிலே
கடற்கரையூரும் திரண்டு நின்றதே!

திரண்டு நின்றவர்களோ சொன்னார்கள்
முரண்டு பிடிக்காமல் செல்லுங்கள்
உடனேயே மருத்துவ மனைக்கென
உடனே வேலனும் பொன்னனும்
நம்ம பைங்கிளி இருக்க
சும்மா எங்கேனும் போகணுமா?
எங்கேயும் போகவும் வேண்டாம்
இங்கேயே பைங்கிளி வந்திட்டாளென
வந்துகொண்டே பெத்தவள் சொன்னாளே!

எங்கட பெருமாளுக்கு என்னவாச்சு
உங்கட பைங்கிளி வந்தாச்சென
பைங்கிளியைப் பெத்தவள் விசாரிக்க
பெருமாளும் நடந்ததைச் சொல்ல
பைங்கிளியோ கைநாடி பார்த்தாள்
ஏதோ காதுக்க செருகியவள்
பெருமாளின் நெஞ்சில முதுகில
வைத்துச் சோதித்துப் பார்த்தாள்
மருந்தையும் பருக்கியும் விட்டாளே!

திரண்ட கடற்கரையூரார் கண்டது
பைங்கிளியின் மருத்துவப் பணியா
பைங்கிளியாள் குடும்பத்தார் நற்குணமா
என்னமோ மருத்துவர் பைங்கிளியா
கடற்கரையூரின் கலங்கரை விளக்கா
பைங்கிளி மணமாகி விட்டாளா
பைங்கிளியின் மணமகன் நம்மூரா
பிறவூரானுக்குக் கழுத்தை நீட்டுவாளா
கடற்கரையூரார் வாய்கள் ஓயாதோ?
(தொடரும்)

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மிளகு (கடுகுக் கதை)

நம்ம ஊரில பொன்னையரும் பொன்னம்மாவும் தான் பழசுகள். பொன்னையருக்குத் தொன்னூற்றொன்பது அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் முப்பத்தைந்து அகவைக் காளை தான். பொன்னம்மாவுக்கு தொன்னூற்றிரண்டு அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் இருபத்தைந்து அகவைக் வாலை தான். இருவரது இளமைக்கும் பனம் பண்டங்கள் தான் காரணமென ஊரார் சொல்லிக்கொள்வர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, பொன்னையருக்குப் பொழுது போகவில்லை. "எடியே பொன்னி, அந்தப் பனம் பாத்தியைக் கிளறட்டோ..." என பொன்னையரும் இல்லாளைக் கேட்டார். "இந்தச் சனியன் இஞ்ச நின்றால் தொல்லை" என்று "ஓமோம் போய்க் கிண்டுங்கோ" என்று பொன்னம்மாவும் பொன்னையரைக் கலைத்தாள்.

பொன்னையரைக் கலைத்த பொன்னம்மா அடுப்பில என்ன பண்ணுறாள். பொன்னையருக்கு அதை அறிய வேணும் போலிருந்தது. இஞ்சாரும் பொன்னம்மா... எனக்குக் கொஞ்சம் பாலைத் தண்ணியைத் தாவேன். பொன்னையரும் பொன்னம்மாவுக்கு தொல்லை கொடுத்தார்.

இஞ்சாரும்... இந்தப் பச்சைத் தண்ணியைக் குடியுங்கோ... பொன்னம்மா மூக்குப்பேணியை நீட்டினாள். "எடியே... நான் கேட்டது பால்த் தண்ணியெல்லோ... ஏனடி பச்சைத் தண்ணியை நீட்டுறாய்..." என்று பொன்னையரும் பொங்கினார்.

தண்ணியைத் தாவென்று கத்திப்போட்டுப் பாலைக் கேட்கிறியே!

பாலைத் தண்ணியைத் தாவென்றெல்லோ கேட்டேன்!

எனக்குத் தண்ணி தான் காதில விழுந்தது!

அடுப்பில என்னடி வேலை? பாலை ஊற்றிக் கொண்டு வா!

"இந்தச் சனியனோட காலம் தள்ள ஏலாதெனக் குமுறிக்கொண்டு, அடுப்பில உழுத்தங் கழி கிண்ட போறேன்; அதற்குள்ளே பாலை ஊற்றெண்டு தொல்லை தாறியள்..." என்று அடுத்த அடுப்பில கிடந்த பாலை ஊற்றிக் கொடுத்தாள் பொன்னம்மா.

உழுத்தங் கழி கிண்டித் தாறவளிட்ட தேவையில்லாமல் தொல்லை கொடுத்திட்டேனென உழுத்தங் கழிச் சுவை நாவூறப் பாலைக் குடிச்சதும் பனங் கிழங்கு கிண்டப் பறந்தார் பொன்னையர்.

எப்படித் தான் எரிந்து விழுந்தாலும் பொன்னம்மாவுக்குப் பொன்னையரில அதிக பற்றுத் தான். பனங் கிழங்கு கிண்டிக் களைத்துப் போவாரென எண்ணி "உழுத்தங் கழி ஆறப் போவுது, எப்பன் சுறுக்காய் வாவென்" என்று கூப்பிட்டாள்.

உழுத்தங் கழிச் சுவையில அப்படியே கிண்டிய கிழங்கை அள்ளிக்கொண்டு பொன்னையரும் திரும்பினார். கிழங்கை உரித்துப் போட்டு அவிச்சுப் போடெனச் சொல்லிப் போட்டு உழுத்தங் கழி உண்ட களைப்பில எப்பன் சரிந்தார் (படுத்தார்).

கிடந்தவர் எழும்பினால் சுள்ளெண்டு கொதிப்பரெனப் பொன்னம்மாவும் கிழங்கை அவிச்சுப் போட்டு ஆறியிருந்தாள். ஒருவாறு பொன்னையரும் எழும்ப அவிச்ச கிழங்கை நீட்டினாள். பொன்னையருக்கு எப்பன் மகிழ்ச்சி! "உப்பு மிளகைப் பொடி பண்ணியாவேன்" என்று அன்பாச் சொன்னார்.

பொன்னம்மா அடுப்புப் பக்கமாய்க் கிடந்த நாலு செத்தமிளகாய் இரண்டு உப்புக் கட்டி எடுத்து உரலில போட்டு இடிச்சுக் கொடுத்தாள். சம்பல் தூளாகக் கிடந்த மிளகாய்ப் பொடியை நீட்டினாள்.

என்னடி... கறுப்புப் பொடிக்குப் பதிலாகச் சிவப்புப் பொடியை நீட்டுறாய்... என்னடி பண்ணினாய் என்றார் பொன்னையர். உப்பு மிளகாய்ப் பொடி கேட்டியள்! அதைத் தான் செய்தேன்! அது தான் சிவப்பு!" என்று பொன்னம்மா சொல்ல, "அதடி... உப்பும் மிளகும் எடி... போய்ப் பொடி பண்ணியாடி..." என்று பொன்னையர் விரட்ட "உப்பு மிளகுப் பொடி" உடன் அவர் முன்னே பொன்னம்மா வந்து நின்றாள்.

ஒரு பனங்கிழங்கை எடுத்தார்... இரு பாதி ஆக்கினார்... தும்பைத் தவத்திக் கிழங்கை உப்பு மிளகுப் பொடியில் வைத்துத் தொட்டுத் தின்றார் பொன்னையர். இஞ்சாரும் நீங்களும் தின்று பாரும்... உப்பு மிளகுப் பொடியில தொட்டுத் தின்னேக்க பனம் கிழங்கு நல்ல சுவையாக இருக்குதே!

விடிகாலை ஐந்துக்கு எழும்பினதும் பத்து மணிவரை படுத்தாத பாட்டைப் படுத்திப் போட்டு, பனங்கிழங்கைத் தின்னென்று அன்பாக உருகிறியள் எனப் பொன்னம்மா சீறினாள். "குடும்பம் என்றால் முற்றும் அன்பையோ முற்றும் மோதலையோ எதிர்பார்க்க முடியாதே... எங்கட வாழ்வில இதெல்லாம் வழமை தானே" என்று பொன்னையர் பொன்னம்மாவை அமைதிப்படுத்தினார்!
(யாவும் கற்பனை)


இது போன்று நீங்களும் கதைகள் புனையலாம். அதற்குக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பயன்பெறுக.
கதைகள் புனையலாம் வாருங்கள்!
http://wp.me/pTOfc-aP

சனி, 12 ஜூலை, 2014

பேரூந்து போய் விட்டதா?

தோழர்-01: என்ன காணும்! வருகை பிந்திப் போய் விட்டதே!

தோழர்-02: என்னவள் வருவாளா என எண்ணி வந்த பேரூந்தில் ஏறவில்லை. அது போய் விட்டது! (Missed the bus) ஆயினும், என்னவளோ அடுத்தவன் உந்துருளியில் போகக் கண்டேன்!

கோவில் உள்ளே என்ன மோதல்?

ஒருவர்: என்ன காணும் ஆளுக்காள் முட்டி மோதுறாங்கோ...?

இருளர்: அந்தக் கடவுளின் உருவிற்குக் கீழே மாங்காடு பூஞ்சோலை அம்பன் என்றிருக்கே... அதற்குக் கீழே அன்பளிப்பு அம்பிகை என்று போடாமையால் அடிபடுறாங்கோ...!

சும்மா அலைய ஏலுமே!

பாலையா: என்னவாம் உவன் வாரிக்குட்டி நான்காமாளுக்குப் பின்னாலே அலையிறான்...

தேனையா: ஏற்கனவே மூன்றாளோட ஓடிப்பிடிச்சு முப்பது இலட்சம் வேண்டின சுவையில; பத்து இலட்சம் வேண்டத் தான்...

வெள்ளி, 11 ஜூலை, 2014

எது கவிதை என்று படித்தாலென்ன?

"அவள் அடித்த அடி
இன்னமும் இப்பவும்
வலிக்கிறதே!" என்றும்
"அவனுக்கென்ன
அடுத்தவளோடு தொடருவான்
நானல்லவா அழுகிறேன்!" என்றும்
பாப்புனைந்தால்
பாவலனாகிவிடலாமா?
எழுத்து, அசை, சீர், அடி, தொடை, பா எனவும்
பாடுபொருள், உவமை, எதுகை, மோனை எனவும்
எடுத்துச் சொன்னால் - அவை
மரபுக் கவிதைக்காரருக்குத் தான்
புதுக் கவிதைக்காரருக்கு இல்லை என்பீர்...
தொல்லை எதற்கு என்று
அறிஞர் நா.முத்துநிலவன் அவர்களின்
"புதுக்கவிதை-வெற்றிபெற்ற
வரலாற்றுச் சுருக்கம்" என்ற பதிவை
தங்களுடன் பகிர விரும்புகிறேன்!
பாப்புனைய விரும்பும்
எல்லோரும்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
பாவலர் பலரது எண்ணங்களில் தோன்றியதை
பாவலர் நா.முத்துநிலவன் தரும்
புதுக் கவிதை பற்றிய பாடம் என்று
கற்றுக்கொள்ள முன்வாருங்கள்!

http://valarumkavithai.blogspot.com/2014/07/blog-post_11.html

காலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு


விரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)
விலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)
என்பது
காலம் மாறிப் போச்சு - இந்த
காதலும் மாறிப் போச்சு - அந்த
மதுரைத் தமிழன் பேச்சு!
என்பது
'அவர்கள் உண்மைகள்' தளத்தில் நானிட்ட கருத்துரை!
மேலுள்ள விரிப்பைப் பார்வையிட
கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.
http://avargal-unmaigal.blogspot.com/2014/07/blog-post.html

மதுரைத் தமிழன் அவர்களின் 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் மேற்காணும் பதிவைப் படித்த பின் கீழ்க்காணும் எனது கண்ணோட்டத்தைக் கருத்தில் கொள்ளவும்.

சரி! உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றிச்சு! பின்னூட்டத்தில்  தெரிவிக்க மறந்து விடாதீர்கள்! என் எண்ணத்தில் பட்டதை அப்படியே கூறுகிறேன்.

படத்தில் கூறிய அந்தக் காலக் காதலை நினைத்தால் ஓர் உண்மை புலப்படும். அன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் வாழ்க்கை மகிழ்வளிக்கத் தேவையானவை மட்டுமே! அதிலே அப்பன்காரன், அண்ணங்காரங்க ஒத்துழைப்புக் கிட்டுமா என்பதே! அன்று மலர்ந்த காதல் உண்மைக் காதலாக இருக்கும்.

படத்தில் கூறிய இந்தக் காலக் காதலை நினைத்தால் பல உண்மை புலப்படும். இன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் பொழுதுபோக்காக முயல்வோம்; வாழ்க்கையைப் பற்றிப் பிறகு பார்க்கலாம் என்பதே! மேலும் இந்தக் காலத்தில காதல் ஒரு அழகு (ஸ்ரைல்) என்று எண்ணுறாங்கோ! அதேவேளை கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுறாங்க என்றால் நல்வாழ்வைப் பற்றி இந்தக் காலத்து இளசுகள் எண்ணவில்லைப் போலும்.

இந்தக் காலத்தில ஆண் காதலிக்க முன் கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது போல பெண் காதலிக்க முன் மனைவி (பெண்டில்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது இயல்பு அல்லது தேவை. ஏனெனில் இளமை/காதல் இரு பாலாருக்கும் பொதுவானதே! வாழ்வின் இலக்கணம் தெரியாதோரின் எண்ணங்கள் மேலும் மேலும் கீழ்த்தரமாகவே இருக்கும்! இன்று மலரும் காதல் போலிக் காதலாக இருக்கிறது.

அப்படியாயின் உண்மைக் காதல் எது? காதல் என்றால் அன்பு. ஒருவர் நிலை ஒருவர் அறிந்து நெடுநாள் பழகிக் குடும்பப் பின்னணி அறிந்து மாற்றாருக்கு (கணவன்/மனைவி) உறவில்லை என்பதை உறுதிப்படுத்தித் தனக்கு மட்டும் உரிமை கொண்டாட முடியுமென்றதும் மிகையாக வெளிப்படுத்தப்படும் அன்பு தான் காதல் என்பேன்!

காதல் என்ற போர்வையில் நமது சூழலில் இடம்பெறும் இழிநிலைகளை "பத்திரிகைச் செய்திகளே! http://eluththugal.blogspot.com/2014/07/blog-post_10.html " என்ற எனது பதிவில் படிக்கலாம். காதல் என்ற போர்வையில் நமது இளசுகள் போடும் கூத்துகளுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியாகவே
காலம் மாறிப் போச்சு - இந்த
காதலும் மாறிப் போச்சு - அந்த
மதுரைத் தமிழன் பேச்சை எடுத்துக் கொள்கிறேன்.

"விரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)
விலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)" என்ற
மதுரைத் தமிழன் அவர்களின் கோட்பாட்டை (தத்துவத்தை) ஏற்று இயல்பாக, இயற்கையாக அமைந்த காதலைக் கணக்கில் எடு; காதல் கைகூடாவிட்டால் கணக்கில் எடுக்காதே அதாவது சாவை அணைக்காதே (தற்கொலையை நாடாதே)!

வியாழன், 10 ஜூலை, 2014

உறவுகள்



ஓடும் பழமும் (புளியம்பழம்)
ஒட்டிக் கொள்ளாதது போல
உலாவும் உறவுகளை விட
தோலும் தசையும் (மனிதவுடல்)
ஒட்டிக் கொண்டது போல
உலாவும் உறவுகள் நன்று!
தமது கோட்டுக்குள்ளே
அடக்கி ஆள எண்ணுவோரை விட
ஆண்டி ஆனாலும்
அரசனை நம்பியவர் போல
நாம் கீறிய
கோட்டைத் தாண்டாதவர் மேல்!
எப்படி இருப்பினும்
எப்படியும் எப்போதும் எது வரினும்
ஒருவருக்கொருவர்
தமது விருப்பு, வெறுப்புகளை ஏற்று
சமநிலை உணர்வோடு உலாவும்
உறவு நிலையே உயர்வானது!

பத்திரிகைச் செய்திகளே!

இளமை
பூத்துக் குலுங்கும் அகவையிலே
பாலியல் உணர்வலைகள்
மோதிக்கொள்ளும் வேளையிலே
நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை)
தாமாக ஓடிப் போய்க் கூடியோ
தாமாகக் கூடிப் பின் ஓடியோ
குடும்ப வாழ்வில் இறங்கு முன்
சேமிப்புப் பற்றிச் சிந்திக்காமையால்
சீரழிந்து போகின்றனரே!
சோறு, கறி ஆக்கி விட
தேடவேண்டியது எத்தனையோ
அத்தனையும் இருந்தால் தானே
சமையல், சாப்பாடு போல
குடும்ப வாழ்வில் இறங்கு முன்
குடும்பம் நடாத்தத் தேவையானதை
தேடிக் கொள்ளாமல் இறங்கினால்
தெருவில் இறங்கி
பிச்சை எடுக்க வேண்டி வருமென
இளம் அகவைக் குஞ்சுகள்
அறிந்திருக்க வேண்டுமே!
அறிந்திருக்கத் தானே - அந்த
பாலியல் சுகம் தேடப் போய் - அதை
மறந்து விடவே...
வயிற்றை நிரப்பிய பெண்குட்டி
வயிற்றில் உள்ளதை அழிக்க
மருத்துவரை நாடவே
பெண் வயிற்றை நிரப்பிய
ஆண்குட்டியைத் தேடி
காவற்றுறை வலைவீச்சென
நாளும் நிரம்பி வழியும்
பத்திரிகைச் செய்திகளே!

ஊடகங்களும் எழுத்துப் பிழைகளும்


அன்று;
நான் பிறக்கும் முன்
எனது யாழ்ப்பாணத்தில்
ஒர் எழுத்துப் பிழைக்கு
ஒரு "25 சதம்" வழங்கியது
ஒரு பத்திரிகை நிறுவனம்!
வாசிப்பதும்
பிழை பிடிப்பதும்
அறிவைப் பெருக்குவதும்
பணம் ஈட்டுவதும்
அன்றைய
வாசகரிடமும் இருந்ததே!
இன்றைய பத்திரிகைகள்
எழுத்துப் பிழைகளால்
நிரம்பி இருந்தாலும்
வாசகரும் பொருட்படுத்துவதில்லை
பத்திரிகை ஆசிரியரும் கவனிப்பதில்லை
எங்கட பிள்ளைகள் தான்
முட்டாள் ஆகின்றனரே!
நாளேடுகள் (பத்திரிகை), ஏழல் ஏடுகள்,
சிறப்பு ஏடுகள் (நூல்கள்) எல்லாம்
எழுத்துப் பிழைகளோடு தான்
கடைத் தெருக்களில் தொங்குகின்றன
சில தொங்கினாலும்
திறந்து படிக்க இயலாதவாறு
கண்ணாடித் தாள்களால் மூடப்பட்டிருக்கும்
விரும்பியோர்
வேண்டிப் படிக்கலாம் என்று தான்!
வானொலி, தொலைக்காட்சி எல்லாம்
எழுத்துப் பிழை, உச்சரிப்புப் பிழை உடன்
நிகழ்ச்சி நடத்துறாங்க
கண்டுக்க யாருமில்லையா?
விரும்பியோர்
கேட்கலாம்; பார்க்கலாம் என்றா
நடத்துறாங்க!
ஆயிரத்திற்கும் மேலான - தமிழ்
வலைப்பூக்கள் (Blogs) உள்ளனவாம்
உண்மையில் எத்தனையோ
எழுத்துப் பிழைகளோடு தான்
உலாவி வருகின்றனவாம்
உலாவும் கருத்துபதிவரும்
கண்டு கொள்ளாமையால்
எழுத்துப் பிழைகள் மலிந்த
வலைப்பூக்கள் உலாவ வழியாயிற்றோ!
நல்ல ஊடகங்களின் சிறப்பு
எழுத்துப் பிழைகளற்ற வெளியீடே...
வெளியீட்டின் பின் எண்ணி
எழுத்துப் பிழைகள் சீராகாது
வெளியீட்டின் முன் பண்ணி
எழுத்துப் பிழைகள் வாராது
ஊடகக்காரர் தான் பாருங்கோ
எங்கட பிள்ளைகள் முட்டாளாகாமல்
பார்த்துக் கொள்ள வேண்டுமே!



செவ்வாய், 8 ஜூலை, 2014

நண்பா... நண்பா...

தேர்வு எழுதிய பள்ளித் தோழிகள் பேசிக் கொண்ட பேச்சுகளைப் பாருங்கள்.

தோழி-1 : தேர்வு திறம்பட எழுதினாயா?

தோழி-2 : சக்தி குறிப்பெடுத்த தாளைக் களவாடி எழுதியாச்சு...

தோழி-1 : உன்ர எதிர்காலம் போச்சடி...

தோழி-2 : சக்தி தானே வகுப்பில முதலாம் பிள்ளை!

தோழி-1 : ஆமாம். அவள் மேற்பார்வையாளர் கண்டுபிடிக்காமல் தலைகீழாய்க் குறித்ததை அப்படியே எழுதிட்டியேடி!

தோழி-2 : அவள் அதிலையும் கெட்டிக்காரியடி! நான் எதிலையும் முட்டாளடி...

தோழி-3 : இனியாவது படித்துப் போட்டுத் தேர்வு எழுத வாடி!

தோழி-4 : எவளாச்சும் குறிப்பெடுத்தைப் படியெடுத்து எழுதவும் படிக்க வேணுமடி...

எறும்பூரக் கல் தேயுமாப் போல...

ஏதோ
என் எதிரி
என்னைத் தூற்றிக்கொண்டே இருந்தார்...
ஏன்டா
என்றும் தொடருகின்றாய் என்று கேட்க
எறும்பூரக் கல் தேயுமாப் போல
தன்பக்க விளக்கமெல்லாம்
மக்கள் உள்ளத்தில் எழுதப்படுமாமே!
எதிரியின்
தூற்றல் எல்லாம் பொய்யென
நான் கூட
வெளிப்படுத்திய
என்பக்க விளக்கமெல்லாம்
மக்கள் உள்ளத்தில் எழுதப்படாதா?!
கோட்பாடுகளும் முதுமொழிகளும்
எந்தவொரு பக்கத்தாருக்கும்
துணை நிற்பதில்லையே - அவை
எல்லோருக்கும் பொதுவானதே!

திங்கள், 7 ஜூலை, 2014

கவிதை என்று எதைச் சொல்வது? - படியுங்க...


கவிதை என்று எதைச் சொல்வது?
அறிஞர் கும்மாச்சி அவர்கள் கேட்க
நான் படித்துச் சுவைத்துப் பார்க்க
விளங்கச் சொல்வது கவிதையா?
விளங்காத புதிர் செய்வதையா?
புரியாத புதிர் செய்வதா?
எளிய வார்த்தைக் கோர்வைகளா?
புரியும் மண்வாசக் கவிதைகளா?
புதுக் கவிதைகளா? இல்லை
கவிதை என்று எதை சொல்வது?
மென்மேலும் கேள்விகள் தொடர
ஆங்கோர் இடத்தில்
வாசகனின் எண்ண ஓட்டத்தில்
நிலைத்து நிற்கின்றவை தான்
கவிதை என்று அறிய முடிந்ததே!
பாபுனைய விரும்புவோர் அறிய - அவர்
பதிவுக்குக் கருத்துக் கூறிய
அறிஞர் கருத்தையும் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக!

http://www.kummacchionline.com/2010/02/blog-post_11.html

ஞாயிறு, 6 ஜூலை, 2014

மூளைக்கு வேலை தரும் வலைப்பூ

யாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா? சின்னப்பொடியன் யாழ்பாவாணனின் கண்ணோட்டத்தில் எப்படியிருக்குமெனப் படித்துப் பாருங்களேன்.

“உண்மை ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ எழுதுவதே நகைச்சுவை” என அறிஞர் ஒருவர் அகில இந்திய வானொலியில் கூறியதை வைத்துக் கிறுக்குவதே யாழ்பாவாணனின் தகுதி. ஆயினும் "சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை (comedy) எனலாம்." என்று கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்தும் படித்திருக்கிறார். மேலும், கீழ்வரும் பதிவுகள் அவரது முயற்சி.

நகைச்சுவை எழுதலாம் வாருங்கள்
http://wp.me/pTOfc-66
அறிஞர்களின் நகைச்சுவையை அறிவோமா?
http://wp.me/pTOfc-68

சரி! கலைஞரைப் பற்றி எழுதுவதைவிட கலைப்படைப்பைப் பற்றி எழுதுவதையே யாழ்பாவாணன் வெளியீட்டகம் விரும்புகிறது. படைப்பைப் படித்தால் படைப்பாளியை அறிந்து கொள்ளலாம். அதுபோல ஜோக்காளி தளம் பற்றிப் படித்தால் அறிஞர் பகவான்ஜி அவர்களை அறிந்து கொள்ளலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல ஜோக்காளி தளத்தில் இருந்து நான் பொறுக்கிக் காட்டும் எடுத்துக்காட்டுகள் அத்தளத்தை அடையாளப்படுத்தும் என நம்புகிறேன்.

ஒரு பெண் பிள்ளை ஒரு பிள்ளையைப் பெறுகின்ற நோவு இருக்கே; அதுபோலத் தான் ஒரு நகைச்சுவை எழுதி முடிக்கும் போது ஒரு படைப்பாளி நோவடைகின்றார். பிள்ளையைப் பெற்றதும் தாய் அடையும் மகிழ்ச்சியைப் போல நகைச்சுவை எழுதியதும் படைப்பாளி மகிழ்ச்சியடைகின்றார். இது எல்லாப் படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.

இனி அறிஞர் பகவான்ஜி அவர்களின் ஜோக்காளி தளப் பதிவுகளைக் கண்காணிப்போம்.
முதலில் "காதலில் உண்மை உண்டா?" என்ற பதிவைப் படியுங்க:

''உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும் என்று பாடுற காதலிக்கு அட்வைஸ் பண்ணனும்!''
''என்னான்னு?''
''காதலன் சொல்றதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் இன்னும் ஏன் காதலிக்கிறேன்னு தான் !''
http://www.jokkaali.in/2012/11/blog-post_14.html

பொய் சொல்லுற காதலன்; எப்படி உண்மை சொல்வானென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

அடுத்து "வீடு பிடிக்கலைன்னா இப்பிடியா சொல்றது?" என்ற பதிவைப் படியுங்க:

''குறைந்த வாடகையிலே இந்த வீடுதான் இருக்கு ,உங்களுக்குப்  பிடிக்குதா?''
''வீடா இது? பேசாம to let க்குப் பதிலா toilet னு போர்டுலே எழுதுங்க!''
http://www.jokkaali.in/2012/11/blog-post_17.html

அறிஞர் வீட்டின் கொள்ளளவை இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். நாங்க படிக்கிற காலத்தில் தெரு வழியே "To Let" க்குப் பதிலாக "Toilet" னு எழுதிப் போட்டு மறைஞ்சது இப்பதிவைப் படித்ததும் நினைவிற்கு வருகிறது.

அடுத்து "நகை உனக்கு! நங்கை நீ எனக்கு!" என்ற பதிவைப் படியுங்க:

''நகைக்கடை அதிபரோட டீலிங், விளம்பரப் படத்திலே நடிச்ச நடிகைக்கு ரொம்பப் பிடிச்சு போச்சாம்!''
''எப்படி?''
"அந்த நகைகளை நீயே வைச்சுக்கோ, உன்னே நான் வச்சுக்கிறேன்னுட்டாராம்!''
http://www.jokkaali.in/2012/11/blog-post_21.html

அறிஞர் எதைக் கொடுத்து எதை வேண்டலாமென இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். உளவியல் நோக்கில் மனித உள்ளம் எப்படி எண்ணுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

அடுத்து "ரோஜாக்கள் ஜாக்கிரதை!" என்ற பதிவைப் படியுங்க:

"ஜாக்கிரதை!" என்ற தலைப்பில்
"ரோஜாவை முத்தமிடாதே ....
உன் தாடி முள் குத்தி விடலாம்!" என்ற கவிதையைப் புனைந்திருக்கிறார்.
http://www.jokkaali.in/2012/11/blog-post_462.html

அறிஞர் கவிதை புனைந்து நகைச்சுவை ஆக்கியுள்ளார். தாடி முள், ரோஜா முள் இரண்டும் குத்துமென எச்சரிக்கை செய்கிறார். புரட்டிப் புரட்டிப் படித்தால் சிரிப்பு வரும்.

அடுத்து "ASH TRAY கேள்விக்கு பதில் ஏது?" என்ற பதிவைப் படியுங்க:

சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க
என்னைக் கண்டுபிடித்த மனிதனால் ....
'தன் நுரையீரலைச் சுத்தமாக்கும் வழி ஏன் தெரியவில்லை...' எனக் கேட்டது ASH TRAY!
http://www.jokkaali.in/2012/12/ash-tray.html

இதனைப் படித்தால் அறிவியல் கேள்வி போலத் தெரிகிறது. புகைத்தவர் பணத்தைச் சாம்பலாக்கி நுரையீரலை எரிக்கிறாரே எனச் சாம்பல் பெட்டி (ASH TRAY!) கேட்கையில் சிரிப்பு வருகிறதே! அறிஞரின் அறிவியல் ஆய்வு இப்பதிவில் தெரிகிறதே!

அடுத்து "அழகான டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன்?" என்ற பதிவைப் படியுங்க:

''இவ்வளவு அழகான டீச்சரைப் பார்த்தா, உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது?''
''இவங்களும் முட்டைதானே போடுறாங்க!''
http://www.jokkaali.in/2013/12/blog-post_24.html

படித்தால் ஆசிரியை (டீச்சர்) மீதான ஆய்வாகத் தெரிந்தாலும் மாணவர் மீதான ஆய்வெனச் சற்றுச் சிந்தித்தால் புரியும். அறிஞரின் ஆய்வு பெற்றோருக்கு நல்வழிகாட்டல்.

அடுத்து "தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம்?" என்ற பதிவைப் படியுங்க:

''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா?''
''டி வி மெகா சீரியலைப் பார்த்து அம்மா அழுதுகிட்டு இருக்காங்கப்பா!''
http://www.jokkaali.in/2013/11/blog-post_11.html

இன்றைய நாட்டு நடப்பை அதாவது நம்மாளுகளின் வீட்டு நிலைமையை அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

அடுத்து " 'பிடித்தமான' புருஷனை எப்படி பிடிக்கும்?" என்ற பதிவைப் படியுங்க:

''ஒண்ணாந் தேதி வரவும் உனக்குப் பிடித்தமானவரே, பிடிக்காதவர் ஆயிட்டாரா, ஏண்டி?''
''அவரோட சம்பளம் எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே!''
http://www.jokkaali.in/2013/11/blog-post.html

இன்றைய நாட்டு நிலைமையை அதாவது நம்மாளுகளின் வீட்டிற்குள்ளே போய்ப் பார்த்தால் தெரியுமென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். என் வீட்டிலும் இப்படித்தான் போகிறது.

இறுதியாக "காதலன், காதலி என்றால் ஓகே!" என்ற பதிவைப் படியுங்க:

இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது
கள்ளச் சாவிகள் தான்!
http://www.jokkaali.in/2013/05/blog-post_28.html

திரைப்படங்களில மட்டுமல்ல நம்ம வீடுகளிலும் இதே நிலை தான். நடிகை, நடிகர் மட்டுமல்ல நம்மாளுகளும் அப்படித்தான். காதலன், காதலி என்றால் மணமானவருக்கும் மணமாகாதவருக்கும் இடையில காதலாகலாமோ? கள்ளச் சாவிகள் இவர்களென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

மேலோட்டமாக ஜோக்காளி தளத்தை ஊடுருவிப் பார்த்ததில் பொறுக்கிய எடுத்துக்காட்டுகளை வைத்து அறிஞர் பகவான்ஜி அவர்களைப் பற்றி என்ன தான் நான் கூறுவேனா? இத்தனை பதிவுகளும் அவரது திறமைக்குச் சான்று! எந்தவொரு குறுகிய வட்டத்திற்குள்ளும் ஒளிந்திருக்கவில்லை. அதாவது, இவரது தேடல் எல்லாச் சூழ்நிலையையும் தொட்டிருக்கிறது. எனக்கொரு கவலை, பிறமொழிச் சொல்களைக் குறைத்து தமிழ்வளம் பெருக்கியிருக்கலாம்.

நகைச்சுவை என்பது மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். சிந்திக்கும் போது மூளையுடன் தொடர்புடைய நாடி, நரம்பு சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். உடலெங்கும் செந்நீர்/குருதி ஓட்டம் பிடிக்க உடலுறுப்புகள் சீராக இயங்க வேண்டும். அப்போது தான் "வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" எனலாம். அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவைகள் அதனைச் சரியாகச் செய்கிறது. நான் அவரது தளத்திற்குச் செல்வதே, அவரது புதுப்புது நுட்பங்களை அறியலாம் என்று தான். மொத்தத்தில் அவர் ஒரு சிறந்த படைப்பாளி.

என்னங்க... அறிஞர் பகவான்ஜி அவர்கள் நகைச்சுவைப் படைப்பாளி என்று குறுகிய நோக்கத்தில் எண்ண வேண்டாம். அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எனப் பலதுறைப் படைப்பாளி என்பதற்கு சான்று கூறுகின்றன. எனக்கொரு விருப்பம், அறிஞர் பகவான்ஜி அவர்கள் பலதுறைப் படைப்பாளியாக மின்ன வேண்டுமென்பதே!

முடிவாக ஜோக்காளி தளம் வாசகருக்கு நிறைவத் தரும் நல்ல தளம் என்று கூறி முடிக்கிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல நான் சுட்டிக்காட்டிய பதிவுகளே அதற்குச் சான்றாகும்.

சனி, 5 ஜூலை, 2014

இப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்?

கே.கே. நகரில் முனுசாமி தெருவில் டிஷ்கவரி புக் பலஸ் கட்டிடத்தில் இணையத்தில் தமிழ்நண்பர்கள்.கொம் இல் கவிதை பதிந்த பின் வெளியே வந்த போது கவுண்டமணி, செந்திலைக் கண்டேன்.

செந்தில்: அண்ணே! எனக்கொரு ஐயம் அண்ணே!

கவுண்டமணி: அப்படி என்னடா ஐயம்!

செந்தில்: தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமாமே! அதெப்படி அண்ணே!

கவுண்டமணி: அதுவா... இங்கால கொஞ்சம் வாடா... சொல்லுறேன்!

செந்தில்: இங்கால நின்றால் உங்களால முடியாதோ?

கவுண்டமணி: இல்லை! இங்கால வந்தால் தானடா முடியுமடா...

கவுண்டமணிக்குக் கிட்டச் செந்தில் நெருங்கினார். கவுண்டமணியோ ஓர் உதை விட, செந்தில் பிடரி அடிபட விழுந்தார்.

செந்தில்: கிட்ட வைச்சு உதைக்கலாமோ அண்ணே!

கவுண்டமணி: இப்ப உங்களுக்குத் தலையிடி எப்படி?

செந்தில்: உங்கட உதையால வந்த தலையிடி அண்ணே!

கவுண்டமணி: உதைத்தான் சொல்லுறது; தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்று!

செந்தில்: போங்க அண்ணே! உதை உதையில்லாமல் சொல்லேலாதோ!

கவுண்டமணி: உதை தானே உதை உனக்கு உணர்த்திச்சு!

இதையெல்லாம் கண்டு களித்த பின், நான் அவ்விடத்தை விட்டு அகன்று நன்னூல்.கொம் செயலகத்திற்குச் செல்ல அம்பாள் நகரிற்குப் புறப்பட்டேன்.


தீபாவழி கூறும் வழிகாட்டல் என்ன?


1.தீமை செய்தோரை ஒழித்த நாள்.

2.நன்மை செய்தோரை நினைவூட்டும் நாள்.

3.ஒழுக்கமுடையோரைப் போற்றும் நாள்.

4.இம்மூன்று கருத்தும் பிழையானது
(அப்படியாயின் உங்கள் கருத்தைக் கீழே தரவும்).

5.வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வைப் பகிரும் நாள்.

6.எல்லா மதத்தவரும் கொண்டாடும் ஒவ்வொரு பெருநாளுக்குப் பின்னாலேயும் நல்ல வழிகாட்டல் ஒன்று மறைந்திருக்குமே!

வியாழன், 3 ஜூலை, 2014

கைக்குக் கைமாறும் பணமே - 05

ஆற்றங்கரையூராரின் ஒற்றுமையைக் கண்டு
அயலூராரிற்கும் இருப்புக் கொள்ளாது
அன்றொரு நாள் ஆங்கே
ஐங்கரன் வீட்டு அண்டையாள் வீட்டில
பொன், பணம் பொறுக்கிய திருடனை
அன்னக்கிளி போட்ட கூப்பாட்டில
ஊரேகூடி நின்று பிடிச்சிட்டாங்க!

ஊரேகூடி வருமுன்னே - அங்கே
ஐங்கரன் வீட்டு நாயெல்லோ
அன்னக்கிளி வீட்டுக் கள்ளரைக் கடிக்க
கள்ளர் போட்ட கூப்பாட்டில வந்த
ஊராருக்கு விளங்கிப் போச்சுதே
காசுக்கு மேலே படுப்பவள் தானே
ஐங்கரன் வீட்டு அண்டையாளென்றே!

ஊர்கூடி வீட்டுநிலை பரப்புதென
கள்ளரைக் காவற்றுறையில கொடென
அன்னக்கிளி மதியுரை கூறவே
ஐங்கரனும் நண்பர்களும் இறங்க
வைப்பகங்களில வைச்சதாலே தானே
கள்ளர் கைக்கு ஏதும் எட்டாமையே
வீட்டிற்கு உள்ளே தேடியலைய
என்காதுக்கெட்ட நானழுதேனே
நானழுவதைக் கேட்ட நாய்களே
கள்ளரைக் கடித்ததென்றாள் அன்னக்கிளி!

ஆற்றங்கரையூராரின் களவுச் செய்தி
நாளேட்டில வெளிவந்ததைப் படித்த
உறவுக்காரங்க நேரே வந்தாங்க
வைப்பகங்களில வைக்காட்டித் தாவேன்
எங்கட வீடுகளில வைக்கலாமென்றே
தங்கட எண்ணங்களைப் போட்டுடைக்க
என்னட்ட என்ன இருக்கென எண்ணி
கேட்கிறியளெனக் கேட்டாள் அன்னக்கிளி!

பொன், பொருள், பணம் வைத்திருப்போர்
பொத்திப் பொத்தி வைத்திருப்பரே
சொல், செயல், நடை கண்டே
கள்ளரும் களவெடுக்க இடம் காண்பரே
நன்நாள் அலங்கரிப்பு ஆளிட்டையும்
கஞ்சன் வீட்டில பணமிருக்கு என்றும்
கண்டுகொண்ட கள்ளர் இறங்கவே
ஊரறியுமே பணக்காரர் யாரென்றே!
(தொடரும்)

பெண்ணு பிடிக்க


பையனுக்குப் பெண்ணு பிடிக்கலையாமோ
பையனுக்குப் பிடித்த வீடும் காரும்
நெல்லுக் காணியும் இலட்சங்கள் பலவும்
மல்லுக்கட்டாமல் முன்வைத்துப் பாரும்
"பெண்ணு பிடிச்சிருக்கு என்பான்!"

மருத்துவமனையில்...

மருத்துவர்கள் எல்லோரும்
வருவாயில் குறியாய் இருக்காங்கோ...
நோயாளிகள் எல்லோரும்
மருத்துவரில் குறியாய் இருக்காங்கோ...
"நோய் குணமாகுமா?"

புதன், 2 ஜூலை, 2014

நல்ல கணக்கு

அந்தி சாயும் நேரம் நம்மவர் நாட்டுநடப்புக் கூடிக் கதைக்குமிடத்தில் இப்படியொரு நாடகம் ஆடினாங்க.

முதலாம் ஆள் : காலம் கடந்து அறிவு(ஞானம்) வந்தென்ன பயன்?

இரண்டாம் ஆள் : இழப்புகளையும் சோர்வு(நட்டம்)களையும் கணக்கிடத்தான்...

மூன்றாம் ஆள் : அதுக்குத் தானண்ணே! காலம் கடந்தாலும் கணக்கு மட்டும் ஏறாதண்ணே!

நான்காம் ஆள் : எனக்கு ஏறிட்டுது அண்ணே!

மூன்றாம் ஆள் : எப்படி ஏறிட்டுது?

நான்காம் ஆள் : வைப்பகத்தில (வங்கியில்) நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் (சீரியல்) பார்த்த மனைவியின் சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தோமல்லோ!

முதலாம் ஆள் : அப்படி என்ன தான் படித்தீர்கள்?

நான்காம் ஆள் : நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் பார்க்கக் கூடாது என்று தானண்ணே!

இரண்டாம் ஆள் : சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தென்ன பயன்!

முதலாம் ஆள் : வள்ளுவரின் வழிகாட்டலைப் படியுங்க...

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

(பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகை
குறள்:467)

திரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு...?

1. இசை கூடுவதால் பாடல் இசைக்குள் மூழ்கிறது.
2. பாடகர்கள் சொற்களை விழுங்குவதால் பாடல் தெளிவில்லை.
3. இசையமைப்பாளரும் தமிழ் உச்சரிக்கத் தெரியாத பாடகர்களும் பாடல்களைச் சாகடிக்கிறார்கள்.
4. பாடலாசிரியர்கள் தூய தமிழில் பாடல் புனைவதில்லை.
5. ஆங்கிலப் பாடல்களை ஒட்டியும் ஆட்டத்தை நம்பியும் பாடல்கள் அமைவதால் நன்றாக அமைவதில்லை.
6.சிறந்த உச்சரிப்பு, பாடலை முதன்மைப்படுத்தும் இசை என்பன இன்றைய திரைப்படப் பாடல்களில் காணமுடிவதில்லை. இது தமிழ் பாடல்களின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யும்.

சிலையில் எழுத்து

ஒருவர் : "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பாங்களே!

மற்றவர் : எந்தச் சிலையிலயங்கோ...

செவ்வாய், 1 ஜூலை, 2014

பதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்!


நான் 2010 இலிருந்து தமிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளனர். தற்போது தமிழ் நண்பர்கள் தளத்தில் இருப்பதோடு ஐந்து வலைப்பூக்களையும் நடாத்தி வருகிறேன். அத்தளப் பதிவுகளை எனது தமிழ் நண்பர்கள் தளச் சுவர் (Wall) பகுதியில் பார்க்கலாம். நான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும்? நான் தமிழ் நண்பர்கள்.கொம் தளமூடாகவே இணைய உலகில் பேசப்பட்டேன் (பிரபலமானேன்) எனச் சொல்ல வந்தேன்.

வாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி வெற்றி பெறுகிறார். நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் பிழைகளைப் பணிவாக ஏற்றுத் திருத்திக்கொண்டதாலேயே நான் முன்னிலைக்கு உயர்ந்தேன். அதைவிட நானோர் ஆணாக இருந்தும் அதிக பெண் நண்பர்கள் தான் எனது எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தினார்கள். அத்தனை ஆள்களையும் ஆணாகவோ பெண்ணாகவோ நண்பர்களாகவோ பார்க்காமல் எனது உறவுகள் என்னை முன்னேற, முன்னேற்ற உதவுகிறார்களென என நம்பிப் பின்பற்றினேன்; வெற்றியும் கண்டேன்.

நான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும்? உண்மையில் புதிய பதிவர்கள் பாலியல் நோக்கில் வேறுபட்டு அல்லது முரண்பட்டு பிழை சுட்டுபவர்கள் மீது வெறுப்பைக் காண்பிக்கலாம். அந்நிலையில் தாழ்வு உளப் (மனப்) பாங்கின்றி நம் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. அதேவேளை ஆண் சார், பெண் சார் பதிவுகளின் உண்மைத் தன்மை அறியாமல் சிலர் கருத்துகளைப் பகிரும் போது வேறுபட்டு அல்லது முரண்பட்டு இருக்கலாம். அதாவது படைப்பாளி எண்ணும் போது தன் சார்ந்த சூழலைக் கருத முடிகிறது. அந்நிலையில் இருந்து சொல்ல வருகின்ற செய்தியை மட்டுமே பெற வேண்டும்.

படைப்பாக்கத்தில், ஊடகங்களில், இதழியலில் பால்நிலை வேறுபாடு கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம நிறை (1400 கிராம்) மூளையே உண்டு. ஆளுக்கு ஆள் எண்ணங்கள் வேறுபடலாம்; எழுத்துநடை வேறுபடலாம்; சொல்ல வருகின்ற செய்தி ஒன்றே! அப்படியாயின் ஆண் பதிவர்கள், பெண் பதிவர்கள் வேறுபாடு எதற்கு? ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பை வாசகர் விரும்புவாரா என்று மட்டுமே எண்ணிப் பார்க்க வேண்டும்.

வாசகர் என்றால் இரு பாலாரும் இருப்பினம். எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்றால் இரு பாலாரும் இருப்பினம். ஆனால், எழுதுதல்/படைத்தல் - வாசித்தல்/பயனீட்டல் என்ற உறவுக்குப் பால் வேறுபாடு கிடையாதே! அறிவைப் பரிமாறல் செய்கிறோம். இதற்கேன் பால் வேறுபாடு? எழுத்துப் பிழை எல்லோருக்கும் பொதுவானது தான். எழுத்துப் பிழை வராதவாறு எழுதுவோர் தான் கவனிக்க வேண்டும்.

வாசகன் உள/ மன நிறைவடைவதாலேயே வாசிக்க விரும்புகிறான். அதேவேளை எழுதுவோரும் உள/ மன நிறைவிற்காகவே எழுதுகின்றனர். ஆண்டவன் ஆணையும் பெண்ணையும் படைத்தது தனது படைப்பை மேம்படுத்தவே! ஆயினும் ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பைப் பெருக்கிக்கொள்ள வாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே தங்கியிருக்கிறார்.

நண்பர்களே! எழுதுகோல் ஏந்திய நீங்கள் எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்ற தனி வகுப்பினர். உங்களுக்குள் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே! வாசகர் என்போரும் தனி வகுப்பினர்; அவர்களுக்குள்ளும் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே! எனவே, பால் வேறுபாடு பார்ப்பதை நிறுத்திவிட்டு வாசகர் உள்ளத்தைக் கொள்ளையடிக்க நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தி முன்னேற முன்வாருங்கள்.

பதிவர்களின் / படைப்பாளிகளின் நோக்கம் சிறந்த பதிவை / படைப்பை ஆக்குதலாக இருக்க வேண்டும். அதேவேளை வாசகர்களும் பதிவர்கள் / படைப்பாளிகள் ஆக்கிய பதிவை / படைப்பை அவர்களது சூழலில் (ஆண் சார், பெண் சார்) இருந்து சொல்லப்படுகின்ற செய்தியை உள்வாங்கலாம். சிறந்த பதிவைப் / படைப்பைப் பேணும் நோக்கில் பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பதிவர்களோ / படைப்பாளிகளோ பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. "பதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்!" என்ற தலைப்பில் இத்தனையும் "பதிவர்கள் மத்தியில் பால் வேறுபாடு தோன்றிவிடக்கூடது" என்ற நோக்கம் கருதியே எழுதினேன்.