Translate Tamil to any languages.

வியாழன், 28 ஏப்ரல், 2016

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள்

எல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு இழுத்துக்கொண்டு வந்தே பா (கவிதை) புனையும் வழக்கம் உண்டு. எப்படியோ, பா (கவிதை) புனைய இலக்கணம் தேவைப்படுகிறது. அப்படியொரு நிலையில 'சும்மா' தளத்தில "புதுக்கவிதை இயல்புகள் (அசைன்மெண்டை கவிதையா எழுதி இருக்கேன்.)" என்ற பதிவைப் படித்துப் பாருங்கள்; நண்பர் அழகாக ஆய்வு செய்திருக்கிறார். பா (கவிதை) புனைய எண்ணம் இருந்தால் போதாது, நண்பர் கூறும் வண்ணமாக இருந்தால் நன்றென்பேன்.
இணைப்பு:-

வாழ்க்கை என்பது சறுக்கி விழுத்தும் சேற்றின் மேல் நடப்பது போலத் தான் இருக்கிறது. எனவே, எங்கள் வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டும். நோய் வந்தால் மருத்துவரை நாட வேண்டும்; தன் (சுய) மருத்துவம் பார்க்கக் கூடாது. சரி, மருத்துவரை நாடினால் (போலி மருத்துவரை அல்ல) மருந்து எழுதிய தாளைப் பெற்று, அரச மருந்துச் சாலைகளில் அல்லது அரச ஒப்புதல் பெற்ற நிலையங்களில் மருந்துகளைப் பெற வேண்டும். இப்படிப் பயணிக்கையில் 340 மருந்துகளுக்குத் தடை என்றால் எப்படி இருக்கும்? அது பற்றி எங்கள் வலைப்பூ (Blog) தள நண்பர் அலசுகிறார். அதைக் கொஞ்சம் தலைக்குள் போட்டால், நீடூழி வாழ முயலலாம்.
இணைப்பு:-

பள்ளிக்கூடக் காலத்தில பத்துத் தாளைப் பொறுக்கி, பத்தாள்களின் பதிவுகளைத் திரட்டி, கையெழுத்துச் சஞ்சிகையாக்கி, எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் காட்டி, அவர்களின் கருத்துகளைப் பெற்று மகிழ்ந்த காலம் நினைவில் உருளுகிறதா? அப்படிக் கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றை வெளிக்கொணர எப்படித் துன்பப்பட்டோமோ; அதைவிட அச்சடித்த சஞ்சிகை வெளிக்கொணர அதிகப்படியான துன்பங்களைச் சந்திக்க வேண்டி வருமே! அப்படி ஓர் அச்சடித்த சஞ்சிகை வெளியாகி, இடையில் நின்று போய், மீளத் தலைகாட்டும் வரையான துன்பங்களைக் கூட்டாஞ்சோறு தளத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உள்ளம் திறந்து சொல்கிறார். அதனை மறக்காமல் படித்துப் பாருங்கள்.
இணைப்பு:-

"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்!" என்பதை ஊடகங்கள் பின்பற்றி உண்மைச் செய்திகளைத் தருகின்றதா என்றால் முற்றிலும் பொய்! நம்பத் தகுந்த இடங்களில் இருந்து பெற்ற செய்தி என்பார்கள். களத்தில் கண்ணுற்ற தகவல் என்பார்கள். உரிமம் உடையவர் தெரிவித்த தகவல் என்பார்கள். தற்போது இணையத்தில் பொறுக்கியது என்பார்கள். எப்படியோ முந்திக்கொண்டு செய்திகளை முதலில் தரும் ஊடகங்கள் சில, பிந்திக் கிடைத்த தகவலின் படி என்றாவது தங்கள் தவறுகளைத் திருத்தினாலும் கூட, உறுதிப்படுத்தப்படாத செய்திகளையே பகிருகின்றன. சில ஊடகங்கள் 'இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை' என்றாவது சொல்லும். ஓர் ஊடகம் பொய் பரப்பப் போட்டித் தன்மை துணைக்கு வரலாம். Thillaiakathu Chronicles தள நண்பர், இப்படி ஒரு சிக்கலை அழகாக முன்வைக்கின்றார். அதனை மறக்காமல் படித்துப் பாருங்கள்.
இணைப்பு:-

ஊடகங்கள் தான் தமிழைப் பேண முன்வர வேண்டும். ஆனால், ஊடகங்கள் தான் தமிழைக் கொல்லும் பணியைச் செய்கின்றன. இதனை அலச ஒரு கோடி பக்கங்கள் தேவை. ஆயினும், தமிழ் இலக்கணத்தைக் கணக்கில் எடுக்காமல் செய்தியைப் போடு என்கிற பதிப்பாசிரியர்கள் இருக்கும் வரை செய்தியாளர்கள் எதையும் எழுதலாம். "வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்" எது என்பதைத் தெரியாத பதிப்பாசிரியர்கள் இப்படிச் சொல்லி இருக்கக்கூடும்.இப்படியான ஊடகங்கள் எப்படித் தமிழை வாழவைக்கப் போகின்றன. இதுபற்றி ஊமைக்கனவுகள் தளத்தில் ஊடகவியலாளர் கேள்விக்குத் தமிழாசிரியர் பதிலாக அமைந்த பதிவைப் படித்துப் பாருங்கள்.
இணைப்பு:-


முகநூல் பக்கம் ஓட்டம் பிடிக்கும் பதிவர்களைப் போலல்லாது, தமக்கென வலைப்பூ நடாத்தித் தனி அடையாளத்தைப் பேணும் அறிஞர்களின் பதிவுகளுக்கும் தனி அடையாளம் இருக்கிறது. இவை போல மேலும் பல அறிஞர்களின் பதிவுகளை இனிவரும் காலங்களில் தர இருக்கின்றேன்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

நாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்

யாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்கும் பணியைத் தொடர https://seebooks4u.blogspot.com/ தளத்தை ஆக்கினேன். தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணியில் பயனுள்ள மின்நூல்களை வெளியிடுவதன் மூலமே தமிழ் பேசும் உலகெங்கும் வரவேற்பைப் பெறலாம். அந்த வகையில் நாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகளை மூன்று வகைப்படுத்தி உள்ளேன்.

முதலாம் பகுதி
உலகெங்கும் நற்றமிழை பேணவும் தமிழர் அடையாளங்களை நிறுவவும் நல்லறிவைப் பகிரவும் எமது மின்நூல்கள் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் முதலாம் பகுதி மின்நூல்களை வெளியிட எண்ணினேன். அவற்றில் சில தலைப்புகளை உங்களுடன் பகிருகிறேன்.

1. உலகில் தமிழ் மொழியே முதலில் தோன்றியது
தமிழ் மொழியே உலகில் முதலில் தோன்றியது என்பதை வெளிப்படுத்தும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம். குமரிக்கண்டம் பற்றிய வரலாறு மட்டுமல்ல பிற சான்றுகளும் தமிழ் மொழியே உலகில் முதலில் தோன்றியது என்பதை உறுதிப்படுத்த உதவலாம். உங்கள் ஆய்வுக்குட்பட்ட தகவலைத் தொகுத்துச் சிறந்த பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.

2. செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி
தமிழ் மொழி ஒரு செம்மொழி எனச் சான்று பகிரும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம். எந்தவொரு மொழியும் செம்மொழியாக இருக்கச் சிறப்புத் தகுதி வேண்டும். அவற்றை விளக்குவதோடு மற்றைய மொழிகளை விடத் தமிழ் மொழியின் சிறப்பைப் பகிர உதவும் பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.

3. உலகெங்கும் தமிழ் புழக்கத்தில் இருந்தமைக்கான சான்றுகள்
தமிழ் பயன்பாட்டில் இருந்த நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகளைப் பகிரும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம்.
இரஷ்யா அரச மாளிகையில் தமிழ் பொறிக்கப்பட்டுள்ளதாம். சில நாடுகளின் பணத்தாள்களில் தமிழ் உண்டு. மொறிசியஸ் தமிழர் நாடு; அங்குள்ளவர்கள் தமிழ் மொழியை மறந்தமையால் அதன் அடையாளத்தை இழந்துள்ளது. இவ்வாறான தகவலைத் திரட்டித் தொகுத்துச் சிறந்த பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.

4. தமிழர் பண்பாடுகள் மற்றும் விழாக்கள் (பண்டிகைகள்) படிப்பிப்பது என்ன?
தமிழர் பண்பாடுகள் மற்றும் விழாக்கள் (பண்டிகைகள்) ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்பாட்டோடு தான் பிணைந்துள்ளது. ஒரு பாடத்தையோ ஒரு வழிகாட்டலையோ அவை சுட்டி நிற்கத் தவறவில்லை. இவற்றைத் தொடர்புபடுத்திப் பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.

5. பிறமொழிச் சொல்களை நீக்கி நற்றமிழ் பேணப் படிப்போம்.
சொல் வளம் பெருகின் மொழி வளம் சிறக்கும். பிறமொழிச் சொல்களை நீக்கித் தமிழ்மொழிச் சொல்களைப் பேணினால் நற்றமிழ் பேணலாம். அதற்கு உதவும் பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.
இரண்டாம் பகுதி
கணினி வழி, இணைய வழி உலகெங்கும் நற்றமிழை பேண மற்றும் வலைப்பதிவர்கள்/ படைப்பாளிகள் பயிற்சி பெற எமது மின்நூல்கள் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இரண்டாம் பகுதி மின்நூல்களை வெளியிட எண்ணினேன். அவற்றில் சில தலைப்புகளை உங்களுடன் பகிருகிறேன்.

1. கணினி மென்பொருள் ஊடாகத் தமிழைப் பரப்பிப் பேணுவதெப்படி?
கணினி மொழி பற்றிய அறிவோடு தமிழைப் பரப்பிப் பேணுவதெப்படி என்பதை வெளிப்படுத்தும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, திருக்குறள் போன்ற இலக்கியங்களை மட்டுமல்ல தமிழ் இலக்கணத்தையும் கூட மென்பொருள் ஆக்கலாம். அவற்றை எந்தக் கணினி மொழியில் எப்படி ஆக்கலாம் என்பதை நீங்களும் வழிகாட்டலாம். இது பற்றிய சிறந்த பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.

2. இணைய வழி ஊடாகத் தமிழைப் பரப்பிப் பேணுவதெப்படி?
இணைய மொழி, வலைப்பக்கங்கள் பற்றிய அறிவோடு தமிழைப் பரப்பிப் பேணுவதெப்படி என்பதை வெளிப்படுத்தும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம். இணைய மொழியும் வலைப்பக்கங்களும், வலைப்பூக்கள், கருத்துக்களங்கள் எதனூடாகவும் தமிழைப் பரப்பிப் பேண நீங்களும் வழிகாட்டலாம். இது பற்றிய சிறந்த பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.

3. இசைப் (திரைப்) பாடல்கள் எழுதுவது எப்படி?
எடுப்பு (பல்லவி), தொடுப்பு (அனுபல்லவி), கண்ணி (சரணம்), இசை வகை (ராகம்), இசைத் தன்மை (தாளம்), இசைக் கூட்டு (மெட்டு) ஆகியவற்றோடு இசைப் (திரைப்) பாடல் எழுதப் பயிற்றுவிக்கும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம். உங்கள் பதிவைப் படித்ததும் எவரும் எளிதில் இசைப் (திரைப்) பாடல் புனைய முடிந்தால், அதுவே உங்கள் பதிவின் வெற்றி. அதற்கு உதவும் பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.

மூன்றாம் பகுதி
தமிழர் நோயின்றி நெடுநாள் வாழ, தன்னம்பிக்கையோடு ஒற்றுமையாக வாழ எமது மின்நூல்கள் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் மூன்றாம் பகுதி மின்நூல்களை வெளியிட எண்ணினேன். அவற்றில் சில தலைப்புகளை உங்களுடன் பகிருகிறேன்.

1. நெடுநாள் வாழ உதவும் வழிகாட்டலும் மதியுரையும்
தமிழர் நோயின்றி நெடுநாள் வாழ உதவும் வழிகாட்டலையும் மதியுரையையும் வெளிப்படுத்தும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம். தன் (சுய) மருத்துவம் வேண்டாம்; தன்னம்பிக்கையோடு தன் (சுய) முன்னேற்றமே வேண்டும் என நீங்களும் வழிகாட்டலாம். இது பற்றிய சிறந்த பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.

2. ஒற்றுமையும் தன்னம்பிக்கையும் இரு கண்கள்
தமிழர் ஒற்றுமையோடும் தன்னம்பிக்கையோடும் தலைநிமிர்ந்து வாழ உதவும் தன் (சுய) முன்னேற்றப் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம். பிறர் ஒத்துழைப்புத் தேவை; பிறர் ஒத்துழைப்பில் தங்கியிருப்பது தேவையற்றது எனவும் சொந்தக் காலில் நின்றுகொண்டு முன்னேற நீங்களும் வழிகாட்டலாம். அதற்கு உதவும் பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.

முதற் கட்டமாகப் பத்து மின்நூல்களுக்கான தலைப்புகளை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்; மிகுதி விரைவில் இணைப்போம். இவ்வாறு பலநூறு மின்நூல்களை வெளியிட்டு, இணையக் களஞ்சியத்தில் பேணி, உலகெங்கும் பகிருவதே எமது பணி. இப்பணிக்கு உலகளாவிய தமிழ் அறிஞர்களின் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றேன்.

இப்பதிவைப் படித்த பின், தங்கள் சிறந்த பதிவுகளை இணைத்து உதவுங்கள். எமது https://seebooks4u.blogspot.com/ தளத்தில் வெளிவரும் அறிவிப்புகளைக் கவனித்து எமது மின்நூல் வெளியீடுகளில் நீங்களும் பங்கெடுக்கலாம். உங்களுக்குத் தெரிந்த அறிஞர்களிடம் இத்தகவலைத் தெரிவித்து, அவர்களது சிறந்த பதிவுகளையும் எமது மின்நூல்களில் இடம்பெறச் செய்ய உதவுங்கள்.

திங்கள், 18 ஏப்ரல், 2016

உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!

இனிய வலைவழி உறவுகளே!
1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய எனது கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் சில பத்திரிகைகளில் பல பதிவுகள் வெளியாகின. இது என் தொடக்க காலம்.

2009 கார்த்திகையில் தான் வலை வழியே என் பதிவுகளைப் பகிர முன்வந்தேன். 2010 இல் தமிழ்நண்பர்கள்.கொம் தான் எனக்கு முதலில் கைகொடுத்தது. பின்னர் வலைப்பூக்களை நடாத்த இறங்கினேன். பின் மின்நூல்களைக் களஞ்சியப்படுத்திப் பகிர்ந்தேன்.

ஆனால், இன்று அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்கி வெளியிட்டு; இணையக் களஞ்சியத்தில் திரட்டி உலகெங்கும் பகிர விரும்புகிறேன். எனது யாழ்பாவாணன் வெளியீட்டகத்தின் துணைப் பணியாக தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி எனப் புதிய தளத்தில் இதனைச் செயல்படுத்தவுள்ளேன்.

எனது புதிய தளத்தைக் கீழ்வரும் முகவரியில் (URL) தட்டச்சுச் செய்து உலாவியில் (Browser) பார்வையிடலாம்.


மேலதிகத் தகவலுக்கு எனது புதிய தளத்தில் வெளிவரும் புதிய பதிவுகளைப் படிக்கவும். எனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணிக்கு ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகின்றேன். இச்செய்தியை உங்கள் நட்புகளுடன் பகிர்ந்து உதவுங்கள்.

புதன், 13 ஏப்ரல், 2016

சின்னஞ் சிறு கவிதைகள்


கரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா?

நம்மாளுங்க
கரப்பான் பூச்சிக்கு
செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க…
விலங்கியல் பாடம் படிப்பிக்கின்ற
ஆசிரியரிடமும் - பிள்ளைகள்
இப்படித்தான் கேட்டாங்க…
கரப்பான் பூச்சிக்கு 
செந்நீர் (குருதி)  இருக்கு என்றார்
விலங்கியல் ஆசிரியரும்…
இல்லை! இல்லை! என
பிள்ளைகள் கூப்பாடு போட...
கரப்பானின் செந்நீருக்கு (குருதிக்கு) 
நிறமில்லை காணும் என்று
ஆசிரியரும் விளக்கமளிக்கவே
வகுப்பில் பிள்ளைகளும் அடங்கினரே!

தேவை

மரம் வளர நீர் தேவை
நீரைத் தேட வேரை நீட்டுவது
மரத்தின் தேவை!
பறக்கும் பறவைக்கு நீர் தேவை
நீரைத் தேட நீர்த்தேக்கத்தை நாடுவது
பறவைகளின் தேவை!
விலங்குகளின் பசிக்கு உணவு தேவை
உணவைத் தேடி வேட்டைக்குப் போவது
விலங்குகளின் தேவை!
தன் (சுய) நலம் விரும்புவது நம்மாளுங்க தேவை
பட்டென, வெட்டென உறவுகளை முறித்த பின்
தேவைக்கு ஆள் தேடுவது
நம்மாளுங்க வேலையாகிப் போச்சு!

ஓலைக் குடிசையில் ஒருவள் அழுகிறான்!

அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்
கடைக்குட்டியாகக் கன்னி ஒருவள்
அண்ணன்மார் ஆளுக்கு ஒருவளோடு
ஓட்டம் பிடித்தமையால் வாடுகிறாள்
ஓலைக் குடிசையில் அழுதவாறு ஒருவள்!
ஆப்பனும் ஆத்தாளும் தேடினாலும் கூட
கொடுப்பனவு (சீதனம்) வழங்க வழியின்றி
ஏழைக் கன்னியின் கழுத்தில் ஏற
தங்கத் தாலிக் கொடிக்கும் அச்சமோ? 
கன்னித் துணை நாடும் ஆணுக்கோ
கொடுப்பனவு (சீதனம்) தான் நோக்கமோ
என்னையும் கன்னியாகவே வாழத்தான் - அந்த
ஆண்டவன் படைத்தான் என்றால்
சாகும் வரை வாழ்வதே என் பணி என
ஓலைக்குடிசையில் ஒருவள் அழுகிறாள்.

உன்னை நீ அறி!

சோக்கிரட்டீஸ் என்ற
கோட்பாட்டு (தத்துவ) அறிஞர்
“உன்னை நீ அறி” என்று
உறைப்பாகச் சொல்லி இருந்தார்.
விறைத்த மண்டைகள் சிலர்
என்னை விரட்டி விரட்டி
“உன்னை நீ அறி” என்று
அடிக்கடி நினைவூட்டினர்!
நான்
சொல்லும் முன்னும்
செயலுக்கு முன்னும்
வெளியீட்டுக்கு முன்னும்
பின்விளைவு என்னவாயிருக்கும் என்று
என்னை நானே கேட்பதுண்டு!
இதைத் தானே
“உன்னை நீ அறி” என்று
சோக்கிரட்டீஸ் சொல்லி வைச்சாரே!இனிய வலையுலக உறவுகளே! எனது அடுத்த முயற்சியாகச் சித்திரைப் புத்தாண்டின் பின் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியைத் தொடரவுள்ளேன். அதற்கெனத் தனித் தளம் பேணவுள்ளேன். விரைவில் அத்தகவலை இத்தளத்தில் வெளியிடுவேன்.

சனி, 9 ஏப்ரல், 2016

அறிஞர் கணேசனின் பயன்தரும் நூல்கள்

ஒரு வெளியீட்டாளரின் எண்ணத்தில் வாசகர் உளநிறைவைத் தரும் நூல்களையே வெளியிட்டுதவ முன்வருவார். நூல் ஆசிரியர்களோ தங்கள் எண்ணங்களை வெளியிட முன்நிற்பர். வாசகரோ தங்கள் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கின்ற நூல்களையே வாங்க முயற்சிப்பர். இந்த மும்முனைப் போருக்குள்ளே ஒரளவேனும் உடன்பாடு எட்டப்பட்டாலே ஒரு நூல் அச்சிட்டு வெளிவரமுடிகிறது. வெளியீடு இப்படி என்றால், ஒரு நூலை ஆக்கி முடிக்க எப்படி எல்லாம் நூல் ஆசிரியர் முகம் கொடுத்திருப்பார்.

ஒரு நூலை ஆக்கி முடிக்க இப்படி என்றால், பல நூலை ஆக்கி வெளியிட்ட அறிஞர் எவ்வளவு முகம் கொடுத்திருப்பார். அவரது திறமை, தன்னம்பிக்கை இரண்டுமே அந்நூல்களுக்கான முதலீடு என்பேன். அதிலும் சிறப்பு என்னவென்றால் படைத்துறை (இராணுவ) அறிஞர் எழுதிய நூல்களை வெளியிட்டுதவ முன்வந்த வெளியீட்டாளர்களை நான் பாராட்டியே ஆகவேண்டும். திறமை, தன்னம்பிக்கை இரண்டையும் முதலீடாகக் கொண்டு தனது எண்ணங்களை வெளியிட்ட படைத்துறை (இராணுவ) அறிஞர் கர்ணல் கணேசன் ஐயா அவர்களின் நூல்கள் பற்றிய தகவலைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அவரது நூல்களைத் தாங்களும் வேண்டிப் படித்துப் பகிருவீர்கள் என நம்புகின்றேன்.

பெண்ணொருத்தி குழந்தை பெற்றெடுக்கும் வரையான துன்பங்களை விட, நூல் ஆசிரியர் நூலொன்றை ஆக்கி முடித்து,  வெளியிட்டு, வாசகர் கைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் வரையான துன்பங்கள் அதிகம் என்பர். ஆயினும் குழந்தையைப் பெற்றெடுப்பவளே அதிக துன்பங்களை அடைகின்றாள். எப்படி இருப்பினும் அச்சு நூல் வெளியீடு என்பது பல துன்பங்களைக் கண்டே இடம்பெறுகிறது. அப்படிப் பல தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து பல அச்சு நூல்களை வெளியீட்ட படைத்துறை (இராணுவ) அறிஞர் கர்ணல் கணேசன் ஐயா அவர்களின் நூல்கள் பற்றிக் கீழே விரித்துப் படியுங்கள்.இனிய வலையுலக உறவுகளே! எனது அடுத்த முயற்சியாகச் சித்திரைப் புத்தாண்டின் பின் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியைத் தொடரவுள்ளேன். அதற்கெனத் தனித் தளம் பேணவுள்ளேன். விரைவில் அத்தகவலை இத்தளத்தில் வெளியிடுவேன்.


எல்லோருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

உழவர் கதை உரைப்போம்!


வெட்டை வெளி வயலில்
பட்ட மரங்களும் இருக்கும்
கெட்ட பயிர்களும் இருக்கும்
முட்ட முள்களும் இருக்கும்
வெட்டிப் பண்படுத்துவார் உழவர்!

சுட்டெரிக்கும் பகலவனை நம்பி
கொட்டும்மழைக்கு வானத்தை நம்பி
நட்டபயிர்வாழக் காற்றை நம்பி
பட்டிடாமல் மண்ணை நம்பி
இட்டிடுவார் பயிர்களை உழவர்!

எட்டாத் தொலைவுப் பகலவனும்
கிட்டாத மழைக்கு வானமும்
கெட்டிடாப் பயிருக்குக் காற்றும்
பட்டிடாத நிலைக்கு மண்ணும் என
இட்டபயிரோடு போராடுவார் உழவர்!

பட்டப் பகலிலும் சரி
நட்டநடு இரவிலும் சரி
கெட்டிடா வாழ்விலும் சரி
ஒட்டாத வயிறு நிறைய
கிட்டவரும் உழவரின் உணவே!

முட்ட மூக்குமுட்ட எப்போதும்
விட்டு வைக்காமல் உண்போருக்கும்
பட்டகடன் எல்லாம் வெட்டி
கிட்டநம் நாடு உயரவே
சட்டெனவுதவும் உழவரின் அறுவடையே!