Translate Tamil to any languages.

சனி, 20 ஜூன், 2015

உங்களுக்கு மூளை வேலை செய்கிறதா?


ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யும்?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மனிதனுக்கு
         வயிறு கடிக்கும் போது தான்...

ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யாது?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மூக்குமுட்ட உண்ட மனிதன்
         நீட்டி நிமிர்ந்து படுக்கும் போது தான்...
         இல்லையென்றால் பாரும்
         மூக்குமுட்டக் (மது) குடித்த மனிதன்
         தன்நிலை இழந்து
         தெருவிலே விழுந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         வாலை ஒருவளுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         காளை ஒருவனுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...

செவ்வாய், 16 ஜூன், 2015

அறிவுத் தேடலுக்கு / அறிவு பசிக்கு உதவும் தளம்

வாசிப்பவரை வாசகர் என்கிறோம். வாசகர் ஏன் வாசிக்க வருகிறார்கள்? அறிவு பசி போக்கவா? அறிவுத் தேடலுக்கு விருந்து கிடைக்குமென்றா? வாசிப்பதனால் உள/மன நிறைவு கிட்டுவதாலும் அல்லது வாசிப்பதனால் களிப்ப(மகிழ்ச்சிய)டைவதனாலும் வாசகர் வாசிப்பை விரும்புகின்றனர். வாசகர் உள்ளம் (மனம்) அறிந்து எழுதிய படைப்பாளிகளே வெற்றி பெற்றவராயினர்.

நாம் ஏன் எழுதுகிறோம்? எழுதுவதால் நாமும் களிப்ப(மகிழ்ச்சிய)டைகின்றோம். ஆயினும், எமது எழுத்து அதிக வாசகர் கண்ணில் பட்டு சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெறும் வேளை தான் உள்ளம் (மனம்) நிறைவடைகின்றது. சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெற வாசகர் களிப்ப(மகிழ்ச்சிய)டைய வேண்டுமென்பதை மறந்துவிடலாகாது. அதாவது, வாசகர் எதிர்பார்ப்பு எமது எழுத்தில் இருக்க வேண்டுமே!

வாசிப்பவரைப் படிக்காதவர் என எண்ணி எழுதுகோல் ஏந்திய சிலர் கண்டபடி கிறுக்கித் தள்ளி வாசகரிடம் சொல்லடி வேண்டிக்கட்டிய நிகழ்வுகளுக்குப் பல ஊடகங்கள் சாட்சி. எனவே, ஒவ்வொரு படைப்பாளியும் எழுதும் போது எம்மை விட வாசகர் அதிகம் படித்திருப்பார் என எண்ணிக்கொள்ள வேண்டும்.

வாசகருக்கும் படைப்பாளிக்கும் இடையே இருக்கவேண்டிய உறவு நிலையைக் கடுகளவேனும் எடுத்துச் சொல்ல இங்கு முயற்சி எடுத்திருக்கிறேன். இனி வாசகருக்கும் படைப்பாளிக்கும் உதவும் வகையில் "தமிழ் மொழி மூல இணைய வெளியீடுகள்" என்ற தலைப்பில் "தமிழ் மொழி மூல வலைப்பூக்கள், வலைத்தளங்கள்"  என்ற துணைத் தலைப்பில் பேணப்படும் தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.

இத்தளம் வாசகரின் அறிவுத் தேடலுக்கும் / அறிவு பசிக்கும் உதவும் என நம்புகின்றேன். அதேவேளை சிறந்த படைப்பாளிகள் தங்கள் தளங்களையும் இணைத்துக்கொள்ளலாம். இதில் எனது பணி என்னவென்றால், எனது பத்துப் பன்னிரண்டு தளங்களூடாக இத்தளத்தை அறிமுகம் செய்து வைப்பதாகும். எல்லோருக்கும் பயன்தரும் http://tamilsites.doomby.com/ என்ற தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.

சனி, 13 ஜூன், 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 03

சென்ற பதிவில் (http://eluththugal.blogspot.com/2015/05/2015-02.html)
"இயங்குநிலைப் (Animation) படத்தை வைத்து மதுரையில் நான் கண்ட மலையை அடையாளப்படுத்தி விட்டீர்களா? அந்த மலை பற்றிய தங்களுக்குத் தெரிந்த தகவலைப் பின்னூட்டமாகத் தாருங்களேன்." என்றெழுதியதற்கு ஒத்தக்கடைக்கு அப்பால் "ஒற்றைக் கல்லாலான ஆ(யா)னை மலைதான் அது" என்றும் ஆனை மலை பற்றி அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார் (http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post.html) என்றும் அறிஞர்கள் பகிர்ந்தனர்.

நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் செல்லப்பிள்ளைகளைப் பாருங்கள்...

விடிந்தால் தைப்பூசப் பெருநாள்! விடியுமுன்னரே (நடு இரவில்) நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் வீட்டிற்குச் சென்றாச்சு. அங்கே இறங்கியதும் சோதிப் பெருவிழா காலை ஆறரை மணிக்கு முதாலாவது சோதிப் பேரொளி பார்க்க வேண்டும் குளித்து முழுகி வேட்டியைக் கட்டி வள்ளலார் கோவிலில் காலை வைத்தாச்சு. அங்கே இலட்சக் கணக்கான வள்ளலார் விரும்பிகள் (பக்தர்கள்) வந்திருந்தனர். 

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான திருச்சபைக்கு நுழையும் வழியைப் பாருங்கள்.

தொடரும் சோதி வழிபாட்டில் சோதிப் பேரொளி தெரிகிறது என்று எல்லோரும் வள்ளலார் கூறிய அருள் மொழியான (மந்திரமான) "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி" எனச்சொல்லி சோதிப் பேரொளியைப் பார்க்கத் தலையை உயர்த்தினர். என்னை (நானோ கட்டையன்) நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) தூக்கிச் சோதிப் பேரொளியைக் காட்டினார். நானும் அவ்வாறே அவரைத் தூக்கிக் காட்டினேன்.

அதிகாலைச் சோதிப் பேரொளி பார்க்கக் கிடைத்தது பெரும்பேறு என்று வழிபாட்டை முடித்துக் கொண்டு வீதியை வலம் வரச் சென்றோம். ஞானசபை ஊடாக அன்னதான அறிவிப்பு; வீதி வழியே  "சாப்பிடுங்கோ... சாப்பிடுங்கோ..." என்று பொங்கல், சாதம் எனக் கொடுத்தார்கள். ஆங்காங்கே ஆட்டுக்கால் சூப்பு என்று தந்தார்கள். அதாவது ஆட்டுக்கால் போன்ற வேர், மற்றும் சித்த மருத்துவ மூலிகை கலந்த குடிநீர் தான், அது! அதனைப் பருகினால் உடலிலுள்ள பல நோய்கள் நீங்கும் என்று அங்கு குழுமிய அறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு 2015 மாசி தமிழகம் வந்து வடலூர் வள்ளலார் நினைவும் தைப்பூசப் பெருநாள் பற்றியும் எனது எண்ணங்களைப் பகிர்ந்தாலும் எனக்கு நிறைவு இல்லை. ஆகையால், கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மேலதீகத் தகவலைப் பெறலாம்.

வள்ளலார் சித்தி பெற்ற இடமான வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பத்தில், திரு அறை தரிசனம் இடம்பெறுகிறது. அங்கும் சென்றிருந்தேன். திரு அறை தரிசனம் கடந்து ஓர் நீரோடை இருந்தது. வள்ளலார் அவர்கள் தனது பெருவிரலால் கீறியதால் உருவானதாகச் சொல்லப்படுகிறது. அங்கெடுத்த படங்களே கீழே தரப்படுகிறது.


பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)




வெள்ளி, 12 ஜூன், 2015

உங்களுக்கும் துளிப்பா (ஹைக்கூ) எழுத வருமே!


ஓலைக் குடிலை நாடி
ஓட்டம் பிடிப்போரைப் பாரென்று
நாற்சந்தியில்
நாலாள் பேசிக்கொள்ள
காதுக்கெட்டிய பக்கமாய்
கண்ணாலே மேய்ந்தேன்...

உண்ணான
கண்ணாளன் வீட்டை
ஆளைஆள் விலத்திக்கொண்டு
"என்னண்ணே!
சுகமாய் இருக்கிறியளே?" என்று
கேள்வி மேல் கேள்வி கேட்டு
சுகமறியும் ஆள்களைக் கண்டேன்...

கணக்கர் சித்திரபுத்திரன் கடையில
காசாளராகப் பணியாற்றும்
ஏழைக் கண்ணாளனுக்கு
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தாளில்
கோடி உரூபா பரிசு
விழுந்திருப்பதைக் கேள்விப்பட்டதும்
சுகமறியக் குழுமிய ஆள்களாம்...

காசில்லாதவர் என்று
எல்லோருமே கழித்து விட்டமையால்
ஏழைக் கண்ணாளனுக்கு
எப்பனும் எவரையும் தெரியாது தான்...
இப்ப என்னவென்றால்
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தந்த
கோடி உரூபாவைக் கேள்வியுற்று
உறவு பேண வந்திட்டங்களாம்...

என்னமோ ஏதோவென்று
கண்ணாளனைக் கண்டறிய
"காசில்லையென்றதும் கழிச்சுவிட்டவங்க...
காசைக்கண்டதும் கைகுலுக்கலாமோ?
காசே தான் கடவுளடா!" என்றும்
"நேற்றோ என்னை ஒதுக்கி வைத்தவர்
இன்றோ என்னை அணைக்க வருகிறார்
கை நிறையக் காசு!" என்றும்
"நேற்றுவரை வீட்டுக்கு நாய் காவல்
இன்றிலிருந்து நம்மாளுகள் காவல்
கோடி உரூபா நல்வாய்ப்பு!" என்றும்
"நேற்றுவரை கடனிருக்கக் கனவிலே காசு
இன்றிலிருந்துக் கனவின்றித் தூக்கம் ஆச்சு
நல்வாய்ப்பாய் கோடி உரூபா!"  என்றும்
துளிப்பா (கைக்கூ) வாசித்தாரே!

"காதலி! காதலித்துத் தோற்றுப் போ!
பா/கவிதை புனைய வருமாம்" என்று
நானும் பல ஊடகங்களில் படித்தேன்...
பட்ட புண்ணையும் தொட்ட துயரையும்
உள்ளத்து மாற்றங்களையும்
உணர்வோடு வெளிக்கொணர்ந்தால்
கண்ணாளனைப் போலவே
துளிப்பா (கைக்கூ) எழுத வருமே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே!
மேலும், தகவலறிய
உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?
http://paapunaya.blogspot.com/2014/06/blog-post_20.html

புதன், 3 ஜூன், 2015

இலங்கையில் பௌத்தம் பரவுகிறது



பௌத்தத்தின் குறியீடு
அரச மர நிழலல்ல...
வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டு
பட்டறிவால் வெளிப்படுத்திய
சித்தார்த்தனின்(புத்தரின்) வழிகாட்டலே!
புத்தரின் வழிகாட்டலை நம்பியே
உலகத்தார் பௌத்தத்தை விரும்பினர்!
'உயிர்களிடத்தே அன்பு காட்டு'
'உயிர்களைக் கொல்லாதே'
'தவறு செய்தால் மன்னிப்பு வழங்கு'
என்றெல்லாம்
எத்தனையோ புத்தர் சொன்னாலும்
'தமிழரிடம் அன்பு காட்டாதே'
'தமிழரைக் கொல்லு'
'தமிழருக்கு மன்னிப்பு வழங்காதே'
என்றெல்லாம்
இலங்கைப் பௌத்த கோவில்களில்
பிக்குமார் சிங்களவருக்கு வழிகாட்ட
புத்தர் செந்நீர்க் கண்ணீர் வடிக்க
சிங்களவர் தமிழரை அழிக்க
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!
பிந்திக் கிடைத்த தகவலின் படி
கத்தோலிக்கக் கோவில்களை...
இஸ்லாமியக் கோவில்களை...
இந்துக் கோவில்களை...
இடித்துடைத்து
புத்தர் சிலைகளை விதைக்க
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!
இறுதியாகக் கிடைத்த செய்திகளின் படி
அரச மர நிழற் பார்த்து இருக்கும்
பிள்ளையாரைப் பிடுங்கி எறிந்து விட்டு
அரச மரம் இருக்கும் இடமெங்கும் 
புத்தரை நட்டு
பௌத்தத்தின் குறியீடு
அரச மரமெனச் சுட்டிக் காட்டி
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!

செவ்வாய், 2 ஜூன், 2015

ஊடகங்களில் தமிழைக் கையாளுவது எப்படி?

ஆங்கிலம் சேர்க்காத பதிவு என்றால்
வாசகர்/பதிவர் படிக்க மாட்டினம் என்ற
எண்ணம் சிலருக்கு இருக்கலாம்...
வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
ஆங்கிலம் சேர்க்காத தலைப்பு இருப்பின்
வாசகர்/கேட்போர் உள்ளத்தில் எடுபடாது என்ற
எண்ணம் பலருக்கு இருக்கலாம்...
வரிவிலக்கைப் பெறுவதற்காய்
தமிழில் தலைப்பை இட்டாலும் கூட
தமிழ்த் திரைப்பட ஊடகத்தின் உள்ளே
பலமொழி கலந்த குழையல் மொழியே
வாசகர்/பார்ப்போர் உள்வாங்கும் நிலை!
ஊடகங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்தாலும்
தமிழைக் கொல்லும் ஊடகங்கள் தான்
எங்கள் கண்களில் முன்னே நிற்பதை
நான் காண்கின்றேன் - அதனால் தான்
"தமிழ் மின்னூடகங்களும்
அச்சு ஊடகங்களும்: இன்றைய
நிலையும் அறைகூவல்களும்" என்ற
பதிவைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்! - அதனை
ஆக்கிய அறிஞர் ரெ.கார்த்திகேசு, Ph.D. அவர்கள்
முன்னுரை தொட்டு முடிவுரை வரை
ஆழ, அகல, உயரம் பார்த்து
அக்கு வேறு ஆணி வேறாக
நன்றாக அலசி இருப்பதைப் பாரும்! - அதற்கு
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கலாம்!
http://reka.anjal.net/?p=96