Translate Tamil to any languages.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கள்ளமில்லா வெள்ளைக் கள்ளு

படம்: கூகிள் தேடல்
கள்ளுக் கடை
நாடத் தான் முடிகிறது...
கள்ளுக் குடிக்கையிலே
பாடத் தான் முடிகிறது...
கள்ளுக் குடித்த பின்
ஆடத் தான் முடிகிறது...
குடித்த கள்ளு வயிற்றில் புளிக்கையிலே
ஆங்காங்கே அவிழ்ந்த உடுப்புகளை
போடத் தான் முடிகிறது...
புளித்த கள்ளு தலைக்கேறுகையில்
நடுவழியிலே
படுத்துக் கிடக்கத் தான் முடிகிறது...
வயிற்றுக்குள்ளே போன
கள்ளமில்லா வெள்ளைக் கள்ளு
இத்தனையும் செய்விக்குமா?
"அப்பன் குடிச்சுப் போட்டு
உடுப்புகளை களைந்து போட்டு
கிடக்கின்ற நிலையை
கண்ட பெண்கள் காறித் துப்ப
கட்டியதிற்கு ஒறுப்பாக
அம்மா தோளிற் சுமந்து
வீட்டிற்கு இழுத்து வருவதைப் பார்" என்று
பிள்ளைகள்
நண்பர்களிடம் சொல்லிச் சிரிப்பதை
நம்மூர் நடுச் சந்தியில்
நீங்களும் கண்டு களித்தீர்களா?

சனி, 21 பிப்ரவரி, 2015

சிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு?


'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப் பார்த்தேன். அந்நிகழ்விற்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளை பாராட்ட விரும்புகிறேன். அவர்களது ஆற்றலுக்குக் கிடைத்த பரிசாக இதனைக் கருதுகிறேன். இவர்கள் எல்லோரும் வெற்றியாளர்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.

விரும்பிகள் (இரசிகர்கள்) தெரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற சிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றியாளர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். சிறப்புப் பாடகர் (Super Singer) பாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஜெசிக்கா‬, வென்ற ‪தங்கத்தின்‬ ஒரு பகுதியைத் தமிழகத்தில் உள்ள அநாதைக் குழந்தைகளுக்கும் மீதியை ஈழத்தில் உள்ள அநாதைக் குழந்தைகளுக்கும் வழங்குவதாக அதே மேடையில் அவரும் அவரது தந்தையும் உறுதி அளித்திருந்தனர். அச்செயலால் உலகத் தமிழ் இனம் பெருமை கொள்ள முடிகிறது. 

இந்த முன்மாதிரியை எல்லோரும் பின்பற்றினால் நன்று.
ஜெசிக்கா குடும்பத்தாரை வாழ்த்துகிறேன். ஆயினும் மிகப் பெரிய இப்பொது நிகழ்வில் இவ்வரங்கில் 'அநாதை' என்ற சொல்லுக்குப் பதிலாக 'ஆதரவற்றவர்' என்ற சொல்லைப் பாவித்திருக்கலாம் என்பது எனது பணிவான வேண்டுல். அது பற்றி அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்.

புதன், 18 பிப்ரவரி, 2015

நகைச்சுவை எழுதப் போய் நாடகமான கதை

''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே உயிரே போயிடுச்சா, ஏண்டா?''
              ''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா  வம்பாயிடுமே!''
என்றொரு நகைச்சுவையை நகைச்சுவையாளி (ஜோக்காளி) தளத்தில் படித்தேன்.
அதற்கான இணைப்பு இது தான்!
http://www.jokkaali.in/2015/02/blog-post_16.html

அதனைப் படித்ததும்
இப்படிக் கருத்துப் போட எண்ணினேன்.
அதனைப் படியுங்க...

என்கிட்ட இணைப்பாளி (தரகர்) வந்தாரு
இவரு யாரு என்றார்
என் மனைவி என்றேன்
ஓட்டம் பிடித்தாரு
ஏன் தான் ஓடுறீங்க என்றேன்
உங்களுக்கு மனைவி இருக்கே
அப்ப
எனக்கு வேலையே இல்லையே
என்றாரே!
ஏன் இப்படி எழுதினேனா?
"
''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே  உயிரே போயிடுச்சா, ஏண்டா?''
              ''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா  வம்பாயிடுமே!''
"
என்ற நகைச்சுவை இருக்கே
அதில
''அவ புருஷன் கையிலே
அது போயிடுச்சுன்னா
வம்பாயிடுமே!'' என்றிருக்கே
அதைப் பார்த்துத் தான்...

மேற்படி கருத்திட்ட பின் "எனக்குத் தெரியமல் போச்சே" என்று தலைப்பிட்டு இப்படி நானும் நகைச்சுவை எழுதலாமென இறங்கினேன். அதனைப் படியுங்க...

அழகி அரசி: இவ்வளவு நாளா உங்களைத் தொடருகிறேன். எப்பவாவது ஏனென்று கேட்டியளா?

ஒல்லிக் கில்லி: தேவை ஏதும் வரவில்லையே தோழீ!

அழகி அரசி: 1 4 3

ஒல்லிக் கில்லி: அப்படி என்றால்?

அழகி அரசி: I Love You

ஒல்லிக் கில்லி: அப்படி என்றால்?

அழகி அரசி: நான் உன்னைக் காதலிக்கிறேன்.

ஒல்லிக் கில்லி: அது தான் ஏன் என்று கேட்கிறேன்...

அழகி அரசி: நீங்க தாலி கட்டினா... நாங்க கூடி வாழலாமே

ஒல்லிக் கில்லி: "ஓடிப் போடி அங்கால; கூடி வாழ
நானிருக்கேனடி" என்று என் மனைவி கேட்டா என்ன செய்வாய்?

அழகி அரசி: உங்களுக்கு மனைவி இருக்கென்று தெரியாமல் போயிற்றே!

ஒல்லிக் கில்லி: ஒன்பது பெட்டைப் பிள்ளைகளைப் பெற்றுத் தந்த நல்லதங்காள் தான் என் மனைவி என்று தெரியாதா?

அழகி அரசி: அடிக்கடி பத்துப் பெண்கள் உங்களைத் தொடருவாங்களே? அவங்க யாரு?

ஒல்லிக் கில்லி: இளமையான பெண்டாட்டி..
                விரைவாக வளர்ந்திட்ட பிள்ளைகள்
                எல்லோருமே என் பெண்டாட்டி பிள்ளைங்க தான்!

அழகி அரசி: என்னை மன்னிச்சிடுங்க...

ஒல்லிக் கில்லி: அதுக்காகக் குதிக்கால் தலையில அடிக்க ஓட்டம் பிடித்தால் அழகாக இருக்காது பிள்ளோய்!

எழுதி முடியப் படித்துப் பார்த்தால், அது நாடகமாகத் தானே இருந்தது. நான் முதலில நாடக உரைநடை (Script) தான் எழுதினேன். அது என்னில் தொடருதோ என எண்ணினேன். பின்னர் தான் நகைச்சுவை என்றால் நறுக்கென நாலு வரியில இருக்க வேணுமே என எண்ணினேன்.

பிஞ்சுப் பெண்பிள்ளை: உங்க தலையில கையை வைச்சுக் கொஞ்சினது பிழையாப் போச்சே!

நெஞ்சு நிமிர்த்திய ஆண்பிள்ளை: என்னோடு பிழைக்க மாட்டீரோ?

பிஞ்சுப் பெண்பிள்ளை: இஞ்சாருங்கோ... கையெல்லாம் கறுப்பு அப்பியிருக்கே... பிஞ்சும் பழமும் இணைய முடியாதே!

நெஞ்சு நிமிர்த்திய ஆண்பிள்ளை: இத்தனை நாள் காதலித்தீரே?

பிஞ்சுப் பெண்பிள்ளை: பிஞ்சும் பிஞ்சும் இணையும் என்றே காதலித்தேன்... நரைமுடிக்கு கறுப்படித்த கிழம் என்றதும் காதல் வரமாட்டேன் என்கிறதே!

அட... சீ! பிறகும் நாடக உரைநடை (Script) தான்... எனக்கு நகைச்சுவை எழுத வராதோ என எண்ணி நான் குழம்பியதில்லையே... அறிஞர்கள் ஆக்கிய நகைச்சுவைகளை  வலைப்பூக்களில் மேய்ந்தேன்... ஆளுக்கொரு நுட்பத்தில என்னமோ மூளைக்கு வேலை வைக்கிற மாதிரி எத்தனையோ அறிஞர்கள் ஆக்கிய நகைச்சுவைகளைப் படித்தேன்... ஈற்றில நகைச்சுவையாளி (ஜோக்காளி) பகவான்ஜி அவர்களின் நடையில எழுதலாமென இறங்கினேன். அதனைப் படியுங்க...

வாலை: ஏன்டி அந்தக் காளையை வேண்டாம் என்கிறாய்?

சோலை: அவரு காளையில்லை... பழுத்த கிழமெல்லோ...

வாலை: எப்படி, அப்படிச் சொல்லுறாய்...

சோலை: அவரு முடிக்கு அடித்த கறுப்பில கொஞ்சம் காதில அப்பியிருக்காரே...

இப்ப கொஞ்சம் நகைச்சுவை வருமாப் போலே இருக்கே... என்றாலும்  நாடக உரைநடை (Script) மணம் வீசுதே... மீண்டும் எண்ணி எண்ணி எழுத முயன்றேன்...

அழகன் ஒருவன் ஆற்றில விழுந்த பின் எழுந்து வரவே தலையும் வெள்ளையாயிற்றே...
ஓ! கறுப்படித்த தலைக்காரனோ...!

இப்படி இன்னொன்றும் எழுதினேன்.

அழகி ஒருவள் ஆற்றில விழுந்த பின் எழுந்து வரவே நீண்ட முடியும் குறுகியதோ...
ஓ! இணைச்சு வைச்ச முடிக்காரியோ...!

இவ்விரண்டையும் தான் நகைச்சுவை என நான் கருதுகிறேன். ஆனால், உங்கள் கருத்து முரண்படலாம்.. நீங்கள் தெரிவித்தால் தானே; நானென்ற சின்னப்பொடியன், பெரியாளாக முடியும்.

இப்பதிவை நகைச்சுவை எழுதப்பழக்கிற பதிவு என்று நினைத்திருந்தால் தவறு. நான் இவ்வாறு எழுத வந்த நோக்கத்தையே சொல்லி முடிக்கிறேன். அதாவது, புதிய படைப்பாளிகள் கருத்திற் கொள்ளவேண்டிய சில தேவைகளை உணர்த்தவே இதனை எழுதினேன். அவற்றைக் கீழே படிக்கவும்.

1. நாம் எழுதியது தகுதியான பதிவு என நாமே முடிவு செய்யக்கூடாது.
2. நாம் எழுதியதைத் தகுதியான பதிவாக மாற்ற அறிஞர்களின் படைப்புகளை மேய்தல் வேண்டும்.
3. அறிஞர்களின் படைப்புகளைப் படியெடுக்கக் கூடாது. படியெடுத்தால் அப்படைப்பை ஆக்கியோரது விரிப்பு வழங்கப்பட வேண்டும்.
4. அறிஞர்களின் நுட்பங்களை எவரும் கையாளலாம். ஆயினும், வாசகர்கள் கண்ணதாசன் நடையில, மூ.மேத்தாவின் நடையில எழுதுகிறாரெனக் கண்டுபிடிப்பார்கள்.
5. நாம் எழுதும் வேளை நமக்கென ஓர் எழுத்து நடையைப் பின்பற்றலாம்.
6. அறிஞர்களின் படைப்புகளுக்குக் கருத்துக் கூறுவதன் மூலமும் எம்மை அடையாளப்படுத்த முடியும்.
7. அறிஞர்களின் படைப்புகளுக்குக் கருத்துக் கூறுமுன் படைப்புகளுக்கான கோட்பாடு, இலக்கணம், இலக்கியத்தன்மை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
8. அது எழுத வராது... இது எழுத வராது... உது எழுத வராது... என பின்னேறாமல்; இயன்றவரை முயன்று பார்ப்போமென முன்னேற வேண்டும்.
9. பெயர் சுட்டித் தாக்குவதோ பிறரைக் குறைத்து மதிப்பிடுவதோ நல்லதல்ல. ஆளுக்கு ஆள் ஆற்றல் வேறுபடுமென உணரவேண்டும்.
10. பிறரை நோகடிக்காமல் பிறருக்கு நிறைவு தரும் வகையில் எழுதவேண்டும்.

வாசித்து முடித்த உள்ளங்களே! மேற்காணும் பத்தில ஏதாச்சும் என் பதிவில நான் பின்பற்றி இருக்கிறேனா? பத்துக் கருத்துக் கூறுமுன் என் பதிவை நான் சரி பார்க்க வேண்டுமல்லவா? உங்கள் கையில் தான் இதற்கான பதிலோ முடிவோ இருக்கின்றது!சீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.

உலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்திருந்த வேளை நிகழ்த்தப்பட்ட அந்த ஒன்பது நாணயங்கள் பற்றிய தெளிவை ஒளிஒலிப் பதிவாக (Video) உங்களுடன் பகிருகிறேன். இதனை நீங்களும் பலருக்குப் பகிருங்கள்.


இலங்கை-யாழ்ப்பாண நகரில் திருமதி.யோகாம்பிகை (விமலா) சங்கரன் அவர்களால் பேணப்படும் யாழ்ப்பாணம் சீரடி ஸ்ரீ சாய் சங்கரா ஆலயத்தின் இணையத்தளப் பணிகளை நானே மேற்கொள்வதால் இவ் ஒளிஒலிப் பதிவைத் (Video) தங்களுடன் பகிர முடிந்திருக்கிறது. கீழே அவ்விணையத்தள முகவரி தந்துள்ளேன். அதனை விரித்துப் பயன்பெறலாம்.

ஓம் சாயிராம்
ஜெய் சாயிராம்

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 01

எனக்கும் தமிழக அறிஞர்களுக்கும் இடையே முதலில் உறவை ஏற்படுத்தித் தந்தது தமிழ்நண்பர்கள்.கொம் தளமே! 2015 மாசி தமிழகப் பயணத்திற்கு தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் ஒத்துழைப்பே எனக்கு ஊக்கமளித்தது. மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் நண்பர் சுஷ்ரூவா உடன் நான் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் கிழே தந்துள்ளேன்.

மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் அறிஞர் பகவான்ஜி உம் அறிஞர் வலிப்போக்கன் அவர்களும் என்னை வரவேற்க வந்திருந்தும் சந்திக்க முடியாமல் போனதையிட்டும் நண்பர் கில்லர்ஜி தெரிவித்ததும் எனக்குத் துயரம் தான். அடுத்த ஆண்டு தமிழகம் வரும் போது சந்திக்கலாம் என எம்மை நாமே ஆற்றுப்படுத்த வேண்டியதாயிற்று.

எனது தமிழகப் பயணச் செய்தி படித்து வாழ்த்தும் வழிகாட்டலும் தந்த எல்லோருக்கும் மிக்க நன்றி. அறிஞர் கவியாழி கண்ணதாசன் அவர்கள் நண்பர் சுஷ்ரூவாவுடன் கதைத்திருந்தார். அவரும் புலவர் இராமானுஜம் அவர்களும் மேலும் பலரும் சென்னைக்கு வருமாறு அழைப்புத் தந்தனர். பல பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அடுத்த ஆண்டு தமிழகம் வரும் போது அவர்களது வேண்டுதலை நிறைவேற்ற எண்ணியுள்ளேன்.

எல்லோருடனும் இலகுவாகத் தொடர்புகொள்ளலாமென எண்ணி நடைபேசி இணைப்பைப் (Sim ஐப்) பெற்றிருந்தும் செயலுருப் (Activation) பெறமையால் பலருடன் தொடர்புகொண்டு சந்திப்புகளையும் உறவுகளையும் மேம்படுத்த முடியாமை தான் எனது துயரம்!

உண்மையில் இலங்கையிலே நடைபேசி இணைப்பு (Sim) இலவசமாகவும் செயலாக்கல் (Activation) ஓரிரு மணி நேரத்திலும் வழங்குகிறார்கள்.
அப்படியிருக்கையில் இந்தியாவில் மட்டும் பத்து நாட்கள் இழுபறி ஏன்?
இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திறன் போதாதா?
முகவர் நிறுவனங்களின் அக்கறையின்மையா?
என்னமோ... இந்தியாவில் தொலைத்தொடர்புச் செலவு (Call Charge) அதிகம் என்பதை நானறிவேன்.
பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)

உரைநடைக்கல்ல பாப்புனையவும் உதவுமே!

இனிய இலக்கணத் துளிகள்
இனி நம்மவர்
தவறின்றித் தமிழ் எழுத
தவறாமல் கற்க உதவுமே!
"சந்திப்பிழையின்றி எழுதுவோம்" என
அறிஞர் மணவை ஜேம்ஸ் அவர்கள்
ஆக்கிய ஆக்கம் கண்டு
பாப்புனைய விரும்புவோர்
சந்திப்பிழை நீக்கிப் பாப்புனைய
உதவுமென என எண்ணியே பகிருகிறேன்
பாப்புனைய விரும்புங்களேன்!
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/02/blog-post.html
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/02/2.html
அடுத்து வருவது
வல்லினம் மிகா இடங்களாம்...
எவர் தடுத்தாலும் - அதை
தவறாமல் படியுங்களேன்!
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/03/3.html

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக

இலங்கையிலிருந்து மதுரை வானூர்தி நிலையத்தில் வந்திறங்கும் வேளை...
வானூர் இலக்கம் : Mehin Lanka / MJ307
மதுரையில் வந்திறங்கும் நாள் : 02/02/2015 திங்கட்கிழமை
மதுரையில் வந்திறங்கும் நேரம் : 13:25 / 01:25pm
பயணி விடுவிப்பு நேரம் ஒரு மணி நேரமாகக் கருதினால் 02:30pm இன் பின் 03:30pm வரை சந்திக்கலாம். பின்னர் தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் சந்திக்கலாம்.
தொடர்புகளுக்கு : சுஷ்ரூவா - 091 087 54979451

இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூரில் இருந்து திரும்பி மதுரை வானூர்தி நிலையத்தில் இருந்து இலங்கைக்குக் திரும்பும் வேளை...
மதுரையில் இருந்து திரும்பும் நாள் : 07/02/2015 சனிக்கிழமை
மதுரையில் இருந்து திரும்பும் நேரம் : 11:25am
பயணி விடுவிப்பு நேரம் மூன்று மணி நேரமாகக் கருதினால் 08:30am இன் முன் 06:00am இலிருந்து சந்திக்கலாம்.
ஏமாற்றங்களைத் தவிர்த்து சந்திப்பை உறுதிப்படுத்த : சுஷ்ரூவா - 091 087 54979451

இதுவரை சந்திக்க விருப்பம் தெரிவித்த அறிஞர்கள், பதிவர்கள் எல்லோருக்கும் உங்கள் யாழ்பாவாணனின் மிக்க நன்றி.

தமிழ்நண்பர்கள்.கொம் அறிஞர் வினோத்-கன்னியாகுமரி, புலவர் இராமானுஜம், கவியாழி கண்ணாதாசன் போன்ற பெரியோர்கள் சென்னைக்கு வருமாறு அழைப்புத் தந்தனர். இம்முறை நேரமின்மை காரணமாக இயலாமல் போனாலும் அடுத்த தடவை சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் வருகை தந்து பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளேன்

முன்னைய தகவலறிய:
யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html
கடலூர், வடலூரில் உளநல வழிகாட்டலும் மதியுரையும்
https://mhcd7.wordpress.com/2015/01/24/கடலூர்-வடலூரில்-உளநல-வழி/