Translate Tamil to any languages.

சனி, 26 செப்டம்பர், 2015

காசு/பணம் உங்களுக்காக... எப்படி... எப்படி...

வலைப்பூக்கள், வலைத்தளங்கள், கருத்துக்களங்கள் எனப் பல நடத்தும் அறிஞர்கள் பல நோக்கங்களைக் கொண்டிருக்கலாம்.
1. பட்டறிவு, படித்தறிவு எனப் பலவற்றைப் பலருக்குப் பகிரும் எண்ணம்.
2. தமது சான்றிதழ் போலக் காண்பிக்கும் எண்ணம்.
3. மக்கள் உள்ளங்களில் நல்லெண்ணங்களை விதைக்கும் எண்ணம்.
இப்படி எண்ண முடியாத எண்ணங்கள் இருந்தாலும் ஈற்றில் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்டவும் செய்கின்றனர்.

அவ்வாறு தளங்களில் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்ட முனைவோரின் தளங்களைப் பார்த்தீர்களா?
1. தளத்தை மேயப் போனால் விளம்பரங்கள் முன்னே வந்து குவியலாம்.
2. தளத்தை மேயப் போனால் தளத்தில் விளம்பரங்கள் நிறைந்து இருக்கலாம்.
3. தளத்தில் தட்டச்சுச் செய்தால் விளம்பரங்கள் முன்னே வந்து விழலாம்.
இப்படி எண்ண முடியாத இடையூறுகள் இருந்தாலும் கூடச் சிலர் தளங்களைப் பேணலாம். காலப் போக்கில் வாசகர் அற்று இருக்கலாம்.

இந்நிலையைக் கடந்தும் சிலர் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்டத் தவறவில்லை. அதாவது அளவளவாகச் சில விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்டுகின்றனர். வாசகர் வருகை குறையாமலும் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்டுவதுமாகத் தளங்களைப் பேணுவதெப்படி? அதுவா...
1. நாளுக்கு நாள் நம்பிக்கை ஊட்டும் செய்திகள் தரலாம்.
2. நாளுக்கு நாள் இன்று ஒரு தகவல் தரலாம்.
3. நாளுக்கு நாள் நகைச்சுவை / கட்டுரை / கதை / கவிதை என ஏதாவது ஒன்றைத் தரலாம்.
இப்படி நாளுக்கு நாள் வாசகர் தேடல்களுக்கு ஏற்ப நிறைவான, சுவையான பதிவுகளை வழங்குவதோடு தளத்தை விளம்பரங்களால் மூடிமறைக்காமல் பேணலாமே!

எடுத்துக்காட்டுக்காக எனது தளத்தைப் பார்வையிடுங்கள். அதன் பெயர் "காசு/பணம் உங்களுக்காக அல்லது Cash/Money For You" என்பதாகும். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எளிமையான எனது கிறுக்கலில் இத்தளத்தை வடிவமைத்துள்ளேன். உலகில் உலாவும் விளம்பர அளவுகள், அதற்கான கட்டணங்கள் தந்துள்ளேன். தளத்தின் வலப்புறம் மற்றும் கீழ்புறத்தில் விளம்பரங்களைப் பதிவு செய்துள்ளேன். நீங்கள் கீழ்வரும் பக்கங்களைப் படித்தால் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்டத் தேவையான அடிப்படைத் தகவலைப் பெறலாம். சில விரிப்புகளைப் பதிவிறக்கியும் படிக்கலாம்.

இப்படி ஒரு வலைப்பக்கமோ வலைப்பூவோ நடாத்த அறிவு போதாததெனின் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கி ஒளிஒலிப் (Video) படங்கள் ஊடாகப் படிக்கலாம். இவ்வாறான ஒளிஒலிப் (Video) படங்களைக் கூகிளில் தேடியும் படிக்கலாம்.

முடிவாகச் சொல்வதாயின் தளத்தின் அழகு (பதிவுகள் விளம்பரங்களால் மூடுப்படாமல்...) நாளுக்கு நாள் சுவையான பதிவு, வருகை தரும் வாசகர் எண்ணிக்கை ஆகியவற்றில் கண்காணிப்பு இருப்பின் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்ட முடியும் என்பேன்.

வியாழன், 24 செப்டம்பர், 2015

எனது வலைப் பயணத்தில் இணைய அழைக்கின்றேன்.

என் மீது அன்பு காட்டும் அறிவு உள்ளங்கள் எல்லோருக்கும்
என் உள்ளம் நிறைந்த வணக்கங்கள்!

நான், எனக்கு வைத்த புனைபெயரே 'யாழ்பாவாணன்' என்பதாகும். எனது தந்தை பெயர் காசிராசலிங்கம்; என் பெயர் ஜீவலிங்கம் (என் பெயரைத் தமிழ்ப்படுத்தினால் 'உயிரழகன்' என்றமையும்); இரண்டிலிருந்தும் பொறுக்கி அமைத்த பெயரே காசி.ஜீவலிங்கம் என்பதாகும். நம்ம ஊர் வழக்கில காசிராசலிங்கம் ஜீவலிங்கம் என்று வரும். ஆனால், வலை வழியே ஜீவலிங்கம் காசிராசலிங்கம் என்று வரலாம். வலைத் தளங்களில் இந்தப் பெயர்க் குழப்பம் இருப்பதால் சற்று விளக்கினேன்.

நான் பல்கலைக்கழகம் சென்று பட்டங்கள் எதுவும் பெறாத அறிவில் சின்னப்பொடியன். என்னைப் பற்றிய எல்லாம் அறிய எனது தனியாள் தளம் மேம்படுத்திவிட்டேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அத்தளத்தைப் படித்த பின்; நான் நல்லவரா, கெட்டவரா என்பதை மட்டுமல்ல எனது அறிவை, பட்டறிவை (அனுபவம்) எல்லாம் அறிந்து கொள்ளலாம்.

எனது அறிவின் அளவு எவ்வளவு தெரியுமா? ஆடு, மாடு புல் மேயும் போது முழுமையாக மேயாது. அவை நுனிப் புல்லைக் கடித்துத் தின்பதோடு விட்டுவிடும். அதுபோலத் தான் நானும் பல துறை அறிவைப் படித்தாலும் "நுனிப் புல் மேய்ந்தளவு" கற்றிருக்கிறேன். அவை எவையென இந்த வலைப் பூவில் பார்க்கலாம்.

ஆயினும் நான் 1995 இல கணினித் துறைக்குள் நுழைந்து விரிவுரையாளராகவும் நிகழ்நிரலாக்குனராகவும் பணியாற்றி உள்ளேன். அதிலும் நான் கற்ற நுனிப் புல் மேய்ந்தளவு கணினி அறிவை, உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணப் பாவிக்கலாமென யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) என்ற தளத்தை அமைத்திருந்தேன். அதனையும் தற்போது மேம்படுத்தி விட்டேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அத்தளத்தைப் பார்வையிடலாம். தளம் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழில் சுருக்கம் இருக்கும்.

வலைத் தளம் நடாத்தி வருவாய் ஈட்டுறாங்களாம். அது பற்றிய தகவலைப் பகிரத் தனியாக ஒரு தளம் அமைத்துள்ளேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அத்தளத்தைப் பார்வையிடலாம்.

மேலும், அறிஞர்களின் ஒரு இலட்சம் மின்நூல்களைத் திரட்டிப் பேணும் பணியையும் தொடருகிறேன். அதேவேளை அறிஞர்களின் வலைப்பூக்களையும் திரட்டிப் பேணுகிறேன். எல்லா வலை முகவரிகளையும் உங்கள் நடைபேசிகளில் பார்வையிட வசதியாக நடைபேசி வலைத்தளம் ஒன்றையும் ஆக்கியுள்ளேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அத்தளத்தைப் பார்வையிடலாம்.

என் மீது அன்பு காட்டும் அறிவு உள்ளங்கள் எல்லோரும் மேற்காணும் தளங்களைப் பார்வையிட்ட பின்னர், தளங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல் தளங்கள் நிறைவு தரும் வகையில் மேம்படுத்தப்பட
வேண்டிய எல்லாவற்றையும் தெரிவிக்கலாம். எனது தளங்களின் வழியே வெளிக்கொணரும் வெளியீடுகளை பலரும் அறியும் வண்ணம் பகிர்ந்து ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகின்றேன்.

நானோ மிளகளவாய் இருந்தாலும் நான் கற்றதோ கடுகளவாய் இருந்தாலும் எனது அறிவாற்றலை வெளிப்படுத்தவே வலைப் பக்கங்கள். ஆயினும் அரசியல், சமயம் சார்ந்த வெளியீடுகளைத் தர முடியாமைக்கு மன்னிக்கவும். எனது வலைப் பயணத்தில் இணைய அழைக்கின்றேன் என்பதை விட, என் மீது அன்பு காட்டும் அறிவு உள்ளங்கள் எல்லோருடனும் நானே இணைந்து செயற்படுகிறேன்; இணைந்து செயற்பட இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.