Translate Tamil to any languages.

சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டில் நாம் என்ன செய்யலாம்?


எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்


"நாம் செய்யக் கூடியது எதுவென்றால்
மூன்று வேளையும் மூக்குமுட்ட உண்ட பின்
நல்லா நீட்டி நிமிர்ந்து நித்திரை கொள்ளலாம்!" என்றெழுத
"அடேய்! யாழ்பாவாணா!
நம்மாளுங்க இதைத்தாண்டா
நாளும் மறக்காமல் செய்கிறாங்களே!
அடேய்! யாழ்பாவாணா!
உண்டாங்களோ உறங்கினாங்களோ
தங்கட எதையும் மறந்து
மாற்றாருக்குக் கேடு செய்வாங்களே!" என
எனக்குப் பலரும் சொல்லெறி விட
"நல்லது செய்யப் பிறந்த - நீ
தீமையாவது செய்யாதிரு" என்றும்
"உன்னைத் திருத்திக் கொள்
உன்னைச் சூழவுள்ள மக்களாயம் (சமூகம்)
தானாகவே திருந்தும்!" என்றும்
விவேகானந்தர் சொல்லியும் கூட
கருத்திற்கொள்ளாத நம்மாளுங்க
யாழ்பாவாணன் சொல்லியா திருந்துவாங்க?
உள்ளத்தில் எண்ணியது எதுவோ - அதுவே
உடல் மொழியில் (செயலில்) மின்னுமென
சும்மாவா சொல்லி இருப்பாங்க...
சொன்னவர்கள் எவராச்சும்
ஆளையாள் பார்த்து வைச்சு
பகிர்ந்த உண்மை இதுவல்லோ!
எவராச்சும் எம்மைப் பார்த்து
நல்லவரெனச் சுட்டிக் காட்ட
நாளும் நல்லதை எண்ணி
நாளும் நல்லதைச் செய்து
நாளும் நற்பெயர் ஈட்ட
நன்றே முயற்சிப்போம் - அதை
இன்றே செயற்படுத்துவோம்!
காலத்திற்கு ஏற்ப
எமது செயல் வடிவம் மாறலாம்
ஆனால், காலம் மாறினாலும்
எமது இலக்கு மாறாதே!
விடிய விடிய எழுவோம்
விழ விழ எழுவோம்
முயன்று முயன்று வெல்வோம்
இனிய புத்தாண்டிலும் அப்படி ஆகட்டும்!

செவ்வாய், 27 டிசம்பர், 2016

வாசிப்புப் போட்டி நன்மை தருமா?


அன்றைய ஆள்களைப் போல
இன்றைய ஆள்களில்
வாசிப்பு நாட்டமுள்ளோரை
காணமுடியவில்லையே!

இன்றைய ஆள்களில்
வாசிப்பு நாட்டமுள்ளோரை
அடையாளம் காண
எங்கட முட்டாள் யாழ்பாவாணன்
வாசிப்புப் போட்டி நடாத்துறாராம்!

யாழ்பாவாணனின் வலைப்பூவைக் கூட
வாசிக்க ஆள் இல்லையாம் - அவரது
வாசிப்புப் போட்டியை எவரறிவார்?
மறக்காமல் பகிருங்கள்...
வாசிப்புப் போட்டி - 2016

நாளைக்கோ
வாசிப்புப் போட்டி - அதை
இன்றைக்குப் பகிர்ந்தால் பயனேது?
அதைத் தான் - நானும்
சொல்ல வரவில்லை - ஆனால்
வாசிப்புப் போட்டியால்
பயனேதும் கிட்டுமா என்றறிய வந்தேன்!

வாசிப்பதால் நம்மாளுங்க
அறிவாளி ஆகுவாங்க...
வாசிப்பதால் நம்மாளுங்களுக்கு
உள (மன) நோய் நெருங்காதாமே...
ஆளுக்காள் இப்படிப் பல சொல்லியும்
வாசிப்பு நாட்டமோ ஏற்படவில்லையே!
இனி
யாழ்பாவாணன் "வாசிப்புப் போட்டி" நடாத்தியும்
வாசிப்பு நாட்டம் ஏற்பட்டுவிடுமா?


உறவுகளே! இம்முயற்சி பற்றிய உங்கள் வழிகாட்டலையும் மதியுரையையும் தெரிவிக்க மறவாதீர்கள்!

வியாழன், 22 டிசம்பர், 2016

எவர் இவற்றைப் படிப்பித்தார்?

"நம்ம தமிழர் எல்லோரும்
போட்டி, பொறாமை,
வஞ்சகம், சூது, வாது எல்லாம்
எப்படிப் படித்தனர்?" என்று
அறிஞர் ஒருவர் ஐயம் எழுப்பினார்!

இராமாயணத்தில் கூனி மாமியும்
பாரதத்தில் சகுனி மாமாவும்
தமிழருக்குச் சூது, வாது படிப்பித்தார்களே!
போட்டி என்று ஒன்று
வந்துவிட்டால் பாரும் - நம்ம
ஆளுங்க சிங்கங்கள் தான் - ஆங்கே
நெஞ்சு நிறைய
வஞ்சகமும் பொறாமையும்
உயரப் பறக்க விரும்பும் (பதவி ஆசைக்) குணமே
படிப்பித்திருக்கலாம் - அதனைக் கற்ற
தமிழரின் செயலால் தான்
முகவரி இழந்த இனமாயிற்று
எங்கள் தமிழினம்!


இப்பதிவில் கலந்துள்ள பிறமொழிச் சொல்களை நீக்க முடியவில்லை. ஆயினும், பிறமொழிச் சொல்களுக்கு ஈடான தமிழ்ச் சொல்களை பின்னூட்டத்தில் தந்து உதவுங்கள்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

காதல் நாடகங்கள் (2000 இற்குப் பின்)


காதல் என்பது
இயற்கையாக அமைய வேண்டுமாம்!
அப்படி அமைந்தால் - சோதிடத்தில்
குறிப்புப் பார்க்கத் தேவை இல்லையாம்!
அன்றைய காதல்
அப்படி இருந்திருக்கலாம் - ஆனால்
இன்றைய காதல் அப்படி இல்லையே!
அதனைத் தான்
கீழுள்ள உரையாடல்கள் வழியே
உறுதிப்படுத்த முனைந்துள்ளேன்!

பெண்: உங்களுக்குக் காதல் வராதா?
ஆண்: எனக்கு வராது!
பெண்: ஏனங்க...
ஆண்: வருவாய் (சீதனம்), சொத்து (ஆதனம்) வரவேணுமே!

பொடியன்: உங்களுக்குக் காதல் வராதா?
பெட்டை: எனக்கு வராது!
பொடியன்: ஏனங்க...
பெட்டை: வருவாய் (சீதனம்), சொத்து (ஆதனம்) கேட்போராலே...

அழகி: ஏன் காதலிக்க மறுக்கிறியள்?
அழகன்: கோடிக் கணக்கில நீட்டுவோர் நாடுவதனால்...

அழகர்: ஏன் காதலிக்க மறுக்கிறியள்?
அழகினி: கோடிக் கணக்கில கேட்போர் தொடருவதனால்...

ஒருவள்: நீங்க காதலிக்க விரும்பாததேன்...
ஒருவன்: மனைவியிடம் வேண்டிய
         வருவாய் (சீதனம்), சொத்து (ஆதனம்) பறிபோயிடுமே...

ஒருவன்: நீங்க காதலிக்க விரும்பாததேன்...
ஒருவள்: நூறாயிரக் கணக்கில
         உழைச்சுப் போடுற என்னவரை
         இன்னொருவள் மடக்கிப் போடுவாளே!

குமரி: நீங்கள் காதலிப்பதை வெறுப்பது ஏன்?
குமரன்: எவரையும் காதலிக்காத ஒருவள் வராமையே!

குமாரன்: நீங்கள் காதலிப்பதை வெறுப்பது ஏன்?
குமாரி: எவரையும் காதலிக்காத ஒருவன் வராமையே!

இப்படியான உரையாடல்களுக்குப் பின்னே
சில கெடுதல்களும் நிகழ்ந்திருக்கலாம்...
ஓமோம்! உண்மை தான்!
காதல் முற்றி நெருக்கம் நெருங்க
திருமணம் என்ற நிகழ்வைச் சந்திக்காமலே
வாழ்ந்து பார்க்க எண்ணிய வேளை
இப்படியும் நிகழ வாய்ப்பு இருக்கிறதே!
காதல் என்ற போர்வையில் பழகி
வயிற்றில் பிள்ளையைச் சுமந்தவளும் இருக்கலாம்...
சும்மா சொல்லக் கூடாது
கருக்கலைப்புச் செய்தவளைக் கட்டியவனும் இருக்கலாம்...
இந்த நிலை வந்து சேருமோ என
எவரும் எதிர்பார்த்து இருக்க முடியாதே!
பின்விளைவைச் சற்றுச் சிந்திக்க மறந்த
இளசுகளின் எண்ணங்களால் - அவர்களின்
எதிர்காலமே அழியும் நிலை காண்பீர்!
நன்றே முற்றிய காதல் ஆயினும்
நல்ல ஓர் எதிர்காலம் அமைய
முன்னமே வேண்டாம் அந்த நெருக்கம்!
காதலுக்குப் பிறகு தாலியைக் கட்டு
பதிவுத் தாளில் கையெழுத்தை இட்டு
ஆணுக்குக் கால் கட்டுப் போட்டு - பின்
காதலர் இருவரும் தமக்கிடையே
காற்றே நுளையாத நெருக்கம் காட்டலாமே!
அடிக்கடி காலம் மாறிப் போவதாலா
இவங்க மேல்நாட்டுக் கோலம் கண்டதாலா
இப்ப பிஞ்சுகளும் காதல் பண்ணுவதாலா
காதல் மலர அறிவு மங்குவதாலா
கண்டதும் காதல் கொண்டதே கோலமாவதாலா
இன்றோ
அரங்கேறும் காதல் நாடகங்கள் எல்லாம்
ஏமாற்றுதலிலும் ஏமாறுதலிலும்
கருக்கலைப்பிலும் தற்கொலையிலும்
முடிவுறும் காட்சிகளாகவே அமைவதைக் காண்பீரே!

சனி, 17 டிசம்பர், 2016

பணமில்லாத என்னைக் கட்டிய பெண்ணின் கதை


பணமில்லை என்றால் பாரும்
மனிதர்கள் உறவு கொள்ளார் என்றால்
நன்றியுள்ள நாய்கள் கூட - நம்மை
நாடிவர மறுக்கிறதே - ஏனென்றால்
ஒரு வேளை உணவுக்கு - உனக்கே
வழி இல்லாத வேளை - எனக்கு
எப்படிக் காணும் உணவு போடுவாயென
நாய்களும் ஆள்களை மாற்றுகின்றனவே!
நாலு பணம் உள்ள வேளை
பழகிய நம்மாளுங்க, நட்புகள்
பழகிய காதலிக்க எண்ணியோர்
எல்லோரும் பிரிந்து போனாங்க என்றால்
நான் வளர்த்த நாயும் கூட
பணக்காரன் வீட்டை நாடிப் போயிட்டுதே!
பெற்றோர் தொல்லைக்கு அஞ்சி
மாலையிடக் கழுத்தை நீட்டிய
முறைப் பொண்ணு கூட - முதலில
உண்டு, உறங்கப் பணத்தை வை
 
அடுத்துப் பிள்ளை உண்டானால்
வயிற்றுப் பாட்டைப் பார்க்க
உண்டான பிள்ளையைப் பெற்றெடுக்க
பணத்தைச் சேமித்து வைத்ததைக் காட்டு
பின்னாடி தான்டா முதலிரவு என்கிறாள்!
உழைப்பில்லாத உருப்படியில்லாத
எனக்குக் கழுத்தை நீட்ட அஞ்சி
ஓடி ஒளித்தவள் பலரிருக்கப் பாரும்
பணமிருந்தால் உடலுறவுக்கு ஓம்
பணமில்லை என்றால் பாரும்
ஒரு வேளை உணவுக்கும் வழியில்லை
உடலுறவுக்கும் உடன்பாடில்லை என்று
என்னை உழைக்க வைச்சு - என்னோடு
தான் பிழைப்பு நடாத்த எண்ணிய - என்
முறைப்பெண்ணு தான் பாரும்
பாரதி காட்டிய புதுமைப் பெண்!
இப்பவெல்லாம்
 
நான் நல்ல உழைப்பாளி
நாலு பணம் நிறைய வைச்சிருக்கேன்
நாளும் முறைப்பெண்ணு - என்னோடு
படுக்கையில முரண்டு பிடிப்பதில்லை
நாலைந்து ஆண்டுகள் போவதற்குள்
இரண்டு மூன்று பிள்ளைக்கும்
அப்பன் ஆக்குவேன் என்றெல்லோ
என்னோடு ஒத்துழைக்கின்றாள்! - அதை
அறிந்து மணந்து பிடித்த - அந்த
பணக்காரன் வீட்டுப் பக்கம் போன
என் பழைய நாய் கூட - என்னுடைய
வீட்டை விட்டு வெளியேற மறுத்து
வாலாட்டி நன்றி காட்டுது என்றால் - என்
 
வீட்டில உணவுக்குத் தட்டுப்பாடு இல்லை
அதற்கெல்லாம் ஒருவள்
என்னவளாம் முறைப்பொண்ணு - நானென்ற
உருப்படியில்லாத
  உதவாக்கரையைக் கொஞ்சம்
கொஞ்சும் மொழியால கொஞ்சம் அடக்கியே - என்னை
உருப்படி ஆக்கிய கடவுள் அவள்!

செவ்வாய், 13 டிசம்பர், 2016

“சல்லடை கனவுகள்” நூலைப் பற்றி...

"தினத்தந்தி நாளிதழில் புதன்கிழமையன்று வெளியாகும் மதிப்புரை பக்கத்தில் “சல்லடை கனவுகள்” கவிதை நூல்.

தமிழ்நாட்டில் வெளியான நாளிதழில் பக்கம் எண்:16 இலும் அமீரகத்தில் பக்கம் எண்:8 இலும் புத்தக மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது." என்பதை நூலாசிரியர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



வாருங்கள் உறவுகளே! தமிழ்நண்பர்கள் தளத்தில் "மௌனங்கள் உயிர்த்தெழுந்தால்" என்ற பா/கவிதை தொடரைப் (http://tamilnanbargal.com/node/57302) படித்தால் புரியும் ஆய்க்குடியின் செல்வன் (மணிகண்டன்) அவர்களது பா/கவிதை புனையும் ஆற்றலை!

"தாமரை கண்ணான் உலகிற்கு
போகிற வழி தந்தாலும்
போகிற எண்ணம் ஏதும் இல்லையடி
நீயற்ற எவ்வுலகமும் நிறையற்றதே எனக்கு!" என்று
அவள் இல்லாத இடத்துக்கு
இவன் போகானாம் - ஆங்கே
நிறைவு கிட்டாதென - இவன்
எண்ணம் வெளிப்படுத்தும் வண்ணம்
பல பா/கவிதை புனைந்த - தம்பி
ஆய்க்குடியின் செல்வன் (மணிகண்டன்)
ஆக்கி அரங்கேற்றிய படைப்பாம்
சல்லடை கனவுகள்நூல் பற்றி
தமிழ்நாட்டு 'தினத்தந்தி' நாளிதழில்
புத்தக மதிப்புரை பக்கத்தில்
அறிமுகம் செய்திருப்பதை பாரும்!

தாங்கள் “சல்லடை கனவுகள்” நூலை வாங்கிப் படியுங்கள். தாங்கள் கொடுக்கின்ற பணத்திற்கு அதிகமான அறிவு கிட்டும். அத்தனை சிறப்பான நூலைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்னறேன். 

புதன், 7 டிசம்பர், 2016

எவரும் அறிவாளி ஆவதற்கு...



இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக உரிமைக் குரல் கொடுத்த தமிழக முதல்வர்  ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் இழப்பு, எல்லோருக்கும் பேரிழப்பு! வலைப்பூ உறவுகளுடன் துயர் பகிருகின்றேன்.


எல்லோரும் படித்தவர்கள் தான்
ஆனால், அவர்களை நான்
அறிவாளிகள் இல்லை என்றால்
நீங்களே சொல்லுங்கள்
என் நிலைமை என்னவாகும்?
கல்லெறியோ சொல்லெறியோ
என் தலை மேல் விழ முன்
எண்ணிப் பார்த்த வேளை
தமிழ் சொல்கள் வந்து விழ

"கண்டதும் கற்பதனால் - எவரும்
அறிவாளி ஆவதில்லையே!
கற்பதனால் அறிவைப் பெறலாம்
ஆனால்,
அறிவைப் பெருக்கத் தேடல் வேண்டுமே!
தேடல் உள்ள வரை
எவரும் அறிவைப் பெருக்கலாம்
ஆனால்,
அவர்கள் அறிவாளி ஆக முடியாதே!
நமது அறிவைத் தான்
பிறருக்குப் பகிருவதால் தானே 
அறிவாளி என்ற பெயர் கிடைக்கிறதே!
வாங்க... வாங்க...
நீங்கள் எல்லோரும் தான்
எங்கட எங்கட அறிவைத் தான்
"நாம் பெற்ற கல்வி
இவ்வுலகத்தார் பயனீட்டவே" என
பிறருக்குப் பகிர்ந்தால் தான்
நாமும் "அறிவாளி" என்ற
அடையாளத்தைப் பெறலாமே!" என்றவாறு

பா/கவிதை அடிகளைப் போல - நானும்
எழுதியதைப் பகிர்ந்தேன் - அதை
படித்துப் பார்த்த உங்களுக்கு - உங்கள்
உள்ளத்தில் என்னவாகத் தோன்றியது? - அதை
எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன் - நானும்
அறிவாளியாக விரும்புவதனாலேயே
பணிவோடு உங்களைக் கெஞ்சுகிறேன்!
உங்கள் பதிலடி தான் - எங்கள்
ஒவ்வொரு தமிழ் ஆளையும்
அறிவாளி ஆக்க உதவும் எனின்
அதுவே
என் பா/கவிதை இற்கு கிடைத்த
வெற்றி என்றே பாடுவேன்!