Translate Tamil to any languages.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

பிறர் சொல்லைக் கேட்க மாட்டார்களே!


கடன் கடனாக வேண்டும் உறவுகளே!
கடைசியிலே
தூக்குக் கயிற்றில தொங்குவீர்!
கடனை நாடாமல் தேடாமல்
கைக்கெட்டியதைக் கையாள முற்பட்டால்
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கலாம் வா!
கடன்பட்டவர் சாவின் பின்னே தான்
கடன்கொடுத்தவனே
தன் நிலையை எண்ணிப் பார்க்கிறான்!
அன்பான கடன்கொடுப்போரே!
மாற்றாருக்குக் கடன்கொடுப்பதை விட
சேமிப்பகத்தில் வைப்பிலிட்டால்
வட்டி குறைந்தாலும் முதலுக்குச் சேதமில்லையே!
ஆனால், ஒரு உண்மை
கடன்கொடுத்தோரும் கடன் பெற்றோரும்
எவர் புத்திமதியும் கேட்டதாக
தகவல் ஏதும் கிடைக்கவில்லையே!


நல்ல ஓட்டுநர் தேவை!ஓட்டுநர் விழிப்போடு ஓட்டினால்
பயணிகள் மகிழ்வோடு பயணிக்கலாம்.
ஓட்டுநர் தூக்கத்தில் ஓட்டினால்
பயணிகள் துயரத்தோடு பயணிக்கலாம்.
ஓட்டுநர் ஓட்டும் போது தூங்கிவிட்டால்
பயணிகள் பிணமாகப் பயணிக்கலாம்.
அருச்சுனனுக்கு ஓட்டுநராக
கிருஸ்ணர் வந்தமைந்தாற் போல
எமக்கும் எமது பயணத்தில்
நல்ல ஓட்டுநர் வந்தமையணுமே!
நாலு ஆள் தேவை

அன்பைக் கொடுத்தால்
அன்பைப் பெறலாம்!
மதிப்புக் கொடுத்தால்
மதிப்புக் கிடைக்கும்!
நம்பிக்கை வைத்தால்
நம்பிக்கை வைக்க வரலாம்!
உதவி செய்தால் உதவி கிட்டும்!
பணம் கொடுத்தால்
பொருளோ பணியோ கிட்டும்!
துயரைச் சொன்னால் கூட
அன்பளிப்பாக மதியுரையும் கிட்டும்!
எண்ணிப் பார்க்கிறேள்...
ஏதோ ஒன்றைக் கொடுத்துத் தான்
ஏதோ ஒன்றைப் பெற வேண்டி இருக்கிறதே!
அப்படி இருக்கையில்
கடவுளை நினைக்காமல் கடவுளும் வரார்
எவருக்கும் உதவாமல் எவரும் உதவார்
என்றிரிருக்கையில்
எதையோ கொடுத்து
எதையோ பெற முயன்றால் தானே
வாழ்க்கை வண்டியை ஓட்ட முடிகிறதே!
நான் செத்தால் கூட
என்னுடைய பிணத்தைக் காவிச் செல்ல
தோள்கொடுக்க நாலு ஆள் தேவையென
நானும் அன்போடு ஆள்களை அணைக்க
பணிவோடு இசைந்து போவதை மறவேன்!
நான் கண்ட சிலர்!

ஒவ்வொருவர்
உள்ளங்களையும் அறியாமலே
அவரவர்
அடுத்தவரைத் தங்கள் காலடியில்
வீழ்த்த எண்ணி தோற்றுப் போகிறார்களே!
ஒவ்வொருவர்
எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும்
அறிய முடியாமலே
அவரவர்
அடுத்தவரை வெற்றி கொள்ள முடியாமலே
தாமே வீழ்ந்து விடுகின்றனரே!
தன்னைத் தானே
வளப்படுத்தி, பதப்படுத்தி முயன்ற
எல்லோருமே
தானும் வீழ்ந்து விடாமலே
எவரையும் வீழ்த்தி விடாமலே
வெற்றி நடை போடுகின்றனரே!
எவரையாவது வீழ்த்தி விட்டு
எப்படியாவது
அடுத்தவரைத் தள்ளி விட்டு
வெல்ல முயன்ற பலர்
தோற்றுத் தலைக்குனிவோடு போகின்றனரே!

சனி, 15 செப்டம்பர், 2018

அலைகள் ஓய்வதில்லை!


எழுதுகோலும் எழுதுதாளும்
என் கையில் சிக்கிவிட்டால்
என்னென்னமோ எழுத வருகிறதே!
எழுதிக்கொண்டே இருக்கும் வேளை
இல்லாள் கண்டுவிட்டால்
"அரைச் சதம் வருவாய் தராத எழுத்தால
உலகை உருட்டலாமென எழுதும்
முட்டாளைக் கட்டிப்போட்டு அழுகிறேனே!" என
ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிடுவாள்!
அடிக்கடி பழையதை மீட்டும்
என் உள்ளத்து அலைகளும் கூட
எழுதியதை எழுதி முடிக்காமல்
கரையைத் தேடும் அலைகளைப் போல
ஒரு போதும் ஓய்ந்ததில்லை!
பள்ளிக்குப் போனோம் வந்தோம்
படிப்புக்கு முழுக்குப் போட்டது
தொழில் தேடி அலைந்தது
"நாலு காசு உழைக்கத் தெரியாத
உனக்கெல்லாம் காதல் அரும்புதோ?" என
காதலிக்க மறுத்த கண்ணகிகள்
பேரனைப் போலப் பண்டிதராகாமல்
எழுதிக் கிழித்து
என்ன பண்ணப் போறாரென
ஒதுக்கி வைக்கும் உறவுகள்
எழுத்து உனக்குக் கஞ்சி ஊற்றுமாவென
வேடிக்கை பார்க்கும் நட்புகள்
உவருடைய எழுத்தைப் படித்து
ஊரு, நகரு, நாடு, உலகம்
திருந்துவதற்கு வாய்ப்பில்லையென
நழுவிச் செல்லும் சுற்றத்தார்
என்றவாறு தான்
எண்ணிச் சொல்ல முடியாதளவு
நினைவுகள் தான் உள்ளத்தில் உருள
அலைகள் ஓய்வதில்லைப் போல
எழுதுகோலும் எழுதுதாளும்
என் கையில் சிக்கிவிட்டால்
என்னென்னமோ எழுத வருகிறதே!
எழுதுவதெல்லாம் - அந்த
பாவரசர் கண்ணதாசன்
பட்டறிந்ததைப் பகிர்ந்தது போல
நானும் கெட்டுத் தெளிந்ததை
பகிரலாமென ஓயாமல் எழுதுகிறேன்!
என் எழுத்தை எடை போடும்
வாசகரின் வாக்கில் தான்
உலகம்
என்னை எடை போடப் போகிறதே!


ஓயாத அலைகள்

உள்ளத்தில் குந்தி இருக்கும்
எண்ண அலைகள்
அடிக்கடி மீட்டுப் பார்க்கத் தூண்டுமே!
மீட்டுப் பார்க்கத் தூண்டிய
எண்ணங்களைப் பாவண்ணங்களாக
எழுத முயன்று கொண்டிருப்பேன்!
நான் எழுதும் வேளை
அத்தான் கண்டார் என்றால்
எழுது தாள் கிழிந்து விடாமல்
எழுது கோல் தேய்ந்து விடாமல்
ஓயாத எண்ண அலைகளை
அழகாக எழுதிக் கொள்வதால்
உள்ளம் ஆறுமென ஆதரவு தருவாரே!
வறுமையில் வாடிய நினைவு
அரிசி விற்றுப் புளி விற்று
வயிறு கழுவிப் பள்ளிக்குப் போனது
வயிறு கடிக்கும் ஏழை ஆயினும்
கடவுள் என்னை அழகியாகப் படைத்ததால்
என்னைப் பின் தொடர்ந்த பிஞ்சுகள்
முயன்றளவு முடிந்தளவு படித்ததை
முன்வைத்து நேர்முகத் தேர்வுக்குச் சென்றால்
பாலியல் பார்வையோடு முதலாளி நோக்க
வீடு வந்து சேர்ந்த நினைவுகள்
திருமணப் பேச்சு மேடையிலே
வீடு, காணி, நகை நட்டு போதாதென
மணமகனை விற்க இயலாதென
ஓடி ஒழிந்த மணமகன் வீட்டார்
நட்போடு பழகிய ஆண்களைக் காட்டி
அவன், இவன், உவன், எவன் என்றறியாது
கூடிப் போன கொண்டோடி இவளென்றோர்
பெண் என்றால் இழிவாகப் பார்க்கும்
குமுகாயத்தில் (சமூகத்தில்) மாற்றம் காண எண்ணியவை
இன்னும் இன்னும் நிறையவே
ஓயாத அலைகளாக உள்ளத்தில் உருளும்
எண்ணங்களை 'பா' நடையில
எழுதிப் பார்க்க முயன்று பார்ப்பேன்!
எப்பாலும் ஒளிந்து இருந்து பார்த்த
அத்தான் வந்து முதுகில தட்டிப்போட்டு
நீயுமொரு பாவரசியாக விரும்புகிறேனென
கன்னம் சிவக்க இறுக்கிக் கொஞ்சுவாரே!
அத்தானின் ஊக்கமளித்தல் தான்
கண்டதும் கேட்டதும் பலதும் பத்துமென
ஓய்வு நேரங்களில் எழுதி அனுப்பியதால்
உள்ளூர் ஊடகங்களில் சில வெளியாகின!
எழுதுகோல் ஏந்திய பின்
எனது எண்ணங்களைத் தொகுக்க இயலாதே
என் எழுத்துக்குச் சான்று பகிரும்
வாசகர் எதிர்பார்ப்புகளை உள்வாங்கியே
எழுதிக்கொண்டிருப்பதே என் பணி!

சனி, 8 செப்டம்பர், 2018

உலகெங்கும் தமிழ் வாழ வேணும்!


இசையும் காற்றும் போல - அழகான
எழுத்தும் பொருளுள்ள சொல்லும் வேணும்
இசை பாடும் காற்றிலே - நாமும்
எமது எண்ணங்களை வெளியிட வேணும்
தோலும் தசையுமாக - நாமும்
மொழியோடு இணைந்தே வாழ வேணும்
எதுகையும் மோனையும்
முட்டி மோதி விளையாட வேணும்
உவமையும் ஒப்பீடும்
அணி அணியாக விளையாட வேணும்
தாய்மொழியாம் நற்றமிழால்
எண்ணும் எழுத்தும் சொல்ல வேணும்
சுற்றமும் சூழ்ந்தோரும்
நன்றே தமிழைப் படிக்க வேணும்
தமிழைப் படித்த பின்னே
உலகெங்கும் தமிழ் வாழப் பேண வேணும்!
தமிழைப் பரப்பிப் பேண
உலகத்தார் தமிழைப் பயில வேணும்
உலகெங்கும் தமிழ்
எட்டுத் திக்கும் பட்டுத் தெறிக்க வேணும்
தமிழ் வளம் மின்ன எழுத வேணும்
எழுத எழுத இலக்கியம் மலர வேணும்
தமிழ் மணம் வீசப் பேச வேணும்
பேசப் பேச இயற்றமிழ் முழங்க வேணும்
இசையால் கட்டுண்டு விழப் பாட வேணும்
பாடப் பாட இசைத்தமிழ் ஒலிக்க வேணும்
அழுகையும் கண்ணீரும் வர நடிக்க வேணும்
நடிக்க நடிக்க நாடகத்தமிழ் பார்க்க வேணும்
இயல், இசை, நாடகம் இயல்பாய் பரவ வேணும்
உலகெங்கும் தமிழ் வாழப் பேண வேணும்!

பெண்கள் மீதான வன்முறைக்குத் தீர்வேது?ஆண்களின் போதைப் பொருள் பாவனையா
பெண்களின் ஆடைக்குறைப்பு அணிவகுப்பா
திரைப்படங்களில் வரும் காட்சியமைப்பா
பெண்கள் மீதான வன்முறைக்கு
தூண்டி ஆகிறது என்பதே கேள்வி!
ஒரு சாரார் உரிமையில்
மறுசாரார் தலையிட்டால்
ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் பேசலாம்...
பண்பாட்டுச் சீரழிவுக்கும்
பாதுகாப்பற்ற சூழலுக்கும்
என்ன தான் தீர்வாக அமையும்?
காட்டியதால் தான் பார்த்தனர் - அது
இயல்பு!
காட்டாமலே பார்க்கத் துணிந்தனர் - அது
வன்முறை!
இயல்பு கடந்த நிலை வந்தால்
வன்முறையாகாது - அது
உளநோயாகத் தான் மாறலாம்! - அப்ப
வன்முறை கூட உளநோயின் அறிகுறியோ?
பெண்கள் மீதான வன்முறைக்கு
வெறுமனே
பெண்களின் ஆடைக்குறைப்பென்றோ
ஆண்களின் தகாத செயலன்றோ
பட்டிமன்றம் நடாத்திப் பயனில்லை!
இயல்பு கடந்த நிலைக்கும்
வன்முறை முயற்சிக்கும்
இடையே இருக்கக்கூடிய
உளப்பாங்கினை அலசினால் தான்
பயனேதும் கிடைக்கும் என்பேன்!
மேலைநாட்டு நாட்டங்களைத் தவிர்த்து
தமிழர் பண்பாட்டு ஆடைகளை
பெண்கள் அணிவதோடு
எந்தப் பெண்ணையும் - தன்
தாயைப் போன்று மதிக்காமல்
பழி தீர்க்கும் நோக்கில் கெடுப்பதை
ஆண்கள் நிறுத்துவதோடு
பெண்கள் மீதான வன்முறைக்கு
முற்றுப்புள்ளி வைக்க இயலாதே!
முற்றுப்புள்ளி வைக்க விரும்பின்
உளப்பாங்கினை அலசினால் போதாது
தமிழ்மொழி, பண்பாடு, ஒழுக்கம் என
எங்கள் சூழலில் பேணப்படுகிறதா என
ஆய்வுக்கு உட்படுத்தினால் தீர்வு கிட்டுமே!
ஒழுக்கமான, அமைதியான சூழலில்
வன்முறையோ
இயல்பு கடந்த நிலையோ
காணக் கிடையாத போதும்
இயல்பு வாழ்க்கை அமைய வேண்டுமே!