Translate Tamil to any languages.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

சுடச் சுடக் கவிதை தாருங்கள்...?


இலங்கையில் அவிசாவளையில் நடந்ததாக
முகநூலில் தென்பட்ட தகவற்படி
தனது காதலி
"நீ போய் சாவு!" எனக் கூறியமையினால்,
நகரப்பகுதியில்
தனது உடலில் தீ வைத்து எரியும்
இளைஞரைப் பாரும்...!

இச்செய்தியைக் கருத்திற்கொண்டு
"தோன்றிய எண்ணங்களைத் தொகுத்தே
"காதல்" எனும் சொல்லைச் சுட்டியே
ஆணோ பெண்ணோ
தற்கொலை செய்வதை நிறுத்துங்கோ" என
உரைக்கும் சிறந்த கவிதைகளை - அதுவும்
முதல் நூறு கவிதைகளை
மின்நூலாக்கி வெளியிட்டு உதவுகிறேன்!

தற்கொலைக்குச் செல்லாது
வாழ வழிகாட்டும் கவிதைகளே
இன்றைய தேவை என்பதால் - இந்த
மின்நூலாக்கும் பணிக்கு - உங்கள்
பாவண்ணங்களைக் கருத்துகளாகப் பகிருங்கள்!

கவிதைகள் யாவும் பின்னூட்டங்களாகவே தரப்பட வேண்டும். அதாவது இப்பதிவுக்கான கருத்துகளாகவே தரப்பட வேண்டும். இப்பதிவுக்குப் பின்னூட்டமாகவோ கருத்தாகவோ கிடைத்த முதல் நூறு கவிதைகளை மின்நூலாக்கி வெளியிட்டு உதவுகிறேன்!
என்றவாறு

"பட்டங்கள் இல்லையேல்
பாவண்ணங்கள் கிட்டாதோ
எங்கே - உங்கள்
பாவண்ணங்களைக் காட்டக்கூடாதோ?" என்று
முகநூலில் (Fcebook இல்) அறிவிப்புச் செய்த வேளை
ஐந்தாறு கவிதைகளே வந்து சேர்ந்தன!

1-என் கவிதை

வலிந்து முயன்று - நீயும்
காதலிக்க முனைவதும் தவறு!
காதலாக மலரும் உறவை
ஏற்காமல் இருப்பதும் தவறு!
காதலித்த பின் பிரிய நினைப்பதும்
நம்மாளுங்க இயல்பு என்றாலும்
பிரிவைத் தாங்க இயலாது
தற்கொலைக்குச் செல்வதும் தவறு!
ஒன்றில்லை என்றால் இன்னொன்று
என்றென்றும் உனக்கு இருக்கென்று
வாழ்க்கையைச் சுவைக்கத் துணிவின்றி
தற்கொலையை நாடுவதும் தவறு!
தற்கொலையை நாடாமல் - என்றும்
வாழ்ந்து காட்டத் துணிந்தவரே
மாற்றாருக்கு வழிகாட்டி என்பேன்!

2- Vetha Langathilakam உன் பிறவி அரியது!

காதல் உன்னையும் மீறிநெஞ்சில்
ஆழப்பதிந்தால் இறுகப் பற்று!
நீளத் தொடர்!...உன் காதலை!
அன்றேல் விலகிச் செல்!
ஆழக் காதலைத் தேடு!...

அருமை மானுடப் பிறவி!
தற்கொலை என்ற பெயரால்
உன்னை அழிக்காதே!....
யார் தந்தது இந்த உரிமை!
பெற்றவர் தந்த உடலன்றோ இது!

எங்கிருந்து வந்தது உன்னையழிக்கும்
இந்த உரிமை! தூர நட.!..
நண்பர்களைத் தேடு!
கடலில் மீன்கள் போல உலகில்
ஆயிரம் பெண்கள்!...உன்னவளைத் தேடு!


வாழவழி செய்க காதலே
வீழ குழி செய்திடலாமோ?
பயிர்போல் செழிக்கும் காதலே
உயிர் அழிப்பது அறமும் ஆகுமோ?

இருமணம் இணைந்த திருமணம் வேண்டின்
பொறுமனமே! நல்வினை நாளும் வேண்டி!
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலப்பதுவே காதல்

நெருப்பை நெருங்கும் முன் - நெஞ்சே
பொறுப்பை நினைவில் கொள்
சுடர் சுட்டெரித்து காயம் கரியாகும்
அறியா காதல் அஹிம்சை ஆகா!

ஒரு நிமிட பைத்தியமே - தேவை
நல் நம்பிக்கை வைத்தியமே!
-புதுவை வேலு

4-  Sriram Balasubramaniam
 ​
​மனதில் இருக்க வேண்டிய
காதல் தீயை
தனது உடலில்
ஏற்றுக் கொண்ட
இவன்
போனதே நலம்.
இல்லா விட்டால்
தினம் தினம்
இவன் நா
அவளைச்
'சுட்டு'க்கொண்டே இருந்திருக்கும்.


அவனைப் பற்றவைத்தது
காதல் தீ!

6- Govind Dhanda (சுஷ்ரூவா)
உதிரத்தை அளித்தவள்
வயிற்றில் வைத்த தீ
உன் உடல் பற்றிய
பாதகியின் அதரத் தீ

தீயின் நாக்கிற்கு
ருசி அளித்தவனே
தீராப் பாவத்தை.....
காதலுக்கெனத் தந்தவனே
தீர வேண்டும் இத்துடன்.

காதல்.....
மறுத்தால் சாதலா முடிவு?
காதல்....
மறுக்க எதிர்த்து எழுதலே
உனக்கு மட்டுமல்ல
காதலுக்கும் வாழ்வு

உணவிற்கு.....
காத்திருக்கும் கயவனே
உணர்விற்கு....
பலியாகும் பாதகரே!
காதலின் பொருளறியாது
காதல் பறறிப் பேசாதீர்!

காதல்.....
மலரினும் மென்மையானது
காதல்....
மதுவினும் இனிமையானது
காதல்.....
தென்றலினும் சுகமானது
காதல்! காதல்! காதல்!
சொல்லச் சொல்லச் சுவையானது!

மறுப்பினால் வெறுப்பது வீண்
மறுபடியும் பிறக்குமேத் தேனென
மாறாக் காதலின் மகிமையது
மானிடம் அறிவது கடினமோ?!

தீ நாக்கிற்கு ஆகுதியானவனே
நீயே காதலுக்குத் தீங்கானவன்
தீ உனைத் தீண்டினாலும்
நீ தீண்டியது தீ ஆனாலும்
அவமானம் காதலுக்கே!


மேற்படி மின்நூல் வெளியிடத் தங்கள் கவிதைகளைப் பின்னூட்டமாகத் தருக.

செவ்வாய், 18 ஜூலை, 2017

உங்களால் உதவ முடியுமா?

இந்தியாவில் 18 ஜூலை 2017 நாளில் 'தி இந்து' நாளேட்டில் 'நிசப்தம் அறக்கட்டளை' குறித்தான கட்டுரை வெளியாகிருப்பதை உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுவில் GOPAL USML-HO அவரது பதிவைப் படித்ததும் அறிந்தேன். அவரைப் பாராட்டாமல் எந்த வலைப்பதிவரும் இருக்கமாட்டார்கள். இதோ எனது உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களைப் பகிருகிறேன்.
அறிஞர் வா.மணிகண்டன் அவர்களை - நான்
இதுவரை நேரில் கண்டதில்லை.
அவரது வலைப்பக்கம் சென்றிருக்கிறேன்.
அவரது வலைப்பதிவுகளைப் படித்திருக்கிறேன்.
அவரது பணிகளைப் பற்றியும் அறிந்திருக்கிறேன்.
"அவரது பணிக்குக் கிடைத்த நிதியினை
வரவு-செலவுக் கணக்கோடு சான்றுகளை இணைத்து
கொடையாளிகளுக்கும் வாசகருக்கும் காண்பித்து
நம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம் என்பவற்றைப் பெற்றாலும்
தானும் நன்கொடை செய்துள்ளார்!" என்பதை
உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும்
அறிந்திருப்பார்கள் - அந்தப்
புனிதரை நாமும் பாராட்டுவோம்! - அவரது
பணி சிறக்க நாமும் ஒத்துழைப்போம்!

ஓ! உலகத் தமிழ் வலைப்பதிவர்களே!
http://www.nisaptham.com
அறிஞர் வா.மணிகண்டன் அவர்களைப் போல
உங்கள் ஊராருக்கும் உங்கள் நாட்டவருக்கும்
உங்களால் உதவ முடியுமா? - அவ்வாறு
உதவும் எல்லோருக்கும் - எனது
பாராட்டும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

வெள்ளி, 14 ஜூலை, 2017

தமிழ் வாழத் தமிழ் இலக்கியம் பேணுவோம்!

07-01-2017 சனி மாலை 4 மணிக்கு கலைத்தூது அழகியற் கல்லூரி (டேவிட் வீதி, யாழ்ப்பாணம்) அரங்கில் நடைபெற்ற "தகவம்" தமிழ்க் கதைஞர் வட்டத்தின் 'பரிசுக் கதைகள் - 03' நூலிற்கான அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன்.

வாசிப்புப் பழக்கும் குறைந்து செல்லும் வேளை, இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்குபற்றுவோரும் குறைந்து செல்லும் வேளை, இந்நிகழ்வில் ஒரளவு அறிஞர்களின் வரவு நிறைவைத் தந்தமை 2017 இன் இலக்கியப் பயணம் சிறப்பாக இருக்கும் என்பதை நம்பலாம்.

"தகவம்" தமிழ்க் கதைஞர் வட்டம் பற்றியும் அவர்களது பணி பற்றியும், 'பரிசுக் கதைகள் - 03' இற்கான மதிப்பீடும், சமகால இலக்கியப் பயணம் பற்றியும் அறிஞர்களால் சிறப்பாகக் கருத்துக்கணைகள் வீசப்பட்டன. சுவைஞர்களுக்கு நிறைவைத் தந்தது எனலாம். சுவைஞர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர இடமளிக்கப்பட்டது. நிகழ்வு வருகையாளர்களுக்கு மகிழ்வைத் தந்திருக்கும் அதேவேளை பயன்மிக்க புத்தாண்டு நிகழ்வாக நான் கருதுகிறேன்.

இதனை விடச் சிறப்பாகச் சொல்வதற்கு, நான் ஒன்றும் பெரிய படைப்பாளியல்ல. வலைப்பூ (www.ypvnpubs.com) நடாத்தும் வலைப் பதிவராக நான் உள்வாங்கிய சில கருத்துகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

"இலக்கியம் பேண அச்சு ஊடகங்கள், நூல் வெளியீடுகள் முதன்மை நிலையில் உள்ளன. முகநூல் போன்ற மக்களாய (சமூக) வலைத்தளங்கள் உடனுக்குடன் நிகழ்வுகளைச் செய்திகளைப் பரப்ப உதவலாம். வலைப்பூக்கள் (Blogs) மற்றும் வலைப்பக்கங்கள் (Webs) ஊடாகவும் இலக்கியம் பேணினாலும் குறித்த வாசகர்களுக்கே சென்றடைகிறது." என்பன என்னைத் தாக்கின.

இதில் அச்சு வெளியீடுகளுக்கு அடுத்த நிலையில் தான் வலை வெளியீடுகள் இலக்கியம் பேண உதவலாம் என்பதை ஏற்றுத் தான் ஆகவேண்டும். அதாவது வலை வெளியீடுகள் வசதியுள்ள சிலரைச் சென்றடைந்தாலும் அச்சு வெளியீடுகளே அதிக வாசகர்களைச் சென்றடையும். ஆயினும் அச்சு ஊடகங்கள் கவிதைக்குத் தனிப்பக்கம், கதைக்குத் தனிப்பக்கம் என இலக்கியப் பகிர்வுக்கு முன்னுரிமை தராமல் விளம்பரங்களுக்கு முன்னுரிமை வழங்குவது துயரச் செய்தியே!

தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றத்தால் பலர் வலை வழி வெளியீடுகளில் ஈடுபடுவதைக் காணலாம். அவ்வாறானவர்கள் இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றித் தரமான இலக்கியங்களைப் படைக்க முன்வரலாம். வலை வழியே தரமான படைப்பாளிகள் இருந்தாலும் வாசகர் பக்கத்தில் அச்சு ஊடகப் படைப்பாளிகளையே பெரிதும் மதிக்கின்றனர். எனவே, வலை வழி வெளியீடுகளில் ஈடுபடுவோர் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொண்டு அச்சு ஊடகப் படைப்பாளிகளின் நுட்பங்களைக் கற்றறியும் வாய்ப்பைப் பெறலாம்.

இந்நிகழ்வில் எவரும் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்க வழியேதும் முன்வைக்காத போதும் இலக்கியப் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் செயலாக இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வுகளைத் தொடர வேண்டும்; திறனாய்வு (விமர்சனம்) மற்றும் தாக்குரை (கண்டனம்) நிகழ்வுகளைத் தொடர வேண்டும்; பொதுத் தலைப்பிலான கருத்தாடல் (கருத்து-எதிர்க்கருத்து/ வாதப் பிரதிவாதம்) போன்ற நிகழ்வுகளைத் தொடர வேண்டும் என்ற கருத்தை நானும் உள்வாங்கக் கூடியதாக இருந்தது.

மொழியின் அடையாளம் இலக்கியம் என்பதை மறவோம். இலக்கியம் வாழுகின்றதாயின் மொழி வாழுகின்றது எனலாம். தமிழ் இலக்கியம் பேண மேற்படி நிகழ்வுகளைத் தொடரப் பங்காளிகள் தேவை. எல்லா இலக்கியக் குழுக்களும் இணைந்து (இந்நிகழ்வை மூன்று குழுக்கள் இணைந்து நடாத்தினர்.) இவ்வாறான நிகழ்வுகளைத் தொடரலாம் என்ற கருத்தும் பகிரப்பட்டது.

படைப்பாளிகள் ஒன்றுகூடினால் படைப்பாக்கத் திறன் பெருகும். ஆனால், இலக்கியம் வாசகரைச் சென்றடையாது. எனவே, வாசகர் மற்றும் படைப்பாளிகள் இணைந்த ஒன்றுகூடலே தமிழ் இலக்கியம் பேண உதவும் நிகழ்வுகளாகும். எனவே, இவ்வாறான நிகழ்வுகளில் வாசகர் பங்கெடுக்க வாய்ப்பளிக்கும் முகமாக குறுகிய நேரக் கலை நிகழ்வையோ பட்டிமன்றத்தையோ நடாத்தலாம்.

எங்கள் தமிழ் மொழி வாழ, நாம் தமிழ் இலக்கியம் பேண ஒன்றுபடுவோம். வாசகர் எண்ணிக்கையைப் பெருக்க வழிகளை அமைப்போம். வாசகர் மற்றும் படைப்பாளிகள் இணைந்த இலக்கிய ஒன்றுகூடல்களை நடாத்தி வெற்றிகரமாக முன்னெடுக்க உழைப்போம். இப்பணியில் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுவதே நன்மை தரும்!

வலைப்பதிவர்களே! தங்கள் நாட்டிலும் தங்கள் ஊர்களிலும் இலக்கிய மன்றங்களை அமைத்து இளைய வழித்தோன்றல்களுக்கு இலக்கிய நாட்டம் ஏற்படத் தூண்டுங்கள்.
இன்றைய இளசுகளுக்கு இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சிகள் வழங்காவிட்டால், நாளைய இளசுகள் தமிழ் இலக்கியம் படைப்பார்களா?
இன்றைய இளசுகளுக்கு இலக்கிய நாட்டம் வராவிட்டால், நாளை தமிழ் இலக்கியம் வாழுமா?
தமிழ் இலக்கியம் வாழாவிட்டால் தமிழ் மொழி எப்படி வாழும்?

இதற்காகவே இலங்கையில் நானும் இரு இலக்கிய மன்றங்களில் இருந்துகொண்டு,  இவ்வாறான முயற்சிகளுக்கு ஊக்குவிக்கின்றேன். தாங்களும் தங்கள் நாட்டிலும் தங்கள் ஊர்களிலும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

ஞாயிறு, 9 ஜூலை, 2017

4 சமிபாடும் 8 தூக்கமும் இருந்தால் எப்படி?

உங்கள் யாழ்பாவாணன், இந்தப் பதிவினூடாகத் தன்னைப் பொறுக்கி என்று காண்பிக்கின்றார். எல்லாம் நம்ம நீண்ட ஆயுளுக்காக, யாழ்பாவாணன் கூறாத உள/உடல் நல மதியுரை தானே! அவருக்குப் பதிவெழுதச் சரக்கில்லையோ நேரமில்லையோ பொறுக்கித் தொகுத்தைப் படித்துப் பார்ப்போமா!

சமிபாடு (செரிமானம்) பற்றி அறிஞர்கள் கருத்து:

திருவள்ளுவரின் குறள்வெண்பா:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். (குறள்: 942)

கலைஞர் மு.கருணாநிதி உரை:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
(http://www.thirukkural.com/2009/02/blog-post_4289.html என்ற தளத்தில் பொறுக்கியது)

அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Sleep Foundation) ஒருவரது அகவை (வயது) என்ன என்பதைப் பொறுத்து, அவர்களுக்கு இருக்க வேண்டிய தூக்கம் பற்றி விரித்துரைப்பதைக் காண்போம்.

பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை):
புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது.

குழந்தைகள் (4 முதல் 11 மாதம் வரை):
தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை):
தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும். ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.

பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை):
தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை):
ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.

பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை):
பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.

வயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை):
தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.

வயது வந்தவர்கள் ( 26லிருந்து 64 வயது வரை):
மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.

மற்ற வயது வந்தவர்கள் ( 65 வயது, அதற்கு மேல்):
ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது.
(http://www.bbc.com/tamil/science/2015/02/150211_sleep என்ற தளத்தில் பொறுக்கியது)

இன்றைய முன்னணி நகைச்சுவை வலைப்பூவில்
(http://www.jokkaali.in/2017/04/blog-post_10.html)


'நொறுக்குத் தீனி'யர்களே, ஞாபகம் வைச்சிக்குங்க :)
           ''என்னங்க, அந்த மனோ தத்துவ டாக்டர் என்ன சொல்லி உங்களைத் திருத்தினார்?''
         ''பசியும் , ஃபிரிட்ஜ்  பல்பும் ஒண்ணு ... கதவைத் திறந்தா  மட்டும் பல்பு எரியுற மாதிரி, பசிச்சா மட்டும் தான் சாப்பிடணும்னு சொன்னாரே!''

எந்த நகைச்சுவையும் சிந்திக்க வைச்ச பின் சிரிக்க வைப்பதாகவே இருக்கும்.
இந்த நகைச்சுவையும் சற்று எல்லோரையும் சிந்திக்க வைத்திருக்குமே!
அந்த வகையில் என் உள்ளத்தில் எழுந்த சிந்தனையைப் பின்னூட்டமாக வழங்கி இருந்தேன். இதோ...

''பசியும், ஃபிரிட்ஜ் பல்பும் ஒண்ணு... கதவை திறந்தா மட்டும் பல்பு எரியுறமாதிரி, பசிச்சா மட்டும்தான் சாப்பிடணும்னு சொன்னாரே!'' என மனோ தத்துவ டாக்டர் சொன்னது சரி தானே!

உண்டது உள்ளே (வாயூடாக வயிற்றுக்குள்ளே) போய் சமிபாடடைய (செமிக்க/ஜீரணிக்க) நான்கு மணி நேரம் தேவை. 'நொறுக்குத் தீனி' என்றாலும் நான்கு மணி நேரம் கழித்துச் சாப்பிடலாமே!

'பசியும், ஃபிரிட்ஜ் பல்பும் மாதிரி என்றால் 'நொறுக்குத் தீனி' என வடை, பச்சி, அப்பம் என்றவாறு வயிறு முட்ட உண்பதில்லை. 'நொறுக்குத் தீனி' எனக் கொஞ்சம் மிக்சர் அல்லது கொஞ்சம் கச்சான் கொறிக்கலாம்.

அடேங்கப்பா! நள்ளிரவிலும் நொறுக்குத் தீனியா? அப்ப தூக்கம் (நித்திரை) என்னவாகும்? ஆறு தொடக்கம் எட்டு மணி நேர தூக்கம் (நித்திரை) பேணவிட்டால் உங்கள் ஆயுள் கெட்டுப் போகலாம்.

உணவு சமிபாடடைய (செமிக்க/ஜீரணிக்க) நேரம் கொடுத்து உண்டால் நீண்ட ஆயுள்!

"நாலும் எட்டும் ஆரோக்கியத்துக்கு உறுதி எனலாமோ :)" என வலைப்பூ ஆசிரியர் தன் எண்ணத்தைப் பதிலாகத் தந்திருந்தார்.

என்னங்க! யாழ்பாவாணன் பொறுக்கிப் பகிர்ந்ததில் ஏதாச்சும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டமாகப் பகிருங்களேன்.

முதலில "வயிறுமுட்ட உண்டாலும் பட்டென்று தூக்கம் வருமே! அது தான் 'தொண்டனுக்கும் உண்ட களை உண்டு' எனச் சொன்னார்களோ! இந்தத் தூக்கம் நன்றன்று. உண்ட பின் நான்கு மணி நேரம் கழித்து உண்டாலும் வயிறுக்குள்ளே சமிபாடடைய உடற்பயிற்சி (உடலிழைக்க வேலை செய்யலாம்) தேவை. அப்படியாயின் எட்டு மணி நேரம் நன்றாகத் தூங்கலாம். இந்தத் தூக்கம் நன்று." என்ற என்னுடைய எண்ணத்தையும் பகிருகிறேன்.

செவ்வாய், 4 ஜூலை, 2017

யுவகிருஷ்ணா: கட்டுரை எழுதுவது எப்படி?

கட்டுரை எழுதுவது எப்படி? என அறியாதவர் இருக்க முடியாது. ஆயினும், அக்கட்டுரை வாசகர் உள்ளத்தைத் தொட எப்படி எழுதுவது என்பதை இப்பதிவில் நீங்கள் காணலாம். அதனால், இப்பதிவை உங்களுடன் பகிருகிறேன்.

‘புதிய தலைமுறை’ இதழில் பணிக்கு சேரும்போது ‘எழுதுவது எப்படி?’ என்று மாலன், தான் எழுதிய பதினாறு பக்க சிறுநூல் ஒன்றை தந்தார். சி.பா.ஆதித்தனாரின் ‘இதழாளர் கையேடு’ போன்ற அந்நூல் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயன்படும். பல பத்திரிகை ஆசிரியர்கள் அந்த நூலை ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு திருப்பித் தருகிறோம் என்று கேட்டார்கள். அதுமாதிரி ஒருவரிடம் போன copy இன்னமும் எனக்கு திரும்ப வரவில்லை. மாலன் சார், ஒரு soft copy கொடுத்தால் மகிழ்ச்சி.

அது மட்டுமின்றி அவ்வப்போது நம்முடைய கட்டுரைகளை திருத்தும்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்து, அடுத்தமுறை அந்த தவறை திருத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்.

ஒருமுறை ‘இந்தித் திணிப்பு’ குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அரைகுறையாக வெந்திருந்தது. அதை வாசித்துவிட்டு, ‘கட்டுரை எழுதுவது எப்படி?’ என்று ஒரு மடலில் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். முடிந்தவரை அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.

‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று மாலன் சாரின் அனுமதியில்லாமலேயே அதை இங்கு பகிர்கிறேன். அவருக்கு தகவல்களை பரப்புவதில் பேரார்வம் உண்டு. எனவே எனக்கே எனக்காக கொடுத்த அறிவுரைகள் பலருக்கும் பயன்பட பகிர்வதை ஆட்சேபிக்க மாட்டார் என்றும் கருதுகிறேன். இப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இவர்களுக்கும் மூத்தப் பத்திரிகையாளரின் அனுபவ அறிவுறுத்தல்கள் உதவக்கூடும்.

திங்கள், 3 ஜூலை, 2017

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 06

எவரும் திறன்பேசி வழியே முகநூலில் மேய்ந்து கொண்டிருப்பதைக் காண்பீர். அவர்கள் நீண்ட நாளாக வலைப்பூவை மறந்து இருக்கலாம். ஆயினும், வலைப்பூவில் பதிந்தவை முகநூலைப் போலல்லாது என்றும் கண்ணுக்குக் காட்சி தருமே! திறன்பேசி வழியே மூகநூலில் துளித் துளியாகப் பதிவுகளை இட்டாலும் அவற்றைத் திரட்டி வலைப்பூவில் பதிவு செய்யலாம் வாங்க! இதோ எனது எடுத்துக்காட்டைப் பாருங்க.

"சிரிப்பு
உள/உடல் நலம் பேண
நல்ல மருந்து என்பேன்" எனத் தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"கோபத்தின் போது 13 நரம்புகள் இயங்குமாம்
சிரிப்பின் போது 65 நரம்புகள் இயங்குமாம்
ஆகையால்,
கோபத்தை விட சிரிப்பு
உடலெங்கும் செந்நீர் (குருதி) சீராகப் பரவ
உதவுவதால் நோய்களை விரட்டலாம்!" எனத் தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"எளிமையான புதுக்கவிதையை
இறுக்கமான புதுக்கவிதையாக
நறுக்கென வெளிப்படுத்தியவர்
கவிக்கோ அப்துல் ரகுமான்" என அவரது இழப்புச் செய்தி கேட்டதும் எழுதியது.

"பணம் உள்ளவரை உறவு" என்ற தலைப்பில்
"பணத்தைத் தேடும்வரை தெரியாது
படுக்கையில் கிடந்தால் தெரிகிறது...
தலையணைக்குக் கீழே உள்ள
பணத்தைக் கணக்கெடுக்க வரும்

உறவுகளை எண்ணிப் பார்க்கலாம்!" என்றவாறு தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.
"நேற்றைய நல்லவை இன்று வழிகாட்டும்
நாளைய விடியலில் எண்ணியவை தான்
(எடுத்துக்காட்டாகச் சேமித்து வைத்த பணம்)
இன்று நாம் வாழத் துணைக்கு வருமாயின்
நாளையை நாளைக்கே பார்ப்போமாயின்
இன்று எப்படி வாழ்வது? - எனவே
முன்கூட்டியே திட்டமிட்டால் - எவருக்கும்
இன்றைய வாழ்வு சறுக்காது!" என்றவாறு ஒரு பதிவுக்குப் பதிலிட்டுள்ளேன்.

"எந்த முகத்துக்கும் அஞ்சாமல்
சொந்த முகத்தைக் காட்டுங்கள்
உண்மையானவராயின்..." என்றவாறு ஒரு பதிவுக்குப் பதிலிட்டுள்ளேன்.

"முகநூல் பக்கம் வாங்க...
போட்டிகள் பலர் நடாத்துவாங்க
பங்கெடுத்துப் பயனீட்டலாமுங்க
பல்கலைக்கழகம் போகாமலங்கோ
BA, MA, MPil, Phd, Dr என்ற மாதிரிங்க
A4 தாளில் எழுதிய பதிவுக்குங்க
பல பட்டங்கள் அள்ளிக்கொடுக்கிறாங்க...
வழங்குவோர் யாரென்று தெரியாதுங்க
பெற்றவங்க பரப்புரை சொல்லுதங்கோ
இப்பவெல்லாம்
பட்டங்களுக்கே பெறுமதி இல்லையங்கோ..." என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"முகநூலில இப்ப புதிதாய்
பாப்புனைவோர் சங்கம் தொடங்கியாம்
கவிதைப் போட்டி நடாத்துறாங்களாம்
முதலிடம் - கவிதைக் கடவுள்
இரண்டாமிடம் - கவிதைப் பிரம்மா
மூன்றாமிடம் - கவிதை மன்னன்
பட்டங்களும் சான்றிதழுமாம்
வழங்கப்படும் என்கிறாங்க...
"நீங்களும் பங்கெடுத்தால்... வென்றால்...
கவிதைக் கடவுள் ஆகலாமே!" என்கிறாள்
என்னுடைய நூறாவது காதலி!
"பண்டிதர், புலவர், வித்துவான்" போன்ற
பட்டங்கள் பரிசளிப்பாங்க என்றால்
நான் பங்கெடுப்பேன் என்றதும்
"உலகக் கவிதை மன்னர்கள் சங்கம்" என்று
முகநூலில தொடங்கினார்கள் என்றால்
அப்படியும் கொடுப்பார்கள் என்றாள்
என்னுடைய நூறாவது காதலி!
"பண்டிதர், புலவர், வித்துவான்" போன்ற
பட்டங்கள் பரிசளிப்பாங்க என்றால் - அவங்க
முத்தின பைத்தியங்கள் தானே...
படித்துப் பெறவேண்டிய பட்டங்களை
எவரும் பரிசளிக்கலாமோ? - இப்பவெல்லாம்
தகுதியற்றவர்கள் முகநூலில
கவிதைப் போட்டி நடாத்துகிறாங்களோ
என்றதும்
என்னுடைய நூறாவது காதலி
ஓடி மறைந்திட்டாளே! - எப்படியோ
நூற்றியோராவது காதலியைத் தேடணும்
அதற்குக் கூட
முகநூலில நிறைய வசதி இருக்கே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"சொந்த வேலை புரிவோருக்கு
ஓய்வு என்பதும் இருக்காது
ஓய்வு ஊதியம் என்பதும் கிடையாது
ஆனால்,
உள்ளத்தில் நிறைவு கிட்டுகிறதே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"உலகில் மே-18 ஆம் நாள்
ஈழத் தமிழர் உறவுகள்
முள்ளிவாய்க்காலில்
செந்நீர் (குருதி) வெள்ளத்தில் மூழ்கிய போதும்
உலகமே இரங்காத நாள்! - ஆயினும்
ஈழத் தமிழரின் உண்மை நிலையை
உலகம் எங்கும் ஆழப் பதித்த நாள்!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.
இறுதிப் போரில் (20/05/2009 வரை) நெருக்குண்டு
தப்பியோரில் நானுமொருவன்
போரில் புண்ணாகிய (உடல் புண், உளப் புண்) உறவுகளை
என்னாலும் மறக்க இயலவில்லை
இயலுமானோர் உதவியதாக - இதுவரை
எனக்கும் தெரியவில்லை! - என்றாலும்
தன்னம்பிக்கை என்ற ஊன்றுகோல் உதவியோடு
வாழ்வில் நடைபோடும் - எங்கள்
ஈழத் தமிழர் நிலையை
உலகம் எட்டிப் பார்க்கவில்லையே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"நான் பிறந்தாலும் 'லைக்'
நான் மணந்தாலும் 'லைக்'
நான் கிடந்தாலும் 'லைக்'
நான் இறந்தாலும் 'லைக்'
எதற்கெல்லாம் 'லைக்'
எனக்கோ தலையைச் சுற்றுது..." என்றவாறு தோழன் ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"ஆணுக்கு நிகர் பெண் என்பது பொய்!
ஆணைவிட உயர்ந்தவள் பெண் என்பது மெய்!
281 நாள் குழந்தையைச் சுமந்து ஈன்றவள் - அவள்
எங்கள் உலகில் உயர்வானவள் - அவளை
இப்படிப் பார்க்காத கண்களும் குருடே!" என்றவாறு தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"வெற்றிகள் கிடைத்து விட்டாலும்
சோர்ந்து விடாதே - இனியும்
வெல்வதற்குப் பயிற்சிகள் தேவை!
என்றும்
பயிற்சிகளும் முயற்சிகளும் தான்
அடுத்து வரும் வெற்றிகளை
தீர்மானிக்கப் போகின்றன!" என்றவாறு எனது பெறாமகளுக்கு வாழ்த்துக் கூறும் போது இழையோடியது.

"பதினாறு செல்வங்களும் பெற்று
சீரும் சிறப்புமாக
கண்ணை இமை காப்பது போல
ஒருவரை ஒருவர் காத்து
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!" என்றவாறு தோழி ஒருவரின் திருமண அழைப்புக்குப் பதிவு செய்தேன்.

"நாளும் விடிகிறது
பொழுதும் கரைகிறது
நமது செயலும் பதிவாகிறது
ஆனால், நல்ல செயல்களே
நம்மை அடையாளப்படுத்துகிறது!
எல்லாம்
இன்று போய் நாளை வர
நேற்றைய நடப்பு நினைவூட்டுமே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"தங்கச்சியின் பேச்சும் உணர்வும்
எங்கள் தமிழர் உள்ளங்களில்
மாற்றத்தை ஏற்படுத்தினால் - அதுவே
தமிழுக்கு வெற்றி!" என்றவாறு மேற்காணும் ஒளிஒலி (Video) நாடாவைப் பார்த்ததும் எழுதியது.

"ஊருக்கு நல்லது செய்வோம்
சாக மாட்டோம், வாழ்வோம்!
நேரம் கரைவது போல
வாழ்க்கையும் கரைந்து போகும்
தன்னலம் கருதாது
பிறர் நலம் பேணி வாழ்வோர்
காந்தி, பாரதி போன்று
இன்றும் வாழ்வதைப் பாரும்!
சாவு பற்றி எண்ணாது
நேரத்தை வீணடிக்காது வாழ்வோம்!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"புகைத்தல்
உடல் நலத்திற்குக் கேடாகலாம் என்பது
அரச எச்சரிக்கை! - நானும்
வேற மாதிரி எச்சரிக்கிறேன்...
புகைத்தலால் தான்
புற்றுநோய் வந்து உயிரிழந்தேன்
இவ்வண்ணம் - உங்கள் முன்னே
புகையாக உலாவும் ஆவி!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"வலைப்பூ நடாத்துவது
இலகுவானதாக இருக்கலாம் - அதனை
பேணுவதென்பது இலகுவானதல்ல!
எழுதுவது என்பது
இலகுவானதாக இருக்கலாம் - அதனை
வாசகர் விரும்பும் வகையில்
எழுதுவது இலகுவானதல்ல!
வெளியிடுவது என்பது
இலகுவானதாக இருக்கலாம் - அதனை
வாசகர் கண்ணிற்கு எட்ட
முயலுவது இலகுவானதல்ல!
மொத்தத்தில இலகுவானது என்று
சொல்வதெல்லாம் - ஈற்றில
எத்தனையோ தடைகளைக் கடந்த பின்னரே
வெற்றிகளைத் தந்திருக்கிறது!
தங்கள் தமிழ் பற்று
தங்கள் விடாமுயற்சி
தங்கள் ஆளுமை, ஆற்றல்
தங்கள் பதிவர்களுடன் உறவைப் பேணும் சிறப்பு
தங்கள் வாசகர் விருப்பறிந்து வெளியிடும் ஆற்றல்
என்றவாறு நீளும்
தங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்!" என்றவாறு
இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களின் வலைப்பூவிற்கு
நான்காம் பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்த வேளை எழுதியது.


முகநூலில் (Facebook) துளித் துளியாக எழுதினாலும் ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க இயலாதே! துளித் துளியாக எழுதியதை ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க!!