Translate Tamil to any languages.

செவ்வாய், 31 ஜூலை, 2018

இலக்கியத் திருட்டு


இலக்கியத் திருட்டு

ஒவ்வொருவர் எழுத்தும் வேறுபட்டாலும்
ஒரு சிலரின் புனைவு (கற்பனை)
ஒன்றுபடலாம் தான்! - அது
இலக்கியத் திருட்டாகாதே!
ஒருவர் எழுதியது போல
மற்றொருவர் எழுதியிருந்தால்
எவரது எழுத்தைப் படியெடுத்தாரென
கண்டுபிடிக்க முண்டியடித்தால்
இலக்கியத் திருட்டைக் காண்பீரே!
எவரெவருடைய எண்ணமென
பொறுக்கிச் சுட்டிக்காட்டியே
நானும் எழுதுகிறேன். - அதை
இலக்கியத் திருட்டு என்கிறாங்களே!
என்னைக் கேளாமல்
என் பெயரைச் சுட்டாமல்
எனது எண்ணங்களைப் பொறுக்கி
தங்களுடையதெனப் பகிருவது
இலக்கியத் திருட்டு இல்லையா?
இலக்கியத் திருட்டுப் பற்றி
அறியாதோர் அறிந்திட்டால் - சிறந்த
இலக்கிய வெளியீடுகளை வெளிக்கொணர
இடமுண்டு என்பதை அறியாதோரும் உண்டோ?


படிப்பது சுகமே!

படிக்கப் பின்வாங்கும் உள்ளங்களே!
படிக்கத் தொடங்கும் வேளை
புளிக்கிறதா? - பரவாயில்லை
படிக்க முயன்று பாருங்கள்...
கொஞ்சம் படித்த பின்னே
படிப்பது சுகமே என
படிக்கப் படிக்க இனிக்கிறதே என
நீங்களாகவே விரும்பிப் படிப்பீர்களே!
சின்னப் பிள்ளையாக இருக்கையிலே
படிப்புக்குப் பின்னடித்த நானே
பொத்தகக் கடையையே வீட்டிலிறக்கியே
இனிக்க இனிக்கப் படிக்கிறேனே!
தம்பி! தங்கைகளே! - இன்று
புளிக்கின்ற படிப்புத் தானே - நாளை
இனிக்கும் படிப்பு ஆகிறதே! - நீ
படித்த படிப்புத் தானே - நாளை
உனக்கென்ற தனி அடையாளத்தை
நிலைநிறுத்தப்போகிறதே! - அதுவே
உலகம்
 
உன்னை நாடவைக்க உதவப்போகிறதே!படித்தமைக்குச் சான்று

படிப்புக்கான தகுதியே
சான்றிதல்களின் பட்டங்களின் எண்ணிக்கை - அது
படிப்பின் அளவுகோல் என்பேன்! - அதனை
விளம்பரங்களில் காணமுடியுமே!
படித்தமைக்கான தகுதியே
படித்ததைப் பாவித்த மக்களின் எண்ணிக்கை - அது
படித்தவரின் அளவுகோல் என்பேன்! - அதனை
மக்கள் பேச்சுகளில் காணமுடியுமே!
படிப்பைக் காட்டித்திரிவதை விட
படித்ததைப் பலரும் பயனீட்ட வழங்கினாலே
படித்தவரென மக்கள் பாராட்டுக் கிட்டுமே! - அதுவே
இறுதி வரை எம்மோடு பயணிக்கும்!


அடையாளம்

படித்துப் படித்துச் சொன்னார்கள் - உங்கள்
அடையாளத்தை இழக்காமல் வாழப் பழகென்று!
படித்துப் படித்துப் பின்பற்றினேன் - எங்கள்
அடையாளத்தை இழக்காமல் பணி செய்யவே!
என் பணி என்னை அடையாளப்படுத்துகிறதே!
உங்கள் பணி உங்களை அடையாளப்படுத்துகிறதா?எண்ணிப்பாருங்க...

நானே எனக்குக் கடவுள்!
நானே எனக்குப் பிரம்மா!
நானே எனக்கு நீதிபதி!
பதினொரு பக்கம் பார்த்து
முடிவு எடுக்கும் என்னை விட
பெரியவர் எவரும் உளரோ?

குறிப்பு:
பிரம்மா - படைத்தற் கடவுள்
பதினொரு பக்கம் - முன், பின், இடம், வலம், கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம், நேர் எண்ணம், மறை எண்ணம், நேர் மறை எண்ணம், எதிர் மறை எண்ணம்.

"மனிதன் கடவுளாக மாட்டான்
மனிதன் மனிதனாக வாழவே
பதினொரு பக்கங்களையும் பார்த்து
ஒவ்வொரு முடிவையும் எடுக்கலாமே!" என
நினைவூட்டவே இவ்வாறு எழுதினேன்!

புதன், 25 ஜூலை, 2018

இரட்டைக்கிளவியோடு விளையாடினேன்!

ஓர் இணையாக வருகின்ற சொல்களாயும் அவை பிரிந்தால் பொருள் தராததுமாக அமைவன இரட்டைக்கிளவி எனத் தமிழில் பேசப்படுகிறது. எ-கா: நறநற என பல்லைக் கடித்துக் காட்டினாள் என்பதில் "நறநற" என்பது இரட்டைக்கிளவி எனலாம்.

"சலசல சலசல இரட்டைக் கிளவி
தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ" என
பாவலர் வைரமுத்து அழகாகச் சொல்லியுள்ளார்.

சின்னப் பொடியன் நானும் இரட்டைக் கிளவி எனும் இணைச் சொல்களை கையாண்டு 'பா' நடையில கதையளந்துள்ளேன். 'பா' புனைய விரும்புவோர் இதனைக் கையாண்டால் சுவையான பாக்களை உருவாக்கலாம். வாருங்கள் இரட்டைக்கிளவியோடு விளையாடுவோம்!

இரட்டைக் கிளவி எனும் இணைச் சொல்களைக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடலாம்.

சலசல என ஓடிய ஆற்றின் மேலே
மடமட என முறிந்தன மரங்கள்!
சரசர என்று மான்கள் ஓடின
கீசுகீசு என குருவிகள் கத்தின
கிசுகிசுவாக "ஆறு வேரைக் கரைத்தது" என
பரபரப்பாக ஊரெங்கும் செய்தி!

கரகரத்த குரலில் "விரைவாக முடி" என
தொள தொளச் சட்டைக்காரர் சொல்ல
சாரைசாரையாக வந்த மக்கள்
கசகச என வியர்வை சிந்தி
மளமள என மரங்களை அகற்றிய பின்
சிலுசிலு என வீசும் காற்றில் ஓய்வாம்!

கிச்சுக்கிச்சு மூட்டியவாறு ஓய்வெடுத்தோரிருக்க
குளுகுளு ஆற்றங்கரைப் பக்கமாய்
கிளுகிளு படங்களில் வருவோரைப் போல
கலகலப்பான பேச்சோடு வாலைகள் வர
தளதளவென்று நின்ற காளைகள் நோக்க
குடுகுடு கிழவர் "காதல் அரும்புதோ?" என்றார்!

சொரசொரப்பான தாடிக்காரக் காளை
மொசுமொசுவென மயிருள்ள வாலையிடம்
குசுகுசு என்று "காதலிப்பியா?" எனக் கேட்க
சவசவ என்று முகம் சிவக்க - அவளோ
கடகட எனச் சிரித்தவாறு சொன்னாள்
தகதக என மின்னும் தன்னவரைக் கேளென்று!

விறுவிறுப்பாக உரையாடல் நடக்கையிலே
தைதை என்று ஆடினாள் அந்த வாலை
திடுதிடு என நுழைந்த அவளது கணவன்
கும்கும் என "காதலிப்பியா?" என்றவனைக் குத்த
வெடவெட என நடுங்கியது அவனது உடல்
பொலபொல எனக் கண்ணீரும் வடித்தான்!

பேந்தப்பேந்த விழித்தோரும் சிரித்தோரும்
வழவழ என்று பேசியவாறு அமைதியாக
லொடலொட எனப் பேசும் வாலை ஒருவள்
மொறுமொறு என்று சுட்ட முறுக்கு விற்று வர
சுடச்சுட வேண்டிக் கடித்துக் கொறித்துண்டு
மடமட என ஆற்று நீரைக் குடித்துக் கலைந்தனரே!

பள்ளத்தில் விழ முன்

தரதர என நண்பன் இழுத்துச் செல்ல
சதசத என்ற சேற்றில் விழுந்ததும்
குபுகுபு எனக் குருதி சிந்தாது கசிய
வடவட என உடல் வேர்க்கும் வேளை
கமகம என மணந்த பக்கம் திரும்ப
கிடுகிடு பள்ளம் தெரியக் கண்டதும்
படபட என இமைகள் கொட்ட
கிறுகிறு என்று தலை சுற்றியதே!

சுற்றுலாச் சொன்ன செய்தி!

கலகலப்பாக நண்பர்களோடு கதைத்து
அழகழகென மின்னுமிடங்களை எண்ணி
அடுக்கடுக்காகத் திட்டங்களைத் தீட்டி
மளமளவெனச் சுற்றுலாச் சென்றோம்!

சலசலவென அலைகள் வீசும் கடற்கரைகள்
பளபளவென வெயிலில் மின்னும் மலைகள்
கமகமவென மணம் பரப்பும் பூங்காக்கள்
சரசரவென ஓடியோடி உலாவந்தோம்!

புகைபுகையாய் வெண்சுருட்டை ஊதினோம்
கசக்கக்கசக்க மதுபானத்தையே குடித்தோம்
குளுகுளுவெனக் குளிரக் குளித்தோம் - ஆயினும்
சிலுசிலுவென்ற காற்றிலே கெடுநாற்றம் போகலையே!

கடகடவெனச் சிரித்து மகிழ்ந்தோம் - நாம்
கிடுகிடுவெனப் பலவிடம் போய்ப் பார்த்தோம்
புதுப்புதுச் சூழலைச் சுற்றிவரவே - ஈற்றில்
திருதிருவென ஊர்திரும்பப் பணமின்றி விழித்தோம்!

டிக் டிக் என நல்லநேரம் கரைய
பட்டுக்கெட்டுப் பொற்காலம் வீணாக
அடிக்கடி நாம் விட்ட தவறுகளால்...
பக்குப்பக்கென எங்கள் நெஞ்சு அடித்ததே!

குறிப்பு: ஒன்றிலே திட்டமிட்டு இன்னொன்றிலே கோட்டைவிடும் உறவுகளுக்காக எழுதியது.

வியாழன், 19 ஜூலை, 2018

சாவதற்கும் நல்ல வழிகாட்டல்


நம்மட உள்ளத்தில
நல்லபடி விருப்பங்கள் விளையுமே!
விருப்பங்களை அடையத் தானே
விடாப்பிடியாக முயற்சி பண்ணுறோமே!
விடிந்த பிறகு தானே தெரிகிறது
கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதென்று!
பரவாயில்லை! - உங்கள்
கடன் தொல்லையைப் போக்க
நல்லபடி சாவதே சிறந்த வழி!

கடன் தொல்லைக்கு
சாவு தான் தீர்வென்று கூறும்
என்னைக் கொல்ல வருமுன்
நிற்க,
சற்றுத் தலைக்கு எண்ணெய் தேய்த்து
மூளை இயங்கியதும் எண்ணிப் பாருங்க...
கொஞ்சம் கொஞ்சமாகக் கடனடைக்க
வருவாய் இருக்கென்பீர்! - இருப்பினும்
வருவாய் வரவில்லையாயின் சாவதே வழி!

எப்படியோ
இப்படிச் சாகடிக்கத் தான்
உருப்படியான செயலும் பணியுமென
அழகாக அறிவூட்டி
நிதி நிறுவனங்கள் விளம்பரம் செய்ய
உள்ளத்து விருப்பத்தை அடைய
நுண்மதிக் கடன், வாடகைக் கொள்வனவு,
முக்கோண (பிரமிட்) முறை வணிகம்,
சீட்டுக் குலக்கல், கடன் அட்டைப் பாவனை
இருக்கு இருக்கென முண்டியடிப்பீர் - பின்
பெற்றதை மீளளிக்க முயன்றும்
வருவாய் வரவில்லையாயின் சாவதே வழி!

வருவாய் வர வரச் சேர்த்தோ
தெருவில பிச்சை எடுத்துத் திரட்டியோ
உள்ளத்து விருப்பங்களை அடைய
உங்களால் முடியாதென்பதை உணர்ந்த
வணிகர்கள் கையாள்வது
"பணம் கொடு பயன் பெறு" என்ற - அதாவது
'கையில காசு வாயில தோசை' என்ற
முகாமைத்துவ நுட்பம் என்பேன்!

உள்ளம் குழம்பியதே!


நீரிழிவைக் குறைக்க நடையிலே
வழக்கமாகச் செல்லும் வழியிலே
பழக்கமில்லாத அழகான கறுப்பி
எதிர்பட்டு இடைமறிக்க நின்றானிவன்!!

வெண்பல்லுத் தெரியச் சிரித்தாள்
வெட்டி வெட்டிக் கண்ணடித்தாள்
கையைப் பிடித்துக் குலுக்கினாள்
கைமாறாக ஆயிரந்தான் கேட்டாள்!

முன்னாலே கன்னக்குழி அழகியவள்
என்னாலே என்னதான் செய்வதென
கள்ளமில்லா உள்ளம் - பையிலே
கிள்ளியொரு ஆயிரத்தை நீட்டியதே!

காற்றிலே காசினி தானென்று
ஈற்றிலே திரும்பிப் பாராமல்
அவளோடு ஆயிரம் தான் போக
இவன் உள்ளத்தில் அவள் தானே!

அவளோ அத்தானின் சம்பளத்தன்று
இவனுக்குச் சொத்தாகும் ஆயிரமென
சொல்லிச் சிட்டாகப் பறக்கையிலே
சொல்லின் பொருளுணர நேரமாச்சே!

நீரிழிவைக் குறைக்கும் நடையிலே
பேரிலவள் காசினியாம் தருவாளோ
ஆயிரமெனக் கணிப்பிட முன்னரே
ஆயிரமடிக்கு அப்பாலே நடந்தானிவன்!

பிள்ளைகள்
உலகத்தில எவருமே
உடல் நொந்தவுடனே
'அம்மா' என்று தான் அழுகிறாங்க!
'அம்மா' என்ற சொல்
உலக மொழிகளுக்குப் பொதுவானதா?
உலகின் முதன்மொழி தமிழ் என்பதாலா?
'அம்மா' என்ற சொல்லின் வலு
உலகத்தாரை ஆளுகின்றதா?
இது இப்படி இருக்க
அம்மாக்களை 
முதியோர் இல்லத்தில தள்ளிவிட்டு 
ஓடி ஒளியும் பிள்ளைகளையே
நம் கண்கள் கண்கிறதே!

சனி, 14 ஜூலை, 2018

'பா' நடையில புனைகிறேன்!முயன்று பார்!

நான் ஒரு செல்லாக் காசென
நறுக்கிவிட்ட எல்லோரும்
என்னை நாடுவதேன்? - அப்ப
என்னிடம் ஏதோ இருக்கலாம்!
என்னை நறுக்கிவிட முன்னே
குப்பையிலே போட்ட பண்டமும்
ஒருவேளை தேவைப்படலாமென
நினைக்கத் தவறினர் போலும்!
நானோ தனிமைப்படுத்தப்பட்டதால்
எனக்கு வேண்டிய எல்லாம்
நானே ஆக்க முனைந்ததால்
தன்னிறைவு பெற்றவனாக
நானும் உயர்ந்து விட்டேன்!
உறவுகளே! - உங்களை
எவரும் ஒதுக்கி வைக்கலாம்
எவரும் தனிமைப்படுத்தி விடலாம்
எவரும் உதவாமல் ஒதுங்கலாம்
அதற்கு அஞ்ச வேண்டியதில்லையே!
எதற்கும் தன்கையே தனக்குதவியென
நெஞ்சை நிமிர்த்தி நடைபோடுங்கள்!
விடா முயற்சியும் தொடர் பயிற்சியும்
துணையாக இருக்கும் வரை
தோல்விகள் தொடரப் போவதில்லையே!
விலகிச் செல்லும் வெற்றிகளைக் கூட
நெருங்கி சென்றால் எட்டிப் பிடிக்கலாம்!
தன்நம்பிக்கையோடு நடைபோடு
உனக்குப் பின்னே கடவுள் கூட வருவாரே!

'பா'  நடையில  புனைகிறேன்!

நான் எழுதுவது எல்லாம்
பா/ கவிதை இல்லை என்பேன்!
பா நடையில தான் - என்
உள்ளத்தை உரசிய / உறுத்திய தகவலை
எழுத முயற்சி எடுப்பதாகச் சொல்வேன்!
நான் பாவலனோ / கவிஞனோ இல்லை!
பாவலனாக எண்ணினாலும் கூட
எழுதிய எதுவும் பா / கவிதை ஆக
புனைவு (கற்பனை) ஊற்றுப் போதாதென
வாசகர் கருத்துக் கணிப்புத் தெரிவிப்பதால்
பா நடையில புனைந்து தான்
நானும் எழுதுவதைத் தொடருகிறேன்!
படித்தவை கொஞ்சம் தான்
பட்டறிந்தவை அதிகம் தான்
அன்பு காட்டியோர் கொஞ்சம் தான்
வெறுப்புக் காட்டியோர் அதிகம் தான்
உதவி செய்தோர் கொஞ்சம் தான்
உதவி செய்யாதோர் அதிகம் தான்
மொத்தத்தில் வாழ்ந்தது கொஞ்சம் தான்
வாழ்ந்ததில் நொந்தது அதிகம் தான்
மகிழ்ச்சியை விடத் துயரம் தான்
நான் சுமப்பதிலே அதிகம் தான்
நான் சுமப்பதைத் தான்
கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைக்கவே
பா நடையில எழுதிப் பார்க்கிறேன்!

நிறுத்தாதே!

எழுதுவதால்
உள்ளம் நிறைவடையும்
எழுதுவதால்
மகிழ்ச்சி அடைகிறோம்
என எம் பக்கம் - ஏதோ
எம்மை எழுதத் தூண்டலாம்!
எவர் என்ன சொன்னால் என்ன
எழுதுவதை நிறுத்தவே கூடாது!
உள்ளத்துக்கும் எழுத்துக்கும்
பால் வேறுபாடு இல்லை!
மணமுடித்த பின்,
மணமுடிக்க முன் என்ற
வேறுபாடு வேண்டாம்
நல்லதை எண்ணுவோம்
உள்ளத்தில் தோன்றியதை
எழுதுவோம்
எதிர்ப்பவர் எதிர்க்கட்டும்
நல்லதை உள்வாங்குவோம்
நல்லதை வெளியிடுவோம்
எதற்கும்
எழுதுவதை நிறுத்தக்கூடாது!


சின்ன வேண்டுகோள்!

எழுது பிள்ளாய் - உன்
எண்ணங்களை எல்லாம் - நான்
படித்துச் சுவைத்து - உன்
உள்ளத்து இருப்பறிந்து - நான்
உளநல மதியுரை வழங்குவேனே!
முகநூலில் (Facebook) எழுதுவோரே
உங்கள் உள்ளத்து இருப்பையே
நீங்கள் வெளிப்படுத்த முனைவீர்
அதை வைத்து - என்னைப் போன்ற
உளவியலாளர்கள் - உங்களுக்கு
விசர்/ பைத்தியம் எனப் பட்டமளிப்பரே!
எழுதுங்கள் - ஆனால்
கமுக்கமாக (இரகசியமாக)ப் பேணவேண்டியதை
எழுதி வெளியிடுவதால் - உங்கள்
மதிப்பினை நீங்களே இழப்பீரே!
கமுக்கங்களை (இரகசியங்களை)ப் பரப்பும்
ஊடகமாகவே முகநூலைக் (Facebook) காண்பீர்...
உளநலக் குறைகளைக் காண
முகநூல் (Facebook) போதுமென்பேன்!
அப்படித்தான் - சிலர்
எழுதிக்கொள்கிறார்கள் - அதை
எடைபோட்டதால் இப்படி எழுதினேன்!
உனக்கு உள (மன) நோயோ இல்லையோ
உளவியலாளருக்கு - உன்
எழுத்துக்கள் உண்மையைச் சொல்லுமே!
அதுபோலத் தான் - உன்
பேச்சிலும் மின்னும் சில
உனக்கு உள (மன) நோயென
அடையாளப்படுத்தவும் கூடும்!
எப்போதும் எழுதுங்கள்
எதனையும் எழுதுங்கள்
ஆனால்,
உங்கள் எழுத்தை வைத்து
உங்கள் பேச்சை வைத்து
உங்களை ஓர் உள (மன) நோயாளரென
காட்டிக்கொள்ளும் வகையில் எழுதாதீர்!

வெள்ளி, 13 ஜூலை, 2018

தமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்!திறமையாகப் படிப்பித்ததால தான் - எனக்கு
சிங்கள மாணவர்கள் பெருகியதால தான்
சிங்கள ஆசிரிய நண்பர்கள் - சிலருக்கு
என் மீது பொறாமை பொங்கியதாம்!

தமது சிக்கல்களைத் தாமே தீர்க்காமல்
நாட்டு மக்கள் கண்டு களிக்கவே - நடு
வழியே என்னை வாட்டி வதைத்தே - என்
திறனை எல்லோரும் உணர வைத்தனரே!

சிந்திக்க மறந்த சிங்கள ஆசிரிய நண்பர்கள்
"நீயொரு வெங்காயம் உன்னை உரித்தால்
உனக்குள்ளே ஒன்றும் இருக்காது!" என
எனது செயல்களைச் செயலிழக்க வைத்தனரே!

கற்பித்தல் கருவிகளைக் களவாடியும் தான்
கற்பித்தல் பணியை முடக்கினால் தான்
சிங்கள மாணவர் எண்ணிக்கை - எனக்கு
குறையுமென நம்பி ஏமாந்தனர் போலும்!

இயலாது போகவே இழிவுபடுத்தியே
கற்பித்த நிறுவனத்தை விட்டு வெளியேற்றியே
கொழும்பு வீதிகளில் வாட்டி வதைத்துமே
என்னை யாழ்ப்பாணத்திற்கு விரட்டி விட்டனரே!

சிங்கள மண்ணில் இருந்து விரட்டியதால்
என்னைப் போலப் பலர் லங்காராணியில்
யாழ்ப்பாணம் வந்திறங்கிய 1983 நிகழ்வுகள்
அடிக்கடி தமிழரின் உள்ளத்தில் உருளுமே!

யாழ்ப்பாணம் திரும்பிய நாள் தொட்டு
நம்மவர் நிலை பரவவும் நற்றமிழ் பேணவும்
தமிழுக்காக என் குரல் ஒலிக்கட்டுமென
இலக்கியம் படைப்பதோடு ஊரிலே முடங்கினேன்!

தமிழரின் உயிரைக் காப்பாற்றிய சிங்களவரை
மதித்துப் போற்றும் தமிழரும் இருக்க
தமிழரைக் கொன்ற சிங்களவரால் ஏற்பட்ட
ஆறாத புண்களைத் தமிழரும் சுமக்கின்றனரே!

கேளுங்க சிங்கள உறவுகளே! - உங்களால்
தமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள் தான்
வாழ்நாள் சொத்தாக இருக்கும் வரை
தமிழர் - சிங்களவர் நல்லுறவு மலருமா?

கேளுங்க சிங்கள உறவுகளே! - உங்கள்
சொல்கள், செயல்கள் எல்லாம் உலகறியுமே!
உங்களால் புண்பட்ட எங்கள் தமிழருக்கு
உங்களால் தீர்வும் வாழ்வும் தரவியலாதே!

தீர்வும் வாழ்வும் தரவியலாத உங்களால்
தமிழர் - சிங்களவர் நல்லுறவுக்கு இடமுண்டோ?
கேளுங்க சிங்கள உறவுகளே! - உங்கள்
உள்ளத்து மாற்றத்தில் தான் அமைதியுண்டே!

லங்காராணி: 1983 இல் கொழும்பில் இருந்து உயிர் தப்பிய தமிழரை யாழ்ப்பாணம் ஏற்றி வந்த கடற்கப்பலின் பெயர்.