Translate Tamil to any languages.

திங்கள், 27 செப்டம்பர், 2021

கண்ணும் குறளும் கண்ணோட்டமும்

 கண்ணென்ப பார்க்கத்தான் கண்ணாலே பார்த்ததை

உண்மையில் செய்வாராம் காண்.

                  (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 

நல்லவை மட்டுமே கண்ணாலே பார்த்தவர்

நல்லதையே செய்திடுவார் காண்.

                  (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 

கெட்டவை மட்டுமே கண்ணாலே பார்த்தவர்

கெட்டதையே செய்திடுவார் காண்.

                  (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 

கண்ணாலே கண்டதை மூளையாம் உள்வாங்க

எண்ணும் விளைவையே காட்டு. (ம்)                 

                  (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 

நல்லதைத் தானுறிஞ்சி கெட்டதைத் தான்விலக்கி

பார்க்காத கண்ணுந்தான் புண்.

                  (இரு விகற்பக் குறள் வெண்பா)

 

வள்ளுவர் வாக்கிலே கண்ணுமே புண்ணாமே

கண்ணோட்டந் தான்படித்தால் காண்.

                  (இரு விகற்பக் குறள் வெண்பா)

                 

ஒரு பொருளின், ஒரு பொத்தகத்தின், ஒரு பாடலின் வெளியீட்டில் இருப்பதென்ன என்றெல்லாம் பார்ப்பது கண்ணோட்டம் அல்ல. அப்பொருளின், அப்பொத்தகத்தின், அப்பாடலின் உள்ளடக்கத்தை அலசிப் பார்க்க வேண்டும். அதன் அகம், புறம் மட்டுமல்ல; அந்த உள்ளடக்கத்தின் நன்மை, தீமை மட்டுமல்ல; பயனாளிக்கான பயனென்ன என்றவாறு கண்ணாலே கண்டதும் மூளை இயங்கிச் செயற்படும். அவ்வாறான பார்வையே கண்ணோட்டமென எண்ணுகின்றேன். அவ்வாறு கண்டிராத கண்ணை வள்ளுவர் சொல்லுமாப் போல புண்ணென்று எண்ணுகின்றேன்.

 

ஒவ்வொருவர் செயலையும் உலகம் இப்படியான கண்ணோட்டத்திலே கவனிக்கின்றது என்பதை மறக்க வேண்டாம். அதனடிப்படையிலேயே எனது குறள் வெண்பாக்களை ஆக்கியுள்ளேன். அதாவது எதனைப் புலன் உறுப்புகளால் உள்வாங்கிறோமோ அதனை மூளை பதிவு செய்கிறது. அதன் விளைவுகளையே மனித வெளியீடுகளாக (எழுத்து, சொல், செயல், நடத்தை வழியாக) மூளை காண்பிக்கின்றது. சுருங்கக் கூறின் அவரவர் உள்ளத்தில் (உள்ளம் – மூளை இயங்கும் விதம்) இருப்பதே அவரவர் வெளியீடாகக் காணமுடியும்.

https://www.thirukkural.net/ta/kural/kural-0574.html

என்ற இணையத் தளத்தில் இருந்து பொறுக்கியது.

 

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.   (௫௱௭௰௪ - 574)

 

தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்?  (௫௱௭௰௪) —  புலியூர்க் கேசிகன்

 

https://www.thirukkural.net/ta/kural/kural-0575.html

என்ற இணையத் தளத்தில் இருந்து பொறுக்கியது.

 

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்.   (௫௱௭௰௫ - 575)

 

கண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே! அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது புண்என்றே சான்றோரால் கருதப்படும்  (௫௱௭௰௫) —  புலியூர்க் கேசிகன்


நல்லதை எண்ணுவோம்; எம்மை அறியாமலே நல்லது வெளிப்படும்; எம்மை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முடியும்.



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!