Translate Tamil to any languages.

சனி, 17 ஆகஸ்ட், 2019

சாகத் தான் எனக்கு விருப்பம் இல்லையே!


இலங்கை, யாழ் பண்டத்தரிப்பில் 06/08/2019 செவ்வாய் மாலை நிகழ்ந்த 'கலாச்சார விழா - 2019' நிகழ்வில் 'கலாதரம் - 2019, இதழ் - iii' எனும் பயனுள்ள இலக்கியச் சிறப்பு நூலை வலி தென் மேற்குப் பிரதேசக் கலாச்சாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து வெளியிட்டு வைத்தது. அந்நூலிற்கான மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியற்றுறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா அவர்கள் வழங்கியிருந்தார். அவரது மதிப்பீட்டுரை சிறப்பாக அமைந்திருந்ததாக அரங்கப் பார்வையாளர்கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.

அந்நூலில் இடம்பெற்ற "சாகத் தான் எனக்கு விருப்பம் இல்லையே!" என்ற எனது கவிதைத் தலைப்பையும் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா அவர்கள் பாராட்டிப் பேசியிருந்தார். "தற்கொலைகள் மலிந்து செல்லும் காலத்தில் இத்தலைப்பு நம்பிக்கையை விதைக்கின்றது" என விழித்துக் காட்டியிருந்தார். அந்நூலில் இடம்பெற்ற எனது கவிதையைக் கீழே படிக்கலாம். வரவையும் செலவையும் சரி செய்து, அமைதியாகச் சிறந்த முடிவுகளை எடுத்து, நல்வருவாயும் ஈட்டி வாழலாமென எனது கவிதையில் தொட்டுக்காட்டியுள்ளேன். நீங்களும் உங்கள் கருத்துகளை நன்றே தெரிவிக்கலாம்.



பொறுமை பொறுமையாத் தான்
நிலவவள் சிரித்துக்கொண்டிருக்கத் தான்
வெளிச்சமான வீட்டு முற்றத்திலே
நிலாச் சோற்றை அம்மா பகிர்ந்தார்!
வெறுமை வெறுமையாத் தான்
உண்ட சோற்றுத் தட்டிருக்கத் தான்
அன்பெனும் தேன்கலந்து பகிர்ந்த
அம்மாவின் நிலாச் சோற்றை நானுண்டேன்!
விரைவு விரைவாய்த் தான்
ஓடிக்கொண்டிருக்கும் நேரம் தான்
பதினொரு மணி அடிக்கவே
படுக்கையில் உருண்டு பிரண்டேன்!
அங்கும் இங்குமாய்த் தான்
காற்று வீசுவதைப் போலத் தான்
உள்ளம் அமைதியற்றுக் கிடக்க
எனக்குத் தூக்கம் தான் வரமறுத்தது!
எப்படி எப்படித் தான்
வருவாயை எண்ணிப் பார்க்காமல் தான்
என் கைப்பணம் கரியாவதை
கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன்!
சுறுக்காய் சுறுக்காய்த் தான்
முயல் பாய்ச்சல் போலத் தான்
வேண்டாத செலவுகளைச் செய்து போட்டு
கையில பணமின்றிச் சிக்குப்பட்டிட்டேன்!
நறுக்காய் நறுக்காய்த் தான்
ஆமை நடை போலத் தான்
வருவாய் வருமென்று அறியாமல்
செலவுகளின் பின் திக்குமுக்காடினேன்!
மெதுவாய் மெதுவாய்த் தான்
அகப்பட்ட தொழிலைத் தான்
பசி தாங்கியவாறு உழைத்துத் தான்
பிழைக்கக் தான் கற்றுக்கொண்டேன்!
அமைதி அமைதியாய்த் தான்
அம்மாவின் அணுகுதலைப் போலத் தான்
நல்ல முடிவுகளை எடுத்தமையால்
என் பிழைப்பு நல்லாய் போகிறதே!
அடுத்து அடுத்துத் தான்
அகவை தான் ஏறிக்கொள்ளத் தான்
சாவு வந்து நெருங்கினாலும் கூட
சாகத் தானெனக்கு விருப்பம் இல்லையே!
ஒளி ஒளியாய்த் தான்
பகலவன் கதிர் பட்டுத் தான்
காலை விடிந்ததென நானறியத் தான்
என்னோட்டை ஓலைக்கொட்டில் ஏதுவாச்சே!

குறிப்பு: உழைப்பு - பணமீட்டல்; பிழைப்பு - வாழ்தல்; ஏது - காரணம்.

கல்லூரி மணம்


சுழிபுரம் ராமலிங்கம் ஆசிரியர்
வட்டு. இந்துவில கண்டிப்பானவர்...
உயர் தர (12 ஆம்) வகுப்பில
நாலு பாடம் (கணிதப் பிரிவு) படித்தும்
பௌதிகம் மட்டும் 'S' சித்தியென
அதிபர் செயலகம் முன்னே
பெறுபேற்றைப் பார்த்து அழுகின்றேன்...
அருகாகச் சென்ற ராமலிங்கத்தார்
"என்ன காணும்
மாதகல் கட்டையரே!
இப்ப அழுதென்ன பயன்?
படித்தால் எழுதியிருக்கலாம்...
எழுதியிருந்தால் தேறியிருக்கலாம்...
நீயும் உன்ர படிப்பும் பெறுபேறும்..." என
அச்சமூட்டிச் சொன்ன பின்னே
"இனியாவது படிச்சுத் தேறிக் காட்டு" என
வழிகாட்டிச் சென்றதை அடிக்கடி மீட்பேன்!
எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகுமென்பர் - அது போல
கேட்டலும் கருத்து உள்வாங்கலும்
கண்ணெனப் பாவித்தால் பாரும்
எண்ணமிடலும் மீட்டலும் கூட வருமே!
காலம் கடந்து எண்ணிப் பார்த்தது
என் தவறெல்லோ - அதனாலென்ன
படிக்கின்ற மாணவர்களே
படிக்கும் போது கவனமெடுங்கள்
கண்ணோட்டமும் எண்ணமிடலும்
கணக்கில் எடுத்தால் அறிஞர்கள் ஆவீரே!

சனி, 3 ஆகஸ்ட், 2019

கதையும் விதையும் தானாம் கவிதை


1 - கவிதையா?
 
கதை + விதை = கவிதை என
மூத்த அறிஞரொருவர்
அரங்கொன்றில் அறிவித்தார் - அதை
நானும் கையாள முயன்று பார்த்தேன்!
ஏழை வீட்டில் ஒளி இல்லை
ஏழை வயிற்றில் உணவில்லை
மழை வந்தால் நனையும் நிலை
இது ஒரு ஏழையின் கதை!
கடவுள் போலச் சிலர்
ஏழைக்கு உதவினாலும் கூட
கடவுளாகவே வந்து ஒருவர்
"இனி நீ ஏழையாக இருக்காதே!" என
தொழில் வாய்ப்பை வழங்கிச் சென்றமை
நல்ல விதையாகப் பார்க்கின்றேன்!
கதை சொல்லி
நல்ல விதை சுட்டி
சொல்லழகு காட்டிவிட்டேன்
மெல்ல நீங்கள்
நானெழுதியதைக் கவிதை என்பீர்களா?

2 - கவிதையாமோ?

இளமை முத்தி வெளிப்பட்ட வேளை
காளையும் வாலையும் ஓடிப்போய் வாழ
காலந்தான் கரைந்தும் மாற்றம் மலர
காளையின் வயிறு ஒட்டிப் போக
வாலையின் வயிறு பெருத்து வீங்க
பட்டினி வாழ்வு தொடரும் கதையது!
காலம் கடந்து எண்ணிப் பயனென்ன
உறவுகள், நட்புகள் உதவினாலும் கூட
ஒருவர் காளைக்குத் தொழில் வழங்கி
பட்டினி வாழ்வைத் தொடராமல் செய்தது
இளசுகளின் வாழ்வுக்கு போட்டநல் விதையது!
ஒரு கதை ஒரு விதை சொல்லி
சொல்களை அப்படி இப்படிப் போட்டு
கவிதை பாட முயன்று இருக்கிறேன்!
கதையும் விதையும் கூடி வந்தால்
கவிதை கைகூடுமாம் இப்படித் தானோ?