Posted on மார்ச் 13, 2013 by yarlpavanan
நகைச்சுவை என்பது வாசிக்கும் போது
சிரிக்க வராது, சற்றுச் சிந்தித்தால் வயிறு குலுங்கச்
சிரிக்க வரும். அதாவது, சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பது
நோய் தீர்க்கும் நகைச்சுவையாகும். நகைச்சுவையை எவராலும் இலகுவில் எழுதிவிட
முடியாது. நகைச்சுவை எவ்வாறு உருவாகிறது என்பதை உணர்ந்தவர்களாலேயே எழுத முடிகிறது.
“கோபம் வரும் வேளை சிரியுங்க…” என்றொரு பாடல் வரியும் உண்டு. உண்மையில் கோபம் வரும் போது பதின்மூன்று
நரம்புகள் இயங்க; சிரிப்பு வரும் போது அறுபைந்தைந்து
நரம்புகள் இயங்குவதாக ஆய்வுகள் கூறுவதாய் சண் தொலைக்காட்சி நிகழ்சியில் அறிஞர்
ஒருவர் கூறியிருந்தார். அதாவது, நகைச்சுவைச் சிரிப்பாலே அதிக
நரம்புகளை இயங்க வைத்து நோயின்றி வாழலாமாம்.
“வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்
போய்விடும்” என்று முன்னோர்கள் சொன்னதில் தப்பில்லைத் தானே!
ஆனால், நகைச்சுவையைச் சொல்லும் போதோ எழுதும் போதோ தவறு
நிகழாமல் பார்க்க வேண்டும். ஏனெனில், நகைச்சுவை மாற்றாரை
நோகடிக்கக் கூடாது.
நாடகங்களிலும் திரைப்படங்களிலும்
நகைச்சுவையை நடிப்பாலே மொழிபெயர்கிறார்கள். சிலர் நகைச்சுவை நிகழ்வுகளை அப்படியே
பதிவு செய்கின்றனர். சிலர் கேலிச் சித்திரங்களால் நகைச்சுவையை
வெளிப்படுத்துகின்றனர். சிலர் பாட்டிலும் கவிதையிலும் கதைகளிலும் நகைச்சுவையை
இளையோட விடுகின்றனர்.
சிரிக்க வைப்பதற்காக எழுதப்படுவது
சிரிப்புக் காட்டுதலே தவிர, நகைச்சுவை அல்ல. ஏமாற்றியதை அல்லது
முட்டாளாக்கியதைச் சொல்லிச் சிரிக்க வைக்கிறாங்களே தவிர, கொஞ்சமாவது
சிந்திக்கத் தூண்டுகிறாங்கள் இல்லையே! அப்படி என்றால் உண்மையான நகைச்சுவை
எப்படியிருக்கும்?
“உண்மை ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ
எழுதுவதே நகைச்சுவை” என அறிஞர் ஒருவர் அகில இந்திய
வானொலியில் கூறியது என் நினைவிற்கு வருகிறது. அதாவது, ஓர்
உண்மையைச் சற்றுக் கூட்டியோ உயர்த்தியோ அல்லது குறைத்தோ தாழ்த்தியோ எழுதும் போது
நகைச்சுவை தானாகவே வந்தமைவதைக் காணலாம். உண்மையில் நகைச்சுவையை வாசிக்கும் போது
சிரிப்பு வராது; வாசித்த பின் நன்றாகச் சிந்தித்தால்
சிரிப்பு வரும். இவ்வாறு எழுதுவதே நகைச்சுவை.
எடுத்துக் காட்டு : 01,
“முனியாண்டி மூன்று பானை சோற்றை முழுதாக
விழுங்கிப் போட்டானுங்க… இப்ப ஆளுக்கு மருத்துவமனையில பெரும்
திண்டாட்டமாமே!” என்பதில் சோறு சாப்பிடுவது உண்மை, மூன்று பானை அளவென்பது சாப்பிட்டதன் அளவைக் கூட்டிக் காட்டப்
பயன்பட்டிருக்கிறது.
எடுத்துக் காட்டு : 02,
“ஆட்டக்காரி நடிகை ஒருத்தியின் உடலில்
மார்புக் கச்சையும் இடுப்புக் கச்சையும் தான் இருந்தது. ஆட்டம் பார்க்க வந்தவர்கள்
ஓட்டம் பிடித்தனராம்.” என்பதில் ஆடை அணிவது உண்மை, கச்சைத் துணிகள் சுட்டுவது ஆடைக் குறைப்பையே!
எங்கே உங்கள் முயற்சியைத்
தொடருங்கள் பார்ப்போம். நீங்கள் நகைச்சுவை எழுதிச் சிறந்த படைப்பாளியானால், அதுவே இப்படைப்பின் வெற்றி என நம்புகிறேன். எழுதும் போது பிற மொழிக்
கலப்பின்றி தூய தமிழில் எழுத மறந்து விடாதீர்கள்.
மாற்றுக் கருத்துள்ளோர்
எடுத்துக்காட்டுடன் விளக்கம் தாருங்கள். வாசகர்கள் அதனைப் படித்துச் சிறந்த
நகைச்சுவையை எழுதட்டும்.
அதேவேளை, உங்கள் கருத்துகள் சிறந்த படைப்பாளிகளை உருவாக்க உதவுமே!
அதேவேளை, உங்கள் கருத்துகள் சிறந்த படைப்பாளிகளை உருவாக்க உதவுமே!
பேரறிஞர்களே இப்படைப்பில் குறைகளோ
தவறுகளோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். அது, எனது அடுத்த
படைப்பான “கதைகள் புனையலாம் வாருங்கள்” என்பதற்குப் பின்னூட்டியாக அமையலாம் தானே!