Translate Tamil to any languages.

உளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை

எயிட்ஸ் (AIDS) வராமல் பேணும் பணி (எயிட்ஸ் நலம்)
[Aids Prevention Care Duty]

படம்: https://upload.wikimedia.org/wikipedia/commons/6/6b/Symptoms_of_AIDS.svg

ஆட்கொல்லி நோய் அல்லது உயிர்கொல்லி நோய் எனச் சுட்டப்படும் எயிட்ஸ் (AIDS - Acquired Immune Deficiency Syndrome) வராமல் பேண நாம் என்ன செய்யலாம் என்பதை விளக்குவதே இப்பக்கத்தின் நோக்கமாகும். அதாவது, எயிட்ஸ் எப்படித் தோன்றியது பற்றி அலசுவதை விட எமது உடலில் எப்படியாவது தொற்றிக் கொள்ளாமல் தடுக்கும் வழிகளை விளக்கும் பணி இதுவாகும்.

ஒருவர் உடலில் இருந்து பிறிதொருவர் உடலுக்கு எயிட்ஸ் வைரஸ் (Virus) தொற்றிவிடாமல் அரசும் பொது நிறுவனங்களும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்குவதே எமது முதற் செயற்பாடாக இருக்க வேண்டும்.

மணமாகுமுன் பாலுறவு வைத்திருப்பின்; பாலுறவில் பங்கெடுத்த ஒருவருக்கு எயிட்ஸ் வைரஸ் இருப்பின்; அந்த ஆள் பிறிதொருவரை மணமுடிக்கும் போது அடுத்த ஆளுக்கும் தொற்று ஏற்படுகிறது. இதனைத் தடுக்கக் குருதிச் சோதனை செய்த பின்னர் மணமுடிக்க முயற்சி செய்வது நலம். ஆயினும், குருதி வகையில் ஒற்றுமை (Blood Matching) சோதிக்கப்பட்டு மணமுடிக்கும் வழக்கமும் உண்டு. எனவே, நம்பிக்கையான ஒருவருக்கு ஒருவர் (ஒருவனுக்கு ஒருத்தி) மணமுடித்துப் பாலுறவைப் பேணுவதே சரியான வழி.

ஒருவருக்கு ஒருவர் என்ற எல்லையை மீறுவதும் மணமுடிக்க முன் பாலுறவை நாடுவதும் எயிட்ஸை அணைத்துக் கொள்வதற்குச் சமனாகும். இதற்குப் பாலியல் பற்றிய சரியான அணுகுமுறையைத் தெரிந்து வாழ்வதே பாதுகாப்பானது.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலைஎன்பது முன்னோர் கூறும் முடிவுரை. அவர்கள் காலத்தில் ஆண், பெண் பல அடி தொலைவில் நின்று பழகுவதும் தேவையற்ற வகையில் பழகாமல் இருப்பதும் இயல்பு. பெண் பிள்ளை பெரிய பிள்ளையானால் வீட்டுக்குள் மூடி வைத்து வளர்ப்பதும் அக்காலத்தில் இருந்தது. ஆகையால், மணமுடித்ததும் மேலுள்ள முடிவுரையைச் செயல் வடிவில் மணமானவர்கள் கற்றனர். அன்று 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற ஒழுங்கைப் பேணும் சூழலும் காணப்பட்டது. ஆனால். இன்று நிலைமை வேறு.

இன்றைய திரைப்படங்கள், மேலை நாட்டுப் பண்பாட்டு வருகை, நம்மாளுகள் வெளிநாடு சென்று திரும்புதல், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஊடகத் தொழில்நுட்பம், இவற்றோடு பாலுணர்வைத் தூண்டும் விளம்பரங்கள், இவற்றிற்குக் கைகுலுக்கும் சூழல் என்பன காளை, வாலைகளைத் தவறான வழிகளுக்கு இட்டுச் செல்கின்றன. இந்நிலையில் பாலியல் என்பது உடலில் ஏற்படும் உணர்ச்சிகளை அவ்வப்போது போக்கிக்கொள்ளும் செயற்பாடு எனத் தவறாகக் கற்பிக்கப்படுவதும் இளசுகளுக்கு வாய்ப்பாக அமைகிறது.

ஆண் பால், பெண் பால் வேற்றுமை அமைப்புகளை உடலமைப்பில் இருந்து வேறாக்கிப் பார்க்கத் தொடங்கியதும் இளசுகள் பெரிசாகிட்டினம் என்று பொருள் கொள்ளலாம். இப்பாகுபாடு தான் பாலியல் என்று கருதமுடியாது. இப்பாகுபாட்டின் படைப்பு, படைக்கப்பட்ட வேற்றுமை உடலமைவின் செயற்பாடு மற்றும் பயன்பாடு பற்றிய அறிவியலே பாலியல் அறிவாகும். அப்படியாயின் காளை, வாலை, இளசுகள், ஏன் கிழடுகளும் கூடத் தவறு செய்வதற்குப் பாலியல் மட்டும் காரணமாகாது; உளவியல் அணுகுமுறைகளும் சரியாகப் பயன்படுத்தப்படாமலும் இருக்கலாம்

ஆண், பெண் வேற்றுமைப் படைப்புகளை, அப்படைப்பின் நோக்கத்தையும் பள்ளியில் படித்திருக்கலாம். மணமுடித்த பின்னரே அவற்றைப் பயன்படுத்தச் சூழல் இடமளிக்கிறது. தவறான வழிநடத்துகைக்கு உட்படாது மணமுடிக்கும் நாள் பின்தள்ளப்படுவதால் அவரவர் உள்ளத்தில் இளமை பற்றிச் சிந்திக்க வாய்ப்புள்ளது. ஆயினும், ஒழுக்கம் என்ற வட்டத்திற்குள் இருப்பவர்கள் பாலியல் தவறு செய்வதில்லை. தவறான வழிநடத்தலுக்கு உட்பட்டவர்கள் பாலியல் தவறு செய்யத் தூண்டப்படுகிறார்கள். தவறு செய்யத் துணிந்தவர்களுக்கு எதிர்காலம் மற்றும் எயிட்ஸ எச்சரிக்கை எதுவுமே உள்ளத்தில் தோன்றுவதில்லை.

எமது சூழலில் மணமுடித்தவர்கள் கூட பாலியல் தவறு செய்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே. கணவன், மனைவி இருவருக்குமிடையே உடலமைப்பு (பலம், பலமின்மை) அதாவது உடல் ஒத்துழைப்பு, உள முரண்பாடு (விருப்பம், விருப்பமின்மை) இருக்கக்கூடும். அவ்வேளை ஆளுக்கு ஆள் இன்னொரு துணையை நாடுவது தான் தவறு. மேலும் இடவமைவு இல்லாவிட்டாலும் பிள்ளைகள் தூக்கத்தில் இருக்கிறார்கள் என நினைத்துக் கூடுவதால் ஏற்படும் ஒலியெழுப்புதல்; குழந்தைகளை அச்சமூட்டவும் இளசுகளைத் தவறு செய்யத் தூண்டவும் இடமளிக்கிறதே.

முடிவாகச் சொல்வதானால் பாலியல் வாழ்வுக்குத் தேவை, பாலியல் சுகம் பெறாதவர் அரை மனிதரென மணமுடித்தும் வைக்கிறார்கள். ஆனால், பாலியலை முறையாக, அழகாக, ஒழுக்கமுடன் பயன்படுத்த முயன்றாலே நன்மை, இந்த நிலையை எட்ட உள்ளத்தைத் தயார்ப்படுத்தும் செயலே உளவியல் அணுகுமுறை எனலாம். சிறந்த உளவியல் அணுகுமுறையால் தான் பாலியலில் உச்சக்கட்டச் சுகத்தை அடையலாம். ஏனையோருக்கு மகிழ்வின்மை, மகிழ்வின்மையால் கெட்ட வழியை நாடும் எண்ணம் ஏற்படலாம். மேலும், பாலியல் தவறு செய்வோருக்கு எயிட்ஸ் மட்டுமல்ல வேறு பல நோய்களும் ஏற்படலாம்.

பாலியல் சுகத்திற்காகச் சாவை அணைக்கலாமா? மக்களால் சூழலில் இருந்து ஒதுக்கிவைக்கும் நிலையை அடையலாமா? உங்கள் உள்ளத்தைத் தொட்டு உணர்ந்தால் சிறந்த உளவியல் அணுகுமுறையைப் பின்பற்றுங்கள். அதுவே 'எயிட்ஸ் வராமல் பேணும் பணி' என உணர்வோம்.

அறிவை வளர்ப்போம், பணத்தைப் பெருக்குவோம் (நிலையான வருவாய்), மக்கள் ஏற்கும் அகவையில் மணமுடிப்போம், மணமுடித்த பின்னர் கணவனும் மனைவியும் காதலிக்கலாம், முற்றிய காதலின் முடிவில் பழுத்த பாலியல் சுகத்தைப் பருகலாமே. ஒருவர் விருப்பை ஒருவர் ஏற்பதால் காதல் கூடும், காதலுடன் உடலும் கூடினால் மிகுதி சொல்லவும் வேண்டுமா? இவை 'ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் ஒழுங்கில் வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இல்லற வாழ்வில் நுழைந்தவர்களுக்கு இவ்வாறான உளப் பாலியல் அறிவு தேவை.

தவறான வழியில் பாலியல் சுகத்தை நாடாது இருப்போம்; ஒழுக்கம் பேணுவோம் உளப் பாலியல் அறிவில் தெளிவைப் பெறுவோம்; மகிழ்வான வாழ்க்கையை அமைப்போம்; எப்போதும் 'எயிட்ஸ் (AIDS - Acquired Immune Deficiency Syndrome)' என்ற உயிர்கொல்லி நோய் அல்லது ஆட்கொல்லி நோய் எமக்கு வராமல் அல்லது எம்மை நாடாமல் பேணுவோம். ஒவ்வொரு இணையர்களும் இவ்வாறு வாழ்தலே எயிட்ஸ் (AIDS) வராமல் பேணும் பணிக்கு வழங்கும் ஒத்துழைப்பாகும்.

பாலியல் அடிமை (Sexual Addiction) ஆகாதீர்கள்!

"உளவியல் நோக்கில் பாலியல் அடிமையாவதை எப்படித் தடுக்கலாம்?" என்ற கேள்விக்குப் பதில் தேடும் பதிவாக இதனைக் கருதிக்கொள்ளவும்.

உள்ளத்தை நாம் நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே ஆக்க முயற்சிகளில் ஈடுபடமுடிகிறது. நாம் தூங்கிவிட்டால், உள்ளம் தன் விருப்பம் (சுதந்திரமாக) போலச் செயற்படுகிறது. கனவு காண்கிறோம்; விழித்துக் கொள்கிறோம். ஆயினும், தூங்காமலே சற்றுச் சோர்வுற்றாலும் கூட உள்ளம் தன் விருப்பம் (சுதந்திரமாக) போலச் செயற்படும். எதையெதையோ நினைப்போம்; திடுக்கிட்டு விழிப்போம். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த உண்மையே!


உணர்வற்ற உள்ளம்(Unconscious Mind); உணர்வு உள்ளம்(Conscious Mind) செயற்படாத வேளை தனது முழுப்பலத்தையும் காட்டத் தொடங்கிவிடும். அதனால் தான் கனவுகள், கற்பனைகள், பாலியல் (Sex) இச்சைகள் தோன்ற வாய்ப்பு ஏற்படுகிறது.

உணர்வற்ற உள்ள(Unconscious Mind)த்தை Carl Jung (Sigmund Freud இன் மாணவர்) அவர்கள் Id, Libido என இரண்டாக வகுத்து Id அறிவு சார்ந்த செயலுக்கும் Libido பாலியல் (Sex) இச்சைகள் சார்ந்த செயலுக்கும் காரணம் எனத் தெரிவித்தார். ஆயினும், பாலியல் (Sex)சார்ந்த இச்சைச் செயலை வேறு பக்கங்களில் (கதை எழுத, கவிதை எழுத எனப் படைப்பாக்க முயற்சிகளில்) திருப்பிவிடுவதனால் சிறந்த படைப்பாளியாக முடியுமென்கிறார். பாலியல் அடிமை(Sexual Addiction)யாகாமல் Carl Jung அவர்களின் வழிகாட்டலின் படி உள்ளத்தை ஆக்க வழிகளில் திருப்பிச் சாதனை படைக்கலாம் வாருங்கள்.

பாலியல் உணர்வு (Sex Feelings) பெண்ணுக்குப் பூப்படைந்த பின்னும் ஆணுக்கு மீசை அரும்பிய பின்னும் ஏற்படும். அதாவது, 11-13 அகவைக் காலத்தில் பாலியல் ஓமோன்கள்(Sexual Hormones) சுரக்கத் தொடங்குவதாலேயே இந்நிகழ்வுகள் ஏற்படுகின்றன. படிப்பு, உழைப்பு, மக்களாய(சமூக) ஒழுக்கம் என்பவற்றைக் கருத்திற் கொண்டே நம்மாளுகள் பாலியல் பக்கம் நாட்டம் குறைவு எனலாம். அதாவது, பாலியல் இச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்தி ஆக்க வழிகளில் உள்ளத்தைப் பயன்படுத்துவதனாலேயே நாம் ஒழுக்கசீலர்களாகவும் வெற்றியாளர்களாகவும் வாழ்கின்றோம். இல்லையேல் மனிதனும் மிருகமாகலாம். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த உண்மையே!

நேரத்தைத் திட்டமிட்டுச் செலவழிக்க இயலாதவர்கள், பொழுதுபோக்கை விரும்பாதவர்கள், படிப்பு, உழைப்பு எதிலும் அக்கறை இல்லாத உள்ளங்களில் தான் பாலியல் இச்சைச் செயல்கள் வலுவூன்ற இடமுண்டு. இவ்வாறானவர்கள் பாலியல் சார்ந்த நூல்களைப் படிப்பர்; திரைப்படங்களைப் பார்ப்பர்; இணையத் தளங்களைப் பார்ப்பர்; இல்லையேல் ஆண்-பெண் பால் வேறுபாட்டை ஆய்வு செய்து அரட்டை அடிப்பர். இதனால் தான் பாருங்கோ, இவர்கள் சுயஇன்ப (Masturbation) முயற்சிகளிலும் தகாத உறவுகளில் ஈடுபடும் முயற்சிகளிலும் இறங்குகின்றனர். இவ்வாறானவர்களுக்குப் பாலியல் சார்ந்த இணையத் தளங்களே பின்னூட்டியாக இருப்பதும் உங்களுக்குத் தெரிந்த உண்மையே! இவை காலப்போக்கில் வழக்கப்பட்டுவிட; இவையின்றி வாழமுடியாத நிலையே தோன்றும். இந்நிலையையே பாலியல் அடிமை (Sexual Addiction) என்கிறார்கள்.

பாலியல் சார்ந்த நூல்கள், வணிக ஏடுகள், பாலியல் சார்ந்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாலியல் சார்ந்த இணையத் தளங்கள் போன்ற எல்லாமே நம்மாளுகளின் பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கூட்டிப் பெருக்கிப் பாலியல் சார்ந்த தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன. இவற்றின் பக்கம் நாடியோர், எப்படி இவற்றிற்கு அடிமையாகாமல் மீளமுடியும்? நல்ல நல்ல சுயமுன்னேற்ற நூல்களைப் படிக்கலாம்; கதை, கவிதை என ஏதாவது எழுதி நல்ல படைப்புகளை ஆக்கி வெளியிடலாம்; இன்றைய திரைக் கலைஞர்களான வடிவேலு, விவேக், சந்தானம் போன்றோரின் நகைச்சுவைக் கட்டங்களைப் பார்க்கலாம்; இவ்வாறு பாலியல் எண்ணங்களைத் தூண்டாத, உள்ளத்தில் நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் செயல்களில் இறங்குவது நலமே! அதாவது, Carl Jung அவர்களின் வழிகாட்டலின் படி உள்ளத்தை ஆக்க வழிகளில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக:
பாலியல் எண்ணம் தோன்றும் போது
உள்ளத்தில் நீ வருவாய்
ஆனால்,
உன்னுடன் AIDS உம் வருவதை
எண்ணிப்பார்க்கையிலே
எனக்கோ
வயிற்றாலை அடிக்கிறதே!
என்றவாறு கதைகளைப் பாக்களைப் புனையலாமே!

எதிர்பாராத வழியில் பாலியல் அடிமை (Sexual Addiction) ஆகிவிட்டீர்  என உணர்ந்துகொண்டால், பாலியல் மருத்துவரை(Sexologist) அல்லது உளநல மதியுரைஞரை(Counsellor) ஐ நாடலாம். ஆயினும், இணையத்தளங்களை நம்பி மதியுரை கேட்கச் செல்லாதீர்கள். பெரும்பாலும் அத்தளங்களில் பாலியல் அடிமை (Sexual Addiction) ஆவதிலிருந்து விடுதலை பெற்றுத்தருவதாய்க் கூறி, பாலியல் உணர்வுகளைத் (Sex Feelings) தூண்டும் படங்களை இட்டிருப்பர். இத்தளங்கள் பாலியல் உணர்வுகளைத் (Sex Feelings) தூண்டவும் வழிகாட்டுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, பாலியல் மருத்துவரை(Sexologist) அல்லது உளநல மதியுரைஞரை(Counsellor) நேரில் சந்தித்து பாலியல் அடிமை (Sexual Addiction) ஆவதிலிருந்து விடுதலை பெறுவதையே வரவேற்கிறேன்.

நான் சந்தித்த மதியுரைநாடிகள் பலரது கேள்விகள், சுயஇன்பம் (Masturbation) பற்றியதாகவே இருந்தது. தோன்றும் பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கட்டுப்படுத்த இயலாத போது, குறிப்பிட்ட ஆள்கள் சுயஇன்பத்தை (Masturbation) நாடுவதாகத் தெரிவித்திருந்தனர். பாலுறுப்புகளைச் செயற்கை முறைகளில் தூண்டி மகிழ்வடையும் இச்செயலை ஆண், பெண் இருபாலாருமே மேற்கொள்கின்றனர். இது உடலளவில் மகிழ்ச்சியடைய உதவாமல், உள்ளத்தில் மகிழ்வடைவதாக எண்ணி எண்ணி மகிழ்வடைய உதவலாம். சுயஇன்பம் (Masturbation) என்பது உடனடிப் பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கட்டுப்படுத்தினாலும் பின்விளைவாகப் பெரும் பாதிப்புகளை அள்ளித்தரும்.

நம்மாளுகள் ஒரு தடவை சுயஇன்பம் (Masturbation) மேற்கொண்டால் 200கிலோ கலோரிக்கு மேல் உடலிலுள்ள சக்தியைச் செலவு செய்கின்றனர். இதனை அடிக்கடி மேற்கொண்டு வந்தால் சக்தியிழப்புக் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்படலாம். ஆயினும், உள்ளத்தோடு தொடர்புபட்ட செயலாகையால் உள(மன) நோய் ஏற்படவாய்ப்பு உண்டு. மேலும், இயற்கை உறுப்புகளைச் செயற்கை வழிகளில் கையாள்வதால் பாலியல் குறைபாட்டு நோய்களும் வருமே! சுயஇன்பத்தால் (Masturbation) ஏற்படும் பின்விளைவை எண்ணியாவது இப்பக்கம் தலையைக் காட்டாமல் இருப்பது நலமே!

மணமாகாத இருவர் கூடுவதையும் மணமுடித்தவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற எல்லையை மீறிப் பலருடன் கூடுவதையும் தகாத பாலியல் உறவென்று கூறிக்கொள்ள முடியும். இதனால் முறையற்ற வழியில் பெண்கள் கருத்தரிக்கிறார்கள். இச்செயலால் ஒருவர் உடலிலுள்ள தொற்றுக்கிருமி மாற்றார் உடலுக்குள் செல்லவும் வாய்ப்புண்டு. இவ்வாறு தான் AIDS நோயும் பரவுகின்றது. இச்செயல் பெரும்பாலும் களவாக இடம்பெறுவதால் மக்களாயம்(சமூகம்) கண்டுபிடித்தால் குறிப்பிட்டவர்களை ஒதுக்கியே வைத்துவிடும்.

மேலும், தகாத பாலியல் உறவால் பெண்கள் கருவுறலாம். மக்களாய(சமூக)த்திற்கு அஞ்சி பாட்டி மருத்துவமோ, மருந்துக் கடைகளில் வேண்டிய மருந்தோ பாவித்து வீட்டிலேயே கருக்கலைப்புச் செய்து சாகவேண்டி வரலாம். பெண் வயிற்றில் குழந்தை கருவுற்று 90 நாட்களுக்குப் பிந்திக் கருக்கலைப்புச் செய்தும் சாவைச் சந்திக்கின்றனர். இச்செயல்களினால் பெண்ணுக்கு அதிக செந்நீர்(குருதி) வெளியேறுவதனாலேயே சாவு ஏற்படுகிறதாம்.

கருக்கலைப்பு என்பது மருத்துவரின் வழிகாட்டலின் படியே மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கு வரவில்லை என்றறிந்ததும் மகப்பேற்று மருத்துவரை நாடுவது நலமே! தகாத பாலியல் உறவால் ஏற்படும் பின்விளைவை எண்ணியாவது இப்பக்கம் தலையைக் காட்டாமல் இருப்பது நலமே!

பாலியல் என்பது தலைமுறைகளைத் தோற்றுவிக்கவும் ஊடலின் பின் கூடல் என்றவாறு கணவனும் மனைவியும் இணைந்து மகிழ்வான, நம்பிக்கையான, அன்பான குடும்ப வாழ்வை அமைக்கவும் உதவும் கருவியாகவே இருக்கவேண்டும். எனவே ஒழுக்கம் பேணுவதால், உள்ளத்தை ஆக்கவழியில்   ஈடுபடுத்துவதால், பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கட்டுப்படுத்துவதால் பாலியல் அடிமை (Sexual Addiction) ஆகாமல் குடும்பத்தில் நல்லுறவு ஓங்க நீண்ட ஆயுளுடன் வாழ முடியுமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!