நம் மண்ணில் - ஏழைகளான
நம்மாளுகளை எண்ண
ஆண்டவனுக்கே
கண்ணில்லாட்டிப் பரவாயில்லை
அறிவு முட்டி முற்றிய - பார்வை
செறிவு மிகுந்த மருத்துவருக்குமா
கண்ணில்லை என்று - ஏழை
கண்ணீர் விட்டதை
நீங்கள் பார்த்தீர்களா?
தாங்க முடியாத நோயால்
அரச மருத்துவ மனைக்கு
விரைந்த நோயாளியைப் பார்த்து
இங்கு வசதி இல்லைப் பாரும்
அங்கு வசதி நிரம்ப - நாளைக்கே
வந்தால் செய்யலாம் சத்திரசிகிச்சை
என்றுரைக்கலாமா
இன்றே சாகத் துடிக்கும் நோயாளியிடம்!
கேட்டுப் பாரும்
நாட்டு மக்கள் நலம் பெற
நோயாளிகளுக்காய் மருத்துவமனைகளையும்
நோய் தீர்க்கும் மருத்துவர்களுக்கான படிப்பையும்
இலவசமாக அரசு வழங்க
பலமாகத் தனி்யார் மருத்துவமனைக்கு
வாவென்று அழைக்கும் மருத்துவரிடம்
ஏனென்று கேட்கத் துணிவற்ற
ஏழையாலே என்ன தான் செய்யமுடியும்?!
ஏழை சாகத் துடிக்கையிலே
கோழை மருத்துவர் கேட்ட பணத்தை
தேடிப் பெற முடியாமையால்
வாடி நின்ற ஏழை
கண்ணீர் விட்டபடி
மண்ணில்
மூச்சடைத்துச் சாவடைந்தார்!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!