Translate Tamil to any languages.
2-நாடகம் - திரைக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2-நாடகம் - திரைக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மார்ச், 2015

இப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்?

பேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் "நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே!" என்று கேட்டாள்.

அதற்கு அறிஞர் பேர்னாட்ஷா என்ன கூறியிருப்பார்?

அந்த அழகிய நடிகையைப் பார்த்து "நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறந்தால் என்ன செய்வது?" என்று அறிஞர் பேர்னாட்ஷா கேட்டதும் அந்த நடிகை அவ்விடத்தை விட்டு அகன்று போய்விட்டாளாம்.

இந்தத் தகவலை நாளேடு ஒன்றில் படித்தேன். படித்ததும் "இப்படி நானும் எழுதினால் என்ன?" என்று எழுதியதைக் கீழே தருகின்றேன். எனது கைவண்ணத்தையும் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.

இல்லாள் வள்ளி இல்லாத வேளை அயலாள் பொன்னி அறிஞர் பேர்னாட்ஷா பற்றி நாளேடு ஒன்றில் படித்ததாகக் கூறிப் பொன்னனிடம் கேள்வி கேட்கின்றாள்.

பொன்னி: நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற கதை/பாட்டுப் புனையும் ஆற்றலுடன் உங்களைப் போன்ற அழகும் இணைந்த பிள்ளை பிறக்குமே!

பொன்னன்: நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற வேளாண்மை செய்யும் ஆற்றலுடன் உங்களது நிறைவேறாத விருப்பமும் (ஆசையும்) இணைந்த பிள்ளை பிறந்தால் என்ன செய்வது?"

பொன்னி: நீங்கள் அழகு இல்லாதவரா? எனக்கு நிறைவேறாத விருப்பம் (ஆசை) இருப்பதை எப்படி அறிவீர்?

பொன்னன்: எனக்கு வேளாண்மை செய்தமையால் உடற்கட்டு இருக்கலாம். அது அழகில்லையே! நானும் நீரும் கூடிப் பிள்ளை பிறந்தால் எப்படி இருக்கும் என்கிறியே - அது உன் நிறைவேறாத விருப்பம் (ஆசை) தானே!

பொன்னி: உடற்கட்டு மன்னவரே! நானும் நீரும் கூடினால் பிள்ளை பிறக்காதா? பிறகேன் நிறைவேறாத விருப்பம் (ஆசை) என்பீர்?

பொன்னன்: பிள்ளாய்! என் இல்லாள் வள்ளிக்கு இந்தக் கதை தெரிந்தால். நீ உயிரோடு இருக்கவே உனக்குக் கொள்ளி வைப்பாளே! அப்படி என்றால் உன் எண்ணம் நிறைவேறாத விருப்பம் (ஆசை) தானே!

அந்த நேரம் வள்ளி வீட்டிற்குள் நுழையப் பொன்னி வாயடைத்துப் போட்டாள். பொன்னனும் மூச்சு விடவில்லை. ஏதோ வள்ளியும் பொன்னியும் பறைய, பொன்னன் வீட்டு முற்றத்தில் இறங்கினான்.

சனி, 15 நவம்பர், 2014

மக்களாயம் (சமூகம்) வழங்கும் பெயர்


நம்ம காதலர்கள் சந்தித்தால் என்ன கதைப்பாங்க...

காதலி: சான்றிதழில் எழுதப்பட்டது பெற்றோர் இட்ட பெயர்!
       எங்கட நடத்தைகளை வைத்தே, மக்களாயம் (சமூகம்) கூப்பிடுதே!

காதலன்: எனக்குத் தெரியும்... நல்லதைச் சொல்வோரையும் நல்லதைச் செய்வோரையும் மக்களாயம் (சமூகம்) நல்லவரென்றே கூப்பிடுதே!

காதலி: அது போலத் தான்... கெட்டதைச் சொல்வோரையும் கெட்டதைச் செய்வோரையும் மக்களாயம் (சமூகம்) கெட்டவரென்றே கூப்பிடுதே!

காதலன்: உண்மை தான்! ஆனால், நண்பர்கள் பலர் இது பற்றி அறிந்திருக்கவில்லையே!

இவங்க இப்படி எல்லாம் நாடகம் ஆடுவாங்க என்று எனக்குத் தெரியாதே!

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

பொழுது போக்கிற்காக...


ஒரே ஒரு கேள்வி தான். ஆறாள் கூறும் பதில்கள் வேறுவேறு தான். இவங்கட பேச்சே நல்ல நாடகமாச்சு...

முதலாம் ஆள் : படங்களில வாறது போல 'I Love You' சொன்னீங்களே! முடிவு என்ன ஆச்சுங்க?

இரண்டாம் ஆள் : கவுண்டரின் மனைவியிடம் செந்தில் போய்க் கேட்டது போலக் கேட்டு, அதைப் பார்த்த கவுண்டர் எனக்கு உதைச்சுப் போட்டான் அண்ணே!

மூன்றாம் ஆள் : விவேக் சரளாவிடம் போய்க் கேட்டது போலக் கேட்க, 'இஞ்சாருங்கோ' என்றதும் வடிவேலு வந்து "என் பெண்டாட்டியோட என்னடா விளையாட்டு" என்று அடிச்சு விரட்டிட்டான் அண்ணே!

நான்காம் ஆள் : ஆண்களை "Love" பண்ணினால், நடிகர்களின் பேச்சுப் போல "பொழுதுபோக்கிற்காக" என்று கெடுத்துப்போடுவாங்களே! வழியாலே போகும் பெண்கள் இப்படியெல்லோ முணுமுணுத்துக்கொண்டு போறாங்களே!

முதலாம் ஆள் : உங்கட நிலைப்பாடு என்னவாச்சு?

ஐந்தாம் ஆள் : நானும் ஒருத்தியைக் கேட்டேன். "Love" பண்ண (சந்திக்க) வரும் ஒவ்வொரு முறைக்கும் ஆயிரம் உரூபா கேட்கிறாளே!

ஆறாம் ஆள் : ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பெட்டையளைச் சுத்துற பொடியளாலே தான்,  பெட்டையளும் எடுப்புக் (லெவல்) காட்டுகினம்.

முதலாம் ஆள் : அட பொடியங்களே! பொழுது போக்கிற்காகப் பெட்டையளைச் சுத்துற வேலையை நிற்பாட்டிப் போட்டு; ஒழுங்காய் படிச்சா, நல்ல வருவாய் எடுத்தா எந்தப் பெட்டையும் உங்கட காலில விழுவாள்களே!

புதன், 10 செப்டம்பர், 2014

பொங்கின புக்கை

தைப்பொங்கலை ஒட்டிப் பல பொங்கல்கள் வருமே! அந்த வேளை இப்படி இருவர் நாடகமாடினர்.

முதலாமவர் : ஒருவரையும் நம்பிப் பிழைக்க ஏலாதுங்க...

இரண்டாமவர் : எல்லோரும் ஒருவரையே நம்பிப் பிழைக்கிறாங்களே!

முதலாமவர் : எப்படி அப்பா இப்படிப் போட்டுடைப்பா...

இரண்டாமவர் : பகலவனை நம்பித் தானே!

முதலாமவர் : அதெப்படியப்பா...?

இரண்டாமவர் : தைப்பொங்கலை வைச்சுத்தானப்பா...
...
முதலாமவர் : எடுத்துக்காட்டுக்கு ஏதாச்சும் சொல்லப்பா...

இரண்டாமவர் : பொங்கின புக்கையை விடத் தண்டின புக்கை தானே அதிகம்... கொஞ்சம் மூளைக்கு வேலை கொடேன்...

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

சிறப்பு நடைபேசி (Smart Phone) தரும் நன்மைகளை அறிவீர்களா?



நடப்புக் காலத்தில் காதலர்கள் பரிமாறும் பரிசுப்பொருள்கள் என்ன தெரியுமா? சிறப்பு நடைபேசி (Smart Phone) தான்! அதுபோல கீதா 'சம்சுங்' சிறப்பு நடைபேசி (Smart Phone) ஒன்றை கயனின் பிறந்த நாளில் பரிசளிக்கிறார்.

கீதா: சிறப்பு நடைபேசி (Smart Phone) எமக்கு நன்றாக உதவுதே!

கயன்: எப்படி? எப்படி?

கீதா: நாங்க நடந்து கொண்டே வலைப்பூக்கள், வலைப்பக்கங்கள் பார்த்துக் கொண்டே செல்லலாம்!

கயன்: அது சரி! ஆனால், சிலர் சாகிறாங்களே! (மேலே படத்தைப் பாருங்கள்)

கீதா: எப்படி? எப்படி?

கயன்: நடைவழியே / வழி நெடுக சிறப்பு நடைபேசி (Smart Phone) பார்த்துக் கொண்டே செல்வதால் சிலர் விபத்துக்குள்ளாகிச் சாகிறாங்களே!

கயன்: அது சரி! ஆனால், அது சிறப்பு நடைபேசிப் (Smart Phone) பயனாளர்களின் தவறே!

ஈற்றில் சரி! சரி! என இருவரும் பிறந்த நாள் சாப்பாடுண்ண உணவகம் ஒன்றிற்குச் சென்றனர்.

வியாழன், 31 ஜூலை, 2014

அரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்?

ஒரு கட்சிச் செயலகத்தில் நடந்த நாடகம்

கட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...

கட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.

கட்சித் தொண்டன் : காலம் கடந்தால் மக்கள் எங்களை மறந்து விடுவார்களே... அதன் பின் உங்கட மருந்து வேலை செய்யாதே...

கட்சித் தலைவர் : என்னுடைய மருந்து சக்தி மிக்கது.

கட்சித் தொண்டன் : அதெப்படி?

கட்சித் தலைவர் : ஈழத்தில சிறுபான்மை இனங்களை அழித்துக்கொண்டு அரசியல் பண்ணுறாங்களே... அதுபோல... உடையாத முல்லைப் பெரியாற்று அணையை கொஞ்சம் உடைத்துப் போட்டுக் கூத்துப் போடத் தெரிந்தால் தானே முதுநிலை அரசியல்வாதி.

கட்சித் தொண்டன் : அதுவா செய்தீ...

புதன், 23 ஜூலை, 2014

களவும் கற்று மற

வகுப்பில நடந்த ஆசிரியர், மாணவர் நாடகம்.

ஆசிரியர் : "களவும் கற்று மற" என்றால் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 01 : மாற்றார் உடைமைகளைக் களவெடுத்து வருவாய் ஈட்டியதும் மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : அப்படி என்றால் பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவானே... வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 02 : மாற்றார் உள்ளத்தைக் களவெடுத்து, தன் உள்ளத்தில் பேணி மகிழ்ந்தாலும் கலியாணம் செய்த பிறகு மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : சரி, கலியாணம் செய்த பிறகு மனைவியினதோ அல்லது கணவனதோ உள்ளத்தை மறக்காமல் இருந்தால் சரி!

மாணவர் - 02 : ஐயா! நேற்றுத் தந்த வீட்டுவேலை செய்ய மறந்திட்டேன்!

ஆசிரியர் : வீட்டுவேலை செய்யாதோர் வகுப்பில் இருந்து செய்து முடித்துத் தந்த பின் வீட்டுக்குப் போகலாம்.

இப்பவெல்லாம் மாணவர்கள் இவ்வாறான ஒறுப்பை (தண்டனையை) ஏற்றுக்கொள்கிறாங்களா? எனக்கோ ஐயம் தான்!

செவ்வாய், 8 ஜூலை, 2014

நண்பா... நண்பா...

தேர்வு எழுதிய பள்ளித் தோழிகள் பேசிக் கொண்ட பேச்சுகளைப் பாருங்கள்.

தோழி-1 : தேர்வு திறம்பட எழுதினாயா?

தோழி-2 : சக்தி குறிப்பெடுத்த தாளைக் களவாடி எழுதியாச்சு...

தோழி-1 : உன்ர எதிர்காலம் போச்சடி...

தோழி-2 : சக்தி தானே வகுப்பில முதலாம் பிள்ளை!

தோழி-1 : ஆமாம். அவள் மேற்பார்வையாளர் கண்டுபிடிக்காமல் தலைகீழாய்க் குறித்ததை அப்படியே எழுதிட்டியேடி!

தோழி-2 : அவள் அதிலையும் கெட்டிக்காரியடி! நான் எதிலையும் முட்டாளடி...

தோழி-3 : இனியாவது படித்துப் போட்டுத் தேர்வு எழுத வாடி!

தோழி-4 : எவளாச்சும் குறிப்பெடுத்தைப் படியெடுத்து எழுதவும் படிக்க வேணுமடி...

சனி, 5 ஜூலை, 2014

இப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்?

கே.கே. நகரில் முனுசாமி தெருவில் டிஷ்கவரி புக் பலஸ் கட்டிடத்தில் இணையத்தில் தமிழ்நண்பர்கள்.கொம் இல் கவிதை பதிந்த பின் வெளியே வந்த போது கவுண்டமணி, செந்திலைக் கண்டேன்.

செந்தில்: அண்ணே! எனக்கொரு ஐயம் அண்ணே!

கவுண்டமணி: அப்படி என்னடா ஐயம்!

செந்தில்: தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமாமே! அதெப்படி அண்ணே!

கவுண்டமணி: அதுவா... இங்கால கொஞ்சம் வாடா... சொல்லுறேன்!

செந்தில்: இங்கால நின்றால் உங்களால முடியாதோ?

கவுண்டமணி: இல்லை! இங்கால வந்தால் தானடா முடியுமடா...

கவுண்டமணிக்குக் கிட்டச் செந்தில் நெருங்கினார். கவுண்டமணியோ ஓர் உதை விட, செந்தில் பிடரி அடிபட விழுந்தார்.

செந்தில்: கிட்ட வைச்சு உதைக்கலாமோ அண்ணே!

கவுண்டமணி: இப்ப உங்களுக்குத் தலையிடி எப்படி?

செந்தில்: உங்கட உதையால வந்த தலையிடி அண்ணே!

கவுண்டமணி: உதைத்தான் சொல்லுறது; தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்று!

செந்தில்: போங்க அண்ணே! உதை உதையில்லாமல் சொல்லேலாதோ!

கவுண்டமணி: உதை தானே உதை உனக்கு உணர்த்திச்சு!

இதையெல்லாம் கண்டு களித்த பின், நான் அவ்விடத்தை விட்டு அகன்று நன்னூல்.கொம் செயலகத்திற்குச் செல்ல அம்பாள் நகரிற்குப் புறப்பட்டேன்.


புதன், 2 ஜூலை, 2014

நல்ல கணக்கு

அந்தி சாயும் நேரம் நம்மவர் நாட்டுநடப்புக் கூடிக் கதைக்குமிடத்தில் இப்படியொரு நாடகம் ஆடினாங்க.

முதலாம் ஆள் : காலம் கடந்து அறிவு(ஞானம்) வந்தென்ன பயன்?

இரண்டாம் ஆள் : இழப்புகளையும் சோர்வு(நட்டம்)களையும் கணக்கிடத்தான்...

மூன்றாம் ஆள் : அதுக்குத் தானண்ணே! காலம் கடந்தாலும் கணக்கு மட்டும் ஏறாதண்ணே!

நான்காம் ஆள் : எனக்கு ஏறிட்டுது அண்ணே!

மூன்றாம் ஆள் : எப்படி ஏறிட்டுது?

நான்காம் ஆள் : வைப்பகத்தில (வங்கியில்) நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் (சீரியல்) பார்த்த மனைவியின் சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தோமல்லோ!

முதலாம் ஆள் : அப்படி என்ன தான் படித்தீர்கள்?

நான்காம் ஆள் : நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் பார்க்கக் கூடாது என்று தானண்ணே!

இரண்டாம் ஆள் : சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தென்ன பயன்!

முதலாம் ஆள் : வள்ளுவரின் வழிகாட்டலைப் படியுங்க...

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

(பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகை
குறள்:467)

சனி, 7 ஜூன், 2014

பொழுதுபோக்குப் பற்றி...


நம்மாளுகள் பயன்மிக்கதாகப் பொழுதுபோக்குவதில்லை. பின் பல தொல்லைகளுக்கு முகம் கொடுப்பர். அப்படி ஒரு நிகழ்வைப் படியுங்க...

கந்தர் : எப்படிப் பொழுது போகுது?

முருகர் : ஒருவர் மாறி ஒருவரைக் காதலிப்பதால்...

கந்தர் : நேரம் வசதியாக அமையுதோ?

முருகர் : ஆளுக்கேற்றால் போல நேரம் ஒதுக்கிறேன்.

கந்தர் : பாதிப்புற்றவர்கள் படையமைத்து உமக்கெதிராகப் போராடினால் ?
முருகர் : எல்லாம் சும்மா என்பேன்...

அந்த வழியால பத்துக் குமரிகள் வந்தார்கள். ஒருத்தி முருகரைக் காட்டி கந்தரிடம் "திருமணமானவரா?" என்று கேட்டாள்.

கந்தர் : அவர் திருமணமாகி ஆண்டுக்கு ஒன்றாக ஆறு பிள்ளைகளைப் பெற்றவராச்சே...

குமரிகள் (முருகரைப் பார்த்து) : "உங்கட மூஞ்சிக்கு எங்களில ஆளுக்கொருவராக ஆறாளைக் காதலிக்க வருகுதோ?" என்று ஆளாளாக தலைதெறிக்கக் கல்லெறிந்தார்கள்.

கந்தர் : அந்த ஆள் பொழுதுபோக்காகக் கதைத்திருப்பார். உதெல்லாம் பெரிதாக எடுக்காதைங்கோ...

குமரிகள் : பொழுதுபோக்கிற்கு நம்மட இளமையே கிடைச்சதெனக் கேட்ட பின் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

கந்தர் (முருகரைப் பார்த்து) : பொழுதுபோக்குப் பற்றி உன்னட்டையெல்லோ படிக்க வேணும்...

முருகர் : தலை வெடித்து ஆறாக ஓடும் செந்நீரை (குருதியை) நிறுத்த வழி பாரடா...

கந்தர் : எல்லாம் சும்மா என்பேன் என்றாய்... இப்ப எப்படித் தோழா?

ஈற்றில் கந்தரும் முருகரும் கணபதி மருந்தகத்திற்கு மருந்து கட்டச் சென்றனர்.

செவ்வாய், 27 மே, 2014

சாப்பிட மட்டும் மறப்பியளே!


பள்ளிக்கூடத்தில ஆசிரியர், மாணவர் கேள்வி நேரத்தில நடக்கிற நாடகமிது.

ஆசிரியர் : எத்தனை திருக்குறள் வள்ளுவர் எழுதினார்?

மாணவர் - 1 : வள்ளுவரைத் தான் கேட்கணும்...

ஆசிரியர் : அவர் வரமாட்டாரடா...

மாணவர் - 2 : ஈரடி வெண்பா தானே எழுதினார்...

ஆசிரியர் : சரி! அது தான்டா எத்தனை?

மாணவர் - 3 : ஒன்றே முக்காலடி வெண்பா தானே எழுதினார்...

ஆசிரியர் : சரி! அது தான்டா எத்தனை?

மாணவர் - 4 : எண்ணிக்கொள்ள முடியவில்லையே!

ஆசிரியர் : திருக்குறள் பொத்தகத்தை விரித்தாலெல்லோ எண்ணலாம்...

மாணவர் - 4 : படிச்சேன், மறந்திட்டேன் ஐயா!

ஆசிரியர் : சாப்பிட மட்டும் மறப்பியளே!

மாணவர்கள் : வயிறு கடிக்கையில பசிக்குமையா...

ஆசிரியர் : அப்ப, அடி போட்டால் படிப்பை மறக்க மாட்டியளே

மாணவர்கள் : (அமைதியாக இருந்தனர்)

ஆசிரியர் : இப்ப சொல்லுறன்... வள்ளுவர் 1330 திருக்குறள் எழுதினார்! நாளைக்குக் கேட்கையிலே சொல்லாவிடில் நெருப்படி தான் போடுவேன்.

மாணவர்கள் : நாளையான் நேரவிரிப்பில் நாலடியார் ஐயா!

ஆசிரியர் : அடுத்த நாள் கேட்டிட்டு அடிப்பேன்டா...

வெள்ளி, 16 மே, 2014

என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக


"படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்" என்பது போலச் சிலர் இருப்பர். அப்படித் தான் ஒரு வீட்டில இப்படி நிகழ்ந்து விடுகிறது.

மனைவி : மணமுடித்த பின் காதலிப்பது சரியா?

கணவன் : மணமுடித்த பின் காதலிப்பது சரியென்று பாவரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே!

மனைவி : அது தாண்டா...
                     அவர் சொன்னது சரி தாண்டா...
                     நீ செய்யிறது தாண்டா பிழை!

கணவன் : நான் பிழை விடேல்லையே...

மனைவி : பிழை விடேல்லையோ? என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக, தெரு விலைப்  பெண்ணைக் காதலிக்கிறியே!

கணவன் : காதல் கண்ணைத் தான் மறைக்கும் என்பார்கள் - அது
                      கட்டின பெண்டிலையும் மறக்க வைக்குதே!

மனைவி : இனியாவது, உன்ர அறிவுக்கண்ணைத் திறந்து பாரடா...

கணவன் : தாயே! என்னை மன்னிச்சிடு தாயே!

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

பள்ளிக்குச் செல்லும் சுமைதாங்கிகள்

பள்ளிக்கூடம் போகிற பிள்ளைகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்களோ எனக்குத் தெரியாது. தெருப் பேச்சாளர்கள் பிள்ளைகளைப் பார்த்து என்னமோ சொல்கிறாங்களே! கொஞ்சந்தான் கேட்டுப் பார்ப்போமே!
முகத்தார் : அங்கே பாரு, ஒரு பிள்ளை ஒல்லிப் பொதியும் ஒரு பிள்ளை பூசணிக்காய் போல பெரிய பொதியும் பள்ளிக்குச் சுமந்து போறாங்களே...

சிவத்தார் : பட்டினத்துப் பள்ளிக்குப் போறவை ஒல்லிப் பொதியும் நம்மூர்ப் பள்ளிக்குப் போறவை பெரும் பொதியும் சுமப்பினமே!

முகத்தார் : ஆட்களோ எலும்புந் தோலுமாக, பொதிகளோ ஆட்களை விடப் பெரிசே...

சிவத்தார் : எட்டுப் பாட வேளையும் பட்டென்று எடுத்துப் படிக்க வேண்டிய நூல்கள் தான்...

முகத்தார் : சின்னப் பொதிப் பட்டினத்துப் பிள்ளைகள், நம்மூர்ப் பிள்ளைகளைப் போல படிக்கிறெல்லையே?

சிவத்தார் : ஒல்லிப் பொதிக்குள்ள மடிக் கணினியடா (notebook)... எழுதிக்
கிறுக்காமல் படிக்கத்தான்...

முகத்தார் : குழந்தை குட்டிகளைப் பெத்துப்போட்டு, பள்ளிக்குப் பொதி சுமக்க விடுகிறதோ கணினியைக் கொடுத்து கையெழுத்துப் போடத் தெரியாமல் பண்ணுறதோ நல்லாயில்லைப் பாருங்கோ...

சிவத்தார் : படிப்பிக்கிற ஆட்கள் பள்ளியில படிப்பிக்காமல், பிள்ளைகள் சுமந்து சென்றதை விரித்து வாசிக்க வைச்சுப்போட்டு வீட்டை கலைக்கிறாங்களே...

முகத்தார் : ஆண்டவா! அளவுக்கு மிஞ்சி நீண்டவா! இஞ்ச கொஞ்சம் வாப்பா! சின்னஞ் சிறிசுகள் படுகிற பாட்டை பாரப்பா...

சிவத்தார் : ஆண்டவன் வரமுதல்ல... நான் போட்டு வாறேனே...

செவ்வாய், 18 மார்ச், 2014

பசித்தவரெல்லாம் சாப்பிட வரலாம்

சாப்பாட்டுக் கடையில குந்தினால் மூக்குமுட்ட விழுங்குவாங்க... கடைசியில காசைக் கொடு என்றால் முழி பிதுங்கத் திண்டாடுவாங்க... அப்படியொரு நிகழ்வைக் கீழே பார்க்கலாம்.

கடைக் காசாளர் : மசாலா தோசை, பால் எல்லாம் சேர்த்து நூறு உரூபா கொடுங்களேன்.

உண்டு களைத்தவர் : பசிக்குச் சாப்பாடு கேட்டேன். எல்லாம் முடிந்ததும் காசை வையென்று கழுத்தை நெரிக்கலாமா?

கடைக் காசாளர் : அங்கே பார்...
"பசித்தவரெல்லாம் சாப்பிட வரலாம்
சாப்பிட்டோர் எல்லோரும்
பணம் கட்டாட்டி
பத்துப் படி உழுந்தாட்டணும்" என்று தானே இருக்கு!

உண்டு களைத்தவர் : உண்டதை வாந்தியாகவோ பேதியாகவோ எடுத்துத் தர முடியாமையால், பாதிப் படி உழுந்தாட்டுறேனுங்க...

கடைக் காசாளர் : இனியென்ன... உழுந்தாட்டித் தான் ஆகணுமே!

வெள்ளி, 7 மார்ச், 2014

வேலைக்கு என்னைச் சேர்ப்பியளே?


எங்கெங்கெல்லாம் படிப்புத் தேவைப்படும் என்பதை நம்மாளுகள் படிக்கிறவேளை அறிவதில்லை. வேலை தேடும் வேளை தானே அறிய முடிகிறதாம்... இங்கும் ஒரு நாடகம் அப்படியே....

வேலை தேடுபவர் : தங்கட நிறுவனத்தில வேலைக்கு என்னைச் சேர்ப்பியளே?

முதலாளி : எத்தனை வரை படிச்சனியள்?

வேலை தேடுபவர் : முன் பள்ளியே முழுசாக முடிக்கேல்ல... சின்னப் பள்ளியில பத்துவரை படிக்கிறது போல நடிச்சேன்...

முதலாளி : உப்படி இங்க நடிக்கேலாது... சம்பளம் இரண்டு இலட்சத்தோட வேலையிருக்கு. ஆனால், நாம் வழங்கும் தொழில் நுட்பக் கல்வியை பத்து மாதத்தில் படிச்சு முடிச்சாத்தான்...

வேலை தேடுபவர் : படிப்புக்குக் களவு போட்டு, வேலையைத் தேடினால், அங்கேயும் படிக்கச் சொல்லுறாங்களே... கடவுளே! படிப்பைத் தருவியா? வேலையைத் தருவியா?

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கள்ளுக் குடியை நிறுத்த...


மாலை நேரம் தெருவில நம்மாளுகள் கூடி நாட்டு நடப்புப் பேசுவாங்க... அப்படி ஒரு மாலைப் பொழுதில் இப்படி ஒரு உரையாடல்:

வெடியர் : நம்மாளுகள் கள்ளுக் குடிப்பதை நிறுத்த நல்ல வழியைக்
காட்டுவீர்களா?

குண்டர் : இதென்ன ஒரு சின்ன வேலை. குடிப்பவர்களைச்
சிறையில் அடைத்தால் போச்சே!

வெடியர் : இதெல்லாம் அரசுக்குப் பெரிய செலவைத் தருமே!
ஆகையால், செலவில்லாத வழியைக் கூறுங்களேன்?

குண்டர் : தென்னை, பனை ஏறிக் கள்ளுப் பறிக்கும் சீவல்
தொழிலாளர்களுக்கு இலவசமாகக் கணினி படிப்பித்து, மாற்றுத்
தொழிலை வழங்கினால் போச்சு.

வெடியர் : அப்ப குடிகார ஆட்கள் என்ன செய்வினம்?

குண்டர் : தென்னை, பனை ஏறிக் கள்ளுக் குடித்த பின்னர் "தொம்"
என்று விழுவினம்.....

கள்ளுக் குடியென்ன, அற்ககோல் கலந்த தண்ணீர்க் குடியென்ன சூழல் மாற்றத்தாலேயே கட்டுப்படுத்த முடியும்.

சனி, 21 டிசம்பர், 2013

கத்திரியை விரட்ட

2011 சித்திரை உச்சந் தலை பிளக்கும் வெயில் காலத்தில நான் சென்னைக்குப் போயிருந்தேன். அப்பதான் ஈழத்தில 'காண்டாவனம்' என்று சொல்லப்படும் கடும் வெயிலை; இந்தியாவில, தமிழ்நாட்டில 'கத்திரி' வெயில் என்கிறாங்க என்று படித்தேன். உடனே இப்படி ஒரு காட்சி உரையாடலை எழுதினேன்.

வகுப்பறையில:
ஆசிரியர் : கத்திரியை விரட்ட என்ன செய்யலாம் பிள்ளைகளே?

மாணவன் : சென்னை, கே.கே.நகர், முனுசாமி சாலை இருபக்கத்திலும் உள்ளது போல நிழல் தரும் மரங்களை நாட்டப் போராட வேண்டும்.

ஆசிரியர் : நாடெங்கிலுமா?

மாணவன் : உலகெங்கிலுமையா

தெருவெளியில:
மாணவி : 'கத்திரி' வெயில் என்கிறாங்க... தலையை பிளக்கும் வெயில் என்கிறாங்க... ஆனால், ஆண்கள் தான் அதிகம் தெருவில உலாவுறாங்களே...

மாணவன் : ஆண்களின் பார்வைக்கு மட்டும் பெண்களின் கண்களில் குளிர்மை தெரியுமாம். பெண்களைப் பார்த்தாலே 'கத்திரி' வெயில் சுடாதாம்.

மாணவி : 'கத்திரி' வெயில் சுடாதாமா? தெருவால போறதை மறந்து பெண்களைப் பார்த்து அடிபட்டுச் சாவது ஆண்களே!

உண்மையில, இப்படி நாடகம் போட்டுக் 'கத்திரி' வெயிலை விரட்ட முடியாதுங்க... முடிந்தால் மரநடுகை இயக்கம் தொடங்கலாமுங்க...

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

ஐயோ! என்னை மன்னிக்கவும்!


இலக்குவன் தன் வீட்டு வாசலடியில் நாளேடு படிக்கையில் தரகர் ஒருவர் வந்தார். இலக்குவனுக்கென்ன நல்ல உழைப்பு, நல்ல வருவாய், பிழைப்புக்குக் குறைவில்லை.

தரகர் : என்ன காணும் உங்கள் (ஜாதகக்) குறிப்பைத் தாருங்கோவேன்... நல்ல வசதியான இடமொன்று வந்திருக்கு. விட்டால் பறந்து போய்விடும்.

இலக்குவன் : கண்ணகியோ சீதையோ இஞ்ச வாங்கோவேன்...

கண்ணகியும் சீதையும் : என்னங்க இப்படி வேகமாய் கூப்பிடுறியள்...

இலக்குவன் : நல்ல இடமாம்... விட்டால் பறந்திடுமாம் என்று என்ர குறிப்பையெல்லோ தரகர் கேட்கிறாருங்கோ...

கண்ணகியும் சீதையும் : பெரியவரே கொஞ்சம் எழும்பும் காணும்!

தரகர் : என்னங்க உடனேயே எழும்பச் சொல்லிப்போட்டீங்க...

கண்ணகியும் சீதையும் : முன்னைப் பின்னை ஊருக்குள்ளே இவரைப்பற்றி அறிஞ்சனீரே?

தரகர் : ஆளுக்கென்ன குறை... மாதம் அறுபது ஆயிரங்கள் உழைக்கிறாராம்... வெற்றிலைப் பாக்கு, புகையிலை, குடிவெறி, காதல், கள்ளப் பெண்டிர் ஏதுமில்லாத் தங்கக்கட்டி!

கண்ணகியும் சீதையும் : எங்களைப் பற்றி அறிஞ்சீரோ?

தரகர் : எனக்குத் தெரியாமல் போச்சே... நீங்க யாருங்க...

கண்ணகியும் சீதையும் : உங்கட தங்கக்கட்டியைக் கேட்டிருக்கலாமே...

தரகர் : அதைத் தான் பிள்ளையள், நானும் மறந்திட்டேன்!

கண்ணகியும் சீதையும் : இனியாவது நினவில வைச்சிருங்கோ... நாங்க தான் இந்தத் தங்கக்கட்டியின்ர இரண்டு பெண்டாட்டிகள்... இவருக்கு மூன்றாம் பெண்டாட்டி வேணாமுங்க...

தரகர் : ஐயோ! என்னை மன்னிக்கவும்! இனிமேல் இந்தப் பக்கம் தலை காட்ட மாட்டேனுங்க...

"உதுக்குத் தான் பாருங்கோ, ஆளமறிந்து காலை வைக்கவேணும்" என்று சொல்லியபடி குதிக்கால் பிடரியில் பட தரகர் ஓட்டம் பிடிக்கிறார்.

சம்பள நாளன்று...


அழகான அந்த ஊரில் அறிஞர் வாசிகசாலை அருகே நாற்சந்தி. அச்சந்தியில் இளசுகள் கூடிக் கூத்தடிப்பாங்க... அவங்கள் போட்ட நாடகமிது.

ஒருவர் : உந்த வீடென்ன செத்த வீடோ?
                     அங்கே ஆட்களாயிருக்கே...

மற்றவர் : அவங்கட வீட்டிலையா...
                        இன்றைக்குச் சம்பள நாளெல்லோ...
                        கடன் கொடுத்தவங்க
                        காசு பறிக்க வந்து நிக்கிறாங்கோ...


மூன்றாமாள் : சம்பளம் எடுக்கிறதும் கடன்காரரைச் சமாளிக்கிறதும் மாதமாதம் வந்துவிடுமே...

நான்காமாள் : கடன்காரரும் சம்பள நாளும் இப்படித்தான்

இப்படித்தான் சந்திக்குச் சந்தி கூத்தடிப்பவங்க... தங்கட எதிர்காலத்தையும் சிந்தித்தால் கோடி நன்மைகள் கிட்டுமே!