Translate Tamil to any languages.

திங்கள், 30 மே, 2016

சுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே!

எனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அதனைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். அக்குரல் செய்திக்குப் பின்னணி இசை சேர்த்துப் பதிவு செய்துள்ளேன். அதனைக் கேட்டுணரக் கீழுள்ள படத்தில் சிவப்பு, வெள்ளை நிற செய் (Play) அழுத்தியை (Button) அழுத்தவும்.

 

இந்தக் குரல் வழிச் செய்தி ஊடாக வேதியியல் (Chemistry) கற்ற பொறியியலாளர் ரமேஸ் அவர்கள் பஞ்சு மிட்டாய், சுவைகளி (Chocolate), குளிர்களி (Ice Cream), மற்றும் சுவையூட்டி கலந்த உணவுகளால் நமது உடலுக்குத் தீங்கு வரும்; அதனைச் சாப்பிட வேண்டாம் என வழிகாட்டுகின்றார். அவரது வேண்டுதலை ஏற்று "சுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே!" என இப்பதிவை வலைப்பூ உறவுகளுடன் பகிருகின்றேன்.

நாளுக்கு நாள் நாம் உண்ணும் உணவுகளில் சுவையூட்டி சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணும் முன் சற்று நமது சாவையும் எண்ணிப் பாருங்கள். இயற்கையான சுவையூட்டிகள் விலை அதிகமானது. ஆகையால், விலை குறைந்த சாவைத் தரவல்ல செயற்கையான சுவையூட்டிகள் உணவுகளில் சேர்க்கப்படுகிறது. அதன் பின்விளைவு சாவு வரை எம்மைத் தள்ளி விடலாம். 

எப்படி என்று என்னைக் கேட்க வேண்டாம்; மேலுள்ள குரல் வழிச் செய்தியில் பொறியியலாளர் ரமேஸ் அவர்கள் விரிவான விளக்கம் தந்துள்ளார். அதாவது, செயற்கையான சுவையூட்டிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன; அவற்றில் கலக்கப்படும் நஞ்சுகள் எவை என்பதை சிறப்பாக அலசி உள்ளார். அவரது குரல் வழிச் செய்தியைக் கேட்ட பின், உங்கள் உள்ளத்தில் மாற்றம் வரலாம். அம்மாற்றம் என்னவென உங்களுக்குத் தெரிந்த உறவுகளுடன் பகிர்ந்து உதவுங்கள்.

உணவுகளில் சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால், அதனை உண்டு ஆயுளைக் குறைக்க வேண்டாம் என முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளேன். மீளவும் இப்பதிவினூடாக சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாமென அறியத் தருகின்றேன். சமச்சீர் உணவுகள், இயற்கை உணவுகள், அவித்த உணவுகள் (பொரியல், வறுவல் சேர்க்காத), பனம் பண்டங்கள் ஆகியவற்றோடு உப்பு, புளி, காரம் (மிளகாய்த் தூள்), எண்ணெய் போன்றன சமையலில் குறைத்துச் சேர்க்கவும். அப்ப தான் எம்மை நெருங்கி வரும் சாவைக் கொஞ்சம் விரட்டி விடலாம்.

மேற்குறிப்பிட்டவாறு உணவை உண்டாலும் நேரம் தப்பாமல் மூன்று வேளையும் உண்ண வேண்டும். ஒரு வேளை உணவை உண்ட பின், நான்கு மணி நேரம் (உணவு சமிபாடு அடைய) கழித்து அடுத்த வேளை உணவை உண்ணலாம். நாளொன்றுக்குக் குறைந்தது ஆறு லீற்றர் சுத்தமான நீரைக் குடிக்கலாம். அதேவேளை உடலில் இருந்து வியர்வை வெளியேறத் தக்கதாக நாளொன்றுக்கு அரை மணி நேரம் கடின வேலை அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வொழுங்கைப் பின்பற்றினால் நெடுநாள் நோயின்றி வாழலாமே!


திங்கள், 23 மே, 2016

ஆண்களும் அறியாப் பெண்களும் படியுங்க!


அந்தக் காலத்தில ஒருவள் "பெண் குழந்தையைப் பெற்றுவிட்டாள்" என்றால் அந்த வீட்டில போர்க்களம் தான். மாமிமார்கள் "பெட்டைப் பிள்ளையைப் பெத்துப் போடவா, மருமகளானாய்" என்று மருமகளிடம் புலிப் பாய்ச்சல் பாய்வார்களாம். மகன்மார் "பெட்டைப் பிள்ளையைப் பெத்துப் போட வந்தவள், வேண்டாம்" என்று இரண்டாவது திருமணம் செய்ய அம்மாக்களிடம் கெஞ்சுவார்களாம். இந்தக் காலத்தில இந்தப் போருக்கு என்ன தீர்வு?

பெண் பிள்ளை பிறந்தால்
பெத்தவளில் தவறில்லை...
பிறக்கப் போவது
ஆணா? பெண்ணா? - அதை
உறுதிப்படுத்துவதே
ஆணின் உயிரணுக்களே! - அப்படியிருக்க
பெண் மீது பழி சுமத்தும் ஆண்களுக்கு
சாவு ஒறுப்பு (மரண தண்டனை) வழங்கலாம்!
பெண்ணாய் இருந்தும்
மருமகளிடம் தான் பிழை என்னும்
மாமிமார்களுக்கு - இரு மடங்கு
சாவு ஒறுப்பு (மரண தண்டனை) வழங்கலாம்!

இந்தக் காலத்தில இந்தப் போருக்கு இது தான் தீர்வு என்றால் எந்தக் கடவுளும் ஏற்க மாட்டார்கள். அதற்கு நாளைய அறிவியலை வைத்து நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். அப்ப தான் உண்மையை உணர்ந்த உள்ளங்களில் மாற்றம் காணலாமென நம்பலாம்.

மனிதர்கள் எல்லோருக்கும் 46 குரோமோசோம்கள் (Chromosomes) உள்ளன. இதில் ஆணின் உயிரணுக்களிலிருக்கும் 23 குரோமோசோம்களும் பெண்ணின் கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும் தான் குடும்ப உறவின் பயனாகக் கருவுறும் வேளை குழந்தை உருவாகக் காரணமாகின்றன. அதாவது, மொத்தம் 23 இணை (ஜோடி) குரோமோசோம்கள் இருக்கிறது. இந்த 23 இணை (ஜோடி)  குரோமோசோம்களில் 22 பரம்பரையாக வரக்கூடியது. 23 ஆவது இணை (ஜோடி) குரோமோசோம்கள் ‘ஆணா? பெண்ணா?’ என பாலியலைத் (Sex) தீர்மானிக்கும் குரோமோசோம்கள் ஆகும்.

23 ஆவது இணை (ஜோடி) குரோமோசோம்கள் ‘ஆணா? பெண்ணா?’ என்பதை எப்படி உறுதிப்படுத்துகிறதா? அதாவது ஆணின் குரோமோசோமில் 22X உம் 1Y உம்  இருக்க, பெண்ணின் குரோமோசோமில் 23X உம் இருக்கிறதாம். அப்படியிருக்கையில் குடும்ப உறவின் பயனாகக் கருவுறும் வேளை பெண்ணின் X குரோமோசோமுடன் ஆணின் X குரோமோசோம் இணைந்தால் பெண் குழந்தையாகவும் பெண்ணின் X குரோமோசோமுடன் ஆணின் Y குரோமோசோம் இணைந்தால் ஆண் குழந்தையாகவும் கருவுறுகிறதாம். இதன் பயனாக பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ கிடைப்பதற்கு ஆணே முழுப் பொறுப்பையும் ஏற்கிறார். ஆயினும் பெண் பிள்ளை கருவுற உடனிருந்த ஆண் தானே குற்றவாளி! பாழாய்ப் போன மக்களாயம் (சமூகம்) பெண்ணில் பழிபோடுவதைத் தான் தொடருகிறது.

இதற்குத் திருமூலரின் பாடலொன்றும் சான்றாக மின்னுகிறதே!

462. ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
     பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
     தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
     பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

(ப. இ.) காதலரிருவரும் மருவிப் பொருந்துங்கால் ஆண் ஆகிய வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் கருவுற்றுப் பிறக்குமுயிர் ஆணாகப் பிறக்கும். பெண்ணாகிய இடப்பால் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்குமுயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு ஒத்திருந்தால் பிறக்குமுயிர் அலியாக இருக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுதியாகவிருந்தால் பிறக்குமுயிர் சிறப்பாகப் பிறக்கும். அச் சிறப்புடன் பிறந்த உயிர் 'உழையார் புவனம் ஒருமூன்று' மொருங்குடன் ஆளும். அகப் பயிற்சியால் விந்து கட்டுப்பட்டுத் திண்மை ஏற்படின் மருவி இன்புறினும் விந்து வெளிச் செல்லுவதில்லை. ஆதலால் பாய்ந்ததும் இல்லை என்றனர். பாணவம்; பண்ணவம் என்பதன் செய்யுள் திரிபு. பண்ணவம் - திண்மை. (27)

இதன்படிக்குக் குடும்ப உறவின் போது (பக்கம் பார்த்துச் சரிந்து கூடும் தன்மையப் பொறுத்து) வலப் பக்க மூச்சு அதிகமெனின் ஆண் குழந்தையும் இடப் பக்க மூச்சு அதிகமெனின் பெண் குழந்தையும் இரண்டு மூச்சும் சமனாயின் திருநங்கை (அலி) குழந்தையும் பிறக்குமாம். அப்படியாயின் இருபாலாரும் பொறுப்பு எனலாம். ஆயினும் இங்கும் ஆணின் மூச்சுத் தான் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிக்கிறது. மொத்தத்தில் சொல்லப் போனால், பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிப்பது முழுக்க முழுக்க ஆண் மட்டும் தான். பெண்ணுக்கு இதில் எந்தப் பங்கும் கிடையாது.

எத்தனையோ இணையர்கள் குழந்தைகள் இல்லாமல் கண்ணீர் வடிக்கின்றனர். எத்தனையோ இணையர்கள் ஆணென்ன பெண்ணென்ன எந்தக் குழந்தை பிறந்தாலும் போதும் என்கின்றனர். குழந்தையின் அருமை உணர்ந்து செயற்படாதோர் இதனைக் கருத்தில் கொள்ளவும். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நீங்கள் கூடிப் பெற்றது தானே! அந்தக் குழந்தையைப் பாதுகாப்பது உங்கள் கடமை.

இணையர்கள் கூடியாச்சு; பெண்ணின் வயிற்றில் குழந்தை கருவுற்றது. வயிற்றில் வளருவது பெண் குழந்தை எனின், குழந்தைப் பெறுமதி உணராமல் கருக்கலைப்புச் செய்வது உயிர்க் கொலைக்குச் சமமானது. குறித்த குழந்தையைப் பெற்று, குழந்தைகள் இல்லாமல் கண்ணீர் வடிக்கின்ற பெற்றோரிடம் கொடுத்து வாழ்வளிக்க முன்வாருங்கள்.

"பெட்டைப் பிள்ளையைப் பெத்துப் போடவா, மருமகளானாய்" என்று மருமகளிடம் பாயும் மாமிமார்களும் "பெட்டைப் பிள்ளையைப் பெத்துப் போட வந்தவள், வேண்டாம்" என்று அம்மாக்களிடம் இரண்டாவது திருமணம் செய்யக் கெஞ்சும் மகன்மாரும் இதனைப் படித்த பின் தங்கள் முடிவை மாற்றினால் போதும். இந்தக் காலத்தில "பிறக்கப் போவது ஆணா? பெண்ணா?" என்ற போருக்கு இதுவே தீர்வு!


வியாழன், 19 மே, 2016

பணமீட்ட வழியா இல்லை...?


1
ஒருவன்: அவரு ஏன் அடிக்கடி பெயரை மாத்திறார்!

மற்றவன்: வேண்டிய கடனை திருப்பிச் செலுத்தாமல் தப்ப...

2
ஒருவள்: அவள் ஏன் அடிக்கடி ஆளை மாத்திறாள்!

மற்றவள்: வருவாயைத் திரட்டிக் கொள்ளத் தான்

3
முதலாமாள்:-
             துணி வேண்டப் பணமின்றி
             குறுக்குக் கட்டோட போறவளை
             பணக்காரி என்கிறாங்களே!

இரண்டாமாள்:-
அவளா?
ஆடையைக் குறைத்து நடித்தே
பணக்காரி ஆனவளாச்சே!

4
கண்ணகி: உம்மட ஆள் பகல்ல தூங்கினாலும் நீங்கள் பணக்காரர் ஆச்சே

மாதவி: நம்மாள் 'களவெடு பிடிபடாதே' என இரவு வேலைக்கு போறதால...         


வெள்ளி, 13 மே, 2016

இரண்டடக்கேல்


விருப்பங்களை (ஆசைகளை) அடக்க முடியாமல் - நம்மாளுங்க 
பெரும் விருப்பங்களை (பேராசைகளை) வளர்த்து - அதனை
அடைய முயன்றே கடைசியில் காண்பதோ - அதன்
அறுவடையாக (பின் விளைவாக) நமக்குக் கிட்டுவதோ
சோர்வும் (நட்டமும்) துயரமும் (துன்பமும்) தான் - அதனை
இரண்டடக்கேல் என நினைவூட்டுவதா?

நம்மாளுங்க - தங்கள்
அன்பு உணர்வை வளர்க்கலாம் - ஆனால்
பாலியல் (Sex) உணர்வை அடக்க வேண்டுமே - அதை
அடக்கு என்றதும் கோபம் வருமே - அதையும்
சேர்த்துத் தான் இரண்டை அடக்கு என்றாரோ
பாவரசர் கண்ணதாசன் அவர்கள்!

இரண்டடக்கேல் என்றல்லவா
பாவரசர் கண்ணதாசன் சொன்னார் - அப்ப
இரண்டை அடக்காதே என்றல்லவா
பொருள்கொள்ள வேண்டியிருக்கு - அப்ப
மலம் கழிப்பதையும் சிறுநீர் (சலம்) அடிப்பதையும்
இரண்டடக்கேல் என்றாரோ!

உடலுக்குள்ளே சிறுநீரகம் - உண்மையில்
உண்டதை, குடித்ததை வடிகட்டி
கழிவுகளைக் கழித்து விடுவதால் தான்
மலமும் சிறுநீரும் (சலமும்) தேங்கும் - அந்த
இரண்டையும் அடக்காமல் விட்டால்
நோய்கள் கிட்ட நெருங்காமல் போகுமே!

குறிப்பு: உடற் கழிவுகளான மலமும் சிறுநீரும் (சலமும்) வெளியேறத் தோன்றும் நேரத்தில் அடக்கவும் கூடாது. மலமும் சிறுநீரும் (சலமும்) வெளியேற வேண்டி வருமே என உண்ணாமல், குடிக்காமல் இருக்கவும் கூடாது. 

சனி, 7 மே, 2016

நான் கற்பிக்க ஏது இருக்கு?

(படம் கூகிள் தேடலில் சிக்கியது)

"படம் பார் பாடம் படி" என
தொடக்கக் கல்வி ஆசிரியர்
சொல்லித் தந்த படி - நான்
சொல்லிக் கொடுக்க ஏதுமிருக்காது...
ஏனென்றால்
நாளுக்கு நாள் நடப்பது
தெரு விபத்து - அதில்
ஓரிரு உயிர்கள் பிரிந்து போக
எஞ்சியோர்
கையுடைந்து காலுடைந்து என...
எல்லாவற்றையும் கண்ட பின்னும்
தெரு விபத்துத் தொடருகிறது
என்றால்
"படம் பார் பாடம் படி" என
விபத்துப் படம் காட்டி
விபத்திற்குள் சிக்காதே என
நான் கற்பிக்க ஏது இருக்கு?
விபத்துப் படம் என்ன
விபத்திற்குள் பல முறை சிக்கியும்
விபத்திற்குள் சிக்குவோருக்கு
நான் கற்பிக்க ஏது இருக்கு?