Translate Tamil to any languages.

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி....

என் உயிரிலும் மேலான வலைஉறவுகளே!



இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!
எல்லோருக்கும்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

மின்நூல் வெளியீட்டுப் பணிகளில் நானிருந்தாலும் மின்நூல் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் எழுதியிருந்தாலும்
(http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html) நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்" என்றவாறு வைஷாலி வாசகர் வட்டம் வெளியிட்ட பதிவு எனக்குப் பிடித்திருந்தமையாலும் தங்களுடன் பகிருகிறேன்.

வைஷாலி வாசகர் வட்டம்: நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ...: நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்":- http://freetamilebooks.com/ நீங்கள் எழுதிய உங்க...

என் உயிரிலும் மேலான வலைஉறவுகளே!
இப்பதிவினைப் படித்த பின் வலைப்பதிவர்கள் எல்லோரும் மின்நூல்
வெளியிட முன்வாருங்கள்!

வெள்ளி, 29 டிசம்பர், 2017

பெண்களே காதல் வலையில் சிக்காதீர்!

இவை நகைச்சுவையோ நகைச்சுவை இல்லையோ வாசகரே முடிவு செய்யுங்கள். என் எண்ணத்தில் எழுந்த ஐயங்களைப் பகிருகிறேன்.
1.
தம்பி: நீயோ அவளை ஓடி ஓடிக் காதலித்தாய்! அவளோ அடுத்தவனைத் தாலி கட்டெனத் தலையை நீட்டுகிறாளே!

அண்ணன்: கொடுப்பனவு (சீதனம்+ஆதனம்) ஏதும் கேட்காதவனைப் பார்த்து எவளும் நாடலாம். வருவாயோடு வருபவளே எனக்குத் தேவை!

தம்பி: அப்ப காதல்...?

அண்ணன்: வருவாய்க்காரி எவளென்றறியவே!

2.
ஒருவள்: அடியே! என்னுடைய அழகன், காதலிக்கவோ தாலி காட்டவோ மாட்டேன் என்கிறானடி!

அடுத்தவள்: ஐம்பது ஏக்கர் நெற்காணி, நாற்பது இலட்சம் காசு, முப்பது இலட்சம் நகை, இருபது இலட்சம் பெறுமதியான மாடிவீடு பத்துப் பரப்புக் காணியில இருக்கு என்று சொல்லடி...
உன்னுடைய அழகன் என்னடி, ஆண்டவரே வந்து உன்னைக் கட்டுவாரடி!

3.
ஒருவன்: நான் உன்னைக் காதலிக்கிறேன் (143). உனக்கு விரும்பமா தோழி?
ஒருவள்: கணவன், பிள்ளைகளைக் கேட்டுச் சொல்கிறேன். என் கணவனே உனக்கு பதிலளிப்பாரே!

4.
இவளைக் காதலிக்கக் கேட்பவரெல்லாம்
குதிக்கால் பிடரியிலடிக்க ஓடுறாங்களாமே!

தானோ காவற்றுறைக் கதிரவனின் மனைவி என்றதும்...

5.
அவருக்கு அடிக்கடி காதல் தோல்வியாமே!

திருமணம் என்றதும் கொடுப்பனவு (சீதனம் + ஆதனம்) கேட்பதாலேயாம்!

6.
ஒருத்தி: ஏனடி அவரிடம் இருந்து மணமுறிப்புக் (டிவோஸ்) கேட்கிறாய்?

அடுத்தவள்: தாய்க்கு நோய் என்றதும் முதியோர் இல்லத்தில விட்டது போல, என்னையும் தெருவில விட்டாலுமென்று தான்...

7.
மூக்கு முட்டக் கடையில விழுங்கிப் போட்டு, கண்ணை உருடிப் பிரட்டி முழிக்கிறாரே!

காதலியின் கைப்பையில காசில்லையென, அவளும் கைவிரித்ததாலே!

8.
போட்டிக்குப் பாட்டெழுதி அனுப்பியவருக்கு பரிசில் இல்லையாமே!

பரிசு பெறுபவரின் பாட்டைப் படியெடுத்து அனுப்பியதாலாம்!

9.
முதலாமவர்: என்னடா... நேர்காணலென்று போனவர் தோல்வியோடு திரும்புகிறார்!

இரண்டாமவர்: கோட்பாடு (Theory) தெரிந்தளவுக்கு செயற்பாடு (Practical) தெரியாதாம்.

முதலாமவர்: அதென்னடா படிப்பு

இரண்டாமவர்: கடித மூலம் (Postal Learning Scheme) கணினி வன்பொருள் பட்டயப்படிப்பு (Diploma in computer Hardware) என்கிறாங்க...

10.

வகை வகையாக (பிஸ்ஸா கட், KFC, மக்டொனால்ட் போல) கடைக்குக் கடை சாப்பாடு இருக்கு, பணமிருந்தால் விழுங்கலாம்!

நோய்களை உடலுக்குள் திரட்டியதும் சாகத் துடிக்கையில் அவற்றின் அருமையை அறியலாம்!

11.
நான் சமைத்தால் - மனைவி
உண்ணமாட்டாள்!

மனைவி சமைத்தால் - நான்
உண்டதும் உறங்கிவிடுவேன்!

12.
ஒருவள்: தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றைக் கண்டீரோ? என்னுடையதைக் காணவில்லையே!

ஒருவன்: அங்கே பார்...! தலைக்கவசம் (ஹெல்மெட்) நிறைய பணத்தை அள்ளிக்கொண்டு போறாளே!
பயனர்: இருசாராரும் இரண்டையும் களவெடுக்கிறாங்களே!

13.
நாட்டில விபத்துகள் அதிகமாக ஆள்களும் மடிகிறாங்க...

கால் எட்டாதவங்களும் உந்துருளி (Motor Bike) ஓடுவதனாலாம்!

14.
வண்டிகள் மோதித் தெரு மரங்களும் சாகின்றன...

வண்டி ஓட்டுநர்கள் நித்திரையில் வண்டிகளைச் செலுத்துவதனாலாம்...

15.
பயணிகள் சாவுக்குக் காரணம் குன்றும் குழியுமான பாதைகளா?

ஓட்டுநர்கள் தூங்கிவிடுவதனால், வண்டிகள் நடனமாடுமாம்; பயணிகள் சாவதற்கே...

16
நகைச்சுவையாகப் பேசுவோம்; நோய்களை நெருங்காமல் பேணலாம்.

எந்தச் சுவையையும் வாசிக்க ஆளில்லாத சூழலிலா?


பிறக்கும் போதும் தெரியவில்லை
இறக்கும் போதும் தெரியவில்லை
வாழும் போது தெரிகிறதே!



செவ்வாய், 26 டிசம்பர், 2017

குடியே குடியைக் கெடுக்கும் மறக்காதீங்க!


குடிக்காதீங்க! பிஞ்சுகளே குடிக்காதீங்க!
                      (குடிக்காதீங்க!) 

குட்டிப் பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!
குடிச்சவங்க சாகத் துடிப்பதைப் பாருங்க
நீங்க குடிச்சிட்டுச் சாகக் கிடக்காதீங்க 
உங்க வாழ்வை வீணாகக் கரைக்காதீங்க!           
                       (குடிக்காதீங்க!) 

படிச்ச பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!
குடிச்ச பின்னே தெருவில கிடக்காதீங்க
உடுத்த துணியும் இல்லாமல் கிடக்காதீங்க
நடுவழியே ஊராக்கள் பார்த்துச் சிரிப்பாங்க!
                      (குடிக்காதீங்க!)

பச்சைப் பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!
போதையிலே மூழ்கி மயங்கிக் கிடக்காதீங்க
காதலரோ உம்மைக் கண்டால் வெறுப்பாங்க
பெத்தவங்க குடும்பம் இருக்கு மறக்காதீங்க!
                      (குடிக்காதீங்க!)
 
குஞ்சுகளே பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!
கைக்குள் உருளும் பணத்தை எரிக்காதீங்க
கொஞ்சும் உறவுகளை வெறுக்க வைக்காதீங்க
குடியே குடியைக் கெடுக்கும் மறக்காதீங்க!
                      (குடிக்காதீங்க!)

குறிப்பு:-  "மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற மின்நூலுக்காக எழுதிய கவிதை இது. நீங்களும் இம்மின்நூலுக்குக் கவிதை எழுதியனுப்பக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக. முடிவுத் திகதி: 31/12/2017


குடியை‌க் கெடு‌க்கு‌ம்‌ குடிகாரர்
அம்மா, அப்பா வளர்ப்பிலே
தேனீரோ இளநீரோ
குடித்த எல்லோரும் தான்
தெருச் சுற்றிகளோடு சுற்றுகையில்
'அற்ககோல்' கலப்புத் தண்ணீர்
குடிச்சுப் பழகிட்டாங்களாமே!

பழகிய பழக்கமோ என்னோ
குடிச்சுப் போட்டு வந்து
அம்மைக்கும் அப்பனுக்கும் அடியாம்
போதாக்குறைக்கு - நம்பிக்
கழுத்தை நீட்டத் தாலி கட்டிய
பெண்டிலுக்கும் உதையாம் - அதை
பார்த்த பிள்ளைகள் "அம்மோய்" என்றழ
பழாய் போன குடிகாரன்
பச்சைப் பிள்ளைகளுக்கும் நெருப்படியாம்!

அடி, உதை, குளறல் கேட்டு
வீட்டு நாயும் ஊளையிடத் தான்
அக்கம், பக்கம், ஊரே திரண்டு வர
குடியைக் கெடுக்கும் குடிகாரர்
வீட்டுச் சூழலைக் கண்ட வேளை
வந்தவர்கள் குதிக்கால் தலையிலடிக்க
ஓட்டம் பிடிக்கையிலே தெரிந்ததாம்
மதுவை விரட்டினால் கோடி நன்மையென்று!

குறிப்பு:- இக்கவிதை கீழ்வரும் விளம்பரத்துக்காக எழுதியது.
உங்களால் முடியாது என்றால்
எந்தக் கடவுளால் முடியும்
இந்தப் படத்துக்குக் கவிதை எழுத?



மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி விரிப்பைப் படித்து விரையுங்கள்!
மின்நூலாக்குவோம், பரிசில் வழங்குவோம்! முடிவுத் திகதி: 31/12/2017

சனி, 16 டிசம்பர், 2017

வலைவழி வாசிப்புப் போட்டி வெற்றி தருமா?

உறவுகளே! நான் உங்கள் யாழ்பாவாணன்!

2010 இலிருந்து எனது எண்ணங்களை வலைவழியே பகிர்ந்து வருகின்றேன்.
சமகால உறவுகளிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது. அதனை மேம்படுத்த வலைவழியே 'வாசிப்புப் போட்டி 2016' நடாத்தி ஓரளவு வெற்றி பெற்றேன்.

ஆயினும், 10/10/2017 அன்று 'வாசிப்புப் போட்டி 2017' இற்கான அறிவிப்பை (இணைப்பு: https://seebooks4u.blogspot.com/2017/10/2017.html) எனது தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதற்கான தேர்வு நாளை 17/12/2017 ஞாயிறு அன்று இடம் பெறுகிறது. இணைப்பைச் சொடுக்கி விரிப்பைப் படித்துப் பங்குபற்றலாமே!

மேற்படி வாசிப்புப் போட்டி நடாத்துவதால் சமகால உறவுகளிடையே வாசிப்புப் பழக்கம் ஏற்பட வாய்ப்பு மலருமா? தங்கள் ஆய்வினைப் பகிருங்கள்.

நன்றியுடன் உங்கள் யாழ்பாவாணன்.

செவ்வாய், 12 டிசம்பர், 2017

முதலாவது நேர்காணலில் முகம் காட்டுகின்றேன்.

கவிதையென்றால் பாரதியார் நினைவில் வரவேண்டும்.
பாரதி பிறந்த நாளில் (11/12/1882) எனக்கொரு செய்தி கிட்டியதே! அதனைத் தங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

இலங்கை, யாழ்ப்பாணம், டாண் தமிழ் ஒலி தொலைக்காட்சியில் 05/10/2017 அன்றும் 06/10/2017 அன்றும் ஒளிபரப்பாகிய 'கவிதைகள் சொல்லவா' நிகழ்வில் மூத்த கவிஞர் சி.ரவீந்திரன் அவர்களுடன் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் அவர்களும் பங்குபற்றி இருந்தார். இருவரையும் கவிஞர் முகுந்தன் அவர்கள் நேர்காணல் மேற்கொண்டார்.

இலக்கிய உலகில் 1987 இல் நுழைந்தாலும் எனது "உலகமே ஒருகணம் சிலிர்த்தது" என்ற தொடக்க வரியைக் கொண்ட முதல் கவிதை 25/09/1990 அன்று ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்தாலும் என் வாழ்வில் முதலாவது நேர்காணல் இதுவென்பேன். என்னை முதலில் நேர்காணல் செய்த கவிஞர் முகுந்தன் அவர்களை எனது வலையுறவுகள் எல்லோரும் பாராட்டுவீர்கள் என நம்புகின்றேன்.

'கவிதைகள் சொல்லவா' நிகழ்வில் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி அழைத்துச் சிறப்பித்தமைக்கு இலங்கை, யாழ்ப்பாணம், டாண் தமிழ் ஒலி தொலைக்காட்சி மேலாண்மைக்கும் கவிஞர் முகுந்தன் அவர்களுக்கும் உள்ளம் நிறைந்த நன்றி உரித்தாகுக.

05/10/2017 அன்று ஒளிபரப்பாகிய பதிவு

முகநூல் இணைப்பு: https://www.facebook.com/askmedianetwork/videos/490166971367649/

06/10/2017 அன்று ஒளிபரப்பாகிய பதிவு

முகநூல் இணைப்பு: https://www.facebook.com/askmedianetwork/videos/490167281367618/

இந்த நேர்காணலைப் பார்வையிட்ட பின்னர் - தங்கள்
சொந்த எண்ணங்களை வெளியிட்டு உதவுங்கள் - அவை
நாளைய எனது நகர்வுக்கு வழிகாட்டுமே!

வியாழன், 7 டிசம்பர், 2017

வணக்கமும் நன்றியும் தேவையா?


“பழையன கழிதலும்
புதியன புகுதலும் வழுவல
கால வகையினானே” என்ற
நன்னூல் நூற்பா(462) வழியே
தமிழர் பண்பாட்டைப் பேணும் நோக்கில்
நல்லவற்றை ஏற்பதில் தவறில்லையே!
ஆங்கில மொழிப் பேச்சு வழக்கான
Welcome - 'வணக்கம்' எனவும்
Hand Shake - 'கை குலுக்கல்' எனவும்
Thanks - 'நன்றி' எனவும்
Bye - 'போயிட்டு வாறேன்' எனவும்
தமிழர் செயல்களில் வரினும் - அவை
நன்னெறி காட்டிப் பாவிப்பதைப் பாரும்!
நிகழ்வாயினும் சரி
அரங்கப் (மேடைப்) பேச்சாயினும் சரி
"வணக்கம்" என்று தொடங்கி
"நன்றி" என்று முடிக்கிற
பண்பாட்டை வழக்கப்படுத்தியாச்சு!
ஆளை ஆள் சந்திக்கையில்
"வணக்கம்" என்று கைகுலுக்கி
உறவை உருவாக்கி/ புதுபித்து - பின்
"நன்றி" என்று கைகூப்பி
மலர்ந்த/ பழகிய உறவைப் பேணி
'போயிட்டு வாறேன்' என விடைபெறுவதும்
தமிழர் உறவு முறையில் பழகியாச்சு!
நன்னெறி காட்டி
பழக்கப்படுத்தியதையும்
வழக்கப்படுத்தியதையும்
மாற்றிக்கொள்ள முயன்றால் - விளைவாக
நல்ல தமிழ்ப் பண்பாடு சீரழியுமே!
எப்படி இருப்பினும்
'வணக்கம்' என்கிற 'Welcome' உம்
'நன்றி' என்கிற 'Thanks' உம்
தமிழில் தேவையே இல்லை!
பிறமொழிச் சொல் பயன்பாட்டை
தமிழில் இருந்து அகற்றாத வரை
தமிழ்ப் பண்பாடு தான்
உலகில் சிறந்தது என்று முழங்கி
பயன் ஏதாச்சும் கிட்டுமா?
பயன் கிட்டப் பக்குவமாக
பிறமொழிச் சொல் நீக்கி
நற்றமிழ் சொல் பொறுக்கி - அழகுற
எழுத்திலும் பேச்சிலும் வாழ்விலும்
பழக்கப்படுத்தி, வழக்கப்படுத்திப் புழங்க வேண்டுமே!

"ஆரியப் பழக்கம் வந்த பின்னர் தான் நமஸ்ஹாரம் என்று ஒருவரை ஒருவர் பார்த்து சொன்னார்கள். அதைத் தமிழில் எப்படி சொல்வது என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து தான் வணக்கம் நம்மை தொற்றிக் கொண்டது." எனத் தமிழகத் தமிழறிஞர் பேராசிரியர் நன்னன் அவர்கள் தெரிவித்ததாக 'எனது எண்ணங்கள்' வலைப்பூவில் அறிஞர் தி.தமிழ் இளங்கோ பகிர்ந்திருந்தார். அப்பதிவுக்குக் கருத்துரைத்த அறிஞர் ஜீவி அவர்கள் "நமஸ்காரம் வெகுதிரள் மக்களின் பயன்பாட்டில் இல்லாத நேரத்தும் 'குட்மார்னிங்' பார்த்து இதற்கு தமிழில் என்ன சொல்லலாம் என்ற யோசனையின் அடிப்படையில் வந்ததே 'வணக்கம்' என்று நினைக்கிறேன்." எனப் பகிர்ந்திருந்தார்.
https://tthamizhelango.blogspot.com/2017/12/blog-post.html


இக்கருத்துகள் என்னைச் சித்திக்கவைத்தது. அதனால், என்னுள் எழுந்த எண்ணங்களை எனது வழமையான கிறுக்கலில் உங்களுடன் பகிருகின்றேன்.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

உங்களுக்குக் கவிதை எழுத வருமா?

17/12/2017 அன்று வாசிப்புப் போட்டி - 2017 
https://seebooks4u.blogspot.com/2017/10/2017.html

மதுவை விரட்டினால் கோடி நன்மை! 
தமிழ் இலக்கியத்திலே
"ஆடிப் பாடி வேலை செய்தால்
களைப்புத் தெரியாதே" என
தொழில் சார் நாட்டுப் பாடல்
அதிகமாக அன்றிருந்தது!
20 ஆம், 21 ஆம் நூற்றாண்டிலே
"களைப்புத் தெரியாமல் வேலை செய்ய
காலும் அரையும் அடித்தால் போதும்" என
முதலாளி சார் நாட்டு நடப்பு
அதிகமாக இன்றிருக்கிறதே!

தமிழ் இலக்கியத்திலே
வீட்டிலே கொண்டாட்டம் என்றால்
ஆட்டமும் பாட்டும் போட்டுக் கூடி
உண்டு களித்து மகிழ்ச்சியைப் பகிர
நாட்டுப் பாடல் நிறைய இருந்தது!
20 ஆம், 21 ஆம் நூற்றாண்டிலே
வீட்டிலே கொண்டாட்டம் என்றால்
மகிழ்ச்சியைப் பகிர்ந்து சாவைக் காண
கூடிக் குடித்துக் கும்மாளம் போடவே
குடி (மது) வகைகள் நிறைய இருக்கிறதே!

தமிழ் இலக்கியத்திலே
சாவீட்டிலும் கூடத் துயரைப் பகிர
மார்பிலடித்து அழுது புலம்ப
ஒப்பாரி (நாட்டுப்) பாடல் கூடவே இருக்கும்!
20 ஆம், 21 ஆம் நூற்றாண்டிலே
சாவீட்டிலும் கூடத் துயர (சோக) இசையும்
துயரைப் பகிரக் குடி (மது) வகையும்
எட்டிப் பார்க்கும் இழிநிலை தொடருகிறதே!

மதுப் (அற்ககோல்) பாவனை எங்கும் நுழைந்து
தமிழ் இலக்கியமும் தமிழர் பண்பாடும்
நாளுக்கு நாள் சாவடைய வைக்கிறதே!
மதுப் (அற்ககோல்) பாவனை எங்கும் நுழைந்து
வீட்டுக் வீடு மகிழ்வற்றுத் துயருற்று
ஆளை ஆள் சாகடிக்க வைக்கிறதே!
எம்மினமே! எம்உறவுகளே!
எம்மையே எண்ணிப் பாருங்கள்!
எங்கள் எதிர்காலம் என்னவாகுமென
எள்ளளவேனும் எண்ணிப் பாருங்கள்!
முகநூலில் (Facebook) "இராவணன் பாலம்" என்ற உறவின் பதிவில் வெளியாகியிருந்த படம் இது. உயிரோவியம் வரைந்தவரைப் பாராட்டுவோம்.

உங்களுக்குக் கவிதை எழுத வருமா? - அப்படியாயின்
மேற்காணும் தகவலை வைத்து, படத்தைப் பார்த்து
"மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என
அழகான கவிதை எழுதிக் காட்டுங்க...
கவிதைக்கான தலைப்பு எதுவாயினும் - அது
உங்கள் விருப்பத் தெரிவாக இருக்கட்டும்!

மக்கள் உள்ளங்களில் (சமூகத்தில்) மாற்றத்தை விதைக்கும்
இனிய கவிதைகளைப் பணிவோடு தொகுத்து - நாம்
மின்நூலாக வெளியிட்டுப் பகிர்ந்துதவ எண்ணியுள்ளோம்!
மரபுக் கவிதையாயினும் சரி
புதுக் கவிதையாயினும் சரி
பத்திலிருந்து இருபது வரிகளுக்குள் - உங்கள்
எண்ணங்களில் மலர்ந்த கவிதைகள் அமையணும்!

சிறந்த கவிதைகளுக்குப் பரிசில் வழங்குவோம்! மின்நூல் வெளியிடும் வேளை பரிசில் விரிப்பு வெளியிடுவோம்! உங்கள் கவிதைகளை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 31-12-2017 இற்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.