Translate Tamil to any languages.

வெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்

தொடக்க காலத்தில் மனிதன் பறையடித்தோ, சங்கு ஊதியோ, நெருப்புக் கொழுத்தியோ தொடர்பாடலை மேற்கொண்டான் எனப் பலர் சொல்லக் கேள்விப்பட்டேன். அதுவே ஊடகங்களும் தொடர்பாடலும் தோன்றக் காரணமாயிற்றா அல்லது அவை தான் தொடக்ககால ஊடகங்களும் தொடர்பாடலும் என்பதா? இன்று ஊடகங்களும் தொடர்பாடலும் என்னும் போது "விரல் நுனியில் உருளும் உலகம்" என்று கூறுமளவுக்கு புதிய புதிய நுட்பங்களுடன் வளர்ச்சியடைந்திருக்கிறது.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் (http://ta.wikipedia.org/s/6lg) இருந்து; தொடர்பாடல் (Communication) என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலைக் கடத்துதலாகும். இது பொதுவாக  மொழியூடாகவே நடைபெறுகின்றது. பொதுவாக பின்வரும் காரணங்களே தொடர்பாடல் நடைபெறுவதை ஊக்குவிக்கின்றன:
எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள
திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள
புதியவற்றை அறிந்து கொள்ள
மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த
பொழுதுபோக்கு மற்றும் நேரம் செலவிடலுக்காக

இரு வழிகளில் மனிதனால் தொடர்பாடல் மேற்கொள்ள முடிகிறது. அவையாவன
1. ஒலி - பேச்சு, ஒலிகளைப் பயன்படுத்தல்
2. காட்சி - படங்கள், குறியீடுகள், நிறங்கள்
மேலும், தொடர்பாடலுக்குத் தேவையான அடிப்படை உறுப்புகள் மூன்றுண்டு. அவையாவன
1. அனுப்புநர்
2. ஊடகம்
3. பெறுநர்

பறை, சங்கு, நெருப்பு ஆகிய மூன்றுடனும் தொடங்கிய ஊடகங்களும் தொடர்பாடலும் பத்திரிகை, ஒலிபெருக்கி, அஞ்சல், வானொலி, தொலைக்காட்சி என வளர்ந்து மின்னஞ்சல், ஒளி-ஒலி உரையாடல் (Skype), இணையப் பக்கம், வலைப்பூக்கள், கருத்துக்களங்கள் எனப் பல முனைப்புகளில் முன்னேறுகிறது என்பேன். இன்றைய முன்னேறும் ஊடகங்களும் தொடர்பாடலும் நிலைக்கேற்ப நாம் எம்மைத் தயார்ப்படுத்த வேண்டியுள்ளேம்.

தொடர்பாடல் என்பது குறிப்பிட்ட ஊடகமொன்றைப் பயன்படுத்தித் தகவலை அல்லது செய்தியை அனுப்புகின்ற அல்லது பரப்புகின்ற செயற்பாடென்று கூறலாம். இங்கு பெறுநர்களினால் தகவல் பெறப்பட்டு அனுப்புநருக்குப் பின்னூட்டம் அல்லது பதில் வழங்கப்படுகிறது. இச்செயற்பாட்டுக்கு அனுப்புநர், ஊடகம், பெறுனர் ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. மேலும் இன்றைய தொடர்பாடலில் ஒழுங்கமைத்தல், கேட்டல், கிரகித்தல், பேசுதல், வினவுதல், பகுப்பாய்வு செய்தல், உடலசைவுகளைக் காட்டுதல், பொருட்படுத்தல் (அனுமானித்தல்) போன்ற பல்வேறு திறன்கள் தேவைப்படுகிறது.

பொதுவாக ஊடகம் என்றால் கடத்துவது, காவுவது என்று தமிழில் பொருள்கொள்ளலாம். அதாவது வெளிப்படுத்துவோருக்கும் பயனீட்டுவோருக்கும் இடையே பாலமாக இருப்பது ஊடகங்கள் என்பேன். ஊடகவியலில் தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், மாற்றங்களை (பிரதிபலிப்பை) உருவாக்குதல் ஆகிய முக்கிய பண்புகளைக் காணலாம்.

இதழியலில் செய்தி, கட்டுரை, விவாதம், விமர்சனம், சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, பாடல், நாடகம் என்று பல்வேறு வடிவங்களிலும்; ஒலி, ஒளி-ஒலி ஊடகங்களில் இவற்றுடன் கலந்துரையாடல், பாடல், நாடகம், விவரணச்சித்திரம், குறும்படம் ஆவணப்படம், சினிமா என்று பல்வேறு வடிவங்களிலும்; அத்தோடு இவற்றில் விளம்பரங்களும் இடம்பெறும். இவை மக்களிடம் தகவல் தெரிவிக்கப் பயன்படுகிறது.

ஒரு கருத்து அல்லது ஒரு செயல் பற்றி மக்கள் நம்புகின்ற வழியில், அவர்கள் விருப்பத்தக்க வகையில், அவர்கள் உள்ளத்தைத் தொடும் வகையில் எழுதுவது கண்ணோட்டம் என்று சொல்லலாம். அதாவது, அரசியல், இராணுவ, பொருண்மிய, இலக்கிய, மக்களாய (சமூக), இயற்கை எனப் பல தலைப்புகளில் மக்கள் உள்ளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக் கண்ணோட்டம் எழுதலாம் என்பேன்.

மனிதன் எண்ணமிடும் (சிந்தனைத்) தளத்தில் நுழைந்து (ஊடுருவி) அவன் எதைச் செய்ய வேண்டும், எதைச் சார்ந்திருக்க வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும், எதை உடுக்க வேண்டும், எதைக் குடிக்க வேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் அலசி அறிக்கையிடுதலும் கண்ணோட்டமே! இதனால் மனிதன் தன் (சுய) முடிவை எடுக்க வழிபிறக்கிறது; மாற்றத்தை வெளிக்கொணர முடிகிறது.

ஒரு கருத்து அல்லது ஓர் எண்ணம் ஓர் ஊடகத்தினூடாக ஏதாவது தொருவடிவத்தில் மக்களுக்குத் தெரிவிக்கப்படும் போது அல்லது பரப்பப்படும் போது மக்களுடைய உள்ளங்(மனங்)களிலே அறிதல், தெளிதல், முடிவெடுத்தல் (வினையாற்றுதல்) என்ற மூன்று செயற்பாடுகள் இடம்பெறலாம். அதாவது, கண்ணோட்டம் (அறிக்கையிடல்) தான் இந்த விளைவை ஏற்படுத்திவிடும் என நான் நம்புகிறேன். ஆயினும், ஏனைய வெளியீடுகளும் இந்த விளைவை ஏற்படுத்தலாம்.

மக்களாய (சமூக) ஊடாட்ட ஊடகங்கள் (Social Interactive Media) எனப்படுபவை படைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட படைப்புகளைத் தாங்கிவரும் இணையத்தள ஊடகங்கள் என்பேன். ஒரு கணினியும் ஓர் இணைய இணைப்பும் இருந்தால் போதும், எவரும் தமக்கு விருப்பமான படைப்புகளை உருவாக்கித் தாமே இந்த மக்களாய (சமூக) ஊடகங்கள்
வழியாக அவற்றை உலகுடன் பகிர்ந்து கொள்ளமுடியும். ஆயினும், தரமான படைப்புகளைத் துறைசார் அறிஞர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

ஒவ்வொருவரும் தத்தமது கருத்தாக்கங்களை உருவாக்கி, படிக்கவிரும்பும் எவருக்கும் அவற்றை அனுப்பிவைக்கும் வாய்ப்பினை மக்களாய (சமூக) ஊடகங்கள் அவர்களுக்கு வழங்குகின்றன. இவை பெரும்பாலும் பிறருடன் நெருக்கமான ஊடாட்டங்களை ஏற்படுத்தக் கூடியனவாக இருப்பதுவே எல்லோரது விருப்புக்குரிய முதன்மைக் காரணமாகும். மேலும், நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து இணையத் தளத்தினூடாகத் தொடர்பை அல்லது பதிலைப் பெரிதும் எதிர்பார்க்கும், தொடர்பாடல் முறைமைகளைக் கொண்டவை மக்களாய (சமூக) ஊடாட்ட ஊடகங்கள் என்று கூறுவேன்.

ஊடகங்களும் தொடர்பாடலும் பற்றிச் சிறு சிறு குறிப்புகளைப் பொறுக்கிச் சுட்டிக்காட்டினேன். எமது யாழ்பாவாணன் வெளியீட்டகம் கருத்தில் கொள்ளவேண்டிய ஒழுக்கநெறிகளைத் தேடிய போது கிடைத்த தகவல் இவை. தாங்களும் சிறந்த வலைப்பூப் பதிவர்களாக மின்ன இத்தகவல் உதவுமென நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!