Translate Tamil to any languages.

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

ஒன்றுபடு தமிழா! ஒன்றுபடு!

 28/08/2020 வெள்ளி மறக்காமல் இணையுங்கள்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 02

தமிழா! தமிழரே உலகின் முதற்குடி!

தமிழா! தமிழே உலகின் முதன்மொழி!

தமிழா! தமிழில் தான் நல்ல பண்பாடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! கடந்த காலம் கண்ணில் தெரிகிறதா?

தமிழா! இழந்ததைத் தான் கணக்கிட முடிகிறதா?

தமிழா! பிரிவினை வளர்த்துப்   பட்டதை நினை! - இனி

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! அன்புக்கும் உண்டோ  அடைக்கும் தாழ்ப்பாள்!

தமிழா! அடம்பன் கொடியும்  திரண்டால் மிடுக்காம்!

தமிழா! எட்டவிலகி நீயிருந்தால் கேடுதான் வருமாம்!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! சாதி, மதப் பேச்சைக் கைவிடு!

தமிழா! ஊருக்கூர் வேண்டாம் முரண்பாடு!

தமிழா! நீயுடுத்து நம்தமிழ் பண்பாட்டை!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! கண்டதையும் பேசிக் காலம் கடத்தாதே!

தமிழா! கைக்கெட்டியதைக் கையாளக் கற்றிடு!

தமிழா! உன்னாயுதமே ஒற்றுமைதானென உணர்ந்திடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! தலைக்கனத்தைக் கொஞ்சம் இறக்கி வையடா!

தமிழா! தலைநிமிர்ந்து வாழவென முன்னேறப் பாரடா!

தமிழா! விழித்தெழு, விடியல்கூட நெருங்குமடா!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! முரண்பட்டு மோதுண்டு வீழ்ந்துவிடாதே!

தமிழா! நமக்குள்ளே நாமுடைந்தால் விடிவு கிட்டாதே!

தமிழா! சூழவுள்ள காக்கைகளின் ஒற்றுமையைப் பார்!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! நாளும் விடியும் கிழக்கும் வெளிக்கும்

தமிழா! நமக்கும் வாழ்வு மேம்பட உழைப்போம்

தமிழா! ஒடுக்க வருமாள்களை விரட்ட ஒன்றுபடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! உள்ளம் சோர்ந்து முயற்சியில் தளராதே!

தமிழா! வெள்ளம் வந்தாலும்  நீந்தக் கற்றிடு!

தமிழா! பள்ளம் திட்டி, பார்த்து நடைபோடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! அழிவைத் தடுக்க அறிவுக் கண்ணைத் திற!

தமிழா! தோல்வியை விரட்டிடப் பலமறிந்து நடைபோடு!

தமிழா! வெற்றியை நெருங்க ஒன்றுபட்டுச் செயற்படு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! தன்நலம் கருதிப் பிரிவதும் இலகுதான்!

தமிழா! பொதுநலம் பேணித்தான் இணைவதும் நலமே!

தமிழா! தமிழினம் மேம்பட ஒன்றுபடுதலே மருந்து!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

தமிழா! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பாங்க!

தமிழா! ஒற்றுமை கெட்டால் தாழ்வுதான் என்பாங்க!

தமிழா! தமிழனென்று சொல்லித்தான் நடைபோடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!





வியாழன், 20 ஆகஸ்ட், 2020

Zoom ஆல தான் எனக்குச் சாவு!


17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்திவருகிறேன். அடுத்த பயிலரங்கம் 21/08/2020 வெள்ளி இடம்பெறும். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கெடுக்க உதவுங்கள்.

Zoom ஆல தான் எனக்குச் சாவு!


இப்பவெல்லாம்

இணையக் கலந்துரையாடல் தான்...

Teams என்கிறாங்க... Meet என்கிறாங்க...

அடிக்கடி Zoom என்கிறாங்க...

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கோ

(Data குடிப்பதால்) வருவாய் என்கிறாங்க...

எவரும் எம்மைச் சிந்தித்தார்களோ

எங்களுக்குத் தெரிவதில்லை...

(Covid -19) கொரோனா வந்தபின்

வீட்டுக்காவல் போல முடக்கிவிட

இணையக் கலந்துரையாடல் தான்

ஆற்றுப்படுத்த உதவினாலும் கூட

Zoom ஆல தான் உனக்குச் சாவு என்று

என் பெண்டாட்டி திட்டித் தீர்ப்பதை

கடவுள் தான் கண்டிருப்பார்...

உண்ணாண உண்மை தான்!

மூன்று மணிக்குக் கவிஞர் சந்திப்பு

நான்கு மணிக்குப் பாடகர் சந்திப்பு

ஐந்து மணிக்கு வெளியீட்டாளர் சந்திப்பு

ஆறு மணிக்கு எழுத்தாளர் சந்திப்பு

ஏழு மணிக்கு வாசகர் சந்திப்பு

இப்படியே நீண்டு செல்கிறது...

 நாளுக்கு நாள்

ஓய்வின்றி ஒன்றுக்கு மேற்பட்ட

இணையக் கலந்துரையாடல் தான்...

இதைப் பார்க்கிற பெண்டாட்டி

தன்னைக் கட்டியதை விட

Zoom ஐக் கட்டியிருக்கலாமே என்கிறாள்...

எல்லோரும் தேவை தான்

எல்லாமும் தேவை தான்

Zoom இல தலையைக் காட்டாட்டி

உள்ளத்தில அமைதியில்லை என்போர்க்கு

Zoom ஆல தான் சாவு போல...

எனக்கு இப்ப Zoom ஆஅ

என் பெண்டாட்டியா தேவை?

எனக்கே தலையைச் சுற்றுகிறதே!

யாழ்பாவாணன் ஏன் இப்படி எழுதினார் என்று பலரும் கேட்கலாம். இணையக் கலந்துரையாடல் எனப் பலர் படையெடுக்கின்றனர். அக்கலந்துரையாடல்கள் ஆவணப்படுத்தப்பட்டுப் பேணப்பட்டால் நன்மையுண்டு. அதேவேளை குடும்பம் பற்றியும் சிந்திக்க வேண்டுமே! அதனை எண்ணிப் பார்த்தேன்; அதனால் எழுதியதை அப்படியே பகிர்ந்தேன்.


வியாழன், 13 ஆகஸ்ட், 2020

மரபுக் கவிதைப் பயிலரங்கச் செயற்பாடுகள்

 


17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்துவதாகக் கடந்த பதிவில் தெரிவித்து இருந்தேன். அதன்படிக்கு 24/07/2020 , 03/08/2020 நடந்த பயிலரங்கப் பதிவுகளை வலையொளியில் பகிர்ந்தோம். அவற்றைத் தங்களுடன் பகிருகிறேன். தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவலாம்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 01 - தொடர் - 02


மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 01 - தொடர் - 03

07/08/2020 வெள்ளி அன்று மரபுக்கவிதைப் பயிலரங்கம் இடம்பெறவில்லை. அன்றைய நாள் யாழ்பாவாணனின் நகைச்சுவைப் பயிலரங்கம் இடம்பெற்றது. அதனை வலையொளியில் பகிர்ந்தோம். அவற்றைத் தங்களுடன் பகிருகிறேன். தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவலாம்.

இனி இயல்பாகவே மரபுக்கவிதைப் பயிலரங்கம் தொடரும். தங்களுக்குத தெரிந்த மரபுக்கவிதை பயில விரும்பும் எல்லோருக்கும் இந்தப் பயிலரங்கம் பற்றிய தகவலப் பகிர்ந்து உதவுங்கள் இவ்வாறான பயிலரங்குகள் பலருக்கு நன்மை தர வேண்டும் என்பதே எமது நோக்கு அதனை நாம் தொடர்ந்து செய்வோம்.