Translate Tamil to any languages.

புதன், 30 நவம்பர், 2016

மின்நூல் (eBooks) வெளியீடுகள் மிகவும் தேவையா?

அச்சடித்த (Printed) வெளியீடுகளை அல்லது மின் (Electronic) வெளியீடுகளை அதாவது மின்நூல்களை வெளியிடுவதன் நோக்கம் என்ன? ஆவணப்படுத்திப் பகிருவதே இலக்கு என்பீர்கள்! எப்போதாவது வெளிவந்தவற்றைத் தொகுத்து அச்சடித்த (Printed) அல்லது மின் நூல்களாக (eBooks) வெளியிடுவதால் வாசகர் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் படிக்க முடிகிறது. அவ்வாறு படிக்கின்ற போது நூலாசிரியரின் அறிவூட்டலை வாசகர் நிறைவோடு பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதனடிப்படையில் அறிஞர்கள் தமது அறிவூட்டலை வாசகர் பக்கம் கொண்டு செல்லவே இவ்வாறான வெளியீடுகளைச் செய்கின்றனர்.

கடந்த காலங்களில் அச்சடித்த (Printed) நூல்கள் முதன்மை பெற்றிருந்தாலும் இன்றைய காலங்களில் (1995 இன் பின்) மின் நூல்கள் (eBooks) புழக்கத்திற்கு வந்துவிட்டன. அச்சடித்த (Printed) நூல்களை எங்கும் வைத்திருந்து பேணலாம். ஆயினும் மின் நூல்களை (eBooks) அதற்கான சேமிப்பகங்களிலேயே வைத்துப் பேணமுடிகிறது. எப்படி இருப்பினும் இருவகை நூல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அவற்றிற்கான வாசகர்களும் பயன்பெறுவதைக் காணலாம். ஆயினும் இன்றைய ஆள்களிடையே வாசிப்புப் பழக்கம் சற்றுக் குறைந்து கொண்டே செல்கிறது. அதாவது, அச்சு ஊடக வாசிப்புப் பழக்கம் குறைந்தாலும் மின் ஊடக வாசிப்புப் பழக்கமும் இருப்பதை நினைவிற் கொள்வோம்.

மின் நூல்கள் (eBooks) வலை வழியே தான் அதிகம் உலாவுகின்றன. வலை வழியே என்றால் நடைபேசிகள், கணினிகள் (Smart Phone, Tab Phone, Mini Laptop, Laptop, PC) எனப் பல கருவிகளின் துணையுடன் பார்வையிட முடிவதால் வாசகர் நாட்டம் கொள்கின்றனர். வலை வழியே அன்பளிப்பு (இலவச) வெளியீடுகள் அதிகம் என்பதால் வலை வழியே வாசிப்புப் பழக்கம் கூடுகிறது எனலாம். இதனடிப்படையில் மின்நூல் (eBooks) வெளியீடுகள் முதன்மை பெறுகின்றன.

தமிழறிஞர்களே! உங்கள் அறிவூட்டலை மின் நூல்கள் (eBooks) வழியே வாசகர்களுக்கு வழங்க முன்வந்தால், உலகெங்கும் நற்றமிழைப் பேணமுடியும். உங்கள் முயற்சியால் தாங்கள் பெற்ற அறிவை (யாம் பெற்ற கல்வி இவ்வையகமும் பெற) உலகெங்கும் பரப்பிப் பேண முடியுமே! எனவே, மின்நூல் (eBooks) வெளியீடுகள் மிகவும் தேவை என்பதை உணருவோம். ஆகையால் ஒவ்வொரு தமிழறிஞரும் தானாகவே (சுயமாகமே) மின்நூல்களை (eBooks) ஆக்கி வெளியிடக் கற்றுக்கொண்டால் நன்மை அதிகம் என்பேன். இதற்கென இரண்டு படைப்புகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

1. "மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்" என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவைக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும். அதன் பின் ஒளிஒலி (Video) இணைப்பைப் பார்க்கையில் மின்நூல் (eBooks) ஆக்கம் பற்றிய தெளிவை அதிகம் பெறலாம்.

2. மேற்காணும் எனது பதிவைப் படித்த பின் கீழுள்ள ஒளிஒலி (Video) இணைப்பினூடாக அறிஞர் சிறிநீவாசன் கற்பிற்பதைப் பொறுமையுடன் பார்த்துக் கேட்டுப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். "மின்னூல் உருவாக்குவது எப்படி?" என்ற தலைப்பில் அறிஞர் வைசாலி செல்வம் அவர்கள் தனது வலைப்பூவில் (http://ksrcasw.blogspot.com/2016/11/blog-post_29.html) பகிர்ந்த ஒளிஒலி (Video) இணைப்பையே நானும் இங்கே பகிருகிறேன்.தமிழ் மொழிமூல வெளியீடுகள் பல ஊடகங்களிலும் உலாவுகின்றன. அதிலும், வலை வழியே தமிழ் மொழிமூல வெளியீடுகள் அதிகம். இவற்றிலும் பிறமொழிக் கலப்பற்ற நற்றமிழைப் பேணுமாறு உலகெங்கும் பல அறிஞர்கள் முழங்குவதைக் காணலாம். அவர்களது முழக்கங்களை மின்நூலாக்கி வெளியீட யாழ்பாவாணன் வெளியீட்டகம் என்றும் உதவும். அதேவேளை நம்மாளுங்க பக்கத்தில் வாசிப்புப் பழக்கம் மேலோங்க முயற்சிகளை மேற்கொள்வோம். இதனடிப்படையில் எமது " மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்" என்ற https://seebooks4u.blogspot.com/ வலைப்பூ ஊடாக இப்பணிகளைத் தொடரவுள்ளோம்.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

எனது கிறுக்கல்கள் சில...

நான் கருத்துப் பகிர்ந்த வேளை, என் உள்ளத்தைச் சுட்ட செய்தீயை முதலில் தருகின்றேன்.

தெருப் பள்ளியில நடந்த
ஆசிரியர் - மாணவர் கருத்து மோதலில்...
"மக்கள் சாவுக்குக் காரணம்
யாரென்று தெரியுமா?" என ஆசிரியர்
கேள்வியைத் தொடக்கி விட...
"வசூல் ராஜா MBBS, வசூல் ராணி MBBS" என
மாணவர்களும் பதில்களை இறுக்கி விட...
"இவங்க எல்லாம் எங்க இருக்காங்க?" என ஆசிரியர்
கேள்வியை மீள முடுக்கி விட...
"திரைப்படத்தில கமல் அப்படி நடிச்சாரு!,
ஜோக்காளி வலைப்பூவில
சமீனா அன்ட் 'சபீனா' பதிவில பாரும்
மாணவர்களும் பதில்களை மீள முடுக்கினரே!
இனி நம்ம எண்ணங்களில்...
போலி மருத்துவர்களால் பாதிக்கப்படுவது
நம்ம உறவுகளே என்றுணருவோமே!
மருத்துவர் பதிவு இலக்கம் உள்ள
அல்லது
அரசு அனுமதித்த அடையாளம் கொண்ட
மருத்துவரை நாடினால் நலம் அடைவோமே!
உடலில் நோய்களின் வருகை தென்பட்டால்
உடனடியாக மருத்துவரை நாடுவதே
நெடுநாள் நலமாக வாழ வழியென்பேன்!

நான் கருத்துப் பகிர்ந்த வேளை, இரண்டு வலைப்பூவில் பகிர்ந்த கருத்துகளைப் பகிருகிறேன்.

நன்மை செய்யுங்கள் நன்மை கிட்டும்
பயன்தரும் முன் முயற்சி செய்தோரை
பயன்பெறும் பயனர் ஒருபோதும் மறவார்
மறவாது புதிய முகங்களும் முயன்றால்
இறந்தும் வாழ்வோம் நன்மை செய்தமைக்கே!

சாதிக்காகச் சண்டை வேண்டாம் - ஆனாலும்
பாரதியார் சொல்லிவைச்ச மாதிரி - சாதிகள்
இரண்டு உண்டு என்று அறிவோம் - அவை
ஆண் சாதி, பெண் சாதி என்போம் - இவை
சமஉரிமை பெற்றால் சண்டைகள் வராதாம்!

ஊர்திகளில் பயணித்த வேளை படித்த பல செய்தீக்களில் இரண்டைப் பகிருகிறேன்.

ஊர்தி ஓட்டுநர் விழிப்பாக ஓடும் வரை
பயணிகள் நன்றே தூங்கிப் பயணிக்கலாம்
ஊர்தி ஓட்டுநர் ஓடும் வேளை தூங்கினால்
பயணிகள் பயணிக்காது தூங்கி விடலாம்
"நேரும் விபத்துகளால்..."

நடத்துநரின் கையில் பணத் தாளை நீட்ட
பற்றுச் சீட்டைத் தந்தவர் மிச்சக் காசிற்கு
கையில ஐந்து இனிப்பை நீட்டியே நகர்ந்தார்!
பயணியும் சற்றுத் தள்ளி இறங்கிச் செல்ல
நடத்துநரோ மேலதீகத் தூரத்திற்குப் பணம் கேட்க
பயணியும் ஐந்து இனிப்பை நீட்டியே நகர்ந்தார்!
"புதிய கொடுக்கல் - வேண்டல்"

வெள்ளி, 25 நவம்பர், 2016

முயற்சி + பயிற்சி = வெற்றி

வாசிப்புப் போட்டி - 2016


 https://seebooks4u.blogspot.com/2016/10/2016.html


காற்றுள்ள போதே
தூற்றிக் கொள் என்பதும்
கைக்கெட்டியதைக் கையாளு என்பதும்
வெற்றி நம்மை நெருங்குவதற்கே!
முயற்சி உள்ளவருக்கு
பின்வாங்கும் எண்ணம் இருக்காதே!
பயிற்சி உள்ளவருக்கு
முன்னேற இலகுவாய் இருக்குமே!
'முடியாது' என்பது - நம்மாளுங்க
எண்ணங்களில் தோன்றவே கூடாது!
தன்னம்பிக்கை இருந்தால்
தாழ்வு உளப்(மனப்) பாங்கு எதற்கு?
"என்னால் முடியும்" என்று
களம் இறங்கிவிட்டால் - பின்
வெற்றிக் கனியைக் கையில் ஏந்தலாமே!

புதன், 23 நவம்பர், 2016

நான் பணத்தை எங்கே தேடுவேன்

நல்ல உணவுக்குப் பணம் வேண்டும்
நல்ல உடைக்குப் பணம் வேண்டும்
நல்ல உறைவிடத்திற்குப் பணம் வேண்டும்
நல்ல உறவுகளுக்குப் பணம் வேண்டும்
நல்ல வாழ்வமையப் பணம் வேண்டும்
நல்ல உழைப்பானாலும் பணம் பறக்கிறதே
நான் பணத்தை எங்கே தேடுவேன்!

அரசும் பொருட்களின் விலையை ஏற்றுதே
அடியேனின் கூலியைக் கூட்ட மறுக்குதே
எடுக்கிற கூலியோ உண்டுறங்கப் பத்தாதே
உடுக்கிற உடுப்பு வேண்டப் போதாதே
எப்பவும் சேமிப்பில பணம் இருக்காதே
இப்படிப் போனால் எவளென்னை விரும்புவாள்
நான் பணத்தை எங்கே தேடுவேன்!

சொந்தப் பணமும் நிற்காமல் ஓடுதாம்
அந்தப் பெண்ணும் என்னை நாடாளாம்
இந்தத் துயருக்கும் கைகெட்டாப் பணமாம்
வந்த பணமும் என்னோடு ஒட்டாதாம்
எந்தப் பெண்ணும் என்னைக் கட்டாளாம்
இந்த நிலைக்கும் பணமில்லா நானாம்!
நான் பணத்தை எங்கே தேடுவேன்!

இப்பவும் உழைத்துக் கொண்டே இருக்கிறன்
எப்பவும் என்னிடம் பணம் இருக்காதாம்
அப்பனும் நாலு பணம் உழைக்கட்டாம்
அப்பதான் எவளாச்சும் என்னைக் கட்டுவாளாம்
எப்பதான் எவளாவது உன்னைக் கட்டுவாள்
அப்பதான் சாவேனென அம்மாவும் அழுகிறாள்
எப்பனும் ஊருக்குள்ள உலாவ முடியல்ல
நான் பணத்தை எங்கே தேடுவேன்!

நான் பணத்தை எங்கே தேடுவேன்!
நான் குணத்தை விற்றும் தேடுகிறேன்
நான் பணத்தை எங்கேயும் கண்டிலேன்
நான் மணந்து பார்த்தும் தேடுகிறேன்
நான் பணத்தை எங்கேயும் கண்டிலேன்
நான் பணத்தை எங்கே தேடுவேன்!எனது எண்ணங்கள் இப்படி என்றால்,
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின்
எண்ணங்கள் எப்படி இருக்கும் என்பதை
கொஞ்சம் பார்த்துப் படித்துப் பாருங்களேன்.இப்பாடலை 'பணம்' படத்திற்காக என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இயற்றிப் பாடியுள்ளார்.

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?

கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன் பணத்தை
எங்கே தேடுவேன்?

பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?

எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?

திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
எங்கே தேடுவேன் பணத்தை

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே

திங்கள், 21 நவம்பர், 2016

புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சி முகாம் 2016

வலைப்பதிவர் திருவிழா 2015 (http://bloggersmeet2015.blogspot.com/) புதுக்கோட்டை மாவட்ட வலைப்பதிவர்களால் சிறப்பாக நாடாத்தப்பட்டது. பல முன்மாதிரிகளை கண்டுகளித்தோம். வலைப்பதிவர் திருவிழா 2016 இடம்பெறவில்லை. இந்நிலையில் 18-12-2016 ஞாயிறு இணையத் தமிழ் பயிற்சி நடைபெறவுள்ளதாகப் பாவலர் முத்துநிலவன் வலைப்பக்கத்தில் அறிய முடிந்தது.

கவிஞர் வைகறையின் இழப்பும் புதுக்கோட்டை மாவட்ட வலைப்பதிவர் நிலைமையையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வர். ஆயினும், இணையத் தமிழ் பயிற்சி முகாம் செயற்பாட்டை வரவேற்கிறேன்.

1. புதிய வலைப்பக்கம் தொடங்கப் பயிற்சி
2. விக்கிப்பீடியாவில் எழுதப் பயிற்சி
3. யூடியூப் இல் (ஒளி-ஒலி) ஏற்றப் பயிற்சி
4. பிழை திருத்தியைப் பயன்படுத்தப் பயிற்சி
5. திரட்டிகளில் பதிவுகளை இணைக்கப் பயிற்சி
6. நூல்களை மின்நூல்களாக்க உதவி, ஆலோசனைகள்

மேற்காணும் பயிற்சிகளுக்கான செய்நிரலை வரவேற்கிறேன். இவை பதிவர்கள் எல்லோருக்கும் பயன்தரும்.

இலக்கியப் படைப்புகளை சரியான, தரமான, பிறமொழிக் கலப்பற்ற நற்றமிழ் படைப்புகளாக வெளிக்கொணரப் பயிற்சி வழங்கினால் சிறந்தது. இந்நிகழ்வு புதிய பதிவர்களுக்கல்ல மூத்த பதிவர்களுக்கான நிகழ்வாயின் வேண்டாம்.

இவ்வாறான நிகழ்வுகள் புதுக்கோட்டையில் முடங்கிவிடாமல் உலகெங்கும் தமிழர் வாழும் பகுதிகளில் இடம்பெற வேண்டும். அதற்காகப் புதுக்கோட்டை மாவட்ட வலைப்பதிவர்களின் முயற்சிகளை உங்களுடன் பகிருகிறேன்.

முழு விரிப்பையும் உளநிறைவோடு படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.வெள்ளி, 18 நவம்பர், 2016

பாவலன் (கவிஞன்) ஆகுமுன் அறிவோம்!

பாவலன் (கவிஞன்) ஆக விரும்புவோர்
பாப்புனைய முன்னும் பாப்புனைகையிலும்
கீழான எண்ணங்கள் வந்தால் - கொஞ்சம்
மேலான எண்ணங்களாக மாற்றி
நல்ல எண்ணங்களைப் பகிரவும்
நல்ல எதிர்வைச் சுட்டியும்
நாட்டில் நல்லன விளையவும் - உன்
பாட்டில் புனைந்து காட்டிவிடு - உன்
பாவண்ணத்தைப் படிப்பவர் சுவைக்க - என்
எண்ணத்தில் பட்டதைப் பகிருகிறேன்!

பாவலன் (கவிஞன்) என்பான்
எண்ணி எண்ணிப் பார்த்து
(கற்பனையில் மிதந்து சென்று)
இங்கால இருந்து கொண்டே
கருங்கல் சுவருக்கு அங்கால
இருப்பதையும் துருவித் துருவி
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
எண்ணத் தோன்றியதையும் எண்ணி
(கற்பனையில் கண்டதையும் எண்ணி)
தெருவில் கண்டதையும் எண்ணி
தெருவில் கண்டவரையும் எண்ணி
கேலியும் நையாண்டியும் பண்ணி
பண்பாட்டைப் பேணும் வகையில்
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
காலம் கடந்ததும் உணருவீரென
காதலிக்காமல் இருந்தும் கூட
காதலித்தவன் போல எண்ணி
காதலின் முன்பின் விளைவை
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
கட்டினால் பட்டுத் தெளிவீரென
எவளுக்கும் தாலி கட்டாமலே
குடும்பம், அழகு (காமம்), வாழ்வு
எல்லாம் எப்படி என்றே
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
குப்பையைக் கிளறி விடும்
பெட்டைக் கோழியைப் போலின்றி
கல்லெறிந்து மக்களை நோகடிக்காமல்
சொல்லெறிந்து மக்கள் உள (மன) மாற்றி
நல்ல பண்பாட்டைக் காட்டி
நாட்டில் நல்லாட்சி மலர
வரிக்கு வரி விரிப்பவனே!

செவ்வாய், 15 நவம்பர், 2016

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 03

வலைப்பூக்களை நடாத்திய பின் முகநூலில் புகுந்து பலர் உலாவுகின்றனர். முகநூலில் உலாவிப் பின் தற்கொலை செய்ததாகச் செய்திகளும் அடிபட்டதே! ஆயினும் கணவன், மனைவி தாம் யாரென்று அறியாது முகநூலில் காதலித்த செய்தி ஒன்றை நாளேடு ஒன்றில் படித்தேன். அதனை எனது கைவண்ணத்தில் கதையாக வடித்துள்ளேன்.

* 
விடிகாலை சேவல் கூவி எழுப்பியும் கோவலன் எழும்பியதாகத் தெரியவில்லை. மாசிப் பனி மூசிப் பெய்தும் காதுக்குள்ள பஞ்சடைந்தும் சணல் நூல் சாக்கால காலை மூடியும் படுத்த கோவலனால எழும்ப இயலவில்லை. ஓட்டைக் கூரை வழியே, உடைந்த சாளரம் வழியே பகலவன் கதிர்வீச்சுப் பட்டதும் கோவலன் எழும்பிவிட்டான்.

மாதவியோ ஆறு மணிக்கு நினைவூட்டல் (Alarm) மணி ஒழுங்கு பண்ணி வைத்ததால் எழும்பிவிட்டாள். தானோ பல்லு விளக்காமல் வாயைக் கொப்பளிக்காமல் முதலாவதாகக் கணவனுக்கு இஞ்சி, ஏலக்காய் போட்ட தேனீரை ஆக்கி நீட்டினாள்.

மாதவி காலை உணவு தயாரித்து முடிக்கவும் கோவலன் வேலைக்குப் போகத் தயாராகவும் நேரம் எட்டாச்சு. கோவலன் சாப்பிட்ட பின் வேலைக்குச் சென்றதும் மாதவி அடுக்களைப் பக்கம் சுத்தம் செய்தாள். பின்னர் தனது காலைக் கடன்களைச் செய்து முடித்ததும் காலை உணவை உண்டு தேனீரும் குடித்தாள்.

அடுத்ததாக மாதவி மடிக்கணினியை இயக்கி, முகநூல் (Facebook) பக்கம் நுழைந்தாள். கருத்துகளை இட்டாள்; விருப்புகளைத் தெரிவித்தாள். வணிகனிடம் இருந்து வந்த தகவலைப் படித்தாள். மதியம் ஒரு மணிக்கு நேரில் சந்தித்து ஐயங்களை போக்கலாமென, அரசடிப் பிள்ளையார் வடக்கு வீதிக்கு வரச்சொல்லித் தகவல் இருந்தது. தகவலைப் படித்த மாதவி சட்டென்று மதியச் சமையலைத் தொடங்கினாள்.

கோவலன் தனது செயலகத்துக்கு வந்ததும் அன்றைய நாள் வேலைகளை சட்டுப் புட்டென முடித்தான். பின்னர், கணினியை இயக்கி, முகநூல் (Facebook) பக்கம் நுழைந்தான். நெடுநாள் முகநூல் (Facebook) வழியே பழகிய கண்ணகியின் பதிலைத் தேடினான். "மதியம் ஒரு மணிக்கு அரசடிப் பிள்ளையார் வடக்கு வீதிக்கு வந்தால் நேரில் சந்திக்கலாம்; ஐயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்." என்ற பதிலைக் கண்டதும் கோவலன் மகிழ்ந்தான்.

மாதவி மதிய உணவைச் சமைத்து முடித்ததும் வணிகனைச் சந்திக்கச் சந்திப்பு இடத்திற்குச் செல்லத் தயாராகினாள். அவ்வாறே தனது கண்ணகியைச் சந்திக்கக் கோவலனும் சந்திப்பு இடத்திற்குச் செல்லத் தயாராகினான்.

அந்த அரசடிப் பிள்ளையார் வடக்கு வீதியில் அருமையான சந்திப்பு நிகழ வசதியாக வெயிலைத் தணிக்க மழைக் குணம் வானில் தெரிந்தது. அங்கே வணிகனின் வரவை எண்ணி முதலில் மாதவி வந்து சேர்ந்தாள். அடுத்ததாகக் கண்ணகியின் முகத்தைக் காணக் கோவலன் வருகை தந்தான்.

சந்திப்பு நிகழ்வில் வணிகனைத் தேடி மாதவியும் கண்ணகியைத் தேடிக் கோவலனும் வந்த பின்னர் தான், முகநூல் (Facebook) வழியே போலிப் பெயரில் உறவைப் பேணிய உண்மை அவர்களுக்குள் தெரிய வந்தது. அங்கு அமைதியாக வணிகன் என்ற கோவலனும் கண்ணகி என்ற மாதவியும் நிலத்தை நோக்கி தலை குனிந்து நின்றனர்.

அந்த நேரம் பார்த்து ஒரு பெட்டை நாயை பத்துப் பொடியன் நாய்கள் துரத்தி வந்தன. அவை ஒன்றை ஒன்று பார்த்துச் சண்டை போட்டு வந்தன. அந்த நாய்களின் குரைப்பு, கண்ணகி மற்றும் வணிகனின் அமைதியைக் குலைத்தது. "மன்னிக்கவும்" என ஆளை ஆள் பார்த்து கெஞ்சினர்.

"முகநூலில் (Facebook) காட்டிய அன்பு, பற்று, நம்பிக்கை, விட்டுக்கொடுப்பு எல்லாவற்றையும் வீட்டிலும் காட்டியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?" என்று தங்கள் தவறுகளை தாமே உணர வைத்த அரசடிப் பிள்ளையாருக்கு நன்றி கூறியவாறு இருவரும்  புதிய இணையர்களாகப் புரிந்துணர்வோடு (Understanding) மதியவுணவு உண்ண வீட்டிற்குச் சென்றனர்.
* 

முகநூலில் (Facebook) வேறு பெயர்களில் உறவைப் பேணிய கணவன், மனைவி பற்றிய கதையை இப்படி என்னால் எழுத முடிந்தது. இவ்வாறு நீங்கள் எண்ணிப் பார்த்ததை எழுதினாலே சிறந்த கதைகளை உங்களாலும் ஆக்க முடியும்; முயன்று பாருங்கள்.

மூகநூலில் "தமிழ்க் கவிதைப் பூங்கா" என்ற குழுவினர் இனிய பா(கவிதை) புனையும் போட்டி நடாத்துகின்றனர். மூன்று அடிப் பா(கவிதை) என்றும் அதில் முதல் அடியின் முதல் சொல்லாகவும் மூன்றாம் அடியின் ஈற்றுச் சொல்லாகவும் அமையுமாறு பா(கவிதை) புனைய நாளுக்கொரு சொல் வழங்குகின்றனர். அதன் படிக்குச் சிறப்பாகப் பா(கவிதை) புனைந்த நான்கு பாவலர்களை நாளுக்கு நாள் தெரிவு செய்கின்றனர். இம்முயற்சியில் நீங்களும் பங்குபற்றக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.


மேற்படி போட்டிகளில் நான் புனைந்த பாக்(கவிதை)களைக் கீழே தருகின்றேன். அதேபோல நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்களேன்; வெற்றிபெற வாழ்த்துகள்.

பெண்ணே!
பெண்ணே! உன்னை அன்னை என்பேன்
என்னை பெற்று ஆளாக்கிய பணியாலே
நான் இறந்தாலும் மறவேன் பெண்ணே!

உறவு!
உறவு என்றுரைக்க எனக்கு எவருமில்லை
உண்பதற்கும் உடுப்பதற்கும் மிஞ்சிப் பணமில்லை
பணமில்லாத என்னையே வெறுக்கிறது உறவு!

பணமே!
பணமே! பலரைச் சேர்த்து வைப்பாய்!
பணம் இல்லை என்றதும் பிணமானேன்
உறவுகளை முறிக்க முனைவதும் பணமே!

நினைவே!
நினைவே உன்னைத் தடுக்க முடியல
நினைவில் உருளுவது உன் வேலையாச்சு
புண்ணாக்கும் பாதிப்பை மீட்கும் நினைவே!

உடைத்திடு!
உடைத்திடு உங்கள் அடிமையாகும் எண்ணங்களை
படைத்திடு உங்கள் வெற்றிபெறும் வண்ணங்களை
உங்கள் 'முடியாது' என்றெதனையும் உடைத்திடு!

கலையே!
கலையே என்னோடு ஒட்டிப் பிறந்தாயா
நான் பட்டுக் கெட்டுத் தெளிந்தமையாலே
நானே வடித்துக் கொள்கிறேன் கலையே!

இப்படி நீங்களும் பா(கவிதை) புனைய முயன்று பாருங்கள். தரும் சொல்களை அழகாகப் போட்டு, மூன்று அடிகளில் நற்செய்தியை வெளிக்கொணர முயலுங்கள். இப்படி முயன்று முயன்று பா(கவிதை) புனைவதில் ஆற்றல் பெற எனது வாழ்த்துகள்.

கதை, பா(கவிதை) புனைய வாசிப்புத் தேவை. வாசிப்பதால் அறிவு, எழுத்தாளுமை எனப் பலவற்றைப் பெருக்கலாம். தேடல் மிக்க ஆள்களால் தான், சிறந்த படைப்புகளை ஆக்க முடிகிறது. எனவே, நீங்களும் வாசிப்பை விரும்புங்கள். அதற்கு ஏற்ப வாசிப்பின் பயனைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியும் அறியலாம்.

வாசியுங்கள்... வாழ்நாள் அதிகரிக்கும்!

என்னங்க... முகநூலில் எல்லோரும் உலாவுறாங்க... முகநூலில் உலாவும் பலரில் சிலர் வலைப்பூக்களை அறியாதவர்களே! வலைப்பூக்களை நடாத்திய பின் முகநூலில் உலாவும் பலரும் உள்ளனர்.

முகநூலில் பதிந்து வைத்தால் தேடி எடுப்பது கடினம்.   வலைப்பூவில் பதிந்து வைத்தால் தேடி எடுப்பது இலகு. முகநூல் பதிவுகளை ஆய்வு செய்வதில் சிக்கல் உண்டு. வலைப்பூப் பதிவுகளை ஆய்வு செய்வதில் சிக்கல் இருக்காது.


எனவே, முகநூலில் படிக்கவோ பழகவோ பகிரவோ படைப்புகளை ஆக்குங்கள். ஆனால், ஆவணப்படுத்த எண்ணியிருப்பின் அல்லது ஆய்வுக்குட்படுத்த விரும்பின் வலைப்பூவே சிறந்தது. அறிவாளியின் அடையாளம் முகநூல் அல்ல; வலைப்பூ என்பதை மறந்துவிடாதீர்கள். ஆளுக்கொரு வலைப்பூவில் தங்கள் பதிவுகளைப் பேணிப் பகிர முன்வாருங்கள்.