Translate Tamil to any languages.

புதன், 27 மார்ச், 2019

நாட்டுப் பற்றாளர் ஆகலாமே!



பாட்டு ஒன்று பாடப் போறேன் - அதை
கேட்டு நின்று காதில போட்டுப் பாரேன்!
(பாட்டு)

நாட்டுச் சூழல் அமைதி அற்றுப் போச்சு
சாட்டுக் கூறித் தீர்வு சொல்லப் போறேன்!
(நாட்டு)

தரை வழியே குடியில் மூழ்கிக் கிடப்பதும்
தெரு வழியே புகையிலை பத்தி அழிவதும்
மறைவினில் மாற்றான் பெண்ணைக் கெடுப்பதும்
அடுத்தவன் சொத்தைக் கொள்ளை அடிப்பதும்
எடுத்ததுக்கு எல்லாம் திரைப்படங்களே வழிகாட்டி!
தீர்வாகக் கெட்டதிரைப படங்களை அழிக்கலாமே!
(பாட்டு), (நாட்டு)

விளம்பரங்கள்  ஊடகங்களுக்கு ஆடைகள் ஆனதால்
ஆங்காங்கே பாலுணர்வு தூண்டப் படுவதனால்
இளசுகள் சீர்கெட்டும் பண்பாடும் சீரழிகிறதே!
எந்தவுரை ஏடுகளைப்  படித்துப் பார்த்தாலும்
இளசுகள் கெடுவதற்கு வழிகாட்டும் பதிவுகளே!
தீர்வாக வேண்டாத விளம்பரங்களை விரட்டலாமே!
(பாட்டு), (நாட்டு)

இளசுகள் கூடிவாழத் தொலைக்காட்சி குறுக்கீடாம்
மலட்டு இணையர்கள் மலிந்து போச்சாம்
வீடுகளில் சமையல் சரிப்பட்டு வராதாம்
கடைச் சாப்பாட்டால் கடன்தான் அதிகமாம்
தொலைக்காட்சித் தொடர்கள் வாழ்வைச் சீரழிக்குமாம்
தீர்வாக வாழ்வழிக்கும் தொடர்கதைகளைத் துரத்தலாமே!
(பாட்டு), (நாட்டு)

சுற்றுலாவென வெளிநாட்டார் வந்து குவிவதும்
வெளிநாட்டார் பழக்கங்கள் நாட்டில மலிவதும்
பண்பாட்டை மீறுகின்ற ஆடைகள் அணிவதும்
வரலாறு காண்டிராத வாழ்க்கை சீரழிவதும்
நாளைய தலைமுறை நலமின்றிச் சாகுமாம்
தீர்வாகப் பண்பாடழிக்கும் சுற்றுலாத்துறையை மூடலாமே!
(பாட்டு), (நாட்டு)

கற்றவரும் மற்றவரும் தன்நலமாம் பாரும்
கன்னியரும் தாய்மாரும்  கனவிலே உலாவாம்
பெற்றோரும் பிள்ளைகளைக் கவனிக்காராம்  பாரும்
பிள்ளைகளோ படிப்பின்றித் தெருவிலே உலாவாம்
பொறுப்பானவர் பற்றின்மையே நாடழியும் கேவலமாம்
தீர்வாக எல்லோரும் நாட்டுப் பற்றாளர் ஆகலாமே!
(பாட்டு), (நாட்டு)


முடிவெடு பிழைவிடாதே!

கடவுள் எவரையும் சமனாகவே படைத்தான்
மனிதன் எவரையும் சமனாக மதிக்கவில்லை
வாழ்வில் மனிதன் மகிழ்வோடும் இல்லை
மனித முடிவில் மாற்றம் வந்தால் தானே
மகிழ்வான வாழ்வும் வந்தமையுமே!

வாயாலே தான் மனிதன் கெட்டானாம்
வெளியிட்ட சொல்கள் மாற்றாரைப் புண்ணாக்க
உறவுகள் எவரும் கிட்ட இல்லையாம்
தனித்த மனிதன் தோல்விகளைச் சந்திக்க
வாழ்வில் துயரங்கள் தொடர்கதை ஆச்சு!

செயலாலே தான் மனிதன் கெட்டானாம்
மனிதச் செயல்கள் மாற்றாரைப் புண்ணாக்க
விருப்பம் ஏதுமின்றி விலகுவோர் அதிகமாம்
நெருக்கடி வேளை உதவத் தான் ஆளில்லை
வாழ்வில் மகிழ்ச்சியின்றி மனிதன் திரிகின்றான்!

சொல்லும் செயலும் நன்றாக இருக்க
உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் தேவை
சொல்ல முன்னும் செய்ய முன்னும்
பின்விளைவை எண்ணிப் பார்க்க வேண்டும்
மகிழ்வான வாழ்வுக்கு முடிவெடு பிழைவிடாதே!

சொல் புத்தி தன் (சுய) புத்தி இரண்டும் இன்றேல்
எந்த முடிவும் உருப்படியான முடிவாகாதே!
நாலாளிட்ட மதியுரை கேட்டுப் பார்த்தால்
நல்ல முடிவுக்கு நால்வருமே வழிகாட்டுவரே
பலரேற்கும் முடிவே நல்ல முடிவாகுமே!


எழுதப் பழக்கிய பெரியோர்கள்!

மண்ணில் பிறக்கும் போதே
எழுத, வாசிக்க, பேசிக்கொள்ள
தெரிந்திருந்தால் பாரும் - எவரும்
எமக்குப் படிப்பிக்க வேண்டியிருக்காதே!
வெற்றுத் தலைக்குள்ளே அறிவேதுமின்றி
நாம் பிறந்தமையாலே தான்
அறிஞர் பலர் நமக்குப் படிப்பித்தனரே!
எவர் எதைப் படிப்பித்தாலும்
மணலில சுட்டு விரலைப் பிடித்து
'', '', '' எனத் தமிழ் உயிரை
எழுதப் பழக்கிய ஆசிரியரே
எனக்கு முதற் கடவுள் என்பேன்!
'மாமா' உடையாருக்குப் படிச்சவர்
'ஐயா' பண்டிதருக்குப் படிச்சவர்
அவையளைப் போல - நீயும்
படிச்சுப் பெரியாளாக வர வேண்டுமென
'', '', '' அழகாக, ஒழுங்காக எழுதென
அப்பர்ர தம்பி தான் - எனக்கு
முதன் முதல் எழுதப் பழக்கி இருந்தார்!
அடுத்தடுத்துத் தொடக்கக் கல்வியென
ஆறு ஆசிரியைகளிடம் படித்தே
'', '', '' என எழுதப் பழகினேன்!
அதுக்குப் பிறகு தானே
மயிலு பள்ளிக்கூடம், சைவப் பள்ளிக்கூடம் போய்
(யா/மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயம்)
ஐந்தாம் வகுப்பு வரை படித்தாலும்
'', '', '' என எழுதப் பழக்கிய
பெரியோரை மறக்கத் தான் முடியுமா?
யா/ மானிப்பாய் இந்துக் கல்லூரியில
எனக்குக் கணக்குப் படிப்பித்த
உடுவில் அப்புலிங்கம் ஆசிரியர்
என்ர கையெழுத்தைக் குப்பையென
கையேட்டில சிவப்பால எழுதியது
இப்பவும் உள்ளத்தில உருள...
'தெருத் தெருவாய் வேலைக்கு அலையேக்க
உன்ர தலையெழுத்துச் சரியில்லை!' என
காதலிக்க மறுத்த கண்ணகி நினைவில் வர
என் எண்ணங்களைத் தான்
நானும் பதிவு செய்ய - அந்த
எழுத்தில ஏதோ உருளுதென
வாசகர் விரும்பிப் படிக்க வைத்த
என் எழுத்தை எழுதப் பழக்கிய
எல்லோரையும் நினைவில் இருத்திக் கொண்டே
சாகும் வரை எழுதிக் கொண்டே இருப்பேன்!
எழுதப் பழக்கிய பெரியோர்களால் தானே
நானும் எழுதுபவரெனப் பெயரெடுத்தேன்...
அடிக்கடி எழுதும் போது
அவர்கள் தான் நினைவில் வருவார்கள்...
அவர்களை எப்படி நான் மறப்பேன்!


1 கருத்து :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!