Translate Tamil to any languages.

சனி, 30 மே, 2015

கண்கள் பேசும் மொழி கூட...கண்களால் காண்க
கண்டதில் நல்லது எதுவென்றே
கண்களால் கண்ணுற்ற
கண்டதெல்லாம் வழி காட்டுமே
கண்களால் வழிந்தோடும்
கண்ணீரும் கூட மருந்தாகுமே
கண்களால் இணையர்கள் தேடுவதும்
கண்கள் தான் தாம் களிப்புறவே
கண்கள் வழியே தான்
கண்ணுற்ற காதலர்களும் - அவரவர்
உள்ளத்தில் நுழைகின்றனரே
உள்ளதைச் சொன்னால் - உண்மையில்
கண்களின் பெறுமதியை எவரறிவார்?
அறிவார் தம் நலன் மட்டுமே
அறியார் கண்ணற்றவர் நிலையையே
பாட்டெழுதும் பாவலரின்
பாட்டின் பாடுபொருளும் கண்ணாகுமே
ஒன்பது வாசல் எம்முடலில்
ஒன்றாம் வாசல் கண்ணாகுமே
கண்கள் பேசும் மொழி கூட
கண்கள் தான் அறியுமாமே
கண்கள் வழியே நுழைந்தவை தான்
எண்ணங்கள் தோன்றத் துணையாமே
எண்ணிப் பார்த்தீர்களா
கண்ணில்லாதவன் எண்ணத்தில்
எண்ணற்ற துயரப் புண்களையே?
கண்ணொன்றைக் கொடுங்கள்
கண்ணுள்ளவன் அடைந்த மகிழ்வை
கண்ணின்றித் தானடைந்த துயரை
எண்ணி எண்ணி எடுத்துச் சொல்வரே!
நல்ல கண்ணுள்ளவர்களே - நீங்கள்
மெல்லச் சாவடைந்தால் - உங்கள்
கண்களை உரித்தே - பிறர்
கண்ணில் ஒட்டிக்கொள்ள உதவுங்களேன்
கண்ணின்றித் துயருற்றவர்
கண்ணுள்ளவன் அடைந்த மகிழ்வை அடையத்தானே!

குறிப்பு:- கண் மாற்றுச் சிகிச்சை என்பது சாவடைந்து சில மணி நேரத்துக்குள்ளே சாவடைந்தவர் கண்ணில் விழிவெண்படலத்தை உரித்து பார்வை இழந்தவர் கண்ணில் ஒட்டிவிடுதலே! கண் கொடை(தானம்) என்பது ஒருவர் சாவடைந்ததும் தனது கண்ணை பிறருக்கு இவ்வாறு வழங்க உடன்படுதல் ஆகும்.

செவ்வாய், 26 மே, 2015

காதலும் ஒரு மருந்து தான்

காதல் - அது
ஒரு உணர்வு தான்
தூய்மையான (புனிதமான) ஒன்று தான்
அதனை மதிப்பவர்களுக்கு...
காதல் - அது
பிற‌ உயிர்களையும்
விரும்ப(நேசிக்க‌)க் கற்றுத் தரும்
அதனைப் புரிந்தவர்களுக்கு...
காதல் - அது
வெட்டி வேலை தான்
அதனைப் பொழுது போக்காக
எண்ணுபவர்களுக்கு...
காதல் - அது
சாவை(மரணத்தை)த் தேடும் வழி தான்
அது தான் பாருங்கோ
விருப்புகளை அடையும் வரை
விரும்புபவர்களாக
நடிப்பவர்களை நம்பியோருக்கு...
காதல் - அது
அருமையான மருந்து தான்
அதாவது
ஒருவரை ஒருவர்
விரும்புபவர்களாக நடிக்காது
உள்ளத் தூய்மையுடன்
ஒருவரை ஒருவர் நம்பி
காதலிப்போருக்கு மட்டுமே!

ஞாயிறு, 24 மே, 2015

வாங்க, யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!


கண்டேன் அறிஞர் ஒருவரின் பதிவை
(அந்நியன் கணக்கு - ஆக்கம் அறிஞர் கீதா
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/05/ANNIYAN-KANAKKU.html)
கண்டதும் படித்ததும் - என்
எண்ணத்தில் மீள மீள
எண்ணிப் பார்க்க வைத்த
அடிகளை அப்படியே தருகின்றேன்!

அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பில்லைங்க’’
“அஞ்சு கோடி பேர்
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது...’’
“அஞ்சு கோடி பேர்,
அஞ்சு கோடி தடவை
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ... பெரிய தப்புங்க...’’  பதிவைப் படித்த பின்னர் - அந்த
பதிவிற்கான கருத்தாக - நான்
பா/கவிதை போல எழுதிய வரிகளில்
மாற்றம் செய்து பலருக்குக் காண்பித்து
உங்களாலும் பா/கவிதை புனைய முடியுமென
உங்கள் ஆற்றலை வெளிக்கொணர
கடுகளவு முயற்சி எடுக்கிறேன்!
"வாங்க,
யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!" என்று
எல்லோரையும் அழைத்திங்கே - அந்த
அறிஞரின் பதிவைப் படித்த பின்
நான் கிறுக்கும்
பா/கவிதை போன்ற வரிகளாயினும் சரி
துளிப்பா, குறும்பா, புதுப்பாவாயினும் சரி
யாப்பறிந்த (மரபுப்) பாக்களில் எதுவாயினும் சரி
உங்கள் கைவண்ணங்களில் ஆக்கி
பின்னூட்டங்களில் இட்டு உதவுங்கள்!

இஞ்சாருங்கோ - எங்களால
பா/கவிதை புனைய முடியாதென
ஒரு போதும்
மறுப்புக் கூற வேண்டாமுங்கோ...
"மிச்சக்காசு கிட்டாமையால் வயிறு கடிக்குதே!" என்றோ
"மிச்சக்காசைச் சுருட்டி வீடு வாசல் கட்டுவாங்களோ!" என்றோ
"மிச்சக்காசுக்கு இனிப்பை இடிக்கிறவங்களால
நம்மாளுங்க நீரிழிவால துன்பப்படுறாங்களே!" என்றோ
"மிச்சக்காசாக
ஒரு உரூபாவாயினும் நடத்துனர் தந்திருந்தால்
ஒரு முடர் தேத்தண்ணி குடித்திருப்பேனே!" என்றோ
உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களையாவது
வெளிக்கொணர்ந்தால் பா/கவிதை ஆகுமே - அதில்
பா/கவிதை இயல்பு வெளிப்பட்டு விட
யாப்பில் கூட இயல்புத் தொடை என்பாங்க - இனி
உங்களால பா/கவிதை புனைய முடியும் தானே!

இஞ்சாருங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் பா/கவிதை போன்ற கிறுக்கலை
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

மிச்சக் காசு கொடுக்க முடியாமைக்கு
மாற்று வழியாக
வேண்டாம் வேண்டாமென
இனிப்பை இடிக்கிறாங்க...
இதெல்லாம்
எப்ப இருந்து என்றால்
அந்தக் காலத்து
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்து
என்கிறாங்க,,,
ஈழத்தில இப்படி
இனிப்பை இடிக்கிற வழக்கம்
தொடங்கின காலத்தில
கருணாநிதி ஆட்சிக் காலச் செய்தி என
நாளேடு ஒன்றில் படித்த நினைவு!
இப்ப என்னவென்றால்
இனிப்பை இடிக்கிற வழக்கம் போய்
எங்கள் வயிற்றிலடிக்கிற கதை
தொடங்கிற்று...
சில்லறை இல்லை - அடுத்த
வருகையின் போது தரலாமென
சிலர் சுருட்டுறாங்க...
சில்லறை இல்லை என்றால்
மலடியைப் பிள்ளை பெற வைக்க ஏலுமே என்று
என் பெண்டாட்டியையும் அழவைச்சு
(எமக்குக் குழந்தைகள் இல்லை)
எங்கட வயிற்றிலடிப்பவங்க
பெருகிக் கிட்டே இருக்காங்க!
வணிக நிலையங்களில்
இனிப்பை இடிப்பாங்க என்றால்
தெருக்கோடியிலும் (தெருவெளி வணிகர்கள்) சரி
ஊர்திப்பயணங்களிலும் (நடத்துனர்கள்) சரி
சில்லறை இல்லை என்றெல்லோ
பகற் கொள்ளை அடிக்கிறாங்க!
ஈழத்தில... இந்தியாவில... உலகத்தில...
இது உலாவுவதாகத் தகவல்!

என்னங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் கிறுக்கலைப் படித்தாச்சோ
இனி என்னங்க இழுபறி - யாழ்பாவாணனின்
பாவண்ணத்தைத் தோற்கடிக்கவாவது - உங்கள்
கைவண்ணங்களாலே பாப்புனைந்து வெளியிட்டு
எல்லோரையும் யாப்பறிந்து பாப்புனைய
விரும்ப (ஆசை) வைக்க முன்வாருங்களேன்!

சனி, 23 மே, 2015

இலக்கணம் அறிந்து எழுதுகோல் ஏந்து


"நான் என்ன
என்னைக் காதலி என்று தானே கேட்டேன்!
அதற்கு - நீ
என் கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடிப்பாயா?" என்று ஆணெழுத
"நானாவது
கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடித்தேன்! - என்
கணவன் அருகில் இருந்திருந்தால்
என்னைக் காதலி என்று கேட்டதுமே
என் மனைவியிடமா கேட்கின்றாய் என்று - உன்
கழுத்தையே அறுத்திருப்பாரே!" என்று பெண் பதிலிறுக்க
அழகான பா/கவிதை என்று படித்தவர் புகழ
மிச்சம் சொல்லவும் வேண்டுமா? - தன்னை
பாவலரென்றே முழங்கித் திரிவர் சிறியர்!
இலக்கியம் தோன்றிய பின்னரே
இலக்கணம் தோன்றியது என்பதை
கணக்கில் வைத்துக்கொண்டு - எவரும்
கதை, கட்டுரை, நாடகம் எழுதினாலும்
பா/கவிதை, இசைப்பாட்டு, திரைப்பாடல் எழுத
இயலாதென்பதை எள்ளளவேனும் அறிந்தீரா?
எழுத்து, அசை, சீர், தளை,
பிணை, அடி, தொடை,
பா, பாவினம் என ஒன்பது
உறுப்புகள் கொண்ட தொகுப்பே
பாவிலக்கணம் என்றுரைக்கிறார்
"யாப்பரங்கம்" நூலாசிரியர்
புலவர் வெற்றியழகன்! - இங்கே
தமிழில் 30 + 1 எழுத்துகளா
தமிழில் 247 எழுத்துகளா
என்றெல்லோ மோதுகினம்!
"உன்கண்ணில் நீர்வழிந்தால் -- என்னெஞ்சில்
   உதிரங் கொட்டு தடீ;" என்பது
காதல் கவிதையா? குழந்தைக் கவிதையா?
என்றெல்லோ மோதுகினம்!
பாரதி பாடலும் நன்னூல் அறிவும்
எள்ளளவேனும் அறிந்திருந்தால் கூட
பா/கவிதை புனையலாம் காண் - நீ
பாப்புனைய விரும்பும் ஒருவரா - அப்ப
பா/கவிதை ஒன்றைக் கண்டால்
படித்துப் பாடுபொருள் கண்டுபிடி - மேலும்
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில்
தமிழில் 369 எழுத்துகள் உண்டாம் - நான்
கண்டேன் ஊமைக்கனவுகள் தளத்தில் - பாரும்
பாப்புனைய விரும்பும் எல்லோருக்கும் ஏற்ற
இலக்கண ஆய்வுப்பாடம் ஆங்கே இருக்கே!
இழுத்தடிப்பு வேண்டாம் இப்பவே செல்லங்கே
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கியே படித்தங்கே
http://oomaikkanavugal.blogspot.com/2015/04/blog-post_24.html
இலக்கணம் அறிந்து தெளிந்த பின்
எழுதுகோல் ஏந்து இலகுவாய்ப் பாப்புனையலாம்!


வெள்ளி, 22 மே, 2015

தீர்வேதும் வழங்காத புத்தரின் பௌத்த வழிகாட்டல்


புத்தர் வரலாறு + படம் : http://ta.wikipedia.org/s/58x

உலகுக்கு சிக்கல் சீனப் பௌத்தர்கள்
தமிழருக்குச் சிக்கல் இலங்கைப் பௌத்தர்கள்
புத்தர் வழிகாட்டலைப் பார்க்கும் முன்
புத்தரின் வாழ்வைப் பாரும்...
நாடு வேண்டாமென்றார்
அரச வாழ்வு வேண்டாமென்றார்
இல்லாள் (மனைவி) வேண்டாமென்றார்
அழகான ஆண்மகனை வேண்டாமென்றார்
அப்படியே
எத்தனையோ வேண்டாமென்ற
சித்தார்த்தன் தான் - தானே
புத்தராகித் தானுரைத்த 
பௌத்த வழிகாட்டலிலே
"விருப்புகளைத் (ஆசைகளைத்) தூக்கியெறிந்தால்
அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த
வாழ்க்கையை வாழலாம்!" என்று
வழிகாட்டியும் இருந்தார்! - அந்த
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றும்
சீன, இலங்கைப் பௌத்தர்களுக்கு
விருப்பங்கள் (ஆசைகள்) அதிகமாம்! - அதுவும்
பெண், பொன் விருப்பம் (ஆசை) இருப்பினும்
சீன - அயல் நாட்டு எல்லைச் சிக்கல்
சுட்டிக் காட்டுவதோ சீனப் பௌத்தர்களுக்கு
மண் விருப்பம் (ஆசை) இருப்பதையும்
இலங்கைப் போர்ச்சூழல் சுட்டிக் காட்டுவதோ
தமிழ்ப் பெண்கள் கற்புப் பறித்தல் 
(பெண் விருப்பம் (ஆசை))
தமிழர் பொன்கள் பொறுக்கி எடுத்தல்
(பொன் விருப்பம் (ஆசை))
தமிழர் மண்ணைத் தமதாக்க எத்தனித்தல்
(மண் விருப்பம் (ஆசை))
எல்லாம் இலங்கைப் பௌத்தர்களுக்கு இருப்பதையும்
உலகெங்கும் ஏற்றுக்கொண்ட உண்மையே!
விருப்புகளை (ஆசைகளை) விலக்கிவிட்டு வழிகாட்டிய
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றாத சிங்களவரால்
இலங்கையில் தீர்வின்றி அமைதியின்மை தொடர
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றாத சீனர்களால்
சீன - அயல்நாட்டு எல்லைச் சிக்கல் தொடர
உலகப் போர் ஏற்பட வாய்ப்புண்டோ?

அறிஞர் பகவான்ஜி எழுதிய பாவினிலே
புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை என்கிறார்
நான் அதைப் படித்த வேகத்திலே 
நான் இப்படி எழுத முயன்றேன்!
என்னை இப்படி எழுதத் தூண்டிய
அறிஞர் பகவான்ஜி எழுதிய 'சிரி'கவிதை!
கீழ்வரும் இணைப்புகளில் இருந்தாலும் கூட
நானும் கீழே பதிகிறேன்; படியுங்கள்!

ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற 
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட 
சீனர்களும் சிங்களர்களும் 
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை!

வியாழன், 21 மே, 2015

அறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார்

" 'சிங்களத்தீவு’ அல்ல, அது இலங்கைத்தீவு!" என்ற தலைப்பில்
"மகாவம்சத்தில் எங்குமே சிங்களத்தீவு என இலங்கை அழைக்கப்படவில்லை. வட இந்திய மன்னன்  அசோகனின் புத்த துறவிகளால் சிவனை வழிபட்ட சைவனாகிய நாக அரசன் தேவநம்பியதீசனுக்கு புத்தசமயம் அறிமுகப்படுத்தப்படும் வரை இலங்கையில் புத்தரும் இல்லை, பெளத்தர்களும் இல்லை, சிங்களவர்களும் இல்லை." என்றும்

"சிங்களவர்களின் ஜாதகக் கதைகளில் கூட தமிழர்கள் பற்றிய, தமிழர்களின் நாடு (தெமல ரட்ட) பற்றிய குறிப்புகள் உண்டு, ஆனால் சிங்கள என்ற இனம் பற்றியோ அல்லது மொழி பற்றியோ மகாவம்சம் எழுதப்படுவதற்கு முன்பும், பின்பும் சில நூற்றாண்டுகள் வரை எந்த குறிப்பும் கிடையாது. சிங்கள, சிஹல, ஹேல என்ற எந்தச் சொல்லும் கிடையாது. ஆகவே வரலாற்றின் அடிப்படையில் இலங்கையை சிங்களத் தீவு என அழைப்பது தவறானதொன்றாகும்." என்றும்

முழு இலங்கையுமே தமிழருக்கச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட அறிஞர் வியாசன் முனைகின்றார்.
இணைப்பு: http://viyaasan.blogspot.com/2015/05/blog-post.html
 
"இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?" என்ற தலைப்பில் "இலங்கைச் சிங்களவரின் முதற்குடி அல்லது முதற் தலைமுறை தமிழராகவே இருக்கின்றனர். எனவே, இலங்கை "சிங்களவருடையதா? தமிழருடையதா?" என்று அலசப் பல சான்றுகளைத் தேடினாலும் இறுதியில் ஈரேழு தீவுகளாம் ஈழம் அல்லது இலங்கை தமிழருக்குச் சொந்தமானது என்று முடிவு செய்துவிடலாம்." என முழு இலங்கையுமே தமிழருக்குச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட யாழ்பாவாணன் முனைகின்றார்.
இணைப்பு: http://eluththugal.blogspot.com/2014/05/blog-post_8469.html

மேற்படி, இரு பதிவுகளையும் படித்துப் பார்த்தால் "இலங்கை வரலாற்றில் தமிழர் அடையாளங்களே முதலில் இருந்ததாகவும் சிங்கள அடையாளங்கள் இருக்கவில்லை" என்று அறிஞர் வியாசன்  அவர்களும் "இந்தியாவில் நிகழ்ந்த ஆரியப் புரட்சியின் பின் இந்தியாவில் பௌத்தம் பேணிய தமிழ்ப் பௌத்தத் துறவிகள் "சிங்களம் பயின்று தான் வழிபாடுகளை நிகழ்த்தலாம்" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலை ஈழத்திற்கும் வந்து சேரச் சிங்களமும் இலங்கையில் காலூன்றியது. பின்னர் சிங்களம் பேசுவோர் சிங்களவராயினர்." என்று யாழ்பாவாணனும் என்ன சொல்ல வருகின்றனர்?

" 'சிங்களத்தீவு’ அல்ல, அது இலங்கைத்தீவு!" என்றாலும் "இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?" என்றால் இல்லை தமிழருக்குச் சொந்தமானது என்றாலும் இருவருமே முழு இலங்கையுமே தமிழருக்கச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட முன்நிற்கின்றனர். ஆயினும், யாழ்பாவாணனை விடச் சுவைமிகு கைவண்ணத்தில் நம்பக்கூடிய தக்க சான்றுகளை முன்வைத்து அறிஞர் வியாசன் அவர்கள் தன் கருத்தை உறுதிப்படுத்துவதைப் பார்த்தால் அறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார் என்றே கருதமுடிகிறது.

முடிவு: முழு இலங்கையுமே சிங்களவருக்கல்ல தமிழருக்கே சொந்தமானது.

அழும் முகங்களும் துயர் முகங்களுமாகஎண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
தண்ணீர் தண்ணீராகக் கொட்டும்
கண்ணீர் கண்ணீராக வடிக்கும்
பெண்ணென்ன ஆணென்ன
மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே
வாழும் போது காண்கிறேன் - நாளும்
எத்தனையோ துயரைப் பாரும் உறவுகளே!
யாரும் வாழ்வில் மகிழ்வடைந்தால்
வெளிப்பட்டு வராது - ஆனால்
வழி நெடுக நான் காணும்
எவர் முகத்திலும் துயரே தெரிகிறதே!
எண்ணி எண்ணிப் பார்த்தேன்
நம்மாளுகள் உள்ளத்திலே
மகிழ்வு வந்து போகிறதே தவிர
துயரம் தான் குந்தி விடுகிறதே!
இன்றைய மகிழ்வைக் கூட
நாளைக்கு வைத்துச் சுவைக்க இடமின்றி
நேற்றைய, முந்திய துயரல்லவா
என்றும் வந்து தடுத்து விடுகிறதே!
எண்ணி எண்ணிப் பார்த்தால்
நம்மாளுகள் தங்கள் உள்ளத்திலே
துயரைச் சுமக்கத் தெரிந்தது போல
மகிழ்வைச் சுமக்கத் தெரியாமல் இருப்பதே
அழும் முகங்களும் துயர் முகங்களுமாக
நம்முன்னே உலாவுகின்றனரே!திங்கள், 18 மே, 2015

ஆடைக்குறைப்பு அழகல்ல...


ஆள் வளர ஆடை குறைவதா?
ஆளும் வளர
அறிவு வளருமென்று பார்த்தால்
ஆடையைக் குறைக்கப் போய்
அறிவு மங்கியது தான் மிச்சமா?
இளசுகள் உடுத்தித் திரிவதைக் கண்டு
பெரிசுகள் உங்களை வெறுக்கிறாங்களே!

ஆண்களே! - உங்கள்
கீழ் சட்டை வழுகிக் கீழிறங்கலாமா?
பெண்கள் முகம் சுழிக்கிறாங்களே!
வழுகிக் கீழிறங்கும்
கீழ் சட்டையைப் பார்த்து...
பெண்கள் உங்களை வெறுக்கிறாங்களே!

பெண்களே! - உங்கள்
மேல்-கீழ் சட்டைகள் குட்டையாகலாமா?
ஆண்கள் முகம் சுழிக்கிறாங்களே!
குட்டையான சட்டைக்கு
மேலும் கீழும் தெரிவதைக் கண்டு
ஆண்கள் உங்களை வெறுக்கிறாங்களே!

அழகு என்பது இதுவல்ல
அழகாக மூடி வைக்கப்பட்ட
ஒன்றின் மீது தான்
விருப்பம் மேலோங்குகிறது...
அது பற்றிச் சிந்திக்காமல்
இது தான் அழகென்று
இப்படிக் காட்டுவதால் என்ன பயன்?
இளசுகளே - எல்லோரும்
உங்களை வெறுக்கிறார்களே!

முடிவாக ஒன்று...
ஒரு வேளை கூட
ஒழுங்காகச் சாப்பிட முடியாதவர்கள் கூட
முழு ஆடை அணிந்து மின்ன
பணத்துக்கு மேல் படுக்கின்ற
சில முகங்களே
மேல் நாட்டு விருப்பில்
நம்ம பண்பாட்டை அழிக்கிறார்களே!

சனி, 16 மே, 2015

இப்படியும் எண்ணத் தோன்றுகிறதே!


கால ஓட்டத்தைக் கண்காணித்தால்
கடவுள் கூடப் பணமென்றால்
நம்ம வீட்டுப் பக்கம்
வருவார் போல எண்ணத் தோன்றுகிறதே!
அங்காடியில் பாரும்
"உறவுக்குப் பகை கடன்" என்று
எழுதித் தொங்க விட்டிருப்பதை...
என் அறிவுக்கு எட்டிய வரை
"பணம் உறவை முறிக்கும் மருந்து" என்று
நாளுக்கு நாள் எண்ணத் தோன்றுகிறதே!
படிப்பு, பள்ளித் தேர்வு என்றாலும்
பணம் தான் குறுக்கே வருகிறது என்றால்
காதல், மணவாழ்வு என
எதற்கெடுத்தாலும்
பணம் இருந்தால் சுகமென
விடிய விடிய எண்ணத் தோன்றுகிறதே!
நட்பு, உறவு என எதுவானாலும்
பணம் உள்ள வரை தான்
பின் தொடர்வோரைப் புரிந்தால்
பணம் இல்லை என்றால்
எல்லாமே இல்லை என்றாகிவிடுமென
தனித்து வாழ்கையில் எண்ணத் தோன்றுகிறதே!
ஊருக்கூர் வீட்டுக்கு வீடு
நம்மாளுகள் வாழ்வதைப் பார்த்தே
நானும்
எண்ணி எண்ணிப் பார்த்தே
தலையைப் போட்டு உடைத்தே
உளவியல் அறிஞரானது தான்
எனக்குக் கிடைத்த பரிசு என
இரவுத் தூக்கத்தில் எண்ணத் தோன்றுகிறதே!
வருவாய், வருவாய் - நீ
தருவாய், தருவாய் என
எத்தனையோ எண்ணித் தானே
காத்திருந்து காத்திருந்து பழகினால்
கடைசியிலே 'பிரிவு' என்ற 'பரிசு' தானே
கண் முன்னே காதுக்கு எட்டியதும்
பணத்தின் வேலையென எண்ணத் தோன்றுகிறதே!
வருவாய், தருவாய் - நீ
உளதாய், தருவதாய் - நீ
அன்பைத் தருவதாய்க் கொடுப்பதாய்
பழகும் உறவல்லவா - நீயென
நாளும் பழகும் உறவுகளில்
நாலு பணம் குறுக்கே வராது
வாழ்வில் 'பிரிவு' என்றும் வராது
அன்பைக் கொடுத்து வாழ்வோரை
காணும் போதெல்லாம் எண்ணத் தோன்றுகிறதே!


தெருவெளிக் குழந்தைகள்

காதல் எனும் தேர்வெழுதப் போய்
அழகு(காமம்) எனும் பெறுபேறு கிடைக்க
அழகில்(காமத்தில்) விருப்பம் மேலோங்க
காதல் நெருக்கம் துணைநிற்க முடிந்தது
"தெருவெளியில் வீசப்படும் குழந்தைகள்!"

புதன், 13 மே, 2015

இலக்கியத் திருட்டு - இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?

என்ர கவிதையைத் திருடி அவளு போட்டிருந்தாள்.
என்ர படத்தைத் திருடி அவனு போட்டிருந்தான்.
இப்படிப் பல இலக்கியத் திருட்டுகள் தொடருகின்றன...
கடைசியாகக் கிடைத்த செய்திகளின் படி அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவையைப் பொறுக்கி இந்திய முன்னணி நாளேடு ஒன்றில் போட்டிருக்கிறாங்களாம். நாளேடுகளே இலக்கியத் திருட்டை மேற்கொண்டால் எழுதுறவங்க பாடு திண்டாட்டம் தான்.

எவங்க ஐயா? எவங்க அம்மா?
எப்பதான்... எப்படியுங்க...
திருவிளையாடல் திரைப்படத்தில மாற்றார் கவிதையை அனுப்பி ஆயிரம் பொற்காசு வென்றெடுத்த தருமியைப் பார்த்து கவிதைக்கான விளக்கத்தைச் சொல்லு என்ற கேட்ட வேளை தருமி பட்ட பாட்டைப் பார்த்தியளோ? அப்படித்தான் இலக்கியத் திருட்டில எழுதுறவங்க பாடு திண்டாட்டம் என்கிறேன்.

உவன் யாழ்பாவாணனும் உப்படிப் பல படைப்புகளைப் பொறுக்கி இலக்கியத் திருட்டுச் செய்கிறான். முறையாகத் தருமியைப் போல சிக்கவில்லைப் போலும்...அதனால அவர் மற்றைய வலைப்பூக்களுக்குள்ளே உள்நுளைந்து பொறுக்கி எழுதிய பதிவைத் தருகிறேன். உங்களால் முடிந்தால் யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...

அப்பதிவின் தலைப்பு:
இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?

அடுத்து அவரது பதிவைப் படியுங்க:

"இருட்டிலும் ஒளிர ரேடியமா உள்ளது பெண்களிடம்:)" என்ற 
http://www.jokkaali.in/2015/05/blog-post_71.html
அறிஞர் பகவான்ஜி அவர்களின் பதிவிலிருந்து.

''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு 
ஷேக்ஸ்பியர் என்ன அர்த்தத்திலே சொல்லி இருப்பார்?'' என அறிஞர் பகவான்ஜி தன் நகைச்சுவையில போட்டிருந்ததை அறிஞர் வருண் படித்திருக்கிறார்.

"விளக்கை அணைப்பதே பெண்கள், ஆண்கள் அழகைப் பார்த்து "மூட் அவ்ட்" ஆகமல் இருக்கத்தான்." என்று அறிஞர் வருண் தனது கருத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.

அப்படியென்றால், வில்லியம் ஷேக்ஸ்பியர் இருட்டில ஆணா, பெண்ணா அழகானவங்க என்று எண்ணிப் (கற்பனை செய்து) பார்த்திருக்காங்க...

அவரவர் அழகை அடுத்தவர் கண்ணால பார்த்தாலும் அதனை உள்ளக் (மனக்) கண்ணால தான் எடை போடுறாங்க (இரசிக்கிறாங்க) என்பேன். ஆகையால், இருட்டிலும் சரி வெளிச்சத்திலும் சரி  எல்லோரும் அழகு தான்.  

இப்படி அவரது பதிவை முடித்துக் கொள்கிறார். இங்கே சின்னப்பொடியனாக யாழ்பாவாணன் இருந்துகொண்டு பகவான்ஜி, வருண் போன்றோரின் கருத்துகளை அதுவும் ஜோக்காளி தளத்தில இறங்கிச் சுழியோடிப் பொறுக்கித் தன்னுடைய பதிவை ஆக்கியிருக்கிறார். பகவான்ஜி, வருண் ஆகியோரது கருத்தில்லை என்றால் யாழ்பாவாணனின் பதிவுக்கு உயிர் இருக்காது. அப்படியாயின், யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...

நானும் ஆளை மாட்டிவிட்டால், யாழ்பாவாணன் இனி மாற்றார் அறிவைப் பொறுக்கி தன் வலைப்பூக்களில் எழுதமாட்டார் என்று தான் எண்ணியிருந்தேன். "கருத்துச் சொந்தக்காரர் பெயர், கருத்து வெளியான தளமுகவரி, எந்தப் பதிவிலிருந்து பொறுக்கியது என எல்லாம் எழுதியிருப்பதால் இலக்கியத் திருட்டு இல்லை" என என்ர பெண்டாட்டி சொன்னாள். அது தான் "யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைக்க முடியாதா?" என்று உங்களைக் கேட்கிறேன்.

எனது இனிய உறவுகளே!
எனது புதிய வலைப்பூவைப் படித்துப் பார்த்து மதியுரை தருவீர்களென நம்புகின்றேன்.
இணைப்பு: https://ial2.wordpress.com/

சனி, 9 மே, 2015

யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு - குறும்படம்

வழமை போல் நான் விரும்பும் பதிவர்களின் பதிவுகளை மேய்ந்த போது பாவலர் நா.முத்துநிலவன் ஐயா பக்கம் கண்ணில் பட்டது. நானும் பார்வையிட்டேன். பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்கள் "தண்ணீர்ப்பஞ்சம் - குறும்படம்" என்ற தலைப்பில் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
(படம்: வளரும் கவிதை தளத்தில் இருந்து) 

"தண்ணீர்ப் பஞ்சம் காரணமாகவே நான்காம் உலகப்போர் வரலாம்." எனத் தொடரும் அவரது பதிவில் "முடிந்தால் பகிருங்கள். அந்த நண்பருக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுங்கள்." என வழிகாட்டுகின்றார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் வழிகாட்டலின் படி நானும் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் வெளிவர உந்துசக்தியான அறிஞர் யாழ். மதிசுதா அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுகிறேன். இவ்வாறான விழிப்புணர்வுப் படங்களை நான் என்றும் வரவேற்கிறேன்.

உலகம் வெப்பமடைதல், வானில் ஓசோன் ஓட்டை எனப் பல காரணங்களை நீட்டி உலகெங்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு வரலாம் என அறிஞர்கள் ஆளுக்காள் பதிவுகளைப் பதிவார்கள் என நம்புகின்றேன். ஆயினும், "யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு" என்ற தலைப்பில் நான் சொல்ல வரும் செய்தி வேறு.

பத்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் இருந்து மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அக்காலப் பகுதியில் மின்பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்களின்) கழிவு எண்ணெய்களை (கழிவொயில்களை) நிலத்திற்குக் கீழே கருவிகளின் பின்னூட்டத்துடன் செலுத்திக்கொண்டு வந்தனர். 

அதன் தாக்கம் தற்போது நிலத்திற்குக் கீழே நன்நீர்ப் படையுடன் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்துவிட்டது. அதனால், யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதிக்கு அண்மையாக உள்ள நன்நீர் ஊற்றுக் கிணறுகளில் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்த நீரே வெளிவருகிறது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடும் வேளாண்மைச் செய்கையைத் தொடர முடியாமையும் ஏற்படுகிறது.

இந்நிலை ஏற்படக் காரணம் அறிஞர்கள் தூக்கத்தில் இருந்தமையே! அதென்ன தூக்கம்? அதுதான் நிலத்திற்குக் கீழே செலுத்தியதை நடுக்கடலில் கலக்கவிட்டிருக்கலாம் என மாற்றறிஞர்கள் கருதுகின்றனர். இனியென்ன செய்யலாம்? காலம் கடந்து அறிவு (ஞானம்) வந்தென்ன பயன்?

இதற்கும் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்திற்கும் என்ன உறவு? யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு வலுப்பெற்றால் என்ன நிகழும்? ஒன்றரை மணித்துளியில் உறைப்பாகக் காட்சிப்படுத்திச் சொல்ல வந்த செய்தி என்ன? இவற்றிற்கு விடைகாணக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்தைப் பாருங்கள்! முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


நன்நீரைப் பேணுவோம் நம்மவர் வாழ்வை வளப்படுத்துவோம்.மின் இதழும் மின் இதழ் வடிவமைப்பும்


பத்து மாதம் வயிற்றிலே
பிள்ளையைச் சுமந்து
பெற்றெடுத்தவளுக்குத் தான் தெரியும்
மகப்பேற்று வலி!
ஒரு பக்கம் தட்டச்சுச் செய்ய
நம்மாளுகள் படுகிற பாட்டை
தாங்களும்
அறியாமல் இருக்க முடியாதே!
முன், பின், நடு
மேல், கீழ், நடு
இடம், வலம், நடு
அமைப்புகளுக்கேற்ப நிறங்கள்...
நிற அமைப்புகளிற்கு உள்ளே
கனதியான படைப்புகள்...
சொல்ல வரும் செய்திக்கேற்ப
படைப்புகளின் தொகுப்பு...
இப்படியே அடுக்கித் தான்
மின் இதழ் என்ன
மின் நூல் என்ன
எந்தவொரு
மின் வெளியீடு என்ன
உருவாக்கி வெளியிட வேண்டியிருக்கே!
தடைகள் பல தாண்டி
எண்ணங்கள் பல கொட்டி
விடியும் வரை விழித்திருந்து
இதழோ நூலோ வெளிக்கொணர
படைப்பாளி பட்ட வலி
எவருக்குத் தான் தெரியுமிங்கே!
"நமது திண்ணை" என்றொரு மின் இதழை
( மின்னிதழைப் பதிவிறக்க இங்கே சொடுக்குக )
எப்படித் தான் வடிவமைத்திருப்பார்களோ?
பக்கங்களின் சுமையையும்
பக்க வடிவமைப்பு நுட்பங்களையும்
பதிவிறக்கிப் படித்தால் தான் தெரியுமே!
அதற்கு முன்னர்
அறிஞர் இராதாகிருஷ்ணன் ஆக்கிய
"நமது திண்ணை - சிற்றிதழ்
வடிவமைப்பு" பற்றிய விரித்துரைப்பை
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்!
வெளியீடுகள் என்பது
எழுத்துகளில் தான் இருப்பினும்
கண்ணுக்கு குளிர்மை தரும்
பின் புற நிறம்
எழுத்துகள் சொல்லும் செய்திக்கு ஏற்ப
பின் புறப் படம்
பின் புற அமைவிற்கு ஏற்ப
எழுத்துகளின் நிறம்
வெளியீடுகளின் அளவிற்கு ஏற்ப
பதிவுகளின் நீளம்
இன்னும் இன்னும்
எத்தனையோ இருக்கலாம்...
படித்துப் பார்த்தால் படித்துக் கொள்ளலாமே!
மின் இதழும் 
மின் இதழ் வடிவமைப்பும்
எப்படி இருக்க வேண்டுமென அறிந்தால்
நமது மின்நூல் கூட
எப்படி இருக்க வேண்டும் என்பதை
நான் சொல்லாமலே - நீங்களே
கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கே!

வெள்ளி, 8 மே, 2015

மின்நூல்கள் என்றால் இலகுவாய் வெளியிடலாமா?

ஒரு நூல் வெளியீட்டையும் ஒரு தாயின் மகப்பேற்றையும் ஒப்பிட்டு தாயின் மகப்பேற்று வலி போலத் தான் ஒருவரது நூல் வெளியீட்டு வலியும் இருக்குமென்பர். தாயானாவள் தன் குழந்தையைச் சுமந்து ஈன்றெடுக்கம் நாள் வரை பட்ட துயர் எழுத்தில் எழுதிவிட முடியாது. அது போலப் படைப்பாளியின் உள்ளத்தில் கருவுற்ற எண்ணம் எழுதி,  தொடராக வெளியாகி. தொகுத்து நூலாக உருவாகி வெளியிடும் வரை படைப்பாளி பட்ட துயரும் அதை விட அதிமாகத் தானிருக்கும்.

நம்மாளுகள் சிலரின் தவறான எண்ணங்கள் பல படைப்பாளிகளின் உள்ளத்தை நோகடித்து இருக்கிறது.
உவர்களுக்கென்ன
எம்.எஸ்.வேர்ட்டில் தட்டிப்போட்டு
போட்டோசொப்பில் வெட்டிப்போட்டு
பிடிஎஃப் இல ஒட்டிப்போட்டு
வலையில காட்டிப்புட்டால்
மின்னூல் என்பாங்க!

இப்படி மின்னூல் ஆக்கியோரைச் சொல்லால் அடித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு படைப்பாளி தனது மின்நூலை வெளிக்கொணர எவ்வளவு துன்ப, துயரங்களைச் சந்தித்திருப்பார். நான் கூட மின்னூல் ஒன்றை ஆக்கி வெளியிட்ட வேளை பட்ட துயரை உணர்ந்தே இவ்வாறு மின்னூல் வெளியிடுவோரை நோகடிக்க வேண்டாம் எனப் பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தனைக்கும் மத்தியில் எப்படியோ பல அறிஞர்கள் தங்கள் மின்னூல்களை வெளியிடுகிறார்கள். அவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அந்த வகையில் அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் மின்னூல் விரிப்பைப் பார்க்க முடிந்தது. அதிலும் தமிகத்தில் இருந்து "ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்" என்றொரு ஈழம் சார்ந்த கட்டுரைகளையும் மின்னூல் ஆக்கியுள்ளார். அவரது மின்னூல்களைப் பதிவிறக்கிப் படித்துப் பாருங்கள்.

ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்
"ஈழம் சார்ந்த கட்டுரைகள்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/

தமிழர் தேசம்
"நானும் எங்க ஊரும்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/

வெள்ளை அடிமைகள்
"என் நாடு இந்தியா. நான் இந்தியன்" என்று  தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/white-slaves/

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்
"திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/factory-notes/

பயத்தோடு வாழப் பழகிக் கொள்
"நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம்." என்று  தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/live-with-fear/

படம் - அவரது நூலறிமுகத்தில்...

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
"நான் தமிழ்நாட்டில் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் மாசுபட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல வற்றையும், சந்தித்த அனுபவங்களையும் எழுதி உள்ளேன்." என்று  தொடருகிறார்.

படம் - அவரது நூலறிமுகத்தில்...

அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இவற்றைவிட டொலர் நகரம் என்றொரு நூலையும் அறிஞர் வெளியிட்டுள்ளார். அறிஞரின் மின் நூல்களைப் பதிவிறக்கிப் படித்த பின், தங்கள் எண்ணங்களைப் பகிருமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன். 
செவ்வாய், 5 மே, 2015

இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்

இசைக்குப் பாடல் புனைவது பற்றிய அடிப்படைக்குறிப்புகளை கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://www.ypvnpubs.com/2014/01/blog-post_93.html
மேலும், இசைக்குப் பாடல் புனையும் வேளை எதுகை, மோனை போன்ற இலக்கணத் தெளிவு வேண்டும். அவ்வாறு எல்லாம் சரிபார்த்தீர்களா என்று கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://www.ypvnpubs.com/2014/09/blog-post_26.html

ஆனால், இன்று கவியரசர் கண்ணதாசன் வரிகள் எப்படிப் பாடலாயிற்று என்று பாருங்கள். ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கண்ணதாசன் ஆக்கிய கவிதையைப் பாருங்கள். இப்படி இசை சொட்டப் பாப்புனைந்தால், இசைக்குப் பாடல் புனைய வருமே

அத்தான்...என்னத்தான்...
அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி

அவர் கையைத்தான்
கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஏனத்தான் என்னைப் பாரத்தான்
கேளத்தான் என்று சொல்லித்தான்
சென்ற பெண்ணைத்தான்
கண்டு துடித்தான் அழைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான் வளைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கவியரசர் கண்ணதாசன் ஆக்கிய வரிகளில் இசை துள்ளி விளையாடுவதைப் பார்த்தீர்களா? திரை இசைப் பாடல்கள் எல்லாமே இசை துள்ளி விளையாடும் பா/கவிதை ஆக இருந்தே வந்திருக்கிறது. மேலும், பிறமொழிச் சொல்கள் உட்புகுத்தாத/ திணிக்காத பா/கவிதை வரிகளாக இவ்வெடுத்துக்காட்டு அமைந்திருக்கிறது. நீங்களும் இப்படித் தூயதமிழில் துள்ளி விளையாடும் இசையுள்ள பாக்கள்/கவிதைகள் புனைந்து பாருங்கள். பின் திரை இசைப் பாடல் போல அமைய இசைச்சுப் பாருங்கள்; அதற்கேற்ப உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்துங்கள். அவ்வாறு கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழே பாருங்கள்.

பாடல்: அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
குரல்: P.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
படம் : பாவமன்னிப்பு
இசை: விஸ்வநாதன் - இராமமூர்த்தி

அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

ஏனத்தான் என்னைப் பாரத்தான் கேளத்தான் என்று சொல்லித்தான் (2)
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான் அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் (2)
என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

நீங்களும் ஆக்கிய உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்தியதும் இசைச்சுப் பார்க்கையில் திரை இசைப் பாடல் போல அமைந்திருந்ததா? இதோ கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் ஒழுங்குபடுத்தப்பட்டதும் திரை இசைப் பாடலாக ஒரு காலத்தில் மின்னிய பாடலைக் கேட்டுப் பாருங்கள்.


மேலுள்ள பாடல் வரிகளைப் படித்த பின் பாடலையும் கேட்டுப் பார்த்து என்னதான் புரிந்து கொண்டீர்கள்? 'தான்' என்றவாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைவைதைக் கண்டிருப்பீரே! அந்த இசையே பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பதை அறிவீர்களா? இசையுள்ள பா/கவிதை எழுத முடிந்தால்; அதற்கும் இசை அமைக்கலாம். இசை மெட்டுக்கும் பாடல் எழுதலாம். எல்லாம் உங்கள் பயிற்சியிலேயே தங்கியிருக்கிறது.

மேலும், பாடல் எழுதப் பயிற்சியாகக் கீழொரு பாடலைத் தருகிறேன். அதில், முதல் பகுதியில் 'ன்று' என முடியுமாறும் இரண்டாம் பகுதியில் 'ஓ' என முடியுமாறும் அடுத்தடுத்து இவ்வாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைகின்றது. பாடல் வரிகள் திரையில் தோன்றுவதால் அதனைப் பார்த்துப் பார்த்து எழுதலாம். பார்த்து எழுதிய வரிகளை இசைத்துப் பாருங்கள்; அப்போது இசைக்குப் பாடல் புனையலாம் என எண்ணத் தோன்றும்.

பாடல்: நினைவிலே மனைவி என்று
படம்: ச ரி க ம ப
பாடியவர்: S.P.பாலசுப்பிரமணியம்
எழுதியவர்: உதயனன்.
இசை: ஸ்ரீகுமார்


இந்தப் பாடலையும் கேட்ட பின் இசைக்குப் பாடல் புனைய நம்பிக்கை வந்து விட்டதா? இல்லையெனில் பல பாடல்களைக் கேட்டுப் பயிற்சி செய்து பாருங்கள். பயிற்சி செய்திருப்பின் கீழ்வரும் இணைப்பில் இசைக்குப் பாடல் புனைவதற்கான போட்டி இடம்பெறுகிறது. அதில் பங்கெடுத்துத் திரைப்படங்களில் இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்.

இதோ வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” என்ற தலைப்பில் "மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015" இற்கான அறிவிப்பின் இணைப்பு.
http://valvaiyooraan.blogspot.com/2015/04/blog-post.html

ஞாயிறு, 3 மே, 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 02


"2015 மாசி தமிழகப் பயணத்திற்கு தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் ஒத்துழைப்பே எனக்கு ஊக்கமளித்தது." என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி சென்ற பதிவைப் படிக்கவும்.
http://eluththugal.blogspot.com/2015/02/2015-01.html

இலங்கையில் கொழும்பிலிருந்து மிகின்லங்கா வானூர்தியில் புறப்பட்டு மதுரைக்குக் கிட்ட நெருங்கியதும் வானூர்தி தள்ளாடியது. அடடே! மதுரை வந்தாச்சோ எனத் தரையைப் பார்த்த வேளை மலை ஒன்று தென்பட்டது. மதுரையிலும் எத்தனை மலை இருக்கோ... மதுரைவாழ் உறவுகளைக் கேட்டு அறிந்து கொள்ளலாம் என எண்ணியவேளை வானூர்தி தரையைத் தட்டியது.


நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களுடன் மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் இருந்து வெளியேறி மாட்டுத்தாவணி பேரூந்தைப் பிடித்தோம். அங்கிருந்து தைப்பூசப் பெருநாள், வள்ளலார் சிறப்பு நாள் என வடலூருக்குச் சென்றுவிடலாம் என்றுதான்... பேரூந்தில் ஏறியதும் தள்ளாடிய வானூர்தியில் இருந்து பார்த்த மலை தான் நினைவுக்கு வந்தது.
பேரூந்து நகர நகர நினைத்த மலை நேரில் பார்க்கக் கூடிய சூழலும் தென்பட்டது. "அந்த மலையைத்தான் வானிலிருந்து பார்த்தேன்" என்றது நண்பர் சுஷ்ரூவா பல ஒளிப்படங்களை எடுத்தார். நகர நகர அந்த மலையைத்தான் சுற்றிப் பேரூந்து நகர்ந்தது போல இருந்தது. அத்தனை ஒளிப்படங்களையும் இயங்குநிலைப் (Animation) படமாக மாற்றினேன். அதனைக் கீழே பார்க்கலாம்.


இயங்குநிலைப் (Animation) படத்தை வைத்து மதுரையில் நான் கண்ட மலையை அடையாளப்படுத்தி விட்டீர்களா? அந்த மலை பற்றிய தங்களுக்குத் தெரிந்த தகவலைப் பின்னூட்டமாகத் தாருங்களேன்.

மாட்டுத்தாவணியில் இறங்கி வடலூருக்குச் செல்லவும் வேறு பேருந்திலே ஏறியாச்சு! ஒருவாறு ஆறு ஏழு மணி நேரத்தில் வடலூருக்குச் சென்றாச்சு. அடுத்த நாள் வள்ளலார் நினைவு இடத்தில் தைப்பூசப் பெருநாள். அவ்விடத்தருகே தான் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் வீடும். அவரது வீட்டில் தான் ஓர் ஏழல் (வாரம்) தங்கியிருந்தேன்.

பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)

வெள்ளி, 1 மே, 2015

இனிய சிங்கள எதிரியே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
என்னை முடக்கிவிட்டதைக் கண்டு
என்கை கடிக்க வைத்ததைக் கண்டு
என்வயிறு கடிக்க வைத்ததைக் கண்டு
நடுவழியே ஒதுக்கி வைத்ததைக் கண்டு
சூடு வாங்கிக் கட்டிய உடலும்
கேடு எண்ணிப் புண்ணாகிய உள்ளமும்
பட்டதைக் கெட்டதைப் பாடச் சொல்லுதே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
என் உண்மைகளை அழித்ததை
என் வருவாயை உடைத்ததை
என் நம்பிக்கைகளை முறித்ததை
என் விரும்பிகளைப் பிரித்ததை
என் வாழ்க்கையைக் கெடுத்ததை
எண்ணி எண்ணி நொந்ததை
உள்ளத்தில் வலிப்பதைப் பாடச் சொல்லுதே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
சுட்டுச் சென்ற சொல் கணைகள்
விட்டுச் சென்ற உடல் புண்கள்
பட்டுச் சென்ற உள்ளக் கீறல்கள்
தொட்டுச் செல்லும் காற்று உரச
முட்டி மோதும் எண்ணங்கள் - உன்னை
வெட்டு ஒன்று துண்டு இரண்டாக
வெட்டி விட்டாச்செனப் பாடச் சொல்லுதே!