Translate Tamil to any languages.

வியாழன், 16 செப்டம்பர், 2021

தெருத் தெருவாக வண்டிலில் பொத்தகம் விற்கும் நிலை

2022 இல வண்டிலில் பொத்தகம் வைத்துத் தெருத் தெருவாக விற்கும் நிலை எனக்கும் வரலாம் என்றெண்ணி இப்பதிவு. இதோ அந்த வண்டில் வணிகம்.

பொத்தகக் கடைகளில் பொத்தகம் தூசி படிந்து மூடிக் கிடக்கிறது. இணைய வெளியில் பொத்தகம் படிக்காமல் காணொளி பார்க்கிறாங்க. எந்த வழியிலும் வாசிப்பு நாட்டம் உள்ளவர்களைக் காணவில்லை. வலை விரித்துப் பிடிக்க முயன்றாலும் அகப்பட மாட்டார்கள் என நம்புகிறேன். அதனால் தான் இம்முயற்சியைக் காணொளியாக அறிமுகம் செய்துள்ளேன்.


மேலும், முகநூலில் கவிதை அரங்கேறும் நேரம்குழுவில்

https://www.facebook.com/groups/971804760234678

தெருத் தெருவாக வண்டிலில் பொத்தகம் விற்கும் நிலையை விளக்கி நீங்களும் உங்கள் விருப்பிற்கு உரிய கவிதைகளை இணைக்கலாம். கவிதைகள் மின்நூலாக வெளியிடப்படும். நான் இணைத்த கவிதையைக் கீழே தருகின்றேன்.

சிற்றுண்டி விற்பனை வண்டியிலும்

விற்பனைக்குப் பொத்தகங்கள் வந்தாச்சோ

தெருவழியே அலையும் வணிகருக்கு

வாசிப்பவர் இன்றிச் சோர்வாச்சோ

                          (தன்முனைக் கவிதை)

இப்பதிவோ இம்முயற்சியோ நமது சூழலில் வாசிப்பு நாட்டத்தினை ஏற்படுத்தும் நோக்கில் எழுந்தது. முகநூலில் கவிதை அரங்கேறும் நேரம்குழுவில் https://www.facebook.com/groups/971804760234678 இதனை வலுப்படுத்தும் நோக்கிலும் கவிதைகளை இணைக்கலாம்.

வாசிப்பு நாட்டம் இல்லாத சூழலில்

கற்றலில் நாட்டம் உள்ளவர் இருப்பரோ?

ஏன், அறிவாளிகள் தான் இருப்பரோ?

என்றெல்லாம் ஐயம் வர வாய்ப்பு இருக்கக்கூடும். ஒரு நாட்டின் சொத்தாக எழுத்தறிவுள்ள மக்களைப் பேணி வருகின்றோம். வாசிப்பு நாட்டம் இல்லாத மக்களை நாட்டின் சொத்தாகக் கருத முடியாதே! நமது சூழலில் வாசிப்பு நாட்டத்தினை ஏற்படுத்தும் பணிகளை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். அதனால், நாளைய வழித்தோன்றல்கள் அறிவாளிகளாக மின்ன முடியும்.


புதன், 1 செப்டம்பர், 2021

உலக அமைதிக்கு ஓர் மருந்து


 

ஓரூரில ஒரு நாள் பல மதத்தவரும் தத்தம் வழிபாட்டுத் தலங்களுக்குச்  சென்று வழிபாட்டை முடித்த பின் வெளியேறித் தெரு வழியே வந்தனர்.  அந்தத் தெருவில் வெயிலுக்கு நிழல் தரும் மரங்கள் ஒன்றுமே இல்லை. சற்று நேரத்தில் காற்றோடு மழை வந்து ஆள்களை நனைத்தது.

 

மழைக்கு நனைந்தவர்கள் மேலும் நனையாது தம்மைக் காக்க; ஆளுக்கொரு சமயம், ஆளுக்கொரு கோவில், ஆளுக்கொரு கடவுள் என்று பிரிந்து வாழ்ந்ததை மறந்து மழைக்கு ஒதுங்கினால் போதும் என்று ஆளாளுகள் அகப்பட்ட மதங்களுக்கான ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். மழை தானே என்று அந்தந்த ஆலயங்களைச் சேர்ந்தவர்களும் வெளியேற்றவில்லை.

 

ஆளுக்கொரு சமயம், ஆளுக்கொரு கோவில், ஆளுக்கொரு கடவுள் என்று பிரிந்து வாழ்ந்தவர்கள் 'மழை', 'மழை' என்று எவரெவர் மதக் கோவில் என்று பாராமல் நுழைந்து மழைக்கு ஒதுங்கியமை  தான்  "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று உணரவைக்கிறது. ஒவ்வொரு இயற்கை மாற்றங்களும் இதனையே உணர்த்துகிறது. 

 

இனியாவது, ஆளுக்கொரு சமயம், ஆளுக்கொரு கோவில், ஆளுக்கொரு கடவுள் என்று பிரிந்து வாழாமல் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என நாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழலாமே!  மதங்கள் கடவுளை நெருங்க/ கடவுள் பக்கம் செல்ல மக்களுக்கு வழிகாட்டும். மக்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்து நல்லொழுக்கமாக வாழ மதங்கள் வழிகாட்டும். 

 

ஓர் உலகில் ஓர் இயற்கையின்  செயல் ஒரு கடவுளின் செயல் என்றே கூறமுடியும். மலை உச்சியில் மழை பெய்து போட்ட வெள்ளம் பல  ஆறுகளாகப் பிரிந்து ஒரு கடலில் கலப்பது போலத் தான் பல மதங்களும் பல ஆறுகள் போல ஒரு கடவுளை அடையத் தான் வழிகாட்டுகின்றன. 

 

நாடு, மொழி, இனம், மதம், சாதி வேறுபாடுகளை மறந்து 

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று ஒரு தாய் ஈன்ற பிள்ளைகளாக வாழ்ந்தால் மட்டுமே ஊரில, நாட்டில, உலகத்தில அமைதியை ஏற்படுத்தலாம். எல்லோரும் எள்ளளவேனும் எண்ணிப்பார்த்தால் கூட மனித ஒற்றுமையும் உலக அமைதியும் நிலைநாட்டப் பங்கெடுக்கலாம்.

 

குறிப்பு -  பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி அவர்களின் பேச்சிலிருந்து நான் பொறுக்கிய தகவலை வைத்து எழுதியது. ஆயினும் லியோனி அவர்களோ திரைப்பட இயக்குனர் கே.பாக்கியராஐ் அவர்களின் தகவலெனத் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும். எமக்குத் தேவை மனித ஒற்றுமையும் உலக அமைதியுமே!