Translate Tamil to any languages.

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

தை (2020 ) பிறந்தும் வழி பிறக்கவில்லையே!

"பல்கலைக் கழக மாணவர்கள் (இரு பாலாரும்) இருபதிற்கு மேல் தற்கொலை; கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை முயற்சி, ஒருவர் சாவு; தன்னைக் கெடுக்க வந்த ஆணை, இளம் பெண் வெட்டிக் கொலை செய்தார்; காதலியைக் காதலனும் மனைவியைக் கணவனும் ஆங்காங்கே வெட்டிக் கொலை செய்தனர்." என்றவாறு நாளேடுகளில் செய்தி வந்திருப்பதாக ஆளாளுகள் முச்சந்தி முனியாண்டி தேனீர்க் கடையில் கதைத்தாங்க. "விசரில தாங்களும் செத்து மற்றவையையும் சாகடிக்குதுகள்" என ஓருவர் அடுத்தவருக்குச் சொன்னது எனக்குச் சுட்டது. அதனால், என் உள்ளத்தில் பட்டதை அப்படியே எழுதியிருக்கிறேன்.

நாட்டில
சாவுகள் மலிஞ்சு போனதற்கு
சாட்டுகள்
ஏதாச்சும் கண்டு பிடிச்சிட்டியளே?
உளநலக் கோளாறும்
ஒரு சாட்டாகலாம் தான்...
அதனால் தான் பாருங்கோ
தேவைப்படுவோருக்கு
"வாழ்; வாழ விடு /
Live and Let Live" என்பதை உணர்த்தி
உளநல மதியுரையை வழங்கி
சாவுகளைத் தடுக்கத் தான்
எல்லோரும் முனைந்தால் நன்றே!
தற்கொலையை நாடுவோர்
தற்கொலை செய்ய முன்
என்னை நாடுங்கள்
மதியுரை வழங்க நான் தயார்!
காதலித்தவர் கைவிடாரென நம்பி
தம்மை இழந்த பின்னே சாவோர்
காதலிக்க முன்னரே - எவரும்
என்னை நாடுங்கள்
மதியுரை வழங்க நான் தயார்!
கராட்டி, யூடோ பழகிய
பிஞ்சுப் பெண்களைக் கெடுக்கப் போய்
அந்தப் பெண்களால சாக முனைவோர்
அதற்கு முன்னதாகவே - எவரும்
என்னை நாடுங்கள்
மதியுரை வழங்க நான் தயார்!
காதலியைச் சாகடிக்க முனைவோர்
காதலியை வெட்டிச் சாகடிக்க முன்
என்னை நாடுங்கள்
மதியுரை வழங்க நான் தயார்!
மனைவியைச் சாகடிக்க முனைவோர்
மனைவியை வெட்டிச் சாகடிக்க முன்
என்னை நாடுங்கள்
மதியுரை வழங்க நான் தயார்!
2020 தை பிறந்தும்
நல்வழி கிட்டாத சூழலை எண்ணி
உதவத் தான் முன் வந்தேன்
கூலி ஒன்றும் தர வேண்டாம்
உயிர்களைக் கொல்லாமை வேண்டும்
அப்பதான் பாருங்கோ
எப்பன் நாடே உருப்படும்!
எமது உள்ளத்திலே - எப்பவும்
"நான் சாகவும் கூடாது; பிறரை
நான் சாகடிக்கவும் கூடாது!" என்ற
எண்ணத்தைப் பேணினால் கூட
நாம் நெடுநாள் வாழலாமே!

திங்கள், 20 ஜனவரி, 2020

காதலேன் வரவில்லை?


அழகிருக்கவே தான்அலைபவர்
கவர்ந்திழுக்கவே தான்அலைபவர்
தொழிலிருக்கவே தான்அலைபவர்
பணமிருக்கவே தான்அலைபவர்
காதலின்றியே
அலையும் ஆள்இவர் உருப்படார்
எனத்தான் கன்னிப் பெண்களும் ஒதுங்குவரே!
                          (குறளடி வஞ்சிப்பா)

அறிவிருக்கென அழகிருக்கென நெருங்குவதுமே
மிடுக்கிருக்கென எடுப்பிருக்கென நெருங்குவதுமே
வருவாய்த்தொழில் வளமிருக்கென நெருங்குவதுமே
காதலின்றியே
அலையும் ஆள்இவர் சரிவரார்
எனவெண் ணித்தான் ஆண்களும் ஒதுங்குவரே!
                          (சிந்தடி வஞ்சிப்பா)


 மாற்றாருக்கு வழிகாட்டு


தெருச்சுற்றியை உளமாற்றியே
குடிகாரரை உளமாற்றியே
விலைப்பெண்களை உளமாற்றியே
தன்நலத்தவர் உளமாறவே
வழிகாட்டினால்
நல்லொழுக் கமானவர் மலரவே
நாடுமுன் னேறவும் உழைப்பாய் நீயே!
(குறளடி வஞ்சிப்பா)

மாற்றாருமே உளநிறைவுடன் வாழ்ந்திடவென
ஆற்றுகையென அறிவுரையென உரைத்துதவுதல்
மாற்றாரெவர் மகிழ்வாகவே ஏற்றம்பெற
வழிகாட்டியாய்
நீவழி காட்டின் பாரெவர்
முன்னேற் றம்தான் நாடுமுன் னேறவே!
(சிந்தடி வஞ்சிப்பா)

செவ்வாய், 14 ஜனவரி, 2020

குறள் பாவும் விரிப்புப் பாவும் - 2


தைப்பொங்கல் வாழ்த்துகள்


தமிழாண்டின் நல்முதல்நாள் நம்பகல வன்திருநாள்
தைப்பொங்கல் வாழ்த்து உமக்கு! 
                               (இரு விகற்பக் குறள் வெண்பா)

உலகத் தமிழருக்குத் தான்
புத்தாண்டுத் திருநாள்!
உழவரின் உற்ற தோழன் தான்
பகலவனுக்குத் திருநாள்!
ஒற்றுமையாகத் தமிழர் வாழத் தான்
தைத்திருநாளில் பொங்கல் பொங்கி
வாழ்த்துப் பகிருவோம் வாரீர்!


அறிவைப் பெருக்கப் படி

புத்தாண்டு வந்தாலும் எத்தனைதான் சந்தித்தும்
புத்தகம்தான் நீபடிமுன் னேறு
                               (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

புலன்களால் உணரப்படுவதும்
வாசிப்பதால் உணரப்படுவதும்
அறிவு தான் காண்க.
நூலகம் சென்று அமைதியாக இருந்து
நூல்கள் சில படித்தாலும் - எமக்கு
அறிவு தான் வளரும் காண்!


வாசிப்பே அறிஞர் ஆக்கும்

வாசிக்கத் தான்விரும்பு நீஅறிவைத் தான்பெருக்கு
வாசிப்ப தால்அறிஞர் ஆகு.
                              (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

வாசிப்புக் குறைந்து செல்வதால் - அச்சு
ஏடுகள் தம்பணியை நிறுத்த முடிவு!
வாசிக்க மறந்த ஏடுகளில் கிடந்த அறிவினை
வாசித்தவர்கள் தான் திரட்டி இருப்பர்!
வாசிக்காமல் இருந்துவிட்டால் - நாம்
அறிஞர் ஆக வாய்ப்பு இல்லைக் காணும்!


ஏமாற்றாதே ஏமாறாதே

ஏமாறும் எண்ணம் இருக்கக்கூ டாதுகாண்நீ
ஏமாற்ற வும்எண்ணா தே
                              (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

ஏமாறும் எண்ணம் இருக்கும் வரைதான்
ஏமாற்றுவோர் ஏமாற்றலாம்!
ஏமாற்றியதற்காக - நீயும் பிறரை
ஏமாற்றலாமென எண்ணிவிடாதே!
எப்ப ஏமாறும் எண்ணத்தை மாற்றுவியோ
அப்ப நீ வெற்றி பெற்றவராகிறாய்!


வெள்ளி, 10 ஜனவரி, 2020

சின்னதாகச் சித்தித்துப் பாருங்களேன்



முறையான திட்டம் (Master Plan)

புத்தாண்டு பிறந்ததும் என்ன பண்ணப் போறாய்?
     
                 பட்ட கடன்களை அழிக்கப் போறேன்.
எப்படித் தோழி?

                 என்ர பெயரை மாற்றித் தான்!
                (அப்ப கடன்கொடுத்தோர்
                என்னைக் கேட்க முடியாதே!)


பொங்கல் பொங்கலையோ?

முகத்தார்: தைப்பொங்கல் என்ன மாதிரி?

சிவத்தார்: அந்த மாதிரி!

முகத்தார்: எந்த மாதிரி?

சிவத்தார்: தண்டின பொங்கல் நிறையக் கிடைக்குமே!


நரி மூளை (ஓர் எச்சரிக்கைக்காக)

செம்பு: யாழில் எரிபொருள் தட்டுப்பாடு, ஒரு களஞ்சியத்திலும் இல்லை. உனக்கெப்படிக் கிடைக்கிறது?

வம்பு: பெரும் புள்ளிகளின்ர உந்துருளியால குடுவையில (போத்தலில) ஏந்தி வந்து, என்னுடைய உந்துருளிக்கு விடுறன்.

செம்பு: பல நாள் கள்ளர் ஒரு நாள் பிடிபடுவினமாம்.

வம்பு: சில நாள் எரிபொருள் தடை, சிக்க வைக்காதே!


வணிக மூளை

முகத்தார்: தெருவெங்கும் மக்கள் வெள்ளம், அவர்களோடு உடைந்த ஊர்திகளும் கூட...

சிவத்தார்: அமெரிக்க-ஈரான் முறுகலை வைத்து, மக்களைத் தெருவில வறுத்தெடுக்கிறாங்களே!

முகத்தார்: தட்டுப்பாடா - அது
                      வெறும் கட்டுக்கதை!
                      முதலாளி பணமீட்ட
                      ஏமாளி மக்களுக்கோ
                      பணச் செலவு!