Translate Tamil to any languages.

வியாழன், 1 செப்டம்பர், 2016

தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)


01/09/2016 காலை "தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்" என்ற செய்தியைக் கேட்டதும் எனது உள்ளம் நொந்தது; உடலும் இயங்க மறுத்தது. நான் வலையுலகில் "யாழ்பாவாணன்" என்ற பெயரில் உலா வர வழிகாட்டி, தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) என்பதால் என் நெஞ்சு முட்டத் துயரம் நிறைந்து நிற்கத் தான் செய்கிறது. என்னால் இந்தச் செய்தியை நம்பத் தான் இயலவில்லை!

"எல்லோருக்கும் பொதுவான இறைவன்
இப்படி விரைவாக
தம்பி வினோத்தை அழைப்பாரென
எவரும் எதிர்பார்த்திருக்க இயலாது தான்...
இத்தால்
எல்லோர் உள்ளத்திலும் துயரம் தான்...
இறைவா!
இந்தத் துயரை எமக்கேன் தந்தாய்!" என என்னால் அழத்தான் முடிந்தது. என்னையே என்னால் ஆற்றுப்படுத்த இயலாத நிலையில், அவரது குடும்பத்தாருக்கு நான் எத்தனை கோடி ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்த முடியும் என்கிறீர்கள்.

இறைவா!
இந்தத் துயரை எமக்கேன் தந்தாய்!
யாரை யார்
ஆற்றுப்படுத்துவது என்று அறியாமல்
தமிழ்நண்பர்கள்.கொம் உறவுகள்
எல்லோருமே துயரத்தில் மூழ்கி நிற்கின்றனர்.
"தமிழும் தமிழ் சார்ந்த நண்பர்களும்!..." என்றும்
ஒன்றுகூடி - உலகெங்கும்
தமிழைப் பரப்பிப் பேண என்றே
தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தை ஆக்கித் தந்து
அன்பாலே தமிழறிவையும் ஊட்டி வைத்து
நட்புகளை அரவணைத்துச் சென்றாயே என
ஆளுக்காள் கதறி அழுகின்றனர்!
தமிழ்நண்பர்கள்.கொம் உறுப்பினர்கள் எளிதாக
"கவிதை! கவிதை!
கவிதை எழுதலாம் வாங்க!!!" என
கவிதை எழுத்தத் தூண்டி
தனக்குத் தெரிந்த தமிழ் என
தமிழ் இலக்கணத்தையும் சுட்டிக் காட்டி
தமிழ்நண்பர்கள்.கொம் உறுப்பினர்கள் இடையே
தமிழ் பற்றை ஊட்டி வளர்த்த
தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களை
உலகத் தமிழர் அறிய வேண்டும் - அவர் செயலை
உலகெங்கும் அறிய வைப்போம்!

திரு.வினோத் கன்னியாகுமரி பற்றி...
அவரது தலைப்பக்கப் (Header Image) படம்

Description: வாழ்க்கை பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிட காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன்...

Introduction: நான் வினோத். பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலை பார்ப்பது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில். கணினி மென்பொருளாளராக வேலை. அமைதி, தனிமை, இசை, தியானம், தமிழ் பிடிக்கும்...

https://ta-in.facebook.com/vinoth.3v தளத்தில்
விருப்பமான மேற்கோள்கள்
"தவறு என்பதைச் செய்யத் தவறுங்கள்; சரி என்பது சரியாய் நடக்கும்."

தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களின் முழுமையான அடையாளத்தையும் http://tamilnanbargal.com/nabar/5 தளத்தில் கண்டுகளிக்கலாம். தமிழ்நண்பர்கள்.கொம் தளமூடாகப் பல போட்டிகளை நடாத்திப் பரிசில்களும் வழங்கி எல்லோருக்கும் ஊக்கம் அளித்தவர்.
சிறந்த மென்பொருள் வடிவமைப்பாளர்
சிறந்த வலைப்பக்க வடிவமைப்பாளர்
சிறந்த கவிஞரும் எழுத்தாளரும்
கணினி நுட்பம், இலக்கியம், தமிழ், எனப் பல துறை அறிஞரும் கூட
ஈழத் தமிழருக்காக வலைவழியே குரல் கொடுத்தவர்

2010 இலிருந்து அவருடன் தொடர்பு வைத்திருந்தமையால் அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னேன். அவருடன் மின்னஞ்சல், நடைபேசி வழியாகத் தொடர்பைப் பேணினேன்.

2015 மாசி இந்தியாவுக்குச் சென்றிருந்த வேளை மதுரையில் தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர்களுடன் வந்து நேரில் சந்தித்தார். தமிழ்நண்பர்கள்.கொம் மேம்படுத்தல், பைத்தன் கணினி மொழியில் Frame Work கண்டுபிடித்தமை என அவரது பல செயலைக் குறிப்பிட்டுப் பேசினார். சகோதரிகளின் திருமணம் முடிந்ததும் தனது திருமணம் என்றார். நான் எப்படியும் தம்பி வினோத்தின் திருமணத்திற்கு வருவதாகக் கூறியுமிருந்தேன். எவரும் நம்ப முடியாதவாறு இறைவன் இடையே புகுந்து இப்படி இடையூறு செய்துவிட்டார்.

தம்பி வினோத் (கன்னியாகுமரி) அவர்கள்
உண்மையான இந்தியன் மட்டுமல்ல
சிறந்த குடும்பப் பொறுப்பு மிக்கவர்
சிறந்த நாட்டுப் பற்றாளர்
சிறந்த தமிழ் பற்றாளர்
அத்தோடு தேடல் மிக்க
பல துறை சார் அறிஞர் என்பேன்!

தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களின் இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எத்தனை கோடி ஆறுதல் கூறியும் என்னால் அவர்களை ஆற்றுப்படுத்த இயலாத துயரில் இப்பதிவினைத் தங்களுடன் பகிருகிறேன். தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களின் இழப்பு, உலகத் தமிழரிடையே ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே கருதுகிறேன். இச்செய்தியைத் தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர்கள் சார்பாக உங்கள் யாழ்பாவாணன் பகிருகின்றார்.

9 கருத்துகள் :

  1. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  2. இளவயதிலேயே இப்படி நிறைய பேர் இறந்து போவது அதிர்ச்சியாக இருக்கிறது! ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு
  3. தன்னைக் கவனித்துக் கொள்ளாமல் ,சிறிய வயதிலேயே இப்படி காலமாவது மிகுந்த வருத்தத்தை தருகிறது !அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் ,நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் !

    பதிலளிநீக்கு
  4. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

    பதிலளிநீக்கு
  6. ஆழ்ந்த இரங்கல்கள்...
    அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்...

    பதிலளிநீக்கு
  7. எங்கள் ஊர்காரர் ... அவர் ஆன்மா சாந்தியும் சமாதானமும் அடைய இறைவனை பிராத்திக்கிறேன் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!