Translate Tamil to any languages.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

வறுமை

வறுமை என்பது
வாழ்க்கையை நடாத்த
ஏதுமின்றித் துயருறும் நிலையா?
வறுமை என்பது
கிடைக்க வேண்டியது
கிடைக்காமையால் ஏற்பட்டதா?
வறுமை என்பது
முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையா?
வறுமையை விரட்ட
முயலாமை இருந்ததா?
வறுமையைப் போக்க
வழிகள் கிட்டவில்லையா?
உடல்நலக் குறைவா
முடமான உடலா
தொழிலின்றி வறுமையை அணைக்க...
பாவலர்களே!
எங்கும் எதிலும் எப்போதும்
வறுமை இருப்பதாகப் பாடுவதை
நிறுத்துங்கள்...
வறுமையைப் போக்க
வழிகாட்டுங்கள்
வறுமையை விரட்டப் போராட
கற்றுக்கொடுங்கள்
வறுமை என்பது
மறுமையிலும் வாழ்வில் நெருங்க
இடமளிக்காமல் பாபுனையுங்களேன்!
பாவலர்களுக்கு வறுமையே
பாவன்மையை ஊட்டுமென்றால்
நம்மாளுகளை வறுமை நெருங்கினால்
நல்வாழ்வை அமைக்க
நெருங்கிய வறுமையும் வழிகாட்டுமே!
வறுமையால் சாவு
வறுமையால் பின்னடைவு
வறுமையால் மருத்துவராகவில்லை
வறுமையால் ஊரே ஒதுக்கியது
போதும் போதும் போதும்
வறுமை தந்த வெறுமையால்
இன்னும்
எத்தனையோ துயரச் செய்திகள்...
வறுமை தந்த துயரச் செய்திகளென
இனிமேலும்
எம் காதுக்கெட்டாமல் இருக்க
இனியொரு வழிசெய்வோம் வாருங்கள்!

வறுமை (http://tamilnanbargal.com/node/40668) என்ற கவிதைக்குப் பதிலாக எழுதியது.

பொய்யும் மெய்யும்

பார்ப்பதற்கும் அழகாயிருக்கும்
கேட்பதற்கும் அழகாயிருக்கும்
ஆனால், அதனை
ஆய்வு செய்தால் (தீர விசாரித்தால்) தான் பொய்!
அது தான்
அன்றைய ஆள்கள் சொன்னாங்க
"கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
முழுமையாய்
ஆய்வு செய்தால் தான் மெய்!" யென்று!

செவ்வாய், 23 டிசம்பர், 2014

அடையாளம்

தேவை ஏற்பட்டால் மட்டுமே
நம்மாளுகள்
எதையாச்சும் எண்ணிப்பார்க்கிறார்கள்...
எதையாவது கண்டுபிடிக்கிறார்கள்...
உதவிகள் கிட்டும் வேளை
தேவைகள் ஏற்படாமல் போக
எண்ணிப்பார்க்க ஏதுமின்றி
கண்டுபிடிக்க ஏதுமின்றி
நம்மாளுகள் முட்டாளாகின்றனரே!
என்னைப் பொறுத்தவரையில்
கடவுள் போல வந்து உதவினார்களென
உதவியோருக்கும் நன்றி கூறுவேன்...
கடவுள் எம்மைப் படைத்தது போல
நானும்
ஏதாவது எண்ணிப் படைக்க வழிவிட்ட
உதவாதவர்களுக்கும் நன்றி கூறுவேன்...
ஏனெனில் - அது தான்
எனது அடையாளம் என்பேன்!

வெள்ளி, 19 டிசம்பர், 2014

மூடி வைக்க முடியுமா?

ஆயிரம் முறை சொன்னாலும்
பொய் உண்மையாகாது
ஆயிரம் முறை மறைத்தாலும்
உண்மை பொய்யாகாது
ஆயிரம் முறை இருந்தாலும்
முழுப் பூசணியை
மூடி வைக்க இயலுமா?
அது போலத் தான்
ஆயிரம் உறவுகள் தடுத்தாலும்
உள்ளத்திலே உண்மைக் காதலை
மூடி வைக்க இயலுமா?

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

காதலும் பூக்களைப் போலவே!


பூக்கள் என்றும் அழகானவை
அழகான பூக்கள் எம்மை இழுக்கும்
இழுக்கும் பூக்களில் கிடக்கும் முட்கள்
முட்செடிப் பூக்கள் மணம் தராதே!
மணம் தராத பூக்களில் ஏதுமில்லை
ஏதுமில்லாப் பூக்களில் தேனிருக்கும்
தேனிருக்காத பூக்களில் கள்ளிருக்கும்
கள்ளிருக்காத பூக்களில் வண்டுமிருக்காதே!
வண்டுமிருக்காத பூத்தானோ காதல் பூ
காதல் பூ என்பதாலோ அழகுப் பெண்
அழகுப் பெண் முகத்தில் பூசல்மாவோ
பூசல்மாப் பெண்ணில் மணம் வீசவோ!
மணம் வீசப் பூசுதண்ணியும் உண்டோ
உண்டெனப் பணமும் வெளிப்படுமோ
வெளிப்பட்ட பணத்திலும் மணத்திலும் காதலா?
காதலே காலம் கடந்து பிரிவதற்கே!
பிரிவதற்கேயான காதல் பூவா பெண்
பெண்ணைப் பூவாக்கி மணம்கெட வீசவா?
வீசிய பூவழுதால் காதல் தோல்வியா?
தோல்விக்கு உள்ளம் விரும்பாத பூக்களே!
பூக்களே பகை வேண்டாம் புரிந்திடு
புரிந்தால் ஆண்களும் காதல் பூவே
காதல் பூவாம் ஆண்களும் பணமிழப்பர்
பணமிழந்தவர் தோற்றிட காதலும் பூக்களாகவே!

பூவிற்கு இத்தனை பலமா?

காற்றைக் கிழித்துக் கொண்டுவரும் மணம்
கண்ணைப் பற்றி இழுத்துச்செல்லும் அழகு
"பூக்கள்!"
 
காற்றிலே மிதந்து வரும் மணம்
ஈற்றிலே என்னை இழுக்கும் தன்பக்கம்
"பூக்கள்!"

வியாழன், 11 டிசம்பர், 2014

எப்பவும் நாங்கள்...

எப்பவும் நாங்கள்
எங்கட பக்கத்து நிலைமைகளை
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் உள்ளத்தை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்கட விருப்பங்களைப் பற்றியே
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் விருப்பங்களை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்கட தேவைகளைப் பற்றியே
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் தேவைகளை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்களுக்கு உதவுவோரை அல்லது வருவாயை
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் எதிர்பார்க்கும்
உதவுவோரையோ வருவாயையோ
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
இப்படி எல்லாம்
எண்ணிப் பார்க்கின்ற வேளை
உன்னைப் போல
உன் அயலானையும் விரும்பு (நேசி)
என்றன்றே பெரியோர் சொல்லி வைச்சதை
எப்பவும் நாங்கள்
எண்ணிப் பார்ப்பதில்லையே!

புதன், 10 டிசம்பர், 2014

தங்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஓர் ஏழலில் (வாரத்தில்) அவை தங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கித் தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் விரிப்பை அறிந்துகொள்ள முடியும்.
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/2014/11/2014.html

தங்களுக்கான பரிசு, சான்றிதழ் கிடைத்ததும் அவை பற்றிய கருத்துகளை நீங்கள் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகள் 2015 தைப்பொங்கள் நாள் போட்டியில் கலந்துகொள்ள உள்ளோருக்கு ஊக்கம் தருமென நம்புகிறேன்.

2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டி விரிப்புக் கீழ்வரும் தளத்தில் விரைவில் வெளிவரும்.
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/

2014 தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் தங்களுக்கும் தங்களைத் தெரிவுசெய்த நடுவர்களான பெரியோருக்கும் போட்டியை நடாத்திய ரூபன் குழுவினருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறான போட்டிகள் வலைப்பூக்களில் நல்ல தமிழைப் பேணவும் சிறந்த படைப்புகள் வெளிவரவும் உலகெங்கும் தமிழைப் பரப்பவும் எனப் பல நன்மைகளைத் தருமென நம்புகிறேன். எனவே 2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டியில் எல்லோரும் பங்குபற்றுமாறு அழைக்கின்றேன்.

வியாழன், 4 டிசம்பர், 2014

என் இனிய உறவுகளே!


எனது வேலைப்பளு காரணமாக எனது வலைப்பூக்களில் பதிவுகள் இடவோ உறவுகளின் வலைப்பூக்களில் கருத்துப்பகிரவோ முடியவில்லை. 08/12/2014 திங்கள் தொடக்கம் வலைப்பூக்களில் வழமை போல் என்னைக் காணலாம்.

எல்லோரது ஒத்துழைப்புக்கும் எனது நன்றிகள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்