Translate Tamil to any languages.

வெள்ளி, 22 மே, 2026

நெஞ்சத்தில் உருளும் நன்றி

 





நன்றிக்கு நன்றியெனச் சொல்வதல்ல நம்மரபில்
நன்றிக் கடன்தீர்ப்பின் நன்று
  (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

செய்த செயலுக்கு
செய்நன்றி மறவாமல் நினை
செயலிலும் செய்நன்றி
           (துளிப்பா/ஹைக்கூ)

பலனை எதிர்பார்க்காது செய்
பகவத் கீதை சொன்னது
செய்த செயலுக்குச் செய்நன்றி
திருக்குறள் தான் சொன்னது
             (தன்முனைக் கவிதை)

இந்தியாவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில்17 மே 2026 ஞாயிறு அன்று இடம்பெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் ஹைக்கூ மாநாட்டில் எனது "யாழ்ப்பாவாணனின் துளிப்பாக்கள் ஹைக்கூ" பொத்தகம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அச்சிட்டு, வெளியீடு செய்து சிறப்பித்த இனிய நந்தவனம் குழுமத்திற்கு மிக்க நன்றி. இவ்வெளியீட்டில் பங்கெடுத்த மதிப்புக்குரிய அறிஞர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி.

எனது சொந்த ஊரான  இலங்கை, யாழ்ப்பாணம், மாதகலூரில் இப்பொத்தகம் விரைவில் (இந்தியாவில் இருந்து எனது ஊருக்குப் பொத்தகம் வந்து சேர்ந்ததும்) அறிமுகம் செய்து வைக்கப்படும்.

தகவல்: மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்

புதன், 13 மே, 2026

காதல் என்பது பொய் என்கிறாங்க

 


காதல்
ஒரு பருவக் குழப்பம் என்கிறாங்க...
எவர் அழகானவரோ
எவர் பணக்காரரோ
என்றெல்லாம் பழகுவதும்
இவரை விட அவர் அழகு
இவரை விட அவர் பணக்காரர்
என்றெல்லாம் ஆளையாள் மாற்றுவதாலே!
காதல்
ஒரு சுவைக்கும் வழி என்கிறாங்க...
ஆண் பெண்ணைச் சுவைத்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
பெண் ஆணிடம் - பொன்,
பொருள், பணம் வாங்கி
வருவாய் ஈட்டி மகிழ்ந்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
இருபாலாரும்
ஆளையாள் ஏமாற்றிச் சுவைப்பதாலே!
காதல்
ஒரு உப்புக் கருவாடு என்கிறாங்க...
காதலிப்பதாகக் கூறி
ஊருக்குள்ள கேவலமாக உலாவுதால் 
ஊரவரே
காறித் துப்பிப் பழித்து நெளித்து
கேலியும் நையாண்டியும் செய்வது கூட
கருவாட்டு நாற்றம் போல பரவுவதாலே!
காதலுக்குத் தான்
கண் இல்லை என்கிறாங்க...
கிழவி குமரனையும் குமரி கிழவரையும்
தாம் காதலிப்பதாக ஊருக்குள் உலாவுவதாலே!
காதலிலும் கூட
நகைச்சுவை இருக்கு என்கிறாங்க...
கள்ளக் காதல் செய்வோருக்கு
நல்ல காதலர் கிடைக்குது...
நல்ல காதல் செய்வோருக்கு
நம்பிக்கையான ஒருவரும்
கண்ணில் தென்படவில்லையென
காதலர் கிடைக்காதவரின்
கண்ணீர் கதை அது!
உண்மைக் காதல் என்பது
வேலிக்குள் பொட்டு வைத்து
மூஞ்சியை நீட்டிக் கதைப்பதால்
உருவான நம்பிக்கையான உறவென்று
ஆச்சி, அப்புமார் சொல்லி வைச்சாங்க!

திங்கள், 13 ஏப்ரல், 2026

கடன் பற்றிய கருத்துகள்


எந்தக் கவிஞர் எழுதினாரோ
எனக்குத் தெரியவில்லை - அவை
உள்ளத்தைக் கொஞ்சம் உரசியது!

'உறவுக்கும் பகை கடன்!' என்று
ஒரு கடையில் அட்டை(தாள்) ஒன்று
தொங்கவிட்டிருப்பதைக் கண்டேன்.

'எங்கள் வாடிக்கையாளரே
எமக்குக் கடவுள் ஆகையால்
கடன் கொடுப்பதில்லை என்பதை
வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்துகிறோம்.' என
கடையொன்றில் அழகாய் எழுதி
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

'கான மயில் ஆட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட
தயவு செய்து - எம்மிடம்
கடன் கேளாதீர் உறவுகளே!' என
கடை ஒன்றின் நுழைவாசலில்
எழுதப் பட்டிருந்ததை படித்தேன்.

அப்படி, இப்படி, உப்படி என்று
நானும் எழுதிப் பார்த்தேன்...

விற்பதும் வாங்குவதும்
கடனுக்கு இல்லைக் காண்பீர்
சிறந்த வணிகத்தில்
                    (துளிப்பா/ஹைக்கூ)

வாங்குவதும் விற்பதும்
வணிக வழக்கம் தான்
கடன் கொடுக்கல் வாங்கல்
வணிகத்திற்கு முரண்
                 (தன்முனைக் கவிதை)

பொருள்களை விற்றால் பணந்தான் தரவேணும்
நீதான் கடனை மற
        (இரு விகற்பக் குறள் வெண்பா)

வாங்கும் விற்கும் முறை தான்
வணிகம் என்று சொல்வார் படி
கடனை மட்டும் நாடா மல்தான்
நாளும் பழகிக் கொள்ள வேணும்
எப்பன் எண்ணிப் பாரும்
நன்றே நாளை விடியும் தானே!
                  (நேரிசை ஆசிரியப்பா)

உழைப்பே! பணம் ஈட்டுவதற்கே?
தாங்கள் கடன் கேட்டால் - நாம்
எப்படிப் பணம் ஈட்ட முடியும் காணும்!
கொஞ்சம் எண்ணிப் பாருங்கோவேன்!
                          (வசன கவிதை)

ஆக்கம்: யாழ்ப்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)


ஞாயிறு, 15 மார்ச், 2026

மருத்துவரை நாடுங்கள்


சுய(தன்) மருத்துவம் கூடாது.

மருந்து விற்பனை நிலையங்களில் நோயைச் சொல்லி மருந்து வாங்கக்கூடாது. என்றெல்லாம் பெரியோர் உங்களுக்குச் சொல்லித் தந்திருப்பர்.

சமூக ஊடகங்களில் மருந்துப் பொருள் விளம்பரம் அதிகம். அதனை நம்பி மருந்து வாங்கிப் பாவிக்கக்கூடாது.

தங்கள் நோய்க்கு மருந்தா?

விளம்பரம் சொல்லும் மருந்துக்கு நோயா?

சிந்தித்துப் பாருங்கள்.

தங்கள் நோய்க்கு மருந்து தேவையாயின் மருத்துவரை நாடுங்கள்.

விளம்பரம் சொல்லும் மருந்துக்கு நோய் வந்ததாகக் கருதினால் சாவு தான் வரும்.

விளம்பரதாரரோ மருந்துக் கடைக்காரரோ  தெருவோர வழிகாட்டியோ  தங்கள் உடலைப் பரிசோதித்து எந்த நோய்? எப்படி வந்தது? எந்த மருந்து, தங்கள் உடலுக்கு ஒத்துழைக்கும்? என்றெல்லாம் ஆய்வு செய்ய மாட்டார்களே! இந்தக் கேள்விகளுக்கு மருத்துவர் ஒருவராலேயே தீர்வு தரமுடியும்.

சிந்திக்க ஒரு மணித்துளி (நிமிடம்)!

மருத்துவரை அணுகித் தங்கள் நோயை விளங்கப்படுத்தி, மருத்துவ சோதனைகளைச் செய்து, மருத்துவர் கூறும் வழிகாட்டலின் படி மருந்தை வாங்கிப் பயன்படுத்துவதே நீண்ட ஆயுளுக்கு வழி! நானும் மருத்துவரை நாடி மாற்றார் நோயின்றி நீடூழி வாழ வழிகாட்டும் ஒருவர் என்பதனால் இதனைப் பதிவு செய்கிறேன்.

எனது கருத்தை ஏற்றுக்கொண்டால் இப்பதிவைப் பலருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

காசி.ஜீவலிங்கம் (யாழ்ப்பாவாணன்) +94703445441

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

மறக்க முடியாதது ஒன்றுண்டு



எனக்கு உதவிய எவரையும்

என்னாலும் மறக்க முடியவில்லை...
மறக்க முடியாமைக்கு காரணம்
என் வாழ்வில்
நானடைந்த முன்னேற்றம் தான்!
நாம் உயர உயர ஏறினாலும்
ஏற உதவிய ஏணி போன்ற
மனிதக் கடவுளரை மறப்பது
முறையாகுமோ? - அவர்களுக்கு
என்னாலும் உதவ முடியாவிட்டாலும்
ஆண்டவா அவர்களுக்கு உதவு என்று
ஒவ்வொரு நாளும் கடவுளை வேண்டுகிறேன்!
"நீ பலனை எதிர்பாராது
பிறருக்கு உதவி செய் - நான்
உனக்கு உதவுவேன்." என
கருணை காட்டும் கடவுள் சொன்னதாக
மத வழிகாட்டலைப் பின்பற்றி
உதவும் நெஞ்சங்களைப் பணிகின்றேன்!

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தேனிசைத் தேன்றல் தேவா, அனுருத் இன்றி எனது பாடல்

பாடல்: மாதகல் ஊரைப் பாடு

இணைப்பு: https://suno.com/s/esvIqMVPEKOWtBZd


பாடலாசிரியர்: யாழ்ப்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)


பாடி, இசைத்தது:Suno(.com) AI Music App


தலைப்பு: மாதகல் ஊரைப் பாடு


எந்தன் ஊர் மாதகல் ஊர் என்பேன் 

சொந்த உறவுகள் நிறைந்த ஊர் என்பேன் 

(எந்தன்)


மாதகல் ஊரின் அழகும் சிறப்பு என்பேன் 

மாதகல் ஊரின் வளமும் சிறப்பு என்பேன் 

(மாதகல்)


சம்பில் துறை, மாத்துறை, கெவிமாதா கோவில் கரைக்கு 

கரையைத் தேடும் நுரை தள்ளும் அலை 

இரவில் தேறை, முரல் மீன் தரும் கடல் 

இந்தியக் கோடியாக்கரை தழுவும் மாதகல் கடல் 

மாதகல் ஊராருக்கு வாழ்வுதரும் கடல்வளமாம்

                              (எந்தன்) (மாதகல்)


வெளிப்புலம், கிழுவைநாட்டி மேற்குக் கரை

காடாப்புலம், உப்புத்தரவை கிழக்குக் கரை 

வவுணை, காஞ்சிபுரம் வடக்குக் கரை

பாணாகவெட்டி அம்மனுக்கு அப்பால் தெற்குக் கரை

வேளாண்மை விளைச்சல் தரும் நிலவளமாம்

                              (எந்தன்) (மாதகல்)


இந்துக் கோவில், கத்தோலிக்க ஆலையம் சூழ

எந்தக் குறையும் இன்றி ஒன்றுபட்டு வாழ

கூறுபோட்டுப் பிரியாது ஒன்றுபட்டு வாழத்தான் 

அன்பும் பணிவும் நிறைந்த ஊர் மக்கள் 

அறிவும் ஆற்றலும் நிறைந்த ஊர் மக்கள் 

உலகை வியக்க வைக்கும் மாதகல் ஊரைப்பார்

                              (எந்தன்) (மாதகல்)

திங்கள், 12 ஜனவரி, 2026

இளையராஜா, ரகுமான் இன்றி என் பாடல் அரங்கேறியது

 


தங்கள் திறன்பேசியில் சுனோ ஏஐ செயலியைப் பதிவிறக்கி இலவசமாக உறுப்பினராகி உள்நுழையலாம். பின்னர், தங்கள் பாடல்களை பதிவு செய்து கிறியேற் அழுத்தியை அழுத்திச் சில மணித்துளிகள் காந்த் திருத்தவும். பல மாதிரிகளைக் காட்டும். தாங்கள் விரும்பிய பாடலை (குரலில்) பப்பிளிக் அழுத்தியை அழுத்தி வெளியிடலாம். பதிவிறக்கியும் பகிரலாம்; நேரடியாகவும் சமூக ஊடகங்களில் பகிரலாம்.

இதோ எனது கன்னி முயற்சி 

https://suno.com/s/PLNl1hPGQQGc4YaL

இந்த இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கவும்.

பின்னர், நானே தேர்ச்சி பெற்று உருவாக்கிய பாடல் கீழே இருக்கிறது.

தலைப்பு: வாழப் படி

விரிப்பு: வாழத் தேவை எவை என்றுணர்வோம்.

பாடல் வரிகள்:

வாழ்க்கை என்பது
வாழ்ந்து பார்த்தால் தெரியுமே!

வாழத் தான் நாலு பணம்
கைவசம் இருக்க வேண்டுமே!

உழைத்தால் தான் பணம் ஈட்டலாமே!
நல்ல துணை இருந்தால் போதுமே!
அன்பும் பணிவும் இருந்தால் போதுமே!
என்றும் நல்லபடி வாழப் போதுமே!

வாழ்க்கை என்பது
வாழ்ந்து பார்த்தால் தெரியுமே!

வாழத் தான் நாலு பணம்
கைவசம் இருக்க வேண்டுமே!

முரண்டு பிடிக்காமல் இருந்தால் போதுமே!
மோதிக் கொள்ளாமல் இருந்தால் போதுமே!
உண்மை பேசினால் நம்பிக்கை மலருமே!
பணத்தைச் சேமித்தால் மகிழ்ச்சி பெருகுமே!

வாழ்க்கை என்பது
வாழ்ந்து பார்த்தால் தெரியுமே!

வாழத் தான் நாலு பணம்
கைவசம் இருக்க வேண்டுமே!

ஒற்றுமையாய் இருக்கப் பழகினால் போதுமே!
காதலித்து வாழப் பழகினால் போதுமே!
இறுகப் பற்றி வாழ்ந்தால் போதுமே!
பிரிவின்றி நெடுநாள் வாழப் போதுமே!

வாழ்க்கை என்பது
வாழ்ந்து பார்த்தால் தெரியுமே!

வாழத் தான் நாலு பணம்
கைவசம் இருக்க வேண்டுமே!

இணைப்பு:

முழுமையடைந்த இந்தப் பாடலின் இணைப்பைக் கீழே தந்துள்ளேன். சொடுக்கிப் பாருங்கள். தங்கள் கருத்தையும் பகிருங்கள்.

https://suno.com/s/vtnlKu4fVFQsNXn2

திறன்பேசியில் Suno AI செயலி ஊடாகப் பா வரிகளை வழங்க, அதுவே பாடிப் பதிவு செய்து தந்தது. இது எனது முதல் முயற்சி.
இனி எனது பாடல்களைத் தொடர்ந்து கேட்கலாம்.

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

பிரபலம் (Popularity)


எல்லோராலும் நன்கு அறியப்பட்ட

[பிரபலமான (Popularity)] ஒருவராக
இருப்பதற்குத் தகுதி வேண்டுமே!
கெட்டவரும் பிரபலம் ஆகலாம்
ஆனால், மக்களுக்கு விருப்பம் இருக்காது!
நல்லவரும் பிரபலம் ஆகலாம்
ஆனால், மக்கள் விருப்பம் கொள்வர்!
"நீ எந்தப் பிரபலம்?" என்றால்
மக்கள் விரும்பும் ஒருவராக
பிரபலம் ஆவேன் என்பேன்!
மக்கள் விருப்பங்களை நிறைவேற்றினால் தானே
மக்கள் என்னை விரும்ப வாய்ப்புண்டு!
கைக்கு கைமாறும் பணத்தை
நம்பி எதிலும் இறங்குமல்
துறைசார் வல்லமையை
நான் வளர்த்துக் கொண்டால்
என்னாலும் மக்கள் விருப்புக்கு
ஏற்ற பணி (சேவை) ஒன்றைச் செய்து
பிரபலமாக முயற்சி எடுக்கப் போகிறேன்.
அன்பான உறவுகளே! - தாங்கள்
என்னை முந்திச் சென்று பிரபலமாக
நல்வழியில் கடினமாக உழைக்கலாம் தானே!
அன்பான உறவுகளே! - எனக்கு
முன்னதாகப் பிரபலமாக விரும்பி
தீய வழியில் முயற்சி எடுக்காதீர்கள்!
போட்டி இருந்தால் தானே
மக்களுக்கு நன்மை கிட்டும் என்பேன்!

சனி, 3 ஜனவரி, 2026

நீங்களும் எனக்கு வழிகாட்டலாம்



போகிப் பொங்கல், தைப் பொங்கல், பட்டிப் பொங்கல், காணும் பொங்கல் வரப்போகிறது.


அதற்கு முன் ஒரு மணித்துளி சிந்திப்போம்.


01/01/2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த பின் இறப்புச் செய்தி அதிகம். பொருண்மியச் சோர்வு (நட்டம்) அதிகம், வேலை வாய்ப்பு இன்மை அதிகம் என்றவாறு துயரங்கள் பெருகின. திருமணச் செய்தி, பிறப்புச் செய்தி எதையும் காணோம் அல்லது அருமை எனலாம். தேட்டம் (இலாபம்) என்று ஏதும் இல்லை.


இந்த நிலையில் உழவர் பெருநாளாம் வேளாண்மைக்கு துணைநிற்கும் பகலவனுக்கு நன்றி செலுத்தும் நாளாம் காணி உழுவதற்கு உதவும் எருதுக்கும் நன்றி செலுத்தும் நாளாம் என்றவாறு பழையன கழிந்து புதியன புகுத்தி, தை பிறந்தால் வழி பிறக்கும் என 2026 ஆண்டில் தூர நோக்கு சிந்தனையுடன் நல்லெண்ணத்துடன் பயணிக் முயற்சி எடுக்க வேண்டும்.


துன்பம், துயரம், இழப்பு வந்தாலும் அவற்றைத் தூக்கி வீசிவிட்டு முயற்சி எடுத்து மகிழ்ச்சியும் வெற்றியும் ஈட்டத் திட்டமிட்டுப் பயணிக்க வேண்டும்.


காசை மிச்சம் பிடித்து,  வருவாயைப் பெருக்கி, நல்லுறவைப் பேணி, உடற்பயிற்சி செய்து நோய்களை விரட்டி, மகிழ்ச்சியாக வாழ முயற்சி எடுக்கலாம் என்று இருக்கேன்.


நானோ சின்னப் பொடியன், தங்கள் உயரிய சிந்தனைகள், எண்ணங்கள், வழிகாட்டல் யாவும் எனக்கும் சொல்லித் தந்தால்; நானும் 2026 இல் வெற்றி நடை போடலாம் என்று நம்புகிறேன்.

வியாழன், 1 ஜனவரி, 2026

கடவுளுக்கு என்ன பதில்?

 


புதிய விடியலை உறுதிப்படுத்த
பழைய நாட்காட்டித் தாளைக் கிழிக்கிறோம்.
ஒரு நாள் முடிந்ததும்
என்னைக் கிழித்து எறியும் மனிதா
குறித்த நாளில் - நீ
என்ன தான் செய்தாய் என்கிறது
பழைய நாட்காட்டித் தாள்!
ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் வேளை...
எனது காலத்தில் - நீ
என்ன பண்ணிக் கிழித்தாய் என்கிறது
பழைய ஆண்டு (2025)!
எனது காலத்தில் - நீ
என்ன பண்ணலாம் என்று
எண்ணிக் கொண்டு இருக்கிறாய் என்கிறது
புதிய ஆண்டு (2026)!
"செல்லும் வழி சரியாயின் வெற்றியே!" என
ஒரு வரியில் கவிதை தோன்றிச்சு!
"புத்தாண்டில் சிந்தித்து நல்வழியில் சென்றிடு
எந்நாளும் வெற்றியை நாடு." என
குறள் வெண்பா ஒன்றும் தோன்றிச்சு!
"பட்டது எல்லாம் படித்து
கெட்டதைக் கைகழுவி விடணும்
தொட்டது எல்லாம்   வென்றிட
புத்தாண்டில் நல்வழியில் சென்றிடு" என
தன்முனைக் கவிதை  ஒன்றும் தோன்றிச்சு!
"புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தது போதும்
புத்தாண்டில் போட்டிருக்கும் திட்டமென்ன?
எப்படி நடைமுறைப்படுத்தி
எத்தனை எத்தனை
நன்மைகள் அடையப் போகின்றாய்?" என்று
கடவுள் வந்து உன்னைக் கேட்டால்
மனிதா! நீ என்ன பதில் சொல்வாய்?