Translate Tamil to any languages.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்

வலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com எனும் மின்னஞ்சலூடாக புதிய வலைப்பூவைத் திறந்துள்ளேன். அதனை  www.ypvnpubs.com முகவரியில் (டொமைனில்) இணைத்து விட்டேன். பதிவர்கள், வாசகர்கள் எல்லோரையும் உங்கள் யாழ்பாவாணன் ஆகிய நான் அன்புடன் பணிவோடு அழைக்கின்றேன்.

இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன். ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுமாறு நன்மை, தீமைகளை விளக்கி மதியுரை கூறிய அறிஞர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள். ஆறு வலைப்பூக்களை ஒரே வலைப்பூவாக்க திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டல் எனக்கு உதவியது. அவர் முன்வந்து எனக்கு உதவியதிற்கு நான் நன்றி கூறுகிறேன்.

மேலுள்ள இணைப்புகளில் உள்ள வழிகாட்டல் எனது கூகிள் பிளக்கர் வலைப்பூக்களை ஒரே வலைப்பூவாக இணைக்க உதவியது.

ஆயினும், மேலுள்ள இணைப்புகளில் உள்ள வழிகாட்டலின் படி எனது வேர்ட்பிரஸ் வலைப்பூக்களை ஒரே வலைப்பூவாக்க அவற்றை பிளக்கர்  வலைப்பூவில் இணைக்க முடியவில்லை. அதற்கு http://wordpress2blogger.appspot.com/ என்ற இணைப்பில் உள்ள செயலி இயங்காமையே காரணம். ஆயினும், இடையிடையே வேர்ட்பிரஸ் வலைப்பூப் பதிவுகளை இவ்வலைப்பூவில் இணைத்து முழுமைப்படுத்தலாம் என எண்ணியுள்ளேன்.

தங்கள் வலைப்பூக்களின் புதிய பதிவுகளை இனம் கண்டு உடனுக்குடன் எனது கைக்கணினி (Tab) ஊடாகக் கருத்துகள் (Comments) இட வசதியாக புதிய yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலைக் கொண்ட google+ இலோ www.ypvnpubs.com முகவரியில் உள்ள எனது புதிய வலைப்பூவிலோ இணைந்து ஒத்துழைப்புத் தருமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.


நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணும் இப்புதிய வலைப்பூவில் பல மாற்றங்கள் உண்டு. ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஏழு வகைப் பதிவுகளை வெளியிட எண்ணியுள்ளேன். விரைவில் இத்தளம் முழுமை அடையும் என நம்புகிறேன். உங்களால் முடியுமாயின் உங்கள் நண்பர்களுக்கும் எனது வலைப்பூவை அறிமுகம் செய்து உதவுங்கள். இப்புதிய வலைப்பூ பற்றிய தங்கள் எண்ணங்களைப் பின்னூட்டங்களில் வெளியிட்டு உதவுங்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

திருக்குறளுக்கான செயலியைப் பாரும்...

இனிய உறவுகளே!
தமிழரின் முதலீடு கல்வி தான்.

இவ்வுலகில் முதலில் தோன்றிய தமிழை, உலகெங்கும் உலாவிய தமிழை உலகெங்கிலும் வலை வழியே கணினிச் செயலிகள் வழியே உலாவச் செய்ய முடியும் என்பதை எல்லோரும் அறிவீர்கள்.

அடொப், மைக்ரோசொப்ட் போன்ற உலகின் முன்னணிக் கணினிச் செயலிகள் உருவாக்கும் நிறுவனங்களில் பணி செய்கின்றனர். அவர்களாலும் தமிழைப் பேண உதவும் செயலிகளை ஆக்கித் தரமுடியும். ஆயினும், இவ்வாறான நிறுவனங்களில் பணி செய்யாத தமிழறிஞர்களே அதிகம் தமிழைப் பேண உதவும் செயலிகளை ஆக்கித் தந்துள்ளனர்.

கணினிச் செயலி, வலைச் செயலி ஆக்கும் ஆற்றல் எனக்கு இருந்தாலும் இனிவரும் காலங்களில் தான் எனது வெளியீடுகளைத் தரக் காத்திருக்கின்றேன். "யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும்." என்பதற்கிணங்கச் சிறப்பாகத் தமிழைப் பேண உதவும் செயலிகளை நம்மாளுகள் பயன்படுத்த வசதியாக அடுத்த அறிஞர்களின் செயலிகளை அறிமுகம் செய்வதும் எனது பணியாக இருக்கும்.

அந்த வகையில் Just Try This (stop searching start doing!) என்ற தளம் அறிமுகம் செய்திருக்கும் திருக்குறளுக்கான செயலியை இன்று இங்கே பார்க்கலாம். வலை வழியே எழுமாறாக ஏதாவதொரு திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிப்படுத்தக்கூடிய செயலியை இத்தளத்தில் (http://justtrythis.blogspot.com/2012/06/display-random-thirukkural-on-your.html) வெளியிட்டுள்ளனர். அதனைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்வடைகின்றேன்.

மேற்காணும் அவர்களது தளத்திற்குச் சென்று கீழ்காணும் நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து உங்கள் தளத்திலும் ஒட்டலாம்.

<iframe src="http://justtrythis.co.in/demos/thirukkural/index.php" style="border-style: none; border-width: medium; height: 120px; width: 100%;"></iframe>
தளத்தின் தலை (Header) அல்லது அடி (Footer) செயலிப் பட்டையில் ஒரு செயலியை (வழிகாட்டல்: http://www.wikihow.com/Add-a-Widget-to-Blogger) இணைத்துப் பின் படியெடுத்த நிகழ்நிரலை (Code) ஒட்டிச் சேமிக்கவும்.  இப்போது உங்கள் தளத்தில் எழுமாறாக ஏதாவதொரு திருக்குறளைப் பார்க்கலாம்.

இதோ நான் இப்பதிவில் திருக்குறளுக்கான செயலியை இணைத்திருக்கிறேன். பதிவில் செயலி அமைய வேண்டிய இடத்தில் துடிப்பியை (Cursor) நிறுத்தி இடது பக்க மேல் மூலையில் HTML என்பதை அழுத்திப் படியெடுத்த நிகழ்நிரலை (Code) ஒட்டிப் பின் Compose என்பதை அழுத்திப் பதிவை நிறைவு செய்யலாம்.



இவ்வாறான செயலிகள் வழியே தமிழைப் பேண, நாம் பலருக்கு இவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். 

கணினி, இணைய வழித் தமிழ்


ஒரு காலத்தில் எத்தனையோ ஆள்கள் கணினி படிக்கப் பின்நின்றனர். கேட்டால்; ஆங்கிலம் தெரியாது என்று சாட்டுக் கூறினர். ஆனால், இன்றோ எல்லோரும் கணினிக் கல்வியிலே நாட்டம் கொள்கின்றனர். காரணம் கணினி நுட்பங்களில் தமிழ் இழையோடிவிட்டது. இந்நிலை எதிர்காலத்தில் உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப் பேண உதவலாம்.
நானும் ஒரு கணினி விரிவுரையாளர் தான். ஒரு நாள் அகவை அறுபத்தேழில் ஓர் அப்பு என் வீட்டிற்கு வந்தார். அறிவுக்கதிர் மாதாந்த இதழ் (அச்சு வழியிலும் இணைய வழியிலும்) நாடாத்தத் தேவையான பாடங்களைச் சொல்லித் தருமாறு கேட்டுப்படித்தார். இதை ஏன் சொல்ல வந்தேன்? கணினி நுட்பமும் முதுமையும் தமிழைப் பேண முன்வருமாயின்; இன்றைய நம் இளசுகளுக்கு ஏன் மொழிப்பற்று எள்ளளவேனும் எட்டிப்பார்க்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட வந்தேன்.
ஆளுக்கொரு வலைப்பூ, குமுகாய(சமூக) வலைத்தளம், இணையத் தளம், தமிழ் மென்பொருள் வெளியீடு என எத்தனையோ இளசுகள் கணினி, இணைய வழியில் இறங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவற்றினூடாகத் தூய தமிழைப் பேண முன்வராத துயரையே இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கணினி, இணையம் மட்டுமன்றி இன்று நடைபேசியிலும் கூடத் தமிழ் உலாவுகிறதே! மாறும் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதோடு அத்தொழில் நுட்பங்களூடாகத் தமிழைப் பேண முயன்றால் தமிழ் இனி மெல்லச் சாக இடமில்லையே!

கொஞ்சும் அகவையில்… கெஞ்சும் அகவையில்…



சும்மா! நகைச்சுவை என்று கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படத்தைக் கண்டேன்.

படத்தில் அன்றும் இன்றும் ஒருவர் சொல்வதாய் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை தமிழுக்கு மாற்றித் தரலாமெனக் கூகிள் மொழிபெயர்ப்பானை (Google Translate) நாடினேன்.


முதலில் அன்றைய கொஞ்சல் பற்றி ஆங்கிலத்தில் (When I was a kid so many girls wanted to kiss me, I allowed) உள்ளதைத் தமிழுக்கு மாற்ற முயன்றேன்.

இடது பக்கத்தில் ஆங்கிலக் கருத்தைத் தட்டச்சுச் செய்ய, வலது பக்கத்தில் கிடைத்த தமிழைப் படியுங்க
நான் பல பெண்கள் என்னை முத்தமிட விரும்பினார் சிறுமியாக இருந்த போது, நான் அனுமதிஎன்றவாறு கூகிள் மொழி பெயர்த்தது. ஆயினும், என் அறிவைப் பாவித்துக் கீழுள்ளவாறு திருத்தினேன்.
நான் சிறுவனாக இருந்த போது பல பெண்கள் என்னை முத்தமிட விரும்பினார், நான் அனுமதித்தேன்.
இவ்வாறே, இன்றைய கொஞ்சல் பற்றி ஆங்கிலத்தில் (But now I want to kiss so many girls, but they don’t allow. Selfish girls…) உள்ளதைத் தமிழுக்கு மாற்ற முயன்றேன்.

இடது பக்கத்தில் ஆங்கிலக் கருத்தைத் தட்டச்சுச் செய்ய, வலது பக்கத்தில் கிடைத்த தமிழைப் படியுங்க
ஆனால் நான் இப்போது அப்படி பல பெண்கள் முத்தம் வேண்டும், ஆனால் அவர்கள் அனுமதிக்க கூடாது.
சுயநலம் பெண்கள்என்றவாறு கூகிள் மொழி பெயர்த்தது. ஆயினும், என் அறிவைப் பாவித்துக் கீழுள்ளவாறு திருத்தினேன்.
ஆனால் இப்போது நான் அப்படிப் பல பெண்களை முத்தமிட விரும்புகிறேன், ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை.
சுயநலமான பெண்கள்
அவரவர் கொஞ்சும் அகவையில் எப்படியோ
எவரெவர் கெஞ்சும் அகவையில் இப்படியோ
கூகிள் தவறாக மொழி பெயர்க்கலாம்
நான் சரியாக மொழி பெயர்த்தேனா?
தீர்ப்பு உங்கள் கையில்…”


மொழி மாற்றிப் பகிர்வோம்


தமிழில் உள்ள இலக்கியப் பதிவுகளை மொழி மாற்றிப் பகிர்வதனூடாக உலகெங்கும் தமிழை, தமிழ் பண்பாட்டை பரப்பிப் பேண முடியுமே!

மொழி மாற்றிப் பதிய உதவிக்குக் கூகிளைப் பாவிக்கலாம்.
இணைப்பு:
 https://translate.google.com/.


இடது பக்கத்தில் தமிழ் மொழியைத் தெரிவு செய்த பின் தமிழ் மொழியில் (லதா எழுத்துரு – unicode பாவித்து) தட்டச்சுச் செய்யுங்கள். வலது பக்கத்தில் விரும்பிய மொழியைத் தெரிவு செய்து வெளியீட்டைப் பெறலாம்.
எடுத்துக் காட்டாக:
இடது பக்கத்தில் வணக்கம் என வழங்க வலது பக்கத்தில் ஆங்கிலத்தில் Greetings
என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் சிங்களத்தைத் தெரிவு செய்து பார்த்த போது සුභ පැතුම් என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் ஸ்பானிஸைத் தெரிவு செய்து பார்த்த போது saludos என வெளியாகியது.
பிறிதோர் எடுத்துக் காட்டாக:
இடது பக்கத்தில் நல்வரவு என வழங்க வலது பக்கத்தில் ஆங்கிலத்தில் Welcome
என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் சிங்களத்தைத் தெரிவு செய்து பார்த்த போது ඔබ සාදරයෙන් පිළිගනිමු என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் ஸ்பானிஸைத் தெரிவு செய்து பார்த்த போது bienvenida என வெளியாகியது.
எம்மொழியில் வெளியீட்டைப் பெற்றாலும் அம்மொழியில் அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே தெளிவாக மொழி மாற்றிப் பகிர முடியும் என்பதை மறக்க வேண்டாம். உங்களால் இயன்ற வரை மொழி மாற்றிப் பகிர முயற்சி செய்யலாம். வெளியீட்டுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் பல மொழி ஆற்றலைப் பெருக்கவும் இது உதவுமென நம்புகிறேன்.

கதை எழுதப் புகுமுன்


நண்பர் ஒருவர் கதை எழுதுவது எப்படி என என்னைக் கேட்கிறார். அவருக்குக் கூறியதை உங்களுடன் பகிர முனைகிறேன். கதை எழுதப் புகுமுன் இவற்றையும் கருத்திற் கொள்ளவும்.

தூரத்து வேலியை மாடு பிடுங்க, நானும் அதைக் கலைக்க நகர்ந்தேன். ஐயோ! அம்மோய்! எனக் காலத் தூக்கினேன். காலடியில் எரிந்த குப்பைச் சாம்பலில் நெருப்பு இருந்ததை முன்கூட்டியே அறிந்திருந்தால் காலுக்குச் சூடு வேண்டத் தேவை இருந்திருக்காது. இனியென்ன, “பர்ணால்என்றொரு கழி மருந்தைப் பூசியவாறு என்னை நொந்தேன்.என்றவாறு நாம் பட்டறிந்ததை (அனுபவித்ததை) நேரடியாகக் கதையாக எழுதலாம். இதனைப் பட்டறிந்தது (அனுபவித்தது) போன்றும் இவ்வாறு புனைந்து எழுதலாம்.

அழகான பெண்ணொருத்தி அந்த வழியாலே போனாள். அவளுக்குப் பின்னாலே ஐந்தாறு ஆண்கள் பின் தொடர்ந்தனர். காதல் செய்யலாம் எனக் கல்லெறிந்து பார்க்கவோ தெரியவில்லை. அந்தப் பெண்ணுக்கு முன்னாலே இரண்டு பிள்ளைகளோட ஒற்றைக் காலில் ஒருவர் தாங்கு தடியுடன் வந்தார். அம்மா! அப்பா எங்களுக்குக் குளிர்களி (ஐஸ்கிறீம்) வேண்டித் தந்தவர்.என்று அந்தப் பெண்ணிடம் இரண்டு பிள்ளைகளும் சொன்னார்கள். அதனைக் கண்ட ஐந்தாறு ஆண்களும் கிழடியிடம் மண்டியிடுவதா என ஓட்டம் பிடித்தனர். ஒற்றைக் காலனுக்குத் துணையாக இரண்டு பிள்ளைக்குத் தாயாகத் தன்னை ஈகம் செய்த பெண்ணைப் போற்றலாம். ஓட்டம் பிடித்த ஆண்களுக்குக் கண்ணில்லையா? காதலுக்குக் கண்ணில்லையா?’ என்று எண்ணத் தோன்றுதே!என்றவாறு பார்த்த நிகழ்வைக் கதையாக எழுதலாம். பார்த்தது போன்றும் இவ்வாறு புனைந்து எழுதலாம்.

இதேபோல ஒருவர் சொன்ன கதையைக் கூட, அப்படியே கதையாக எழுதலாம். இவ்வாறு தொடங்கி இவ்வாறு முடிவதாகவும் நீங்கள் சொல்வதாகவும் கதையை எழுதலாம். தேவையற்ற சொற்களை நீக்கி (சொற் சிக்கனம் பேணி) இறுக்கமாகக் கதை புனையலாம். ஒரு மின்வெட்டு நிகழ்ந்து சிறிது நேரத்தில் மின்னொளி வந்ததும் நடந்த நிகழ்வைப் பகிருகிறோம் தானே! அதுபோலத் தான் சிறுகதை புனைதலும்.


நண்பர்களே! பெரிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்க மறக்கவேண்டாம். அவர்களின் எழுத்தாளுமை, எழுத்து நடை உங்களுக்கு வழிகாட்டுமே! இதனைப் புரிந்துகொண்டால் நீங்களும் எழுத்தாளர்களே! பிறமொழிச் சொல் கலக்காது செந்தமிழில் கதை எழுதி தூய தமிழ் பேண முன்வாருங்கள்.

நகைச்சுவை எழுதலாம் வாருங்கள்


நகைச்சுவை என்பது வாசிக்கும் போது சிரிக்க வராது, சற்றுச் சிந்தித்தால் வயிறு குலுங்கச் சிரிக்க வரும். அதாவது, சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பது நோய் தீர்க்கும் நகைச்சுவையாகும். நகைச்சுவையை எவராலும் இலகுவில் எழுதிவிட முடியாது. நகைச்சுவை எவ்வாறு உருவாகிறது என்பதை உணர்ந்தவர்களாலேயே எழுத முடிகிறது.
கோபம் வரும் வேளை சிரியுங்க…” என்றொரு பாடல் வரியும் உண்டு. உண்மையில் கோபம் வரும் போது பதின்மூன்று நரம்புகள் இயங்க; சிரிப்பு வரும் போது அறுபைந்தைந்து நரம்புகள் இயங்குவதாக ஆய்வுகள் கூறுவதாய் சண் தொலைக்காட்சி நிகழ்சியில் அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். அதாவது, நகைச்சுவைச் சிரிப்பாலே அதிக நரம்புகளை இயங்க வைத்து நோயின்றி வாழலாமாம்.
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போய்விடும்என்று முன்னோர்கள் சொன்னதில் தப்பில்லைத் தானே! ஆனால், நகைச்சுவையைச் சொல்லும் போதோ எழுதும் போதோ தவறு நிகழாமல் பார்க்க வேண்டும். ஏனெனில், நகைச்சுவை மாற்றாரை நோகடிக்கக் கூடாது.
நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவையை நடிப்பாலே மொழிபெயர்கிறார்கள். சிலர் நகைச்சுவை நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்கின்றனர். சிலர் கேலிச் சித்திரங்களால் நகைச்சுவையை வெளிப்படுத்துகின்றனர். சிலர் பாட்டிலும் கவிதையிலும் கதைகளிலும் நகைச்சுவையை இளையோட விடுகின்றனர்.
சிரிக்க வைப்பதற்காக எழுதப்படுவது சிரிப்புக் காட்டுதலே தவிர, நகைச்சுவை அல்ல. ஏமாற்றியதை அல்லது முட்டாளாக்கியதைச் சொல்லிச் சிரிக்க வைக்கிறாங்களே தவிர, கொஞ்சமாவது சிந்திக்கத் தூண்டுகிறாங்கள் இல்லையே! அப்படி என்றால் உண்மையான நகைச்சுவை எப்படியிருக்கும்?
உண்மை ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ எழுதுவதே நகைச்சுவைஎன அறிஞர் ஒருவர் அகில இந்திய வானொலியில் கூறியது என் நினைவிற்கு வருகிறது. அதாவது, ஓர் உண்மையைச் சற்றுக் கூட்டியோ உயர்த்தியோ அல்லது குறைத்தோ தாழ்த்தியோ எழுதும் போது நகைச்சுவை தானாகவே வந்தமைவதைக் காணலாம். உண்மையில் நகைச்சுவையை வாசிக்கும் போது சிரிப்பு வராது; வாசித்த பின் நன்றாகச் சிந்தித்தால் சிரிப்பு வரும். இவ்வாறு எழுதுவதே நகைச்சுவை.
எடுத்துக் காட்டு : 01,
முனியாண்டி மூன்று பானை சோற்றை முழுதாக விழுங்கிப் போட்டானுங்கஇப்ப ஆளுக்கு மருத்துவமனையில பெரும் திண்டாட்டமாமே!என்பதில் சோறு சாப்பிடுவது உண்மை, மூன்று பானை அளவென்பது சாப்பிட்டதன் அளவைக் கூட்டிக் காட்டப் பயன்பட்டிருக்கிறது.
எடுத்துக் காட்டு : 02,
ஆட்டக்காரி நடிகை ஒருத்தியின் உடலில் மார்புக் கச்சையும் இடுப்புக் கச்சையும் தான் இருந்தது. ஆட்டம் பார்க்க வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனராம்.என்பதில் ஆடை அணிவது உண்மை, கச்சைத் துணிகள் சுட்டுவது ஆடைக் குறைப்பையே!
எங்கே உங்கள் முயற்சியைத் தொடருங்கள் பார்ப்போம். நீங்கள் நகைச்சுவை எழுதிச் சிறந்த படைப்பாளியானால், அதுவே இப்படைப்பின் வெற்றி என நம்புகிறேன். எழுதும் போது பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுத மறந்து விடாதீர்கள்.
மாற்றுக் கருத்துள்ளோர் எடுத்துக்காட்டுடன் விளக்கம் தாருங்கள். வாசகர்கள் அதனைப் படித்துச் சிறந்த நகைச்சுவையை எழுதட்டும்.
அதேவேளை, உங்கள் கருத்துகள் சிறந்த படைப்பாளிகளை உருவாக்க உதவுமே!
பேரறிஞர்களே இப்படைப்பில் குறைகளோ தவறுகளோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். அது, எனது அடுத்த படைப்பான கதைகள் புனையலாம் வாருங்கள்என்பதற்குப் பின்னூட்டியாக அமையலாம் தானே!


செய்தி எழுதுவதில் வெற்றி காண

படித்தவர்கள் பலர் இருகிறார்கள். பலரது பதிவுகளைப் படித்த பின் குறை, நிறை கூறி சிறந்த பதிவுகளை ஆக்க ஊக்கமளிப்பார்கள். சிலர் சிறந்த பதிவுகளைத் தாமே எழுதி, அவ்வாறே பிறரும் எழுத வழிகாட்டுவர். எழுத விரும்பும் நாங்கள் தான் தேடிப் பொறுக்கிக் கற்று எழுதுவதில் வெற்றி காணவேண்டும்.

செய்தி எழுதுவதாயினும் சரி, கட்டுரை எழுதுவதாயினும் சரி; தொடக்கம் (தலை), விரிப்பு (உடல்), முடிவு (கால்) என அமைத்து எழுதலாம். நாய் மனிதரைக் கடிப்பது வழக்கம். ஆனால், மனிதர் நாயைக்  கடிப்பது செய்தி. அப்படி ஒன்று நடந்ததாக எழுதிக் காட்டுவோமா?

"ஆற்றூரில் நாயைக் கடித்த மனிதர்" என்று தலைப்பிடுங்கள்.

"குளித்துவிட்டு ஆற்றங்கரையேறிய மனிதர் நாயைக் கடித்து விட்டார்." என்று தொடக்கம் (தலை) எழுதலாம். "அதாவது, தான் உடுத்திய உடைகளைக் கரையில் விட்டுச் சென்ற மனிதர்; தன் உடைகளின் மேல் படுத்திருந்த நாயை விரட்டியுள்ளார். நாயோ குறித்த மனிதரைக் கடிக்க முயன்று இருக்கிறது. கோபமடைந்த அம்மனிதர் நாயைக் கடித்து விட்டுக் கலைத்த பின், தன் உடைகளை எடுத்து உடுத்துள்ளார்." என்று விரிப்பு (உடல்) அமைக்கலாம். "மேலும், அக்காட்சியினை நேரில் கண்டவர்கள்; 'போயும் போயும் நாயைக் கடிக்க மூளை வேலை செய்திருக்கிறதே!' என்று தமக்குள்ளே முணுமுணுத்துச் சென்றனர்." என்று முடிவு (கால்) எழுதலாம்.

குட்டிச் செய்தி எழுதியாச்சா? அப்படியாயின் பத்திரிகைக்கு அனுப்பலாமா? அங்கே தான் சற்றுச் சிந்திக்க வேண்டும். நாம் எழுதியதை விட அடுத்தவர் சிறப்பாக எழுதியிருந்தால்; அதனையே பத்திரிகை ஆசிரியர் தெரிவு செய்வார். அப்படியாயின் அடுத்தவர் கையாளும் நுட்பங்களைத் தேடிப் பொறுக்கிக் கற்று எழுதுவதன் மூலமே இத்தடையைத் தாண்ட முடியும்.

செய்தி எழுதுவதில் வெற்றி காண வேண்டுமாயின் இவ்வாறான தடைகளை உடைத்தெறியக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பல செய்தி ஏடுகளைத் தேடி, அவை கையாளும் செய்தியை வெளிப்படுத்தும் நுட்பங்களைக் கண்டறிந்து எழுத வேண்டும்.

நான் கிறுக்கியதை இல்லாள் பரப்பினாள்!


ஆளுக்காள் எழுதி
ஊடகங்களுக்கு அனுப்பிவைச்ச பின்
அந்த ஏட்டில வந்தது
இந்த வானொலியில வாசித்தது
உந்தத் தொலைக்காட்சியல போனது
என்றெல்லாம் சொல்லுறாங்களேயென்று
"உச்சி மண்டை வெடிக்கிறதே
தலைக்கு மேலே பகலவனா?
நேரம் பன்னிரண்டு மணி!" என்று
நானும் எழுதி வைச்சதை
எப்படிப் பகிரலாமென்று தான்
எண்ணி எண்ணி பார்த்தேன்!

வெள்ளையரை வெளியேற்ற எண்ணி
கரித்துண்டெடுத்து
தெருவில எழுதி வெளியிட்டு
போர்க்குரல் எழுப்பியவன் பாரதியென்று
கவிராஜன் கதையில வைரமுத்து எழுதியது
நினைவிற்கு வர - நானும்
நானெழுதிய தாளை இல்லாளிடம் நீட்ட
அவளோ
ஊராளுகளுக்கெல்லாம் காட்டி
பொங்கும் இளமையோடு தானிருக்க
தெருப் பிச்சைக்காரக் கிழவி மீது
காதல் வந்ததாய் - தன்னவர்
எழுதியிருக்கிறாரே என்றெல்லோ
வெளியிட்டு வைத்துவிட்டாளே!

எதைத் தான் எழுதிப் பழகிறது?

எழுதிப் படிக்க வைத்த
பெற்றோர்
மணல் மண்ணிலே ‘அ’, ‘ஆ’ எழுத
எனது சுட்டு விரலை
தேய்த்தெடுத்தும் கூட - என்
கையெழுத்து அழகில்லைப் பாரும்!
என் கையெழுத்து
அழகில்லை என்று ஒதுங்கினாலும்
மூ.மேத்தா போல பாவலராகலாம்
செங்கைஆழியான் போல கதாசிரியராகலாம்
என்றெல்லாம்
எடுத்துக்காட்டோடு எழுதப் பழகென்றால்
எதைத் தான் எழுதிப் பழகிறது?

பிறக்கும் போதே
பாவலராக, கதாசிரியராகப் பிறந்தவர்கள்
எழுதுவதைப் போல
எத்தனையைத் தான் எழுதிப் பழகினாலும்
நறுக்காக நாலு அடிகளில்
பா/ கவிதை புனைய வராதாம்
கதை சொல்லுறது போல
எழுதினாலும் கூட கட்டுரையாகிறதே...
சரி, கட்டுரை என்றாவது
செய்தி ஏட்டுக்கு அனுப்பினால்
கட்டுரைக்கான அடையாளமில்லையென
திருப்பி அனுப்பிறாங்களே!

செந்தமிழும் நாப்பழக்கம்
சித்திரமும் கைப்பழக்கம்
போலத்தான்
எழுதிப்பழக எண்ணித்தான்
எடுத்தேனே எழுது கோலும் தாளும்
எழுதியது எல்லாம் இலக்கியமா
எனக்கு ஒண்ணுமே ஏறவில்லையே!

தமிழினமா தமிழ் மொழியா சாகிறது

Posted on மே 15, 2013 by yarlpavanan


குமரிக் கண்டத்தில் (lemuria continent) இருந்து உலகம் முழுவதும் பரவி வாழ்ந்த தமிழரைக் கடற்கோள் அள்ளிச் சென்றதா?
மூத்த மொழி தமிழ் என்கிறார்கள், மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கையில் தமிழ் பதினேழாம் இடத்திலென விக்கிப்பீடியா கூறுகிறது.
எனக்கொரு ஐயம்தமிழினமா தமிழ் மொழியா சாகிறது?

உலகில் தமிழ் அழியுமா?


ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு ஒன்றின் மொழிகளுக்கான பிரிவொன்று வரும் முப்பது ஆண்டுகளில் அழியவிருக்கும் மொழிகளில் தமிழும் அடங்குவதாகத் தெரிவித்திருப்பதை சில இணையத்தளங்களில் படித்தேன்.
உலகில் தமிழ் அழியுமா? அதற்கான வாய்ப்பு உண்டா? என்றால்; பாரதி கூட தமிழ் இனி மெல்லச் சாகும்என்றாரே; ஆகையால் தமிழ் அழியும் என்பதா?
வெள்ளைக்காரன், வெளிநாட்டான் என்பார் தமிழைப் படித்து ஆய்வு செய்ய (அடுத்து வரும் பதிவுகளில் தக்க சான்றுகள் தரப்படும்); நம்மாளுகள் தமிழைப் படித்து (தமிழெனும் கடலை நீந்திக் கடக்க முடியாது தான்…) தமிழைப் பேண முன்வராமல் இருந்தால் தமிழ் அழியாமல் என்ன தான் செய்யும்?
தொழில் நேரமான எட்டு மணி நேரம் செயலக மொழிகளைப் பேசினாலும் எஞ்சிய நேரமாவது தமிழைப் பேணலாமே! தமிழராகிய நாம் தமிழை வாழ்வில் தொன்னூற்று ஒன்பது விளுக்காடு பழக்கத்தில் பேணுவோமாயின் உலகில் தமிழ் அழிய வாய்ப்பு இல்லை எனலாம்.

ஒரு இலட்சம் ஆள்கள் இருந்தால் கூட அவர்கள் பேசும் மொழி அழியாதாம். அப்படியாயின் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் பிறமொழிப் புழக்கத்தை நிறுத்தி விட்டு அல்லது குறைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நம் தமிழைப் பழக்கப்படுத்தினால் உலகில் தமிழை அழியாமல் பேணலாமே!

தமிழைக் கொல்லும் ஊடகங்கள்


இன்றைய ஊடகங்கள் எல்லாமே தமிழென்ற போர்வையில் தமிங்கிலிஷ் தான் வெளிப்படுத்துகிறது. தமிழ் + இங்கிலிஷ் = தமிங்கிலிஷ் எனக் கணிதச் சமன்பாட்டை இன்றைய ஊடகங்கள் அறிமுகம் செய்கின்றன.
இன்றைய ஊடகங்கள் வணிக நோக்கில் விளம்பர வெளியீடுகளில் நாட்டம் கொள்வதால் தான், தமிங்கிலிஷ் பயன்படுத்தித் தமிழைக் கொல்கின்றனர். எனது இக்கருத்தை உறுதிப்படுத்தவும் விரிவாக விளக்கவும் தக்க சான்றாக பாவலர் காசிஆனந்தன் எழுதிய தமிழனா? தமிங்கிலனா?” என்ற நூலைப் படியுங்கள். இந்நூல் எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ளது.
தமிழைக் கொல்லும் ஊடகங்களின் செயற்பாட்டை முறியடிக்க வாசகர்கள், படைப்பாளிகள், விளம்பரம் வழங்குனர்கள் ஆகியோரது ஒத்துழைப்புத் தேவை. வாசகர்கள் தமிழைக் கொல்லும் ஊடகங்களை ஒதுக்கி வைக்கவேண்டும். படைப்பாளிகள் தமிழைக் கொல்லும் ஊடகங்களிற்கு படைப்புகளை வழங்கக்கூடாது. அதேவேளை படைப்புகளைத் தமிழிலேயே ஆக்கவும் வேண்டும்.
ஊடகங்களின் வருவாய் விளம்பரம் தான். விளம்பரம் வழங்குனர்கள் தமிழிலேயே விளம்பரங்களை வழங்கவேண்டும். அதேவேளை தமிழைக் கொல்லும் ஊடகங்களிற்கு விளம்பரங்களை வழங்கக்கூடாது. விளம்பரம் வழங்குனர்கள் மட்டும் ஒன்றுபட்டால் தூய தமிழைப் பேணும் ஊடகங்களை உருவாக்கிவிடலாம்.
ஊடகங்கள் நினைத்துக் கொண்டால் பிறமொழிக் கலப்பற்ற தூய தமிழைப் பேண முன்வரலாம். மொழியைப் பேணுவதும் நாட்டை வளம்படுத்த உதவுதம் தான் ஊடகங்களின் செயற்பாடாக இருக்கவேண்டும்.

தூய தமிழைப் பேண ஒத்துழைப்புத் தரும் ஊடகங்களிற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்போமானால், தமிழைக் கொல்லும் ஊடகங்களைச் செயலிழக்கவைக்க எம்மால் முடியுமே!