Translate Tamil to any languages.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

வாய்க்குள்ளேயே வாழ்க்கையா?


ஆண்பிள்ளை வீட்டார் கேட்கின்ற பெறுவனவால்
பெண்பிள்ளை வீட்டார் வெட்டென்று வீழ்கின்றனர்!
பெண்ணைப் பெற்றவர்கள் பிள்ளை கரைசேரவாம்
ஆணைப் பெற்றவர்கள் கிள்ள வருவாயாம்
"
எந்தப் பிள்ளை சாவதற்கு...?"

ஆண்டவனைக் கேட்கிறேன்


இந்தியாவும் ஈழமும்
இரண்டாகிப் போனதும்
அன்றைய கடற்கோளாலே...
உடல்களும் உறவுகளும்
துண்டாகிப் போனதும்
இன்றைய கடற்கோளாலே...
இரண்டாக்கித் துண்டாக்கி
அழிக்க எழும் கடற்கோளை
ஆண்டவா
உன்னால் அடக்க முடியாதா?
வான் வெளியில் இருந்து
வேடிக்கையா பார்க்கிறாய்?
இந்து மாகடலில்
கடற்கோள் உற்பத்தியா?
இந்தோனேசியாவில்
எம் உறவுகள் சாவு மழையிலா?
ஆண்டவா - நீ
உலகில் பிறந்த உயிர்கள்
அழிந்த பின்னாலே
எம்மைப் பெற்ற
தாய் மண்ணைக் கெடுக்கவா
இங்கு வர இருக்கின்றாய்...?

குறிப்பு:- 2010 இல் இந்தோனேசியாவில் இறுதியாக நிகழ்ந்த கடற்கோள் நினைவாக எழுதியது.

பள்ளிக்கூட நண்பர்கள்


என்னுடன் ஒன்றாய்ப் படித்த
பள்ளிக்கூட நண்பர்களே!
பள்ளிக்கூட வாழ்வை நினைத்தால்
உங்கள் முகம் தெரிகிறதே!
தொடர்பின்றிப் பிரிந்த நண்பர்களே!
என்னுடன்
தொடர்புகொள்ள மாட்டீரோ...?
உங்களோடு
ஓராயிரம் கதைகளுக்கு மேல்
ஒன்றுகூடிப் பேசலாமென
எண்ணியுள்ளேன்!
அந்தப் பள்ளிக்கூடக் காலத்து
சொந்தக் கூத்துகளை
எந்தக் காலத்திலும்
எப்படி மறப்போம்
பள்ளிக்கூட நண்பர்களே!

எல்லாம் இருக்கும் வரை...


கைகனக்கக் காசிருந்தால் கைகுலுக்கல் ஏராளம்
மனைமுட்டப் பொருளிருந்தால் உறவுகள் ஏராளம்
"
தேட்டத்தைத் தேடும் உறவுகள்..."

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-008


வேற்றுமையும்
சொற்புணர்ச்சியும்
மிகும் இடமும்
சந்திப்தைப் பாரும்!
எடுத்துக்காட்டாக
உறிக்கண் + தயிர் = உறிக்கட்டயிர்
என்றவாறே
நின்ற சொல் 'ண்'; 'ட்' ஆகவும்
வந்த சொல் 'த'; 'ட' ஆகவும்
திரிந்தே
ஏழாம் வேற்றுமை விரியில்
சில இடங்களில் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பனை + தோள் = பனைத்தோள்
(பனையைப் போன்ற தோள்)
என்றவாறு பார்த்தால்
உவமைத் தொகையிலும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாகப் பாரும்
நாய் + கால் = நாய்க்கால்(நாயினது கால்)
காவிரி + கரை = காவிரிக்கரை(காவிரியினது கரை)
என்றமைவதனால்
ஆறாம் வேற்றுமைத் தொகையில்
நின்ற சொல் அஃறிணையாயின்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பழம் + கடை = பழக்கடை
(பழத்தை உடைய கடை)
(நின்ற ஈற்று மகரம் கெட
'பழ' என்பதில் அகரம் தோன்ற
வந்த வல்லினம் மிகுந்ததே!)
கஞ்சி + தொட்டி = கஞ்சித்தொட்டி
(கஞ்சியை ஊற்றி வைத்திருக்கும் தொட்டி)
ஆகிய இரண்டிலுமே
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
மரம் + பிடி = மரப் பிடி(மரத்தாலான பிடி)
காகிதம் + புத்தகம் = காகிதப்புத்தகம்(காகிதத்தாலான புத்தகம்)
இரும்பு + பெட்டி = இரும்புப்பெட்டி
(இரும்பாற் செய்த பெட்டி)
ஆகிய மூன்றிலுமே
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
ஆடு + தழை = ஆட்டுத்தழை
(ஆட்டுக்குத் தேவையான தழை)
மாடு + தண்ணீர் = மாட்டுத்தண்ணீர்
(மாட்டுக்குத் தேவையான தண்ணீர்)
ஆகிய இரண்டிலும் பாரும்
(நெடிற்றொடர் குற்றியலுகரச் சொல்லோடு
நான்காம் வேற்றுமை 'கு' உருபு
புணரும் வேளையே 'உ'கரம் இரட்டித்தது)
நான்காம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தொழில் + கூட்டு = தொழிற்கூட்டு
கால் + கட்டு = காற்கட்டு
ஆகிய இரண்டிலுமே
(லகரம் றகரமாகத் திரிந்ததே)
தொழிலில் கூட்டு, காலில் கட்டு என
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வீட்டில் + கற்கண்டு = வீட்டிற்கற்கண்டு
தலைநகர் + தமிழ்ச்சங்கம் = தலைநகர்த் தமிழ்ச்சங்கம்
ஆகிய இரண்டிலும்
வீட்டின் கண், தலைநகரின் கண் என
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
முருங்கை + காய் = முருங்கைக்காய்
என்பதில் பாரும்
சிறப்புப் பெயரை அடுத்து
பொதுப் பெயர் வந்து நிற்க
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தீ + பிடித்தது = தீப்பிடித்தது
கா + குயில் = காக்குயில்(சோலைக்குயில்)
நா + குளறியது = நாக்குளறியது
பா + போட்டி = பாப்போட்டி
என்றாறு பார்த்தால்
ஓரெழுத்தொரு மொழியாகிய
நெடிலெழுத்தை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தீரா + துன்பம் = தீராத்துன்பம்(தீராத துன்பம்)
அறியா + காளை = அறியாக்காளை(அறியாத காளை)
என்று வந்து சேரும்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தினை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
விள + குறிது = விளக் குறிது(அ)
பலா + காய் = பலாக் காய்(ஆ)
கிளி + சிறை = கிளிச் சிறை(இ)
என்றவாறு அமைய
உயிரெழுத்துக்களை அடுத்து வரும்
வல்லினம் மிகும் ஆயினும்
ஈற்றெழுத்தாக எகரம் வராமையால்
அளபெடையாக(சேஎ) ஈற்றில் வர
'எ' உடனும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தர + சொன்னான் = தரச் சொன்னான்(அ)
ஓடி + போனான் = ஓடிப் போனான்(இ)
என்று அகர, இகர ஈற்று
வினையெச்சத்தினை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
இருப்பதாய் + சொன்னான் = இருப்பதாய்ச் சொன்னான்(ஆய்)
போய் + கொண்டுவந்தான் =போய்க் கொண்டுவந்தான்(போய்)
கொடுப்பதாக + கூறினான் = கொடுப்பதாகக் கூறினான்(ஆக)
என்பதில் பாரும்
ஆய், போய், ஆக என்னும்
வினையெச்சச் சொல்களை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
அன்றி + சொல்லமாட்டேன் = அன்றிச் சொல்லமாட்டேன்
இன்றி + கொடுக்கமாட்டேன் = இன்றிக் கொடுக்கமாட்டேன்
என்றவாறு
அன்றி, இன்றி என்னும்
இகர ஈற்று வினைக்குறிப்புச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
குரங்கு + கூட்டம் = குரங்குக் கூட்டம்
மருந்து + கடை = மருந்துக் கடை
என்றவாறு
மென்றொடர்க் குற்றியலுகரச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பேச்சு + பேசினான் = பேச்சுப் பேசினான்
விற்று + பெருக்கினான் = விற்றுப் பெருக்கினான்
என்றவாறு
வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பொது + கூட்டம் = பொதுக் கூட்டம்
முழு + பக்கம் = முழுப் பக்கம்
என்றவாறு
முற்றியலுகரச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வேலி + கம்பி = வேலிக்கம்பி(வேலிக்குக் கம்பி)
நாக்கு + சுவை = நாக்குச்சுவை(நாக்குக்குச் சுவை)
என்றவாறு
நான்காம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
ஆட்டு + கால் =ஆட்டுக்கால்(ஆட்டினது + கால்)
வண்டி + சக்கரம் = வண்டிச் சக்கரம்(வண்டியினது சக்கரம்)
என்றவாறு
ஆறாம் வேற்றுமைத் தொகையில்
நிலைமொழி அஃறிணையாயின்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வீடு + கதவு = வீட்டிற் கதவு(வீட்டின் கண் கதவு)
நாடு + கலகம் = நாட்டிற் கலகம்(நாட்டின் கண் கலகம்)
என்றவாறு
ஏழாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வினா + தாள் = வினாத் தாள்
பலா + சுளை = பலாச் சுளை
என்றவாறு
தனிக்குற்றெழுத்தை அடுத்துள்ள
ஆகாரத்தை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
தனிச் சொல்லில் கூட
'ய்', 'ர்', 'ழ்' ஆகிய
மும்மெய்களைத் தொடர்ந்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பொய்த்தது, பார்க்கிறது, வாழ்க்கை
என்பவற்றைக் கூறலாமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ன்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால் பாரும்
"பொன் + செல்வி = பொற்செல்வி" என
புணரும் வேளை 'ன்' ஆனது 'ற்' ஆக மாறுமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ல்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால் பாரும்
"பல் + பொடி = பற்பொடி" என
புணரும் வேளை 'ல்' ஆனது 'ற்' ஆக மாறுமே!
நின்ற சொல்லின் ஈற்றில்
'ன்'-னும் 'ல்'-லும் இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினம் 'த'-வாக இருந்தால்
"பொன் + தகடு = பொற்றகடு
கல் + தட்டை = கற்றட்டை" என
'ன்'-னும் 'ல்'-லும் 'ற்' ஆக மாறியும்
வந்த தகரம்(த) றகரமாக(ற)த் திரியுமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ண்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாகவும் இருந்தால்
"மண் + பானை = மட்பானை" என
ணகரம்(ண) டகரமாக(ட)த் திரியுமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ள்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாகவும் இருந்தால்
"உள் + சிறந்தது = உட்சிறந்தது" என
ளகரம்(ள) டகரமாக(ட)த் திரியுமே!
நின்ற சொல்லின் ஈற்றில்
'ண்'-ணும் 'ள்'-ளும் இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினம் 'த'-வாக இருந்தால்
"கண் + திறந்தது = கட்டிறந்தது
வாள் + தடித்தது = வாட்டடித்தது" என
'ண்'-ணும் 'ள்'-ளும் 'ட்' ஆக மாறியும்
வந்த தகரம்(த) டகரமாக(ட)த் திரியுமே!
இரு குறில் இணைந்து வரும்
அஃறிணைப் பன்மைச் சொல்லிலும்
தனி எழுத்திலான நெடிற் சொல்லிலும்
பன்மை விகுதியாகிய 'கள்' சேரும் வேளை
வல்லினம் மிகுவதைப் பாரும்!
எடுத்துக்காட்டாக
புளு + கள் = புளுக்கள்
கொசு + கள் = கொசுக்கள்
புறா + கள் = புறாக்கள்
சுறா + கள் = சுறாக்கள்
ஆ + கள் = ஆக்கள்(பசுக்கள்)
நா + கள் = நாக்கள்(நாக்குஏகள்)
சே + கள் = சேக்கள்(எருதுகள்)
ஏ + கள் = ஏக்கள்(அம்புகள்)
என்பவற்றைக் கூறினாலும் கூட
ஒரு பிழை இருக்கக் கண்டியளே!
"இரு குறில் இணைந்து வரும்
அஃறிணைப் பன்மைச் சொல்கள்"
என்பதற்குப் பதிலாக
"குறிலில் தொடங்கும் ஈரெழுத்து
அஃறிணைப் பன்மைச் சொல்கள்" என்றால்
எடுத்துக்காட்டு எடுப்பாக இருக்குமே!
வல்லினம் மிகும்
இடங்களைப் பார்த்தாச்சு - ஆயினும்
வல்லினம் மிகா இடங்களை
வரும் முறை பார்க்கலாம் தானே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க

எழுத்து


நான் கற்ற கல்வியால்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் செய்த பணியா(தொழிலா)ல்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் பழகிய ஆண் நட்பால்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் பழகிய பெண் நட்பால்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் ஈடுபட்ட எதனாலும்
நான் புகழ் ஈட்டியதில்லை...
ஆனால்,
நான்
என் எழுத்தால் அல்லவா
உலகெங்கிலும் இருந்து
புகழ் வந்து சேர வாழ்கின்றேன்!
வெற்றுத்தாளில்
வெறும் எழுதுகோலைத் தேய்த்து
என்ன தான் எழுதினாலும்
புகழ் வந்து சேருமென
எண்ணிவிட முடியாது தான்!
எழுத்தை வாசிப்பவருக்கு;
மகிழ்வாகப் பொழுதுபோக்கவோ
வாசிக்கையில் களிப்படைவதற்கோ
அறிவினைப் பெருக்கவோ
ஊர்ச் செய்திகளை உவமையோடு அறியவோ
நாளைய நடப்புகளை எண்ணவோ
சிறந்த முடிவுகளை எடுக்கவோ
உதவும் எழுத்தாக இருப்பின்
புகழ் வந்து சேர வாய்ப்புண்டாம்!
நான்...
எழுத்தைப் பற்றி எழுதியளவுக்கு
என் எழுத்தில்
எதுவும் இருக்க வாய்ப்பில்லைத் தான்...
என்றாலும் பாருங்கோ
தமிழ்நண்பர்கள் தளத்திலுள்ள
என் பதிவுகளைக் கண்டு
என் எழுத்தை வாசிப்பவருக்கு
சில வேளை சிரிப்பும் வரலாம்...
வெற்றுத்தாளில்
வெறும் எழுதுகோலைத் தேய்த்து எழுதிய
எனது
கையெழுத்துப் பதிவைப் பார்த்தால்
வயிற்றைக் குமட்டிச் சத்தி வருமளவுக்கு
குப்பையாய் எழுதியிருப்பேன்...
எட்டாம் வகுப்பில படிக்கையிலே
கணக்குப் பதிவேட்டில
இரட்டைச் சிவப்புக் கோடுகளுக்குள்ளே
"குப்பை" என்று எழுதி
ஒப்பமிட்ட ஆசிரியர்
போதாக்குறைக்கு
நல்ல அடியும் போட்டதே
எழுத்தால்
நான் வேண்டிய முதற் பரிசு!
என்னவோ எப்படியோ
குப்பையாய் எழுதினாலும்
எழுத்து நடையில் அழகிருந்தால்
வாசிப்பவருக்கு
வாசிப்புப் பசி தீர்த்தால்
எழுத்தால் புகழ் ஈட்டலாமென
கணினியில் தட்டச்சுச் செய்தெல்லோ
இணையத் தளத்தில் பதிவிட
தொலை தூரத்து வாசகர்
குறும் செய்தியில் வாழ்த்துகின்றனரே!
எவரும் எழுதலாம்
எழுத்துக்குச் சக்தியுண்டு...
எழுதுவேன் எனத் துணிந்துவிட்டால்
எழுதுகோலும் துணைநிற்கும்...
கையெழுத்து
அழகில்லாது போனாலும்
சொல்லவேண்டிய செய்தியை
அழகான எழுத்து நடையில்
வெளிப்படுத்தினால்
உன் எழுத்துக்கு நிகர் வேறேது!

குறிப்பு: என்னை இணையத்தள இலக்கிய உலகிற்கு 'தமிழ்நண்பர்கள்' தளமே அறிமுகம் செய்தது.