Translate Tamil to any languages.

புதன், 27 மார்ச், 2019

நாட்டுப் பற்றாளர் ஆகலாமே!



பாட்டு ஒன்று பாடப் போறேன் - அதை
கேட்டு நின்று காதில போட்டுப் பாரேன்!
(பாட்டு)

நாட்டுச் சூழல் அமைதி அற்றுப் போச்சு
சாட்டுக் கூறித் தீர்வு சொல்லப் போறேன்!
(நாட்டு)

தரை வழியே குடியில் மூழ்கிக் கிடப்பதும்
தெரு வழியே புகையிலை பத்தி அழிவதும்
மறைவினில் மாற்றான் பெண்ணைக் கெடுப்பதும்
அடுத்தவன் சொத்தைக் கொள்ளை அடிப்பதும்
எடுத்ததுக்கு எல்லாம் திரைப்படங்களே வழிகாட்டி!
தீர்வாகக் கெட்டதிரைப படங்களை அழிக்கலாமே!
(பாட்டு), (நாட்டு)

விளம்பரங்கள்  ஊடகங்களுக்கு ஆடைகள் ஆனதால்
ஆங்காங்கே பாலுணர்வு தூண்டப் படுவதனால்
இளசுகள் சீர்கெட்டும் பண்பாடும் சீரழிகிறதே!
எந்தவுரை ஏடுகளைப்  படித்துப் பார்த்தாலும்
இளசுகள் கெடுவதற்கு வழிகாட்டும் பதிவுகளே!
தீர்வாக வேண்டாத விளம்பரங்களை விரட்டலாமே!
(பாட்டு), (நாட்டு)

இளசுகள் கூடிவாழத் தொலைக்காட்சி குறுக்கீடாம்
மலட்டு இணையர்கள் மலிந்து போச்சாம்
வீடுகளில் சமையல் சரிப்பட்டு வராதாம்
கடைச் சாப்பாட்டால் கடன்தான் அதிகமாம்
தொலைக்காட்சித் தொடர்கள் வாழ்வைச் சீரழிக்குமாம்
தீர்வாக வாழ்வழிக்கும் தொடர்கதைகளைத் துரத்தலாமே!
(பாட்டு), (நாட்டு)

சுற்றுலாவென வெளிநாட்டார் வந்து குவிவதும்
வெளிநாட்டார் பழக்கங்கள் நாட்டில மலிவதும்
பண்பாட்டை மீறுகின்ற ஆடைகள் அணிவதும்
வரலாறு காண்டிராத வாழ்க்கை சீரழிவதும்
நாளைய தலைமுறை நலமின்றிச் சாகுமாம்
தீர்வாகப் பண்பாடழிக்கும் சுற்றுலாத்துறையை மூடலாமே!
(பாட்டு), (நாட்டு)

கற்றவரும் மற்றவரும் தன்நலமாம் பாரும்
கன்னியரும் தாய்மாரும்  கனவிலே உலாவாம்
பெற்றோரும் பிள்ளைகளைக் கவனிக்காராம்  பாரும்
பிள்ளைகளோ படிப்பின்றித் தெருவிலே உலாவாம்
பொறுப்பானவர் பற்றின்மையே நாடழியும் கேவலமாம்
தீர்வாக எல்லோரும் நாட்டுப் பற்றாளர் ஆகலாமே!
(பாட்டு), (நாட்டு)


முடிவெடு பிழைவிடாதே!

கடவுள் எவரையும் சமனாகவே படைத்தான்
மனிதன் எவரையும் சமனாக மதிக்கவில்லை
வாழ்வில் மனிதன் மகிழ்வோடும் இல்லை
மனித முடிவில் மாற்றம் வந்தால் தானே
மகிழ்வான வாழ்வும் வந்தமையுமே!

வாயாலே தான் மனிதன் கெட்டானாம்
வெளியிட்ட சொல்கள் மாற்றாரைப் புண்ணாக்க
உறவுகள் எவரும் கிட்ட இல்லையாம்
தனித்த மனிதன் தோல்விகளைச் சந்திக்க
வாழ்வில் துயரங்கள் தொடர்கதை ஆச்சு!

செயலாலே தான் மனிதன் கெட்டானாம்
மனிதச் செயல்கள் மாற்றாரைப் புண்ணாக்க
விருப்பம் ஏதுமின்றி விலகுவோர் அதிகமாம்
நெருக்கடி வேளை உதவத் தான் ஆளில்லை
வாழ்வில் மகிழ்ச்சியின்றி மனிதன் திரிகின்றான்!

சொல்லும் செயலும் நன்றாக இருக்க
உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் தேவை
சொல்ல முன்னும் செய்ய முன்னும்
பின்விளைவை எண்ணிப் பார்க்க வேண்டும்
மகிழ்வான வாழ்வுக்கு முடிவெடு பிழைவிடாதே!

சொல் புத்தி தன் (சுய) புத்தி இரண்டும் இன்றேல்
எந்த முடிவும் உருப்படியான முடிவாகாதே!
நாலாளிட்ட மதியுரை கேட்டுப் பார்த்தால்
நல்ல முடிவுக்கு நால்வருமே வழிகாட்டுவரே
பலரேற்கும் முடிவே நல்ல முடிவாகுமே!


எழுதப் பழக்கிய பெரியோர்கள்!

மண்ணில் பிறக்கும் போதே
எழுத, வாசிக்க, பேசிக்கொள்ள
தெரிந்திருந்தால் பாரும் - எவரும்
எமக்குப் படிப்பிக்க வேண்டியிருக்காதே!
வெற்றுத் தலைக்குள்ளே அறிவேதுமின்றி
நாம் பிறந்தமையாலே தான்
அறிஞர் பலர் நமக்குப் படிப்பித்தனரே!
எவர் எதைப் படிப்பித்தாலும்
மணலில சுட்டு விரலைப் பிடித்து
'', '', '' எனத் தமிழ் உயிரை
எழுதப் பழக்கிய ஆசிரியரே
எனக்கு முதற் கடவுள் என்பேன்!
'மாமா' உடையாருக்குப் படிச்சவர்
'ஐயா' பண்டிதருக்குப் படிச்சவர்
அவையளைப் போல - நீயும்
படிச்சுப் பெரியாளாக வர வேண்டுமென
'', '', '' அழகாக, ஒழுங்காக எழுதென
அப்பர்ர தம்பி தான் - எனக்கு
முதன் முதல் எழுதப் பழக்கி இருந்தார்!
அடுத்தடுத்துத் தொடக்கக் கல்வியென
ஆறு ஆசிரியைகளிடம் படித்தே
'', '', '' என எழுதப் பழகினேன்!
அதுக்குப் பிறகு தானே
மயிலு பள்ளிக்கூடம், சைவப் பள்ளிக்கூடம் போய்
(யா/மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயம்)
ஐந்தாம் வகுப்பு வரை படித்தாலும்
'', '', '' என எழுதப் பழக்கிய
பெரியோரை மறக்கத் தான் முடியுமா?
யா/ மானிப்பாய் இந்துக் கல்லூரியில
எனக்குக் கணக்குப் படிப்பித்த
உடுவில் அப்புலிங்கம் ஆசிரியர்
என்ர கையெழுத்தைக் குப்பையென
கையேட்டில சிவப்பால எழுதியது
இப்பவும் உள்ளத்தில உருள...
'தெருத் தெருவாய் வேலைக்கு அலையேக்க
உன்ர தலையெழுத்துச் சரியில்லை!' என
காதலிக்க மறுத்த கண்ணகி நினைவில் வர
என் எண்ணங்களைத் தான்
நானும் பதிவு செய்ய - அந்த
எழுத்தில ஏதோ உருளுதென
வாசகர் விரும்பிப் படிக்க வைத்த
என் எழுத்தை எழுதப் பழக்கிய
எல்லோரையும் நினைவில் இருத்திக் கொண்டே
சாகும் வரை எழுதிக் கொண்டே இருப்பேன்!
எழுதப் பழக்கிய பெரியோர்களால் தானே
நானும் எழுதுபவரெனப் பெயரெடுத்தேன்...
அடிக்கடி எழுதும் போது
அவர்கள் தான் நினைவில் வருவார்கள்...
அவர்களை எப்படி நான் மறப்பேன்!


வெள்ளி, 8 மார்ச், 2019

சமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே!


தாய்க்கு நிகராக இன்னொருவள் இங்கில்லை
தாய் இல்லாமல் நானும் இங்கில்லை - அந்தத்
தாய்க்குலம் அடைகின்ற துயரிற்கு அளவில்லை
தாய்மைக்குத் துணைபோன ஆணிற்கும் உணர்வில்லை
பிள்ளையைச் சுமந்தீன்ற பெண்ணிற்கு மதிப்புமில்லை
பெண்களென்றால் ஆணிற்குப் பணிந்தவள் என்றில்லை
முயன்றால் பெண்களாலும் முடியாதது ஒன்றுமில்லை
சமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு!

வீட்டிற்குவீடு வாசல்தான் இல்லாமல் இல்லை
வீட்டுக்காரி வீடுவாசல் கூட்டாமல் இருந்ததில்லை
வீடுகழுவி மெழுகியவளை ஆண்கள் நினைப்பதில்லை
தேனீர், சாப்பாடு பிந்தினால் பெண்ணைத் திட்டாதவரில்லை
சமையலுக்குத் துணைக்கு வாவென்றால் ஆண்களில்லை
துணைக்குப் படுக்கப்பெண் இன்றியாண் தூங்கவில்லை
ஆணுக்குப் பெண்ணென்றும் நிகராகஎழு அழிவில்லை
சமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு!

ஆண்களுக்கு மீசைவைச்சாலும் எப்பனும் அழகில்லை
கறுப்பியானாலும் பெண்ணழகிற்கு ஈடான ஆணில்லை
என்னவோ வீடுகளில பெண்ணுக்குத் தொடரும்தொல்லை
வீட்டுக்காரரின் உடுப்புக் கழுவாட்டிலும் கணவர்தொல்லை
வழிநெடுகப் பெண்களை மேய்கின்றவரால் வழித்தொல்லை
செயலகத்தில் ஆளுமைகளின் மேய்ச்சலால் உளத்தொல்லை
தொல்லையின்றி விடுதலைபெறப் பெண்கள் எழாமலில்லை
சமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு!

பெண்வயிற்றில் பிறந்தவங்க பெண்ணைப் புரிவதில்லை
பெரியவளானால் வீட்டில நெருக்கடி கொஞ்சமில்லை
அழகியானால் தெருப்பொடியள் தொல்லை எல்லையில்லை
ஈர்பத்தானால் திருமணமெனப் பெற்றவருக்கு ஓய்வில்லை
திருமணமானால் புகுந்தவீடு சிறையைவிடத் தோற்றதில்லை
படுக்கையறையில கணவனின் தொல்லைக்குக் குறைவில்லை
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில பெண்ணுக்கு ஓய்வில்லை
சமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு!

இறைவனிடம் சென்றிட மதங்கள் வழிகாட்ட வேண்டும்!

மதங்கள் புனிதமானவை!
மதங்கள் மக்களுக்கு வழிகாட்டுவன.
மதங்களின் பெயரால் மக்கள் முரண்பட
மதத் தலைவர்களே மூலகாரணம்!
"மதம்
மக்களை ஐக்கியப்படுத்தவே
மக்களை முரண்படவைத்துப் பிரிக்கவல்ல!
மதம்
இடத்துக்கு இடம்
உரிமை கோரப் போராட வைப்பதல்ல
மக்களை ஆற்றுப்படுத்தி
நெடுநாள் வாழ வழிகாட்டுவதே!" என்பதை
மதத் தலைவர்களே
அடியவருக்கு உணர்த்தி இருந்தால்
இடங்களிற்கான
உரிமை கோரல் போர் நிகழாதே!
"ஆண்டவர் ஒருவர் தான் - அந்த
ஆண்டவரை அடையும் வழி தான்
மதங்கள்!" என்பதை
மதத் தலைவர்களே
அடியவருக்கு உணர்த்தி இருந்தால்
மதமாற்றச் செயற்பாடுகளும்
இடம்பெற வாய்ப்பு இல்லையே!

தெளிவு தேவை!

ஒரு நல்லவரையோ
ஒரு கெட்டவரையோ
அவரைச் சூழவுள்ள மக்களே
கண்டுபிடித்துவிடுவார்கள் என்றால்
எவரெவர் எப்படித்தான் தப்புவார்?
உள்ளத்தில் இருப்பதே
சொல்லாகவோ செயலாகவோ
மனித வெளியீடாக மின்னுமாமே!
அவரவரது
நடை, உடை, பாவனை தான்
அவரவரை அடையாளப்படுத்துமாமே!
எதைச் செய்தாலும் தப்பிக்கத் தான்
எப்படியாயினும்
கற்றுக்கொள்ள மறந்துவிடாதே!

ஞாயிறு, 3 மார்ச், 2019

மொட்டை மீது பெட்டைக்குக் காதல்


அகவை ஐம்பது தான் ஆனாலும் கூட
ஆளைப் பார்த்தால் இருபது மதிக்கலாமாம்
எனக்கிருக்கிற நோய்களைக் கணக்கெடுத்தால்
அகவை எண்பதைத் தாண்டியிருப்பேன்!
அகவை பதினெட்டையும் தாண்டாத வாலை
மொட்டை என்றாலும் அழகாய் இருக்கிறியள்
கட்டையர் என்றாலும் மிடுக்காய் மின்னுறியள்
சட்டைப் பைக்குள்ளே காசும் தலைகாட்டுது
தனக்குத் தாலி கட்டினால் வாழலாமென
தெருத்தெருவாய் பின்தொடர்ந்து அலைந்து வந்தாள்!
மொட்டைத் தலையில மயிரை நட்டாலும் கூட
முளைக்க வாய்ப்பு இல்லைப் பிள்ளை...
கட்டையரானாலும் கட்டையில போகிற அகவையணை
சட்டைப்பைக் காசு காற்றில பறந்தால்
தெருவில வெள்ளைச் சேலை விரித்து
பிச்சை எடுத்தாலும் கூட நாலு காசு தேறாது
பெட்டைப் பிள்ளாய் உனக்கெங்கே ஏறப்போகுது
நானென்ற விறகுக் கட்டை சுடலைக்கே
விடலைப் பெட்டையே பெத்தவர் பேச்சுப்படி
பணக்காரப் பிஞ்சுப் பொடியனைப் பாரடி
சாகும் வரை கொஞ்சிக் குலாவி வாழலாமடியென
நானும் எப்பன் எட்டாத் தொலைவில விலகினேன்!
சொல்லுக் கேளாக் குமரிப் பெட்டை
வில்லுப் பாட்டுக்கு ஆமாப் போடுமாப் போல
தெருவழியே சொல்லுறதை கேட்டுக்கொண்டு வந்தவள்
சாகப் போகிற பழுத்த கிழத்தை
நாடாமல் ஓடித் தொலையடி என்றால்
குமரிமாதிரி ஒல்லிக் குச்சியாய் நானிருந்தாலும்
அகவை நாற்பத் தெட்டாச்சுப் பாருங்கோ
கிழட்டுக் காதலும் பழுத்தோர் மணமுடிப்பும்
ஆயுளைக் கொஞ்சம் நீட்டுமென் றெல்லோ
உங்களை நாடி வழிகிறேன் என்றாளே!

காதலர் நாளில்... 1

காதலர் நாள் வந்தால்
"உன்ர மூஞ்சியைக் கொஞ்சம்
முகம் காட்டும் கண்ணாடியில பார்...
உன்ர மூஞ்சி அழகில - உனக்கு
என் மீது காதல் வருகிறதோ?" என
என்னைக் கழித்து விட்டவர்கள்...
என்னை ஒதுக்கி வைத்தவர்கள்...
எல்லோரும் நினைவில் வருகிறார்களே!

காதலர் நாளில்... 2

நல்ல இல்லாள் இருக்காள்
மெள்ளக் காதலி என்றால்
சமையலுக்கு உதவு என்கிறாளே!
இத்தால் சகலருமறிய
என்னைக் காதலிக்க
எவரும் முன்வராமையால்
காதலர் நாள் (பெப் 14)
எனக்குத் தான் இல்லையே!

காதலும் குடும்பமும் நடைபேசிக்குப் பின்னாலே...










விழுந்த காதலியைத் தானும் தூக்குவாரில்லை...
விழுந்த மனைவியைத் தானும் தூக்குவாரில்லை...
விழுந்ததும் நடைபேசியைத் தானே தூக்கிறாங்கள்...
விழுந்ததும் நடைபேசியின் நிலையையே நோக்கிறாங்கள்...


உறவுக்கு ஏற்ற உளவியல் இது!

ஒருவனை ஒருவள் விரும்ப வைக்க
ஒருவளை ஒருவன் விரும்ப வைக்க
உடலுக்கு அழகாகத் தங்கநகை போட்டோ
உடலுக்கு அழகாக ஆடைகள் அணிந்தோ
ஆளையாள் விரும்ப வைக்க இயலாதே!
ஆளையாள் ஈர்த்துக் கொள்ளத் தானே
அவரவர் விருப்பங்களை ஏற்றால் தானே
அவரவர் விருப்பங்களுக்கு இ‌ணங்கினால் தானே
அடுத்தவர் எம்மில் அன்பைச் செலுத்தலாம்
அடுத்தவர் எம்மில் விருப்பம் கொள்ளலாம்
ஒருவரை ஒருவர் விரும்ப வைக்க
ஒருவரை ஒருவர் உணர்ந்து உறவாடுவோமே!
விருப்பு வெறுப்பு அறிந்து உறவாடு
விரும்பும் உள்ளங்களை அணைத்துச் செல்
வாழ்வு சிறக்க நல்லுறவே முதலீடு!