Translate Tamil to any languages.

சனி, 21 ஜனவரி, 2017

தொல்லைக் குழுக்களும் தொல்லை பேசிகளும்


வலை வழியே அறிவு சார்ந்த படைப்புகளைப் பகிரும் அறிஞர்கள் எல்லோரும் நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கிற்கேற்ப தமது பயணத்தில் சில மாற்று வழிகளையும் கையாள வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக Wordpress இல் வலைப்பூ(Blog) நடாத்தியவர்கள் Blogger(Google) இற்கு மாறிய நோக்கம், விரைவாக கூகிள் தேடுபொறி ஊடாகத் தமது தகவல் விரைவாகப் பரவும் என்றே! ஆயினும், Wordpress இல் வலைப்பூ(Blog) நடாத்துபவர்கள் என்றும் தாழ்ந்து விடவில்லை. அவர்களும் பதிவுலகில் வெற்றிநடை போடுகிறார்களே!

வலைப்பூக்களில்(Blog) அறிவைப் பரப்பிய பலர், இன்று Facebook, Google+ ஊடாகத் தமது பணியைத் தொடருகின்றனர். ஏப்படியோ வலைப்பூக்களில் எட்ட முடியாத விருப்புகளை (Likes), பகிர்தலை (Shares) அவற்றில் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. ஆயினும், முறைப்படி வலைப்பூக்களை(Blog) நடாத்துவோர் அதிக விருப்புகளைப் (Likes), பகிர்தலைப் (Shares) பெற்று வெற்றிநடை போடுகிறார்களே! Facebook, Google+ இல் பதிவுகளை இட்டாலும் ஆவணத் தொகுப்பாகக் காண்பிக்க இயலாத போதும்,  வலைப்பூக்களில் காண்பிக்க முடியும் என்பதே சிறப்பு.

முறைப்படி வலைப்பூ(Blog) நடாத்துவது என்பது விரும்பியவாறு விரும்பிய பதிவுகளைப் பதிவு செய்த பின் படுத்து உறங்குவதல்ல. தமிழர் பண்பாட்டைப் பேணும் பதிவாகவும் வாசகர் விரும்பிப் படிக்கக் கூடிய அறிவாகவும் இருந்தால் போதாது. வாசகர் வாசிக்க எழுத்து (Text), வாசகர் உள்ளம் ஈர்க்கப் படம் (Photo) வாசகர் பார்க்கக் கேட்க என ஒலி(Audio) மற்றும் ஒளிஒலி(Video) போன்ற பல்லூடகப் பதிவுகளாக இருந்தாலும் போதாது. வாசகரை எமது வலைப்பூ(Blog) பக்கம் இழுத்து வரவேண்டும். இழுத்து வந்த வாசகர் எமது பதிவைப் படித்ததும் நாம் இழுத்து வராமலே அடுத்தடுத்த பதிவுகளைப் படிக்கத் தாமாகவே வரக்கூடியதான சிறந்த பதிவுகளை நாம் பதிவு செய்து பேணவும் வேண்டுமே!

வாசகர் விருப்பறிந்து பதிவெழுது என்கிறாய்... வலைப்பூவை(Blog) நடாத்து என்கிறாய்... வாசகரை இழுத்து வா என்கிறாய்...  இதற்கு அஞ்சியவர் முகநூலில் விழுந்தனர் என்கிறாய்... இந்தத் தொல்லைகளை எல்லாம் கடந்தவரே சிறந்த தமிழ் வலைப்பதிவர் என்கிறாய்... சரி! சரி! நானும் முயன்று பார்க்கிறேன். இப்படி முயன்று வெற்றி பெற்ற வலைப்பதிவர்களைக் கேட்டறிந்தோ கண்காணித்தோ புதிய உள்ளங்கள் எல்லோருமே வலைப்பூக்கள்(Blog) நடாத்தலாம் வாங்க!

வலைப்பூக்களில் (Blog) புதிய பதிவுகளை இட்டதும் Google+, Linkedin, Twitter, Facebook, Instagram போன்ற மக்களாய (சமூக) வலைத் தளங்களில் பகிருவதன் மூலம் வாசகரைச் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் வலைத் திரட்டிகளில் பகிருவதன் மூலம் வாசகரைச் சென்றடையும் என்றும் பகிர்ந்தனர். ஆயினும், வலைத்திரட்டிகள் நாளுக்கு நாள் செயலிழந்து வருவதும் பதிவர்களின் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருப்பதும் பதிவர்களை திரட்டிகளில் நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டது.

திரட்டிகளில் நம்பிக்கை இழந்த பதிவர்கள் மக்களைய (சமூக) வலைத்தளங்களில் நண்பர்களைத் திரட்டிக் குழு அமைத்துப் புதிய பதிவுகளைப் பகிருகின்றனர். அவ்வாறே திறன்பேசிகளில் (Smart Phone) கூடக் குழுக்களை அமைத்துப் புதிய பதிவுகளைப் பகிருகின்றனர்.

தொல்லைப் பேசிகள் போல தொல்லைக் குழுக்களும் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இலக்கின்றிச் சில குழுக்களில் தேவையற்ற பதிவுகளைப் பகிருவதால் பயனர்கள் அதிலிருந்து விலகிவிடுகின்றனர். கட்டுப்பாடுகள் நிறைந்த குழுக்கள் வெற்றிநடை போடுகின்றன.

வலைப் பதிவர்களுக்கான(Bloggers) குழுக்களாக முகநூலில்(Facebook) "தமிழ்ப் பதிவர்களின் நண்பன்" என்ற குழுவும் Google+ இல் "தமிழ்ப் பிளக்கர்ஸ்" என்ற குழுவும் செயற்பட்டு வருகின்றன.

Google+ இல் வலைப் பதிவர்களுக்கான கட்டுப்பாடுகள் நிறைந்த குழுவாக "உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்" என்ற குழுவும் திறன்பேசிகளில் (Smart Phone) Whatsup செயலியில் "தமிழ் வலைப்பதிவகம்" என்ற குழுவும் செயற்படுகிறது. இரண்டிலும் புதிய வலைப் பதிவுகளின் தலைப்பையும் இணைப்பையும் இணைத்தால் போதுமெனக் கட்டுப்படுத்துகின்றனர். இதனை இவர்கள் ஒழுங்காகப் பேணுவார்களாயின் எஞ்சிய வலைத்திரட்டிகளும் செயலிழந்து விடுமே!

மக்களாய (சமூக) வலைத்தளங்களில் "யாப்பா சாவு (மரணம்) அடைந்துவிட்டார். பாப்பா, வாம்மா ஆகியோரின் அருமைப் புதல்வர். ஏறு தழுவுதலுக்கு (ஜல்லிக்கட்டுக்கு) எதிராகக் கூப்பாடு போட்டவர்." என்றவாறு உயிரோரு வாழும் ஒருவருக்குச் சாவு (மரண) அறிவித்தல் வழங்குவோரை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவ்வாறே, திறன்பேசிகளில் (Smart Phone) கூடப் பாலியல் சார்ந்த பதிவுகளைப் பகிருவோரை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவற்றையும் மீறி இவற்றினூடாகத் தகவல் பரிமாறி ஏறு தழுவுதலுக்கு (ஜல்லிக்கட்டுக்கு) எதிரான தடைய உடைத்து வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களைப் பாராட்டுவோம்

வலை வழியே தமிழ் பண்பாடுகளை மீறிய கருத்துகள் பரிமாறப்படுவது நல்லது அல்ல. "நல்லதைப் பொறுக்கிப் படியுங்கள், கெட்டதைத் தவிருங்கள்" என எழுதுவதால் தமிழ் பண்பாடுகள் சீரழிய வாய்ப்புகள் அதிகம் என்பேன். இதன் அடிப்படையில் சிலர் சில குழுக்களைத் தொல்லைக் குழுக்கள் என்கின்றனரோ! இப்பவெல்லாம் தொலைபேசி வழிப் பேச்சுகள் கூட தமிழ் பண்பாட்டை மீறிக் காணப்படுகிறதே. அதனைப் பற்றிய பதிவொன்றைக் கீழே படியுங்க...

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் எவரோ - அவர்
"ஹலோ" என்று தானாம் முதலில் பேசினாராம்! - இங்கே
தொலைபேசியைக் கையில் பிடித்தவர்களோ - எப்போதும்
மதிப்பற்ற சொல்களைப் பாவிப்பதே தொல்லையாச்சு!

"அடியே! உன்னைக் கட்டிப்பிடிக்க விருப்பமடி
நடியாது மாலையே கடற்கரைக்கு வாவேனடி" என
எதிரே தொலைபேசியைத் தூக்கிய மாமியார்
மகளின் காதலன் சொல்க்கேட்டு மயங்கிவிழுந்தாராம்!

"கொஞ்சிக் கொஞ்சி நெடுநாள் ஆச்சு
கொஞ்சம் கோவில் பக்கம் வாவேன்டா" என
எதிரே தொலைபேசியைத் தூக்கிய மாமனார்
மகனின் காதலி சொல்க்கேட்டுக் கொதித்தெழுந்தாராம்!

"ஹலோ" வெனப் பிறமொழியில் பேசினால் பரவாயில்லை
தொலைபேசியில் பேசுமுன்னெதிரே எவரென்று அறியாது
பறைஞ்சுபோட்டு முறிந்தவுறவை எண்ணிப் பயனேது
தொலைபேசியில் நற்றமிழால் பண்போடு பேசலாந்தானே!

மின்னின்றிப் பணமின்றி பேசமுடியா விட்டால்
பயன்பாட்டு எல்லைக்கு அப்பால் என்றால் - ஏன்
கடன்காரர், தகாதவர் அழைப்பில் வந்தால் கூட
தொலைபேசியும் தொல்லைபேசியென அஞ்சுவோரைப் பாரும்!

புதன், 18 ஜனவரி, 2017

ஈழத் தமிழரும் தமிழக எழுச்சிக்கு ஆதரவு

"#ஜல்லிக்கட்டுக்கான ஆதரவாக #யாழ்நல்லூரான் முன்றலில்.... தமிழரின் அடையாளத்தைப் பாதுகாக்கத் தானாய்ச் சேர்ந்த கூட்டம்....
#தமிழண்டா" என முகநூல் நண்பர் 'பிரமிளன் மிலன்' தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

"அலங்கா நல்லூரில் தொடங்கிய போராட்டம்; கடல் கடந்து யாழ் நல்லூர் வரைக்கும் விரிவடைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது." என முகநூல் நண்பர் 'கரன் டோனி' தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மேற்காணும் நண்பர்கள் முகநூலில் பகிர்ந்த ஒளிப்படங்களை இங்கு காணலாம்.





"இன்றைய ஒன்றுகூடலின் ஊடக அறிக்கை." என முகநூல் நண்பர் 'கிரிசாந்' தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

உலகெங்கும் தமிழரின் அடையாளங்களை அழிவடைய இடமளித்ததால் தான், அரை உலகையே ஆண்ட (ஆபிரிக்கக் கீழ் எல்லை தொட்டு அவுஸ்ரேலியக் கீழ் எல்லை வரையான இந்து சமுத்திரம் உள்ளடங்கலான குமரிக்கண்டம்-lemuria continent) தமிழருக்கு உருப்படியான தமிழ்நாடு இல்லாமல் போனது.

தமிழகத் தமிழரை ஈழத்துக்கு போவென
சுப்பிரமணிய சாமிக்கள், கிந்தீக்கள் விரட்டுவதும்
ஈழத் தமிழரைத் தமிழகத்துக்கு ஓடென
அப்புகாமிக்கள், களுபண்டாக்கள் விரட்டுவதும்
எத்தனை நாளைக்கு...?
தமிழரின் தொன்மை, தமிழரின் பண்பாடு,
குமரிக்கண்டம் (lemuria continent) வரலாறு எல்லாம்
உலகத்துக்கு உறைக்க உணர்த்தினால் தான்
ஈழத் தமிழரும் தமிழகத் தமிழரும்
இணைந்து இயக்கும் எழுச்சியாலே
உலகெங்கும் வாழும் தமிழர்
ஒன்றிணைந்து குரல் கொடுப்பதனாலேயே
தமிழரின் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம்...
வலுவான உறுதிப்படுத்தல் தான்
தமிழர் தலை நிமிர்ந்து வாழ வழி விடுமே!

இனியாவது உலகெங்கும் வாழும் தமிழர் ஒருங்கிணைந்த குரலெழுப்புதலால் தான் தமிழரின் அடையாளத்தை நிலைநாட்ட முடியுமென உணருவோம்.

முகநூலில் என் கிறுக்கல்கள்...

முகநூலில், தமிழ்க் கவிதைப் பூங்கா (https://www.facebook.com/groups/1511712842478679) வழங்கிய தலைப்புகளுக்கு நான் எழுதிய கிறுக்கல்களை உங்களுடன் பகிருகிறேன். எதற்கும் பரிசு கிடைத்ததாகத் தகவலில்லை.

மனமே!
மனமே மனதுக்கு மருந்து என்பேன்
மனம் சுத்தமானால் ஆண்டவன் எதற்கு?
நெடுநாள் வாழ நல்ல மனமே!

'மனஸ்' என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பிறந்த 'மனம்' என்பதும் வடமொழியே! இனி நாம் 'மனம்' என்பதை அழகிய தமிழில் 'உள்ளம்' என்று அழைப்போம். அதற்கேற்ப மேற்காணும் பாவை/கவிதையை தமிழில் எழுதலாம் தானே!

உள்ளமே உள்ளத்துக்கு மருந்து என்பேன்
உள்ளம் சுத்தமானால் ஆண்டவன் எதற்கு?
நெடுநாள் வாழ நல்ல உள்ளமே!

எழுதிடு!
எழுதிடு! என்றும் எண்ணிய எல்லாவற்றையும்
எழுதியதால் வாசகர் அறிவு பெருகட்டும்
நாட்டவர் அறிவுயர என்றும் எழுதிடு!

ஆடுதே!
ஆடுதே! அந்தப் பனைமரம் தான்
கள்ளைத் தருவதும் அந்தப் பனையே
போட்டிக்குத் தென்னையும் தளராமல் ஆடுதே!

மார்கழி!
மார்கழி விடியலில் பிள்ளையார் கோவிலில்
குளிருடன் போய் திருவெம்பாவை வழிபாட்டில்
பிட்டுத்தின்ற சுவைக்கு நன்றி மார்கழி!

அழகே!
அழகே! உன்னை விரும்பும் ஆள்கள்
அழகாலே தாம் உயர்ந்தவர் எனக்கூறி
தம்மைத் தாம் இழக்கின்றனர் அழகே!

பேதை!
பேதை அறியாள் முகநூல் போலிகளை
காதல் காதலென முகநூலில் மூழ்குகிறாள்
காளையவன் நழுவ சாகிறவள் பேதை!

பெண்மை!
பெண்மை கடவுளின் துணைக்கருவி என்பேன்
கடவுளின் படைத்தலுக்குத் துணையாக இருப்பினும்
பிள்ளையை ஈன்றுதள்ளும் கருவியல்ல பெண்மை!

பெண்மையைக் கண்டு பெருமை கொள்
உன்னைப் பெற்றவளும் பெண்மை ஒருவளே!
உலக இயக்கத்துக்கு வேண்டும் பெண்மை!

ஏழ்மை!
ஏழ்மை கண்டு உருகாதோர் உள்ளம்
வாழ்வில் உண்டோ வாழும் உறவுகளே!
வாழ்வில் முன்னேறத் தடையல்ல ஏழ்மை!

ஏழ்மை வரலாம் எதிர்த்து முகம்கொடு
ஏழ்மையைக் கண்டு உருகுவோரும் உதவார்
வாழ நினைத்தால் வேண்டாம் ஏழ்மை!

கலங்காதே!
கலங்காதே தோல்வி வந்ததென்று எண்ணி
வெற்றியின் நிழலைக் கண்டதென்று எண்ணி
இனியும் தோல்வி நெருங்குமென்று கலங்காதே!

உழைப்பாய்!
உழைப்பாய் பிழைப்பாய் சிறப்பாய் முன்னேறுவாய்
வாழ்வதற்காய் வளம்சேர்ப்பாய் மகிழ்வாய் நிமிர்வாய்
உணர்வாய் தெளிவாய் நல்வழியாய் உழைப்பாய்! 

சனி, 14 ஜனவரி, 2017

2017 தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்!

தை பிறந்தால் வழி பிறக்கும்
பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றி கூறும்
உழவர் பெருநாள் மட்டுமல்ல
தமிழுக்கு ஆண்டின் முதல் நாள்
தமிழர் புத்தாண்டு நாள் - இந்த
நல்ல நாளில் நன்மைகள் வந்து சேர
வாழ்வில் பதினாறு செல்வங்களையும் பெற்று
நாம் எல்லோரும் நற்செயலில் இறங்கி
வெற்றிகளை பெற்று வாழ வாழ்த்துகிறேன்!


எனது வலைப்பூக்கள், மக்களாய (சமூக) வலையமைப்புகள், உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எனப் வழிகளிலும் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி நட்பைப் பேணும் உறவுகள் எல்லோருக்கும் எனது போகிப்பொங்கல், தைப்பொங்கல், பட்டிப் (மாட்டுப்) பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்!


புதன், 11 ஜனவரி, 2017

என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்!


2010 இல கருத்துக்களங்களில் இறங்கி
(தமிழ்நண்பர்கள்.கொம் போன்ற தளங்களில்)
பின்னர் வலைப்பூக்களில் உலா வரும்
சின்னப்பொடியன் யாழ்பாவாணன் ஆகிய
நான்
இலக்கியப் படைப்புகளில் நாட்டம்
1987 இன் பின் இருந்து வந்தது...
திறனாய்வு (விமர்சனம்), தாக்குரை (கண்டனம்),
பின்னூட்டம், பதில் கருத்துகள் என
என்னாலும் வழங்க முடியும் - ஆனால்
பிழையான பின்னூட்டம் இடுவதில்
நான் முன்னோடி என்றுரைத்து
வெளிவந்த குற்றச்சாட்டுகள் - என்னை
கொஞ்சம் சிந்திக்க வைத்திருக்கிறதே!

ஒரிரு வரிப் பின்னூட்டம் இட்டு
என்னை நான் அடையாளப்படுத்த
எப்போதும் எண்ணியதில்லை - எவரது
பதிவையும் குறைத்துச் சொன்னதுமில்லை - எந்த
வலைப்பதிவரையும் நோகடிக்க - எனக்கு
உரிமையும் இல்லை - நானப்படி
எவரையும் நோகடிக்க முயன்றதுமில்லை!
பன்னீராயிரம் தமிழ் வலைப்பதிவர்களில்
சிலரது வலைப்பூக்களிலே தான் - அதுவும்
பொதுவாகச் சிறந்த பதிவென்றறிந்தே
நான் பின்னூட்டம் இட்டிருப்பேன்! - அந்த
பின்னூட்டம் இட்டதால் நோவுற்ற
தமிழ் வலைப்பதிவர் உள்ளங்களிடம்
என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்!

"தனது பதிவைப் படித்த பின்
படித்ததில் பிடித்ததை, பிடிக்காததை
சுட்டிக்காட்டலாமே தவிர
வேண்டாத சொல்களை இட்டு
தனது வலைப்பக்கத்தை நிரப்ப வேண்டாம்
முடிந்தால்
தனது வலைப்பூவிற்கு வரவும் வேண்டாம்" என
எனது பின்னூட்டம் பயனற்றது என
2014 இல நண்பர் ஒருவர்
எனக்குப் படிப்பித்ததை - மீண்டும்
2017 இல் நண்பர் ஒருவர் - மீண்டும்
"வலைப்பதிவர்கள் எல்லோரும்
உம்மை ஒதுக்கி வைக்கலாம்" என
எனக்கு நினைவூட்டி இருப்பதால்
என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்!

நானும் பதிவைப் படித்து - பின்
அடிக்கடி பயன்படுத்தும் சொல்களை நீக்கிவிட்டு
நல்ல கருத்துகளைத் தெளிவாகத் தர
முயற்சி செய்கிறேன் - அதற்காக
"வேலை நெருக்கடி" எனச் சாட்டுச் சொல்லி
வலைப்பூவிற்கு வருகை தருவதை நிறுத்தாமல்
நானே என்னைத் திருத்திக்கொண்டு
நல்ல எண்ணங்களைப் பகிர முன்வருவேன்!
பின்னூட்டம் இட்டதால் நோவுற்ற
தமிழ் வலைப்பதிவர் உள்ளங்களிடம்
என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்!

பிழையான பின்னூட்டம் இட்டு - தங்கள்
உள்ளம் சுடப்பட்டு இருந்தால் - தாங்கள்
சுடு சொல்லால்
என்னைச் சுட்டுக்கொள்ளுங்கள் - அதனால்
நான் எவரையும் பகைக்க மாட்டேன்!
ஏன்?
பிழையான பின்னூட்டம் இடுவதில்
நான் முன்னோடி ஆகிவிடாமல்
பின்னூட்டம் இடுவது பற்றி
படிப்பிக்கின்ற ஆசிரியர்கள் நீங்கள் ஆச்சே!
பின்னூட்டம் இடுவதால்
பதிவர் நிறைவடையவும் - அதேவேளை
வாசகர் கண்கள் பதிவை ஈர்க்கவும்
ஏற்ற கருத்தாக எனது எண்ணங்களை
2017 தைப்பொங்கலுடன் எதிர்பாருங்கள்!

செவ்வாய், 10 ஜனவரி, 2017

எண்ணமுடியாதளவு

வாழ்க்கை என்பது
பணத்திலோ படிப்பிலோ
தங்கியிருக்கவில்லை...
வாழ்க்கை இனிக்கிறது என்றால்
இணையர்கள் இருவருக்குமிடையே
இருக்கின்ற காதலால் தானே!

வாழ்க்கை என்பது
இணையர்களின் நல்லுறவில் மட்டுமில்லை...
வாழ்க்கையில் வெற்றிகிட்ட
சூழவுள்ளோருக்கும் நமக்குமிடையே
இருக்கின்ற நல்லுறவில் தானே!

வாழ்க்கை என்பது
நாம் பேணும்
சூழவுள்ளோரது நல்லுறவில் மட்டுமில்லை...
வாழ்க்கையில் மகிழ்வைப் பெருக்க
படித்தறிவை, பட்டறிவை
சூழலுடன் பகிரும் முறையில் தானே!

வாழ்க்கை என்பது
நாம் சூழலுடன் 
அறிவைப் பகிரும் முறையில் மட்டுமில்லை...
வாழ்க்கையில் நம்பிக்கையைச் சுவைக்க
வற்றாத பொருண்மியம் (பணமும் சேமிப்பும்) வேண்டுமே!

வாழ்க்கை என்பது
எவரும் சொல்லித்தராத ஒன்றே...
இன்றே எண்ணிப்பாருங்கள்
எண்ணிப் பார்ப்பதாலேயே
எதிர்வுகளை எட்ட வழி பிறக்கிறதே!

எதுவரினும் முகம் கொடுக்க
மாற்றார் வாழ்வின் வரலாற்றை
சற்றுப் படித்தால் தானே தெரியவருகிறது
இன்னும் எண்ணமுடியாதளவு
வாழ்க்கையைப் பற்றிப் படிக்க இருப்பதை!

சனி, 7 ஜனவரி, 2017

எப்படித் தான் இணைந்தார்களோ?


"இணைந்து" என்றால்
நண்பர்களாக, காதலர்களாக, மணமக்களாக
என்றொல்லாம் பேசுவாங்க...
ஓர் உயரமானவரும் ஒரு கட்டையானவரும்
இணைந்தால் நண்பர்கள் என்பாங்க...
காதலரானால், மணமக்களானால்
எப்படிப் பொருத்தம் அமைந்தது என்பாங்க...
அடடே! அங்கே பாரு...
கட்டைப் பெண்ணும் நெட்டை ஆணும்
கொஞ்சம் இங்காலையும் பாரும்
நெட்டைப் பெண்ணும் கட்டை ஆணும்
இவங்க எல்லோரும்
நல்லபடி வாழும் வேளை
நல்ல பொருத்தம் பார்த்து இணைந்த
அருமையான இணையர்கள் மட்டும்
பிரிந்து வாழ முனைவது ஏன்?
நம் கண் முன்னே காணும்
வழமைக்கு மாறான இணையர்களை
கண்டதும் நினைவிற்கு வருவது
ஒருவர் விருப்புக்கு ஒருவர் இசைந்து
ஏற்படுத்திய புரிந்துணர்வின் வலிமையே!
விட்டுக்கொடுப்பும் ஏற்றுக்கொள்ளலும் இல்லாது
விருப்பங்களுக்கு மதிப்பளித்தலும் இல்லாது
புரிந்துணர்வைக் கட்டியெழுப்ப இயலாதே!
புரிந்துணர்வைக் கட்டியெழுப்ப முடியாத
பிரிந்து வாழ முனையும் 

பிரிந்து வாழ்ந்து காட்டும்
இணையர்கள் எல்லோரும்
எப்படித் தான் இணைந்தார்களோ?

வெள்ளி, 6 ஜனவரி, 2017

எனக்குப் பாடவே வராது!


எனக்குப் பாடவே வராது
எப்படிப் பாடிப் பார்த்தாலும்
வண்டிலாலே கல்லுப் பறிக்கையிலே எழும்
கற... கட... என்ற குரலொலியே
"நானோ கட்டையன்
ஏனோ பெட்டையள்
என்னை வெறுக்கிறாங்க" என்று
படித்தால் போதும்
தலை தெறிக்க, வெடிக்க
கல்லெறி தான் - என்
தலையில் வீழும் பாருங்கோ....
உண்ணான
உண்மையாகத் தான் சொல்கிறேன்
எனக்குப் பாட வராது
என்னைப் பாடச் சொல்லிக் கேட்காதீங்க...
கண்ட படி, கவுண்ட படி படிச்சுப் போட்டு
கல்லெறி வேண்டிச் செத்துப்போகாமல்...
என் வழுக்கைத் தலையை
உடையாமல் பேணிக் கொள்ளவே...
பா(கவிதை) நடை போல எழுதிக்கொண்டு
பா(கவிதை) புனைவதாக எண்ணுகின்றேன்!
வலைவழியே படித்துப் பாருங்கள்
பொருளறிந்து குறை பிடியுங்கள்
பதிலுக்குச் சொல்லால் அடியுங்கள்
என் எழுதுகோலுக்கு வேலை தாருங்கள்
எனக்குப் பாட வராது
பாட்டெழுத, பாபுனைய வரும் - என்றாலும்
நான் பாவாணன்(பாவலன்/கவிஞன்) அல்லன்!
"எழுது எழுது
பத்திரிகைகளுக்கு அனுப்பு
என்றோ ஒரு நாள்
பத்திரிகையிலும் வெளியாகும்
பின் நாளில் எழுத்தாளராவாய்" என
தமிழகப் படைப்பாளி .நா.சு. அவர்கள்
வழிகாட்டியபடி எழுதிக்கொண்டே இருக்கிறேன்!
என்னங்க... - நீங்களும்
பாடத் தான் முடியாவிட்டாலும்
எழுதித் தான் பாருங்களேன் - உங்கள்
படைப்பாக்கத்தை உலகம் படிக்குமே!