Translate Tamil to any languages.

வெள்ளி, 29 ஜூன், 2018

சனியன் பிடிச்சுப் போட்டுது! - 1


நான் தான்
அவளைத் தான் கேட்டேன்
"தாலி கட்ட விருப்பமா?" என்று - அவளோ
தோளைத் தட்டி "அண்ணன் போல இரு" என்றாளே!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
"திருமணம் செய்வோமா?" என்று - அவளோ
"அப்பா போல இருக்கிறியளே!" என ஒதுங்கினாள்!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
"கலியாணம் கட்டுவோமா?" என்று - அவளோ
"தன்ர தம்பி போல இருக்கிறியே!" எனப் பறந்தாள்!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
"மணமுடிக்க விருப்பமா?" என்று - அவளோ
தன்ர கணவனைக் கேட்டுச் சொல்வதாக
போனவள் போனவள் தான்!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
மணமுடிக்க விருப்பம் - ஆனால்
"தங்கள் விருப்பம் தான்..." என்னவென்றேன்!
"ஒழுங்காக உழைக்கத் தெரியவில்லை
என்னோட பிழைக்க விருப்பமோ?" என
"போடா! - உன்
முகத்தை கண்ணாடியில பாரடா" என
அவளும் ஓடி மறைந்தாள்!
எவளோ ஒருத்தி
என்னை நாடி வந்தாள் - நானும்
தலை, கால் தெரியாமல் தடுமாறினேன்!
என்ன உழைப்பு? வருவாய் எவ்வளவு?
என்றெல்லாம் கேட்ட பின்னே...
அழகி ஒருத்தி நானிருக்க
"தாலி கட்ட விருப்பமா?" என்று
என்ர அம்மாட்ட போய்க் கேட்கிறியே
உனக்குக் கலியாணப் பைத்தியம் பிடிச்சிருக்கா?
என்றெல்லோ சொல்லெறிந்து சென்றாளே!
இன்னொரு எவளோ ஒருத்தி
என்னை நாடி, ஓடி வந்தாள் - நானும்
தட்டுத் தடுமாறித் தரையில விழுந்திட்டேன்!
மொட்டைத் தலையிலே குட்டிப் போட்டு
சட்டென்று எழும்பென்றாள் - நானும்
"சனியன் வந்து பிடிச்சிட்டுதோ?" என
எப்பன் முயன்று எழும்பி நிற்க
"மணமுடிக்க விருப்பமா?" என்று
ஆளை ஆள் கேட்டால் - உன்னை
"பைத்தியம்" என்று
பறை தட்டிப் பரப்புவாங்களே! - இனி
நானிருக்க எவரையும் கேட்காதேயென
என் வீட்டுக்கு வந்திட்டாள் - அந்த
சனியன் போல கறுப்பி ஒருத்தி!

சனியன் பிடிச்சுப் போட்டுது! - 2 என்ற பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2018/07/2.htmlநான் தான் உலகில் பெரியவன்

உண்ணான ஓர் உண்மை - நானோ
மூன்றடி உயரமான சின்னப்பொடியன்
ஐம்பதாம் அகவையை நெருங்கிய - நானோ
அதிகம் படிக்காத சின்னப்பொடியன்
எனக்கும் - எந்தவொரு
அரசியல் கட்சிக்கும் உறவே இல்லை!
எனக்கும் - எந்தவொரு
அரசவெதிர்ப்புக் குழுவுக்கும் உறவே இல்லை!
என்றாலும் கூட - என்னை
இருபத்தி நான்கு மணி நேரமும்
அ - ஃ வரை புலனாய்வு செய்து
பரப்பித் திரிவோர் குறைந்தபடில்லை!
பிள்ளையாரிடம் முறையிட்டால்
"என்னை வழிபடத் தான்
ஆளில்லாத வேளையிலும் - உன்னை
இழிவுபடுத்திப் பரப்பித் திரிவோர்
நாடெங்கும் இருப்பதால் பாரும் - நீயே
உலகில் பெரியவன்" என்று பதிலளிக்கிறாரே!

*ஒருவரை நாம் இழிவுபடுத்திப் பரப்பினாலும் அவர் புகழடைகிறாரென்று அறியாதவர்களுக்காகப் புனைந்த பாவிது.
சாவு நாள் தெரியாதே!

எனக்கும் சாவு உண்டு - அந்த
எனது சாவு நாளை அறிய
உயிர் பறிக்கும் இயமனின் கணக்காளர்
சித்திரபுத்திரனாரின் கணக்கேட்டைப் பார்க்கவும்!
நானறிந்த வரை ஒன்றுண்டு
பிறப்பும் இறப்பும் எந்நாளென
கண்டறிய எவராலும் முடியாது என்பதே!
நான் என்றைக்கோ சாவடைந்தாலும் கூட
நான் வைத்த அன்பும் பற்றும்
உங்கள் நினைவுகளில் வரலாம்
ஆதலால், நான்
உங்களோடு தான் வாழ்ந்துகொண்டிருப்பேன்!
ஆகையால்,
அன்போடும் பற்றோடும் பழகிய உறவை
பண்போடும் பணிவோடும் பேணுவோம் வாங்க!

வெள்ளி, 22 ஜூன், 2018

உங்களாலும் பாப்புனையவும் பாடல் புனையவும் முடியுமே!


எல்லோருக்கும் பாக்கள் புனையும் ஆற்றல் உண்டு. அவரவர் அதனை வெளிக்கொணருவதால் தான் பாவலராக/ கவிஞராகத் தலை நிமிர்ந்து நடைபோடுகின்றனர். முயன்றால் முடியாதது ஏதுமுண்டோ? ஆகையால், "பாப்புனைவது (கவிதை ஆக்குவது) பாடல் புனைவது எப்படியென்று எடுத்துரைத்தால் எல்லோரும் பாவலராகலாமே!" என மேற்கொண்ட சிறு முயற்சி இது.

கண்ணில் பட்டதை பா/ கவிதை நோக்கில் பார்க்கும் போது பா/ கவிதை புனைய முடிகிறது. எடுத்துக்காட்டாகக் காற்றிற்கு மரங்கள் (பனை/ தென்னை உட்பட) ஆடுகின்றன. அதனைப் பா/ கவிதை நோக்கில் பார்க்கும் போது கீழ்வருமாறு பா/ கவிதை புனைய முயன்று பார்க்கலாம்.

வீசும் காற்றோடு
ஏட்டிக்குப் போட்டியாக மோதி
பனையும் தென்னையும்
தள்ளாடுவதைக் கண்டதும்
கள்ளைத் தருவதும் அவை தானே
என்றெண்ணத் தோன்றுகிறதே!

"காற்றுக்குத் தென்னை ஏன் ஆடுகின்றது. அது தானே கள்ளையும் தருகின்றது." எனக் கவியரசர் கண்ணதாசன் தனது நூலொன்றில் குறிப்பிட்டிருந்தார். அதனையே மேற்படி பாப்புனையப் பாவித்துள்ளேன். சரி! அவரவர் வீட்டில் ஆளையாள் பாருங்க... அவர்களைப் பா/ கவிதை நோக்கில் பார்க்கும் போது கீழ்வருமாறு பா/ கவிதை புனைய முயன்று பார்க்கலாம்.

அம்மா! - அவர் தான்
என்னை ஈன்ற படைப்பாளி!
எனக்கு அன்பைத் தரும் கொடையாளி!

அப்பா! - அவர் தான்
படி படியென்று அறிவை ஊட்டியவர்!
அடிக்காமல் அச்சுறுத்தி நல்லாள் ஆக்கியவர்!

அக்கா! - அவர் தான்
தானுண்பதிலும் பாதி எனக்குத் தருவார்!
பிழைவிட்டால் அப்பாவிடம் மாட்டுவார்!

அண்ணா! - அவர் தான்
அடிக்கடி அடிப்பார்; அழுவேன்!
படித்தால் அடிக்காது அணைப்பார்!

தம்பி! - அவர் தான்
அன்போடு அண்ணன் என்பார்!
அடிப்பேனென அஞ்சிப் பண்போடு இருப்பார்!

தங்கை! - அவர் தான்
அம்மாவின் சேலைக்குள் அடிக்கடி ஒழிப்பார்!
அப்பாவோடு சேர்ந்து என்னை எதிர்ப்பார்!

என் வீட்டு நாய்! - அது தான்
எமக்கு முதன்மைப் பாதுகாவலர் என்பேன்!
நன்றிக்கு நற்சான்றிதழ் நம்ம நாய் தான்!

நம்ம வீடு! - அது தான்
என்றும் அமைதியான நல்ல வீடு!
இன்றும் வயிற்றுக்குக் கேடு இல்லை!
அப்பாவின் உழைப்பே அதற்கு விலை!

இனி வீட்டிற்கு வெளியே வந்து பாருங்கள்... பகலவன், நிலா, வானம், உலகு (பூமி), மரங்கள், மழை, மனிதர்கள், இயற்கை ஆகியவற்றைப் பா/ கவிதை நோக்கில் பார்க்கும் போது கீழ்வருமாறு பா/ கவிதை புனைய முயன்று பார்க்கலாம்.

பகலவன் - அவன் தான்
சுட்டெரிக்கும் வெயிலை வழங்கி
மழையைத் தருவிக்க உதவினாலும்
என் தலையை வெடிக்கச் செய்வான்!

நிலா - அவள் தான்
பாவலரின் பாக்களில் கருப்பொருள் தான்
நம்மாளுங்க கண்களில் தான்
அடிக்கடி வந்து போகும்
அமாவாசை, பூரணை (பௌர்ணமி) போலத் தான்!

வானம் - அது தான்
ஏழை வீட்டிற்கு ஒளியூட்டத் தடையாக
நிலவவளின் நிர்வாணத்தை மறைத்திட
சேலையாகப் போர்த்தி நிற்கிறதே!

உலகு (பூமி) - அது தான்
தொல்லை மேல் தொல்லை கொடுக்கும்
உலகெங்கும் நெருங்கி வாழும் மக்களை
தானே நொருங்கி உடையாமல் காக்கிறதே!

மரங்கள் - அவை தான்
நிழலைத் தந்தாலும் மழையைத் தரவுதவினாலும்
மனிதன் வெட்டி வீழ்த்துவதால்
உலகை (பூமியை) வெப்பமடையச் செய்கிறதே!

மழை - அது தான்
வேளாண்மைக்குத் துணைநின்று உதவினாலும்
கேட்பாரின்றி ஓட்டைக் குடிலுக்குள் நுழைந்து
ஏழையின் உடைமைகளை அழிக்கிறதே!

மனிதர்கள் - அவர்கள் தான்
தாங்கள் நலமாக வாழ்ந்தாலும் கூட
மாற்றார் மகிழ்வோடு வாழ்வைச் சுவைக்க
ஒத்துழைக்காத ஆறறிவு விலங்குகள்!

இயற்கை - அது தான்
உலகை ஆளும் ஆண்டவனின் படைப்பு
ஒத்துழைப்பவர்களுக்கு உதவும் அமைப்பு
ஒத்துழையாதோருக்கு எதிர்ப்பைக் காட்டும்!

இப்படித்தான் வீட்டிற்கு உள்ளே சரி, வீட்டிற்கு வெளியே சரி, மக்கள் வாழ்விலும் சரி, நாட்டு நிலைமையிலும் சரி உங்கள் பார்வை பா/ கவிதை நோக்கில் இருக்குமாயின் உங்கள் உள்ளத்தில் பா/ கவிதை புனையும் ஆற்றல் ஊற்றெடுக்கும். நீங்களும் பாவலராக/ கவிஞராகத் தலை நிமிர்ந்து நடைபோடலாம்.

பா/ கவிதை புனையும் ஆற்றல் உங்களுக்கு இருப்பின் திரை இசைப் பாடல் அல்லது பக்திப் பாடல் புனையும் ஆற்றல் இருக்க வேண்டுமே! அதற்குப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு, அதன் இசைக்கட்டுக்கு (மெட்டுக்கு) எழுதப் பழக வேண்டுமென்பார்கள். பெரும்பாலான பாடல்களில் ஒவ்வொரு அடியும் ஒரே ஒலியில் முடிவதைக் காணலாம். எடுத்துக்காட்டாகச் சில வரிகளைப் பாருங்கள்:

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
என்ற வரிகள் "மா" என்ற ஒலியில் முடிவதைக் காண்பீர்!

அத்தான்...என்னத்தான்...
அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி
என்ற வரிகள் "தான்" என்ற ஒலியில் முடிவதைக் காண்பீர்!

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
என்ற வரிகள் "தேன்" என்ற ஒலியில் முடிவதைக் காண்பீர்!

இவ்வாறான ஈற்றுச் சீர் ஈற்றொலி, எதுகை, மோனை அமையப் பாடல் புனையலாம். அதற்கும் எடுப்பு (பல்லவி), தொடுப்பு (அனுபல்லவி), கண்ணி (சரணம்) ஆகிய மூன்றும் தெரிந்தால் போதும்!

என் பாட்டைக் கேட்டுப் பாரேன்
என் வீட்டைக் காட்டித் தாறேன்
(என் பாட்டை)

என்றவாறு எடுப்பை எழுதிப்பாருங்க...

நானோ ஓட்டை வீட்டுக் காரன்
ஏனோ ஏழைப் பாட்டுக் காரன்
(நானோ)

என்றவாறு தொடுப்பை எழுதிப்பாருங்க...
இனி ஒவ்வொரு கண்ணி, கண்ணியாக போட்டுப்பாருங்க...

காலை கூலி வேலைக்கு போறேன்
மாலை கூலிக் காசோடு வாறேன்
உலையில அரிசி வெந்தாலும் பாரேன்
உறவுகள் உண்ணப் போதாது பாரேன்
(என் பாட்டை)
(நானோ)

விடிய விடிய வேலைக்கு போறேன்
வேலை முடியக் காசோடு வாறேன்
பெண்டில் விருப்புக்குச் செலவிடப் போறேன்
எண்ணிப் பார்த்தால் கைகடிக்கும் பாரேன்
(என் பாட்டை)
(நானோ)

வேலைக்குப் போறேன் காசோடு வாறேன்
மனைவியை மகிழ்விக்கப் பணமில்லைப் பாரேன்
பிள்ளைகளைப் படிப்பிக்கப் பணமில்லைப் பாரேன்
நாளும் கண்ணீர் வடிப்பதைப் பாரேன்
(என் பாட்டை)
(நானோ)

வயிற்றுப் பாட்டுக்கு வேலைக்குப் போறேன்
என்வீட்டுத் துயரை எண்ணிப் பாரேன்
மகிழ்வான வாழ்விற்கு உழைக்கப் போறேன்
மருந்தெடுக்கப் பணமின்றிக் கலங்குவதைப் பாரேன்
(என் பாட்டை)
(நானோ)

எடுப்பு , தொடுப்பு, கண்ணி என எழுதும் வேளை ஒவ்வொரு அடியிலும் ஈற்றுச் சீர் (இறுதிச் சொல்) ஒரே ஒலியெழுப்பல் (ஓசை) கொண்டதாக அமைய வேண்டும். "றேன்", "ரேன்" என முடியுமாறு நான் எழுதியுள்ளேன். எதுகை, மோனை முட்டிவரப் பாடும் வேளை இசைகூடும். இப்படி எழுதிப்பாருங்க... உங்களுக்கும் பாடல் புனையும் ஆற்றல் வருமே!

இத்தனையும் எழுதிய நான் யாரென்று கீழே அறிமுகம் செய்வதைப் பாரும். இது அவையடக்கம் அல்ல, உண்மை.

உண்மையைச் சொன்னால் குறைவில்லையே!
எழுதிய யாவும் பா/ கவிதை என்றறியேன்
உள்ளத்தில் தோன்றியதையே புனைகின்றேன்
எழுதிய நானும் பாவலனோ/ கவிஞனோ அல்லன்!

வெள்ளி, 15 ஜூன், 2018

சைவமும் தமிழும் சீரழிவது ஏன்?2018 (தமிழுக்கு) வைகாசியில் யாழ்ப்பாணம் தென்மாராட்சியில் வடவரணி சிமில் கண்ணகை அம்மன் கோவிலிலே தேர்த் திருவிழாவில் இயந்திரம் (JCB Backhoe) மூலம் தேரை இழுத்து உலகத்தார் முன்னே செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

"சாதி வேற்றுமை தான் போகவில்லையே! - தமிழ்
சாதியில் ஒற்றுமைக்கு இடமுமில்லையே! - இனி
இறை வழிபாடு என்பது மின்சார / இயந்திர வழியிலோ?" என
அச்செய்தி உலகத்தாரைக் கேட்டு நிற்கிறதே!

இதையறிந்த கிறுக்கல் மன்னன் யாழ்பாவாணன்
இப்படிக் கிறுக்கி உள்ளாராம் - அதையும் தான்
படித்துச் சுவைத்தால் குறைந்தா போயிடுவோம்!

அந்தக் காலத்திலே விடி காலையிலே
எந்தன் ஊரார் சங்கூதித் திருமுறை ஓதி
இறைவனை எண்ணியவாறு மக்களை எழுப்பினர்!
இந்தக் காலத்திலே விடி காலையிலே
எந்தன் ஊரில் ஒலிபெருக்கிகள் ஒப்பாரி
இறைவன் பாடலென காதுகிழிய எழுப்பிறாங்கள்!

அந்தக் காலத்திலே விடி காலையிலே
எந்தன் ஊர்க்கோவில் பெரியமணி ஓசை
இறைவனை எண்ணியவாறு மக்களை எழுப்பியது!
இந்தக் காலத்திலே விடி காலையிலே
எந்தன் ஊரில் ஒலிபெருக்கியில் மணியோசை
இறைவனை நினையாது நேரங்காட்டி எழுப்புவதாய்!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் குருக்கள்மார் வலுசுத்தம்
இறைவனைக் காணலாம் அவர்கள் வழிபாட்டிலே!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் குருக்கள்மார் சுத்தமில்லை
இறைபக்தியைக் காணவில்லை அவர்கள் வழிபாட்டிலே!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் தோல்கருவிகள் இசைமுழங்கின
இறைவனை நினைந்துருக உள்ளத்தைத் தூண்டின!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் மின்சாரத்தில தோல்கருவிகள்
இறைவனை எண்ணவிடாது காதுகிழிய அலறுதே!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் குருக்கள்மார் மந்திரமோத
இறைவழிபாடு உள்ளத்தை வருடி நின்றதே!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் ஒலிபெருக்கி மந்திரமோத
இறைவழிபாடு ஏனோதானோ என்றவாறு நடக்கிறதே!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் அடியார்கள் பஞ்சபுராணமோத
இறைவழிபாடு இனிக்க அமைதி நிலவியதே!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் ஒலிபெருக்கி பஞ்சபுராணமோத
இறைவழிபாட்டை மறந்து நடைபேசியில் மேய்கிறாங்க!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் உடலைமூடிய ஆடையணிந்தனர்
இறைவனைத் தேடும் கண்கள் மலிந்தன!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் உடல்தெரிய ஆடையணிகின்றனர்
இறைவனைத் தேடாக்கண்கள் உடல்களை மேய்கின்றன!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் கோவில்காரங்க கடவுள்பக்கம்
இறைவழிபாடு திறம்பட இடம்பெற ஊர்செழித்தது!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் கோவில்காரங்க சாதிகள்பக்கம்
இறைவழிபாடு சீர்குலைய ஊரெல்லாம் வரண்டுசாகுதே!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் அடியார்கள் அழுதழுது
சுவாமிகாவித் தேர்இழுத்து இறைவழிபாடு செய்ய
மூம்மாரி செழிக்கப்பெய்ய வேளாண்மை நிறைந்தது!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் அடியார்கள் சிரித்துக்கொண்டே
நான்குருளி வண்டியில சுவாமியை வைத்துத்தள்ள
இயந்திரம் (JCB Backhoe) மூலம் தேரை இழுத்துவர
சைவமும் தமிழும் சீர்குலைந்ததாக உலகம்சிரிக்க
இறைவழிபாடும் கேலிக்கூத்தாக ஊர்வரண்டு ஆள்கள்சாக
கடவுளைத் தேடினேன் வழியிலே கண்ணதாசன்
"கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே!" என்றாரே!
  
கடவுள் ஏன் கல் ஆனான் பாடல் வரிகள்

கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே

நெஞ்சுக்கு  தேவை  மனசாட்சி – அது
நீதி  தேவனின்  அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி – மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி

கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே

சதி செயல் செய்தவன் புத்திசாலி – அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்

கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே

வரிகள் : கண்ணதாசன்
பாடகர் : T.M.சௌந்தர்ராஜன் 
இசை : K.V.மகாதேவன்
படம்: என் அண்ணன் (1970)

வியாழன், 7 ஜூன், 2018

ஆளுக்காள் எண்ணங்கள் வெவ்வேறு...


 தமிழ் ஊடகங்கள்

ஆங்கிலச் சொல் சேர்க்காத பெயரில்
ஊடகங்களும் இல்லை - அந்த
ஊடகங்களின் நிகழ்ச்சிகளும் இல்லையே!
அதனால்,
தமிழை உச்சரிக்க முடியாமல்
தமிழைக் கொல்லும் ஊடகங்கள் ஆயினவோ!

தமிழுக்காக ஒற்றுமை பேணு!

ஒற்றுமை இருந்தால் உலகை ஆளுவான்
ஒற்றுமை இல்லையேல்
உலகில் இருந்து ஒதுங்கி இருப்பான்
அவன் தான்
உலகையே ஆண்ட தமிழன்!

ஒற்றுமை இல்லாக் கடலில் வீழ்ந்து
ஆண்ட தமிழன் மாண்டு போனதாக
கடவுள் சிரிப்பதில் தவறேதும் உண்டோ?!

தமிழ் மக்கள் வாழும் மண்ணில்
ஓடுவது ஒற்றுமை இல்லாக் கடலாம்
உலக வாழ்விடங்களைச் சூழ ஓடுவது
நீலக் கடலாம் எண்ணிப் பாருங்கோவேன்!

நிறத்தால், மணத்தால், குணத்தால் என
நாம் எதிலும் வேறுபட்டு இருக்கலாம்
ஆனால்,
தாய் மொழியாம் தமிழ் மொழிக்காக
ஒற்றுமையாக இருந்து உலகை ஆளலாமே!

ஆளுக்காள் எண்ணங்கள் வெவ்வேறு...
நம்முடல்
அடுத்தவருக்குத் தெரியாது மறைக்கவே
ஆடை அணிவது
அவரவர் விருப்பம் என்பேன்!
ஆனால்,
அடுத்தவர் நம்முடலை உற்றுப் பார்க்க
நுளம்பு வலை, மீன்பிடி வலை போல
ஆடை அணிவதை
எவரும் விரும்ப மாட்டார்களே!

அற்றம் காக்க ஆடை அணியாது
சுற்றம் நோக்க ஆடை அணிவது
மற்றவர் எம்மைக் கெடுக்கத் தூண்டவோ
கற்றது ஏதும் பாவிக்கத் தவறியதாலோ
பண்பாட்டை மீறினால் பின்விளைவு கேடே!

வலை போன்ற ஆடைக்காரி
சிலை போன்று தெருவில நிற்க
பாவலர்க்குப் பாப்புனைய வரலாம்
கேவலமானோர் கெடுக்க நினைக்கலாம்
பார்ப்பவர் உள்ளம் எப்படியென யாரறிவார்!

தமிழர் பண்பாடு மின்ன
தமிழரின் பண்பாட்டைப் பேணும் ஆடைகளில் 
கண்ணாறை பண்ணாறை கிடையாதே!
மேற்கத்தைய நாட்டம் நல்லதல்ல
தமிழர் பண்பாட்டைப் பேணத்தான்
இளசுகளே! தங்களை மாற்றுங்களேன்!

உலகறிந்த உண்மை

வெற்றி என்பது
தன் பலத்தாலும் தன் திறத்தாலும்
தான் முயன்று
பெற்றுவிட்ட ஒன்றாக இருந்தால் 
உலகம் நெடுநாள் பேசிக்கொள்ளும்!

வெற்றி என்பது
மாற்றாரை மடக்கியோ முடக்கியோ
முறையற்ற வழியில்
பெற்றுவிட்ட ஒன்றாக இருந்தால் 
உலகம் மறுகணமே மறந்துவிடும்!

எவரும் சொல்லிக் கொள்ளாமலே
உலகம் கண்டு பிடிப்பது - தன்னாலே
தான் பெற்ற வெற்றியை மட்டுமே!
முறையற்ற வழி வெற்றியை - எவரும்
எத்தனை கோடி முறை சொல்லியும்
உலகின் காதுகளுக்கு எட்டாது தானே!

காதல் காலம்

இப்பவெல்லாம்
மலிவாகக் கிடைப்பது
காதல் ஒன்று தான்!
கையில காசிருந்தால்
காதலிக்க ஆளிருக்கும்...
கையில காசில்லை என்றால்
காதலிக்க ஆளை மாற்றுவார்...
எப்படியிருப்பினும்
மலிவாகக் கிடைப்பது
காதல் ஒன்று தான்!