Translate Tamil to any languages.

செவ்வாய், 31 அக்டோபர், 2017

எழுத்தும் பயனும்

1
எழுத்து, உனக்கு சோறு போடுமா?
எழுத்து, உனக்கு வருவாய் தருமா?
எழுத்து, உனக்கு நற்பெயரைக் கொடுக்குமா?
எழுத்து, உனக்கு நல்வாழ்வைக் கொடுக்குமா?
என்றெல்லோ வீட்டார் கேட்டுத் தொல்லை!
கலைத்தீபம், கவிமுரசு, கவியருவி,
இலக்கியச் செம்மல் என்றெல்லாம்
பட்டம் தந்து பொன்னாடை போர்த்ததும்
என் எழுத்து, எனக்களித்த பரிசென்றுரைக்க
"தாளில் கிறுக்கிக் கொடுப்பதும்
சால்வையைத் தோளில் போடுவதும்
பார்வைக்கு அழகாய் இருக்கும் - அதில்
பெறுமதி இல்லைக் காணும்" என
பெண்டாட்டி என்மீது எரிந்துவிழுவாள்!
"உனக்குப் பிள்ளை, குட்டி கிட்டாததும்
எழுத்து, எழுத்தென மூழ்கிக் கிடந்ததாலே!" என
மாமிக்காரி ஒப்பாரி வைப்பதும் நிகழும்!
"இணையம், வலைப்பக்கம் எனத் தலைகாட்டி
தூக்கத்தை விற்று நோய்களை வேண்டுறியே!" என
மாமன்காரன் அறம் பாடுவதும் நிகழும்!
"என்ர அப்பன் பண்டிதருக்குப் படிச்சவர்
இவர் என்னதான் எழுதிக் கிழிச்சென்ன!" என
என்ர அப்பன் என்னைத் திட்டுவார்!
"என்ர அப்பன் உடையாருக்குப் படிச்சவர்
இவர் எழுதித்தான் என்ன பண்ணுவார்!" என
என்ர அம்மாவும் பொரிந்து தள்ளுவார்!
இப்படிக் கேள்விக்கணைகள் காதைக் குடைந்தாலும்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
என் எழுத்தை விரும்பிப் படிப்பவர்
உள்ளம் நிறைவைத் தரும் வண்ணம்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
எழுதுவதால் தான் நானும் நிறைவடைகின்றேன்
வாசகர் உள்ளம் நிறைவடைய - நாளும்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
நல்லதை எழுதுங்கள் நல்லதை வாசியுங்கள்
உள்ளம் நிறைவடைய உணர்ந்து செய்யுங்கள்
உள (மன) நோய்கள் கிட்ட நெருங்காது
உண்ணான நெடுநாள் வாழலாம் பாருங்கோ!

2. எழுதப் பழகிய வேளை

சொந்தமாக எழுத முடியாவிட்டாலும்
மாற்றாரின் பதிவுகளைப் போல
எழுத முயன்றல் கூட
சொந்தமாக எழுத வருமே!
நானும் அப்படித் தான்
மூ.மேத்தாவின் பாவரிகளைப் போல
எழுத முயன்ற பின்னே
ஈழத்துப் பத்திரிகைகளில் வெளியான
பாவரிகளைப் பார்த்தும் - அதே போல
எழுத முயன்ற பின்னே
பா/கவிதை நடை போல
சொந்தமாக எழுதப் பழகிக்கொண்டேன்!
எழுதப் பழகியதை வைத்தே
என் எண்ணங்களைப் பகிருகிறேன்!
ஆனால், நான் எழுதுவது
கவிதை அல்லது பா அல்லது பாடல்
எது போலவும் இல்லாவிடினும்
நான் கிறுக்குவது தமிழில் தானே!

3. நீங்களும் எழுதலாம்

எனது திறமைகளை வெளிக்கொணர உதவும்
உடைமைகளைப் பொறுக்கிச் சென்றவருக்கு
தெரியவில்லைப் போலும்
கைக்கெட்டியதைக் கையாளலாம் என்றே!
கரிதுண்டால் பா/கவிதை புனைந்து
பாரதியார் - தன்
உள்ளக்கிடக்கையை வெளியிட்டது போல
நானும் என் கைக்கெட்டியதை வைத்து
எனது திறமைகளை அரங்கேற்றுகிறேன் - நாளும்
எனது திறமைகள் வெளிவருகின்றனவே!
'முடியாது' என்பது
நம்மாளுங்க (மனித) அகரமுதலியில்
இருக்கக்கூடாது என்றாலும்
'முடியும்' என்பதற்கு
பயிற்சியும் முயற்சியும் இருந்தால் போதுமே!
அப்படியாயின் - நீங்களும்
எப்படியாவது உங்கள் திறமைகளை
அரங்கேற்ற முன்வாருங்கள் - உங்கள்
நல்லெண்ணங்களைப் பகிருங்கள்
எழுத்தும் பயனும் என்னவென்று உணருவீர்!

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

தமிழுக்குச் சாவு நெருங்கி வருகிறதா?

உலகத் தமிழ் வலைப்பதிவர்களே! வலைப்பக்க வாசகர்களே! "தமிழ் மொழி அழியும்" என்று பதிவுகள் போட்டுப் பேரெடுக்க முடியாவிட்டாலும் "தமிழுக்குச் சாவு நெருங்கி வருகிறதா?" எனச் சிறு குறிப்பினைப் பகிர முன்வருகின்றேன்.

முதலில் இந்த ஒளிஒலி (Video) பதிவைப் பாருங்கள்.

மேற்காணும் ஒளிஒலி (Video) பதிவினைக் கருதிற்கொண்டு, சற்றுச் சிந்திப்போமாக...

கடைசித் தமிழன் இருக்கும் வரை
தமிழ் வாழுமென்று எவரும் முழங்கலாம் தானே!
இலங்கை தமிழரின் தாயகமாம் - ஆங்கே
பௌத்தம் பின்பற்றிய தமிழரே சிங்களவராம்
இந்தியாவிலே 21 கோடி தமிழர் இருந்தனராம்
இப்ப பாரும் 6 கோடி தமிழர் இருக்கின்றனாம்
எப்படியோ தமிழர் பிறமொழிக்காரராக மாறவே
தமிழ் பேசும் உறவுகள் யாவும் சுருங்கினவாம்!
தமிழர் பிறமொழிக்காரராக மாறினால் பாரும்
தமிழ் பேசும் உறவுகள் உலகில் இருப்பரோ?
உலகில் தமிழ் பேசுவோர் குறைவதைக் காண
தமிழுக்குச் சாவு நெருங்கி வருகிறதா? என
எண்ணத் தோன்றிச்சு எழுதிவிட்டேன்!

நானும் இந்த எச்சரிக்கையை உணர்ந்து இரு மின்நூல்களை வெளியிட்டுள்ளேன். மேலும் பல வெளியிட உள்ளேன். மேலுள்ள தகவல் உண்மையா என்றறியக் கீழுள்ள இணைப்புகளைச் சொடுக்கி மின்நூல்களைப் படியுங்கள்.

இலகுவாகக் குளிர்மையாகப் பார்வையிட
வழமையாகப் பார்த்துப் பதிவிறக்க
உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.


"அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும்" https://senthilmsp.blogspot.com/2017/10/tamil-language.html என்ற பதிவைப் படித்ததும் இக்குறிப்பினைத் தங்களுடன் பகிர முடிந்தது.

வெள்ளி, 27 அக்டோபர், 2017

அம்மாவா அப்பாவா வாங்க வாதாடலாம்!

கடந்த தீபாவளியன்று (2017-10-18 ஆம் நாள்) காலை 9 மணிக்கும் மீண்டும் இரவு 8 மணிக்கும் பாலிமர் தொலைக்காட்சி  ஒளிபரப்பிய பட்டிமன்றத்தைப் பார்க்காதோர் பார்வைக்கு:

தலைப்பு: பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும்பங்காற்றுபவர் தாயா? தந்தையா?

நடுவர்: திருமிகு பழ.கருப்பையா அவர்கள்

தாயே அணி:-
புதுக்கோட்டை நா.முத்துநிலவன் (அணித்தலைவர்)
திருமிகு “ரேடியோ மிர்ச்சி“ மிருதுளா, சென்னை
திருமிகு மதுரை முத்து,
திருமிகு சாரோன், சென்னை.

தந்தையே அணி:-
மதுக்கூர் இராமலிங்கம் (அணித்தலைவர்),
திருமிகு பேரா.கல்யாணசுந்தரம், கோவை
திருமிகு தேவகோட்டை மகாராஜன்,
திருமிகு பர்வீன் சுல்தானா, சென்னை

மேற்காணும் தகவல் பெற்ற இணைப்பு-

முதலில் பட்டிமன்றம்; அடுத்து வாதாடலாம் வாங்க!
உலகத் தமிழர் வீடுகளில் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பட்டிமன்றம் இதுவென்பேன்.


மேற்காணும் பட்டிமன்றத்தைப் பார்த்தாச்சா?
பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும்பங்காற்றுபவர்
அம்மாவா அப்பாவா எனக்கும் ஐயம் தான்...
ஆயினும்
பட்டிமன்ற நடுவர் கூற்றுப்படி உணர்வீர்
சான்றுகள் அதிகம் காட்டி நின்று
அம்மா பக்கம் ஈர்த்து விட்டனர்
பாவலர் முத்துநிலவன் குழுவினரே!
பட்டிமன்ற நடுவரின் உறைப்பான தீர்ப்பை
நானும் உங்களுடன் பகிர விரும்பினேன்
விளைவாக இப்பதிவு உங்கள் பார்வைக்கு!

அம்மாவும் தேவை அப்பாவும் தேவை
நானென்ற குழந்தை நாடறிய...
அம்மாவின் அன்பும்
அணைப்பும் அறிவூட்டலும்
அப்பாவின் அறிவூட்டலும்
நம்பிக்கையூட்டலும் வழிகாட்டலும்
என்றவாறு எண்ணிப்பார்த்த வேளை
இருவரது பணியும் எனக்குத் தேவை தான்...
நானென்ற மனிதனை உலகறிய...
உலகத் தமிழ் வலைப்பதிவர்களே!
உங்களை வளர்த்தெடுத்ததில் பெரும்பங்காற்றியவர்
அம்மாவா? அப்பாவா? - உங்கள்
வாழ்வில் நீங்கள் எண்ணிப்பார்த்ததை
அப்படியே பகிருங்கள் - அவை
எப்படியாயினும் பலருக்கு நிறைவைத் தருமே!


கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பயன்பெறுக.

புதன், 25 அக்டோபர், 2017

தமிழில் பா/கவிதை புனைந்து காட்டுவோம்!

இலக்கியம் தோன்றிப் பின் தான்
இலக்கணம் தோன்றியது என்று தான்
எண்ணிப் பா/கவிதை புனையலாம் தான்
என்றும் எண்ணியதை எழுதலாம் தான்
எழுதவே வந்தமரும் சொல்கள் தான்
தமிழாக இசைத்து ஒலிக்கத் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

சீருக்குச்சீர் முதலெழுத்துப் பொருந்தத் தான்
மோனையென்று வந்தமையத் தான்
சீருக்குச்சீர் இரண்டாமெழுத்துப் பொருந்தத் தான்
எதுகையென்று வந்தமையத் தான்
"பாலைப் போல வெள்ளை" என்று தான்
உவமையென்று வந்தமையத் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

உரைநடை அமைப்பை ஒதுக்கித் தான்
சுவைமிகு சொல்கள் வந்தமரத் தான்
எதுகை, மோனை, உவமை வரத்தான்
வாசகர் மீளமீள வாசிக்கச் சுகந்தான்
சுருங்கச் சொல்லி உணர்த்தத் தான்
உணர்வுகளின் மூச்சாக அமையத் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

எழுதுகோல் ஏந்தினால் எவரும் தான்
எழுதினால் பா/கவிதை ஆகலாம் தான்
எழுதவே வந்தமரும் சொல்களில் தான்
வடமொழி, பிறமொழிச் சொல்களும் தான்
சாட்டுக்குத் "Thanks" என ஆங்கிலமும் தான்
நுழைந்தே தமிழைக் கொல்லத் தான்
பா/கவிதை புனைவது ஆகாது தான்!

தமிழில் உலாவுவதும் பிறமொழிகள் தான்
தமிழருக்கு அத்தனையும் தெரியாது தான்
தெரிந்த நற்றமிழ் சொல்களில் தான்
தமிழர் வாழ்விடச் செய்திகளைத் தான்
சூழவுள்ள மக்கள் வாழ்வைத் தான்
தம்மெழுத்து நடையினில் சொல்லித் தான்
தமிழில் பா/கவிதை புனையலாம் தான்!

இலங்கை, யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் 21/10/2017 சனியன்று உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய '1000 கவிஞர்கள் கவிதைகள்' என்ற பெருநூல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இக்கவிதை இடம்பிடித்துள்ளது.மேலே குறிப்பிட்ட '1000 கவிஞர்கள் கவிதைகள்' என்ற பெருநூல் பற்றிய எனது கண்ணோட்டத்தினை 24 நேரத்தில் மின்நூலாக்கி உள்ளேன். அதனைக் கீழே பார்வையிடலாம்.


பக்கம் பக்கமாக பிரட்டிப் பார்க்க

பதிவிறக்க

புதன், 18 அக்டோபர், 2017

வலைப்பூ உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துகள்

பண்டிகைகள் எல்லாம்
பண்பாட்டினை வெளிப்படுத்தும்...
வண்டிகளை நிறைக்கும் விருந்தோம்பல்
வண்டிகளில் மகிழ்வோடு உலாவர
அழகான ஆடையணிகலன் அன்பளிப்பு
வழக்கமாக அடிக்கடி உள்ளம் நினைவூட்ட
பழக்கப்படுத்துவர் அன்பளிப்பு பொருள் (Gift) நீட்டி
பழகிப்போன பண்டிகைக் காலத்தில்
வழக்கமாக என்னைப் போன்றோர்
தெருவழியே ஏழை, எளியோராக வாழ
தெருவழியே செல்லும் உங்களில் எவராயினும்
இப்படி எதுவாயினும் எமக்கு உதவினீர்களா?
அப்படி உதவி செய்திருந்தால் - நீங்கள் தான்
தெருவழியே வாழும் எங்களுக்குக் கடவுள்!
இவ்வண்ணம்
தெருவழியே வாழும் ஏழை, எளியோர்!

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

படம் பார்த்துப் பா புனைவீரா?

நான் டுவிட்டரில் பார்த்த ஒளிஒலி ( video) காட்சியை நீங்களும் பார்த்துப் பாப்புனைந்து பகிருங்கள்.
Check out @Gods_Rule’s Tweet: https://twitter.com/Gods_Rule/status/919386129979252737?s=09


நம்மாளுங்க நடுவீதியில்
திறன்பேசி பார்க்கையில்
நாயார் காலைத் தூக்கி
சலம் (மூத்திரம்) அடிக்கிறதைப் பாரு...
நல்ல கவிதை வந்தால் எழுது!
அப்படியா
பா நடையிலே எழுதுகிறேன் பாரு!

நடைபேசி இருந்தால்
பணமும் மின்சேமிப்பும்
இருந்தே ஆகவேண்டும்!
பரவாயில்லை,
நம்மாளுங்க தயாராகவே இருப்பாங்க...
ஆனால்,
நடுவீதியிலும் நம்மாளுங்க
நடைபேசி பார்த்துச் செல்ல
வண்டிகள் வந்து மோத
நம்மாளுங்க சாவடைவது
வழமையான செய்தியாயிற்றுப் பாருங்கோ!
சூழவுள்ள இடங்களை நன்கு அறியாமலே
சாலையோரம் குந்தியிருந்து
திறன்பேசியில் வலைபக்கம் பார்க்கையிலே
அந்தப் பக்கமாய் வந்த நாயார்
அழகாகப் பின்னங்காலைத் தூக்கி
சலம் (மூத்திரம்) அடித்துக் குளிப்பாட்டவே
நம்மாளுங்க
துள்ளிக் குதித்துச் சிந்திக்கிறாங்களே!
இப்பவெல்லாம்
நடைபேசியைத் தூக்கிவிட்டால்
நம்மாளுங்க
சூழலையே மறந்து விடுகிறாங்களே!
பரவாயில்லை,
நாடித் தேடி வரும் சாவுக்கும்
நம்மாளுங்க தயாராகவே இருப்பாங்க...

*இந்தக் கவிதை நடைப் பதிவுக்கு "நம்மாளுங்க தயாராகவே இருப்பாங்க..." என்ற தலைப்பைப் போட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

'தமிழ் இலக்கிய வழி' மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்.

வலையுலகத் தமிழ் வாசகர்களே! படைப்பாளிகளே!
எமது அன்றாடக் கருத்துப் பரிமாறலாக முகநூல் (Facebook) இருந்தாலும் உங்கள் பதிவுகளைத் தொகுத்துப் பரிமாற வலைப்பூ (Blog), வலைப்பக்கம்(Web), கருத்துக்களம் (Forum) ஆகியன அமைந்தாலும் மின்நூல்களும் (eBooks) மின்இதழ்களும் (eZines) இன்னொரு சூழலில் முதன்மை பெறுகிறது. அதாவது, மின்ஆவணமாகக் (eDocument) கணினியில் சேமித்து வைத்து விரும்பிய வேளை படிக்க முடிகிறது. இவற்றை மின்நூலகங்களில் (eLibrary) பேணிப் பகிருவதால் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வாய்ப்பும் உண்டும்.

இதனடிப்படையிலேயே நாம் 'தமிழ் இலக்கிய வழி' எனும் காலாண்டுக்கான மின் இதழ் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளோம். இம்முயற்சிக்குக் கிடைக்கும் தங்கள் ஆதரவைக் கருத்திற்கொண்டு, பின்னர் இதனை இரண்டு மாதத்துக்கு ஒன்றாக வெளியிடவும் எண்ணியுள்ளோம். எனவே 'தமிழ் இலக்கிய வழி' எனும் மின் இதழ் எவ்வாறான உங்கள் பதிவுகளை உள்வாங்கும் என்பதனை அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

உங்கள் பதிவுகளை எமது 'தமிழ் இலக்கிய வழி' எனும் மின் இதழுக்கு அனுப்பி உதவுங்கள். அதன் மூலமும் வலையுலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் உங்களை அடையாளப்படுத்த முடியும். அதேவேளை வலையுலகத் தமிழ் வாசகர்கள் ஊடாக உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு நீங்களும் உங்கள் வழிகாட்டல் பணியைச் செய்ய முடியும். எனவே, எமது தமிழ் இலக்கிய வழி 01 இற்கான பதிவுகளை 20/12/2017 புதன் இற்கு முன்னதாக அனுப்பி உதவுங்கள். மேலதிகத் தகவலைப் பெற மேற்காணும் இணைப்பைச் சொடுக்கி எமது வழிகாட்டலைப் பின்பற்றவும்.

வாசிப்புப் போட்டி - 2017

போட்டி விரிப்பறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
  
திருவள்ளுவரின் வழிகாட்டலின் படி

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. (108)

விளக்கம்:-
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது. நன்மை அல்லாத விஷயங்களை அன்றைக்கே மறந்து விடுவது நல்லதாகும்.
07/10/2017 அன்று எல்லா வழிகளிலும் எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த ஆயிரக் கணக்கான உலகெங்கும் வாழும் உறவுகளுக்கு, யாழ்பாவாணன் (புனைவுப் பெயர்) என்றழைக்கப்படும் யாழ் மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம் ஆகிய நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

சனி, 7 அக்டோபர், 2017

அகவை நாற்பத்தொன்பதில் முதல் பதிவு

01-09-2017 அன்று தமிழகம், கன்னியாகுமரியில் தமிழ்நண்பர்கள்.கொம் தள மேம்பாட்டுக் குழு நடத்திய தமிழ்ப்பற்றாளன் வினோத் - கன்னியாகுமரி அவர்களின் நினைவேந்தல் மற்றும் "உயிரின் மெய்யெழுத்து" நூல் வெளியீட்டு நிகழ்வில் நூலாய்வு செய்கிறேன்.
 

7102017 என்பதை திருப்பிப் பார்த்தாலும் 7102017 ஆகவே வருகிறது (இதனை ஒரு மூத்த பதிவர் முகநூலில் பகிர்ந்திருந்தார்.) அது சரி, 7102017 - 7101969 எனின் 48 ஆகும். ஆயினும் 8102017 - 7101969 எனின் 48+1 ஆகும். அப்படியாயின், அகவை நாற்பத்தொன்பதில் முதல் பதிவை இடுகை செய்கிறேன் எனப் பொருள் கொள்ளலாம்.அகவை நாற்பத்தொன்பதில் தோன்றிய புதிய எண்ணங்கள்!
முதன்மைத் தளம் Blogger இல்
பகிர்வுத் தளங்கள் Tumblr, Wordpress இல்
பரப்புத் தளங்கள் G+, Facebook, Twitter, Linkedin இல்
சிறப்பத் தளங்கள் Instagram, Pinterest, SoundCloud, YouTube

இவ்வாறான மேலும் பல தளங்களூடாக யாழ்பாவாணனின் வலையமைப்பு மீள வடிவமைக்கப்பட்டுத் தமிழ்ப் பணியைத் தொடரவுள்ளேன். உலகெங்கும் உள்ள தமிழ் வலைப்பதிவர்களை இணைத்துத் தமிழ்ப் பணி செய்வதற்கு உதவுவீர்கள் என நம்புகின்றேன்.

இனி அடிக்கடி தங்கள் வலைப்பக்கங்களில் என்னை நீங்கள் காணமுடியும்!

நன்றி.