Translate Tamil to any languages.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

உயர்ந்த மனிதராக


வாயும் நாக்கும்


"வாயடக்கு / நா காக்க" என
ஏன் தான் சொன்னார்களா?
நல்லதைச் சொல்லு - அதுவும்
அளந்து அளவாகச் சொல்லு - அதனால்
அடுத்தவர் உன்னை விரும்பலாமென்றே!
"வாயிருக்கு / நாக்கிருக்கு" என
கண்டதையும் பறைஞ்சு போட்டு
உறவுகள் எவருமின்றித் தனியாளாகாமல்
"வாயிருக்கு / நாக்கிருக்கு" என
கண்டதையும் உண்டுகளித்துப் போட்டு
நோய்களை வேண்டிக்கட்டிச் சாகாமல்
"வாயடக்கு / நா காக்க" எனக் கொஞ்சம்
எண்ணிச் செயல்பட்டால் நலமே!
அப்படியாயின்
உள்ளத்தில் உறங்கிக் கிடக்கும்
பழைய பதிவுகளை மீட்கும் படி
மாற்றார் உள்ளங்களை நோகடிக்காமல்
நல்லெண்ணங்களைப் பகிர்ந்து
நாளும் நட்புறவைப் பலப்படுத்தினால்
எதிரி கூட நண்பர் ஆவாரே!


சாட்டு

மிச்சக் காசுக்காக
இறங்கேக்க தரலாமென
போக்குவரவு ஊர்திக்காரங்களும்
அடுத்த முறை வரும் போது தரலாமென
கண்ட கண்ட கடைக்காரங்களூம்
கொள்ளையடித்ததால்
நானும் பிச்சைக்காரனானேன்!

மிச்சக் காசுக்காக
காச்சல், பீச்சல் குளிகையை
மருந்துக் கடையிலும்
நீரிழிவைக் கூட்ட இனிப்புகளை
பல சரக்குக் கடையிலும்
திணித்தமையால் தான்
என் சாவுக்குச் சாட்டு என்பேன்!


உயர்ந்த மனிதராக

செய்வன எல்லாம் செய்த பின்
செய்தவை தவறென்று அறிந்து அழாதே!
தவறென்று அறியாது செய்தவற்றுக்கு
ஆண்டவன் கணக்கில் ஒறுப்பு இல்லையாம்!
அதற்காகச் செய்த தவறுகளையே
அறியாமல் செய்ததாகத் தப்பிக்க முயலாதே!
சூழ்நிலைகளும் அறியாமைகளும்
தவறுகளைச் செய்யத் தூண்டியிருக்கலாம்
அதற்காகச் செய்த தவறுகளை
மறைக்க முயல்வதும் நற்பெயரைத் தராது!
செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி
எம்மை வீழ்த்தப் பலர் இகுக்கலாம்!
செய்த தவறுகளை திரும்பச் செய்யாது
நல்லவராவது நமது பணியே!
செய்த தவறுகளை எண்ணி
உள்ளம் நொந்து வீழ்வதை விட
தவறுகள் ஏதும் செய்யாத மனிதராக
முன்னேற முயன்று பார்! - அதுவே
உயர்ந்த மனிதராக ஒரே வழி!

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

பாப்புனைவது பற்றிய தகவல்
தமிழ் இலக்கிய வரலாற்றில்
மு.கருணாநிதி அவர்களின்
இலக்கியத்துக்கு ஆற்றிய பங்கினை
தமிழ் வாழும் வரை - நம்மாளுங்க
உச்சரித்த வண்ணம் இருப்பார்கள்!
கலைஞர் கருணாநிதி - அவரது
இலக்கியப் படைப்புகளில் தான்
மறைந்து இருக்கின்றார்! - அவர்
மறைந்து விட்டார் என்பதை
நான்
ஒரு போதும் ஏற்கமாட்டேன்!

-----------------------------------------------------------------------------

எப்பவும் பணம் பறிப்பதே
பள்ளிகளின் வேலையாகிப் போச்சு!
பிள்ளைகளின் படிப்பில
ஆசிரியர்கள் அக்கறை காட்டுவதாக
எவரும் சொல்லவில்லையே!
கல்வி கூட வணிகப் பண்டமா?
நாடு இருட்டில் மூழ்கவா?
பொறுப்பானவர்கள் சிந்திக்க வேண்டாமா?
வெறுப்பானவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு
என்னால பதில் சொல்ல முடியல!

-----------------------------------------------------------------------------

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு
இரண்டு தடவை எழுதியும்
ஒரு பௌதீகவியலில "S" தான் - அந்த
உயிரழகனா - இந்த முகநூலில
குழுமங்கள் நடாத்தும் போட்டிகளில
பன்னிரண்டு பட்டங்கள் வென்றவரென
எல்லோரும் என்னைக் கேட்பதால்
நான் பெற்ற பட்டங்களையே
காற்றினிலே பறக்க விடுகின்றேன்!

-----------------------------------------------------------------------------
பாப்புனையச் சில தகவல்


எதுகை, மோனை, உவமை, ஒப்பீடு
எதுவுமற்ற எழுத்துகளால்
வரிவரியாகத் தொகுத்த பொய்கள்
என்றும் பா ஆகிவிடாதே!

எண்ணி எண்ணி எழுதித் தான்
எதுகை, மோனை முட்டிக்கொள்ள
உவமை, ஒப்பீடு சுட்டிக்காட்ட
வரிவரியாகத் தொகுத்த உண்மைகள்
என்றும் பா ஆகிவிடாதே!

ஏமாறத் தூண்டிய பொய்கள்
உள்ளத்தை நோகடித்த மெய்கள்
சொல்லத் தோன்றிய எண்ணங்கள்
மெல்ல எழுதத் தூண்டவே
மோனைகள் மோதிக்கொள்ள
எதுகைகள் துள்ளிக்குதிக்க
உவமைகள் ஈர்த்துக்கொள்ள
ஒப்பீடுகள் சுட்டிக்காட்ட
வரிவரியாகத் தொகுத்துக்கொள்ள
வந்தமைவதே 'பா' என்கிறார்கள்!

எழுத்து, அசை, சீர், தளை,
அடி, தொடை, அணி, நடை
அடுத்துப் பா, பாவினம் என்றிட
அங்கும் வண்ணத்துப் பா வருமென்றும்
எடுப்பு, தொடுப்பு, கண்ணி, இசையென
பண்ணத்திப் பா (இசைப் பாடல்) வருமென்றும்
யாப்பறிந்த பாவலர் அழகுறச் சொல்வார்!

எந்தன் எழுத்தும் "பா" ஆகாமலே
"பா" நடையிலே புனைவதனாலே
புதுப்பா என்றால் இப்படித் தானென
இணைய வழி, வலைப்பக்க வழி
புதுப்பா புனைவோரிடம் மோதவியலாது
பின்வாங்கும் எளியவன் ஆனாலும்
"பா" பற்றிய தகவலைப் பகிர்ந்தேனே!
---------------------------------------------------------------------------------------------
அடிபட்டால்...


அந்தக் காலத்தில
மணி (Bell) இல்லை, தடுப்பு (Break) இல்லை
அடிபட்டால் பல்லு இல்லையென
மிதிவண்டி (Bicycle) மிதித்த நினைவுகள்
இந்நாளும் உள்ளத்தில உருளுதே!
இந்தக் காலத்தில
அதிரொலி (Horn) இல்லை, தடுப்பு (Break) இல்லை
காற்றுக் கூட தடுக்க இயலாதென
அடிபட்டால் ஆளாளுக்கு உயிரில்லையெனை
அதிகூடிய குதிரை வலு கொண்ட
உந்துருளியில் (Moterbike) விரைவாகப் பயணிப்போமே!
காலம் மாறினாலும்
கடுகளவேனும் எண்ணிப் பாருங்கள்!
பிறரை வாழ வைக்கப் பிறந்த
நீ
பிறரைச் சாகடிக்காமலாவது
பயணம் செய்யலாமே!

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

எழுதத் தூண்டின எழுதினேன்!


நம்பிக்கை

கடவுள் இருப்பதனால் தான்
நீங்கள் வாழ்கிறீர்கள் - அந்த
கடவுளுக்கு நன்றி கூறுங்கள்!
கடவுள் இல்லை என்போரும்
வாழ்கின்றனர் தான் - அதற்கு
தன்னம்பிக்கை தான் மருந்து!
கடவுள் இருக்கிறரோ இல்லையோ
நாங்கள் இருக்கிறோம் என்றால்
ஏதோ ஒரு நம்பிக்கை தான்
எம்மை வாழ வைக்கிறதே!
வெறுப்புகளைச் சுமப்பவர்களே - அதை
கொஞ்சம் இறக்கி வைத்தால் தானே
நம்பிக்கை மலரும் என்பேன்!
உருள மறுக்கும் உலகையே
நம்பிக்கை என்ற கருவியால்
உருட்டிக் கொண்டே இருக்கலாம்!
நீங்களும்
ஊக்கம் பெற்று உயரப் பறக்கலாம்!!


எழுதத் தூண்டின எழுதினேன்!

"என்னைப் பற்றி
நன்கறிய விரும்பினால் - என்
எதிரியைக் கொஞ்சம் கேட்டறி (விசாரி)
நான் சொல்வதை விட
அவர்கள் தான் அதிகம் சொல்வார்கள்!"
என்றவாறு
பாவலர் மூ.மேத்தா சொன்ன நினைவு!
அதனையே
உள்ளத்தில் இருத்தி
"என்னைப் பற்றி
என்னிடம் கேட்டுப் பயனில்லையே!
எதிரியிடம் கேளுங்கள்...
என்னைப் பற்றி அ - ஃ வரை
அப்படியே சொல்லுவார்கள்!"
என்றவாறு
நானும் பாப்புனைய முனைந்தேன்!
அதற்கு அடுத்தபடியாக
"ஊருக்குள்ளே வந்தும்
நாலாளுகளைக் கேட்டுப் பாருங்கள்
என்னைப் பற்றி எல்லாமே
உள்ளதை உள்ளபடி உரைப்பார்கள்!"
என்றவாறு
பொதுவான எண்ணத்தையும் பகிர்ந்தேன்!
இதற்கெல்லாம்
"வெறித்தும் முறைத்தும் சிரித்தும்
எல்லோரும் என்னைப் பார்க்க...
நானும் கையில காசின்றி
அழுவாரைப் போல அலைய
அதனை
ஏழு தலைமுறைப் பணக்காரன்
பிச்சை எடுப்பதைப் பாரென்று
எதிரிகள் சிலர் பரப்பி விட்டனரே!
என்றவாறு
பட்டறிந்தவையே எழுதத் தூண்டின!தொலைந்து போன என் கவிதைகள்
யாழ் நல்லூர் வீதியிலே
புதிய அகிம்சைக்கு வழிகாட்டிய
திலீபன் அண்ணாவை இழந்து
மூன்றாம் ஆண்டு நினைவாக (25-09-1990)
யாழ் ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்த
எனது முதலாவது கவிதையே
பாராட்டையும் புகழையும்
எனக்கு ஈட்டித் தந்தமையால் 
இன்றுவரை எழுதுகோல் ஏந்துகிறேன்!

"உலகமே
ஒரு கணம் சிலிர்த்தது
உண்ணா நோன்பு இருந்து
உயிர் நீத்த திலீபன் அண்ணாவின்
உயிர் மூச்சு நின்ற போது..." என்று
எழுதியது மட்டும் அடிக்கடி நினைப்பேன்!

"உலகிற்கு
அகிம்சையைப் போதித்த
மகாத்மா காந்தியின் இந்தியாவிற்கே
புதிய அகிம்சையைப் போதித்தவர்
எங்கள் திலீபன் அண்ணா!" என்று
அடுத்த வரிகள் தொடரலாமென
மீட்டுப் பார்க்கிறேன் - ஆயினும்
எஞ்சிய வரிகள் என்னிடம் இல்லையே!

"மென்மைகள்
காவலாக இருப்பதால் தான்
அழிக்கப்படுகிறது கற்பு!
வன்மைகள்
காவலாக இருப்பதால் தான்
காக்கப்படுகிறது கற்பு!" என்று
கொழும்பு வீரசேசரி நாளேட்டில்
"கற்பு" என்ற தலைப்பில் (1993)
வெளிவந்ததோட பிறவும் வெளியாகின!

அரங்குகளில் வாசித்துமான
ஏடுகளில் வெளியாகியதுமான
எத்தனையோ படைப்புகளை
நானும் இழந்துவிட்டேன் - அவை
காணாமல் போனதாகக் கருதினாலும்
நெஞ்சை விட்டு நீங்காத இழப்பே! 
அவை தான் - இன்று வரை 
என்னை எழுதத் தூண்டுகின்றனவே!