Translate Tamil to any languages.

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

நம்பக்கூடியதை நறுக்காகக் கூறலாமே!

வெளியீடு என்பது பகலுக்குப் பகலவன் (கதிரவன்) போல இரவுக்கு இரவவள் (நிலவவள்) போல ஒளியை வெளியிட்டு உலகில் மாற்றத்தைக் காட்டும் செயலே! ஆற்றல் உள்ளோரின் வெளியீடும் அறிவொளியை வெளியிட்டு வாசகர் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயலாக இருக்கவேண்டும். சூழலில், மக்கள் உள்ளங்களில், நாட்டில், அரசில், உலகில் மாற்றத்தை வெளியீடுகளால் ஏற்படுத்த முடியும். எழுதுகோல் ஏந்திய எவரும் தமது படைப்புகளை வெளியிட முன் இவற்றை எல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எத்தனையோ பதிவர்கள் (வலைப் படைப்பாளிகள்) இந்த உண்மையைக் கருத்தில் எடுத்து எத்தனையோ பதிவுகளைத் தங்கள் வலைப்பூக்களில் பகிருகின்றனர். இந்தியத் தமிழ்நாட்டில் 'சவுக்கு' (https://www.savukkuonline.com/) என்னும் அரசியல் மற்றும் அரசு தொடர்பான கருத்துக்கள் வெளியிடுதல் மற்றும் அநீதிகளை இடித்துரைக்கும் ஒரு தமிழ் வலைப்பூவாக அறிஞர் சங்கர் அவர்களால் நடாத்தப்படுகிறது. சவுக்கு இணையதளத்தையும் கூட 28/02/2014 அன்று பத்து நாட்களுக்குள் மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை யாவரும் அறிவர். அதற்குக் காரணம் 'சவுக்கு' என்ற வலைப்பூ வெளியிட்ட வலுவான படைப்புகளே!

எல்லோரும் சிறந்த பதிவர்களாக மின்ன வேண்டும். அவர்கள் மின்னும் வேளை உலகெங்கும் நற்றமிழ் பரவவேண்டும். எழுதுகோல் ஏந்தி எழுதிப் படைத்து வெளியிடும் வேளை தாம் உலகெங்கும் மின்ன வேண்டும் என்பதற்காகப் பிறரது பதிவைப் படியெடுத்துப் பகிர இயலாதே! ஆயினும் எடுத்துக்காட்டிற்காக அல்லது சுட்டிக் காட்டுவதற்காக  பிறரது பதிவை அவரது அடையாளத்துடன் பகிர இயலும் என்பேன்.

யாழ்பாவாணன் என்ற சின்னப்பொடியன் மேற்படி பலரது பதிவுகளை அறிமுகம் செய்திருந்தாலும் அன்றொரு நாள் மாட்டிக்கிட்டார். இந்தியத் தமிழ்நாட்டிலும் ஈருருளிகளில் பயணிப்போர் தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிய வேண்டுமென்ற ஒழுங்குமுறை நடைமுறைக்கு வந்தாச்சு! அதன் பின் ஆளுக்கொரு தமது உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை வெளியிட்டாலும் அரசின் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டனர். தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிய வேண்டுமென்பதற்காக முகத்தை மறைக்கும் கறுப்புக் கண்ணாடி போட்டதைப் பாவித்ததால் இணையர்கள் மாறிப் பறந்தனராம். அதனைச் சின்னப்பொடியன் யாழ்-தினக்குரல் நாளேட்டில் படித்திருக்கிறார்.

யாழ்-தினக்குரல் நாளேட்டில் வெளிவந்த பகுதியை அப்படியே படியெடுத்துப் பாவிக்காத சின்னப்பொடியன், தனது கைவண்ணத்தில் "தலைக்காப்பு அணிகலனும் ஆள்மாறாட்டமும்" என்ற தலைப்பில் ஒரு பதிவை வழங்கினார். ஆயினும், அதற்கான பின்னூட்டத்தில் அறிஞர் சீராளன் அவர்கள் "தலைக்கவசம் அணிதல் அவசியமானது தான். ஆனாலும் யாழ் தினக்குரல் பொய்யான தகவலை உதாரணம் காட்டியது தான் தாங்க முடியல்ல... ஒரே நிறத்தில் ஈருருளிகளும் ஒரே நிறத்தில் ஆண், பெண் இணையர்களின் ஆடைகள் உயரங்கள்... எல்லாம் எப்படி சாத்தியமாகும்... ஐயோ ஐயோ" எனத் தெரிவித்திருந்தார்.

அதற்குச் சின்னப்பொடியனும் "தங்கள் ஐயப்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை தான். யாழ் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த பகுதியைப் படியெடுத்து இத்தளத்தில் பகிர முயற்சி செய்கிறேன்." என்று பதிலளித்த பின் அப்பகுதியை வெட்டிப் படியெடுத்து "தலைக்காப்பு அணிகலனும் ஆள்மாறாட்டமும்" என்ற  பதிவின் முடிவில் ஒட்டியிருக்கிறார். இதெல்லாம் சின்னப்பொடியனுக்குத் தேவை தானா? "பதிவை வலைப்பூவில் இணைக்குமுன் தான் எழுதியது நம்பக்கூடியதாக உள்ளதா? வாசகரை நம்பவைக்கத் தேவையான சான்றுகளை இணைக்க வேண்டுமா?" என்றெல்லாம் சிந்திக்கத் தவறியதாலே தான் பின்னூட்டத்திற்கு அஞ்சியே இப்படிச் செய்திருக்கிறார். அதனைப் பார்வையிடக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கலாம்.

http://www.ypvnpubs.com/2015/09/blog-post.html

வலைப்பூ ஒன்றிற்குப் பார்வையிடச் செல்வோர் பதிவைப் படித்திருந்தால் பதிவரின் எண்ணங்களை மட்டுமே அறிந்திருக்க முடியும்; பின்னூட்டங்களைப் படித்திருந்தால் பதிவரின் ஆளுமை, ஆற்றலை மதிப்பிட முடியுமே! மேற்காணும் இணைப்பைச் சொடுக்கிச் சின்னப்பொடியனின் தவறை மதிப்பிட்டு விட்டீர்களா? இணையர்கள் மாறிப் பறந்திருப்பின் அதனை நம்பக்கூடியதாக, அதற்கான சான்றை இணைத்திருந்தால் தவறிருக்காது என்பேன். பின்னூட்டத்திற்கு அஞ்சிச் சான்றை இணைத்தமையால் தவறு உணரப்பட்டிருக்கிறது.

வெளியீடு என்பது மாற்றங்களை ஏற்படுத்த உதவும் ஊடகம் எனின் அதற்குக் காரணம் வாசகர் உள (மன) மாற்றங்களே! ஒவ்வொரு பதிவரின் பதிவின் நீளம், அகலம், உயரம் அல்லது ஆழம் என வாசகர் பார்த்தாலும் பதிவர் சொல்ல வருகின்ற செய்தியைத் தானே அதிகம் கருத்திற் கொள்கின்றனர். அப்படியாயின் ஒவ்வொரு பதிவரும் தமது பதிவுகளின் ஊடாகச் சொல்ல வருகின்ற செய்தியை நம்பக்கூடியதாக நறுக்காகக் கூற முயன்றிருப்பின் வாசகர் உள்ளம் நிறைவடையும்.


21 கருத்துகள் :

  1. தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்!தங்கள் தளத்திற்கு புதியவன்!!!! தங்கள் சொல்வது முற்றிலும் சரியே!!!! தங்கள் எழுத்து நடை அழகாகயிருக்கிறது!! நன்றி!?!?

    பதிலளிநீக்கு
  3. இவ்வாறான அனாவசிய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியதை நோக்கும்போது வியப்பாக இருக்கிறது. தாங்கள் கூறுவதுபோல நம்பக்கூடியதாக, நறுக்காகக் கூறுவது நலம் பயக்கும்.

    பதிலளிநீக்கு
  4. சிக்கல் இல்லாத..பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை . அது எந்தெந்த ரூபத்தில் வருகிறது என்பது நமக்கு தெரியாது இது எனது கருத்து..அய்யா....

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஆஹா! தாங்கள் உளவியல் நிபுணன் என்பது இந்தக் கட்டுரையின் மூலம் நன்றாகத் தெரிகின்றது நண்பரே! அருமை அருமை!!! தாங்கள் சொல்லி இருப்பது உண்மையே! மிகவும் சரியே! வாழ்த்துகள்! தங்கள் எழுத்து மிளிருகின்றது. நல்ல தமிழ் சொற்களையும் கற்றுக் கொள்கின்றோம் தலைக்காப்பு அணிகலன்...ஈருருளிகள்...அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!