Translate Tamil to any languages.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வலைப்பூக்களில் பதிவுகளைக் காணவில்லையே!

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அறிஞர்களே! என்னூரில் தீபாவளி நாளன்று ஏஆர்டெல் வலையமைப்புப் பணி சரியாகக் கிட்டவில்லை. கடும்மழையால் கவனிக்க மறந்துவிட்டார்கள் போலும். அதனால். உரிய நேரத்தில் வாழ்த்துகளைப் பகிர முடியாமையால் துயருற்றேன். எல்லாமே கடும்மழையின் வஞ்சனை தான்.

சரி! தீபாவளி நாளுக்கு அடுத்த நாளாவது தீபாவளி வாழ்த்துகளைப் பகிர வலைப்பூப் பக்கம் நுழைந்தேன். எனது பிளக்கர் விருப்பத் தெரிவில் முந்நூறிற்குக் கிட்டவும் எனது வேர்ட்பிரஸ் விருப்பத் தெரிவில் இருநூறிற்குக் கிட்டவும் திரட்டி வைத்திருந்த வலைப்பூக்களில் வாழ்த்துகளைப் பகிர இறங்கினேன். அடக் கடவுளே! நான் 2015 தைப்பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து; பின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து; தீபாவளி வாழ்த்துகளைப் பகிரும் வரை 2014 ஆம் ஆண்டு பதிந்த இறுதிப் பதிவோடு பல வலைப்பூக்களைப் பார்த்தேன். அதன் விளைவே 'வலைப்பூக்களில் பதிவுகளைக் காணவில்லையே!' என்றொரு பதிவை தர முன்வந்தேன்.

எனது பார்வையில் இப்படிப் பல வலைப்பூக்களில் புதிய பதிவுகளைக் காணவில்லை. நான் விருப்பத் தெரிவில் திரட்டிய வலைப்பூக்கள் செயலிழந்தவையாக இருக்கலாம். அல்லது புதிய பதிவுகளைப் பதியாமல் வலைப்பதிவர்கள் ஒளிந்திருக்கலாம். வலைப்பதிவர்கள் ஒளிந்திருக்கப் பல காரணங்கள் இருக்கலாம். அதில், தங்கள் வலைப்பூ முன்னிலைக்கு வராமல் பலராலும் பேசப்படாமல் இருப்பதால் உள்ளத்தில் தளர்வுநிலை ஏற்பட்டிருக்கலாம். அதனால், புதிய பதிவுகளைப் பதியாமல் ஒளிவது அழகல்ல.

எனக்கும் வலைப்பூ தொடங்கிய வேளை மட்டற்ற மகிழ்ச்சி தான். அடுத்தடுத்து ஆறு வலைப்பூக்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கில் நடாத்தி வந்தேன். வலைப்பூ முன்னிலைக்கு வராமல் பலராலும் பேசப்படாமல் இருப்பதை நானுணர, அறிஞர்கள் வழிகாட்டலின் படி தனி வலைப்பூவாக ஒன்றையே நடாத்த முனைந்தேன். மாதமொன்றில் ஒரிரு பதிவுகளைப் பதிந்தேனும் என் தனி வலைப்பூவைப் பேண முனைகின்றேன். ஆயினும், அறிஞர்களின் வலைப்பூக்களைத் தேடிச் சென்று கற்பதோடு அவர்களது பதிவுகளுக்கு என் கருத்துகளையும் பகிருகிறேன். என் உள்ளத்தை ஈர்த்த பதிவுகளை எனது வலைப்பூவில் பகிர்ந்தும் வருகிறேன். எப்படியோ என் தனி வலைப்பூவைப் பேணுவதில் எனக்கு ஒரளவு நிறைவு கிட்டுகிறது. மேலும் என் தனி வலைப்பூவிற்கான வாசகர் பெருகுவதைப் பார்த்தால், விரைவில் முன்னிலைக்கு வரலாம் பலராலும் பேசப்படலாம் என நம்புகின்றேன்.

தங்கள் வலைப்பூ முன்னிலைக்கு வராமல் பலராலும் பேசப்படாமல் இருப்பதால் உள்ளத்தில் தளர்வுநிலை ஏற்பட்டால் என்னைப் போன்று அறிஞர்கள் வழிகாட்டலின் படி முன்னேற முயல்வீர்கள் என நம்பி என் பட்டறிவைப் பகிர்ந்தேன். ஆயினும்,  பல முன்னோடி வலைப்பதிவர்களின் செயற்பாட்டை நாம் கற்றறிந்து முன்னேற முயற்சி செய்யலாமே! அப்படிச் சிலர் எப்படி முன்னேறுகிறார்கள் என்று தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

1. சிலர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
2. சிலர் ஒன்றிணைந்து ஒரு நாளைக்கு ஒருவராக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
3. சிலர் ஏழலில் (வாரத்தில்) ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
4. சிலர் 2 ஏழலில் (2 வாரத்தில்) ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
5. சிலர் மாதத்திற்கு ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
6. சிலர் மூன்று மாதத்திற்கு ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.

எல்லோருமே (நான் உட்பட) Linkedin, Twitter. FaceBook, Google+ தளங்களில் பகிருவதோடு வலைப்பதிவுத் திரட்டிகளிலும் புதிய பதிவினை இணைக்கிறர்கள். அவர்களது வெற்றியின் கமுக்கம் (இரகசியம்) மற்றைய அறிஞர்களின் வலைப்பூக்களுக்குச் சென்று தமது அடையாளத்தை அரங்கேற்றுவதேயாகும். அதாவது கருத்துரை, தாக்குரை, திறனாய்வு எனப் வழிகளில் மற்றைய அறிஞர்களின் வலைப்பூக்களில் தமது அடையாளத்தை அரங்கேற்ற முடியுமே. இவ்வாறு மற்றைய அறிஞர்களின் உள்ளத்தை ஈர்க்க முயன்று இருந்தால் தங்கள் வலைப்பூவிலும் மற்றைய அறிஞர்களின் வருகையைப் பெருக்கலாமென இறங்கி வென்றவர்களே அவர்கள்! அவர்களைப் போல நாமும் முன்னேற முயல்வோம்.

மின்னூடகங்களில் வலைப்பூவும் (Blog) முன்னிலையில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முடியுமே! இதுவரை பன்னிரண்டாயிரம் தமிழ் வலைப்பூக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். வலைப்பூ நடாத்துவது என்பது நுட்பங்கள் தெரிந்தவருக்கு இலகு தான். ஆனால், மற்றைய வலைப்பூக்களில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாத வரை வெற்றி காண்பதென்பது இயலாத ஒன்றே! பதிவுலகில் வெற்றி பெறக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டலைப் படித்துத் திறம்பட வலைப்பூ (Blog) நடாத்தி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முன்வாருங்கள்.

ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!


செவ்வாய், 10 நவம்பர், 2015

உள்ளங்களைச் சுட வேண்டாம்!

தைப்போங்கல், சித்திரைப் புத்தாண்டு, தீபாவாளி ஆகிய கொண்டாட்டங்களில் தீபாவாளி நாள் சிறப்பு மிக்கது. நல்வழியில் பயணிக்கும் நாளாக, பொன் நாளாக தீபாவாளியைக் கொண்டாடுவதால் மஞ்சள் பூசிப் புத்தாடை (கோடி) உடுத்துக் கோவில் வழிபாடு செய்து நல்லுறவுகளைப் பேணி மகிழும் நாளாக இருக்கிறது.

இவ்வாறான பொன்நாள்களில் உள்ளங்களைச் சுடும் சுடு சொல்களை அள்ளி வீசாமல் அன்பைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவிப்போம். கிடைத்ததைக் கொண்டு மகிழ்வோடு கொண்டாடுவோமென வாழ்த்துகளைத் தெரிவிப்போம். அவ்வாறே, உள்ளங்களைச் சுடும் செயல்களையும் செய்யாது இருப்போம். அதாவது, நமக்குப் புத்தாடை உடுத்திக்கொண்டு உதவுவதாகக் கூறி நாம் உடுத்தியதை அடுத்தவருக்கு வழங்காது இருப்போம். பிறர் உள்ளங்களைச் சுட வேண்டாமென்றே "உன்னைப் போல் உன் அயலானையும் விரும்பு (நேசி)" என்று முன்மொழிந்தவர்கள் எண்ணியிருக்கலாம்.


செய் / சொல்லு - அதுவும்
பிறர் உள்ளங்களைச் சுட்டுப் புண்ணாக்காமல்
நல்லதையே செய் / சொல்லு - அதுவும்
தீபாவாளி நாளில் தொடருங்கள்!


2010 இலிருந்து தமிழ்நண்பர்கள்.கொம், எனது பழைய வலைப்பூக்கள், எனது பழைய வலைத்தளங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் உறவுகள் எல்லோருக்கும் எனது தீபாவாளி நல்வாழ்த்துகள். எனது புதிய வலைப்பூவான யாழ்பாவாணன் வெளியீட்டகம் http://www.ypvnpubs.com/ மற்றும் எனது புதிய வலைத்தளமான யாழ் மென்பொருள் தீர்வுகள் http://yarlsoft.com/ ஆகிய பக்கங்களுக்கு வருகை தந்து ஒத்துழைக்கும் உள்ளங்களுக்கு நன்றி கூறுவதோடு எல்லோருக்கும் மீண்டும் எனது உள்ளம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

திங்கள், 2 நவம்பர், 2015

தமிழ் சோறு போடுமா?

தமிழ்நாடு, புதுக்கோட்டையில் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வைப் பற்றிப் பதிவர்கள் பலர் எழுதிவிட்டனர். நானும் ஏதாவது எழுதி இருக்கலாமே எனச் சிலர் கருதி இருக்கலாம். "உலகெங்கும் தமிழ்ப் பதிவர் சந்திப்புப் பற்றிய தனி அடையாளத்தை நிலை நிறுத்திய நிகழ்வு. இதனை இனிவரும் வலைப்பதிவர் சந்திப்புகளுக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வை விட இனிவரும் வலைப்பதிவர் சந்திப்புகள் சிறப்பாக நடாத்தப்பட வேண்டும். அதேவேளை, உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் எண்ணங்களைப் பகிர வேண்டும்." என்பதே என் கருத்து, வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வில் பகிர்ந்த உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் எண்ணங்களைப் பொறுக்கியே இப்பதிவை ஆக்கியுள்ளேன்.


முற்பகுதி

வலைப்பதிவர் சந்திப்பு
என்ற தளத்திலிருந்து
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா காணொளிகள்
என்ற பதிவிலிருந்து
11.10.2015 ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை யூடியூப்பில் பார்வையிட கீழே உள்ள, யூடியூப் முகவரிகளைச் சொடுக்குங்கள்.

முதற் பகுதி ஒளிஒலி (வீடியோ) இனைப் பதிவிறக்கி விக்கிப்பீடியா கலைக்களஞ்சியதின் தமிழ்நாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் அறிஞர் ரவிசங்கர் அவர்கள் புதுக்கோட்டையில் 11/10/2015 ஞாயிறு அன்று நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்விலே 'தமிழ் சோறு போடுமா?' என்று எடுத்துக்காட்டுடன் விளக்கமளித்த பகுதியை வெட்டி எடுத்து உங்கள் முன் வைக்கின்றேன். இதற்கு அனுமதி வழங்கிய வலைப்பதிவர் சந்திப்பு http://bloggersmeet2015.blogspot.com/ தள மேலாளர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


அறிஞர் ரவிசங்கர் அவர்களின் கருத்துகள்
தமிழ்நாட்டு (தமிழக) மக்களுக்காகவோ
ஈழத்து (இலங்கை) மக்களுக்காகவோ
வலைப்பதிவர்களுக்கு மட்டுமோ
தெரிவித்ததாகக் கருதாது
உலகெங்கும் வாழும்
ஒவ்வொரு தமிழருக்கும் தெரிவித்ததாகக் கருதி
உலகெங்கும் நற்றமிழைப் பேண ஒன்றுபடுவோம்.


பிற்பகுதி

புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வை 2015 ஐப்பசி பதினோராம் நாள் ஞாயிறு அன்று காலை ஈழத்து யாழ்ப்பாணம் மாதகலூரில் இருந்தவாறு எனது மடிக்கணியில் நேரலை ஊடாகக் கண்டுகளித்தேன். வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வு ஏற்பாடுகள் யாவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இத்தனை சிறப்பாக ஏற்பாடு செய்த எல்லோருக்கும் பாராட்டுகள். நிகழ்வில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியதின் தமிழ்நாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் அறிஞர் ரவிசங்கர் அவர்கள் 'தமிழ் சோறு போடுமா?' என்று எடுத்துக்காட்டுடன் விளக்கமளித்த கருத்துகள் என் உள்ளத்தில் வந்து குந்திவிட்டன. அதன் விளைவு தான் கீழ்வரும் பதிவு. அதற்காக அறிஞர் ரவிசங்கர் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன்.


தமிழ் சோறு போடுமா


தமிழ் சோறு போடுமா என்றே
தமிழர் தான் பாடுறாங்க இன்றே
                            (தமிழ்)

வழித்தோன்றல் வழிவந்து வாழ்நாளில் பேசிநின்று
வழிநெடுக நடைபோட முயன்றால் தமிழனென்று
ஆளுயர அறிவுயரத் தலைநிமிரத் துணைநின்று
ஒத்துழைத்த தமிழைச் சோறுபோடு என்கிறாயே!
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                           (தமிழ்)

சுற்றும் உலகில் பிறமொழி பேசிநின்று
உலகம் சுற்றி வருகையில் தமிழனென்று
வயிற்றை நிரப்ப வழியேதும் இல்லையென்று
சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                           (தமிழ்)

பேருக்குத் தமிழனென்று எப்போதும் சொல்லிநின்று
ஊருக்குள் தமிழர் பண்பாட்டை உதறிநின்று
எவருக்குப் பிறமொழியில் செயற்பட முன்நின்று
சோறு போடுமா தமிழென்று குளறலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                            (தமிழ்)

நுட்பத் தெரிவுகளில் தமிழிருப்பது ஏனென்று
கிட்ட நெருங்காது ஆங்கிலத்தின் வழிநின்று
பிறரோடு நெருங்கினாலும் வேற்றுமொழி நாடிநின்று
சோறு போடுமா தமிழென்று முழங்கலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                            (தமிழ்)

பேச்சளவில் தான் தமிழனெனக் கூறிநின்று
எழுத்தளவில் தான் தாய்த்தமிழை மறவென்று
செயலளவில் தான் பண்பாட்டைத் துறவென்று
சோறு போடுமா தமிழென்று தூற்றலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                            (தமிழ்)

ஈன்ற தாயும் தமிழச்சி தானென்று
ஈன்ற பின்பேசப் பழக்கியது தமிழென்று
தமிழ்த் தாயவள் ஊட்டிய சோறின்று
சோறு போடுமா தமிழென்று கேட்குமா?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                             (தமிழ்)

தமிழா! உன்எழுத்தில் பிறமொழியை நீக்கிநின்று
தமிழா! உன்சொல்லில் நற்றமிழைச் சுட்டிநின்று
தமிழா! உன்பேச்சில் தேன்தமிழைக் கொட்டிநின்று
தமிழா! உன்செயலில் பண்பாட்டைக் காட்டிநின்று
வாழ்ந்து காட்டு; தாய்த்தமிழே சோறுபோடுமே!
நானும் தான் சொல்லுகிறேன் இங்கே!
                                             (தமிழ்)


"தமிழ் சோறு போடுமா?" என்றால் "தமிழ் சோறு போடும்" என்பது தான் பதில். அதெப்படி என்றால் அறிஞர் சுப.நற்குணன், மலேசியா அவர்களின் பதிவுகளில் அவர் காட்டும் வழிகாட்டல் வழியே நாம் பயணித்தால் கிட்டும்.

தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)
தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 2)
தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 3)


முற்றும்