Translate Tamil to any languages.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்

முந்தியெல்லாம் யாழ்பாவாணன் எமது வலைப்பூக்களுக்கு அடிக்கடி வருவார். இப்பவெல்லாம் அத்தி புத்தாற் போல அருமையாக வந்து தலையைக் காட்டுகிறார் என்றெல்லாம் நீங்கள் நினைக்கக்கூடும், விரைவில் தங்கள் வலைப்பூக்களுக்கு அடிக்கடி வருவேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். மேலும், 2016 சித்திரைப் புத்தாண்டிலிருந்து வலைப்பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியினைத் தொடங்கவுள்ளேன். இனி வரும் காலங்களில் நமது உறவுகள் நெருக்கமடையும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாழ்பாவாணன் வெளியீட்டகத்தின் பணியே மின்பொத்தகங்களை வெளியிட்டு உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுவதாகும். இதுவரை எனது இரண்டு மின்பொத்தகங்களையும் நண்பர் 'தனிமரம்' வலைப்பூ அறிஞர் நேசனுக்காக ஒரு மின்பொத்தகத்தையும் வெளியிட்டுள்ளேன். அந்த வகையில் ஒரு மின்பொத்தகம் / மின்நூல் உருவாக்கி வெளியிட நான் மேற்கொண்ட முயற்சிகளைத் தங்களுடன் பகிரலாமென விரும்புகிறேன்.

மின்பொத்தகம் / மின்நூல் வெளியிடும் வேளை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். அந்த நோக்கம் வாசகரின் விருப்பங்களை நிறைவேற்றத் தவறுமாயின் மின்நூலோ அச்சடித்த நூலோ தோல்வியில் தான் முடியும். அதாவது, வாசகர் வாசிக்க விரும்பாத நூல்கள் எவர் கையில் தவழும்? அப்படியாயின் வாசகர் விரும்பும் நூல்கள் எப்படி இருக்கும்? வாசிப்பதால் வாசகர் மகிழ்ச்சி அடைய வேண்டும் அல்லது வாசகர் தேடல் (வாசகருக்குப் பயன்தரும் தகவல்) உள்வாங்கப்பட்டு இருக்க வேண்டும். இவ்விரண்டையும் விரும்பும் வாசகர்களுக்கு ஏற்ப மின்நூல் வெளியிட விரும்பும் எல்லோரும் தொடர்ந்து படியுங்கள்.

முதலில் மின்நூலுக்கான தலைப்பைத் தீர்மானிக்கவும். அதாவது, மின்நூலின் உள்ளடக்கத்திற்கான உயிராக அத்தலைப்பு அமையட்டும். அடுத்து மின்நூல் தலைப்பைச் சார்ந்த பதிவுகளைத் தொகுக்கவும். அடுத்துத் தாளின் அளவு, எழுத்தின் அளவு, நிறங்கள், அட்டைப் படங்கள் போன்ற நூலின் அமைப்பைத் தீர்மானிக்கவும். எல்லாம் ஒழுங்காக இருந்தால், கணினியில் தட்டச்சுச் செய்யலாம். அதற்குக் கீழ்வரும் வழிகளைக் கையாளுங்கள்.

அ) முற்பகுதித் தொகுப்பு
    1. முன் அட்டை
    2. உரிமம் (Creative Commons license)
    3. மின்நூல் பற்றிய தகவல்
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.

ஆ) உள்ளடக்கத் தொகுப்பு
    4. வெளியீட்டாளர் உரை, நூலாசிரியர் உரை, ஏனைய உரைகள், நூலின் உள்ளடக்கம் (Table of contents) ஆகியவற்றை உரோம எண்ணைப் பக்க எண்களாக இட்டுத் தொகுக்கவும்.
    5. மின்நூலில் உள்வாங்கப்பட்ட பதிவுகளைத் தொகுக்கவும். ஒவ்வொரு பதிவும் புதிய பக்கத்தில் தொடங்க வேண்டும். இடைவெளிகள் இருப்பின் இடைச்செருகலாக குட்டித் தகவலை நுழைக்கலாம். இவ்வாறு இந்து அராபிய எண்ணைப் பக்க எண்களாக இட்டுத் தொகுக்கவும்.
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.

இ) பிற்பகுதித் தொகுப்பு
    6. உங்கள் விருப்பப் பக்கம் (எடுத்துக்காட்டாக அடுத்த வெளியீடு பற்றிக் குறிப்பிடலாம்)
    7. பின் அட்டை
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.
   
இவ்வாறு தட்டச்சுச் செய்து PDF நுட்பக் கோப்பாகச் சேமித்து வைத்த பின், எல்லாத் தனித்தனி PDF கோப்புகளையும் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற ஒழுங்கில் ஒருங்கிணைத்து (Merge) ஒரே ஒரு தனி PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும். இந்தத் தனி PDF நுட்பக் கோப்பைத் தான் மின்பொத்தகம் / மின்நூல் என்கிறோம். இவ்வாறு மின்நூலாக்கத் தேவையான கணினி மென்பொருள்களைக் கீழே தருகின்றேன்.

!. Microsoft Word பாவிப்பவர்கள் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி Save as to pdf மென்பொருளைப் பதிவிறக்கிக் கணினியில் நிறுவினால் Microsoft Word இலேயே தட்டச்சுச் செய்த பின் PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கலாம்.

2. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி AbleWord மென்பொருளைப் பதிவிறக்கி கணினியில் நிறுவினால் AbleWord இலேயே தட்டச்சுச் செய்த பின் PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கலாம்.

3. எல்லாத் தனித்தனி PDF கோப்புகளையும் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற ஒழுங்கில் ஒருங்கிணைத்து (Merge) ஒரே ஒரு தனி PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கி விரும்பிய ஒரு மென்பொருளைப் பதிவிறக்கிக் கணினியில் நிறுவினால் போதும்.

4. PDF நுட்பக் கோப்பாகச் சேமித்த மின்நூலைப் பக்கம் பக்கமாக இணைய வழியில் புரட்டிப் படிக்க (பிளாஸ் வியூவரில்) கீழ்வரும் தளம் உதவுகிறது. தளத்தில் இலவசக் கணக்கொன்றைத் திறந்து முயன்று பாருங்கள். (மாதிரிக்கு எனது http://fliphtml5.com/homepage/insb பக்கத்தைப் பார்த்தால் புரியும்)
இத்தளத்தை எப்படிக் கையாள்வது பற்றி ஒளிஒலி (Video) பதிவினூடாகக் கற்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

5. தங்கள் மின்நூலை எவரும் எந்நேரத்திலும் பதிவிறக்க வசதியாக இணையச் சேமிப்பகத்தில் பேணலாம். அதற்குக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கி விரும்பிய ஒரு தளத்தில் சேமிக்கலாம்.

6. இனித் தங்கள் வலைப்பூவில் நீங்கள் தயாரித்த மின்நூலை அறிமுகம் செய்யலாம். தங்கள் மின்நூலை வலைப்பூவில் விரித்துப் பார்க்கக் கீழ்வரும் படிகளில் இறங்குக.
எடுத்துக்காட்டாகக் கூகிள் ட்ரைவில்:
1. தங்கள் மின்நூலைப் பதிவேற்றுக
2. Public on the Web எனச் share செய்க
3. பின் pdf கோப்பை preview செய்க
4. வலப்பக்க மேல் பட்டியில் Pop-out ஜச் சொடுக்குக.
5. பின் More actions menu ஜச் சொடுக்கி Embed item ஜச் சொடுக்குக.
6. காண்பிக்கப்படும் நிரலைப் படி எடுக்குக.
7. அதனைத் தங்கள் வலைப்பூவில் பதிவு செய்யும் இடத்தில் Html ஜச் சொடுக்கி நிரல் பகுதியில் ஒட்டினால் போதும்.
இச்செயலைப் படங்களுடன் பார்வையிடக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்குக.

உங்கள் வலைப்பூவில் இவ்வாறு உங்கள் மின்நூலை அறிமுகம் செய்த பின்னர் google+, facebook, twitter, linkedin ஆகிய தளங்களிலும் வலைத்திரட்டிகள் மூலமும் வெளியிட்டுப் பரப்ப இயலும். உங்கள் நண்பர்கள் உங்கள் மின்நூலைத் திறனாய்வு (விமர்சனம்) செய்து தங்கள் வலைப்பூக்களில் அறிமுகம் செய்தால் மேலும் உங்கள் வெளியீடு சிறப்படையும்.

இம்மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றிய மேலதிகத் தகவலை ஆங்கில மொழியில் படிக்க கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்குக.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)

வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பா / கவிதை போன்ற எனது கிறுக்கல்களை "யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01" என்ற தலைப்பில் தொகுத்து மின்நூலாக வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.

எனது மின்நூலைப் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்) படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.


எனது மின்நூலின் PDF தொழில் நுட்பப் பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.

வியாழன், 14 ஜனவரி, 2016

எழுது முன் எது கவிதை என்றறிந்திடு!


பா (கவிதை) புனைய விரும்பும் - எவரும்
பார்த்தும் படித்தும் புரிந்திட வைக்கும்
ஊமைக்கனவுகள் வலைப்பூ அறிஞர் விஜூ அவர்களின்
பதிவுகளைப் படித்த வேளை உணர்ந்தேன் - நானும்
என் தளத்தில் அவரது பதிவுகளைப் பகிர்ந்தால்
என் வாசகரும் அவரது பதிவுகளைப் படிக்க
நானும் சிறு முயற்சி செய்ததாக இருக்குமே!

பா (கவிதை) புனைய விரும்பும் - எவரும்
பாப்புனைய முன் 'எது கவிதை' என்றறிந்திட
"கவிதை என்பது
நம் உணர்வுகளிடையே
ஏதேனுமொரு தூண்டுதலை
நிச்சயம் நிகழ்த்துவதாகவேதான்
எப்போதும் இருக்கிறது." என்று கூறும்
அறிஞரின் எண்ணத்தைப் படிக்க வாரும்!

"படைப்பவனின் மொழியாளுமை
நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமே - இங்கு
முதன்மைப்படுத்தப்பட வேண்டியது. - அதுவே
மொழி தன்னைக் கடைந்து பிரமிப்பூட்டும்
சிற்பங்களாய்க் காட்சியளிக்கின்ற சொல்லின் சுவை. - அத்தகு
சொல்லாடலிலிருந்து கவித்துவத்தை வாசகன் உணர்தல்
ஒரு விவரிக்க இயலா அனுபவம்." என்று தொடரும்
அந்தப் பதிவைப் படிக்க - நீங்கள்
இந்த இணைப்பினைச் சொடுக்கினால் போதுமே!

கட்டுரை வரிகளை உடைத்து ஆக்குவதோ
கதை உணர்வுகளை ஒழுங்கு படுத்துவதோ
உரை நடையாக எழுதியதைச் சிதைத்தோ
சொல்களைக் குழுவாக ஆக்கியோ - சொல்களை
அங்கும் இங்குமாய் அழகாக அடுக்கியோ
புனைவது எல்லாம் பா (கவிதை) ஆகாதே!

"கல கலவென கதைத்துக் கொண்டிருந்த கவிதா, காத்தானின்
நினைவுவரத் துளித் துளியாகக் கண்ணீர் வடிக்கிறாள்." என
உணர்வினை அப்படியே எழுதினால்
வரிப் பா (வசன கவிதை) என்கிறோம்!

"ஆளும் ஆளும் நேருக்குநேர் நோக்கவே
கண்ணும் கண்ணும் வெட்டாமல் பார்க்கவே
"பாய்ந்தது அன்பு!"
 " என ஈரடிச் செயலும் ஈற்றடிச் செய்தியாய்
புனைவது துளிப்பா (ஹைக்கூக் கவிதை) என்கிறோம்!

"யாழ்பாவாணன் பாப்புனையக் கற்றுத்தர வந்தாராம்
வாழ்க்கையில் தொல்லையாம் அடிக்கடி தொடராராம்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களோ தளராராம்
பாப்புனைய உதவும் பதிவுகளைப் பகிருவாராம்"
என
முதலிரு அடிகளில் யாழ்பாவாணனின் இழுபறியும்
ஈற்றிரு அடிகளில் பிறர் பதிவுகளின் பகிர்வுமாக
என யாழ்பாவாணனை நையாண்டி (கேலி) செய்து
புனைவது மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) என்கிறோம்!

"பள்ளிக்குப் போற பொண்ணு - மாலையில்
பள்ளி ஆசிரியர் வீட்டில படிக்க போனாளாம்.
தேர்வு எழுதிய பள்ளிப் பொண்ணு - தேர்வில்
எல்லாப் பாடத்திலும் குறைந்த மதிப்பெண்ணாம்.
"உருளும் நினைவில் காதலாம்..."
" என நான்கடிச் செயலும் ஈற்றடிச் செய்தியாய்
புனைவது குறும்பா (லிமரிக்) என்கிறோம்!

"கழுத்தில தங்கச் சங்கிலி
திறந்த மேற்சட்டை
எடுப்பான நடை
எல்லாம்
தெருவால போன பெண்ணை ஈர்த்திட - அவளும்
காளை மேலே கண்ணைப் போட்டாள்!
காளையின் கழுத்தில மின்னியது
போலித் தங்கச் சங்கிலி என்றறிய - வாலையும்
காளையைக் கைகழுவி விட்டாளாம்!" என
உணர்வு வீச்சாகத் தொடுத்துப் புனைவதும்
புதுப்பா (புதுக் கவிதை) என்கிறோம்!

பா (கவிதை) புனைய விரும்பும் - எவரும்
பாப்புனைய முன் 'எது கவிதை' என்றறிந்தாலும்
பாவிற்கு (கவிதைக்கு) இலக்கணம் இருப்பதை
மறக்க இயலாதே - எப்படி இருப்பினும்
இலக்கியம் தோன்றிய பின்னர் தான்
இலக்கணம் தோன்றியது என்றெண்ணி
இலக்கணம் அறியாமல் புனைவது எல்லாம்
பா (கவிதை) என்றமையாது என்பேன்!

ஊமைக்கனவுகள் வலைப்பூ அறிஞர் விஜூ அவர்களின்
"யாப்புச் சூக்குமம்" என்ற இலக்கண நுட்பத்தை
பா (கவிதை) புனைய விரும்பும் - எவரும்
கடுகளவேனும் கற்றுக்கொண்டால்
வரிப் பா (வசன கவிதை), துளிப்பா (ஹைக்கூக் கவிதை),
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு), குறும்பா (லிமரிக்),  
புதுப்பா (புதுக் கவிதை) என்றெதற்கும்
இலக்கண இறுக்கத்துடன் பா (கவிதை) புனைய விரும்புவீரே!

இணைப்புகள்:
யாப்புச்சூக்குமம் -I
யாப்புச்சூக்குமம் -II
யாப்புச் சூக்குமம் -III
யாப்புச் சூக்குமம் -IV

உறவுகளே! உங்கள் வலைப்பூக்களை 
'ஊற்று' திரட்டியில் இணைத்து - உங்கள் 
பதிவுகளைப் பரப்பலாம் வாருங்கள்!
http://ootru.yarlsoft.com/

புதன், 13 ஜனவரி, 2016

வாழ்க்கையும் தேவையும்


நம்மை பற்றிக் கெட்டவை பகிரப்பட்டால்
நாம் கெட்டவழியில் போகிறோம் என்றறி...
நம்மை பற்றி நல்லவை பேசப்பட்டால்
நாம் நல்லபடி வாழ்கிறோம் என்றறி!

எமது வாழ்க்கைப் பயணம் என்பது
எம்மைச் சறுக்கி வீழ்த்தும் சேற்று வழி...
நாம் வழுக்கி விழாமல் பயணித்தால்
நமது வாழ்க்கைப் பயணம் தொடருமே!

பூக்களின் மணம் நுகரக் காற்றுத் தேவை
ஆள்களின் எண்ணம் வெளிப்பட ஊடகம் தேவை
மக்கள் என்றும் மகிழ்ந்து வாழப் பணம் தேவை
மக்களோடு ஒன்றாய்க் கூடி வாழக் குணம் தேவை!

தேவைகளுக்கு ஏற்ப வருவாய் போதாது
வருவாய்க்கு ஏற்ப தேவையைத் தெரி
நாம் வாழவே நமது வாழ்க்கை
நாம் வீழவே வேண்டாத தேவைகள்!

வருவாய்க்கு ஏற்ப செலவு செய்யென
விரலுக்கு ஏற்ப வீக்கம் என்றுரைப்பரே
வருவாய் இன்றி வாழவே முடியாதென
பானையில் இருப்பின் அகப்பையில் வருமென்பரே!

வெள்ளி, 8 ஜனவரி, 2016

மூளை வேலை செய்யவில்லையே!

சிலரது பதிவுகளைப் படித்ததும் சில எண்ணங்கள் தோன்றலாம். அதில், 'இப்படி நான் எழுதியிருந்தால், எப்படி இருக்கும்?' என்று எண்ணத் தோன்றியிருக்கலாம். அதெப்படி என்றால் தொடர்ந்து படியுங்க...

அறிஞர் பகவான்ஜி அவர்கள் இப்படி எழுதினார்!

"நியாயம் கேட்கும் நீதிபதியின் பேனா :)

முனை நசுக்கி குப்பையில் வீசப்பட்ட பேனா கேட்டது...
குற்றவாளிக்கு மரணத் தண்டனை எழுதியது சரி...
எனக்கேன் மரணத் தண்டனை ?

(சான்று: http://www.jokkaali.in/2016/01/blog-post_8.html)"

அறிஞர் பகவான்ஜி அவர்களின் பதிவைப் பார்த்ததும் இப்படி எழுதத் தோன்றிச்சு...

எழுதுகோலுக்கு வாயிருந்தால்
ஏனடா யாழ்பாவாணா
இப்படியும் எழுதலாமோ என்று
கேட்டிருக்கலாம் - அது
அந்த நீதியாளரைப் பார்த்தெல்லோ
ஐயம் ஒன்றுண்டு - அதை
தெளிவுபடுத்து என்கிறதே!

ஏய்! நீதியாளரே!
ஆளுக்கோ சாவு ஒறுப்பு
அதையேன்
எழுதுகோலுக்கும் வழங்குகிறாய்!
கேட்பது நானல்ல
உன் கையாலே
முனையுடைத்து வீசப்பட்ட
எழுதுகோல்!

எழுதுகோலுக்குக் கண்ணிருந்தால் - அது
நீதியாளரின் உடல்மொழியைப் படித்திருக்கும்
எழுதுகோலுக்குக் காதிருந்தால் - அது
நீதியாளரின் பேச்சு மொழியைப் படித்திருக்கும்
உடலுள்ள எழுதுகோலின்
உள்ளத்தில் எழும் ஐயம் என
நீதியாளரிடம் தொடுத்த கேள்விக்கணைக்கு
நானும் பதிலைத் தேடுகிறேன் - அதற்கு
என் மூளை வேலை செய்யவில்லையே!

அறிஞர் பகவான்ஜி அவர்களின்
பதிவின் கருப்பொருளைக் கையாடி
எழுதுகோலுக்கு
காண், காது, உடல், உள்ளம் வைத்து
எழுதுகோலின்
உள்ளத்தில் எழும் ஐயத்தை
பா/ கவிதை நடையில் தந்தேன் - அது
விடை கண்டறியப்படாத நம்மாளுங்க
ஐயம் என்பேன்!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே!
பிறர் பதிவைப் படித்ததும்
'இப்படி நான் எழுதியிருந்தால்,
எப்படி இருக்கும்?' என்று
எண்ணத் தோன்றியதை எழுதினாலும்
மூளை வேலை செய்யாத
யாழ்பாவாணனின் கிறுக்கலை விட
சிறந்த பா/ கவிதை புனைவீரே!


குறிப்பு: உறவுகளே! 1987 இல் பாவலர் மூ. மேத்தா அவர்களின் 'கண்ணீர் பூக்கள்' போன்ற பாநூல்களைப் படித்துத் தான் பாப்புனையப் பழகினேன் என்பதைப் பாப்புனைய விரும்புவோருக்குக்காக நினைவூட்டுகிறேன். பிறர் கருப்பொருளைக் கையாள்வதில் தவறில்லை. ஆனால், பிறர் அடையாளம் சுட்டாமல் அவரது பதிவைக் கையாண்டால் இலக்கியக் களவு தான். இப்படிப் பிறரது பதிவைப் படித்ததும் அப்பதிவின் கருப்பொருளுக்குக் காண், காது, மூக்கு, நாக்கு, வாய், உடல், உள்ளம் எல்லாமே வைத்து எழுதிப்பாருங்க... உங்கள் உள்ளத்தில் பா/ கவிதை ஊற்றெடுக்குமே!


'ஊற்று' வலைப்பூப் பதிவுத் திரட்டியில் இணையலாம் வாங்க!
http://www.ypvnpubs.com/2016/01/blog-post.html

புதன், 6 ஜனவரி, 2016

'ஊற்று' வலைப்பூப் பதிவுத் திரட்டியில் இணையலாம் வாங்க!

உலகெங்கும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப் பதிவர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். நான் ஏற்கனவே http://tamilsites.doomby.com/ என்ற தளமூடாகத் தங்கள் தங்கள் வலைப்பூக்களை இணைக்குமாறு பணிவாகக் கேட்டிருந்தேன். அத்தளத்தில் நூறுக்குக் குறைவான வலைப்பூ முகவரிகளே இணைக்கப்பட்டிருந்தன. ஆயினும், இன்று உங்களை " 'ஊற்று' வலைப்பூப் பதிவுத் திரட்டியில் இணையலாம் வாங்க!" என்று அழைக்கின்றேன்.

இத்திரட்டி உங்கள் புதிய பதிவுகளைத் தானியங்கி (Automatic) முறையில் திரட்டி வெளியிடும். அதேவேளை பதிவுச் சுருக்கம், பதிவுத் தலைப்பு எல்லாமே இங்கு எழுமாறாகப் (Randomize) பார்வையிட முடியும். கூகிளின் Dynamic Feed Control Wizard ஐப் பயன்படுத்தி இத்திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம் எனலாம். 'ஊற்று' குழுவினரின் ஒத்துழைப்பே எனது இம்முயற்சிக்கு உந்துதலாக இருந்தது.

பல வலைத் திரட்டிகள் செயலிழந்து வருகின்றன. சில வலைத் திரட்டிகள் ஏனோ தானோ எனச் செயற்படுகின்றன. சில வலைத் திரட்டிகள் தானியங்கிச் செயற்பாடின்றி, பதிவர்கள் புதிய பதிவுகளை இணைத்தால் இணைக்கின்றன. இவற்றிலிருந்து ஊற்று வலைப்பூப் பதிவுகளின் திரட்டி முற்றிலும் தானியங்கிச் செயலாகப் புதிய பதிவுகளை இணைத்து வேறுபடுகின்றது. இதனைத் தாங்களும் பயன்படுத்துவதோடு தங்கள் நண்பர்களையும் பயன்படுத்த அழையுங்கள்.


'ஊற்று' திரட்டியில் நடுப் பகுதியின் மேல் பகுதியில் மாறும் திரையில் இணைக்கப்பட்ட பதிவுகளின் சுருக்கம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த மாறும் திரையிற்குக் கீழே உங்கள் வலைப்பூவின் பெயரும் இணைக்கப்பட்ட புதிய பதிவின் தலைப்பும் காணப்படும். எல்லாமே இங்கு எழுமாறாகப் (Randomize) பார்வையிட முடியும். அதாவது இணைக்கப்பட்ட ஒழுங்கின்றி எவரது பதிவும் நடுப் பகுதியின் மேல் பகுதியில் தோன்றும். 'ஊற்று' திரட்டிக்கான கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

'ஊற்று' திரட்டியில் உங்கள் வலைப்பூக்களை இணைத்துக்கொள்ள வலைப்பூவின் பெயர், வலைப்பூவின் RSS Feed Url, வலைப்பூ தொடங்கிய ஆண்டு, ஆகியவற்றை ootru2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் போதும். 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் அனுமதியுடன் உங்கள் வலைப்பூக்களை இத்திரட்டியில் இணைத்துக்கொள்வோம். தற்போது ஒரு பதிவர் ஒரு வலைப்பூவை மட்டும் இணைக்க வாய்ப்பு உண்டு. பின்னர் மற்றையதை இணைக்க வாய்ப்புத் தரப்படும்.

உங்கள் வலைப்பூவிற்கான RSS Feed Url ஐக் கண்டுபிடிப்பது எப்படி?
கூகிள் பிளொக்கர் ஆயின்
உங்கள் வலைப்பூ முகவரியுடன் பின்னொட்டாக /feeds/posts/default என்பதைச் சேர்க்கவும்.
எடுத்துக்காட்டாக
http://www.ypvnpubs.com/feeds/posts/default
வேர்ட்பிரஸ் ஆயின்
உங்கள் வலைப்பூ முகவரியுடன் பின்னொட்டாக /?feed=rss என்பதைச் சேர்க்கவும்.
எடுத்துக்காட்டாக
https://mhcd7.wordpress.com/?feed=rss
மேற்படி உங்கள் வலைப்பூவிற்கான RSS Feed Url ஐக் கண்டுபிடித்தால்; கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிச் சரிபார்க்கலாம்.


இனிய உறவுகளே! 'ஊற்று' வலைப்பூப் பதிவுத் திரட்டியில் இணைவதோடு நின்றுவிடாமல், உங்களுக்குத் தெரிந்த அறிஞர்களிடம் அவர்களது வலைப்பூக்களை இத்திரட்டியில் இணைக்குமாறு பணிவாகக் கேட்டு உதவுங்கள். அடுத்ததாக 'ஊற்று' திரட்டிக்கான இணைப்பை (http://ootru.yarlsoft.com/) உங்கள் உலாவியில் (Browser) நினைவூட்டலாக (Bookmark) இணைத்துவிடுங்கள். நாளுக்கு நாள் பார்வையிட்டு உங்கள் விருப்புக்கு உரியவர்களின் புதிய பதிவுகளுக்குக் கருத்திட 'ஊற்று' திரட்டி உதவுமே!