Translate Tamil to any languages.

வியாழன், 16 செப்டம்பர், 2021

தெருத் தெருவாக வண்டிலில் பொத்தகம் விற்கும் நிலை

2022 இல வண்டிலில் பொத்தகம் வைத்துத் தெருத் தெருவாக விற்கும் நிலை எனக்கும் வரலாம் என்றெண்ணி இப்பதிவு. இதோ அந்த வண்டில் வணிகம்.

பொத்தகக் கடைகளில் பொத்தகம் தூசி படிந்து மூடிக் கிடக்கிறது. இணைய வெளியில் பொத்தகம் படிக்காமல் காணொளி பார்க்கிறாங்க. எந்த வழியிலும் வாசிப்பு நாட்டம் உள்ளவர்களைக் காணவில்லை. வலை விரித்துப் பிடிக்க முயன்றாலும் அகப்பட மாட்டார்கள் என நம்புகிறேன். அதனால் தான் இம்முயற்சியைக் காணொளியாக அறிமுகம் செய்துள்ளேன்.


மேலும், முகநூலில் கவிதை அரங்கேறும் நேரம்குழுவில்

https://www.facebook.com/groups/971804760234678

தெருத் தெருவாக வண்டிலில் பொத்தகம் விற்கும் நிலையை விளக்கி நீங்களும் உங்கள் விருப்பிற்கு உரிய கவிதைகளை இணைக்கலாம். கவிதைகள் மின்நூலாக வெளியிடப்படும். நான் இணைத்த கவிதையைக் கீழே தருகின்றேன்.

சிற்றுண்டி விற்பனை வண்டியிலும்

விற்பனைக்குப் பொத்தகங்கள் வந்தாச்சோ

தெருவழியே அலையும் வணிகருக்கு

வாசிப்பவர் இன்றிச் சோர்வாச்சோ

                          (தன்முனைக் கவிதை)

இப்பதிவோ இம்முயற்சியோ நமது சூழலில் வாசிப்பு நாட்டத்தினை ஏற்படுத்தும் நோக்கில் எழுந்தது. முகநூலில் கவிதை அரங்கேறும் நேரம்குழுவில் https://www.facebook.com/groups/971804760234678 இதனை வலுப்படுத்தும் நோக்கிலும் கவிதைகளை இணைக்கலாம்.

வாசிப்பு நாட்டம் இல்லாத சூழலில்

கற்றலில் நாட்டம் உள்ளவர் இருப்பரோ?

ஏன், அறிவாளிகள் தான் இருப்பரோ?

என்றெல்லாம் ஐயம் வர வாய்ப்பு இருக்கக்கூடும். ஒரு நாட்டின் சொத்தாக எழுத்தறிவுள்ள மக்களைப் பேணி வருகின்றோம். வாசிப்பு நாட்டம் இல்லாத மக்களை நாட்டின் சொத்தாகக் கருத முடியாதே! நமது சூழலில் வாசிப்பு நாட்டத்தினை ஏற்படுத்தும் பணிகளை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். அதனால், நாளைய வழித்தோன்றல்கள் அறிவாளிகளாக மின்ன முடியும்.


புதன், 1 செப்டம்பர், 2021

உலக அமைதிக்கு ஓர் மருந்து


 

ஓரூரில ஒரு நாள் பல மதத்தவரும் தத்தம் வழிபாட்டுத் தலங்களுக்குச்  சென்று வழிபாட்டை முடித்த பின் வெளியேறித் தெரு வழியே வந்தனர்.  அந்தத் தெருவில் வெயிலுக்கு நிழல் தரும் மரங்கள் ஒன்றுமே இல்லை. சற்று நேரத்தில் காற்றோடு மழை வந்து ஆள்களை நனைத்தது.

 

மழைக்கு நனைந்தவர்கள் மேலும் நனையாது தம்மைக் காக்க; ஆளுக்கொரு சமயம், ஆளுக்கொரு கோவில், ஆளுக்கொரு கடவுள் என்று பிரிந்து வாழ்ந்ததை மறந்து மழைக்கு ஒதுங்கினால் போதும் என்று ஆளாளுகள் அகப்பட்ட மதங்களுக்கான ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். மழை தானே என்று அந்தந்த ஆலயங்களைச் சேர்ந்தவர்களும் வெளியேற்றவில்லை.

 

ஆளுக்கொரு சமயம், ஆளுக்கொரு கோவில், ஆளுக்கொரு கடவுள் என்று பிரிந்து வாழ்ந்தவர்கள் 'மழை', 'மழை' என்று எவரெவர் மதக் கோவில் என்று பாராமல் நுழைந்து மழைக்கு ஒதுங்கியமை  தான்  "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று உணரவைக்கிறது. ஒவ்வொரு இயற்கை மாற்றங்களும் இதனையே உணர்த்துகிறது. 

 

இனியாவது, ஆளுக்கொரு சமயம், ஆளுக்கொரு கோவில், ஆளுக்கொரு கடவுள் என்று பிரிந்து வாழாமல் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என நாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழலாமே!  மதங்கள் கடவுளை நெருங்க/ கடவுள் பக்கம் செல்ல மக்களுக்கு வழிகாட்டும். மக்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்து நல்லொழுக்கமாக வாழ மதங்கள் வழிகாட்டும். 

 

ஓர் உலகில் ஓர் இயற்கையின்  செயல் ஒரு கடவுளின் செயல் என்றே கூறமுடியும். மலை உச்சியில் மழை பெய்து போட்ட வெள்ளம் பல  ஆறுகளாகப் பிரிந்து ஒரு கடலில் கலப்பது போலத் தான் பல மதங்களும் பல ஆறுகள் போல ஒரு கடவுளை அடையத் தான் வழிகாட்டுகின்றன. 

 

நாடு, மொழி, இனம், மதம், சாதி வேறுபாடுகளை மறந்து 

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று ஒரு தாய் ஈன்ற பிள்ளைகளாக வாழ்ந்தால் மட்டுமே ஊரில, நாட்டில, உலகத்தில அமைதியை ஏற்படுத்தலாம். எல்லோரும் எள்ளளவேனும் எண்ணிப்பார்த்தால் கூட மனித ஒற்றுமையும் உலக அமைதியும் நிலைநாட்டப் பங்கெடுக்கலாம்.

 

குறிப்பு -  பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி அவர்களின் பேச்சிலிருந்து நான் பொறுக்கிய தகவலை வைத்து எழுதியது. ஆயினும் லியோனி அவர்களோ திரைப்பட இயக்குனர் கே.பாக்கியராஐ் அவர்களின் தகவலெனத் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும். எமக்குத் தேவை மனித ஒற்றுமையும் உலக அமைதியுமே!

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

கரந்தை ஜெயக்குமார்: ஈழத்துத் தமிழிசை

தமிழக வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் இனிய சுதந்திர நாள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதிப்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களை 2010  நான் வலைப்பதிவினைத் தொடங்கிய காலத்தில் இருந்தே அறிவேன். அவரது பதிவுகளைப் படித்த பட்டறிவின் அடிப்படையில் அவரது எழுத்து எளிமையானது, அழகானது, அவரது பதிவினைப் படித்தால் நிகழ்வொன்றினை நேரில் பார்த்தவாறு இருப்பது, எனப் பல சிறப்புகள் அவரிடம் இருக்கிறது. ஈழத்துத் தமிழிசை என்ற பதிவினைப் பகிருவதன் மூலம் அதனை நிருபிக்க விரும்புகிறேன்.  அ - ஔ வரையான ஈழத்துத் தமிழிசை பற்றிய தகவலைச் சிறப்பாகத் தொகுத்துத் தந்துள்ளமையை ஈழத் தமிழரும் புலம் பெயர் தமிழரும் ஏற்றுக்கொள்வார்கள். மதிப்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.


கரந்தை ஜெயக்குமார்: ஈழத்துத் தமிழிசை: வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளைநிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார...

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

ஆண்களுக்கு ஒரு புண், பெண்களுக்கு இரு புண்

 

காதல் இயற்கையாக அமைந்தால்

காதலில் பிரிவே கிடையாதாம் - அந்த

காதலர்களுக்குச் சோதிடத்திலும்

குறிப்பேதும் பார்க்காமல் பொருந்துமாம்!

தாளில் அம்பு செய்து

எய்துவிட்டால் காதல் வரும்

பள்ளிப் பருவத்தில் தான்

கண்ணடித்தால் காதல் வரும்

பாடல்களில் தான்

அழகைக் காட்டியதும் - தங்க

அணிகலனைக் காட்டியதும் - நாலு

காசைக் காட்டியதும் மதிமயங்கி

காதல் ஊற்றெடுத்தும் வரும்

திரைப்படப் பாணியில் தான்

இப்பவெல்லாம்

இயற்கைக் காதல் இங்கில்லை

மணமுறிவு போல காதல் முறிவு

மலிஞ்சு போச்சுக் காணும்!

தங்கள் தங்கள் விருப்படைய

காதலை ஊடகமாக்கினால்

பின் விளைவுகள் சொல்லிலடங்காதே!

மண், பெண், பொன் விருப்படைய

காதலிப்பதாய் ஆண்களும்

எடுப்புக்கு (Styleக்கு), வருவாய் ஈட்டலுக்கு

காதலிப்பதாய் பெண்களும்

ஒருவரை ஒருவர் ஏமாற்றியதால்

காதல் தோல்வியாம் - விளைவாக

ஆண்களுக்கு ஒரு புண்ணும்

(உள்ளப் புண் மட்டும்)

பெண்களுக்கு இரு புண்ணும்;

(உள்ளப் புண்ணும் கருப்பைப் புண்ணும்)

ஏற்பட்ட பின்னரே - அவர்களுக்கு

மூளையே வேலை செய்ததாம்!

காலம் கடந்து அறிவு வந்தும்

பயனேதும் தரப் போவதில்லையே!!

காதல் புனிதமானது தான் - அது

திருமணமே இலக்கு - அதற்குப் பின்

இருவர் உள்ளத்து எதிர்பார்ப்புமென

காதலிப்போருக்கு மட்டுமே போருந்தும்!

காதலித்த பின்னர்

திருமணத்திற்காகப் போராடிய

காதலர் இலக்கியங்கள் சொல்லுமே!செவ்வாய், 27 ஜூலை, 2021

இணையத்தில் ஏமாளிகளும் ஏமாற்றிகளும்

 

இணைய வழியில் பலர் ஏமாளிகளாகவும் ஏமாற்றிகளாகவும் உலா வருகின்றனர். இணைய வழியில் பணம் பறிக்கும் கும்பலே அதிகம். அந்த வகையில் விழிப்புணர்வாக இருக்கச் சிந்திப்போம்.\

நல்ல நட்பாக இணைகிறேன் என்றாள்

அன்புப்பரிசு அனுப்புவதாகச் சொன்னாள்

அந்தப்பொதி உன்வீட்டுக்கு வர

இந்தச்செலவு 200டொலர் அனுப்பாம்

விழித்தேன், மூளை வேலை செய்தது

அன்புப் பரிசோ நஞ்சுப் பரிசோ

தன்செலவில் அனுப்பியிருந்தால் நம்பலாம்

பணமனுப்பினால் பொதிவராதெனப் படித்தேன்

படித்ததைப் பகிருவதே என் வேலை

படித்ததும் திருந்துவது நீங்கள் ஆச்சே!

சும்மா சொல்லக் கூடாது - ஒருவளென்

அம்மாவை விட அழகியவள் தான்

ஒன்றும் வேண்டாம் அன்பே தேவையென்றாள்

என்றும் என்னவள் இருக்க இவளேனென

நானொரு கிழவன், மனைவி மகளிருக்கு

நானொரு போதும் ஏற்கேன் என்றேன்!

பரவாயில்லை, இணையவல்ல இணையத்திலென்றாள்

பரவாயில்லையெனக் கவனிப்புடன் அரட்டையடித்தேன்!

உங்கள் ஊருக்கு வரவுள்ளேன் என்றாள்...

எங்கள் ஊரினழகைப் பார்க்கலாம் என்றேன்...

வந்திறங்கச் சின்னச் செலவு வருமாம்...

தந்துதவு 500டொலர் என்றுரைத்தாள் அவளும்!

இத்தனையும் உண்மை தான் உறவுகளே!

அத்தனையும் இணையத்தில் போலிகள் தான்!

சிந்திக்கச் சொல்லிவைச்சேன் உங்களுக்கு

சிந்திக்காது விட்டால் சிக்கலில் சிக்குவீர்!

இணையத் திருடர் மற்றும் ஏமாற்றிகள்

காதல், காமம் என்றெல்லாம் வரலாம்

ஏமாறாதீர், வாழ்வையும் வளங்களையும் இழக்காதீர்!

கண் முன்னே காண்போரைக் கூட

கண்ணாலே நம்ப முடிவதில்லைக் காணும்

தொலைதூர இணையவழி இணைவோரை நம்பி

விலைபோய்ப் பிச்சை எடுக்காமல் தப்பவே

இரண்டு பெண்களின் நான்கு கண்களில்

திரண்டிருந்த ஏமாற்று உட்பொதிவை

உமக்கு உரைத்தேன் ஏற்பீரென நம்புகிறேன்!

நானென்ன ஆண்தானே, பெண்கள் நிலையறிந்தோம்

ஏனென்று கேட்குமுன்னே தற்கொலை செய்தார்கள்!

இருபாலாருமே இணைய வழியில் ஏமாறாதிருக்க

வருமெதிர் காலத்தில் ஏற்றம் காண

மாற்றம் கண்டு முன்னேறப் பாருங்கள்!