2010 இல் தான்
வலைவழியே எனது இலக்கியப் பதிவுகளைப் பகிர முனைந்தேன். அக்காலத்தில்
https://twitter.com/tamil2friends வழியாகவும்
https://www.facebook.com/tamilnanbargal/ வழியாகவும் என் கண்ணுக்கு எட்டிய ஒரே
தளம் தமிழ்நண்பர்கள்.கொம் தான். அதில் இணைந்து இலக்கியப் பதிவுகளைப் பகிரத்
தொடங்கிய பின்னரே, ஏனைய தள இணைப்புகள் கிடைத்தன.
இத்தனைக்கும்
தமிழ்நண்பர்கள்.கொம் தான் எனது இணையவழி இலக்கியப் பயணத்திற்கான தாய்த் தளமெனப்
பெருமையுடன் அடிக்கடி கூறிக்கொள்வேன். அந்தப் பெருமைக்கும் இணையவழியில் எனக்குக்
கிடைத்த நன்மதிப்புக்கும் வினோத் (கன்னியாக்குமரி) என்ற ஓர் அறிஞன் தான் காரணம்.
அந்த அறிஞன் வினோத் (கன்னியாக்குமரி) அவர்களால் தான் "யாழ்பாவாணன்" என்ற
என்னை உலகத் தமிழ் வலைவழி வாசகர்கள் (eReaders) அறிந்திருக்க முடிந்ததை அந்த
ஆண்டவனும் அறிவான்.
வினோத்
(கன்னியாக்குமரி) அவர்களின் படைப்புகள் தமிழ்நண்பர்கள்.கொம் தள உறுப்பினர்களுக்கு
வழிகாட்டலாக அமைந்திருந்தது. தமிழ்நண்பர்கள்.கொம் தள உறுப்பினர்களின் பதிவுகளிற்கு
வினோத் (கன்னியாக்குமரி) அவர்கள் வழங்கிய பின்னூட்டங்கள் தள உறுப்பினர்களுக்கு
ஊக்கமளித்தன. "என்னைக் கவிஞன் ஆக்கியதும் என்னை எழுத்தாளன் ஆக்கியதும் வினோத்
(கன்னியாக்குமரி) அவர்களே!" என்றுரைக்க உலகில் பல தமிழ்நண்பர்கள் உள்ளனர்.
அப்படித் தான் பலருக்கு ஊக்கம் தந்து தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தை வடிவமைத்து
மேம்படுத்தி வெற்றிநடை போட வைத்தவர் வினோத் (கன்னியாக்குமரி) என்ற அறிஞன் தான்!
"தமிழ்நண்பர்கள்.கொம்"
போல நானும் ஒன்றை நடாத்த வேணுமென்ற எனக்கொரு கெட்ட விருப்பம் என் உள்ளத்தில்
தோன்றியது. அதனை வினோத் (கன்னியாக்குமரி) அவர்களிடம் மின்னஞ்சலில் பகிர்ந்தேன்.
அதனை ஏற்ற அவர், மூன்றோ நாலு தளங்கள் தொடங்க முன்நின்று முதல் நண்பராக இணைந்து
உதவினார். எனது ஆளுமை போதாமையால் நான் தோற்றுவிட்டேன். அதனை அறிந்த அவர்,
"வலைப்பூ (Blog) நடாத்துங்கள், பின் வலைப்பூவை (Blog)
"தமிழ்நண்பர்கள்.கொம்" வலைத்திரட்டியில் இணையுங்கள்." என்று
வழிகாட்டினார். அதனை வைத்து வினோத் (கன்னியாக்குமரி) தன்நலம் கருதாத பொதுநலம்
பேணிய அறிஞன் என்பேன்.
அவரது திறமையின்
வெளிப்பாடே தானியங்கியாக (Autometic) வலைப்பூப் (Blog) பதிவுகளை திரட்டும்
தமிழ்நண்பர்கள்.கொம் வலைத்திரட்டி என்பேன். ஒரு தொடர்பாடலில் தான், அவர்
மென்பொருள் தயாரிப்பவர் என்றும் வலைப்பக்கம் வடிவமைப்பவர் என்றும் அறிந்தேன்.
ஆனால், "தமிழ்நண்பர்கள்.கொம்" தளத்தில் அவரது பதிவுகளைப் படித்தே தமிழ்,
உளவியல், அரசியல், பொதுஅறிவு எனப் பல துறைசார் அறிவைக் கற்றவர் என்றும் வாசிப்பும்
தேடலும் மிக்க ஒருவர் என்றும் தமிழ் பற்றில் உறுதியாக நின்றவர் என்றும் தன் அறிவை
வைத்து எதையாவது கண்டுபிடிக்க வேண்டுமென்ற நாட்டம் கொண்டவர் என்றும் அறிந்தேன்.
இந்த உண்மையை அவரது பின்னூட்டங்களில் அடிக்கடி கண்டறிந்தேன்.
2015 மாசி நான்
இந்தியாவிற்கு வந்து இலங்கை திரும்பும் வேளை மதுரை வானூர்தி (விமான) நிலையத்தில்
"ஐயா! வணக்கம்!" என்றதும் வினோத் (கன்னியாக்குமரி) அவர்களை நேரில் காணமுடிந்தது.
இந்தச் சின்னத்தம்பியா இத்தனை பெரிய எண்ணங்களின் தந்தை என அறிந்தேன். நான்கு
சகோதரிகளின் உடன் பிறப்பு; குடும்பப் பொறுப்பு உணர்ந்த தலைவன் என அவருடன் கதைத்த
வேளை கண்டுபிடித்தேன். எதிர்காலச் செயற்பாடுகளுக்கு நானும் ஒத்துழைப்பேன் என்றும்
திருமண அழைப்பை அனுப்பவும் அடுத்து இந்தியா வருவதாயின் "வினோத்
(கன்னியாக்குமரி) அவர்களின் திருமணத்திற்கு வந்ததாக இருக்கவேணும்" என்றும் கூறி விடைபெற்றேன்.
01/09/2016 அன்று காலை
முகநூலில் (Facebook) பகிரப்பட்ட பதிவைப் படித்ததும் அதிர்ந்து போனேன். என்னால்
அதனை நம்ப முடியவில்லை. பல நண்பர்களைக் கேட்டறிந்த பின்னரே நானும்
நம்பவேண்டிதாயிற்று. அதாவது, அவர் இறைவனடி சேர்ந்ததை என்னால் இன்றுவரை
ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவரது எண்ணங்களை ஈடேற விடாமல் இறைவன் அழைத்த நோக்கம்
இன்றுவரை எனக்குப் புரியவில்லை.
தம்பி! நீ போன இடம்
எங்கே?
ஆங்கே, நான் வந்து -
உன்
எஞ்சிய எண்ணங்களை
அறிந்து
நண்பர்களுடன் பகிர
வேண்டும்!
நண்பர்களின்
முயற்சியால் - உன்
எண்ணங்கள் ஈடேறுமென்ற
நம்பிக்கையில் தான்
அழைக்கின்றேன்
தம்பி! நீ போன இடம்
எங்கே?
கன்னியாகுமரி தந்த
இளையமகன்
வாழ்வியலில் இனிய
குடும்பத்தலைவன்
தமிழுலகில் இளம்
மொழிப்பற்றாளன்
ஈழத்தமிழருக்காகவும்
குரல் கொடுத்தவன்
அறிவியலுலகில் நல்ல
கண்டுபிடிப்பாளன்
கணினிநுட்பத்தில்
புதுமை பல செய்திருப்பான்
புதிய இந்தியாவில்
இன்னொரு அப்துல் கலாம் ஆயிருப்பான்
இன்னும் இன்னும்
எத்தனையோ சாதித்திருப்பான் - அந்த
இளம் சிங்கம் வினோத் (கன்னியாக்குமரி)
அவர்கள்!
இறைவன் இப்படி
எம்மிடமிருந்து
வினோத்
(கன்னியாக்குமரி) அவர்களை பிரித்துச் செல்வானோ?
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!