Translate Tamil to any languages.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

இலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவதா?

2017 பிறந்த பின் கேப்பாப்புலவு கவன ஈர்ப்பு நிகழ்வும் 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை குறித்த கருத்தாடலும் சூடாகப் பரவுகிறது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசுக்கு என்ன நடக்கும்? அதனால், இலங்கைத் தமிழருக்கு நன்மை ஏதும் கிட்டுமோ? இன்று இவை தான் இலங்கைத் தமிழரின் உள்ளத்தில் உருளும் செய்தி!

கடும் பனிக்கு மத்தியில் கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம் பற்றியறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

கேப்பாப்புலவு கவன ஈர்ப்பு நிகழ்வுக்கும் இலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் தொடர்பு இருக்கிறது. கேப்பாப்புலவு கவன ஈர்ப்பு நிகழ்வுக்குத் தீர்வு கிட்டாத வேளை, கேப்பாப்புலவையும் இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்கள மக்களைக் குடியேற்றலாம். இவ்வாறே இலங்கைத் தமிழர் வாழும் இடங்கள் பறிபோகலாம். இதனை 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முன்வைத்துத் தீர்வு தருவார்களா? ஐ.நா. அழுத்தம் ஒன்றே இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர்.

அறிஞர்களான இலக்குவனார் திருவள்ளுவன், இ.பு.ஞானப்பிரகாசன் ஆகியோர் வலைப்பூ வழியே நான் இணைத்துக்கொண்ட நண்பர்கள் என்பதில் பெருமை அடைகின்றேன். அவர்களின் முயற்சியில் சிங்கள மயமாக்கப்படும் தமிழர் நிலங்கள் பற்றிப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்.

இலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியமைக்கான வரலாற்றை அறியக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் படியுங்கள்.

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்ட இடங்கள்

மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்கள்….

சிங்களவர் கையகப்படுத்திய தமிழர் வாழ்விடங்கள்
பகுதி - 1
பகுதி - 2

ஈழத்து வரலாறு சொல்லும் பக்கம்

ஈழத்து ஊர்களின் பெயர்கள் பற்றி

மகாவம்ச சிந்தனை மீள்பார்வை

இலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக்  குடியேற்றங்களை ஏற்படுத்துவது தொடருமாயின் இலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவதே வழி! இதனைக் கருத்திற்கொண்டு 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித  உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை குறித்த கருத்தாடலில் தீர்வு ஏதும் கிட்டுமா? அந்நிகழ்வில் இந்த வரலாற்றைச் சொல்லித் தீர்வு ஏதும் பெற்றுத் தர எவராலே முடியும்? இல்லையேல் இலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவது தான் முடிந்த முடிவோ?

1944 இலிருந்து இலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக்  குடியேற்றங்களை ஏற்படுத்துவது தொடருகிறதே! ஆகையால், 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்த  உண்மையைப் பேசுபொருளாக்கி தீர்வு கிட்ட முயற்சி செய்யவேண்டும். ஐ.நா. அழுத்தம் ஒன்றே இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும். இல்லையேல் இலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவதைத் தவிர வேறெந்த முடிவை எடுக்கலாம்???

இப்பதிவுக்கு என்னாலே முடிவுரை எழுத முடியாமலிருக்கிறது. உங்கள் முடிவுகளைப் பின்னூட்டத்தில் வெளிப்படுத்தி உதவுங்கள்!!!

திங்கள், 27 பிப்ரவரி, 2017

விரும்பி வீழ்வது ஆணா? பெண்ணா?

விருப்பம் (ஆசை) அறுபது நாள்; விருப்பத்தில் மூழ்குதல் (மோகம்) முப்பது நாள் என்பது யாமறிந்த கருத்து. விருப்பம் (ஆசை) அதிகரிக்கப் பெரும்விருப்பம் (பேராசை) என்பர். இந்த விருப்பம் (ஆசை) அதிகம் ஆணுக்கா? பெண்ணுக்கா? ஆக மொத்தத்தில் விருப்பம் (ஆசை) அதிகமானால், அதை அடைய முயற்சி செய்து தோல்வியோ பாதிப்போ அடைவது ஆணா? பெண்ணா?

எனது பார்வையில்
பெரும்விருப்பம் (பேராசை)
இருபாலாருக்கும் இருக்கிறதே!
பெண்ணுக்கு
மக்களாயம் (சமூகம்) கண்காணிப்பதால்
பெரும்விருப்பத்தை (பேராசையை) அடைய
முயலாமல் இருக்கலாம்...
ஆணுக்கு
மக்களாயம் (சமூகம்) கவனிக்காதிருக்க
பெரும்விருப்பத்தை (பேராசையை) அடைய
முயன்று தோற்று இருக்கலாம்...
ஆனால், இருபாலாரும்
பெரும்விருப்பம் (பேராசை) கொண்டால்
பாதிப்பும் இருபாலாருக்குமே!

ஆனால், திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில் அதிக விருப்பத்தால் (ஆசையால்) பாதிப்புக்கு உள்ளாவது ஆண்கள் என்கிறார்கள். பெண்களுக்கோ விருப்பம் (ஆசை) இருந்தாலும் மட்டுப்படுத்தப்படுகிறதாம்; அதனால் அவர்களுக்குப் பாதிப்புக் குறைவாம். ஆகையால், அதிக விருப்பத்தால் (ஆசையால்) அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது ஆண்கள் என்கிறார்கள். கீழே திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் பட்டிமன்றத்தைப் பாருங்கள். பின்னர், பின்னூட்டத்தில் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

இரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
(குறள் - 467)


விளக்கம்: எந்தவொரு செயலையும் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளையும் எண்ணிப் பார்த்தே, அதில் இறங்க வேண்டும். செயலில் இறங்கிய பின் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளை எண்ணிப் பார்ப்பது தவறாகும்.

ஒரு செயலைச் செய்யும் முன்னரே, நன்றாக எண்ணமிட்டுச் செயற்பட்டாலும் தோல்வி வருகிறதே! அதற்காகக் குறளைப் பொய் என்று சொல்லலாமா? பொய்யாமொழிப் புலவர் சொன்னதில் எந்தத் தவறும் இருக்காதே! அப்படியாயின், நாங்கள் எண்ணமிட்டதில் தான் தவறு இருக்க வேண்டும்.

நான் கவிதை போல, கதை போல, நகைச்சுவை போல எதையாச்சும் எழுதி வெளியிடுகிறேன். அவ்வேளை நான் எழுதியது எனக்குச் சரியென்றே தோன்றும். நான் எழுதியதை வாசித்தவர், அதில் பல தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். அதன் பின்னரே, எனது தவறுகளை நான் உணர முடிகிறது.

அதுபோலத் தான், நன்றாக எண்ணமிட்டுச் செயற்பட்டாலும் தோல்வி வரக் காரணம் இருக்கிறதே! அதாவது நன்றாக எண்ணமிடும் வேளை இரண்டு பக்கமும் எண்ணிப் பார்க்காமல் இருப்பதால் தான் தோல்வியைச் சந்திக்க முடிகிறது. அதெப்படி இரண்டு பக்கமும் எண்ணிப் பார்ப்பது? அதைப் பற்றிக் கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம்.

1. சொல், செயல், பொருள் ஆகியவற்றில் நன்மை, தீமை ஆகிய இரண்டு பக்கமும் இருக்கிறதே. பொருளில் நல்ல பொருள், கெட்ட பொருள் எதுவென எவரும் அறியலாம். அது போலச் சொல்லில் (பேச்சில்) நல்லது, கெட்டது எதுவென எவரும் அறியலாம். ஆனால் செயலில் நல்லது, கெட்டது எதுவென எப்படி அறிவீர்?

சிலர் தம்மை அடையாளப்படுத்தச் சில செயல்களைச் செய்யலாம். அச்செயலின் விளைவுகளை அறிய மறந்துவிடுவதாலேயே தோல்விகளைச் சந்திக்கின்றனர். இப்படி இந்தச் செயலைச் செய்துவிட்டால் வெற்றி கிட்டும் என்று நினைக்கிறோம். இவ்வாறே இப்படி இந்தச் செயலைச் செய்துவிட்டால் தோல்வி கிட்டும் என எண்ண மறந்துவிடுவதாலும் தோல்விகளைச் சந்திக்கின்றோம்.

ஒரு செயலைச் செய்ததும் உடனே நன்மையைத் தரலாம்; காலம் கடந்து தீமையைத் தரலாம். இவ்வாறே, ஒரு செயலைச் செய்ததும் உடனே தீமையைத் தரலாம்; காலம் கடந்து நன்மையைத் தரலாம். இதனை நாம் எண்ணிப் பார்க்கத் தவறுவதாலேயே தோல்விகளைச் சந்திக்கின்றோம்.

2. "இரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க..." என்றால் எந்த இரண்டு பக்கம் என்று நாமறிய மறந்துவிடுவதாலும் தோல்விகளைச் சந்திக்கின்றோம். அந்த இரண்டு பக்கங்களை இனங்கண்டு அதற்கேற்ப எண்ணமிட்டுச் செயற்பட்டாலும் தோல்வி நெருங்க வாய்ப்பில்லையே!

நேர் எண்ணம் (Positive) என்றால் தன்னைப் பற்றியது அல்லது தன் செயலாற்றல் பற்றியது எனலாம். மறை எண்ணம் (Negative) என்றால் தன்னை விடச் சிறந்தவர் இருக்கலாம் அல்லது தன் செயலாற்றலை விட வலுவானதும் இருக்கலாம் என்பதாகும். நேர் எண்ணம் (Positive) என்றால் நமது செயலை நடத்துதல் எனின் மறை எண்ணம் (Negative) என்றால் நமது செயலை நடாத்த இடையூறு தருவனவற்றையும் குறிப்பிடலாம். எனவே ஒரு செயலைச் செய்யும் முன்னரே நேர் எண்ணம் (Positive), மறை எண்ணம் (Negative) ஆகிய இரண்டு பக்கங்களையும் எண்ணிப் பார்த்தவங்க வெற்றி பெறுவாங்க.

3. நன்மை/ நல்லது அல்லது தீமை/ கெட்டது ஆகியவற்றைச் சிந்திப்பதும் இரண்டு பக்கம் தானுங்க... ஆனால், அவற்றைத் தன்னுடைய பக்கத்திற்கு மட்டும் பார்த்தால் தோல்வி தானுங்க... தன்னுடைய பக்கத்தைப் பார்க்கிற அதேவேளை குறித்த செயலில் பங்கெடுக்கின்ற பிறரது பக்கத்தையும் கவனித்தால் வெற்றி தானுங்க...

எடுத்துக்காட்டாக,
"காதலித்தவள் ஏமாற்றியதால்
நானும் பாப்புனைகின்றேன்!" என ஆண் எழுதலாம். இது ஒரு பக்கம்!
"காதலித்தவன் ஏமாற்றியதால்
நானும் பாப்புனைகின்றேன்!" என பெண் எழுதலாம். இது இன்னொரு பக்கம்!
படைப்பாக்கும் போது இவ்விரு பக்கங்களையும் எண்ணிப் பார்க்கலாம்.

எமது படைப்புகளில் எமது உள்வாங்கல்கள் இருக்கலாம். நாம் வெளியிட்ட பின் வாசகர் வாசிக்கின்றனர். எமது படைப்புகளில் வாசகர் எதிர்பார்ப்புகள் இல்லையெனின், வாசகர் எமது படைப்புகளை வெறுக்கலாம். எனவே, ஒரு படைப்பாளி தனது உள்வாங்கல்களுடன் வாசகர் எதிர்பார்ப்புகளையும் இரண்டு பக்கங்களாகக் கருதிப் படைப்பாக்கும் போது தான் வெற்றி காணலாம்.

4. நாம் நிறைவடைய அல்லது மகிழ்வடைய எதனையும் செய்யலாம். எமது செயலின் பயனர் விரும்பாது இருக்கலாம். இங்கேயும் நமது செயல், நமது செயலின் பயனர் என இரண்டு பக்கங்கள் இருக்கின்றது.

நமது செயலைச் செய்யும் வேளை, நமது செயலின் பயனர் விருப்பங்களையும் அறிந்து செயற்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, மேடையில் ஏறிக் குத்துப் பாட்டுப் பாடினால் சிலர் விரும்பலாம். அதேவேளை கண்ணதாசனின் தத்துவப் பாட்டுப் பாடினால் பலரும் விரும்பலாம்.


தனது நன்மைகளை மட்டும் கருதாமல் பயனர்களின் நன்மைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும். அதாவது, பயனர் விருப்பறிந்து செயலைச் செய்வதனாலேயே வெற்றி காணலாம்.

5. சூழவுள்ளோருக்கு நன்மை செய்வதால் நற்பெயர் கிட்டுமென எதிர்பார்ப்போர்; சூழவுள்ளோருக்கு விருப்பமில்லா எதனையும் செய்வதால் கெட்ட பெயர் கிட்டுமென எண்ண மறந்தால் தோல்வியே!

நமது பக்கத்தை மட்டும் நாம் பொருட்படுத்துவதால் தோல்வி தான் தொடரும். அடுத்தவர் பக்கத்தையும் பொருட்படுத்தி, அடுத்தவர்கள் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப எம்மையும் சரிப்படுத்தி எச்செயலிலும் இறங்கினால் வெற்றி தான்.

"உதவி செய்; பலனை எதிர்பாராதே!" எனப் பகவத் கீதை சொன்னது போல பலருக்கு உதவி செய்தவர்கள், என்றும் எப்போதும் எச்செயலிலும் வெற்றி பெறுகிறார்கள். அதற்கு அவர்கள் திரட்டிப் பேணும் நன்மதிப்பே துணைக்கு நிற்கிறது.

நாடு உனக்கென்ன செய்ததென்பதை விட, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்பதே கேள்வி. நாட்டுக்கு என்பதை விட, நாட்டு மக்களுக்கு ஏதாச்சும் செய்திருந்தால் நாடெங்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறதே!

6. ஒருவர் தனது உள்ளத்து எதிர்பார்ப்புகளை மட்டும் அடைய முயலாமல், அடுத்தவர் உள்ளத்து எதிர்பார்ப்புகளையும் அறிந்தோ உணர்ந்தோ செயற்பட வேண்டும். இங்கேயும் நமது உள்ளம், அடுத்தவர் உள்ளம் என இரண்டு பக்கங்கள் இருக்கின்றது.

காதலிக்க எண்ணும் ஆண், புகைத்தலையோ மது அருந்துதலையோ வெற்றிலை பாக்குப் போடுதலையோ கடைபிடித்துக்கொண்டு பெண்ணை நாடினால், எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். அதேவேளை காதலிக்க எண்ணும் பெண், அரைகுறை ஆடை அணிந்தோ அடக்கம், ஒழுக்கம் இன்றியோ ஆணை நாடினால், எந்த ஆணும் விரும்ப மாட்டான். இப்படி அடுத்தவர் உள்ளம் எதனை எதிர்பார்க்கிறது என்றறியாமல் இறங்கினால் தோல்வி தான் கிட்டும்.

அடுத்தடுத்துத் தோல்வியைச் சந்திப்பதால், உளத் தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. உளத் தாக்கம் உடலைத் தாக்கலாம். ஈற்றில் உள-உடல் நோய்கள் நெருங்க வாய்ப்பளிக்கும்.

முடிவு: உள்ளம் பற்றி அறிகின்ற படிப்பை உளவியல் என்கிறோம். அதாவது, ஒருவரது உள்ளத்தில் இருப்பதை எப்படி அறியலாம் என்றறிய உளவியல் உதவுகின்றது. எனவே, உளவியல் நோக்கில் எச்செயலுக்குமான இரண்டு பக்கங்களை அறிந்து அப்பக்கங்கள் சார்ந்த உள்ளங்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயற்பட்டால் வெற்றி அடையலாம்.

எடுத்துகாட்டாக, "எட்டுப் பெண்களை நாடி என்னைக் கலியாணம் பண்ணுவியா?" என்று கேட்டேன். எவளும் என்னைக் கலியாணம் செய்ய மறுத்துவிட்டாள். அதற்காக எவளையும் நான் எதிர்க்காது இருந்தமையால், விபத்து ஒன்றில் சிக்கிய வேளை அவ்வெட்டுப் பெண்களும் எனக்குதவினர். "ஆயிரம் நண்பர்களை உருவாக்கு, ஆனால் ஓர் எதிரியேனும் உருவாக்காதே!" என்ற பாவரசர் கண்ணதாசன் அவர்களின் கருத்தைப் பின்பற்றியதால் வெற்றி கண்டேன்.

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் எல்லோரது உள்ளத்து விருப்பறிந்து செயற்பட்டால் வெற்றி. எந்தச் செயலில் ஈடுபட்டாலும் எல்லாப் பக்கங்களிலும் தடைகள் ஏற்படாது இருக்கச் செயற்பட்டால் வெற்றி. எந்தச் செயலில் ஈடுபட்டாலும் எதிர்த்தவர்களைப் பகைக்காமல் பேணுவதும் வெற்றி தான். எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அந்தச் செயலிற்கான இரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க... வெற்றி காணுங்க...

சனி, 11 பிப்ரவரி, 2017

தமிழை வாழ வைக்க (உங்கள் பதில் என்ன?)

உலகத் தமிழ் உறவுகளே! தாய்த் தமிழில் இருபத்தைந்திற்கு மேற்பட்ட பிறமொழிகள் கலந்திருப்பதை அறிவீரா? உலகெங்கும் உலா வரும் தமிழ் உறவுகளே! தமிழ் + ஆங்கிலம் = தமிழாங்கிலம் அல்லது தமிழ் + இங்கிலிசு = தமிங்கிலிசு பேசும் தமிழரே அதிகம். இப்படிப் போனால் இனி மெல்லத் தமிழ் சாகுமென்பேன்! எனவே, தமிழை வாழ வைக்க ஏதாச்சும் நாம் செய்தாக வேண்டும். என் எண்ணத்தைப் பா/கவிதை நடையிலே பகிருகின்றேன்.

எழுதுங்க பிஞ்சுகளே! இளசுகளே!
எழுதுவதால் தமிழ்வளம் பெருகுமே!
தாயவள் ஊட்டிய தாய்த்தமிழாலே
தாய்மையைத் தானும் எழுதலாமே!
உணர்வாலான தமிழ் எழுத்தாலே
உண்மையைத் தானும் எழுதலாமே!
இனிய தமிழில் பிறமொழி நீக்கி
இனியவற்றைத் தானும் எழுதலாமே!
சுவையான தமிழ் சொல்லெடுத்து
சுவையானதைத் தானும் எழுதலாமே!
அழகைப் பார்த்து உணர்ந்ததை
அழகுத் தமிழில் தானும் எழுதலாமே!
துணிந்து விருப்புடன் எழுதுவோர் பெருகின்
இனி மெல்லத் தமிழ் சாகாதென்பேன்!

யாழ்பாவாணனின் எண்ணம், தங்களுக்கு முரணாக இருக்கலாம். அல்லது தங்கள் உள்ளத்தில் தோன்றிய மாற்று எண்ணம் இருக்கலாம். எதுவாயினும் பின்னூட்டத்தில் வெளிப்படுத்துங்கள். அல்லது தங்கள் வலைப்பூக்களிலாவது பகிருங்கள்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

"இலக்கியச் செம்மல்" என மதிப்பளிப்பு


இலங்கை, திருகோணமலை, ஈச்சிலம்பற்று, சிறிசண்பகா மகா வித்தியாலயத்தில் 29/01/2017 ஞாயிறு அன்று ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவர் ரூபன் அவர்களின் "யன்னல் ஓரத்து நிலா" நூல் வெளியீடு இடம்பெற்றது.



மேற்படி நிகழ்வில் உங்கள் யாழ்பாவாணனுக்கு "இலக்கியச் செம்மல்" என மதிப்பளிப்புச் செய்யப்பட்டது. இவ்வாறு மதிப்பளிப்புச் செய்த பெரியோர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.






இவ்வாறு எனக்கு மதிப்பளிப்புச் செய்வதால், மேலும் மேலும் எனது பணிகளைச் சிறப்பாகச் செய்யுமாறு பணிக்கின்றனர். ஆமாம், அவர்களின் விருப்பம் நிறைவேற...

வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேணுதல்
வலைவழியே மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிர்தல்
தமிழ் செயலிகளைத் தயாரித்து வழங்குதல்
வலையுலகப் பதிவர்களை ஊக்குவித்தல்
வலைப் பதிவர்களின் படைப்புகளைத் திரட்டி மின்நூல் ஆக்குதல்
வலைவழியே உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குதல்
போன்ற

எனது பணிகளைச் சிறப்பாகச் செய்வேன் என்று உறுதியளிக்கின்றேன்.