Translate Tamil to any languages.

என் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்

கண்டதும் கேட்டதும் படித்ததும் சுவைத்ததும் அப்படியே என் கையாலே எழுதிவிடலாம். ஆனால், எழுதியதிற்கு கனம் (பாரம்) இருக்கா என்றால் ஐயம் தான். கனம் (பாரம்) ஆன எழுத்திற்குத் தான் பலம் இருக்கும். எனவே, கண்டதும் கேட்டதும் படித்ததும் சுவைத்ததும் அப்படியே எழுதினால் ஏன் கனம் (பாரம்) இருக்காது?

எங்கே கண்டேன், எப்போது கேட்டேன், எதனைப் படித்தேன், எப்படிச் சுவைத்தேன் என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் கனம் (பாரம்) ஆக எழுதிவிடலாம். அதாவது எழுத்திலே சொல்ல வந்ததைச் சான்றுகளுடன் எழுதினால் பெறுமதி இருக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒரு திருக்குறளைப் பொறுக்கிக் காட்டினால்; அதனைத் திருக்குறள் பொத்தகத்தில் கண்டுபிடித்துப் படிக்கத் தேவையான சான்றை வழங்க வேண்டும்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

குறள் பால்: அறத்துப்பால்
குறள் இயல்: இல்லறவியல் 
குறள் அதிகாரம்: அடக்கமுடைமை 
குறள் எண்: 129

என்றவாறு இருப்பின் சிறப்பு!

இப்படித் தான் எத்தனையோ அறிஞர்கள் சொன்னதை வெளிப்படுத்த வேண்டும். எத்தனையோ இடங்களில் கண்டதைக் கேட்டதை எழுதும் போதும் வாசகர் வாசிக்கும் போது அந்தச் சூழலை உள்ளக் (மனக்) கண்ணால் பார்த்துச் சுவைப்பதற்கு ஏற்றால் போல் எழுதவேண்டும். எப்படி இருப்பினும் முன்னோர்கள் சொன்னதையோ பிறர் பங்கெடுத்ததையோ வெளிப்படுத்தும் போது அதற்கான சான்று பகிரப்பட வேண்டும்.

என் எழுத்துகளில் இந்தக் கோட்பாடுகளைப் பின்பற்றியே பிறர் தகவல் நுழைக்கப்படுகிறது. கண்ணதான் சொன்னதையோ வள்ளுவர் சொன்னதையோ என் எழுத்துகளில் நுழைத்தால் தான் பெறுமதி. அவர்கள் சொன்னதை நான் சொன்னதாக வெளிப்படுத்தவும் இயலாது. எனவே தான், எனது பதிவுகளுக்குப் பெறுமதி சேர்க்கப் பிறருடையதைப் பொறுக்கி எழுதினேன்.

இப்பக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!