ஆங்கிலத்தில் Limericks என்றழைக்கப்படும் குறும்பாக்களை குறுக்கி எழுதினாலும் குறும்பாக எழுதுவார்களாம். உணவு உண்ட பின் ஒரு சில குறும்பாக்களையும் ஆங்கிலக்காரர் பகிருவார்களாம். அதாவது, Limericks இல் நகைச்சுவை குறும்பாக ஊடுருவி இருக்குமாம். இதனைக் கவிக்கோ அப்துள் ரகுமான் அவர்களின் நூலில் படித்துள்ளேன். அந்நூலில் அவரும் குறும்பாக்களுக்கு எடுத்துக்காட்டாக ஈழத்து யாழ். அளவெட்டி மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் குறும்பாக்களை விளக்கியுள்ளார்.
உண்ட பின் உண்ட உணவு சமிபாடடைய நகைச்சுவை உதவுந்தானே! அதாவது, கோபம் வந்தால் 13 நரம்புகள் தானாம் இயங்கும் சிரிப்பதனால் 65 நரம்புகள் இயங்குமாம். அதிக நரம்புகள் இயங்க உதவும் நகைச்சுவையைத் தரும் குறும்பா(Limericks)விற்கு உணவைச் சமிபாடடைய வைக்கிற சக்தி இருக்கும் தானே!
ஈழத்து யாழ். அளவெட்டி மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் (அவரது நூலிலிருந்து) சில குறும்பாக்கள்:
உத்தேசம் வயது பதி னேழாம்
உடல் இளைக்க ஆடல் பயின் றாளாம்.
எத்தேசத் தெவ்வரங்கும்
ஏறாளாம்! ஆசிரியர்
ஒத்தாசை யால், பயிற்சி பாழாம்.
பதினேழு அகவை மதிக்கத்தக்கவள், உடல் இளைக்க ஆடல் பயின்று ஆசிரியர் ஒத்துழைப்புடன் தவிறிழைத்ததை முறையாகச் சாடுகிறார் பாவலர்.
சொந்தத்திற் கார், கொழும்பிற் காணி
சோக்கான வீடு, வயல், கேணி -
இந்தளவும் கொண்டுவரின்,
இக்கணமே வாணியிற் பாற்
சிந்தை இழப்பான் தண்ட பாணி.
வாணி என்பாளின் பெற்றோர், சீர் வரிசை (சீதனம்) நிறையக் கொடுப்பாராயின் வாணியின் பால் உள்ளத்தை இழப்பான் தண்டபாணி என்பான் எனச் சீர் வரிசைக் (சீதனக்) கொடுமையைப் பாவிலே பார்க்க வைக்கிறார் பாவலர். மேலும்,
முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்.
முன்னாலே வந்து நின்றான் காலன்.
சத்த மின்றி, வந்தவனின்
கைத் தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான். போனான் முச் சூலன்.
கையூட்டு (இலஞ்சம்) எமது குமுகாயத்தின் (சமூகத்தின்) கொடுமைகளில் ஒன்று கையூட்டு (இலஞ்சம்) கொடுக்க முடியாமல் ஏழைகள் துன்புறுவது(வருந்துவது) வழமையான (சாதாரண) நிகழ்ச்சி. இதனை விளக்கும் வகையில் இக் குறும்பா அமைந்துள்ளது.
இங்கு பாரும் "சீலனின் உயிர் பறிக்க வந்த காலன் (முச்சூலன்) கையில் பத்து முத்தைப் பொத்தி வைத்ததும் சீலனின் உயிரைப் பறிக்காமலே போனானாம் காலன் (முச்சூலன்)." என்று நகைச்சுவையாகக் கையூட்டுப் (இலஞ்சம்) பற்றிப் பாவலரின் குறும்பா சுட்டிக் காட்டுகிறதே!
இவ்வாறான ஈழத்து யாழ். அளவெட்டி மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் குறும்பாக்களின் தொகுப்பு நூலை விரித்துப் பார்க்க அல்லது பதிவிறக்கிப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://noolaham.net/project/05/427/427.pdf
பாபுனைய விரும்பும் ஒவ்வொருவரும் மேற்காணும் நூலைப் பதிவிறக்கிப் படிப்பது நல்ல பயனைத் தரும் என உங்கள் யாழ்பாவாணன் நம்புகிறார்.
குறும்பாக்களிற்கான இலக்கணமொன்றை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் பின்வருமாறு தருகிறது.
குறும்பா என்பது ஒரே எதுகையையுடைய மூன்று அடிகளைக் கொண்டதாகவும் முதலாம் அடியின் மூன்றாம் ஆறாம் சீர்களும் மூன்றாம் அடியின் கடைசிச் சீரும் ஒத்த இயைபு கொண்டதாயும் அமைக்கப்படும் தமிழ்க் கவிதை ஆகும்.
ஆங்கிலத்தில் இதையொத்த கவிதை வடிவம் limericks எனப்படுகிறது. ஆனால் limericks ஐந்து வரிகளைக் கொண்டிருக்கும்.
சான்று: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் கூறிய குறும்பாக்களிற்கான இலக்கணத்தை ஈழத்து யாழ். அளவெட்டி மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் "மகாகவியின் குறும்பா" நூலில் "முன்னீடு" எனும் பகுதியில் பதினோராம் பக்கத்தில் அறிஞர் எஸ்.பொன்னுத்துரை அவர்கள் விரிவாகக் குறும்பாவிற்கான யாப்பிலக்கண வாய்ப்பாட்டையும் தந்து விளக்கமளித்துள்ளார்.
காய் - காய் - தேமா -
காய் - காய் - தேமா -
காய் - காய் -
காய் - காய் -
காய் - காய் - தேமா.
யாப்பிலக்கணப் (மரபுப்) பாபுனைவோர் மேற்படி குறும்பாவிற்கான வாய்ப்பாட்டையும் அதன் விளக்கத்தையும் மேலே குறிப்பிட்ட நூலில் (http://noolaham.net/project/05/427/427.pdf) குறித்த பக்கத்தில் படித்துப் பயனீட்டலாம். மகாகவியின் நூலைப் படித்துப் பதிவிறக்க உதவும் நூலகம்.நெற் இணையப் பக்கத்தாருக்கு தமிழ் வாழும் வரை நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
ஈழத்து யாழ். அளவெட்டி மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் குறும்பாவும் ஐந்து வரிகளைக் கொண்டே எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனது கருத்தும் அதுவே!
அதாவது
நான்கடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக
ஐந்தடிப் பா(கவிதை) தான்
குறும்பா(லிமரிக்)!
எடுத்துக்காட்டு:
"சல சல என ஓடும் ஆறு
விடு விடு என நீந்தும் மீன்கள்
ஆற்றோடு பெரும் மீன்கள் வாயை விரிக்க
ஆற்றை எதிர்த்துச் சிறு மீன்கள் போட்டி
"..... வாய்க்குள் சிக்கின சிறு மீன்கள்" " என்பது
குறும்பா (குறும்புக் கவிதை) - அதுவும்
நான்கடியில் நிலைமைகளை விளக்கி
ஐந்தாம் அடியில் செய்தி சொல்வதும்
இலக்கணம் இல்லையா?
சான்று: http://paapunaya.blogspot.com/p/blog-page_5162.html
மேலும்,
காணாததைத் தேடுகிறேன்
கண்டதும் வெறுக்கிறேன்.
பார்க்காததைப் பார்க்க நினைக்கிறேன்
பார்த்ததும் மறக்க நினைக்கிறேன்.
"சிறுதுளிநேர விருப்பங்கள்"
மீன்வலை போலத்தான் ஆடையழகோ அழகு
ஏனின்னிலை என்றால் பாரும் காதல்வேண்டி
மான்விழியாளை மடக்கி வீழ்த்த எண்ணியவருக்கு
தான்புரியும் அழகின் ஈர்ப்பும் அந்தச்சுகமும்
காதலை வேண்டியவளுக்கு வயிறு பெருத்ததாம்!
புதுப் பா(கவிதை) புனைவோர் இதனைக் கருத்திற் கொண்டு புதுப் பாவி(கவிதையி)லே குறும்பா புனைய முயன்று பாருங்களேன்.
பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
பதிலளிநீக்குஅனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com
மதிப்புக்குரிய www.tamilkadal.com மேலாளரே!
பதிலளிநீக்குமனிதனுக்கு தேவையான அனைத்தும் தங்கள் தளத்தில் இருப்பதாகக் கூறி எனது தள வாசகர்களை இழுக்கும் முயற்சியாகவே தங்கள் கருத்தைப் பொருட்படுத்துகிறேன். ஆனால், எனது வாசகர்கள் முட்டாள்கள் அல்ல.
எனது தள வாசகர்களை தங்கள் தளத்திற்கு இழுக்க ஒரு வழியுண்டு. அதாவது, என்னையும் எனது பதிவுகளையும் இழிவுபடுத்தித் திட்டித் தீர்க்கவும் அல்லது குறை, நிறைகளைக் கூறி நல்ல மதிப்பீட்டுக் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும். எதுவாயினும் தங்கள் தளத்தின் பெறுமதியையும் தங்கள் திறமை, புலமைகளையும் தங்கள் கருத்தில் மின்னும் வகையில் பதிவிடுங்கள்.
அதனைக் கண்டு எனது தள வாசகர்கள் ஈர்க்கப்படுவார்களாயின், தாங்களாகவே தங்கள் தளத்திற்கு வருவார்கள் என உறுதிப்படுத்துகிறேன்.
இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்