Translate Tamil to any languages.

உளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்

குழந்தை வளர்ப்பும் கல்வியும்
(Child & Education Care Duty)

"எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான்
மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே" என்பது பாவலர் கண்ணதாசனின் பொன் வரிகள்.

பெற்றோரின் வளர்ப்பில் கட்டுப்பாடு, கட்டுப்பாடின்மை ஆகிய இரண்டினாலும் பிள்ளைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதே! ஆயினும், அன்பு எனும் தேன் கலந்து அறிவு எனும் தமிழ் ஊட்டி வளர்த்த அன்னைக்கு எத்தனை பொறுப்பு?

பொதுவாக நம் எண்ணங்களே செயலாகின்றது; செயலே பழக்காமாகின்றது; பழக்கமே வழக்கமாகின்றது; வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது.

வாழ்க்கையில் எல்லாமே அவர்களுக்குப் புதியது. நாம் தான் எல்லாம் கற்றுத் தர வேண்டும். பிறரிடம் அன்பு காட்டுதல், பிறரிற்கு மதிப்பளித்தல், நேர்மையாக நடந்து கொள்ளுதல் என நற்பழக்கங்கள், நல்லொழுக்கம் ஆகியவற்றைக் குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே கற்றுத்தர வேண்டும்.

குழந்தைகளுக்கும் உள்ளம்/மனம், உணர்வுகள், விருப்பு - வெறுப்புகள் உண்டு. குழந்தைகளில் அந்தந்த அகவையில்/வயதில் அவர்களுக்கு உடல் வளர்ச்சி, உள/மன வளர்ச்சி மாறிக்கொண்டே இருக்கும். அவர்களது வெளிப்பாடுகளில் அதனைக் காணலாம். அவர்களது விருப்பம், திறமை ஆகியவற்றை கண்டுபிடித்து அவற்றை வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

குழந்தைகளின் செயற்பாடுகளை அவர்களுடைய சிறு பருவத்தில் இருந்தே கவனிக்க வேண்டும். ஒரு குழந்தையைச் சிறந்த சிற்பமாகச் செதுக்கும் பொறுப்பும் வாய்ப்பும் பெற்றொரின் பணியாகிறது. குழந்தை வளர்ப்பு என்பது அவர்களுடைய தனித்திறமைகளை கண்டறியும் வண்ணம் இருக்க வேண்டும். அதனால், பெற்றோர் வெறும் கல்வியை மட்டும் அளிக்காமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

அவர்களுடைய செயல்பாடுகள் மூலம் அவர்களது தனித்திறமைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின் தனித்திறமைகள் அடிப்படையில் அவர்களுக்குக் கல்வி வழங்க வேண்டும். கல்வி என்பது கரும்பலகையில் மட்டும் கற்பிக்க கூடியது அல்ல அதற்கு அப்பாலும் தூண்டலின் மூலம் கல்வியானது கற்பிக்கப்பட வேண்டும்.

குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. பிள்ளைகள் வகுப்பில் பின்தங்கி இருந்தால் அவர்களை அன்புடன் அணுகி புரியாத பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிக்கடி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் உடல் நலம், உள/மன நலம், கல்வி முன்னேற்றம், நடத்தை மாற்றம் ஆகியவற்றைக் கவனத்தில் எடுத்து நல்லொழுக்கமுள்ள கல்வியில் சிறந்தவராக வர ஒத்துழைக்க வேண்டும்.

ஆளணி (மனித) வள முகாமைத்துவத் தீர்வுகள்
(Human Resource Management Solutions)

இன்றைய நாட்டுநடப்பில் பல நிறுவனங்கள் சோர்விலும் (நட்டத்திலும்) சில நிறுவனங்கள் தேட்டத்திலும் (இலாபத்திலும்) இயங்குகின்றன. இவற்றிற்கான காரணம் ஆளணி (மனித) வள முகாமைத்துவத்தில் தவறு அல்லது ஆளணி (மனித) வள மேம்பாடு சரியில்லை எனலாம். எல்லோரும் ஆளணி (மனித) வள முகாமைத்துவம் பற்றித் தெரிந்திருத்தால் பணித் தளங்களில் இலகுவாக உறவுகளைப் பேண முடியும்.

குறித்த ஓர் அமைப்பு அல்லது குழு (கட்சி) அல்லது நிறுவனம் தமது உறுப்பினர்களை அதாவது ஆளணி (மனித) வளங்களை ஒழுங்குபடுத்திப் பேணும் நெறி ஆளணி (மனித) வள முகாமைத்துவம் எனலாம். ஒரு நாட்டின் முதன்மைச் சொத்து ஆளணி (மனித) வளம் என்பதை எவரும் மறுப்பதிற்கில்லை.

உளவியல் நோக்கிலும் அமைப்பின் அல்லது குழுக்(கட்சி)களின் அல்லது நிறுவனங்களின் அல்லது நாட்டின் கோட்பாடுகளின் அடிப்படையிலும் ஆளணி (மனித) வளம் பேணப்பட வேண்டியிருக்கிறது. அதாவது, பொருத்தமான துறையில் பொருத்தமான பதவியில் பொருத்தமான ஆளை அமர்த்தி; அதற்கேற்ப முகாமைத்துவம் செய்யவதாகும். தேவைகளை அல்லது அறுவடைகளை ஈட்டத் தேவையான ஆள் எண்ணிக்கை போதுமானது.

இந்த ஓழுங்கமைப்பில் ஆளணி (மனித) வள வளர்ச்சி என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுப் பேணப்பட வேண்டும். உளவியல் நோக்கில் ஒருவரை ஒருவர் நோகடிக்காத உறவுமுறை பேணப்பட வேண்டும். மேலும் துறைசார் கல்வி மற்றும் துறைசார் பயிற்சி அத்துடன் காலத்துக்குக் காலம் மாறும் துறைசார் நுட்பங்கள் யாவும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இங்கு தனியாள் விருத்தியும் நிறுவன இலக்கும் மேம்படத் தேவையானவற்றை பேணப்பட வேண்டும்.

ஆளணி (மனித) வள மேலாளர் பின்வருவனவற்றைக் கண்காணித்து மேம்படுத்துதலில் அக்கறை காட்டவேண்டும்.
1. பொருத்தமான வேலைக்குப் பொருத்தமான ஆள் சேர்த்தல்
2. துறைசார் கற்றல்/ பயிற்சி/ நுட்பம் வழங்குதல்
3. ஆளணி (மனித) வள விரிப்பைப் பேணுதல்
4. பணியாளர் வரவு, வேலை நேரம் கண்காணித்தல்
5. சரியான நேரத்தில் சம்பளப் பட்டியல் தயாரித்தல்
6. பணியாளர் செயல்திறன், சம்பள உயர்வு, மேலதிக நேரக் கொடுப்பனவு, சிறப்புக் கொடுப்பனவு எனப் பணியாளர் நலனில் அக்கறை காட்டுதல்
7. பணியாளர்கள் அதாவது ஆளணி (மனித) வளம் என்பது அமைப்பின் அல்லது குழுவின் (கட்சியின்) அல்லது நிறுவனத்தின் அல்லது நாட்டின் சொத்து அல்லது முதலீடு எனப் பேணவேண்டும்

எப்போதும் ஆளணி (மனித) வள மேம்பாடு முறையாகப் பேணுகின்ற நிறுவனங்கள் தேட்டத்திலே (இலாபத்திலே) இயங்குகின்றன. எப்போதும் ஆளணி (மனித) வள மேம்பாடு முறையாகப் பேணத் தவறுகின்ற நிறுவனங்கள் சோர்விலே (நட்டத்திலே) இயங்குகின்றன. இதற்கு, ஆளணி (மனித) வள முகாமைத்துவமும் ஆளணி (மனித) வள மேம்பாடும் (Human Resource Management and Human Resource Development) முக்கியமாகப் பேணப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!