Translate Tamil to any languages.

வெள்ளி, 15 ஜூன், 2018

சைவமும் தமிழும் சீரழிவது ஏன்?



2018 (தமிழுக்கு) வைகாசியில் யாழ்ப்பாணம் தென்மாராட்சியில் வடவரணி சிமில் கண்ணகை அம்மன் கோவிலிலே தேர்த் திருவிழாவில் இயந்திரம் (JCB Backhoe) மூலம் தேரை இழுத்து உலகத்தார் முன்னே செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

"சாதி வேற்றுமை தான் போகவில்லையே! - தமிழ்
சாதியில் ஒற்றுமைக்கு இடமுமில்லையே! - இனி
இறை வழிபாடு என்பது மின்சார / இயந்திர வழியிலோ?" என
அச்செய்தி உலகத்தாரைக் கேட்டு நிற்கிறதே!

இதையறிந்த கிறுக்கல் மன்னன் யாழ்பாவாணன்
இப்படிக் கிறுக்கி உள்ளாராம் - அதையும் தான்
படித்துச் சுவைத்தால் குறைந்தா போயிடுவோம்!

அந்தக் காலத்திலே விடி காலையிலே
எந்தன் ஊரார் சங்கூதித் திருமுறை ஓதி
இறைவனை எண்ணியவாறு மக்களை எழுப்பினர்!
இந்தக் காலத்திலே விடி காலையிலே
எந்தன் ஊரில் ஒலிபெருக்கிகள் ஒப்பாரி
இறைவன் பாடலென காதுகிழிய எழுப்பிறாங்கள்!

அந்தக் காலத்திலே விடி காலையிலே
எந்தன் ஊர்க்கோவில் பெரியமணி ஓசை
இறைவனை எண்ணியவாறு மக்களை எழுப்பியது!
இந்தக் காலத்திலே விடி காலையிலே
எந்தன் ஊரில் ஒலிபெருக்கியில் மணியோசை
இறைவனை நினையாது நேரங்காட்டி எழுப்புவதாய்!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் குருக்கள்மார் வலுசுத்தம்
இறைவனைக் காணலாம் அவர்கள் வழிபாட்டிலே!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் குருக்கள்மார் சுத்தமில்லை
இறைபக்தியைக் காணவில்லை அவர்கள் வழிபாட்டிலே!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் தோல்கருவிகள் இசைமுழங்கின
இறைவனை நினைந்துருக உள்ளத்தைத் தூண்டின!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் மின்சாரத்தில தோல்கருவிகள்
இறைவனை எண்ணவிடாது காதுகிழிய அலறுதே!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் குருக்கள்மார் மந்திரமோத
இறைவழிபாடு உள்ளத்தை வருடி நின்றதே!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் ஒலிபெருக்கி மந்திரமோத
இறைவழிபாடு ஏனோதானோ என்றவாறு நடக்கிறதே!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் அடியார்கள் பஞ்சபுராணமோத
இறைவழிபாடு இனிக்க அமைதி நிலவியதே!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் ஒலிபெருக்கி பஞ்சபுராணமோத
இறைவழிபாட்டை மறந்து நடைபேசியில் மேய்கிறாங்க!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் உடலைமூடிய ஆடையணிந்தனர்
இறைவனைத் தேடும் கண்கள் மலிந்தன!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் உடல்தெரிய ஆடையணிகின்றனர்
இறைவனைத் தேடாக்கண்கள் உடல்களை மேய்கின்றன!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் கோவில்காரங்க கடவுள்பக்கம்
இறைவழிபாடு திறம்பட இடம்பெற ஊர்செழித்தது!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் கோவில்காரங்க சாதிகள்பக்கம்
இறைவழிபாடு சீர்குலைய ஊரெல்லாம் வரண்டுசாகுதே!

அந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் அடியார்கள் அழுதழுது
சுவாமிகாவித் தேர்இழுத்து இறைவழிபாடு செய்ய
மூம்மாரி செழிக்கப்பெய்ய வேளாண்மை நிறைந்தது!
இந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே
எந்தன் ஊரில் அடியார்கள் சிரித்துக்கொண்டே
நான்குருளி வண்டியில சுவாமியை வைத்துத்தள்ள
இயந்திரம் (JCB Backhoe) மூலம் தேரை இழுத்துவர
சைவமும் தமிழும் சீர்குலைந்ததாக உலகம்சிரிக்க
இறைவழிபாடும் கேலிக்கூத்தாக ஊர்வரண்டு ஆள்கள்சாக
கடவுளைத் தேடினேன் வழியிலே கண்ணதாசன்
"கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே!" என்றாரே!




  
கடவுள் ஏன் கல் ஆனான் பாடல் வரிகள்

கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே

நெஞ்சுக்கு  தேவை  மனசாட்சி – அது
நீதி  தேவனின்  அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி – மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி

கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே

சதி செயல் செய்தவன் புத்திசாலி – அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்

கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே

வரிகள் : கண்ணதாசன்
பாடகர் : T.M.சௌந்தர்ராஜன் 
இசை : K.V.மகாதேவன்
படம்: என் அண்ணன் (1970)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!