ஐக்கிய இலங்கையைப் பேணும் பணி
(United Sri Lanka Care Duty)
அரை நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் அமைதியின்மை காணப்படுகிறது. போரும் அமைதியும் வந்து போயின. ஆனால், ஒற்றுமையின்மையும் அமைதியின்மையும் தொடருகின்றன. இதற்கு எவரும் நல்ல, ஒழுங்கான தீர்வுகள் எதனையும் முன்வைக்காமையே; இவை இன்னும் தொடர வாய்ப்பளிக்கப்படுகிறது.
மேலும், தீர்வு என்னும் போது ‘ஐக்கிய இலங்கைக்குள் (United Sri Lanka - USL) அமைய வேண்டும்.‘ என்பதனை எல்லோரும் எல்லாப் பக்கத்திலும் விடாப்பிடியாகச் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். ஒன்றுபட்ட அதாவது ஒன்றிணைந்த மக்களின் ஒரே தாய் நாடு இலங்கை என வரையறுத்துத் தீர்வை முன்வைத்தால் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்பப்படுகிறது. இதுவரை இப்படியொரு எண்ணத்துடன் எவரும் எந்தவொரு தீர்வையும் முன்வைக்க வரவில்லை.
'ஐக்கிய இலங்கையைப் பேணும் பணி' என்ற நோக்கில் எனது வழிகாட்டலையும் மதியுரையையும் முன்வைக்க விரும்புகிறேன். ஒற்றுமையின்மையையும் அமைதியின்மையையும் போக்கி இயல்பு நிலையில் எல்லோரையும் வாழவைக்கும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தி; எல்லோரும் ஒற்றுமையாக, அமைதியாக, மகிழ்வாக, வருவாய் நிறைந்தவர்களாக ஒரே இலங்கைக்குள் வாழ வைக்க எனது வழிகாட்டலும் மதியுரையும் உதவுமென நம்புகிறேன். ஒருவரை ஒருவர் உளநிறைவோடு ஏற்றுக்கொள்ளும் உளப்பாங்கை மக்கள் முன்னிலையில் பெணுவதன் ஊடாகவே இந்நிலையை அடையமுடியுயும்.
உலக அரங்கில் அமைதியான நாடு என்றால் சுவிற்சலாந்து தான். உலகப் போர் காரணமாக ஜேர்மன், பிரெஞ்சு போன்ற சில நாடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் உருவாக்கிய நாடு இதுவென்று கூறலாம். பல்லின மக்கள் வாழும் அந்நாட்டில் அமைதி நிலவக் காரணம் எதற்கும் மக்களிடம் அவர்களின் கருத்துக் கணிப்பைப் பெற்று ஆட்சி செய்வதனாலே ஆகும். அதாவது அவ்வப் பகுதி வாழ் மக்களே அவ்வப் பகுதியை ஆளும் நிலையே அங்கு காணப்படுகிறது எனலாம். மேலதீகத் தகவலைப் பெறக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
பல்லின மக்கள் வாழும் இலங்கையிலும் கூட சுவிற்சலாந்து ஆட்சி நடைமுறை மிகவும் சிறந்தது என நடுநிலை பேணும் அறிஞர்கள் தெரிவித்துமுள்ளனர். அதனை நானும் வரவேற்று 'ஐக்கிய இலங்கையைப் பேணும் பணி' என்ற குறிக்கேளை எட்டப் பின்வரும் எனது வழிகாட்டலையும் மதியுரையையும் தெரிவிக்கின்றேன். இவை நான் முன்வைக்கும் தீர்வுகள் என்பதை விட; பிறர் வெளிப்படுத்திய தீர்வுகளின் தொகுப்பாகவும் எண்ணிக்கொள்ளலாம்.
1) குடும்பம், சூழல், சிற்றூர், பேரூர், ஊர்களின் தொகுதி, சில தொகுதிகள் சேர்ந்த பகுதி, மாவட்டம், மாகாணம் என நாடளாவ மூலைமுடுக்கெங்கும் உளவியல் நோக்கிலான தீர்வுகளை முன்வைத்து அவ்வப் பகுதியில் வாழும் மக்களின் சிக்கல்களைத் (பிரச்சனைகளைத்) திர்த்து ஒற்றுமைப்படுத்தல்.
2) சூழலில் குழு வேறுபாடு, ஊர்களில் திக்குத்திசை (வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு) வேறுபாடு என்றில்லாமல் இடம், இனம், மதம் என எவ்வேறுபாடுகளும் இன்றி எல்லோரது உடலிலும் ஓடும் குருதி (இரத்தம்) செந்நிறமெனவும் ஒரே நாட்டு (ஐக்கிய இலங்கை) மக்கள் எனவும் எல்லோருக்கும் இடையே சமனிலையைப் பேணுதல்.
3) மேற்காணும் இரு தீர்வுகளையும் நடைமுறைப்படுத்த மதங்கள் கூறும் வழிகாட்டல் போதுமே! எனவே, மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடாது மக்களின் துன்பங்களைப் போக்க உள ஆற்றுகை செய்வதோடு சூழலில் அமைதியும் ஒற்றுமையும் பேண வழிகாட்டுவதைத் தமது பணியாக ஏற்றுச் செயற்படவேண்டும்.
4) மேற்காணும் மூன்று தீர்வுகளையும் நடைமுறைப்படுத்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு பின்வரும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அ) உளநல மதியுரைஞர்களை ஊரின் நாலா பக்கத்திலும் ஊருக்கு நாலு ஆள்களை அமர்த்தி சூழல், ஊர், குடும்ப ஒற்றுமை மற்றும் அமைதியைப் பேண முயற்சிக்க வேண்டும்.
ஆ) இடப்பரப்பைக் குறிக்கும் பெயராலோ இனங்களின் பெயராலோ மதங்களின் பெயராலோ மொழிகளின் பெயராலோ தொழிற்பகுப்புப் பெயராலோ அரசியல் அடையாளங்களைக் (எடுத்துக்காட்டாக: கட்சி, குழு, ஆள்) காண்பிக்க முடியாதவாறும் மதத் தலைவர்கள் அரசியலில் ஈடுபட முடியாதவாறும் கட்டுப்படுத்த வேண்டும்.
இ) தொடக்கக் கல்வி, உயர் கல்வி, வேலைவாய்ப்பு, அரச உதவி, மறுசீரமைப்பு, பொருண்மிய மேம்படுத்தல், மருத்துவப் பணி என எல்லாவற்றிலும் இடம், இனம், மதம், மொழி என வேறுபாடு பார்க்காமல் சமநிலை பேண உதவ வேண்டும்.
ஈ) அ, ஆ, இ பகுதிகளை இடையூறின்றி நிறைவேற்ற; இலங்கை ஒரு பல்லின, பன்மொழி (தமிழ், சிங்களம்), பல மத நாடென்றும் அவை சமநிலையில் பேணப்பட வேண்டுமெனவும் அரசு வரையறை செய்ய வேண்டும்.
மேற்காணும் வழிகாட்டலும் மதியுரையும் செயல்வடிவம் பெற்றால் இலங்கை வாழ் மக்கள் எல்லோரும் ஐக்கிய இலங்கையில் அமைதியாகவும் மகிழ்வோடும் வாழலாம். ஆனால், தன்நிறைவான இலங்கையை உருவாக்க மேலும் பல முயற்சிகள் எடுக்க வேண்டும்.
அதாவது, ஒரு நாடு தன்நிறைவு அடையவோ போர்ச் சூழலற்ற அமைதியான நாட்டைப் பேணவோ உச்சப் பொருண்மிய வருவாய் நிறைந்த நாடாக மிளிரவோ; அந்நாடு பேணுகின்ற ஒழுக்கமுள்ள, ஒற்றுமையான மனிதவள மேம்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. மனிதவள மேம்பாடென்பது துறைசார் அறிஞர்களைத் தேர்வு செய்து; அவ்வவ் துறையில் அவர்கள் தகுதிக்கேற்ப: உரிய பதவியில் அமர்த்தி; அவர்களது வளத்தை நாட்டின் வருவாயை உயர்த்தப் பயன்படுத்துவதும் பேணுவதுமே!
'ஐக்கிய இலங்கையைப் பேணும் பணி' என்பது எனது வழிகாட்டலையும் மதியுரையையும் முன்வைப்பதல்ல; நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கநெறியே! நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் உளவியல் நோக்கில் சந்திக்கும் சிக்கல்களைத் (பிரச்சனைகளைத்) திர்த்து ஒற்றுமையாகவும் அமைதியாகவும் ஐக்கிய இலங்கைக்குள் மகிழ்வாக வாழ முயற்சி எடுப்பதும்; அதற்குத் தமது பங்களிப்பைச் செய்வதும் ஐக்கிய இலங்கையைப் பேணும் பணியாகும்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!