Translate Tamil to any languages.

வியாழன், 1 ஜனவரி, 2026

கடவுளுக்கு என்ன பதில்?

 


புதிய விடியலை உறுதிப்படுத்த
பழைய நாட்காட்டித் தாளைக் கிழிக்கிறோம்.
ஒரு நாள் முடிந்ததும்
என்னைக் கிழித்து எறியும் மனிதா
குறித்த நாளில் - நீ
என்ன தான் செய்தாய் என்கிறது
பழைய நாட்காட்டித் தாள்!
ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் வேளை...
எனது காலத்தில் - நீ
என்ன பண்ணிக் கிழித்தாய் என்கிறது
பழைய ஆண்டு (2025)!
எனது காலத்தில் - நீ
என்ன பண்ணலாம் என்று
எண்ணிக் கொண்டு இருக்கிறாய் என்கிறது
புதிய ஆண்டு (2026)!
"செல்லும் வழி சரியாயின் வெற்றியே!" என
ஒரு வரியில் கவிதை தோன்றிச்சு!
"புத்தாண்டில் சிந்தித்து நல்வழியில் சென்றிடு
எந்நாளும் வெற்றியை நாடு." என
குறள் வெண்பா ஒன்றும் தோன்றிச்சு!
"பட்டது எல்லாம் படித்து
கெட்டதைக் கைகழுவி விடணும்
தொட்டது எல்லாம்   வென்றிட
புத்தாண்டில் நல்வழியில் சென்றிடு" என
தன்முனைக் கவிதை  ஒன்றும் தோன்றிச்சு!
"புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தது போதும்
புத்தாண்டில் போட்டிருக்கும் திட்டமென்ன?
எப்படி நடைமுறைப்படுத்தி
எத்தனை எத்தனை
நன்மைகள் அடையப் போகின்றாய்?" என்று
கடவுள் வந்து உன்னைக் கேட்டால்
மனிதா! நீ என்ன பதில் சொல்வாய்?

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!