Translate Tamil to any languages.

புதன், 21 ஆகஸ்ட், 2013

கடவுளே நிரம்பப் பிச்சை போடு

ஓடோடி நூறைக் காதலித்தேன்...
தேறியது ஒருத்தி என்றாலும்
எவராவது பிச்சை போட்டால் தான்
என் வீட்டு உலையில
அரிசி வேகுமென்பதை
அறிந்த அவளும் - என்னை
காதலிக்க மறுத்து விட்டாளே!
கடவுளே!
நிரம்பப் பிச்சை போடு
என் குடும்ப நிலை உயரவேணும்
அப்பதான் - வேறு
எவளாயினும் என்னைக் காதலிப்பாளே!

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பாபுனையத் தெரிந்து கொள்வோமா?

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என யாப்பிலக்கணத் தொடரை எழுதி வருகிறேன். அதேவேளை பிற அறிஞர்களின் குறிப்புகளையும் இணைத்து வருகிறேன்.

ஆயினும் பிற அறிஞர்களின் சில யாப்பிலக்கண அடிப்படைக் குறிப்புகளை noolaham.org, projectmadurai.org ஆகிய தளங்களில் இருந்து பதிவிறக்கி "பாபுனையத் தெரிந்து கொள்வோம்" என்ற நூலைத் தொகுத்துள்ளேன். அதேவேளை எல்லாப் புகழும் நூலாசிரியர்களுக்கே சேரும்.

பல அறிஞர்களின் சிறு பதிவுகளைத் தந்த / தரும் யாழ்பாவாணன் ஆகிய நான், இந்நூற் தொகுப்பை எனது வலைப்பூப் பக்கத்தில் விரித்துப் பார்க்கவும் எனது மின்னூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கவும் இடமளித்திருத்திருக்கிறேன்.

யாப்பறிந்து பாபுனைய விரும்பும் எல்லோரும் இந்நூலைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://paapunaya.blogspot.com/p/blog-page_18.html
அல்லது பட்டியில் (Menu இல்) "பாபுனையப் படிப்போம்" என்ற பக்கத்தைச் சொடுக்குக.

முதலில் இந்நூற் தொகுப்பைப் படியுங்கள். இரண்டாவதாக இதன் நன்மை, தீமைகளைக் கூறி உங்கள் நண்பர்களையும் பார்வையிடச் செய்யுங்கள்.

இவ்வண்ணம்
தொடர்ந்தும் தங்கள் ஆதரவை நாடும்
உங்கள் யாழ்பாவாணன்

சனி, 10 ஆகஸ்ட், 2013

தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவு

திருக்குறள் எழில் சோம.பொன்னுசாமி (திண்ணூர்தி தொழிற்சாலை, ஆவடி) அவர்கள் எழுதிய "திருவள்ளுவர் காட்டும் ஏழாம் அறிவு" (http://tamilkavinjarsangam.yolasite.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.php) என்ற பதிவொன்றை இணையப் பக்கமொன்றில் படித்தேன். இதனைப் படித்ததும் குப்புசாமி என்ற மலேசிய அறிஞர் எனக்குப் படிப்பித்தது நினைவுக்கு வந்தது. எனவே, பாபுனைய விரும்புவோருக்கு உதவுமென இப்பதிவை ஆக்கினேன்.

வள்ளுவரின் பாவடிகளிலும் தொல்காப்பியனாரின் பாவடிகளிலும் படிக்கப் பொருளறியச் சிக்கல் என்போருக்கு யாப்பறிந்து பாபுனைய முயலுங்கள் என்பார்கள். யாப்பறிந்து பாபுனைய முயலுமுன் அவர்களது பாவடிகளில் உள்ள பொருளறிந்தால், பாபுனைய முயல்வோருக்கு உதவுமென இப்பதிவை முன்வைக்கிறேன்.

"ஆறாம் அறிவுக்கும் மேலானதாக ஏழாம் அறிவு என்று ஒன்றுள்ளதாகப் பல அறிஞர்களும், சான்றோர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருவள்ளுவர் கூட எடுத்துக் காட்டியுள்ளார். அந்த ஏழாம் அறிவு என்பது எது...?

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல் (702 திருக்குறள்)

சிறிதும் ஐயமே இல்லாத வகையில் எதிரில் உள்ளவரின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை முழுமையாக உணர்ந்தும், தன் எண்ணத்தை அவர்க்கு உணர்த்தி இயங்க வைக்கும் வலிமைக் கொண்டவரைத் தெய்வத்தோடு இணையாக வைத்துப் போற்ற வேண்டும். திருவள்ளுவர் இதையே ஏழாம் அறிவாகக் குறிப்பிட்டுள்ளார்." என்று பொன்னுசாமி அவர்கள் ஏழாம் அறிவைப் விளக்குகிறார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது; வள்ளுவர் வெளிப்படுத்திய ஏழாம் அறிவும் அவர் கையாண்ட சொல் பாவனையும் தான். குறைந்த சொல்கள், குறைந்த அடிகள் மூலமாக மாபெரும் கருத்தை வள்ளுவர் வெளிப்படுத்த முடிந்தால்; நம்மால் ஏன் அப்படி எண்ணமிட்டு எழுத முடியாமற் போகிறது? எண்ணிப் பாருங்கள், எழுத முடியும்!

ஏழாம் அறிவுக்கு முன் ஆறு அறிவு எவை எவை என்று தெரியுமா?
கண் - பார்த்தல்
காது - கேட்டல்
மூக்கு - மணத்தல்
நாக்கு - சுவைத்தல்
தோல் - உணர்தல்
மேற்படி ஐம்புலன்களால் அறியப்படும் அறிவே ஐந்தறிவே. அப்படி என்றால் ஆறாம் அறிவு எந்தப் புலன் உறுப்பால் அறிய முடியும்? உள்ளம் (மனம்) என்ற உறுப்பால் புரிந்துகொள்ளலே ஆறாம் அறிவு எனலாம். மூளை இயங்கும் செயலே உள்ளம் (மனம்) என்றும் நல்லது, கெட்டது எதுவெனப் பகுத்தறிந்து புரிந்துகொள்ளலே ஆறாம் அறிவு என்றும் குப்புசாமி அவர்கள் விளக்கினார்.

இதற்குச் சான்றாகத் தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவுகளை கீழ்வரும் பாடல் விவரிக்கிறது.

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
(தொல்காப்பியம் மரபியல்)

இலக்கணப் பாக்களாலான (மரபுக் கவிதைகளாலான) தொல்காப்பியப் பாடலில் இவ்வாறு எளிமையாக ஆறு அறிவுகளை   விரித்து விளக்கப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் கூறும் ஆறாம் அறிவா, ஆறு அறிவுகளா அத்தனையும் அழகே! இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது; இலக்கணப் பாவானாலும் (மரபுக் கவிதையானாலும்) எளிமையாக இருப்பின் எல்லோராலும் விரும்பப்படும் என்பதே!

பாபுனைய முயல்வோர் குறைந்த சொல்கள், குறைந்த அடிகள், எளிமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு பாபுனைய முன்வாருங்கள்.

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)

முதன்மைப் பதிவராக...

நான்
எழுத்துலகில் எண்பத்தேழில்
கால் பதித்தாலும்
தொண்ணூறிலேயே
என் முதற் கவிதை
பத்திரிகையிலே வெளியானது!
எழுதுங்கள்
என்றோ ஒரு நாள்
எழுத்துகள் சிறக்கும் என
அறிஞர்கள் எனக்கு வழிகாட்டினர்!
எழுதினேன் பத்திரிகையிலே
அன்று
ஆனால், இன்று
இணையவழியில்
வலைத்தளங்களில், வலைப்பூக்களில்
பதிவராகப் பதிகின்றேன்
நல்ல பல பதிவுகளை!
எனக்கு ஒரு துயரம்
என் பதிவுகளுக்கு
ஒருவரும் கருத்துக் கூறுவதில்லை...
என் துயரைப் போக்க
அறிஞர்கள் பலரின் தளங்களைப் படித்தேன்...
"ஒரு பதிவைப் பதிந்த பின்
ஒரு கருத்துக் கூற
ஒருவரும் இல்லையா?
பொய்... பொய்... பொய்...
நீ
எத்தனை பதிவரின் பதிவுக்கு
கருத்துக் கூறினாய்
உன் பதிவுக்கு
எவராச்சும் கருத்துக் கூற" என்று
அறிஞர்கள் சிலர் கேட்டனர்!
நேரம்
பலருக்கு இறுக்கம் தான்
எனக்கும் தான்
என்றாலும்
சில நேரங்களில்
சிலரின் பதிவுகளுக்கு
கருத்துக் கூறுவதால் தான்
ஒரு பதிவைப் பதிந்த பின்
ஒரு கருத்துக் கூட
எனக்கு எட்டுகிறதே!

குறிப்பு: புதிய பதிவர்களே! எனது நண்பர்கள் முதன்மைப் பதிவராக மின்னுவதற்குக் காரணமே, நேரம் உள்ள போதெல்லாம் பிறரது பதிவுக்குக் கருத்துக் கூறுவதால் தான். நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள்... என்றாலும் சொல்கிறேன். கூகிள் வலைப்பூவில் நண்பர் ஒருவர் ஒரு பதிவைப் பதிந்தால் கிட்டத்தட்ட நூறு பதில் கருத்துகளைப் பெறுகிறரே! அப்படியாயின், அவர் நூற்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளுக்குக் கருத்துக் கூறுகிறார் போலும்! அப்படித்தான் நானும் எண்ணுகிறேன்.

சாவா? வாழ்வா? மருத்துவரே கேட்கிறார்!


நம் மண்ணில் - ஏழைகளான
நம்மாளுகளை எண்ண
ஆண்டவனுக்கே
கண்ணில்லாட்டிப் பரவாயில்லை
அறிவு முட்டி முற்றிய - பார்வை
செறிவு மிகுந்த மருத்துவருக்குமா
கண்ணில்லை என்று - ஏழை
கண்ணீர் விட்டதை
நீங்கள் பார்த்தீர்களா?
தாங்க முடியாத நோயால்
அரச மருத்துவ மனைக்கு
விரைந்த நோயாளியைப் பார்த்து
இங்கு வசதி இல்லைப் பாரும்
அங்கு வசதி நிரம்ப - நாளைக்கே
வந்தால் செய்யலாம் சத்திரசிகிச்சை
என்றுரைக்கலாமா
இன்றே சாகத் துடிக்கும் நோயாளியிடம்!
கேட்டுப் பாரும்
நாட்டு மக்கள் நலம் பெற
நோயாளிகளுக்காய் மருத்துவமனைகளையும்
நோய் தீர்க்கும் மருத்துவர்களுக்கான படிப்பையும்
இலவசமாக அரசு வழங்க
பலமாகத் தனி்யார் மருத்துவமனைக்கு
வாவென்று அழைக்கும் மருத்துவரிடம்
ஏனென்று கேட்கத் துணிவற்ற
ஏழையாலே என்ன தான் செய்யமுடியும்?!
ஏழை சாகத் துடிக்கையிலே
கோழை மருத்துவர் கேட்ட பணத்தை
தேடிப் பெற முடியாமையால்
வாடி நின்ற ஏழை
கண்ணீர் விட்டபடி
மண்ணில்
மூச்சடைத்துச் சாவடைந்தார்!

தமிழனுக்கு முடிவோ விடிவோ எப்போது?

ஈழத் தமிழர் நிலைய
கொஞ்சம் பாருங்களேன்...
48 ஆண்டுகளுக்கு மேலாக
விடுதலைக்காகப் போராடியும்
தோல்வியைத் தழுவுவதற்கு இடையில்
உலகெங்கும் 48 நாடுகள்
விடுதலை அடைந்துவிட்டன...
அன்று 48 போராளிக்குழுக்கள்
இன்று 48 அரசியல் குழுக்கள்
தலைமைக்கும் பதவிக்கும் மோதிக்கொள்ள
வசதியுள்ளவர் எல்லோரும்
வெளிநாடுகளுக்குப் பறந்தோட
எஞ்சிய கொஞ்சமும்
ஈழத்தில் சாவது தொடர
ஈழமே சிங்கள நாடாகிறது...
இப்படியே போனால்
ஈழத்தில்
தமிழர்கள் இருக்க வாய்ப்பில்லையே!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் போல
பண்டாரவன்னியனுக்கு
ஓர் காக்கைவன்னியன் போல
தலைவர் கரிகாலனுக்கு(வே.பிரபாகரன்)
ஓர் கருணா அம்மான்(வி.முரளீதரன்) போல
எத்தனையோ ஒற்றர்கள் இருப்பதால் தான்
தமிழர் அழிவதே முடிவாயிற்று!
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு" என
தமிழர் உணர்ந்தால்
ஒரே தலைமை ஒரே கோட்பாடென
ஓரணியில் திரண்டால்
தமிழனுக்கு விடிவு கிட்டலாம்!
உலகின் எந்த மூலையிலும்
வாழும் தமிழரே
ஈழத்தில்
தமிழர் அற்றுப் போனாலும்
உங்கள் நாடுகளிலாவது
தமிழர் அழியாமல் பேண
ஓரணியில் இணையுமாறு
2008, 2009 ஈழப் போரில்
பாதிப்புற்றவர் கெஞ்சுகின்றனர்!

நேற்று, இன்று, நாளை

நான் காணும்
நம்மாளுகளின் வாழ்க்கையில்
முன் நிகழ்வு, பக்க விளைவு, பின் விளைவு
எல்லாம் ஏனென்று எண்ணிப்பார்த்தேன்!
நேற்றை மட்டும் கணக்கில் எடுத்தவன்
இன்று மீள முடியாமல்
துயருறுகிறான்!
நேற்றே
இன்றை மட்டும் கணக்கில் எடுத்தவன்
விடிகாலை எழுந்ததும்
என்ன செய்வதென்று தெரியாமல் முளிசுகிறான்!
இன்றே
நாளையை மட்டும் கணக்கில் எடுத்தவன்
விடிய விடிய
நன்றே முன்னேறினாலும்
முழுமையான மகிழ்வைத் தேடுகிறான்!
நேற்றைய படிப்பையும்
இன்றைய தேவையையும்
நாளைய இருப்பையும்
என்றும் கணக்கில் எடுத்தவன்
வெற்றியோடு மகிழ்வாய்
இருப்பதைக் காண்கின்றேன்!

வேறுபாடு

தோள் மூட்டுத் தெறிக்க
கட்டுக் கட்டாக
பொத்தகங்கள் சுமந்தது
அந்தக் காலம்...
கனதி குறைந்த கைப்பையிலே
குட்டி மடிக்கணினியை
தோளில் மாட்டிக்கிட்டு
பள்ளிக்கு நடைபோடுவது
இந்தக் காலம்...
அந்தக் கால, இந்தக் கால
வேறுபாடுகளுக்கிடையே
நம்மாளுகள்
பள்ளிக்குப் போகாமல் ஒளிப்பது
துன்பக் காலம்...
ஏடும் எழுதுகோலுமென்ன
குட்டி மடிக்கணினியென்ன
சுமப்பது சுமையல்லவென
மூளை முழுவதும்
அறிவைத் திரட்டியவர் வாழ்வே
பொற் காலம்!

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

காதலும் திருமணமும்

ஒருவன் : திருமணம் ஆவதற்கு முன்னர் நீங்கள் காதலிக்கவில்லையா?

மற்றவன் : நான் மணமுடித்த கறுப்பி, பத்தாவது காதலியென்றால் பாருங்கோவேன்...

தொழிலா? வருவாயா?

ஒருத்தி : என்னடி உன்னுடைய ஆள் வெளிநாட்டில என்கிறாய், அங்கே என்ன கீழ்நிலை வேலை செய்யுறாங்கோ?

மற்றவள் : வேலை என்னவாச்சும் உனக்கென்ன, என்னுடைய ஆள் நிரம்பப் பணம் அனுப்புறாங்கோ... அது போதாதா?