Translate Tamil to any languages.

சனி, 26 ஆகஸ்ட், 2017

வலைவழியே பதிவர்களிடையே பெரும் மோதல்!

"மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017" என்னும் முயற்சியில் இரண்டு மின்நூல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம். தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.


Image result for bloggers

பதிவர் - 01:

"எழுத்து...
கவிதையோ கதையோ
நையாண்டிப் படைப்புகளோ
எதுவாகினும்
எழுத்து இறைவனின் வரம்." என்பது
அறிஞர் ஒருவரின் எண்ணம்!

"எழுத்தாளரையோ
பாவலரையோ (கவிஞரையோ)
படைப்பாளியையோ
இறைவன் (கடவுள்) ஆக்கவில்லை;
அவர்கள்
தாமாகவே உருவாகிறார்கள்." என்பது
சின்னப்பொடியனாம் எனது எண்ணம்!

எடுத்துக்காட்டாக எண்ணிப்பாரும்
காசில்லாத வேளை
உறவுகள் நெருங்க வாய்ப்பில்லைத் தான்.
நாய் வயிற்றுக்கு
உணவிடக் காசில்லை என்றாலும்
நாய் கூடத் திரும்பிப் பார்க்காது தான்.
இந்தச் சூழலில் தான்...

பணம் இருந்தால்
நிழல் போல உறவுகள்...
பணம் இல்லையென்றால்
நாயும் எட்டிப்பார்க்காதே!
என்றும்

பணமுள்ளவரை உறவுகள்
உணவுள்ளவரை நாய்
வாழ்க்கையில் சந்திக்கலாம்!
என்றும்

இல்லாத உறவும் சொல்லாமல் கூடும்
கையில் பணமிருக்கப் பாரும்!
என்றும்

பணமென்றால் பிணமும் பிழைக்கும் (உயிர்க்கும்/ வாழும்)
என்றும்

எழுத முடிகிறது என்றால் - அது
இறைவன் (கடவுள்) அருள் (வரம்) அல்ல;
இப்படியெல்லாம் எழுத வைத்தது
எழுதியவர் வாழ்ந்த சூழலே!
எவரையும் எழுதத் தூண்டுவது
அவரவர் வாழும் சூழலே தவிர
ஆண்டவன்/ கடவுள்/ கடவுள் அல்ல
உள்ளத்தைத் தொட்ட
உள்ளத்தில் நொந்த
ஒன்றோ பலவோ
(அதாவது, வாழ்விடச் சூழல்)
எழுதத் தூண்டுவதால்
ஒருவர்
எழுத்தாளராகவோ
பாவலராகவோ (கவிஞராகவோ)
படைப்பாளியாகவோ
உருவாகுகின்றார்! - உண்மையில்
கலைஞர் பிறப்பதில்லை
வாழ்விடச் சூழலே
கலைஞரை உருவாக்குகின்றது
என்பதே என் எண்ணம்!

பதிவர் - 02:

நீங்களும் பாவலனாக (கவிஞனாக) வர
எண்ணிப்பார்த்ததுண்டா?
எண்ணிப்பார்த்ததை
பா (கவிதை) நடையிலே எழுதினால் கூட
பாவலனாக (கவிஞனாக) வரமுடியாதா?
பார்த்ததைப் பார்த்தபடி
கேட்டதைக் கேட்டபடி
உணர்ந்ததை உணர்ந்தபடி
எண்ணியதை எண்ணியபடி
இப்படியும் அப்படியுமின்றி
உள்வாங்கியதை உள்ளபடி
நன்மை கருதி நல்லபடி
அச்சமின்றிப் பாவடிகளில்
பறைசாற்றும் பாவலர்கள்
உலகையே உருட்டிவிடக் கூடிய
உண்மையான வீரர்களே! - நம்ம
பாரதி கரித்துண்டால் தெருவில் எழுதி
(சான்று: கவிராஜன் கதை - வைரமுத்து)
வெள்ளையனை வெளியேற்றப் போராடியவரே!
நானும்
இப்படிப் பாவலனாக வர
எண்ணிப்பார்ப்பதுண்டு - ஆனால்
எனக்கோ
நன்றாகப் பாப்புனைய வராமையால்
பா (கவிதை) நடையிலே கிறுக்குகிறேன்
என்றோ ஒரு நாள்
பாவலனாக (கவிஞனாக) வருவேனென...

பதிவர் - 03:

உறவுகளே! எழுதும் வேளை 
தவறுகள் வரத்தான் செய்யும் - அதற்காக
எழுதுவதையே நிறுத்துவது நல்லதல்ல!
எழுதுங்கள்... எழுதியதைப் பகிருங்கள்
வாசிப்பவர்கள் வாசித்த பின் - அவர்கள்
தெரிவித்தால் தான் தெரிகிறதே
நம் எழுத்தில் மின்னும் பிழைகள்! - அவற்றை
திருத்திக்கொண்டு எழுதுங்க உறவுகளே!
இலக்கை இயம்புதல் இலக்கியம் என்றால் - உன்
எண்ணத்தைச் சுவையாகச் சொன்னாலும் இலக்கியமே!
இலக்கியம் தோன்றிய பின் தானே
இலக்கணம் தோன்றியது என்றால்
தவறுகள் களையப்படத் தானே
இலக்கணம் தோன்றியது என்பேன்!
வாசித்தவர் சுட்டும் தவறைத் திருத்தி
எழுதுங்க உறவுகளே! படைப்பாளி ஆகலாம்!!
எழுதுங்கள், எழுதியதைப் பகிருங்கள்
வாசிப்பவர் வாசித்ததும் பிழைகளைச் சுட்ட
சட்டென்று திருத்திக் கொள்ளப் பழகுவோம்
 
திருத்திக்கொள்ளத் தெரிந்து கொள்ளலாம்
இலக்கியத்தோடு ஒன்றிய இலக்கணம் எல்லாம்!
எண்ணங்களை வெளிக்கொணரும் போது
இயல்பாக இறுக்கமாக எழுத முயல்வோம்
இலக்கணம் தானாக வந்து குந்தும்
இலக்கணத்திற்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தலாமோ?
எழுதுங்க உறவுகளே! - என்றென்றும்
உங்கள் எண்ணங்களைப் பகிருங்க உறவுகளே!

பதிவர் - 04:

ஓ! படைப்பாளிகளே!
திறனாய்வு (விமர்சனம்) இல்லாத
படைப்புகளும்
தாக்குரை (கண்டனம்) இல்லாத
படைப்புகளும்
உப்புப் புளி காரமில்லாத
சோறுகறியும்
விரும்பக் கூடியதாக
எவருக்கும் இருக்காதே!
இத்தால் எல்லோருமறிய
திறனாய்வு (விமர்சனம்) செய்வோர்
செய்யட்டும் - அது
அவர் பணி...
தாக்குரை (கண்டனம்) செய்வோர்
செய்யட்டும் - அது
அவர் பணி...
எல்லாவற்றுக்கும் முகம்கொடுக்கும்
எமது பணி என்ன?
திறனாய்வுக்கும் தாக்குரைக்கும்
தாக்குப்பிடிக்கக்கூடியதாக
படைப்புகளை ஆக்குவதே
எமது பணியாக இருக்கட்டுமே!

பதிவர் - 05:

சொல் சிக்கனம் கவிதைக்கு அழகு.
வேண்டாத வரிகளைக் குறைப்பது
கதைகளுக்கு அழகு.
கவிஞனுக்கு வறுமை வரலாம்
எழுத்துக்கு வறுமை வரலாமா? - ஏன்
சொல்களுக்குத் தட்டுப்பாடா ?
வேண்டிய இடத்தில் வரவேண்டிய
சொல்லோ வரிகளோ வராதவேளை
எழுத்தில் செழுமை இல்லையோ!
எழுதுகோல் ஏந்தியோர்
கொஞ்சம் எண்ணிப் பார்க்கலாம்...!
அதற்காக
எழுதாமல் இருந்து விடாதீர்கள்!
"அடடே! இப்பவெல்லாம்
"எழுத்தசை சீர்தளை அடிதொடை" என
இவையாறும் அறியாப் பாவலர் - பலர்
இணையத்தில் உலாவுவதைக் காண்பீர்!" என
என்னையும் நோகடிப்பாங்க...
நானும் எழுதிக்கொண்டே இருக்கிறேன்! 28-08-2017 அன்று உங்கள் யாழ்பாவாணன் இந்தியா (சென்னை) வருகிறேன். சென்னையில் 03-09-2017 ஞாயிறு இயன்றளவு பதிவர்களையும் சந்திக்கவுள்ளேன். முகவரி பின்னர் தெரிவிக்கின்றேன். 29-08-2017 தொடக்கம் 05-09-2017 வரை எனது பயணம் சென்னை, வடலூர், கன்னியாகுமரி, சென்னை எனத் திட்டமிட்டுள்ளேன்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

நகைச்சுவை எண்ணங்கள் சில...

1
நகைச்சுவையாகப் பேசுவோம்; நோய்களை நெருங்காமல் பேணலாம். அப்ப, நகைச்சுவையும் மருந்தாகுமோ?

அதிக நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்குவதால் நகைச்சுவையால் நம்முடலில் நோய்களை எதிர்க்கும் பலம் (சக்தி) பெருகுமாமே! அப்ப, அழுவதை நிறுத்துவோமா?

2
படச்சுருளைப் போட்டுப் (CD, DVD இல) படம் பார்க்கையில் முன்னுக்குப் பின் உருட்டிப் பார்ப்பது போல தொலைக்காட்சி (SUN TV, சக்தி TV) நிகழ்ச்சிகளை பார்க்க முடியாதா?

அதற்கேற்ற தானியங்கி (Remote) இருந்தால் முடியுமே!

3
உங்க கணவன் இரவில தான் தொழிலுக்குப் போறாராமே! அவங்க என்ன பண்ணுறாங்கோ?

மூன்றெழுத்தில அவரது தொழில், நல்ல வருமானம்! அது எதுவென எண்ணிப்பாரு! 

4
கள்ளி சங்கிலியை அறுத்திட்டுப் போக, அவளோ வெள்ளி பார்க்கிறாளே!

தங்கப்பூச்சுப் பூசிய இரும்புச் சங்கிலியா இருக்குமோ?

5
பல சரக்குக் கடையில பொருள்களைப் பொறுக்கியவர், வெளியில எடுத்துவர முடியவில்லையாம்.

ஒளிப்படக் (CC TV இல) கருவியில பணம் செலுத்தாததைக் காட்டுதாமே!

6
அவருக்கு அடிக்கடி காதல் தோல்வியாமே!

திருமணம் என்றதும் கொடுப்பனவு (சீதனம் + ஆதனம்) கேட்பதாலேயாம்!

7
இவளைக் காதலிக்கக் கேட்பவரெல்லாம் குதிக்கால் பிடரியிலடிக்க ஓடுறாங்களாமே!

தானோ காவற்றுறைக் கதிரவனின் மனைவி என்றதும்...

8
கனக்கப் படித்தவருக்கு வேலை கிடைக்குதில்லையாமே!

தொழிலேதும் தெரியாதாம், வைத்திருப்பதோ போலிச் சான்றிதழ்களாம்!

9
மூக்கு முட்டக் கடையில விழுங்கிப் போட்டு, கண்ணை உருடிப் பிரட்டி முழிக்கிறாரே!

காதலியின் கைப்பையில காசில்லையென, அவளும் கைவிரித்ததாலே!

10
பாட்டு எழுது என்றால்
எழுதுகோல் சரியில்லையாம்
பாட்டுப் படி என்றால்
ஒலிவாங்கி சரியில்லையாம்
ஆட்டம் போடு என்றால்
பாட்டுச் சரியில்லையாம்
நடித்துக் காட்டு என்றால்
அரங்கு (மேடை) சரியில்லையாம்
ஆனால்,
தானும் கலைஞராம்!

எதற்கெடுத்தாலும் முடியும்
ஆனால் - அதற்கான
தளம் சரியில்லையென
சாட்டுச் சொல்லும் கலைஞரோ!

புதன், 9 ஆகஸ்ட், 2017

பா/ கவிதை நடையில கிறுக்கிய சில...

1- இந்த நோவு எவருக்கும் வேண்டாம்!
அறிவான கண்கள்
கண் முன்னே நோட்டமிட்டனர்...
பண்பான கண்மணிகள்
பாடியென்னை ஈர்க்க முனைந்தனர்...
அழகான பெண்கள்
என் நிழல் போல அலைந்தனர்...
சூழவுள்ள வீட்டு வாலைகள்
அடிக்கடி எட்டியெட்டிப் பார்த்தனர்...
அப்படியிருந்தும்
ஏன் தான் காதல் உணர்வு
எனக்கு வரவில்லையோ...?
ஐம்பது நூறாயிரம் அன்பளிப்பு
(ஐம்பது இலட்சம் இனாம்)
வெளிநாட்டு மகிழுந்து (BMW Car)
பத்துப் பரப்பு நிலத்தில மாடிவீடு
ஐம்பது பரப்பு நெல்லுக் காணி
நூறு பரப்புப் பனையடைப்பு/ தென்னந்தோப்பு
என்பனவெல்லாம்
கைக்கெட்டுமாயின் நல்வாழ்வு
என்றெண்ணி இருந்தமையால்
என் உள்ளத்திலே காதல் உணர்வு
எட்டிப் பார்க்கவில்லையோ...?
அகவை ஐம்பதாகையில்
கறுப்பி ஒருத்தி கைகுலுக்கினாள்...
அரைச் சதமும் வேண்டாமல்
மஞ்சள் கயிற்றால் மூன்று முடிச்சிட்டு
இல்வாழ்வில் இணைந்தேன் - இன்று வரை
எனக்குப் பிள்ளைகள் இல்லையே!

2- பழகலாம் வாங்க!

வாழ்க்கையில் - நாம்
எல்லோரையும் சந்திப்பதே
எதிர்பாராமல் (விபத்தாகத்) தான்!
ஆதலால்,
எவரையும் எவரும்
உள்ளம் புரிந்து பழக
வாய்ப்பில்லைத் தான்!
பழகிய பின்னே
எவரையும் எவரும்
உள்ளம் புரிந்திட உணர்ந்தே
விலகுவதும் இயல்பு தான்!
வாழ்வும் நிரந்தரமில்லை
வாழ்வில் சந்திப்போரும் நிரந்தரமில்லை
எதிர்பாராமல்
வாழ்வில் எதுவும் நிகழலாம்
எவரும் பழகலாம் பிரியலாம்
ஏற்றுத் தான் ஆகணும்!
எமக்காக
எமது எதிர்பார்ப்புகளைப் புரிந்தவாராக
எதிர்பாராமல் எவரும் சந்திக்கலாம்
அவர்களைப் புரிந்து
அணைத்துக்கொள்வோம் - அதற்காக
அடுத்தவரை வெறுத்துப் பகைப்பதில்
பயனில்லைத் தான்!
குப்பையில் போட்ட குண்டுமணியும்
ஒரு நாள் தேவைப்படுவது போல
ஒரு நாள் எவரையும்
எமக்குத் தேவை என்றெண்ணி
ஓடும் பழமுமாகவேனும் பழகு!

3- இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை!

வீட்டு மரத்தில
காய்த்த பலாப்பழம் கண்டு
நீங்களும் வெறுக்கலாம்
வீட்டு மரத்தில
காய்க்காத பலாப்பழம் கண்டு
நீங்களும் விரும்பலாம்
அது போலத் தான்
உறவோ நட்போ
கண் முன்னே இருக்கையில்
எவரும் பெறுமதி அறியார்...
உறவோ நட்போ
கண் முன்னே இல்லையெனில்
எல்லோரும் பெறுமதி உணருவார்...
எல்லாமே
நான் வாழும் வேளை
என்னைத் தூற்றுவதும் ஆன
நான் சாவடைந்த பின்னே
என்னைப் போற்றுவதும் ஆன
என்னைச் சூழவுள்ள
மக்களின் பார்வையைப் போலவே!

4. பொறுமையாக இருப்போம்!

தாம் தம்முடையதை அடைய
மாற்றாரை நோகடித்துப் பெறுவதோ
தாம் தம்முடைய மகிழ்ச்சிக்காக
மாற்றாரை நோகடித்துப் மகிழ்வதோ
உண்மையில் உளநோய் தான்!
சுருங்கச் சொல்லப் போனால் - அடுத்தவர்
கண்ணீர் வடிப்பதைக் கண்டு - அதில்
மகிழ்ச்சியைக் கொண்டாடுவோருக்கு
உண்மையில் உளநோய் தான்!
அவங்க அப்படித் தான்...
அவங்க செயலால் - நமக்கு
வெறுப்புத் தான் வரும் - அதற்காக
அவர்களைப் பகைக்காமல் - நாம்
பொறுமையாக இருப்போம் - அதனால்
நாம் பேணி வந்த நன்மதிப்பு
இன்னும் அதிகரிக்குமே தவிர - என்றும்
குறைந்து விடப் போவதில்லையே!
என்றபடி - நாம்
நமது உளநலனில் அக்கறை கொள்வோம்! 

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தம்பி! நீ போன இடம் எங்கே?


2010 இல் தான் வலைவழியே எனது இலக்கியப் பதிவுகளைப் பகிர முனைந்தேன். அக்காலத்தில் https://twitter.com/tamil2friends வழியாகவும் https://www.facebook.com/tamilnanbargal/ வழியாகவும் என் கண்ணுக்கு எட்டிய ஒரே தளம் தமிழ்நண்பர்கள்.கொம் தான். அதில் இணைந்து இலக்கியப் பதிவுகளைப் பகிரத் தொடங்கிய பின்னரே, ஏனைய தள இணைப்புகள் கிடைத்தன.

இத்தனைக்கும் தமிழ்நண்பர்கள்.கொம் தான் எனது இணையவழி இலக்கியப் பயணத்திற்கான தாய்த் தளமெனப் பெருமையுடன் அடிக்கடி கூறிக்கொள்வேன். அந்தப் பெருமைக்கும் இணையவழியில் எனக்குக் கிடைத்த நன்மதிப்புக்கும் வினோத் (கன்னியாக்குமரி) என்ற ஓர் அறிஞன் தான் காரணம். அந்த அறிஞன் வினோத் (கன்னியாக்குமரி) அவர்களால் தான் "யாழ்பாவாணன்" என்ற என்னை உலகத் தமிழ் வலைவழி வாசகர்கள் (eReaders) அறிந்திருக்க முடிந்ததை அந்த ஆண்டவனும் அறிவான்.

வினோத் (கன்னியாக்குமரி) அவர்களின் படைப்புகள் தமிழ்நண்பர்கள்.கொம் தள உறுப்பினர்களுக்கு வழிகாட்டலாக அமைந்திருந்தது. தமிழ்நண்பர்கள்.கொம் தள உறுப்பினர்களின் பதிவுகளிற்கு வினோத் (கன்னியாக்குமரி) அவர்கள் வழங்கிய பின்னூட்டங்கள் தள உறுப்பினர்களுக்கு ஊக்கமளித்தன. "என்னைக் கவிஞன் ஆக்கியதும் என்னை எழுத்தாளன் ஆக்கியதும் வினோத் (கன்னியாக்குமரி) அவர்களே!" என்றுரைக்க உலகில் பல தமிழ்நண்பர்கள் உள்ளனர். அப்படித் தான் பலருக்கு ஊக்கம் தந்து தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தை வடிவமைத்து மேம்படுத்தி வெற்றிநடை போட வைத்தவர் வினோத் (கன்னியாக்குமரி) என்ற அறிஞன் தான்!

"தமிழ்நண்பர்கள்.கொம்" போல நானும் ஒன்றை நடாத்த வேணுமென்ற எனக்கொரு கெட்ட விருப்பம் என் உள்ளத்தில் தோன்றியது. அதனை வினோத் (கன்னியாக்குமரி) அவர்களிடம் மின்னஞ்சலில் பகிர்ந்தேன். அதனை ஏற்ற அவர், மூன்றோ நாலு தளங்கள் தொடங்க முன்நின்று முதல் நண்பராக இணைந்து உதவினார். எனது ஆளுமை போதாமையால் நான் தோற்றுவிட்டேன். அதனை அறிந்த அவர், "வலைப்பூ (Blog) நடாத்துங்கள், பின் வலைப்பூவை (Blog) "தமிழ்நண்பர்கள்.கொம்" வலைத்திரட்டியில் இணையுங்கள்." என்று வழிகாட்டினார். அதனை வைத்து வினோத் (கன்னியாக்குமரி) தன்நலம் கருதாத பொதுநலம் பேணிய அறிஞன் என்பேன்.


அவரது திறமையின் வெளிப்பாடே தானியங்கியாக (Autometic) வலைப்பூப் (Blog) பதிவுகளை திரட்டும் தமிழ்நண்பர்கள்.கொம் வலைத்திரட்டி என்பேன். ஒரு தொடர்பாடலில் தான், அவர் மென்பொருள் தயாரிப்பவர் என்றும் வலைப்பக்கம் வடிவமைப்பவர் என்றும் அறிந்தேன். ஆனால், "தமிழ்நண்பர்கள்.கொம்" தளத்தில் அவரது பதிவுகளைப் படித்தே தமிழ், உளவியல், அரசியல், பொதுஅறிவு எனப் பல துறைசார் அறிவைக் கற்றவர் என்றும் வாசிப்பும் தேடலும் மிக்க ஒருவர் என்றும் தமிழ் பற்றில் உறுதியாக நின்றவர் என்றும் தன் அறிவை வைத்து எதையாவது கண்டுபிடிக்க வேண்டுமென்ற நாட்டம் கொண்டவர் என்றும் அறிந்தேன். இந்த உண்மையை அவரது பின்னூட்டங்களில் அடிக்கடி கண்டறிந்தேன்.

2015 மாசி நான் இந்தியாவிற்கு வந்து இலங்கை திரும்பும் வேளை மதுரை வானூர்தி (விமான) நிலையத்தில் "ஐயா! வணக்கம்!" என்றதும் வினோத் (கன்னியாக்குமரி) அவர்களை நேரில் காணமுடிந்தது. இந்தச் சின்னத்தம்பியா இத்தனை பெரிய எண்ணங்களின் தந்தை என அறிந்தேன். நான்கு சகோதரிகளின் உடன் பிறப்பு; குடும்பப் பொறுப்பு உணர்ந்த தலைவன் என அவருடன் கதைத்த வேளை கண்டுபிடித்தேன். எதிர்காலச் செயற்பாடுகளுக்கு நானும் ஒத்துழைப்பேன் என்றும் திருமண அழைப்பை அனுப்பவும் அடுத்து இந்தியா வருவதாயின் "வினோத் (கன்னியாக்குமரி) அவர்களின் திருமணத்திற்கு வந்ததாக  இருக்கவேணும்" என்றும் கூறி விடைபெற்றேன்.

01/09/2016 அன்று காலை முகநூலில் (Facebook) பகிரப்பட்ட பதிவைப் படித்ததும் அதிர்ந்து போனேன். என்னால் அதனை நம்ப முடியவில்லை. பல நண்பர்களைக் கேட்டறிந்த பின்னரே நானும் நம்பவேண்டிதாயிற்று. அதாவது, அவர் இறைவனடி சேர்ந்ததை என்னால் இன்றுவரை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவரது எண்ணங்களை ஈடேற விடாமல் இறைவன் அழைத்த நோக்கம் இன்றுவரை எனக்குப் புரியவில்லை.
தம்பி! நீ போன இடம் எங்கே?
ஆங்கே, நான் வந்து - உன்
எஞ்சிய எண்ணங்களை அறிந்து
நண்பர்களுடன் பகிர வேண்டும்!
நண்பர்களின் முயற்சியால் - உன்
எண்ணங்கள் ஈடேறுமென்ற
நம்பிக்கையில் தான் அழைக்கின்றேன்
தம்பி! நீ போன இடம் எங்கே?


கன்னியாகுமரி தந்த இளையமகன்

வாழ்வியலில் இனிய குடும்பத்தலைவன்
தமிழுலகில் இளம் மொழிப்பற்றாளன்
ஈழத்தமிழருக்காகவும் குரல் கொடுத்தவன்
அறிவியலுலகில் நல்ல கண்டுபிடிப்பாளன்
கணினிநுட்பத்தில் புதுமை பல செய்திருப்பான்
புதிய இந்தியாவில் இன்னொரு அப்துல் கலாம் ஆயிருப்பான்
இன்னும் இன்னும் எத்தனையோ சாதித்திருப்பான் - அந்த
இளம் சிங்கம் வினோத் (கன்னியாக்குமரி) அவர்கள்!
இறைவன் இப்படி எம்மிடமிருந்து
வினோத் (கன்னியாக்குமரி) அவர்களை பிரித்துச் செல்வானோ?