07-01-2017 சனி மாலை 4 மணிக்கு கலைத்தூது அழகியற் கல்லூரி (டேவிட்
வீதி, யாழ்ப்பாணம்) அரங்கில் நடைபெற்ற "தகவம்" தமிழ்க் கதைஞர் வட்டத்தின்
'பரிசுக் கதைகள் - 03' நூலிற்கான அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன்.
வாசிப்புப் பழக்கும் குறைந்து செல்லும் வேளை, இலக்கியக் கலந்துரையாடல்
நிகழ்வுகளில் பங்குபற்றுவோரும் குறைந்து செல்லும் வேளை, இந்நிகழ்வில் ஒரளவு அறிஞர்களின்
வரவு நிறைவைத் தந்தமை 2017 இன் இலக்கியப் பயணம் சிறப்பாக இருக்கும் என்பதை நம்பலாம்.
"தகவம்" தமிழ்க் கதைஞர் வட்டம் பற்றியும் அவர்களது
பணி பற்றியும், 'பரிசுக் கதைகள் - 03' இற்கான மதிப்பீடும், சமகால இலக்கியப் பயணம் பற்றியும்
அறிஞர்களால் சிறப்பாகக் கருத்துக்கணைகள் வீசப்பட்டன. சுவைஞர்களுக்கு நிறைவைத் தந்தது
எனலாம். சுவைஞர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர இடமளிக்கப்பட்டது. நிகழ்வு வருகையாளர்களுக்கு
மகிழ்வைத் தந்திருக்கும் அதேவேளை பயன்மிக்க புத்தாண்டு நிகழ்வாக நான் கருதுகிறேன்.
இதனை விடச் சிறப்பாகச் சொல்வதற்கு, நான் ஒன்றும் பெரிய படைப்பாளியல்ல.
வலைப்பூ (www.ypvnpubs.com) நடாத்தும் வலைப் பதிவராக நான் உள்வாங்கிய சில கருத்துகளை
உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
"இலக்கியம் பேண அச்சு ஊடகங்கள், நூல் வெளியீடுகள் முதன்மை
நிலையில் உள்ளன. முகநூல் போன்ற மக்களாய (சமூக) வலைத்தளங்கள் உடனுக்குடன் நிகழ்வுகளைச்
செய்திகளைப் பரப்ப உதவலாம். வலைப்பூக்கள் (Blogs) மற்றும் வலைப்பக்கங்கள் (Webs) ஊடாகவும்
இலக்கியம் பேணினாலும் குறித்த வாசகர்களுக்கே சென்றடைகிறது." என்பன என்னைத் தாக்கின.
இதில் அச்சு வெளியீடுகளுக்கு அடுத்த நிலையில் தான் வலை வெளியீடுகள்
இலக்கியம் பேண உதவலாம் என்பதை ஏற்றுத் தான் ஆகவேண்டும். அதாவது வலை வெளியீடுகள் வசதியுள்ள
சிலரைச் சென்றடைந்தாலும் அச்சு வெளியீடுகளே அதிக வாசகர்களைச் சென்றடையும். ஆயினும்
அச்சு ஊடகங்கள் கவிதைக்குத் தனிப்பக்கம், கதைக்குத் தனிப்பக்கம் என இலக்கியப் பகிர்வுக்கு
முன்னுரிமை தராமல் விளம்பரங்களுக்கு முன்னுரிமை வழங்குவது துயரச் செய்தியே!
தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றத்தால் பலர் வலை வழி வெளியீடுகளில்
ஈடுபடுவதைக் காணலாம். அவ்வாறானவர்கள் இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றித் தரமான இலக்கியங்களைப்
படைக்க முன்வரலாம். வலை வழியே தரமான படைப்பாளிகள் இருந்தாலும் வாசகர் பக்கத்தில் அச்சு
ஊடகப் படைப்பாளிகளையே பெரிதும் மதிக்கின்றனர். எனவே, வலை வழி வெளியீடுகளில் ஈடுபடுவோர்
இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொண்டு அச்சு ஊடகப் படைப்பாளிகளின் நுட்பங்களைக் கற்றறியும்
வாய்ப்பைப் பெறலாம்.
இந்நிகழ்வில் எவரும் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்க வழியேதும்
முன்வைக்காத போதும் இலக்கியப் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் செயலாக இலக்கியக் கலந்துரையாடல்
நிகழ்வுகளைத் தொடர வேண்டும்; திறனாய்வு (விமர்சனம்) மற்றும் தாக்குரை (கண்டனம்) நிகழ்வுகளைத்
தொடர வேண்டும்; பொதுத் தலைப்பிலான கருத்தாடல் (கருத்து-எதிர்க்கருத்து/ வாதப் பிரதிவாதம்)
போன்ற நிகழ்வுகளைத் தொடர வேண்டும் என்ற கருத்தை நானும் உள்வாங்கக் கூடியதாக இருந்தது.
மொழியின் அடையாளம் இலக்கியம் என்பதை மறவோம். இலக்கியம் வாழுகின்றதாயின்
மொழி வாழுகின்றது எனலாம். தமிழ் இலக்கியம் பேண மேற்படி நிகழ்வுகளைத் தொடரப் பங்காளிகள்
தேவை. எல்லா இலக்கியக் குழுக்களும் இணைந்து (இந்நிகழ்வை மூன்று குழுக்கள் இணைந்து நடாத்தினர்.)
இவ்வாறான நிகழ்வுகளைத் தொடரலாம் என்ற கருத்தும் பகிரப்பட்டது.
படைப்பாளிகள் ஒன்றுகூடினால் படைப்பாக்கத் திறன் பெருகும். ஆனால்,
இலக்கியம் வாசகரைச் சென்றடையாது. எனவே, வாசகர் மற்றும் படைப்பாளிகள் இணைந்த ஒன்றுகூடலே
தமிழ் இலக்கியம் பேண உதவும் நிகழ்வுகளாகும். எனவே, இவ்வாறான நிகழ்வுகளில் வாசகர் பங்கெடுக்க
வாய்ப்பளிக்கும் முகமாக குறுகிய நேரக் கலை நிகழ்வையோ பட்டிமன்றத்தையோ நடாத்தலாம்.
எங்கள் தமிழ் மொழி வாழ, நாம் தமிழ் இலக்கியம் பேண ஒன்றுபடுவோம்.
வாசகர் எண்ணிக்கையைப் பெருக்க வழிகளை அமைப்போம். வாசகர் மற்றும் படைப்பாளிகள் இணைந்த
இலக்கிய ஒன்றுகூடல்களை நடாத்தி வெற்றிகரமாக முன்னெடுக்க உழைப்போம். இப்பணியில் எல்லோரும்
ஒன்றிணைந்து செயற்படுவதே நன்மை தரும்!
வலைப்பதிவர்களே! தங்கள் நாட்டிலும் தங்கள் ஊர்களிலும் இலக்கிய
மன்றங்களை அமைத்து இளைய வழித்தோன்றல்களுக்கு இலக்கிய நாட்டம் ஏற்படத் தூண்டுங்கள்.
இன்றைய இளசுகளுக்கு இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சிகள் வழங்காவிட்டால்,
நாளைய இளசுகள் தமிழ் இலக்கியம் படைப்பார்களா?
இன்றைய இளசுகளுக்கு இலக்கிய நாட்டம் வராவிட்டால், நாளை தமிழ்
இலக்கியம் வாழுமா?
தமிழ் இலக்கியம் வாழாவிட்டால் தமிழ் மொழி எப்படி வாழும்?
இதற்காகவே இலங்கையில் நானும் இரு இலக்கிய மன்றங்களில் இருந்துகொண்டு, இவ்வாறான முயற்சிகளுக்கு ஊக்குவிக்கின்றேன். தாங்களும்
தங்கள் நாட்டிலும் தங்கள் ஊர்களிலும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!