Translate Tamil to any languages.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பாடுபொருளும் பாவடிகளும்

பா(கவிதை) ஒன்றின் உள்ளே
ஒளிந்திருக்கும் கருப்பொருளே
பாவால்(கவிதையால்)
சொல்ல வந்த செய்தியே
பாடுபொருள் என்பேன்!
பாடுபொருள் ஒன்றை
"பசி" என்கிறேன் கேளும்
"தெருவில் கிடக்கும் எச்சில் உணவை
தேடிப் பொறுக்கித் தின்னும்
ஏழைகளின் பசியைப் பாரும்!" என்பதும்
"பசி வந்தால்
கறி தேவையில்லை என்பார்களே
அதுபோலத் தான்
தெருக்கடைத் தேனீரில்
தோய்த்தெடுத்த பாண்(ரொட்டி) துண்டு
என் வயிற்றை நிரப்பியதே!" என்பதும்
பாக்(கவிதை)கள் தானே!
பசியின் நிலையைச் சுட்டும்
என் கதை கூறும்
ஆறடிப் பாவை(கவிதையை) விட
ஏழைகளின் கதை கூறும்
மூன்றடிப் பாவே(கவிதையே)
அழகாய் மின்னுவதைப் பாரும்!
என்ன தான் இருந்தாலும்
பாடுபொருள்
பாவு(கவிதை)க்கு உயிர் என்றால்
பாவடிகள்
பாவு(கவிதை)க்கு உடல் என்றால்
பாவின்(கவிதையின்) வெற்றி
பாவடிகளின் எண்ணிக்கையில்
இல்லைக் காணும்
பாவலன்(கவிஞன்)
பாடுபொருளை வெளிப்படுத்த வரும்
திறத்தில் தானே தங்கியிருக்கே!
எட்டுத் திக்கும்
பாவி(கவிதையி)லே தமிழ் பரப்ப
எண்ணியிருக்கும் உறவுகளே...
பாக்(கவிதை)களின் வெற்றி
பாடுபொருளிலோ
பாவடிகளின் நீளத்திலோ
இல்லைக் காணும்
பாடுபொருள் எதுவாயினும்
பரவாயில்லைக் காணும்
வள்ளுவனின் குறளைப் போல
குறுகிய பாவடிகளிலே
விரிந்த வெளிப்பாடு இருக்க
நீ
பா புனைந்தால் காணும்
உன்
பா(கவிதை) வெற்றி காணும்
இல்லையேல்
என் தலையைத் துண்டாடு!

குறிப்பு: இதற்கான கட்டுரை விளக்கத்தை http://yarlpavanan.tk இல் பார்க்கலாம்.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பா புனைய விரும்பு

அன்று
"அறம் செய்ய விரும்பு" என்று
பாவலர் ஔவை சொன்னாங்க
எல்லோரும் நம்பினாங்க...
இன்று
"பா புனைய விரும்பு" என்று
முந்த நாள் பெய்த மழைக்கு
நேற்று முளைத்த காழான் போன்ற
சின்னப் பொடியன்
யாழ்பாவாணன் சொன்னால்
எவர் தான் நம்புவார்?
காதலிலே தோல்வியுற்றால்
கள்ளுக் கடைப் பக்கம் போகாமல்
பா (கவிதை) புனையுங்க என்று
உங்களை ஏமாற்றிய
காதலிகள் சொல்ல;
பச்சை அரளிக் கொட்டை
அரைத்து விழுங்கிச் சாகாமல்
பா (கவிதை) புனையுங்க என்று
நீங்கள் ஏமாற்றிய
காதலிகளுக்குச் சொல்வதும்
எனக்குத் தெரியாத ஒன்றல்ல...
என்றாலும்
சாவதை விட்டிட்டு
உடலழிந்தாலும்
எம்மைச் சாகாது வாழ வைக்கும்
பாக்(கவிதை)களை புனையுங்க என்றீங்க
அதைத் தான்
நானும் விரும்புகிறேன்!
பாரதி செத்தானா...?
பாரதிதாசன் செத்தானா...?
அடேய்! நம்ம
கண்ணதாசன் செத்தானா...?
இல்லை!
இன்னும் இல்லை!
தமிழ் அழியாத வரை
இவர்களுக்குச் சாவே இல்லை!
ஆமாம்!
அவர்களின் பாக்(கவிதை)கள்
எம் கண்ணைக் காதை
தீண்டும் போதெல்லாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே!
ஓ!
பாவலன் என்றால்
சாகாக் கொடை(வரம்) பெற்றவனே...
ஆதலால்
நீயும் பாபுனைய விரும்பு!

உறவுகளே! எனது yarlpavanan.tk தளத்திற்குச் சென்று "தூய தமிழைப் பேணு என்றால்…" என்ற பாவை(கவிதையை) வாசிக்க மறக்காதீர்கள்.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு


தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியுள்ளது. இந்நூலில் எனது கவிதை உட்பட 402 கவிஞர்களின் கவிதைகள் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இதில் அரசியல், சமயம் சாராத 25 அடிகளுக்குட்பட்ட பல துறை சார்ந்த பதிவுகள் உள்ளடங்கி உள்ளன.

முதலில் இவ்வுலக சாதனைத் கவிதைத் தொகுப்பு 5005 கவிஞர்களை ஆசிரியர்களாக இணைத்து உருவாக்கப்பட இருந்தது. என்ன காரணமோ ஏதுமறியேன்; ஈற்றில் 402 கவிஞர்கள் இணைந்துவிட்டனர். இந்நூலை தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் அழகுற வடிவமைத்துள்ளதோடு தரமான கவிதைகளையே தெரிவுசெய்துமுள்ளனர்.

எப்படியிருப்பினும் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் முயற்சிக்குத் தமிழ்ப் பற்றுள்ள ஒவ்வொரு தமிழரும் நன்றி கூற வேண்டும். உலகத் தமிழ்க் கவிஞர்களை இணைத்து இன்னும் பல நூல்களை ஆக்கி வெளியிடக் கூடியவர்கள் என நிரூபித்தமையைப் பாராட்ட வேண்டும். இவர்கள் பணி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுமென நம்புகிறேன்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் 402 கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பைப் பதிவிறக்கிக்கொள்ள கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://tamilkavinjarsangam.yolasite.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.php

இந்நூலைப் பதிவிறக்கிப் பார்வையிட்ட பின்னர், உங்கள் கருத்தைப் பகிருங்கள். இந்நூலில் எனது கவிதை 128 ஆம் பக்கத்தில் உள்ளது. இந்நூலில் வெளியான எனது கவிதையைக் கீழே தருகின்றேன்.

கடற்கோள்(2004) காட்டிக்கொடுத்த நற்றமிழ்!

கடற்கோளென தொடுவானொடுவந்த அலைதான்
நத்தார் பெருநாள் வழிபாட்டையும் விழுங்கினான்
இந்து, இஸ்லாம், கத்தோலிக்கமெனத் தான்
எல்லா இன, மத, ஊர், நாட்டு உறவுகளைத் தான்
கூட்டியள்ளிக் கொண்டுபோன துயரைத் தான்
எவர் தான், மறப்பது எப்படித் தான்?
ஆற்றுப்படுத்த அறிஞர்கள் நூல்களை அலசத்தான்
குமரிக்கண்டம் தமிழர் நிலமென்று தான்
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி" என்று தான்
புறப்பொருள் வெண்பா மாலையிலே தான்
புலவர் ஐயனாரிதனார் கூறிய தமிழர் தான்
வாழ்ந்த குமரியுமுடையத் தமிழருமழியத் தான்
முன்னொருகால் விழுங்கியதும் கடற்கோள் தான்!
முன்தோன்றிய உலகின் மூத்த தமிழ்க்குடி தான்
எழுதிப் பேசிய உலகின் மூத்த மொழியைத் தான்
ஊடுருவி, துருவிப் பார்த்தால் தான்
வடமொழி, ஆங்கிலமெனப் பல மொழிகள் தான்
நுழைந்துவிட இன்றது தமிழில்லைத் தான்!
வேர்ச் சொல்லறிந்து நற்றமிழ் பேசேல் தான்
நாளை நாம் தமிழரில்லைக் காண்!

அன்புள்ள உறவுகளே!
இலவசத் தமிழ் நூல்களைப் பார்க்க
http://www.ypvnpubs.com/p/blog-page_43.html
என்ற பக்கத்தை நாடுக.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஒன்றே முக்கால் அடி தந்த அடி!


மரபுக் கவிதையில் நான்கு சீர்களை(சொல்களை)க் கொண்ட அடியை முழு அடி அல்லது நிறை அடி என்பர். திருக்குறளில் முதலாம் அடி நான்கு சீரையும் இரண்டாம் அடி மூன்று சீரையும் கொண்டிருக்கிறது. அப்படியாயின் திருக்குறள் ஒன்றே முக்கால் அடி என்பதில் தவறில்லையே!

திருக்குறளை ஆக்கித் தந்த திருவள்ளுவர் அவர்களின் இல்லாள் வாசுகி அம்மையார் ஆவார். வாசுகி அம்மையாரின் இழப்பைத் தாங்க முடியாத திருவள்ளுவரோ நான்கடியில் தன்துயரை இவ்வாறு விவரிக்கிறார்.

"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய்
என் தூங்கும் என்கண் இரவு''

அதாவது, "அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!'' என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இவ்வாறு இணையத் தினமலர் ஆன்மீகப் பக்கத்தில் (http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=1766) படித்ததும் திருவள்ளுவர் திருக்குறளைத் தவிர எத்தனையோ நூல்கள் எழுதியிருப்பார் என எண்ணினேன். உடனே கூகிள் தேடுபொறியில் "திருவள்ளுவரின் நூல்கள்" என்று தட்டச்சுச் செய்து தேடினேன். "தமிழின் குரல்" என்ற பக்கத்தில் (http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_08.html) திருவள்ளுவர் எழுதிய நூல்களின் விரிப்பைக் கண்டேன்.

திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)

மேலும்,
16. சிற்ப சிந்தாமணி (ஜோதிட நூல்)
என்ற நூலையும் வள்ளுவர் தானாம் எழுதினார்.
சான்று: http://vidhai2virutcham.wordpress.com/2012/12/18/திருவள்ளுவர்-அருளிய-நூல்/
ஆக மொத்தத்தில் பதினாறு நூல்களை திருவள்ளுவர் எழுதியதாக மேற்படி தளங்களில் பொறுக்கினேன். இன்னும் எத்தனை நூல்களை எழுதியிருப்பாரோ எனக்குத் தெரியாது.

மேற்படி தளங்களில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடியில் ஆக்கிய திருக்குறளைத் தவிர பல அடிகளில் பல நூல்கள் எழுதியிருக்கிறார் என்பது தெரியவருகிறது.

இந்தத் தகவலை எத்தனை ஆள்கள் நம்புவர்? ஒன்றே முக்கால் அடித் திருக்குறளைத் தானே நூற்று முப்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் உலகெங்கும் மொழி பெயர்த்துள்ளனர். ஏனையவை அவ்வாறு மொழி பெயர்க்கப்படாமையால் எம்மால் படிக்க முடியவில்லையா? எம்மால் படிக்க முடியாமையால் ஏனையவை அவ்வாறு மொழி பெயர்க்கப்படவில்லையா?

ஒன்றே முக்கால் அடித் திருக்குறளைப் படித்த எங்களுக்கு ஏன் ஏனைய அடிகளில் இருந்த திருவள்ளுவரின் ஏனைய நூல்களைப் படிக்க முடியாமற் போனது. இதுவே, நான் சொல்ல வந்த செய்தி ஆகும்.

புதன், 13 பிப்ரவரி, 2013

சும்மா சும்மா சும்மா


பா(கவிதை) புனையத்தான் விருப்பம்
பா(கவிதை) புனைய முனைந்தால்
எப்பனும் வரமாட்டேங்குதே!
எண்ணி எண்ணிப் பார்த்தேன்
மின்னி மின்னிப் போனதே
நல்ல நல்ல பாக்(கவிதை)கள்!
சும்மா ஒரு பா(கவிதை)
புனையத்தான் விரும்பினேன்
'சும்மா' என்று தலைப்புமிட்டேன்!
சும்மா எழுதுகோலை ஏந்தினேன்
சும்மா வெள்ளைத்தாளை விரித்தேன்
சும்மா எதை எழுதலாமென எண்ண
அம்மா போல சும்மா ஒரு பொண்ணு
சும்மா என்னைப் பார்க்க
சும்மா என்னுள் காதல் மலர
சும்மா காதலைச் சொல்ல
சும்மா தந்தாள் பாதணியடி(செருப்படி)!
சும்மா கவிதை வாவென்றால் வாராது
சும்மா வந்த பாவி(கவிதையி)ல்
சும்மா பாதணியடி(செருப்படி) என்றதும்
சும்மா எழுதுகோலும் எழுத மறுத்தது!
பா(கவிதை) புனைய விரும்பாத வேளை
பாக்(கவிதை)கள் வந்து உள்ளத்தில் முட்ட
இப்படி இப்படி
எத்தனை எத்தனை
சும்மா சும்மா சும்மா
பாக்(கவிதை)கள் எழுதலாமென
எண்ணி எண்ணிப் பார்த்து
பா புனைய விரும்புங்களேன்!

சனி, 9 பிப்ரவரி, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-004


எழுத்தின்றிச் சொல் அமையாது
சொல்லமைந்தாலும்
எழுத்துக்கள் இணையாத நிலை
இருப்பதை இடமறிந்து
பாவிக்க வேண்டுமே!
பன்னிரு உயிரோடு
'ச' வரிசை எழுத்துகளில்
'சௌ' ஒழிந்த (தவிர்ந்த)
பதினொன்றும்
'ஞ' வரிசை எழுத்துகளில்
ஞ; ஞா; ஞி; ஞெ; ஞே; ஞொ ஆகிய ஆறும்
'ய' வரிசை எழுத்துகளில்
தொல்காப்பியர் காலத்தில்
'யா' மட்டுமிருக்க
நன்னூலார் காலத்தில்
ய; யா; யு; யூ; யோ; யௌ ஆகிய ஆறும்
'வ' வரிசை எழுத்துகளில்
வ; வா; வி; வீ; வெ; வே;
வை; வௌ ஆகிய எட்டும்
மேலும்,
க; த; ந; ப; ம ஆகிய ஐந்தின்
பன்னிரு எழுத்துகளும்
மொழி முதல் எழுத்தாக
(சொல்லின் முதலெழுத்தாக)
வருவதைக் காணலாம்!
'ச' வரிசை எழுத்துகளில்
சௌ மட்டும்
'ஞ' வரிசை எழுத்துகளில்
ஞீ; ஞு; ஞூ; ஞை; ஞோ; ஞௌ ஆகிய ஆறும்
'ய' வரிசை எழுத்துகளில்
தொல்காப்பியரின் படிக்கு
'யா' ஒழிந்த (தவிர்ந்த)
ஏனைய பதினொன்றும்
நன்னூலாரின் படிக்கு
இது வேறுபடக் காரணம்
வடமொழிச் சொற்களாகச் சில
நன்னூலர் சேர்த்திருக்கலாம் என
அறிஞர்கள் ஐயுறுகின்றனர்...
'வ' வரிசை எழுத்துகளில்
வு; வூ; வொ; வோ ஆகிய நான்கும்
மேலும்,
ங; ட; ண; ர; ல; ழ;
ள; ற; ன ஆகிய ஒன்பதின்
பன்னிரு எழுத்துகளும்
மொழி முதல் எழுத்தாக
(சொல்லின் முதலெழுத்தாக)
வரமாட்டாதென அறிக!
ஞ்; ண்; ந்; ம்; ன்; ய்; ர்; ல்; வ்; ழ்; ள் ஆகிய
பதினொன்றும்
மெய் எழுத்துகளுடன் சேர்ந்தே
பன்னிரு உயிரும்
'எ' என்ற உயிர்
'சேஎ' என்று அளபெடையாகவும்
(சே, சேஎ - எருது)
(சொல்லின் இறுதி எழுத்தாக)
மொழியீற்று எழுத்தாக வருமே!
தனித்துப் பன்னிரு உயிரும்
க்; ச்; ட்; த்; ப்; ற் ஆகிய
வல்லின எழுத்துகளும்
'ங்' என்னும்
மெல்லின எழுத்தும்
(சொல்லின் இறுதி எழுத்தாக)
மொழியீறாக வராது என்க!
க்; ச்; ட்; த்; ப்; ற்; ங் என்பன
மொழியீற்றில் வருமாயின்
அச்சொற்கள்
தமிழ்ச் சொற்கள் ஆகாது என்க!
ட்; ற் ஆகிய இரண்டும்
மொழிக்கு (சொல்லுக்கு)
முன்னும் பின்னும் வராதென
அறிந்தும் கூடப் பாருங்கோ
'ஃ' என்ற எழுத்தை
இதுவரை எங்கும்
இணைக்க முடியவில்லையே!
ஆயுத எழுத்தல்லவா...
உயிரோடும் மெய்யோடும்
இணைவதெப்படி?
'ஃ' என்ற எழுத்தை
மொழியின் (சொல்லின்)
இடைச் செருகலாகவே
பாவித்தாலும் கூட
அருமையாகத் தான்
தனிநிலை எனப் பெயர் பெற்றே
காண முடிகிறதே!
அது, இது, உது என்பன
சுட்டுச் சொற்களாயினும்
அஃது, இஃது, உஃது என்பன
சுட்டுச் சொற்களாயினும்
நம்மாளுகள்
எப்பனும் பாவிக்கிறதாகத் தெரியேல்லையே!
சொற்கள் புணரும் வேளை
பின்னொட்டு முதலெழுத்து
உயிராக அமைந்தால்
அது, இது, உது என வராது
அஃது, இஃது, உஃது என்றே
புணர்ந்து கொள்ளுமே!
எடுத்துக்காட்டாக
'அது அப்படியா?' என வராது
'அஃது அப்படியா?' என அமையுமே!
மேலும்
'இது உண்மையானது!' என வராது
'இஃது உண்மையானது!' என்றமையும்
'உது ஒழுங்கில்லை' என வராது
'உஃது ஒழுங்கில்லை' என்றமையும்
என்றறிந்து பாவிக்க!
ஒன்றைக் குறிக்க
'ஒரு' என்றே பாவித்தாலும்
'ஓர்' என்று ஒன்று
இருப்பதை அறிவீரா!
பின்னொட்டு முதலெழுத்து
உயிராக அமைந்தால்
'ஒரு' ஆனது 'ஓர்' ஆக மாறுமே!
எடுத்துக்காட்டாக
'ஒரு அப்பம்' என வராது
'ஓர் அப்பம்' என்றே அமையும்!
மேலும்
'ஒரு ஆயிரம்' என வராது
'ஓர் ஆயிரம்' ஆகி
ஓராயிரம் எனப் புணர்ந்து வருமே!
ஆயினும்
இந்நடைமுறைக்கு மாறாக
பின்னொட்டு 'யா' ஐ
முதலெழுத்தாகக் கொண்டிருப்பினும்
'ஒரு யானை' ஆக வரினும்
'ஓர் யானை' என்றும் வருமே!
குழப்பம் அடையாதீர்கள்
'யா' இனது ஒலியும்
'அ' இனது ஒலி போல
ஒலிப்பதனால் அமைந்த
சிறப்பு நிலை இதுவாகும்!
எண்ணும் போது பாரும்
ஒரு; இரு ஆகிய இரண்டும்
பின்னொட்டு முதலெழுத்து
உயிராக அமையும் வேளை
ஓர்; ஈர் என மாறுமே!
எடுத்துக்காட்டாக
ஒரு+ஆயிரம்=ஓராயிரம் எனவும்
இரு+ஆயிரம்=ஈராயிரம் எனவும்
அமைவதைக் காண்போமே!
ஒலியன்களான எழுத்துக்களின்
ஒலி (ஓசை) எழும் நிலையை வத்தே
வெவ்வேறாகவே
சொற்கள் புணருவதைப் பார்த்தோமே!
இவ்வண்ணம்
பாக்களில் ஒலி (ஓசை) குறையும் போதோ
சீரும் தளையும் சிதையும் போதோ
யாப்பிலக்கணம் உடையவே
யாப்பைச் சீர் செய்யும் முகமாய்
ஒலி (ஓசை) இனிமையாக அமையவே
நெடிலுடன் குறில் சேரவே
குறில் நெடிலாக மாறி அமையவோ
புணரும் செயலே அளபெடையாம்!
நெடில் குறிலைத் துணைக்கு இழுத்தோ
குறில் நெடிலாக மாறி நின்றோ
தன்னினத்தை அளபெடுத்தல்
இசை நிறை அளபெடை,
இன்னிசை அளபெடை,
சொல்லிசை அளபெடை என
மூன்று வகையில் பார்க்கலாமே!
பாவோசை (செய்யுள் ஓசை) குறையும் போதும்
சீரும் தளையும் சிதையும் போதும்
அசையை நிறைப்பதற்காகவே
கையாளப்படுவது
இசை நிறை அளபெடையாம்!
செய்யுள் இசை அளபெடையும்
இதுவன்றோ!
எடுத்துக்காட்டாக
"ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னும் அவர்" என்ற
திருக்குறள் அடிகளில்
"விளமுன் நேர்" என்ற
வெண்பா இலக்கணத்தைச் சரிசெய்யவே
ஓதல், ஆதும் ஆகிய சீர்கள்
ஓஒதல், ஆஅதும் என்றவாறு
ஓ, ஆ என்பன - தமது
இனங்களான ஒ, அ என்பவற்றை
தம்மோடு இணைத்தே
அளபெடுத்துள்ளது என்போம்!
பாவில் (செய்யுளில்)
ஓசையோ அசையோ குறையாத போதும்
ஓசையை இனிமைப்படுத்தவே
கையாளப்படுவது
இன்னிசை அளபெடையாம்!
எடுத்துக்காட்டாக
"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை" என்ற
திருக்குறள் அடிகளில்
விளமுன் நேர் அமைந்து
வெண்பா இலக்கணம் சரியாயினும்
காய்முன் நேர் அமையும் வண்ணம்
கெடுப்பதும், எடுப்பதும் என்பன
கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் ஆக
இனிமையான ஓசைக்காக
அளபெடுத்துள்ளது என்போம்!
பாவில் (செய்யுளில்)
ஓசை குறையாது இருப்பினும்
பெயர்ச்சொல் ஒன்றை
வினையெச்சச் சொல்லாக
மாற்றும் நோக்கிலேயே
கையாளப்படுவது
சொல்லிசை அளபெடையாம்!
எடுத்துக்காட்டாக
"உரனசைஇ உள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன்" என்ற
திருக்குறள் அடிகளில்
நசை(விருப்பம்) எனும் பெயர்ச்சொல்லை
நசைஇ(விருப்பி) எனும்
வினையெச்சச் சொல்லாக மாற்றவே
விளமுன் நேர் சரியாக இருந்தும்
வெண்பா இலக்கணம் பிழைக்காமல்
காய்முன் நேர் சரியாக அமைய
உரனசை, வரனசை என்பன
'ஐ' இற்கு 'இ' இனம் என்ற வழியில்
உரனசைஇ, வரனசைஇ என்றவாறு
அளபெடுத்துள்ளது என்போம்!
மூவகை அளபெடைகள்
அறிந்தாலும் கூட
"ஒற்றளபெடை" என்ற
ஒன்றுமிருக்கிறதே!
பாவில் (செய்யுளில்)
ஓசை குறையும் போது
தனிக்குறிலை அடுத்துவரும் ஒற்றோ
குறிலிணையை அடுத்துவரும் ஒற்றோ
மீள ஒன்றைச் சேர்த்து (இரட்டிப்பாகி)
ஓசையை நிரப்பக் கையாளப்படுவது
ஒற்றளபெடையாம்!
எடுத்துக்காட்டாக
"எங்ங் கிறைவனுளன் என்பாய் மனனேயான்
எங்ங் கெனத்திரிவா ரில்" என்பதில்
"எங்ங்கு இறைவன்" என்பது
"எங்ங் கிறைவன்" எனவும்
"எங்ங்கு எனத்" என்பது
"எங்ங் கெனத்" எனவும்
ஒற்று, தனிக்குறிலை அடுத்து
ஓசையை நிரப்பக் கொள்ள
அளபெடுத்துள்ளது என்போம்!
ஈற்றுச் சீர் ஓரசைச் சீராக
அமைகின்ற வெண்பாவில்
"எங்ங்" எனும் ஓரசைச் சீர்
அடியின் முதலாய் நிற்பதைப் பாரும்!
பிறிதோர் எடுத்துக்காட்டாக
"இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண்" என்பதில்
இலங்கு, கலங்கு என்பன
இலங்ங்கு, கலங்ங்கு என்றவாறு
குறிலிணைக்கு அடுத்துவரும் ஒற்று
ஓசையை நிரப்பிக் கொள்ள
அளபெடுத்துள்ளது என்போம்!
"மாமுன் நேர்" என அமைந்தமையால்
வெண்பா இலக்கணம்
மீறப்படுவதை இங்குப் பாரும்!
எடுத்துக்காட்டாகக் காட்டிய
குறள் வெண்பாக்கள்
திருக்குறள் இல்லைப் பாரும்...
திருக்குறள் காலத்திலும்
பின்னரும் கூட
ஒற்றளபெடை
வழக்கு ஒழிந்து விட்டதாக
புலவர் வெற்றியழகனின்
யாப்பரங்கம் நூலில்
சுட்டிக் காட்டப்பட்டுள்ளதே!
யாப்பிலக்கணப் பாக்கள்
அளபெடையை அறிந்ததும்
நன்றாகப் புரியும் என்றாலும்
குற்றியலுகரம், முற்றியலுகரம்,
குற்றியலிகரம் என்றும்
சற்றுப் பார்க்க வேண்டுமே!
(தொடரும்)


முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/01/003.html

திங்கள், 4 பிப்ரவரி, 2013

குறும்பா எழுதுவோமா?


ஆங்கிலத்தில் Limericks என்றழைக்கப்படும் குறும்பாக்களை குறுக்கி எழுதினாலும் குறும்பாக எழுதுவார்களாம். உணவு உண்ட பின் ஒரு சில குறும்பாக்களையும் ஆங்கிலக்காரர் பகிருவார்களாம். அதாவது, Limericks இல் நகைச்சுவை குறும்பாக ஊடுருவி இருக்குமாம். இதனைக் கவிக்கோ அப்துள் ரகுமான் அவர்களின் நூலில் படித்துள்ளேன். அந்நூலில் அவரும் குறும்பாக்களுக்கு எடுத்துக்காட்டாக ஈழத்து யாழ். அளவெட்டி மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் குறும்பாக்களை விளக்கியுள்ளார்.

உண்ட பின் உண்ட உணவு சமிபாடடைய நகைச்சுவை உதவுந்தானே! அதாவது, கோபம் வந்தால் 13 நரம்புகள் தானாம் இயங்கும் சிரிப்பதனால் 65 நரம்புகள் இயங்குமாம். அதிக நரம்புகள் இயங்க உதவும் நகைச்சுவையைத் தரும் குறும்பா(Limericks)விற்கு உணவைச் சமிபாடடைய வைக்கிற சக்தி இருக்கும் தானே!

ஈழத்து யாழ். அளவெட்டி மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் (அவரது நூலிலிருந்து) சில குறும்பாக்கள்:

உத்தேசம் வயது பதி னேழாம்
உடல் இளைக்க ஆடல் பயின் றாளாம்.
               எத்தேசத் தெவ்வரங்கும்
               ஏறாளாம்! ஆசிரியர்
ஒத்தாசை யால், பயிற்சி பாழாம்.

பதினேழு அகவை மதிக்கத்தக்கவள், உடல் இளைக்க ஆடல் பயின்று ஆசிரியர் ஒத்துழைப்புடன் தவிறிழைத்ததை முறையாகச் சாடுகிறார் பாவலர்.

சொந்தத்திற் கார், கொழும்பிற் காணி
சோக்கான வீடு, வயல், கேணி -
                இந்தளவும் கொண்டுவரின்,
                இக்கணமே வாணியிற் பாற்
சிந்தை இழப்பான் தண்ட பாணி.

வாணி என்பாளின் பெற்றோர், சீர் வரிசை (சீதனம்) நிறையக் கொடுப்பாராயின் வாணியின் பால் உள்ளத்தை இழப்பான் தண்டபாணி என்பான் எனச் சீர் வரிசைக் (சீதனக்) கொடுமையைப் பாவிலே பார்க்க வைக்கிறார் பாவலர். மேலும்,

முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்.
முன்னாலே வந்து நின்றான் காலன்.
           சத்த மின்றி, வந்தவனின்
           கைத் தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான். போனான் முச் சூலன்.

கையூட்டு (இலஞ்சம்) எமது குமுகாயத்தின் (சமூகத்தின்) கொடுமைகளில் ஒன்று கையூட்டு (இலஞ்சம்) கொடுக்க முடியாமல் ஏழைகள் துன்புறுவது(வருந்துவது) வழமையான (சாதாரண) நிகழ்ச்சி. இதனை விளக்கும் வகையில் இக் குறும்பா அமைந்துள்ளது.
இங்கு பாரும் "சீலனின் உயிர் பறிக்க வந்த காலன் (முச்சூலன்) கையில் பத்து முத்தைப் பொத்தி வைத்ததும் சீலனின் உயிரைப் பறிக்காமலே போனானாம் காலன் (முச்சூலன்)." என்று நகைச்சுவையாகக் கையூட்டுப் (இலஞ்சம்) பற்றிப்  பாவலரின்  குறும்பா சுட்டிக் காட்டுகிறதே!

இவ்வாறான ஈழத்து யாழ். அளவெட்டி மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் குறும்பாக்களின் தொகுப்பு நூலை விரித்துப் பார்க்க அல்லது பதிவிறக்கிப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://noolaham.net/project/05/427/427.pdf

பாபுனைய விரும்பும் ஒவ்வொருவரும் மேற்காணும் நூலைப் பதிவிறக்கிப் படிப்பது நல்ல பயனைத் தரும் என உங்கள் யாழ்பாவாணன் நம்புகிறார்.

குறும்பாக்களிற்கான இலக்கணமொன்றை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் பின்வருமாறு தருகிறது.

குறும்பா என்பது ஒரே எதுகையையுடைய மூன்று அடிகளைக் கொண்டதாகவும் முதலாம் அடியின் மூன்றாம் ஆறாம் சீர்களும் மூன்றாம் அடியின் கடைசிச் சீரும் ஒத்த இயைபு கொண்டதாயும் அமைக்கப்படும் தமிழ்க் கவிதை ஆகும்.
ஆங்கிலத்தில் இதையொத்த கவிதை வடிவம் limericks எனப்படுகிறது. ஆனால் limericks ஐந்து வரிகளைக் கொண்டிருக்கும்.

சான்று: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE

விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் கூறிய குறும்பாக்களிற்கான இலக்கணத்தை ஈழத்து யாழ். அளவெட்டி மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் "மகாகவியின் குறும்பா" நூலில் "முன்னீடு" எனும் பகுதியில் பதினோராம் பக்கத்தில் அறிஞர் எஸ்.பொன்னுத்துரை அவர்கள் விரிவாகக் குறும்பாவிற்கான யாப்பிலக்கண வாய்ப்பாட்டையும் தந்து விளக்கமளித்துள்ளார்.

காய் - காய் - தேமா -
காய் - காய் - தேமா -
       காய் - காய் -
       காய் - காய் -
காய் - காய் - தேமா.

யாப்பிலக்கணப் (மரபுப்) பாபுனைவோர் மேற்படி குறும்பாவிற்கான வாய்ப்பாட்டையும் அதன் விளக்கத்தையும் மேலே குறிப்பிட்ட நூலில் (http://noolaham.net/project/05/427/427.pdf) குறித்த பக்கத்தில் படித்துப் பயனீட்டலாம். மகாகவியின் நூலைப் படித்துப் பதிவிறக்க உதவும் நூலகம்.நெற் இணையப் பக்கத்தாருக்கு தமிழ் வாழும் வரை நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

ஈழத்து யாழ். அளவெட்டி மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் குறும்பாவும் ஐந்து வரிகளைக் கொண்டே எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனது கருத்தும் அதுவே!
அதாவது
நான்கடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக
ஐந்தடிப் பா(கவிதை) தான்
குறும்பா(லிமரிக்)!

எடுத்துக்காட்டு:

"சல சல என ஓடும் ஆறு
விடு விடு என நீந்தும் மீன்கள்
ஆற்றோடு பெரும் மீன்கள் வாயை விரிக்க
ஆற்றை எதிர்த்துச் சிறு மீன்கள் போட்டி
"..... வாய்க்குள் சிக்கின சிறு மீன்கள்" " என்பது
குறும்பா (குறும்புக் கவிதை) - அதுவும்
நான்கடியில் நிலைமைகளை விளக்கி
ஐந்தாம் அடியில் செய்தி சொல்வதும்
இலக்கணம் இல்லையா?

சான்று: http://paapunaya.blogspot.com/p/blog-page_5162.html

மேலும்,

காணாததைத் தேடுகிறேன்
கண்டதும் வெறுக்கிறேன்.
பார்க்காததைப் பார்க்க நினைக்கிறேன்
பார்த்ததும் மறக்க நினைக்கிறேன்.
"சிறுதுளிநேர விருப்பங்கள்"

மீன்வலை போலத்தான் ஆடையழகோ அழகு
ஏனின்னிலை என்றால் பாரும் காதல்வேண்டி
மான்விழியாளை மடக்கி வீழ்த்த எண்ணியவருக்கு
தான்புரியும் அழகின் ஈர்ப்பும் அந்தச்சுகமும்
காதலை வேண்டியவளுக்கு வயிறு பெருத்ததாம்!

புதுப் பா(கவிதை) புனைவோர் இதனைக் கருத்திற் கொண்டு புதுப் பாவி(கவிதையி)லே குறும்பா புனைய முயன்று பாருங்களேன்.

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)